Month: July 2009

மக்கட் பதர்

அலுவலகத்திற்கோ அல்லது உங்கள் இல்லத்திற்கோ கொரியர் டெலிவெரி செய்பவரைக் கவனித்திருக்கிறீர்களா? ஆறு மாதத்திற்கு முன் வந்த அதே நபர்தானா? ஆமெனில் இன்னும் ஆறுமாதம் அல்லது ஓரிரு வருடங்கள் கழித்தும் இதே கொரியர் டெலிவரி பாயாகத்தான் இவரது வாழக்கை கழியுமா? இல்லையெனில் அவர் எங்கே?

யோசித்துப் பாருங்கள். கொரியர் டெலிவெரி செய்ய என்ன விதமான தனித் திறமை தேவை? கொடுத்த முகவரியில் டெலிவெரி கொடுக்க வேண்டும் குறித்த நேரத்தில்; அவ்வளவே. இரண்டு வருடங்கள் கொரியர் டெலிவெரி செய்தவருக்கும் இப்பொழுது புதிதாகச் சேர்பவருக்கும் பெரிய வித்தியாசமில்லை. சொல்லப் போனால் கொரியர் கம்பெனிகள் புதியவர்களைத்தான் விரும்புகின்றனர். குறைந்த சம்பளம். துடிப்பாக வேலை செய்வர்.

18 லிருந்து 25 வயதிருக்கும், ஒரு மொபைல் வைத்திருப்பார், காதில் எப்பொழுதும் இருக்கும் ஏர் போன். குறைந்த பட்சம் ஒரு டி வி எஸ் 50 அல்லது சைக்கிள். காலையில் 3 மணி நேரம் டெலிவரி மாலையில் 3 மணி நேரம் பிக்கப். சம்பளம் ஊருக்குத் தகுந்தாற்போல் 2500 லிருந்து 5000 வரை.

எல்லாம் சரி. எத்தனை வருடங்கள் இப்படி? அதன் பின்?

இன்னொரு இளைஞனைப் பாருங்கள் வெறும் 2000 ரூபாய் சம்பள்த்தில் பொறியியல் நிறுவனம் ஒன்றில் உதவியாளனாக வேலைக்குச் சேர்கிறான். ஆர்வமுடன் கற்றுக் கொண்டால் 4 வருங்களில் அவன் கையில் ஒரு தொழிலும் நல்ல சம்பளமும்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் எல்லா இளைஞர்களும் அழுக்குப் படாமல் வேலை செய்யவே விரும்புகின்றனர். உடல் வருத்திப் பாடுபட எவரும் தயாராக இல்லை.

இவர்களையும் கவனியுங்கள்.

1. கிரிடிட் கார்டு பணம் வசூலிப்பவர்
2. பெர்சொனல் லோன் / கார் லோன் பணம் வசூலிப்பவர்
3. மொபைல் பில் / தொலைபேசி பில் பணம் வசூலிப்பவர்
4. டெலி மார்க்கெட்டிங் செய்பவர்கள்
5. டிவி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் டெமான்ஸ்ட்ரேட்டர்கள்.
6. துணிக்கடை சேல்ஸ் மேன்கள்

இவர்கள் எல்லோருக்கும் பொதுவான அம்சங்கள் : எந்தவித உத்தியோக உயர்வும் சொல்லிக் கொள்ளும்படி சம்பளமும் கிடைக்காத இந்த வேலைக்கு மட்டுமே செல்லும் ஆர்வம்.

அடுத்த பத்தாண்டுகளில் இவ்வாறான இளைஞர்களால்தான் சூழப்பட்டிருப்போம். நிச்சயமற்ற எதிர்காலத்துடன் எதறகும் பிரயோசனப்படாத ஒரு இளைஞர் கூட்டம்.

இன்னொரு சுரண்டல் நடக்கிறது கார்ப்பொரேட் கம்பெனிகளில். 100 பேர் வேலை பார்க்கும் இடமொன்றில் நேரடியாக நிறுவனத்தில் சட்டப் படி வேலையில் இருப்பது 30 பேர்களே(ON ROLL). மீதப் பேர்களெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள் (OFF ROLL).

