Month: March 2017

நகலிசைக் கலைஞன்

1999-2001 வரை உடுமலையில் இருந்து கோவைக்கு வேலைக்கு வந்து திரும்புவேன். 6.45 ராமேஸ்வரம்-பாலக்காடு வண்டியைப் பிடித்துப் பொள்ளாச்சியில் இறங்கி, 7.45 பொள்ளாச்சி கோவை ஷட்டிலில். திரும்ப மாலை 6.00 மணி ஷட்டிலைப் பிடித்து இரவு 7.45 பாலக்காடு ராமேஸ்வரத்தில்.

மொத்தம் 5 மணி நேரப் பயணம். எவ்வளவு நேரம்தான் புத்தகமே வாசிப்பது. ஷட்டிலில் சில இளைஞர்கள்,  தாளம்தட்டிப் பாடிக்கொண்டு வருவார்கள். மெல்ல அவர்களுடன் ஐக்கியமானேன். அதன் பிறகு பயண தூரமே தெரியவில்லை.

ட்ரிப்பிள்ஸ், பேங்கோஸ், மிருந்தங்கம் எனச் சிலவற்றைச் வாங்கிக் கொண்டு பெரிய ஜமாவாகச் சேர்ந்துவிட்டோம். இது பிடிக்காத பெருசுகள், போத்தனூர் ரயில்வே போலீசிடம் எங்களைப் பற்றிப் புகாரளித்ததெல்லாம் உபகதை.

அடுத்த கட்டமாக, டிரம்ஸ், கீபோர்டு என மேலும் சிலவற்றைச் சேர்த்து ஒரு இசைக்குழுவாகவே இயங்கத் தொடங்கினோம். கோவில் திருவிழா, நண்பர்கள்-உறவினர் வீட்டுத் திருமணம் எங்கு நடந்தாலும் எங்களது இலவச இசைக் கச்சேரி நடக்கும்.

எந்தவிதக் பொருளாதாரப் பலனையும் எதிர்பாராமல் ஒரு குழுவை நடத்துவதிலேயே ஆயிரம் சிரமங்கள் என்றால், முழுக்கவே வாழ்வாதார நோக்கில் நடத்தப்படும் இசைக்குழுக்களில் நடக்கும் அல்லாடல்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார் ஜான்.

இந்த இசைக்குழுக் கலைஞர்களுக்கு நகலிசைக் கலைஞர்கள் என்ற பெயர் எத்தனைப் பொருத்தம்!  என்னதான் அசலை விட ஒரு இழை தூக்கலாகச் செய்தாலும்கூட “அட டிஎம்எஸ் மாதிரியே பாடினானப்பா” எனத்தான் சொல்வார்கள். “அந்த ப்ளூட் பீஸ் வாச்சிச்சான் பாரு அப்படியே ராஜா பாட்டுல இருக்க மாதிரி” எனப் போற்றுதல் விழலுக்கிறைத்தவாறு.

பாடகர்களையும், இசைக்கலைஞர்களையும்   ஒருங்கிணைத்து குறித்த நேரத்திற்கு அரங்கிற்குச் சென்று  நிகழ்ச்சியை நடத்தி முடித்ததும், ஏற்பாடு செய்தவரிடமிருந்து மீதிப் பணத்தை வாங்குவது பிரம்மப்பிரயத்தனம். அவர் எங்காவது மது அருந்தி மட்டையாகி இருப்பார்.

இந்த அனுபவக்கடுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ராமேட்டன், டேனியல், பைரவர் போன்ற அநேகக் கலைஞர்களைப் பற்றி ஏதும் எழுதாமல் தவிர்க்கிறேன். ஏனெனில் வாசிக்கும் போது அதன் நேரடித் தாக்கம் உங்களுக்கு கிட்டாமல் போய்விடக்கூடும்.

உதாரணமாக, ”ஓ மை லார்ட் கேன்சல் மை ப்ரேயர்” என்பதன் பின்னுள்ளதை விவரித்து எழுதினால், அதன் சுவாரஸ்யத்தை இழந்து விடுவீர்கள்.

மற்றபடி டிலைட் ஆர்க்கெஸ்ட்ரா, சேரன் இன்னிசைக் குழு, மல்லிசேரி போன்ற குழுக்களைப் பற்றி எழுதிய ஜான் ஏன் ”திண்டுக்கல் அங்கிங்கு” பற்றி எதும் குறிப்பிடவில்லை எனத் தெரியவில்லை.

வெறுமனே கலைஞர்களைப் பற்றி மட்டுமல்லமல் சில பாடல்களை ஜான் விதந்தோதியிருப்பது அப்பாடல்களைப் பற்றிப் புதுத்திறப்பும்கூட.

இசையைக் கேட்பதோடு மட்டும் நில்லாது, அவ்விசை தந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யும் ஸ்ரீனீவசன் சின்னச்சாமி, நாடோடி இலக்கியன், விஸ்வா கோவை போன்றவர்களுக்கு மிகவும் பிடிக்கக்கூடும்.

