Month: August 2017

கிஸ்மத் – மலையாளத் திரைப்படம்

 

பெரும்பாலும் சினிமாக்களில்,  காதலர்களில் ஒருவர் இறந்துபோக நேரிடுமானால், மற்றவர் பைத்தியமாகவோ அல்லது அவரது நினைவில் வாழ்க்கையைத் தொலைத்தவராகவோ அல்லது  இறந்துபோவதாகவோ அமைக்கப்படும். மாறாக இப்படத்தில் காதலன் இறந்துபோனதும் முடிந்துவிடும் கதையின் நீட்சியாகக் காட்டப்படும் இறுதி 5 நிமிடக் காட்சிகள் ஒரு குறுங்கவிதை. படத்தை வேறு தளத்திற்கு நகர்த்திவிடுகிறது.

23 வயது இர்ஃபானுக்கு 28 வயது அனிதாமீது காதல். கல்லூரிப் படிப்பை(பொறியியல்) பாதியில் விட்ட இர்ஃபான் வேலை ஏதுமற்றவன். அவ்வாறு வேலை செய்து சம்பாதித்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லாத அளவுக்கு வசதியான குடும்பத்தின் இளையவன். தன் விருப்பம் என பழைய பைக்குகளத் தேடி வாங்கி வந்து அதன் தோற்றம் மாற்றிப் பொலிவேற்படுத்தி ஓட்டுவதில் ஒரு பெருமிதம் கொண்டவன்.

அனிதா ஆராய்ச்சி மாணவி. ஏழை, தலித் குடும்பத்தில் உதித்தவள். எதேச்சையாக ஒரு மோதலில் சந்திக்கும் இர்ஃபான் மீது முதலில் கோபம் கொண்டாலும் அவன் நடவடிக்கைகளாலும் நல்லெண்ணத்தினாலும் ஈர்க்கப்பட்டு காதல் கொள்கிறாள். அவளது ஆராய்ச்சிக்கு இர்ஃபான் முன்வந்து உதவி செய்ய காதல் மேலும் இறுகிறது.

இர்ஃபான் வீட்டில் பெண்பார்க்க ஆரம்பிக்க, அவன் அனிதாவைப் பற்றி சொல்ல, வீட்டில் எதிர்ப்பு கிளம்புகிறது. உடனே அனிதாவைக் கூட்டிக் கொண்டு காவல் நிலையம் சென்று பாதுகாப்பு கோறுகிறான். அதுதான் அவன் உணர்சிவயப்பட்டு செய்யும் தவறு. ஏன் என பின்விரியும் காட்சிகளில் தெளிவாகிறது.

படத்தின் ஆகச்சிறந்த சித்தரிப்பு, காவல் நிலையம். ஒரு காவல் நிலையமொன்றில் இயல்பாக நடக்கும் அன்றாட நிகழ்வுகளை எந்தப் பூச்சும் பாசாங்குமற்று கன்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார்கள். காவல் ஆய்வாளராக வரும் விநய் கூடக் குறைச்சல் இன்றி ஒரு ஆய்வாளரை அவரது நிறைகுறையுடன் கன்முன்னே காட்டுகிறார்.

புதிதாகச் சேரவரும் கான்ஸ்டபிளை நிறுத்தி வைத்துக் கொண்டே பேசுவதும், அதே சமயம் உள்ளே வரும் கான்ஸ்டபிள் பணியில் இருப்பவரை வேண்டுமென்றே உட்காரச் சொல்லுவதுமாக ரேக்கிங் செய்வதை போன்ற நடவடிக்கை ஒரு சிறு உதாரணம். “என்ன? வேற வேலை ஏதும் கிடைக்கலியா? இப்ப இதான் ஈசி இல்ல, நல்ல சம்பளம், கூடுதலாகக் கிம்பளம்” என்றவாரே புதிதாக வந்தவரை நோட்டம் பார்ப்பதில் அசத்துகிறார். இவர்தான் பிரேமம் படத்தில் காலேஜ் வாத்தியாராக வந்து மலரைக் காதலிப்பாரே, “ஜாவா இஸ் ரக்கட். ஜாவா இஸ் சிஸ்டமேட்டிக்” என்று பாடம் நடத்துவாரே அவர்தான்.