இந்த ஆப் ஆசாமிகள் ஆன் ஆசமிகள் சொல்லும் வேலைகளை இரவு பகல் பாராமல் செய்வதும், என்றாவது ஓரு நாள் நாமும் ஆன் ரோல் ஆசாமி ஆகிவிடுவோம் என கற்பனையில் இருப்பதும் நிறுவன ஆன் ரோல் உழியர்களுக்கு வரப் பிரசாதம்.

எதெல்லாம் ஆன் ரொல் ஆசாமி செய்யவேண்டியது எதெல்லாம் ஆப் ரோல் ஆசாமி செய்ய வேண்டியது என்ற தெளிவில்லாததால் 6 ஆயிரம் அல்லது 7 ஆயிரம் சம்பளத்துக்கு 40 ஆயிரம் சம்பளக்காரன் செய்ய வேண்டிய வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்த் ஒரு ஆப் ரோல் இளைஞன். அவர் தயாரித்த டாக்குமெண்ட் ஒன்றில் நான் கேட்ட சந்தேகம் எதையும் தெளிவுபடுத்த அவரால் முடியவில்லை.

நான் : “ஆனந்த், ஏன் 12% என்றால் ரிஜக்சன்?”

ஆனந்த் : ”அதெல்லாம் தெரியாது சார். 12%க்கு மேல இருந்தா அக்சப்டட். இல்லன்னா ரிஜக்சன். இதத்தானே நானும் 3 வருசமாச் செய்கிறேன்”

இவர் ஆன் ரோலில் வர வாய்ப்பில்லை என்பதை உணரும்போது இவருக்கு என்ன எதிர்காலம் இருக்கு?

அறுவடை முடிந்து களத்துமேட்டில அடித்துக் குவிக்கப் பட்ட குவியலில் இருந்து நெல் வீட்டுக்கும் பதர் குப்பைக்கும் போவதை ஒத்ததிது. தாங்கள் பதரென்பதை அறியாத வகைக்கு அறியாமை அவர்களை வஞ்சிக்கிறது

குறைந்தபட்சம் அவர்கள் மீதொரு சினேகப் புன்னகை புரிவோம். நம்மால் முடிந்தது அதுதான். சேவைக் குறைபாட்டுக்கு அவர்கள் மீது எரிந்து விழாமல் புரிந்து நடந்து கொள்வோம். சரிதானே?

.

Advertisements

சுயம் தொலைத்த மற்றொரு முகம்


எழுத்துக்காரனாக, ஆட்டக்காரனாக,
பாடகனாக, விளையாட்டு வீரனாக,
நடிகனாக, அரசியல்வாதியாக
இன்னும் ஏதோகாரனாக
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
சுயம் தொலைத்த
மற்றொரு முகம்.

அடர்ந்த இருளும் தனிமையும்
கைகோர்க்கும் கணமொன்றில்
அவிழ்ந்துவிடுகிற ஒப்பனைகள்
காட்டிக் கொடுக்கிறது
பிதுங்கி வழியும்
காமத்தையும், குரூரத்தையும்,
நம்பிக்கைத் துரோகத்தையும்,
பித்தலாட்டம் நிறைந்த
பேராண்மையையும்,
ஆக்டோபஸ் கைகளென
திசையெங்கும் நீளும்
ஏக்கங்களையும், பெருமூச்சுக்களையும்

ஆரம்பத்தில் அதி(ய)ர்ச்சியெனினும்
பழகிவிடுகிறது நாளடைவில்

என்றாலும்
கழிகிறது வாழ்க்கை
ஏதோவொன்றை நம்பி.

.

டிபன் ஹவுசில் எனக்குப் பிடித்த 10.


1. சூடா, ஆவிபறக்குற பஞ்சு பஞ்சான இட்லி மிகவும் பிடிக்கும்.

2. முறுகலாகவும் இல்லாம மாவாகவும் இல்லாம பதமா இருக்குற சாதா தோசை பிடிக்கும். பேருதான் சாதாவே தவிர தோசை சூப்பர்.

