Month: June 2010

மருந்தெனப்படுவது யாதெனின்

ருமாட்டிக் ஆர்த்ரிட்டிஸ் என்பது கைகால் மூட்டுகளில் ஏற்படும் ஒரு சிறு குறைபாடு. பாதிக்கப்படவர்களின் மூட்டுகள் வீக்கமுற்று மடக்கவியலாததாகிவிடும். இவர்கள் தொடர்ந்து மாத்திரைகளை உட்கொண்டால் வலியைக் கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ந்து இயங்கலாம். மாத்திரையை நிறுத்திவிட்டால் வீக்கம் அதிகமாகி நடப்பது உட்பட மற்ற பிற இயக்கங்கள் முடங்கிவிடும்.

Leflunomide என்ற மருந்து ருமாட்டிக் ஆர்த்ரிட்டிஸால் பாதிக்கப்பட்டவர்கள் வலியையும், வீக்கத்தையும் குறைக்க எடுத்துக் கொள்ளுவது. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் Lefno 20mg என்ற பெயரில் இதைத் தயாரிக்கிறது. பத்து மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையின் விலை ரூபாய் 196/- ஆகும்.

இதே மருந்து வேறொரு நிறுவனத் தயாரிப்பாக Rumalef 20 mg என்ற பெயரில் கிடைக்கிறது. அதன் விலை என்ன தெரியுமா? முன்னதின் பாதி. ஆமாம் அதன் விலை ரூபாய் 100/- மட்டுமே

இவ்வளவு வீரியமுள்ள மருந்தை உட்கொள்ளுவதால் ஏற்படும் அமிலசுரப்பை ஈடுகட்ட Pantacid 20 என்ற முறிவு மருந்தை எழுதித் தருவர் மருத்துவர். இதன் வேதிப் பெயர் Pantoparazole Sodium. பத்து மாத்திரகள் கொண்ட ஒரு அட்டையின் விலை ரூபாய் 56.00 ஆகும். இதே மருந்து வேறொரு நிறுவனத்தின் தயாரிப்பாக Pantop 20 என்ற பெயரில் கிடைக்கிறது. விலை? அதே போலப் பாதிதான.

ஒரு நபர் சாதாரணமாக இருவேளை இந்த மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

முதல் வகை மருந்து

Lefno 20 ===>> 60 X Rs. 20/tab = Rs. 1200.00
Pantacid 20 ===>> 60 X Rs. 6/tab = Rs. 360.00

Total = Rs.1560.00

இரண்டாம் வகை மருந்து

RumaLef 20 ===>> 60 X Rs. 10/tab = Rs. 600.00
Pantacid 20 ===>> 60 X Rs. 3/tab = Rs. 180.00

Total = Rs.780.00

ஒரு மாதம் அதிகமாகச் செலவு செய்யும் தொகை
ரூபாய் : 780.00 ஒரு வருடத்திற்கு : 9360.0

கடந்த 5 வருடங்களாக நான் அதிகமாகச் செலவு செய்திருப்பது ரூபாய் 46,800.00.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். கோவையில் துளசி பார்மசியில்தான் நான் வழக்கமாக மருந்துகளை வாங்குவேன். அங்கு 10% கழிவு கிடைக்கிறது. என்றால் விலைக்கு மேல் வாட் வரி என வசூலிக்கும் மற்ற மருந்துக் கடைகள் அடிக்கும் கொள்ளை என்ன வகையோ?

இரண்டு சலைன் பாட்டில் வாங்கினால் ஒன்றும், மூன்று வாங்கினால் இரண்டும் இலவசமாம். கொடுப்பது மொத்த விற்பனையாளர், பெறுவது மருந்துக் கடைக்காரர். நமக்கு?