எல்லாக் கவல்நிலையங்களிலும் ஆய்வாளாருக்கு வேண்டியவர் சிலர் இருப்பர், கட்டப் பஞ்சாயத்து கோஷ்டி, இதில் கே டி. அஸ்ஸாமி இளைஞன் ஒருவன் மீது புகார், சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டதாக. கே டி உடனே ஆஜராகி, தனது உறவினர்கள் இருவரைக் காயப்படுத்திவிட்டதாகவும், மருத்துவச் செலவுக்கு 2000 ரூபாய் வாங்கித்தரச்சொல்லியும் பைசல் செய்கிறார். அஸ்ஸாமி இளைஞன் பேசும் ஹிந்தி இவர்களுக்குப் புரியவில்லை, ஆய்வாளர் வினய் ஹிந்தியில் பேசியவாறே முரட்டுத்தனமாக உடல்காயமேற்படுத்தி அவனைச் சம்மதிக்கச் செய்வார். காவல் நிலையத்தில் அனைவருக்கும் தெரியும் அவன் அஸ்ஸாமி என்று , ஆனாலும் பெங்காலி என்பர். வினய் மட்டும்தான், “நீ அஸ்ஸாமியாடா, நக்ஸலா” என நக்கலாகக் கேட்பார்.

நாமும் அப்படித்தானே – முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதி.  அஸ்ஸாம் ஜார்க்கன்ட் காரனென்றால் நக்ஸலைட். காவல்நிலையத்தை அப்பட்டமாகக் காட்டியதின் மூலமாக சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிறார் அறிமுக இயக்குநர் – ஷாநவாஸ் கே பாவக்குட்டி. இவர் பொன்னானி நகரின் முனிசிபல் கவுன்சிலராக இருந்தபோது, 23 வயது B.Tech மாணவனுக்கும் 28 வயது தலித் பெண்ணிற்கும் இடையே வந்த காதலால் நடந்த உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் விளைந்தது இப்படம்.

காவலர் ஒருவர், கைப்பற்றி நிலையத்தில் நிறுத்தியிருந்த பைக்கின் எஞ்சினைத் திருடி விற்றுவிடுகிறார். விற்பனை செய்ய உதவியவனைப் பிடித்து அவன்தான் திருடன் எனக் கோர்ட்டில் ஒப்படைப்பதும், அதற்கு அவனைச் சம்மதிக்கக் கையாளும் நடவடிக்கைகளும், காவல்துறை எப்படித் தங்கள் சகஉழியரைக் காப்பாற்ற யாரைவேண்டுமானாலும் ஈவு இரக்கமின்றிப் பலிகொடுக்கும் என்பதன் வெளிப்பாடு அது.

இந்த நிகழ்வுகளுக்கிடையே, கே டி இர்ஃபானின் குடும்பத்தினருக்குச் சொல்லிவிட, அவர்கள் வந்து இர்ஃபானை அழைத்துச் சென்று விடுகிறார்கள். அனிதா என்ன ஆனாள், காதல் என்ன ஆயிற்று என்பதெல்லாம் உங்கள் திரையில்.

லூசியா – கன்னடத் திரைப்படம்

Lucia

கன்னடத் திரையுலகில் நடிகராக அறிமுகமான பவன் குமார், ”லைஃபு இஷ்டனே” என்றொரு நகைச்சுவை படமொன்றை இயக்குகிறார். அதன்பின், லூசியா திரைப்படத்திற்கான ஸ்கிரிப்டைத் தயார் செய்துகொண்டு, முன்னணி நடிகர்களை அணுகுகிறார். “இதெல்லாம் ஒரு படமா?” என எல்லோருமே உதறித்தள்ளிவிட, மனம்நொந்து தனது வலைப்பக்கத்தில் இதைப்பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறார். அவரது ரசிகர்கள், நண்பர்கள் என சுமார் 110 பேர் சேர்ந்து 55 லட்சம் ரூபாயை 27 நாட்களில்,  சேகரித்துக் குடுக்கின்றனர்; Crowd Funding என்கிற அடிப்படையில்.