3. பட்டர் வாசத்தோட இருக்குற பட்டர் தோசை. தொட்டா உடையுற
மாதிரி இருக்கதுதான் குழந்தைங்களுக்குப் பிடிக்கும்

4. பட்டர் ஆப்பம். இதுதான் ஸ்பெசல். வெளிய முருகலாகவும் உள்ள பதமாவும், ஆனா நல்லா வெந்து இருக்கது பிடிக்கும். கெண்ட்டகி சிக்கனுக்கு ஈடா இருக்கும்.

5. மசால் தோசை. வெளியூர்ல எல்லாம் பூரி மசாலையே வச்சுத் தர்ராங்க. கோவையில மட்டும்தான் தோசைக்குன்னு தனியா மசால் செய்யுறது. அது புடிக்கும்.

6. வெங்காய தோசை. வெங்காயம் கசகசன்னு ஆகாமலும் பச்சை வாடை அடிக்காமலும் இனிப்பா இருக்கது புடிக்கும்.

7. பொடி தோசை. இட்லிப் பொடியத் தூவி வேக விட்டு மடிச்சுத் தர்றது பிடிக்கும்.

8. ஸ்பெசல் மசாலா தோசை. இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மசால் தோசையே சூப்பரா இருக்கும். அதுல பட்டர் எல்லாம் போட்டு அசத்தலா இருக்கது பிடிக்கும்.

9.பூரி, நல்லா உப்பி, எண்ணெய் அதிகம் குடிக்காம, கை வச்சு அமுத்துனா உள்ள இருந்து ஆவி வருமே அது புடிக்கும்.

10. இதுக்கு சைடிஷ்ஷான கெட்டிச் சட்னி, வெங்காய சட்னி, புதினாச் சட்னி, தக்காளி கொத்ஸ், சாம்பார், பொடி, தக்காளி குருமா, பூரி மசால் இப்படி புடிச்சதச் சொல்லீட்டே போகலாம்.

Photo courtesy : http://www.flickr.com

.

புலம்பலின் காற்தடங்கள்


8 மணிக்குப் பெரியவள்
8.30 க்குச் சின்னவள்
9.00 க்கு மனைவி
கூடவே நானும்
என யாவரும்
வெளியேறிய பின்

பூட்டிய கதவுகளுக்குள்
தனிமையில் தவித்து
ஆவலாதிப் புலம்பல்களை
வெளியேற்றுகிறது வீடு

மாலை திரும்பி
வீடு திறக்கையில்
கிடைத்த இடைவெளியில்
முட்டி மோதி
வெளியேறுகின்றன
அரூபக் காற்தடங்களை
சுவரெங்கும் பதித்தபடி.

இதே பாடற்பொருளில், நண்பர் அ.மு. செய்யதுவின் கறையான்கள் அறித்த மீதிக் கதவுகள் பதிவையும் வாசியுங்கள்.

.

கதம்பம் – 17/07/09

பரிசல் காரன் – கிருஷ்ணாவை வேறெவரையும் விடச் சற்றதிகமாக தெரியுமெனக்கு. அவர்கள் நிறுவனத்தில் வேலைப்பளு காரணமாக் என்னுடன் உரையாடுவதைக் கூடக் குறைத்துக் கொண்டார். வலைப்பக்கமும் அதிகமாகக் காண முடியவில்லை. செப்டம்பர் வரை வரும் எல்லா ஞாயிறுகளிலும் வேலை செய்தால்தான் கையில் இருக்கும் ஆர்டரை குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். சென்ற வாரம் நாங்கள் ஏறபாடு செய்திருந்த டூருக்கும் வரவில்லை.

இந்த நிலையில்தான் தமிழ்மண நட்சத்திரமானார். எப்படிச் சமாளிக்கப் போகிறார் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவுகளைக் குறைத்துக் கொண்டார். எங்கே பதிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலையில் கவனக் குறைவாக இருந்து விடுவாரோ என்ற என் எண்ணத்தை புரிந்து கொண்டவர் போலவே நடந்துகொண்டார். அது சரி எப்பொழுதும் இருக்கும் துருவ நட்சத்திரம்தானே அவர்.
முன்னுரிமை அளிக்க வேண்டியது எது என்ற தெளிவோடு இருக்கும் அவரைப் பாராட்டுகிறேன்.