எல்லாப் பெரிய மருந்துக் கடைகளிலும் Drug Update என்ற கையேடு இருக்கிறது. அதில் நாம் தெரிந்து கொள்ளலாம், ஒரே மருந்தை வேறு வேறு பெயர்களில் எந்தெந்த நிறுவனம் தயாரிக்கிறது என்ற விபரத்தை. கடைக்காரரிடம் நல்ல பழக்கம் இருந்தால்தான் அதைத் தருவார். மேலும் அப்படி வாங்கும் மருந்தை மருத்துவரிடம் காட்டி ஒப்புதல் பெற வேண்டும்.

சகோதரி மங்கையின் இந்தப் பதிவு இதனுடன் சம்பந்தப்படுத்திப் படிக்க வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்(நன்றி சென்ஷி).

.

Advertisements

ஈவது விலக்கேல்

ஒற்றைப் பொத்தானில்
ஏறி இறங்கும் கார்க் கதவு
இறங்கி ஏறுமுன்
நீள்கிறதொரு கை

இடுப்புக் குழந்தையின்
சிரிப்பினில் மயங்கி
பையிலிருந்து
காசெடுத்து
கையிலிடுமுன்

சிவப்பிலிருந்து பச்சைக்கு
சீக்கிரம் மாறும்

சிக்னல் மேல்
பழிபோட்டு நகர்கிறேன்
நாள்தோறும்.

.

மிகை நாடி மிக்க கொளல்

அன்பின் நர்சிம்,

ஒரு கை நிறைய வேர்க்கடலை அள்ளி சாப்பிடும்போது ஒன்றிரண்டு சொத்தை வருகிறது என்பதால் மொத்தக் கடலையையும் நாம் ஒதுக்கி விடுவதில்லை அல்லவா? அதுபோலத்தான் ஒரு பதிவு இடறி விட்டது என்பதற்காக எழுதாமல் இருப்பது என்பது சரியில்லை.

மேலும் உன்னை ரசித்து வாசித்த/வாசிக்கும் என்னைப் போன்ற சிலருக்காவது நீ மீண்டும் எழுதத்தான் வேண்டும். அந்தந்த நேர உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு முடிவுகள் எடுப்பதும் பின் அதற்காக வருந்துவதும் மனித இயல்பு. இதற்கு ஆட்படாத மனிதனே இல்லை எனலாம்.
ஒரு கொலைக் குற்றவாளிக்குகூட இந்த சமுதாயம் வாய்ப்புக்களை வழங்குகிறது என்றபோது நீ எழுதாமல் இருப்பது என்னவோ போலிருக்கிறது. மேலும் இனி நீ எழுதும்போது முன்னிலும் சிறந்த படைப்புக்களை தருவாய் என நம்புகிறேன்.

செய்த தவறுகளிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களினால் தன்னைச் செதுக்கிக் கொண்டு முன்னேறும் சிறப்பு மனிதனுக்கே உண்டு.

மீண்டு(ம்) வா.

தோழமையுடன்

பி கு : நிச்சயமாக இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் வரும். அதிகப்பிரசங்கி நாட்டாமை, உருவத்தில் பெரியவன் அறிவில் சிறியவன், நல்லவன் போல் நடிப்பவன், தகரடப்பா, நசுங்கிய சொம்பு, நாதாரி போன்ற நாகரீக வார்த்தைகளில் தொடங்கி, தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளைத் தாங்கி வரும் என எனக்குத் தெரியும். இருந்தும் இதை இங்கே நான் பதிப்பிக்கக் காரணங்கள் பின் வருவன.

1. தவறு செய்த ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படும் அதிகப்பட்சத் தண்டனை அவனைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதே. நாம் அனைவருமே நர்சிம்மின் அந்தப் பதிவிற்கு உடன்படவில்லை என்பதைச் சொல்லி நர்சிம்மைத் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டோம். அவரும் தனது தவறை உணர்ந்துவிட்டார்.

2. நான் சந்திக்கும், பேசும் அல்லது மின்னரட்டையில் ஈடுபடும் பெரும்பாலோர் நர்சிம் மீண்டும் எழுத வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். ஆனால் இதைபோல ஒரு பதிவை எழுதத் தயங்குகிறார்கள். காரணம் அவதூறுக்கு பயப்பதே.

