Month: June 2016

தோற்ப நும் குடியே

War

உயிலின்படியே பாகம் பிரித்தாயிற்று. என்றாலும் பொதுவில் நிற்கும் மாமரத்தின் பலனை யார் அனுபவிப்பது என்பதில் சிக்கல்.

அப்பா, “எலேய் என்ன ரெண்டு பேரும் ஏம்லே எசலுதிய? ஊர்ல என்னல சொல்லுவானுவோவோ? பாண்டியண்ணாச்சி பசங்க அடிச்சிக்கிட்டு
பொரளுதானுவோன்னுதானே? உங்காமத் திங்காம உங்களுக்குன்னு சம்பாதிச்சு வச்சுட்டுப்போன உங்கப்பனுக்குக் கெட்ட பேர ஏம்லே உண்டாக்குதிய?” என்றும் சொல்லிப் பார்த்தார்.

கடைசியில் மரத்தை குத்தகைக்கு விட்டு பணத்தைச் சரிபாதியாக வைத்துக் கொள்வது என்று முடிவானது. பகை, நெருப்பு, கடன்  மூன்றையும் மீதம் வைக்காமல் தீர்க்க வேண்டும் என்பது உண்மையாகி விட்டது.

தம்பியின் தொந்திரவு தாங்க முடியாமல், நிலத்தை விற்றுவிட்டு மாமனார் ஊரில் நிலம் வாங்கி பாடுபடுவதாகத் திட்டம், அண்ணனுக்கு. தம்பி நிலை ஆப்பசைத்த குரங்கு. சொந்த அண்ணனையே சகிக்க முடியாதவனா மாற்றானை சகிப்பான்? ஊர் முழுவதும் கடன் வாங்கி, தானே வாங்கி விட்டான். என்றாலும், விவசாயம் செய்யக் கை முதல் இல்லாமலும் வட்டி கட்ட முடியாமலும் நொடிந்து விட்டான். அண்ணனும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.  புது இடவாகு புடிபடவில்லை. வேலையாட்களும் சரியாக அமையவில்லை.

இது தொன்றுதொட்டதுதான். நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் போரிட நேர்கையில், கோவூர் கிழார் பாடியதும் இதைத்தான்,

போர்க்களத்தில் நிற்பது, வேப்பமாலை அணிந்த பாண்டியனும் அல்லன், பனையிலை அணிந்த சேரனும் அல்லன். ஒரு பக்கம் ஆத்தி மாலை அணிந்த நீ. உன்னை எதிர்த்து ஆத்தி மாலை அணிந்த உன் சகோதரன்.

உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் சோழன் குடி தோற்றதாக ஊர் பேசுமே? மாறாக இருவருமே வெற்றி கொள்ளும் வகையில் போரின் நியதியும் இல்லையே. நீங்கள் செய்வது உங்கள் குலத்திற்கு அழகில்லை.

உங்கள் அழிவை எதிர்பார்த்துத் தங்கள் தேர்களை அலங்கரித்துக் காத்திருக்கு இதர மன்னர்களுக்கு உங்கள் செயல் உடல் பூரிப்பை அளிக்கிறது.

இரும்பனை  வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பநும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
குடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே.

நீயும் நானும் எவ்வழி அறிதும்

vizag

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு வெளியே வந்து விமான நிலையத்துக்குச் செல்ல வாகனம் தேடினேன். ஓலாவில் முன்பே சோதனை செய்த்தில் சுமார் 220 என்றது. ஆளில்லாத இடங்களில் ஓலா அல்லது உபரைப் பயன்படுத்திக் கொள்வேன். ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் காத்திருக்கும் வாகன ஒட்டிகளுக்கு நாம் கூடுதலாகச் செலுத்தும் தொகை உதவிகரமாக இருக்கும் என்பதொரு காரணம்.

