பூத்த கருவேலம்

என் ப்ரியத்திற்குரிய செல்வேந்திரன் தொகுத்து வழங்க, அழைப்பிதழில் குறித்திருந்தது போலவே விழா சரியாக 6.00 மணிக்குத் துவங்கியது. முதல் நிகழ்வாக இறைவணக்கம் பாடி இனிமை சேர்த்தவர்  இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த சகோதரர் சுரேஷின் மகள் சு.வானதி.

அடுத்ததாக அரங்கா வரவேற்புரை வழங்கினார்.  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் செய்லபாடுகள் குறித்து சுருக்கமாகப் பேசிவிட்டு வந்திருந்த அனைவரையும் வரவேற்றமர்ந்தார்.

விழாவினைத் தலைமை தாங்கி தலைமை உரையாற்ற கோவை ஞானியை அழைத்தார் செல்வேந்திரன்.  பூமணிக்கும் தனக்கும் உள்ள நெருக்கம் குறிந்துப் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாது இந்தப் புத்தகச் சந்தகைக்கு வெளிவர இருக்கும் பூமணியின் அஞ்ஞாடி நாவல் (1000 பக்கங்களுக்கு மேல்) சென்ற வருடமே தனக்கு அனுப்பி வைக்கபட்டது எனவும் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து பூமணிக்குத் தான் சொல்லி விட்டதாகவும் அவ்வண்ணமே அவரும் நாவலில் தேவையான திருத்தங்கள் செய்து வெளியிடுகிறார் என்றும் சொன்னார்.

கோவை ஞானி எந்த மேடை ஏறினாலும் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைப்பவர். இங்கும் இரண்டு விஷயங்களை எடுத்து வைத்தார்.

1. தமிழகக் கல்வியாளார்கள் குறிப்பாகப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள்  சமகால எழுத்தாளார்களான பூமணி, ஜெயன், எஸ்.ரா மற்றும் யுவன் போன்றவர்களைப் வருகை தரும் பேராசிரியர்களாக (visiting professors) நியமித்து சமகால இலக்கியத்தை மாணவர்களுக்குப் பரிட்சயப்படுத்த வேண்டும் என்றார்.

2. திராவிட இயக்கங்கள் கைகளில் சிக்கி தமிழென்றால் அடுக்குமொழியில் எழுத/பேசப் படவேண்டும் என்ற மாயையிலிருந்து தமிழை மீட்டெடுத்ததில் தற்கால எழுத்தாளர்களுக்குப் பெரிய பங்குண்டு என்றார்.

அடுத்த நிகழ்வாக பூமணியின் கதை உலகம், அவரது ஆளுமை பற்றி ஜெயன் எழுதிய பூக்கும் கருவேலம் என்ற புத்தகத்தை எஸ்.ரா வெளியிட இளம் வாசகர்/படைப்பாளர் செந்தில்குமார் தேவன் பெற்றுக் கொண்டார்.

பூமணிக்கு விருது என முடிவானதும் அழைப்பிதழ் மற்றும் பேணர்களில் போட அவரது புகைப்படம் ஒன்றும் நல்லதாகக் கிடைக்கவில்லை. பக்கத்து ஊரான சாத்தூரைச் சேர்ந்த செந்தில்குமார் தேவனை அழைத்து, நீங்கள் சென்று பூமணி அவர்களைச் சந்தித்து சில நல்ல புகைப்படங்களை எடுத்து வாருங்கள் எனச் சொல்லி இருந்தோம். அவரும் அவ்வாறே செய்தார். புத்தக முகப்பில், பேணர்களில் இருக்கும் படங்கள் அவர் எடுத்ததுதான். மட்டுமல்லாது அவரைச் சந்தித்து உரையாடியதை ஒரு கட்டுரையாக எழுதிக் குழுமத்தில் பகிர்ந்திருந்தார். மிக நேர்த்தியான கட்டுரை. அதனால் கவரப்பட்டு தனது தளத்தில் ஜெயன் அதை வெளியிட்டு அங்கீகரித்திருந்தார்.  அத்தோடு நில்லாது இளம் படைப்பாளியை மேலும் ஊக்குவிக்கும் முகமாக தான் எழுதிய புத்தகத்தில் அந்த நேர்காணலை இணைத்து அச்சேற்றினார். தான் எழுதிய முதல் கட்டுரையே, ஜெயமோகன் புத்தகத்தில், அச்சேறிய பாக்கியம் செந்தில்குமார் தேவனுக்கு.

