Month: July 2016

ஒரு கோடி உய்யுமால்

Elephant_Feeding

 

எங்கள் நிறுவனம் ஆண்டுக்கு 30 கோடி அளவில் டேர்ன் ஓவர் செய்யும் அளவிற்கு சிறியது. ஆனாலும் இந்தியாவில் இன்றியங்கும் அனல் மின் நிலையங்கள் அனைத்திலும் எங்கள் இயந்திரங்களின் தடையற்ற செயல்பாடு அவசியம்.

சமீபத்தில் பிரித்தமைக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் அமைந்த ஒரு அனல் மின் நிலையத்திற்கு சுமார் 2 கோடி அளவிற்கு இயந்திரங்களை வழங்கியிருக்கிறோம். நேரடியாக அல்ல, அதற்கென இருக்கும் ஒப்பந்தகாரர்கள் மூலமாக.

அந்த பரிவர்தகத்திற்கான, எங்களுக்கு வரவேண்டிய 2 கோடிக்குத் தேவையான ஆதாரத் தரவுகளுடன் கல்கத்தா வந்திருக்கிறேன். சம்பந்தப் பட்ட அலுவலரை அனுகித் தேவையான விவரங்கள் முழுவதையும் அளிதாகிவிட்டது. இருந்தாலும், ”நாளை வாருங்கள்” என சிலநாட்களாக அலைய விட்டார்.

சற்று கோபமாகப் பேசவும், வங்காள மொழியில் ஏதோ சொன்னார். அருகிலிருந்தவரிடம், மொழிபெயர்க்கச் சொன்னேன், “ரெண்டாயிரம் கோடி புழங்கும் இடத்தில் இரண்டு கோடிக்கு இந்தப் பாடுபடுகிறான்”

இருவரையும் சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துவந்து சொன்னேன், “யானை சாப்பிடும்போது பாத்துருக்கீங்களா?

“ம்ம்”

“பாகன் வீசும் உருண்டைகளில் ஒன்றிரண்டு தவறும், என்றாலும் யானையும் பாகனும் அது குறித்துக் கவலைப்படுவதில்லை”

“ஆமா அதுக்கென்ன இப்போ”

“கீழ விழுந்த உருண்டை இருக்கே அது ஒரு கோடி எறும்புகளுக்கு உணவாகும்”

வாங்கும் கவளத்து ஒருசிறிது வாய்தப்பின்
தூங்கும் களிறோ துயருறா – ஆங்கதுகொண்(டு)
ஊரும் எறும்பிங்(கு)  ஒருகோடி உய்யுமால்
ஆருங் கிளையோ(டு) அயின்று.

இரண்டு நாட்களில் தொகையை வங்கிக்கு அனுப்பிவிடுவதாகச் சொல்லி இருக்கிறார்.