Month: April 2010

சுறா – காலம் வரைந்த காவியம்

எம்மேல கை வைக்கிறதுக்கு முன்னால ஒரு தடவைக்கு ரெண்டுதடவை யோசிச்சு வை. வச்சிட்டா அப்புறம் யோசிக்க நீ இருக்க மாட்டே.

இந்த வசனம் ஒன்றே போதும் படம் வெற்றி என முரசறைந்து சொல்ல.

டயலாக் டெலிவெரியின் போது விஜய் காட்டும் முகபாவனை ஹாலிவுட் படங்களில் ரோஜர் மூர், சீன் கானரி போன்றோர் கூடக் காட்டாத ஒன்று.

ஹெலிஹாப்டரிலிருந்து விஜய் இறங்கும் ஸ்டைல் அசத்துகிறது இன்னும் இருபது வருடங்களுக்கு தளபதியை அடிச்சிக்க ஆளே இல்லை.

கோட் சூட்டில் கம்பீரமாக இருக்கிறார். எந்த டிரஸ் என்றாலும் அபாரமாகப் பொருந்துகிறது. தாடி பிறருக்கு சோகத்தைக் காட்டும் ஆனால் தளபதிக்கு அதுவே கூடுதல் கவர்ச்சி.

வழக்கமான விஜய் படம் என்றாலும் 50ஆவது படம் என்ற வித்தியாசத்தைச் சொல்லி அசத்தி இருக்கிறார் விஜய்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குப் பிடித்திருந்தது.

டிஸ்கி : நான் ட்ரைலரச் சொன்னேன்.

Advertisements

முன்னால பின்னால

நாயக்கர் ஒருத்தர் தன்னோட குதிரையை ராவுத்தரிடம் கொடுத்து பார்க்கச் சொல்லிவிட்டு வெளியூர் போகிறார். திரும்ப வந்து கேட்டால் ராவுத்தர் அது தன்னோட குதிரை என்கிறார். நாயக்கருக்கு அதிர்ச்சி. நீதி மன்றத்தில் முறையிடுகிறார். நீதிபதி தெனாலி ராமனை வரவழைத்து உன்மை என்னவெனக் கேட்கிறார்.

நாய்க்கர் குதிரைன்னு உண்மையச் சொன்னால் ராவுத்தர் அடிப்பார். ராவுத்தருக்காகப் பொய் சொன்னால் நாயக்கர் அடிப்பார். என்ன செய்வதென யோசித்த ராமன், குதிரையைச் சுற்றி வந்து பின் சொன்னான், “ முன்னால பார்த்தா இது நாயக்கர் குதிரை பின்னால பார்த்தா ராவுத்தர் குதிரை”

அது மாதிரித்தான் இருக்கிறது பந்த் பற்றிய ஆ.கட்சி எ.கட்சி அறிவிப்புக்கள்.

தோல்வி; அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின என்கிறது அரசு தரப்பு. வெற்றி; கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்கிறது எ.கட்சி.

மொத்தத்தில் மக்களுக்குத்தான் சிரமம்.

பந்த் செய்வது தேசவிரோதம் என முன்பு ஒரு தீர்ப்பு வந்ததாக ஞாபகம்.

காட்சிப்பிழை

மெதுவாகத் தொடங்கும் வீடியோவில்
தன் ஆடைகளைக் களையத் துவங்குகிறாள்
அப்பெண்மணி
”வேற யாரும் பாக்க மாட்டாங்களே?
நீ பாத்ததும் டெலீட் பண்ணிடணும்.
வெளிய தெரிஞ்சா அவ்வளவுதான் நான் செத்திடுவேன்”
என்ற பிதற்றலுடன்

“கண்டிப்பாத் வெளியே தெரியாது,
என் மீது நம்பிக்கையில்லையா ?”
என்ற உத்திரவாதத்திற்குபின்
மீண்டும் உற்சாகமாகக் களைகிறாள்.

அவள் அங்கங்களைப் பற்றிய
சந்தேகம் ஏதுமின்றிக்
காட்சிப் படுத்துகிறது கேமரா
இறுதியில்
ஒரு புணரும் காட்சியுடன்
முடிவடைகிறது.

காட்சிகள் கொடுத்த
கிளர்ச்சிகளைவிட
பொய்த்துப் போன நம்பிக்கைக்கள்
அயர்ச்சியைத் தருகின்றன.

இதை வாசிக்கும்
இத்தருணத்தில்
எங்கேனும் ஒருத்தி
தன் ஆடைகளைக்
களைந்து கொண்டிருப்பாள்
கேமிரா முன்பாக

வேறு வார்த்தைகளில்
அதே கேள்விகளுடனும்
அதே உத்திரவாதத்துடனும்.

நாளையோ அல்லது
நாளை மறுநாளோ
உங்கள் பார்வைக்கு
அது வரக்கூடும்
என்பதறியாமல்

முத்துராமனுக்கு உதவி தேவை

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.

கலைடாஸ்கோப் – 5/4/10

அங்காடித் தெருவைப் பற்றி பதிவர்கள் பாராட்டி எழுதியது மகிழ்வாக இருந்தது. சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு படைப்பு இதுவரை வந்ததில்லை.

ஆனாலும் சுரேஷ் கண்ணன் பதிவில் வந்த பின்னூட்டங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளில் இந்த இரண்டு கேள்விகள் சமுதாயத்தின் மீதான அக்கறையை முன்வைக்கின்றன. இக்கேள்விகளுக்கு இயக்குனர் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்; அடுத்த படத்திலாவது.