நன்றி ஜான், சிலவாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வைத்ததற்கும், வெங்கி(காதலென்னும் தேர்வெழுதி), காளிமுத்து(ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்), கார்த்தி (குல்மொஹர் மலரே குல்மொஹர் மலரே), வக்கீல் பாஸ்கர் (மூக்குத்தி முத்தழகு), தாமஸ்(கீ போர்டு) போன்றோரது ஞாபகங்களை மீட்டுத் தந்ததற்கும்.

பாஸ்கர் சக்தியின் முயல் தோப்பு

தினவாழ்வில் நாம் எதிர்கொள்ள நேரிடும் சாதரண மனிதர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டவைதான் பாஸ்கர் சக்தியின் புனைவுகள். ”முயல் தோப்பு” அச்சட்டத்தில் வெகுவாகப் பொருந்துகிறது.

இரட்டையர் என அறியப்பட்ட க.சீ.சிவக்குமாரும் இவரும் சமகாலத்தில் எழுத வந்தவர்கள். பொருள்தேடும் சூட்சுமம் க.சீ.சிக்கு பிடிபடாமல் போனது. குறைந்தபட்ச சமரசம் என்ற சூத்திரத்தைக் கைக்கொண்டு பாஸ்கர் சக்தி, தன்னைத் தக்க வைத்துக் கொண்டார். எழுத்தாளன் சிலகாலமேனும் பொருளாதாரச் சிக்கலின்றி உயிர்வாழ்வது  எழுத்துக்கு நல்லது. மேலும் சில படைப்புகள் வரக்கூடும்.

தொகுப்பிலுள்ள கதைகள் பெரும்பாலும் தேனி சுற்று வட்டாரத்தை கதைக்களமாகக் கொண்டவை. மனிதர்களின் உறவுச்சிக்கல்கள், அதன் தாக்கமான விரிசல்கள், வன்மம், குரோதம் போன்றவை வெகு எளிதாக எந்தவித ஓங்காரமுமின்றி வெளிப்படுகின்றன.

தலைப்புக் கதையான முயல்தோப்பு, தானே உண்டாக்கிய தோப்பை தன் வம்சத்தினர் விற்றுக் காசாக்க முயல்வதை எதிர்ப்பதுதான். உண்டாக்குதல் என்பது வலி மிகுந்தது. தரிசாக, புதர்மண்டிக் கிடக்கும் காட்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சீராக்கி, விளையாக்கி, நீர் பாய்ச்சி நேராக்கி என அது ஒரு தவம். கர்ம யோகம். வெளியிலிருந்து பார்க்கும் நமக்குப் புரிவதில்லை, ஒரு இடத்தை விற்க ஏன் இத்தனை அழிச்சாட்டியம் என. ஆனல் அது அவர்கள் ஆன்மாவுடன் தொடர்பிலிருப்பதை நாம் ஒரு போதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.

என்றாலும் என்னளவில் “உடல் உறுப்புகள்” என்ற கதையே சிறந்தது எனச் சொல்வேன். எத்தகைய சிற்பமாக இருந்தாலும் அப்படியே நகலெடுத்ததுபோல் வார்ப்பில் வடித்துவிடும் கலைஞன், தினவாழ்வை எதிர்கொள்ள நேரிடும் சிக்கல்களச் சொல்கிறது. இறுதியில் அவரது திறமை பயன்படுத்தப்படுகிறது என்றாலும் அவருக்கு ஆதம திருப்தி கிட்டியிருக்குமா என்ற கேள்வியினை முன் வைத்து முடிகிறது கதை.

தேவையற்ற அலங்காரங்கள், வார்தைச் சிலம்பங்கள் ஏதுமற்ற எளிய கதைகள்.

வலவன் – டிரைவர் கதைகள்

ஒரு நல்ல புனைவு நம்மை உள்ளிழுத்துக் கொள்ள இரண்டு காரணங்களைச் சொல்வேன். ஒன்று கதை நிகழும் களம் நமக்குப் பரிச்சயமானதாக இருப்பது. இரண்டு, கதை மாந்த்தர்களைப் போன்றவர்களை நம் வாழ்வில் சந்தித்திருப்பது.
சுதாகர் கஸ்தூரியின் “வலவன்” சிறுகதைத் தொகுப்பில் எனக்கு இரண்டுமே வாய்க்கப் பெற்றது.

கதைக்களங்களான மும்பை, புனே, நாஷிக், வாபி, டாமன், சில்வாசா போன்ற இடங்களுக்குப் பணி நிமித்தமாகப் போயிருக்கிறேன். மட்டுமல்லாது, அனல் மின் நிலையங்கள், இரும்பு உருக்காலைகள் போன்றவைதான் வாடிக்கையாள நிறுவனங்கள். பெரும்பாலும் இவை ஊருக்கு வெளியே 30-40 கிமி தூரத்தில்தான் அமைந்திருக்கும். எனவே வாடகைக்காரை நாள் முழுவதும் பேசி ஏற்பாடு செய்துகொள்வேன். கதைகளில் வரும் ஓட்டுநர்களைப் போன்றவர்களைச் சந்தித்திருக்கிறேன்.