உற்சாகமாகப் படத்தைத் தயாரிக்கிறார்.  அடுத்த சோதனையாக அதை வாங்கி வெளியிட எந்த விநியோகஸ்தரும் தயாராக வரவில்லை. மீண்டும் விரக்தி மேலிட, லண்டன் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்க, அங்கே அது ரசிகர்களால் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. உடனே விநியோகஸ்தர்கள் விழித்துக் கொண்டு ஓடி வர, திரையிட்ட முதல் வாரத்திலேயே 2 கோடி வசூலித்திருக்கிறது.

இதரப் படங்களைப் போல மேலோட்டமாக, அல்லது அசிரத்தையாகப் பார்த்தால் இது உங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. கதை  3 திரிகளாகச் சொல்லப்படுகிறது. மருத்துவமணையில் வெகுநாட்களாக கோமாவில் இருக்கும் நிக்கி, அவனை விடுதலை(கருணைக் கொலை) செய்துவிடத் துடிக்கும் அவனது காதலி, அவளின் நோக்கம் என்ன என்பதை விசாரிக்கும் காவல்துறை, என இதெல்லாம் நடப்பதின் இடையிடையே, நிக்கிக்கு விபத்து எப்படி ஏற்பட்டது என்பதின் முன் கதையைச் சொல்கிறார்கள்.

திரையரங்கொன்றின் பால்கணியில், தாமதமாக வரும் நபர்களை டார்ச் விளக்கின் ஒளியின் உதவியோடு, அழைத்துச் சென்று அவரவர்க்கான இருக்கையில் அமரச் செய்யும் தொழிலாளி  நிக்கி. குறைந்த அளவே படிப்பு, எந்தத் தனிப்பட்ட திறமையும் இல்லாத, பெண் தோழிகளை வசீகரிக்கவியலாதவன். இந்த ஏக்கம் அவன் ஆழ்மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.  இரவில் சரியாக உறக்கம் வருவதில்லை.

அப்படியான ஓரிரவில் வீதியில் நடை பழகுகிறான்,  காவல்துறையினர் அவனைக் கேலி செய்து ஓடவிடுகின்றனர். சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் இருவர் இவனைப் பார்த்து சிரிக்க, இவனது பிரச்சனையத் தெரிந்து கொண்டு “லூசியா” என்ற மாத்திரையை அறிமுகப் படுத்துகிறார்கள். அந்த மாத்திரையின் உதவியால் நல்ல தூக்கமும் கனவும் வருகிறது.

கனவு நமக்கெல்லாம் வருவதுதான். என்றாலும் நிக்கிக்கு, அந்த மாத்திரையின் காரணமாக வரும் கனவு வித்தியாசமாக இருக்கிறது. காலையில் எந்தக் கனவின் இடையில் எழுகிறானோ அதன் தொடர்ச்சியை அன்றைய இரவில் காண்கிறான்; மெகாத்தொடர் போல. கனவில் வருவதெல்லாம், இவன் இயல்வாழ்வில் அடையமுடியாமல் போனவைகளின் நீட்சி. நிக்கிக்கு முன்னணி கதாநாயகன் ஆகவேண்டும் என்பதுதான் ஆசை. அது கனவில் நிறைவேறுகிறது. இவனை கல்யாணம் செய்ய மறுக்கும் பெண், கணவில் இவனிடம் வாய்ப்புக்காக ஏங்கும் நடிகையாக.

இந்தப் படத்தில் நடித்த பெரும்பாலோர், ஒரே படத்தில் இரண்டு வேடங்களைச் செய்கின்றனர். ஒன்று நிஜத்தில், இன்னொன்று நிக்கியின் கனவில். நிக்கி – சினிமாத் தியேட்டர் ஊழியனாக நனவில், முன்னணி நடிகனாகக் கனவில். ஸ்வேதா – பிட்சாக் கடை ஊழியராக நனவில், சினிமா வாய்ப்புக்காக ஏங்கும் மாடலாக கனவில். சங்கரன்னா – தியேட்டர் உரிமையாளராக நனவில், நிக்கியின் மேனேஜராகக் கனவில்.

நனவிற்கும், கனவிற்கு வித்தியாசம் காட்ட, நனவைக் கலரிலும் கனவைக் கருப்பு வெள்ளையிலும் காட்டியிருக்கிறார்கள். மூன்று திரிகளையும், சற்றும் விலகாது கூடவே சென்றால், நல்லதொரு சினிமா அனுபவம்.