காரில் ஏறியதும், “போஜனம் ஆயிந்தா?” என்றேன். “இனேரத்துலயா? மணி 8 தானே ஆச்சு, மெதுவாப் பத்து மணிக்குத்தான் சாப்பிடுவேன்” என்றார் அப்பா ராவ். “பரவாயில்லை ஒரு நாளைக்கு நேரத்துல சாப்பிடுங்க. நல்ல இட்லியும், பெசரட்டும் வேணும் எனக்கு” என்றேன். மேலும், “அதுக்காக பெரிய ஓட்டல் எல்லாம் வேண்டாம், வழக்கமா நீங்க எங்க சாப்பிடுவீங்களோ அங்கேயே போதும், சுவையும் தரமும் முக்கியம்” என்றேன்.

இரண்டே டேபிள் எட்டுப் நபர்கள் ஒரு சமயத்தில் அமரக்கூடிய சின்ன சிற்றுண்டி நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். சாப்பிடச் சொன்னால் கூச்சப்பட்டார். கையைப் பிடித்து இழுத்து சாப்பிடச்சொன்னேன். ஆளுக்கு இரண்டு இட்லியும் ஒரு பெசரட்டும் சப்பிட்டோம்.

காசு குடுக்கும்போது கவனித்தால் குருவாயூரப்பனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு, சந்தனம் பூசிய நெற்றியுடன் சேட்டன் கல்லாவில் இருந்தார். “நாட்ல எவிடயானு?” “வயநாடு, நிங்கள்” “தொட்டடுத்து, கோயம்பத்தூர்” என்றேன். சிரித்தார்.

15 வருடங்களுக்கு மேலாக விசாக்க்கில் இருக்கிறாராம். “பேர்?” “அச்சுதான்ந்தன், பிள்ளாரு அச்சேட்டன்னு விளிக்கும்” என்றார். விளிக்கட்டும் என்றவாரே கிளம்பினோம்.

விமான நிலையத்தில் இறங்கியபின், பெட்டிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு அப்பாராவ் என்னைக் கட்டிக் கொண்டார். வாத்சல்யம்.

அப்பாராவ்களாலும், அச்சேட்டன்களாலும் நிறைந்ததிவ்வுலகு.

வியர்வை வாசம்

 

Maithonமைத்தான், தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஆற்றினருகே அமைந்த கிராமம். டாடா பவரும், தாமோதர் வாலி கார்ப்பரேசனும் கூட்டாக ஒரு அனல் மின் நிலையம் (1050 MW) அமைக்கத் திட்டமிடுகிறார்கள்.

நிலம் கையகப்படுத்துதல் முதல் வேலை. கிராமத்தினர் இதை அறிந்து கொண்டு எதிர்க்கின்றனர். டாடா இடமிழப்போருக்கு வேலை அளிப்பதாக உத்திரவாதமளிக்கிறது; சுமார் 300 பேர். 1500 பேர் கிட்டத்தட்டத் தேவைப்படும்போதும் 300பேருக்கு வேலை அளிப்பது என்பது நல்லதுதானே?

பேச்சு வார்த்தை முடிந்து பத்திரம் சரிபார்ப்பின் போது டாடா 800 பேருக்கு வேலை அளிக்க வேண்டி வருகிறது. 300 எப்படி 800 ஆனது?

இங்குதான் கிராமத்தினரின் முன்யோசனை நம்மை வியக்க வைக்கிறது. பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, தங்களுடைய நிலங்களை குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் பகிர்ந்து பங்களித்து விடுகின்றனர். உதாரணமாக குடும்பத் தலைவர் பேரில் இருக்கும் நிலம், மகன்கள் மூவர் பெயரில் பதிவு செய்யப் பட்டுவிட்டது. போலவே மாமன், மச்சான், பங்காளி என சுண்டல் விநியோகம் போல.

டாடாவுக்கு வேறு வழி இல்லை. 800 பேரையும் எடுத்தாகிவிட்டது. எடுத்து காண்டிராகடர்கள் கையில் கொடுத்து உன் பாடு அவன்பாடு எனக் கை கழுவி விட்டார்கள்.

காண்டிராக்டர்கள் பாடுத்தான் திண்டாட்டம். கிராமத்தினர் எவரும் வேலை செய்யும் மனநிலையில் இல்லை. ஆனால் சமபளம் மட்டும் வேண்டும், அது தங்கள் உரிமை என்பது அவர்கள் எண்ணம்.