விழாவின் முக்கிய நிகழ்வாக, இயக்குனர் இமயம் திரு.பாரதி ராஜா தனது பொற்கரங்களால் கேடயத்தையும் பணமுடிப்பையும் பூமணி அவர்களுக்கு வழங்கிக் கௌரவித்தார்.

காலை 8.45 ரயிலில் வந்திரங்கிய பூமணி அவர்கள் மிகவும் தளர்ந்திருந்தார். விழாவை எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற நிலையில்தான் இருந்தார். விடுதி அறைக்கு வந்து குளித்துப் பின் காலைச் சிற்றுண்டி அருந்தியதும் சற்று தெளிந்தாற் போலிருந்தார்.10.00 மணிக்கு  மேல் இளம் வாசகர்கள் அவரை வந்து சந்திக்க இன்னும் சற்றுத் தெளிர்ச்சியானார். அவர்கள் வெறும் வாசகர்கள் மட்டுமல்லாது அவரது பிரதிகளை உள்வாங்கிப் படித்தவர்கள் என்றும் அப்பிரதிகளினூடாக அவருடன் உடன்படவும் மாறுபடவும் அவர்களுக்குக் காரணம் இருந்தது எனவும் அதை நேரிலேயே அவரிடம் விவாதிக்கும் ஆர்வமும் இருந்தது என்பதையும் உணர்ந்துகொண்ட பூமணி அவர்கள்,  அன்றலர்ந்த தாமரை போல உணர்ந்தார். அந்த உற்சாகமும் மலர்ச்சியும் இரவு வரை நீடித்தது. இத்தனை இளைய வாசகர்கள் தன்னை வாசிக்கிறார்கள் அதுவும் வெறுமே வாசிப்பு மட்டுமல்ல அவ்வாசிப்பு அவர்களுக்கு பல்வேறு திறப்புக்களைச் சாத்தியப்படுத்துகிறது என்பது அவருக்கு புதிய செய்தியாக இருந்தது.

என்னதான் ஒரு படைப்பாளியைக் கௌரவித்தாலும் அந்த படைப்பாளிக்கு பின்னிருந்து ஊக்கமளித்து அவரை முன்னிறுத்தும் அவரது மனைவியைப் பாராட்ட பெரும்பாலும் மறந்துவிடுகிறோம். ஆனால் உண்மையில் விருதளிக்க வேண்டியது அவருக்குத்தான். படைப்பாளிக்கான முழுச் சுதந்திரத்தைக் கொடுத்து லௌகீக விசயங்களில் இருந்து அவரை விடுவித்து என்னேரமும் அவரது படைப்பாற்றலுக்கு இடைஞ்சலேதும் வரலாகாது எனக் கண்ணும் கருத்துமாகக் காப்பது இவர்கள்தான்.

திருமதி பூமணி அவர்களை மேடைக்கழைத்து பூங்கொத்து ஒன்றைப் பரிசளித்தோம், இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த திருமது ரீங்கா ஆனந்த் வளைக்கரங்களால். மேடைக்கழைத்துச் செய்யபட்ட மரியாதையில் மனம் நெகிழ்ந்தார் திருமதி பூமணி.

