அன்னமிட்ட கைகள் – 1.

86ல் ஒரு எலெக்ட்ரிக்கல் காண்ட்ராக்டரிடம் கொத்தடிமையாக வேலை பார்த்தேன். மாதம் 150 ரூபாய் சம்பளம. அதையும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அழுது மன்றாடினால்தான் தருவார். அறைத் தோழன் குரு ஒரு பம்ப் செட் கம்பெனியில் அப்ரசண்டியாக 400 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான். அறை வாடகையே ரூ.125.00 மிச்சக் காசில்தான் ஜீவனம். இருவரின் பெற்றோரும் உதவும் நிலையில் இல்லை. முதல் 10நாட்கள் 3 வேளை சாப்பிடுவோம். மதிய உணவு கூடுமானவரை அவரவர் அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள் சாப்பாட்டைப் பங்கிட்டுக் கொள்வாதாக இருக்கும். காலையும் மாலையும் மெஸ்ஸில்.  11-20 ஒரு நேரம் மட்டும் மெஸ். 25க்கு மேல் மதிய உண்வில்தான் காலம் தள்ளியதே. ஞாயிறு அல்லது விடுமுறை வந்தால் அதற்கும் வேட்டுத்தான்.

ஒரு ஞாயிறு மாலை சீனு வந்தான் அறைக்கு. இன்னொரு கொத்தடிமை,  ஆனால் வேலை செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லாத அளவுக்கு வசதியானவன். காண்ட்ராகடரிடம் ஒரு வருடம் வேலை பார்த்து அவர் சான்றளித்தால்தான் சி சர்டிஃபிகேட் என்ற அங்கீகார்ம கிடைக்கும் அதற்காகத்தான் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்வது.

வந்தவன் இளையராஜ பாட்டு கமலஹாசன் திரைப்படம் என உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான். எங்கள் இருவரிடமிருந்தும் சுரத்தான பதில் வரவில்லை என்றதும் “ராஜ் பேண்டை மாட்டிட்டு எங்கூட வாடா.” என்றான்.

”எங்கடா?”

”நீ வாடா” என என்னை அவனது டிவிஎஸ் 50ல் அழைத்துச் சென்றான்.

வீட்டிற்குள்,  அவனது அறைக்கு அழைத்துச் சென்றவன் அமரச் செய்துவிட்டு அவனது அம்மாவிடம் ஏதோ பேசினான். பின் என்னுடன் வந்து புதிதாக வந்திருந்த இளையராஜா கேசட்டைக் காட்டி, “பாட்டுக் கேட்கலாமா?” என்றான். சரியெனச் சொல்ல பாடலை ஓடவிட்டான். 10 நிமிடத்தில் அவனது அம்மா வந்தழைக்க, “வாடா ” என டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றான்.

சுடச்சுட இட்லி , சட்னி சாம்பாருடன் காத்திருந்தது.

”இல்லை சீனு, குரு அங்க பசியோட இருப்பான். நான் மட்டும் எப்படி சாப்பிட?” என்றேன்.

”சாப்பிடு ராஜ், அவனுக்கும் கப்பில் போட்டுத்தரச் சொல்லி இருக்கேன் அம்மாவிடம்” என்றான்.

சங்கோஜத்துடன் சாப்பிட அமர்ந்தேன். என் சங்கோஜத்தைப் பசி வென்றுஎன்னைத் தின்றது.

பரிமாறும் கையை மட்டுமே பார்த்தவாறு சாப்பிட்டு முடித்தேன். கிட்டத் தட்ட 12 இட்லிகள். இப்பொழுது கடைகளில் கிடைக்கிறதே அது போன்ற ஜீரோ சைஸ் இட்லிகள் அல்ல. நல்ல வெங்கலப் பானையில் வார்க்கப் பட்டவை. கிட்டத்தட்ட 3 இட்லிகளுக்குச் சமம்.

அதன் பிறகு வாழ்க்கையில் எத்தனையோ முறை வேறு வேறு சுவைகளில், இடங்களில். சூழ்நிலைகளில் இட்லி சாப்பிட்டிருந்தாலும் அந்த 12 இட்லியை மறக்கவே முடியாது.

ஒரு கேரியரில் குருவுக்கும் 12 இட்லிகள், சட்னி சாம்பார் அனைத்தையும் வைத்து ஒரு வயர் கூடையில் வைத்து “ஆட்டாமல் கொண்டு போ சாமீ” என்று அவனது அம்மா சொல்லி அனுப்பிய காட்சி காலத்தில் உறைந்து இன்னும் கண்முன்னால் நிற்கிறது.

4 comments

  1. இளமையில் பசி மிகவும் கொடுமை. அதுவும் இயலாத தன்னிறக்கத்திற்கு ஆளாகும் நிலையில் ஏற்படும் பசியும் அந்த சங்கோஜமும் இறுதியில் பசியே வெல்வதும் …. அனுபவம் பேசுகிறது….. அனுபவித்தவர்களுக்கு அதன் வலியும் அனுபவமும் புரியும்.

  2. நானும், உணவைப் பற்றி ஒரு தொடர் எழுதனும்ன்னு பார்க்கிறேன். ஊஹூம்ம்ம்…

    12 * 3 = 36. உங்க கேலிபர்க்கு கொஞ்சம் கம்மிதானோ அண்ணாச்சி:))

Leave a comment