1. டிவிஎஸ் க்ரூப்பும், அம்பானிங்களும் சுரண்டுறதை தெகிரியமா படமெடுக்குற தில்லு இந்த இயக்குனருக்கு இல்லையே?

2. இந்த படம் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறதா?. உண்மையில் ரசிகர்களை பாதித்து இருந்தால், அந்த அங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர் கூட்டம் பத்து சதவீதம் குறைந்து இருக்க வேண்டும், அல்லது அங்கு வேலை பார்க்கும் இரண்டு சதவீதம் ஊழியர்களாவது ராஜினாமா செய்து வேற வேலை, வியாபரத்திற்கு சென்று இருக்க வேண்டும்

இவ்விரண்டு கேள்விகளும் விரிவாகப் பதிவாக இங்கே

**********************************************************

இந்தமுறை கோவை இந்து மக்கள் கட்சி ஒரு வித்தியாசமான பிரச்சினையை முன் வைத்துப் போராடுகிறது.

சானியாவுக்கு இந்திய அரசு வழங்கிய பட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க? இ ம க சம்பத்தை வளர்த்து விட்ட பத்திரிக்கைக்காரரகளைச் சொல்ல வேண்டும்.

**********************************************************

கலைஞர் தொலைக் காட்சியில் வியாழன் இரவு 10.30 க்கு ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது. இயக்குனர் கனவுகளோடிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. அவர்கள் இயக்கைய குறும்படமொன்றைத் திரையிட்டு விளக்க வாய்ப்பளிக்கிறார்கள். நடுவர்களாக மதனும், பிரதாப் போத்தனும்.

பிரபல இயக்குனர் ஒருவர் சிறப்பு விருந்தினராக வருகிறார். அலசல் பயனுள்ளதாகவும் குறும்படத்தை எடுத்தவர் தன்னைச் செதுக்கிக் கொள்ளவும் உதவுகிறது.

சிலருக்கு வாய்ப்பும் கிட்டுகிறது. சென்றவாரக் குறும்படத்தில் நடித்தவருக்கு வசந்தபாலனின் அடுத்தபடத்தில் நடிக்க வாய்ப்புக் கிட்டியது.

**********************************************************

வாழ்க்கையை அதன் இயல்பான குரூரத்துடனும், கொப்பளிக்கும் கோபத்துடனும், வாட்டி எடுக்கும் வெறுப்புடனும் இன்னும் இயாலமை, பொறாமை என அதன் கறைபடிந்த பக்கங்களை நாவலாக்கி எழுதுவதில், பெண் எழுத்தாளர்களில் சு.தமிழ்ச்செல்வி, எனக்குப் பிடித்தவர்.

அவர் எழுதிய கற்றாழை, அளம், கீதாரி மூன்று நாவல்களையும் பரிந்துரைக்கிறேன். மூன்றுமே வேறு வேறு களங்களைக் கொண்டது என்றாலும் வாழ்வை அதன் போக்கிலேயே எழுதி இருப்பது சிறப்பாக இருக்கிறது. எந்த இடத்திலும் எழுத்தாளர் முன் வந்து தன் மொழி ஆளுமையையோ அல்லது தன்னுடைய தத்துவ விசாரத்தையோ வெளிப்படுத்தவில்லை.

சில சமயம் இயல்பாக இருப்பதே சிறப்பான அழகல்லவா?

புத்தகங்கள் மருதா பதிப்பக வெளியீடு.
முகவரி :
மருதா பதிப்பகம்,
10 ரயில் நிலையச் சாலை,
இடமலைப் புதூர்,
திருச்சி – 620012.
தொ பே : 0431-2473184.
மின்னஞ்சல் : marutha1999.rediffmail.com

நினைவூட்டியதற்கு நன்றி அப்துல்லா.

**********************************************************

இசை என்றழைக்கப்படும் சத்யமூர்த்தியின் கவிதை இந்தமுறை. ஞாயிற்றுக் கிழமைகளின் மதியப் பொழுதுகள் ஏகாந்தமானவை. விவரிக்க இயலாத ஆச்சர்யங்களையும் ஆசுவாசங்களையும் அளிப்பவை. அந்த அனுபவத்திலொரு கவிதை.

தென்றல் என்றழைக்கப்படும் ஞாயிற்றுகிழமையின் காற்று

பிஸ்கட்டைப் பிட்டு
தேநீரில் நனைத்து சுவைப்பது போல
இந்த ஞாயிற்றுகிழமையைப் பிட்டு
ஒரு கோப்பை மதுவில் நனைத்து சுவைக்கிறேன்.
மூளைக்குள் கத்திக்கொண்டிருந்த
அலுவலகத்தின் நா
அறுக்கப்பட்டு விட்டது.
மைதானங்களில் மகிழ்ச்சி
ஒரு ரப்பர் பந்தென
துள்ளிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
இக் கொதி நிலம் திடீரெனக் குளிர்ந்து
பெய்கிறது ஒரு ரம்யமான மழை.
ஞாயிற்றுகிழமையின் காற்றுக்குதானா தென்றல் என்று பெயர்
என்றொரு வரி தோன்றியது.
இதையடுத்து உருகிவழிந்த
கண்ணீரின் துளியொன்று
கோப்பைக்குள் சிந்த
எடுத்து அருந்தினேன்.
தாளாத தித்திப்பு அது!
தாளாத தித்திப்பு அது!

**********************************************************

குறிப்பு : இந்த வாரச் சிரிப்பு பதிவிலேயே இருக்கிறது.