காலையில் 9 மணிக்கு உள்ளே வந்ததும் மெயின் கேட் அடைக்கப்படும் பின்பு மதியம் ஒரு மணிக்குத்தான் உணவுக்காகத் திறக்கப்படும். வெளியே செல்லும் நபர் மீண்டும் உள்ளே வர மாட்டார். நன்றாகப் படுத்து உறங்கிவிடுவார். அல்லது ஆடு மாடு மேய்த்தல்.

சரி 9 மணியிலிருந்து ஒரு மணி வரையாவது வேலை செய்வார்களா என்றால் அதுவும் இல்லை. கேண்டீன் அல்லது கழிப்பிடங்களில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு மதியம் கம்பி நீட்டி விடுகிறார்கள்.

காண்டிராக்டர்களில் ஒருவர் நேற்று மீட்டிங்கில் அளித்த புள்ளி விவரம். 104 பேரில் மூவர் மட்டுமே 8 மணி நேரம். 30-40 பேர் 4 மணி நேரம். மற்றவர்கள் வேலையே செய்வது கிடையாது.

லால் சலாம் சகாக்களே.

நெஞ்சத்து அகநக

Guru1983 ஆகஸ்டில்தான் குருநாதனை முதலில் பார்த்தது. சிலரைப் பார்த்ததும் காரணமின்றிப் பிடித்துவிடும் அவனையும் அப்படித்தான், பட்டையான ப்ரேம் போட்ட கண்ணாடி, நெஞ்சு வரைக்கும் பேண்டை ஏத்தி இன் பண்ணி, வயிறே இல்லாமல் மடித்தால் ஒடிந்து விடுவான் போல.
அப்பொழுது நினைக்கவில்லை அந்த நட்பு 30 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் என. டிப்ளொமா படித்து முடித்ததும் இருவரும் ஒரே அறையில் வசிக்க நேர்ந்தது நட்பை இன்னும் இறுக்கமாக ஆக்கியது. எனக்கு 150 ரூபாயும் அவனுக்கு 400 ரூபாயும் சம்பளம் என்ற போதிலும் எந்த எதிர்பார்ப்புகளுமற்று கழிந்த நாட்கள் அவை.
குருவைச் சந்திக்கும்வரை எந்த ஆங்கில நாவலையும் வாசித்தவனில்லை நான். அதிகபட்சமாக ரீடர்ஸ் டைஜஸ்டில், லைஃப் இஸ் லைக் தட், காலேஜ் காம்பஸ், ஆல் இன் அ டேய்ஸ் வொர்க் என்ற மூன்று நகைச்சுவைப் பத்திகளை மட்டுமே படிக்க வாய்க்கும். அதிலும் 10 படித்தால் ஒன்று புரியும். அதுதான் எனது ஆங்கிலப் புலமை. குரு எனக்கு நேர் எதிர். ஆங்கில மீடியன். தும்முவதுகூட ஹெச் என்றுதான்.
டவுன்ஹாலில் உள்ள சூஸ் அண்ட் ரீட் வாடகை நூலகத்திற்கு அழைத்துச் சென்று ஜெஃப்ரி ஆர்ச்சரின், நாட் எ பென்னி மோர் நாட் அ பென்னி லெஸ் என்ற புத்தகத்தை வாசிக்கத் தந்தான். அப்பொழுது முதல் பேய் பிடித்தாற் போல வாசிக்க ஆரம்பித்தாயிற்று. அலிஸ்டர் மெக்லீன், ராபர்ட் லுட்லம், ஃப்ரெடெரிக் ஃபோர்ஸித் என்று ஆரம்பித்து இன்றும் தொடர்கிறது.
இன்றுகூட, பீகாரில் பாட்னாவிற்கருகில் உள்ள அனல்மின் நிலையத்தில் வேலை முடித்து அறைக்கு வந்ததும், ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகமான கமெத் தெ ஹவர்தான் துணை.
நல்ல நண்பர்கள் அமைவது வரம். நட்பு, நீண்ட நாள் நிலைத்திருப்பது சுகம்.
எனில், நான் சுகவாசி.