படத்திற்கு ஆகச்சிறந்த பங்களிப்பு எடிட்டர் குழுவிடமிருந்து. இத்தனை சவாலான கதையை, மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

நிக்கி போன்ற இளைஞர்களைத் தினவாழ்வில் நாம் எதிர்கொள்கிறோம். அவர்களிடமிருந்து நமக்குத் தேவையான வேலை/சேவையைப் பெற்றுக் கொண்டு அவர்களை உதாசீனப்படுத்தி விடுகிறோம். அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசாபாசங்களும் ஏக்கங்களும் இருக்கும் என்பதைக் கவனிக்க மறந்துவிடுகிறோம்.

பவன் குமாருக்குத் திரை நடிகர்கள் மீது, குறிப்பாக அவர்களது அலட்டல்மீது ஒரு வெறுப்பு இருக்கும் போலிருக்கிறது. நிக்கி கனவில் முன்னணி நடிகனாகிச் செய்யும் அடாவடி அலட்டல்கள் சிரிப்பை வரவழைத்தாலும் அதுதான் உண்மை.

இதைத் தமிழில் “எனக்குள் ஒருவன்” என்ற பெயரில் சித்தார்த் நடித்திருக்கிறார். படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இதற்கடுத்த படமாகத்தான் “U Turn” படத்தை எடுத்திருக்கிறார்.

ஓலைப்பீப்பி -மலையாளத் திரைப்படம்

olappeeppi-movie-review

ஓற்றை வரியில் எழுதிவிடமுடிகிற கதைதான். சிறுவயதில் ஊரைவிட்டு ஓடிப் போகும் உன்னி 30 வருடம் கழித்து வருகிறான். ஒரு நல்ல திரைக்கதை “What if” என்றொரு கேள்வியை முன்வைத்து, அதன் விடையை விரிதெழுதுவதாக இருக்க வேண்டும். இருக்கிறது.

மகுடேஸ்வரனின் கவிதையொன்று இப்படி முடியும்,
வாழ்ந்து கெட்டவர்களின்
வீட்டுக் கொல்லைப் புறத்தில்
இன்றும்
கேட்டுக்கொண்டிருக்கிறது
பெண்களின் விசும்பல் ஒலி.

இதைத்தான் திரைக்கதையாக்கியிருக்கிறார் கிரிஷ் கைமல். செழித்தோங்கி வாழ்ந்த ஆறாம் தரவாட்டின், அதிகப்படியான நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்கிறது அரசு, ஜமீந்தாரி ஒழிப்புச் சட்டத்தின் மூலம். மிஞ்சுவதெல்லாம், ஒரு வீடும் அதைச்சுற்றியுள்ள சிறு நிலமும்.

முத்தஸ்ஸியின் மகன் கோவிந்தன் இருந்த சிறு நிலத்தையும் ராஜப்பனிடம் அடகு வைத்துப் பணம் பெற்று வெளியூர் சென்றிடுகிறான். மகளை ஒரு நம்பூதிரிக்குத் திருமணம் செய்து கொடுக்க, மனிதத்தன்மையே இல்லாத முசுடு நம்பூதிரி, தன் மகன் உன்னியை வெறுக்கிறார், ஜாதக பலன்களைக் காரணம் காட்டி. வேறு வழியில்லாமல், உன்னியை முத்தஸ்ஸியிடம் விட்டு உன்னியின் அம்மாவும் நம்பூதிரியுடன் வேறூருக்குச் செல்ல, 80 வயது முத்தஸ்ஸியும், 8 வயது உன்னி மேனோனும், பந்தலுக்குக் கொடி ஆதரவு என்றாற்போல.

உன்னி மேல் முத்தஸ்ஸிக்கு அளவுகடந்த பிரியம். அவனுக்குச் சமைத்துக் கொடுத்து, குளிக்கச் செல்லும்போது கூடவே சென்று, பள்ளியிலிருந்து வரத் தாமதமானல் வழி நோக்கி நின்று என்று எல்லா அசைவிலும் உன்னியே. “நீ மிடுக்கன், நான்னாயி வரு” என்று சொல்வதை இத்தனை வாஞ்சையுடன் சொல்ல முடியுமா என வியக்க வைக்கிறார் புனசேரி காஞ்சனா. 1970களில் முன்னணி நடிகையாக இருந்தவர், 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வந்திருக்கிறார்.