அடுத்ததாக பூமணியைப் பாராட்டிப் பேச இயக்குனர் இமயத்தை அழைத்தார் செல்வேந்திரன். அழைக்கும் முன் இவர் இந்த மேடையில் எப்படிப் பொருந்துகிறார் என்பதைத் தெளிவாகச் சொன்னார் செல்வேந்திரன். பாரதிராஜா அவர்களும், பூமணி அவர்களும் தங்களது படைப்புக்களைக் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர் நாவல் வெளியிடும் அதே ஆண்டின் இவர் ஒரு திரைப்படம். இவர் திரைப்படம் முந்தி எனில் அவரது படைப்பு அதைத் தொடர்ந்து என.

பாரதிராஜாவின் பேச்சு ஆத்மார்த்தமாக இருந்தது. உள்ளத்தில் இருந்து பேசினார். இத்தகைய இலக்கியக் கூட்டத்தில் தனக்கு என்ன இடம் என்றே தெரியவில்லை என்னை எதற்கு அழைத்தீர்கள் எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். சரி நானும் படைப்பாளி ஆனால் என் ஊடகம் வேறு என்று சமாதானமாகியபின் சிறுவயதில் அகிலன், கல்கி, நா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் போன்றோர்களைப் படித்திருக்கிறேன். ஆனால் சினிமாவிற்குள் வந்தபிறகு நேரமும் சூழ்நிலையும் படிக்க வாகாக அமையவில்லை. இருந்து எப்படியாவது நேரத்தைத் திருடி பூமணி, ஜெயமோகன், எஸ்ரா, யுவன் போன்றோர்களின் எழுத்துக்களைப் படித்துப் பின் அவர்களுடன் கண்டிப்பாக உரையாடுவேன் என்றார்.

ஜெயன், எஸ்ரா, நாஞ்சில் நாடன் போன்ற இலக்கியவாதிகள் சினிமாவிற்குப் பங்களிப்பது ஆரோக்கியமானது மேலும் பலர் வரவேண்டும் என்றார்.

வழக்கம்போல எழுதி எடுத்து வந்ததை ஒரு அட்சரம்கூட நான் பேசவில்லை, எமோஷனலாக என்ன தோன்றியதோ அதைப் பேசிவிட்டேன் என்று பார்வையாளார்களைக் கவர்ந்தார்.

கன்னடக் கவிஞர் பிரதீபா நந்தக்குமார் பூமணியின் படைப்புலகம் சிவராம் கரந்தைப் போல உள்ளது என்றார். மேலும் பிற மொழிகளில் தமிழக எழுத்தாளார்கள் அழைத்துச் சிறப்பிக்கபடுவது போல தமிழில் பிற மொழி எழுத்தாளார்களை அழைத்துச் சிறப்பிப்பது இல்லை. இந்நிகழ்ச்சி அவ்வகையில் வித்தியாசமானது என்றார். (சென்ற வருடம் புன்னத்தில் குஞ்ஞப்துல்லாவை அழைத்திருந்தோம்)

அடுத்துப் பேசிய அயோத்திதாசர் மன்றத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பூமணிக்கும் தனக்குமான நெருக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். பூமணியின் நாவலான பிறகு-ல் இருந்து மாடு வெட்டிக் கூறுபோட்டுப் பங்கு வைக்கும் நிகழ்ச்சியின் விவரிப்பை சிலாகித்துப் பேசினார்.

அடுத்து யுவனை அழைத்தார் செல்வேந்திரன்.  யுவன் நேர்பேச்சில் பேசுவது போலவே பேச ஆரம்பித்து அவர் முதன்முதலில் பூமணியைக் கோவில்பட்டியில் சந்தித்ததை விவரித்தார். மேலும் பூமணியில் சிறப்பியல்பான மாற்றுக் கருத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் குறித்தும் பேசினார். அவரது நைவேத்தியம் நாவல் நன்றாக இல்லை என யுவன் சொன்னபோது “அப்படியா சொல்றீங்க, வேறு சிலரும் அப்படித்தான் சொன்னார்கள்” என இயல்பாக எடுத்துக் கொண்டார் என்றார்.