***********************************************************************************

அரசாங்க மருத்துவமனைகளில் இலவச இருதய அறுவை சிகிச்சை பெற உங்கள் வருட (கவனிக்கவும் வருட) வருமானம் ரூ 12,000 க்கும் குறைவானது என கிராம நிர்வாக அலுவலர் சான்றளிக்க வேண்டும். உண்மை வேறாக இருந்தாலும் கி நி அ வாங்குவதை வாங்கிக் கொண்டு சான்றளித்து விடுவார். அதைக் கொடுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள்.

ஆனால் புதிதாக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது கி நி அ க்களுக்கு. அதன்படி யாருக்கும் ரு.24000க்கு குறைவாக வருமானச் சான்றிதழ் வழங்கக் கூடாதாம்.

இதற்கு இலவச அறுவைச் சிகிச்சை நிறுத்தம் என அறிவித்திருக்கலாம்.

**********************************************************************************

டெல்லி மெட்ரோ வேலைகளில் ஏற்பட்ட விபத்து துரதிருஷ்டமானது. ஆனால் மற்ற அரசியல்வாதிகளைப் போலல்லாமல் உடனே ஸ்பாட்டுக்கு வந்து ஆறுதலளித்ததும் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ததும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் மீதான நல்லெண்ணத்தை அதிகரித்தது.

அரசு அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது சரியான முடிவு. இவரைப் போன்றவர்களையும் அனுப்பி விட்டால் அவரை ஆதர்சமாகக் கொண்டு செயல்படும் மற்றவர்களுக்கு அது நம்ம்பிக்கையிழக்கச் செய்து விடும்.

மாதவராஜ் பதிவில் குறிப்பிட்டபடி பங்கேற்பவர்களுக்கு திட்டத்தின் மீதான belonging உடைபடாமல் காப்பாற்றுவது முக்கியம்.

பத்திரிக்கைகள் அவரைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என எழுதுவது எதன் அடிப்படையில்? ஒரு வேளை பாலக்காடு தமிழ் நாட்டில் இருக்கோ?

**********************************************************************************

நாடோடி இலக்கியன் திருப்பூரில் இருக்கிறார். சென்ற வாரம் சனிக்கிழமை சந்தித்தேன். பொதுவாக ஒருவர் ரசிக்கும் பாடலகளை வைத்து அவரை எடை போடுவேன். அந்த விதத்தில் என் ரசனைக்கு 100% சதவீதம் ஒத்துபோகும் ஒருவர் அவர். 80 களில் வந்த இளையராஜா பாடல்களில் அதிகம் பேசப்படாத நல்ல பாடல்களைச் சொன்ன மாத்திரத்தில் பாடினார். இந்த வாரம் அவரது கவிதை ஒன்று.

எப்படித் தொலைப்பது?!

வழக்கமாகச் செல்லும்
இப்பாதையின்
இதே இடத்தில்தான்
முன்பொருமுறை
முக்கியமான பொருளொன்றைத்
தொலைத்தேன்,
ராசியில்லா இவ்விடத்தைக்
கடக்கும் போதெல்லாம்
இருக்கும் பொருட்களை
அனிச்சையாய் தடவிப்
பார்த்துக் கொள்கிறேன்,
பொருளைக் கண்டெடுத்தவனும்
இப்பாதையை வழக்கமாக்கி
கொண்டவனாய் இருப்பின்,
இதே இடத்தை
நன்றியோடு நினைவு கூர்ந்து
நகர்ந்து போகக் கூடும்,
எனக்கான பிரச்சனை என்னவெனில்
தொலைந்தப் பொருள் தொலைந்ததுதான்,
இவ்விடத்தைக் கடக்கயில் வரும்
இப்படியான நினைவுகளை
எப்படித் தொலைப்பது?!

ஒரு மறு வாசிப்பில் கவிதையில் வரும் பொருளைக் காதலியாக நினைத்துப் பாருங்கள்; இழப்பின் வலி புரியக்கூடும்.

********************************************************************************

ஜோசப் பால்ராஜ் தனது ஸ்டேட்டஸ் மெஸேஜாகச் சில பொன்மொழிகளைப் போடுவார். அது அந்தந்த சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக இருக்கும். சமீபத்திய ஒன்று.

Engineers like to solve problems. If there are none, they create one.