3. இந்தப் பிரச்சினைக்கிடையிலும் நர்சிம்மைத் தொடர்வோர்(555) குறையவே இல்லை. அதன் அர்த்தம் நர்சிமின் இந்தப் பதிவைக் கண்டித்து இனித் தரப்போகும் நல்ல பதிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதே.

4. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.

அன்பின் மாதவராஜ்

அன்பின் மாதவராஜ்,

எல்லா இடத்திலும் நான் சொல்லி இருக்கிறேன் நர்சிம் எழுதிய பதிவு கீழ்த்தரமானது என்பதை. அது அவரது எழுத்துலக வாழக்கைக்கே ஒரு பெரும் கரும்புள்ளி. மட்டுமல்ல மச்சத்தைபோன்று அழிக்க முடியாத ஒன்று. அதைத் தாண்டி வர பல வருடங்கள் ஆகும்.

ஆனால் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீகள் என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

நான் எழுதிய புனைவு சில பேரை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சந்தனமுல்லை அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

சில என்ற வார்த்தை தவறு பல என்று இருக்கணும் என்கிறீர்கள். இது ஒரு குற்றமா?

மனப்பூர்வமாக மன்னிப்பு என்று சொல்லிஇருக்கிறார். வேறு என்ன வார்த்தை போடணும்? அதையும் நீங்களே சொல்லிவிடுங்கள்.

அல்லது நீங்களே மன்னிப்பு என்று சொல்லி ஒரு டிராப்ட் எழுதிக் கொடுங்கள் அதைப் போட்டு விடலாம்.

கார்க்கியை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லியும் விடுங்கள்.

அடுத்து என்னை என்ன செய்ய் வேண்டும் என்பதை வேறு யாரிடமாவது கேட்டும் சொல்லி விடுங்கள்.

அவர் மன்னிப்புக் கேட்ட பிறகும் அவரை ஓட ஓட விரட்டும் உங்கள் செயல் அவ்சர் மீதிருக்கும் தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக எழுந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது. அதை இல்லை என்று உங்கள் எழுத்து வன்மையால் மறுக்கக்கூடும். மறுப்பீர்கள்.

நர்சிம்மின் அந்தச் செயல் எந்த வித்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. அதே சமயம் பலரது சுயரூபம் இதன் மூலம் அனைவருக்கும் தெரியவந்திருக்கிறது.

ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நான் அமைதி அமைதி எனச் சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் அப்பொழுது என்னைத் திட்டுபவர்கள் பின்னர் என்னை அழைத்து ஆமாங்க அண்ணாச்சி நீங்க சொன்னது சரிதான் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதன் காரணத்தை இப்பொழுது நான் தெரியப்படுத்தி இந்தப் பிரச்சினையை மேலும் வளர்த்தவிரும்பவில்லை. அந்த உண்மை வெளியே தெரிய வரும்போது இந்தப் பிரச்சினைக்கு இதுதான் அடிப்படைக் காரணம் என்று நீங்கள் உணரும் போது இது வேறு பிரச்சினை என உங்களுக்குப் புரியலாம் மாதவ்.

உதாரணமாக் வினவு தோழர்கள் குறித்து நாம் இருவரும் விவாதித்தை இங்கே பொது வெளியில் சொன்னால் நம் நட்பிற்கான களங்கமாவிடும் அல்லவா? அது போலத்தான்.

மூத்த தோழரான தாங்கள் அனுபவம், வயது போன்றவறைக் கணக்கில் கொண்டு இந்தப் பிரச்சினையை எப்படி முடிப்பது என்பது குறித்துச் சிந்தியுங்கள். இத்தருணத்தின் தேவையும் அதுவே.

நணபர் காமராஜுக்கும் எனது அனபைச் சொல்லுங்கள்.

தோழமையுடன்