கூன் விழுந்த உடம்பு, தடி ஊன்றி நடை, கண்சுறுக்கிப் பார்த்தல், விரல்கள நெற்றியில் வைத்து தூரத்தில் வரும் நபரைக் கூர்ந்து நோக்குதல், கால் நீட்டி அமர்தல், பேரனைக் காணாது தவித்தல், தவங்கித் தவங்கி நடத்தல் என அருமையான பாத்திரவார்ப்பு, உன்னி குளத்தில் குளிக்கையில், பாட்டியை எண்ணச் சொல்லிவிட்டு நீருக்குள் முங்குகிறான், எண்ண ஆரம்பிக்கும்போது இருக்கும் பாவத்திற்கும், எண்ணிக்கை அதிகமாக அதிகமாக முகத்தில் கவிழும் பயமும், இறுதியில் “உன்னி, உன்னீ, உன்னீஈஈஈஈ” என அலறும்போதும் காட்டும் பாவமும், அந்தக் காட்சியை எடுத்த இயக்குனரையும், காஞ்சனாவையும் என்ன வார்த்தைச் சொல்லிப் பாராட்டினாலும் தகும்.

மனிதர்களை எடைபோடுவது, நாம் பார்க்கக் கிடைக்கிற நடவடிக்கைகளைக் கொண்டே அமைகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. என்னேரமும் குடி என இருக்கும் கேசவனை உன்னியின் தங்கை சகித்துக் கொள்வது, அவளை மீட்டெடுத்தவன் அவன் என்பதால்; அதை உன்னி அறிய நேரும்போது கேசவன் மீதிருக்கும் வெறுப்பு அன்பாக மாறுவதை அத்தனை இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

தங்கள் வீட்டில் கூலிக்காரனாக இருந்த ராஜப்பன், இன்று அரசியல் படிநிலைகளில் மேலேறி தங்கள் இடதையே வளைத்துக் கொள்வதும், அவனிடமே யாசகம் கேட்க வேண்டிய நிலையும், உன்னி பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற போட்டிகளில் முதலாவதாக வந்ததைக் கௌரவிக்க, தனிப்பட்ட சன்மானமாய் ராஜப்பன் வழங்கும் 21 ரூபாயைக் கொண்டு ரேசன் வாங்கும் நிலையும், எப்படியாயினும் உன்னியை நன்றாய்ப் படிக்க வைக்கும் முத்தஸ்ஸியின் தீர்மானமும் என நல்ல காட்சிப்படுத்துதல்கள்.

சற்று எளிதான வேடங்களிலேயே நடித்துவந்திருக்கும் பிஜு மேனனுக்கு (வளர்ந்த உன்னி) இது ஒரு நல்ல வாய்ப்பு, நியாயம் செய்திருக்கிறார். சின்ன வயது உன்னியாக நடித்திருக்கும் தேவப் ப்ரயகன், ஆச்சர்யமூட்டுகிறார். நடிப்பிற்கு வயதென்பதே கிடையாது என்பதை, காஞ்சனா, பிஜு, தேவப்ரயாகன் ஆகிய மூவர் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர். இது அவரது முதல் முயற்சி என்பதை நம்ப முடியவில்லை என்னால், இன்னும்.

ஒரு பத்திருபது நாட்கள் சொந்த ஊருக்குச் சென்று, நீங்கள் விளையாடிக் களித்த இடம், நண்பர்கள், உறவினர், அண்டை அயலார் என எல்லோரையும் சந்தித்து வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள், எனில் இது ஒரு விர்ச்சுவல் பயணம்.

ஓலைப்பீப்பி, ஓட்டாள், மன்றோ ஐலண்ட் என, வயதானவருக்கும் பேரனுக்கும் இடயேயான உறவுப் படமாகப் பிடிக்கிறது, சமீபமாக. எனக்கும் வயதாகிறதோ?