இதில் Engineers என்பதற்குப் பதில் அவரவருக்குப் பிடித்ததைப் போட்டுக் கொள்ளலாம்.

********************************************************************************

மெயிலில் பின்னூட்டமிடுவதில் உள்ள சிரமங்களைப் புரிய வைத்த உங்களுக்கு நன்றி. நீங்கள் கேட்டுக் கொண்டதற்கினங்கி பின்னூட்டமிடும் வாய்ப்பு திறக்கப் படுகிறது; மட்டுறுத்தலுடன்.

அதே போல் பிறர் பதிவுக்கும் பின்னூட்டம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை மின்னஞ்சல் மூலமும் மின்னரட்டையிலும் உணரவைத்த உங்களுக்கு நன்றி. எனது பின்னூட்டம் தொடரும், நல்ல பதிவுகளுக்கு.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்; குறிப்பாக சஞ்சய், கிரி இருவருக்கும்.
முகம் தெரியாத எதிரியுடனான நிழல் யுத்தத்தில் நான் இழக்கவிருந்தது என்னவென்பதைப் புரிய வைத்ததால்.

மேலும் யாரோ ஓரிருவருக்காக, என்மீதபிமானம் வைத்திருக்கும் மீதித் தொன்னூற்றெட்டுப் பேரை விட்டு ஏன் விலக வேண்டும்?

.

சபிக்கப்பட்ட பன்றிகள்


எழுதுவதென்பது பால்யத்தில் தொடங்கிய கனவு. எழுதுமுன் நிறைய வாசிக்க வேண்டுமென்ற அப்பாவின் அறிவுரையின் படி வாசிக்க ஆரம்பித்தேன். எழுதிக் காட்டியதையெல்லாம் இன்னும் பக்குவப்படவேண்டுமெனச் சொல்லி ஆற்றுப்படுத்தினார்.

பிறகு குடும்பம், குழந்தைகள் அதைச் சார்ந்த ஓட்டமென வாழ்க்கை வேறு திசைகளில் பயணிக்க, எழுத்தாசை தற்காலிகமாக பின்வரிசைக்குத் தள்ளப்பட்டது.

இணையத்தில் எழுதும் வசதி குறித்துக் கேள்விப்பட்டதும், 6 மாதங்கள் வரை வாசிக்க மட்டுமே செய்தேன். வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்ததில் ஆரம்பத்தில் சிறிது தடுமாற்றம் இருந்த போதும் ஓரளவுக்கு கைகூடி வந்தது, சைக்கிள் பழகும் சிறுவனின் குரங்குப் பெடல் முயற்சிபோல்.

ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள அமைந்ததும் அவர்களுடன் இணையம் தாண்டிய நட்பு மலர்ந்ததும் நான் பெற்ற பாக்கியங்கள் அதைக் குறித்து எழுதிய பதிவு என்ன தவம் செய்தேன்.

சமீபத்தில் ஒரு பதிவரின் நண்பரின் தாயார், வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறித் திக்குத் தெரியாமல் அலைந்ததும் இறுதியாக அவர் வேலூரில் இருப்பதை அறிந்து கோவையிலிருந்து அந்நண்பர் சென்று அவரது தாயாரை மீட்டு வர பதிவர்கள் செய்த உதவியும், அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 16 பேர் கான்பிரண்ஸ் முறையில் பேசியதும் எதையும் சாதித்த உணர்வைத் தரவில்லையாயினும் நம்மைச் சுற்றி நண்பர்கள் பதிவர்களாக அறிமுகமாகியும் ஆகாமலும் சூழ்ந்திருக்கிறார்கள் எப்போதும் நம்மைக் கவனித்தபடியே என்ற ஆறுதலையளித்தது.

வலதுகை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் செய்யும் பதிவர்களை என்ன சொல்லிப்பாராட்ட? ஒரு பதிவரின் குடும்பத்தில் நின்றுபோகவிருந்த திருமணம் பதிவர்களின் உதவியால் ஜாம் ஜாமென நடந்திருக்கிறது. இந்த ஞாலத்தின் பெரிய காலத்தாற் செய்த உதவியெல்லாம் பழகிய ஒரே வருடத்திற்குள் என்பதுதான் இன்னும் விசேசமானது.