பூமணியின் படைப்புக்களில் இருந்து சில உதாரணங்களைச் சொல்லி பூமணியின் எழுத்து எப்படி வாசிப்பின்பம் தருகிறது என்றும் அவை எப்படிப் பன்முகத்தன்மை கொண்டவை எனவும் நிறுவினார்.

எஸ்.ரா பேச ஆரம்பிக்கும்போதே கரிசல் படைப்பாளியை என்னைப் போன்ற கரிசல் படைப்பாளிகள் சேர்ந்து மரியாதை செய்திருக்க வேண்டும் நாங்கள் மறந்ததைச் செய்ய நினைத்த ஜெய மோகனுக்கு நன்றி எனத் தொடங்கினார்.

கரிசலைப் பற்றிய சித்திரத்தைத் தீட்டியதில் கிராவும் பூமணியும் முக்கிய ஆளுமைகள். கரிசல் காட்டில் வேம்பும், கருவேல மரமும் மட்டுமே நீடித்து நிலைத்திருக்கும். அதேபோலத்தான் கிரா வேம்பு, பூமணி கருவேலம் என நெகிழ்வாகச் சொன்னார்.

பூமணியின் நாவல்கள் வெறும் எழுத்துக்கள் அல்ல கரிசல் வாழ்வின் ஆவணங்கள் என்றார்.  எப்படித் தீப்பெட்டித் தொழில் கிராமத்தில் நுழைந்ததும் குழந்தைகள் வாழ்க்கை தலைகீழாக மாறியது என்றும் வீட்டில் பெண்மணிகள் பசை ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கை தடம் புரண்டது தெரியாமலே அந்த மாயச்சுழலில் சிக்கிக் கொண்டார்கள் என்றும் ஆவணப்படுத்தி இருக்கிறார் என்றார். இதே சம்பவங்களை நிகழ்வுகளை தான் பார்த்திருந்தும் தனக்கு அவைகளைக் கதைகளாக்கத் தோன்றவில்லையே என வருத்தப்பட்டார்.

ஜெயன் பேச வரும்போது கால அவகாசம் இல்லை என்பதால் அதிகம் பேசாமல் அனைவருக்கும் நன்றி கூறினார். அவர் பேச நினைத்தை எல்லாம்தான் புத்தகத்தில் எழுதிவிட்டாரே.

இரவு 9.30 மணி அளவில் விழா இனிதே நிறைவு பெற்றது.

11 comments

  1. .தங்கள் நேர்முக வருணனை விழாவுக்கு நேரில் வந்த உணர்வை ஏற்படுத்தியது.விழாவுக்கு வர முடியாத குறையை ஆதங்கத்தை உங்கள் பதிவின் மூலம் போக்கி விட்டீர்கள்.நன்றி வேலன்..

  2. தவிர்க இயலாத சூழலால் விழாவிற்கு வர இயலாத குறையினை தங்களது பதிவு தீர்த்துவிட்டது.

    மிக்க நன்றி திரு.வேலன்.

    சுந்தர்.

  3. சுருக்கமான நிறைவான வர்ணனை புகைப்படங்களுடன். நன்றி.
    அடுத்தமுறையாவது கலந்துக்கொள்ள முயல்கிறேன்.

  4. விழாவில் கலந்து கொள்ள இயலாத குறையைத் தங்கள் அழகான பதிவுமூலம் நிறைவு செய்து விட்டீர்கள்.மிக அடக்கமானவரான
    பூமணிக்கு இப்போதாவது வெளிச்சம் கிடைத்தது மிக்க மகிழச்சியளிக்கிறது.யாராவதுஃநிகழ்ச்சியின் ஆடியோவர்ணனையைப்
    பதிப்பித்தால் நலம் நன்றி வேலன்

  5. விழாவை நேரில் கண்ட மனநிறைவு.
    வாழ்த்துகள்

    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

Leave a comment