வெகு எளிய மொழ்யில் எந்தவிதப் பாசாங்கும் பூச்சுகளுமற்ற சிறுகதைகள். சுஜாதா சொல்வார் கதையில் உண்மை கொஞ்சம் கலந்து இருக்கும்போதுதான் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என. அதே போல இக்கதைகள் அனைத்தும் near truthல் எழுதப்பட்டவை. கதைகளின் சிறப்பே எந்தப் புள்ளியில் உணமையிலிருந்து புனைவாக மாறுகிறது என்பதை அறிய முடியாமல் நடக்கிற பாய்ச்சல்தான்.

மொத்தம் பத்து சிறுகதைகள் தொகுப்பில். அவற்றைத் தரவரிசைப் பட்டியல் இடுவது முறையற்றது. என்றாலும் என்னை அதிகம் ஈர்த்தைவை “தந்தையுமானவன்” மற்றும் “ஆதிமூலம்”.

முதல் கதையாக செண்பகாவின் அப்பாவை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். ஓட்டுநர்களுக்கும் நம்மைப் போலவே குடும்பம் இருக்கும், குழந்தைகள் இருப்பர், அவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் இருக்கும் என்பதை மறந்துவிட்டு நமது குடும்பம் நமது தேவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குகிறோம் என்பதை அற்புதமாகச் சொன்ன கதையது.

நான் பழகிய ஓட்டுநர்களுள் சர்தார்ஜிகள் முதலிடம் பெறுவர். அவர்களது அர்ப்பணிப்பும், ஏற்றுக் கொண்டதை, நம்மிடம் சொன்னபடி செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருப்பதை, குறிப்பாக நம் உடல்நலம் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பதை நேரில் அறிந்திருக்கிறேன். இதிலும் இரண்டு கதைகள் உண்டு “மஞ்சித் சிங்” மற்றும் “ஹரிசிங்”

லட்சுமண் கதை நிகழும் ஆதிகளமான புளியரைதான் அப்பாவின் சொந்த ஊர், அங்குதான் நான் 9ஆம் வகுப்புப் படித்தேன்.

நன்றி சுதாகர், பிரயாண நினைவுகளைக் கிளர்த்தியதற்கு.

மாநகரம் – உள்ளும் புறமும்

maanagaram-movie-review

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த உனர்வை அளித்தது “மாநகரம்”

ஒன்றுக்கொன்று தொடர்புள்ள சிறு சிறு சம்பவங்கள். ஊடாடும் மாந்தர்கள் அறியாமலேயே தன்னளவில் செய்துவிட நேர்கிற செயல்கள் அடுத்தவரையும் பாதிக்கிற வகையில் அமைந்து விடுவதான, தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு.

ஸ்ரீ, சந்தீப், ரெஜினா ஆகிய மூவரும் பிரதானக் கதாபாத்திரங்கள் என்றாலும், சார்லி, முனீஸ்வரன் போன்ற இதரர்களின் பங்களிப்பும் அற்புதமாக அமைந்திருக்கிறது.

பாத்திரச் செதுக்கலும் அதற்கான நடிகர் தேர்வும் படத்தை உயர்த்துகிறது. சந்தீப் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திலிருந்து இம்மியும் பிசகவில்லை. ஒரு மாதிரியான பிடிவாதம் கொண்ட இளைஞன், தான் நினைத்ததே சரி என்றெண்ணும் வகை. அல்லு அர்ஜுனின் தம்பி போல இருக்கிறார்.

ஸ்ரீ, இடம் பெயர்தலின் அவலத்தை எப்போதும் முகத்தில் தேக்கியவாறே இருக்கிறார். மரியாதையாதயான வேலையில் இருந்தாலும், சந்தீப்பின் காதலை உதறிவிட முடியாமல் அவதிப்படும் வேடம் ரெஜினாவுக்கு. சிறப்பாகச் செய்திருக்கிறார்.

மிகத்தரமான ஒளிப்பதிவு பகல்நேரச் சென்னையையும் அதன் இருண்ட இரவையும் துல்லியமாகக் காட்டுகிறது. பாடல்களில் ஏமாற்றினாலும், பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார் ரியாஸ். மிகவேகமாக நகரும் திரைக்கதைக்கு மெருகூட்டுவது மிகத்திறமையான எடிட்டிங்.

கதையோடு ஒட்டாமல்,  நகைச்சுவை என்ற பெயரில் ஆயாசம் ஏற்படுத்தும் தமிழ்ச் சினிமாவில், முனீஸ்வரனை வைத்து தேவையான அளவு கதை நகரும் போக்கிலேயே காமெடி செய்திருப்பது சிறப்பு. வெகு இறுக்கமாக் இருக்கும் திரைக்கதையில் முனீஸ்வரனின் நகைச்சுவை சிறிது ஆசுவாசம் தருகிறது.

மொத்தத்தில் இது ஒரு சுவையான கூட்டாஞ்சோறு. சபாஷ் லோகேஸ்.