இருந்தும் யார் கண் பட்டதோ தெரியவில்லை, தற்போது சில புல்லுருவிகள் மன உளைச்சலை ஏற்படுத்தவும் அவதூறு பரப்பவும் ஆரம்பித்திருக்கிறார்கள். செய்யாத குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டி இருக்கும் நிலைதான் பேரழுத்தமேற்படுத்துகிறது

பதிவுலகம் பத்திரமான இடமல்ல என்பதான ஒரு நிலை இருக்கிறது. நீடிக்குமா இல்லை அமைதி திரும்புமா? எல்லோரும் தங்கள் எழுத்தாற்றலால் மற்றவர்களைக் கவர்ந்தும், மிஞ்சியும், பாராட்டியும், ஊக்குவித்தும் ஒன்றாக இருப்பார்களா?

இது போன்ற எண்ணற்ற கேள்விகள்; விடையேதுமற்றவை. தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களை அடையாளங்காண முடியுமென்றாலும் சில தொழில் நுட்பப் புலிகளும் இதில் இருக்கலாமோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

பிரபலமாவதும், அதிக ஹிட்களை, பின்னூட்டங்களை வாக்குக்களைப் பெற வேண்டி நடத்தப் படும் இந்த நாடகங்களில் பலியாவது பதிவர்களின் படைப்பாற்றல். இது போன்ற ஜாலங்கள் உடனடி பலனைத் தந்தாலும் நெடுநாட்கள் பம்மாத்துப் பண்ண முடியாது. அதே சமயம் நல்ல விஷயஞானமுடனும், நல்ல எழுத்துத் திறமையுடனும் எழுதப்படும் பதிவுகள் இன்றில்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறுநாள் பாராட்டப்படும். ஆனால் எல்லோரும் 15 நிமிடப் புகழுக்குத்தானே மாரடிக்கிறார்கள். அது நிரந்தரமல்ல.

எதற்கு வம்பு ஒதுங்கி இருப்பதே நல்லது. எழுதுவதை எழுதிப் பதிவிடுவதுடன் நிறுத்திக் கொள்ளவும், எவருடைய பதிவிலும் பின்னூட்டமிடுவதில்லையெனவும் முடிவு செய்திருக்கிறேன். மின்னஞ்சல் முகவரிக்கு பாராட்டி ஒரு மின்னஞ்சல் எழுதுவேன்; குறையேதுமிருப்பின் சுட்டியும். இது ஒரு தற்காலிக முடிவேதான். நிலமை சீரானதும் மீண்டு(ம்) வரலாம்.

நின்று போராடலாமே எனும் நண்பர்களுக்குச் சொல்ல ஒரு கதை மட்டுமேயுண்டு என்னிடம்.

யானை ஒன்று குளித்து சகல அலங்காரங்களுடன் சாமி உற்சவம் போகவென கோவில் நோக்கி வருகிறது். ஒரு சிறு பாலத்தைக் கடந்துதான் போக வேண்டும். எதிரில் இரண்டு பன்றிகள் வருவதைக் கண்டதும் யானை ஒதுங்கி பன்றிகளுக்கு வழி விடுகிறது, அழுக்காகிவிடக்கூடாதேயென.

யானையைக் கடந்து போகும் பன்றிகள் பேசிக் கொள்ளும், “நம்ம பலத்தப் பார்த்தியா? யானை பயந்துருச்சு” என

பயந்தது யானையாகவே இருந்து விட்டுப் போகட்டும். பன்றிகள் கொண்டாடட்டும்.

பன்றிகள் பன்றிகளாகவே மரிக்க சபிக்கப்பட்டவை. அவை ஒரு போதுமாகா யானைகளாக.

|

T.V. Radhakrishnan

to me

show details 12:13 (6 hours ago)
Follow up message

நல்ல பதிவு

ஆனாலும் என்னைப்போன்றோர்..உங்களைப் போன்றோரின் பின்னூட்டத்தை எதிர்ப் பார்க்கிறோம்.பின்னூட்டம் என்பது சவலைக் குழந்தைக்கு
பரிந்துரைக்கப்படும் டானிக் போல.அதைக் கொடுப்பதை நிறுத்தி பல புது
பதிவர்களான குழந்தைகளை சாகடிக்க வேண்டாம் ராஜேந்திரன்.மறு பரீசலனை
செய்யுங்கள் முடிவ

அய்யா,

உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. பின்னூட்டங்களை மின்னஞ்சலிலேயே செய்து விடுகிறேன். அதைப் பின்னூட்டத்தில் எடுத்துப் போட்டுக் கொள்வதில் எனக்கேதும் ஆட்சேபமில்லை.

உங்கள் பின்னூட்டங்களை இங்கே அனுப்பவும்

.

கல்கியில் நர்சிம் மற்றும் முத்துவேல்.

சகபதிவர்கள் மேலும் மேலும் பத்திரிக்கைகளால் அடையாளங் காணப்பட்டு அறிமுகப் படுத்தப் படும்போது மனது மகிழ்கிறது.

இந்த வாரக் கல்கியில் நண்பர் நர்சிம் மற்றும் ச.முத்துவேல் ஆகியோரின் வலைப்பூக்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.

உடன் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துகளை இங்கே பதிந்து கொள்கிறேன்.

நன்றி : கல்கி வார இதழ்.

.

கல்கியில் நர்சிம் மற்றும் முத்துவேல்.

சகபதிவர்கள் மேலும் மேலும் பத்திரிக்கைகளால் அடையாளங் காணப்பட்டு அறிமுகப் படுத்தப் படும்போது மனது மகிழ்கிறது.

இந்த வாரக் கல்கியில் நண்பர் நர்சிம் மற்றும் ச.முத்துவேல் ஆகியோரின் வலைப்பூக்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.

உடன் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துகளை இங்கே பதிந்து கொள்கிறேன்.

நன்றி : கல்கி வார இதழ்.

.

சைக்கிள் கூடை நிறையப் புன்னகைகள்

எதிர்பாராத திருப்பத்தில்
இடது பக்கம் ஒடிக்க
அவளும் இடது பக்கம் ஒடிக்க
மாற்றி வலது பக்கம் ஒடிக்க
அவளும் வலது பக்கம் ஒடித்து
நேராக்கி அவளும் நேராக்கி
மறுபடியும்
இடது வலது நேர்
அவளும் இடது வலது நேர்
கடைசியாக
இருவரும் கால் ஊன்றி
தகவல் இடைவெளியை
ஒரு புன்னகையில்
சரி செய்துக்கொண்டே
கடந்து வந்து விட்ட
ஒரு திருப்பத்தில்
எந்த தகவல் இடைவெளியும் இல்லை
அவளும் திரும்ப
நானும் திரும்ப

ரவிஷங்கர்

நன்றி ரவி. தின வாழ்வின் இது போன்ற கணங்களைக் கவிதையாக்குதல் எனக்குப் பிடிக்கும். பாத்ரூமில் ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுக்கள் பற்றி ஈரோடு தமிழன்பன் ஒரு கவிதை எழுதியிருப்பார். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

.

சைக்கிள் கூடை நிறையப் புன்னைகைகள்

எதிர்பாராத திருப்பத்தில்
இடது பக்கம் ஒடிக்க
அவளும் இடது பக்கம் ஒடிக்க
மாற்றி வலது பக்கம் ஒடிக்க
அவளும் வலது பக்கம் ஒடித்து
நேராக்கி அவளும் நேராக்கி
மறுபடியும்
இடது வலது நேர்
அவளும் இடது வலது நேர்
கடைசியாக
இருவரும் கால் ஊன்றி
தகவல் இடைவெளியை
ஒரு புன்னகையில்
சரி செய்துக்கொண்டே
கடந்து வந்து விட்ட
ஒரு திருப்பத்தில்
எந்த தகவல் இடைவெளியும் இல்லை
அவளும் திரும்ப
நானும் திரும்ப

ரவிஷங்கர்

நன்றி ரவி. தின வாழ்வின் இது போன்ற கணங்களைக் கவிதையாக்குதல் எனக்குப் பிடிக்கும். பாத்ரூமில் ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுக்கள் பற்றி ஈரோடு தமிழன்பன் ஒரு கவிதை எழுதியிருப்பார். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

.