Author: வடகரை வேலன்

ஜாலியான ஆளுங்க

முதல் சமூக நீதிப் போராளி

தன் சீடனின் திறமையின் மீதான அதீத நம்பிக்கையில் துரோணர் சொன்னார், “இச்சபையில் இவனை வெல்ல எவரும் உண்டோ?” திறமையில் சற்றும் குறையாத கர்ணன் சொன்னான் “உள்ளேன் அய்யா”
 
பரஸ்பர நிதி நிறுவனங்கள்கூட யாரும் படித்துவிடமுடியாத 5 அளவு எழுத்தில் “சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை” எனப் பொறுப்புத் துறப்புக் குடுக்கின்றன. துரோணர் அப்படியெல்லாம் சொல்லவில்லை. “வெல்ல, அரசவம்சத்தினன் உளனோ?” எனக் கேட்டிருந்தால் நியாயம்.
 
“யார் நீ? எத்தேச அரசன்?” கர்ணன் நிலைகுலைகிறான். உடுக்கை உழந்தவன் இடுக்கையைக் களைய, துரியோதனன் சபையேறிச் சொன்னான், ”ஒன்றே சாதி”
 
கற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும் வண்மைகை
உற்றவர்க்கும் வீரரென்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக்
கொற்றவர்க்கும் உண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்கும் ஒன்றுசாதி நன்மைதீமைய இல்லையால்.
 
அ.சொ.பொருள்
நலன் நிறைந்த = நலம் நிறைந்த
வண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும்
வாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும்
கோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும்
நற்றவர்க்கும் = நல்ல தவம் செய்தவர்களுக்கும்
நன்மைதீமை இல்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை
 
உடுக்கை இழந்தான் கைபோல என்ற குறளை, எங்கள் தமிழய்யா ராமச்சந்திரன் நடத்திக் கேட்க வேண்டும். “டேய் உடுக்கை இழந்தவன் என்றால் அடிக்கிற உடுக்கு இல்லடா, போட்டிருக்கிற துணி. அதுகூட அவுந்துபோய் அம்மனமாகி நிக்கிம்போது வந்து தோள்ல இருக்க துண்ட எடுத்துக் கட்டி விடுறது இல்லைடா. அது அவிழும் முன்பே உதவுறது. உதாரணமா நீ பள்ளிக்கூடப் பைய ஒரு கைலயும் சாப்பாட்டுப் பைய இன்னொரு கைலயும் எடுத்துட்டுப் போறே திடீர்னு உன் கால்சட்டை கழறுதுன்னு வச்சுக்கோ என்ன செய்வே? டபக்னு உன் முழங்கையால இடுக்கிக்கிட்டு ரெண்டு பையையும் கீழ வச்சிட்டு சரி பண்ணிக்குவ இல்ல, அது மாதிரித்தான். எப்படி முழங்கை அனிச்சையாக உடனே உதவுதோ அது போல உதவுவதுதான் நல்ல நட்பு.”
 
நல்ல தமிழய்யா அமைவது, ஊழ்வினை.

நட்பெனப்படுவது யாதெனில்

நல்ல துவக்கமாக அமைந்திருக்கிறது இப்புத்தாண்டு.

விருதுநகர் சென்று வெயிலானைச் சந்தித்தேன்.  பகல் பொழுது, அவரது அலுவலகத்தில். நான் சென்றதும் தொழில் நிமித்தமாகத்தான். என்றாலும் கேலியும் கிண்டலுமாகக் கழிந்தது பொழுது.

வெயிலான் போன்றொருவருடன் நட்பு பாராட்டுவது மிக எளிது. அவரைச் சந்தித்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இருக்கும். அப்படி ஏதும் தெரியாவண்ணம் ஏதோ நேற்று இரவுதான் பேசிப் பிரிந்தாற்போல தொடரும் விதமான இயல்பு அவருடையது. A true friend is one with whom you can maintain silence, yet continue the relationship.

உண்மையில் வெயிலான் கல்லூரி ஆசிரியராயிருக்க வேண்டும். பொதுவாக ஒரு நல்ல ஆசிரியருக்குண்டான குனமான, ”தேடித் தெளிதலும் தெளிந்ததைத் பகிர்தலும்” அவரது இயல்பு.

அவரது அலுவலகச் சுவற்றிற்குள் இருந்து கொண்டே மத்திய மாநில அரசுகளின் வலத்தளங்களில் அலைந்து திரிந்து அனுபவங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். கடினச் செயல்முறைகளுக்கு எளிய வழிமுறையும், அத்தளங்களில் நிலவும் போதாமையும் அவருக்கு அத்துப்படி. ஆற்று நீரில் அள்ளிய ஒரு குவளை நீரைப் போல் நானும் கொஞ்சம் கற்று வந்தேன்.

விருதுநகரில் கமாலியா உணவகம் பெயர் பெற்றது. இவர் அவர்களது செல்ல வாடிக்கையாளர் போலிருக்கிறது. உடல் இளைக்க அவனவன் சாப்பிடாமல் விரதமிருக்க, இவர் கமாலியாவில் சாபிட்டே இளைத்திருக்கிறார், 20 கிலோ. கேட்டால் பேலியோ என்கிறார். அவர் ஒரு மட்டன் சுக்கா போதுமென்க, நான், சாப்பாடும் அயிரைமீன் குழம்பும், ஈரல் பொறியலும் சாப்பிட்டு அவருக்குத் துணையிருந்தேன்.

மாலை கோவில்பட்டியில் குருநாதன் இல்லத்தில் கழிந்தது. குருவை 1983 ஆகஸ்டில் முதன் முதலில் பார்க்கும்போது அப்போதைய சூப்பர்ஸ்டார் சுதாகர் போலிருந்தான். அதே உயரம், முன்பக்கம் வளைந்த நடை, சுருட்டைத்தலை என.

அடிப்படையில் உள்வயமாக யோசிப்பவன், வீட்டிலிருந்து வெகுதொலைவு விலகாதவன், அதனால் யாரிடமும் எளிதில் பழகாதவன் என்றே எல்லோரும் என்னிடம் சொல்லியிருக்க, ஏனோ என்னிடம் உடனே ஒட்டிக் கொண்டான். நான் நெல்லைக்காரன் என்பதால்கூட இருந்திருக்கலாம்.

அன்று முகிழ்த்த நட்பு 35 வருடங்களாகத் தொடர்கிறது. இடையில் வாழ்க்கை தன் கரங்களால எங்களை வேறு வேறு பக்கத்தில் வீசி எறிந்த போதும், தொடர்பில் இருக்கிறோம். என் மகளை மடியில் அமர்த்தி மொட்டையிட்டு காதுகுத்தித் தாய்மாமனாகியவன்.

பைநிறையக் கடலை மிட்டாயையும், கை நிறைய இஞ்சி மரப்பாவையும் மனசு நிறைய குரு&விஜி இருவரின் அன்பையும் சேகரித்து வீடு வந்து சேர்ந்தேன்.

கிஸ்மத் – மலையாளத் திரைப்படம்

 

பெரும்பாலும் சினிமாக்களில்,  காதலர்களில் ஒருவர் இறந்துபோக நேரிடுமானால், மற்றவர் பைத்தியமாகவோ அல்லது அவரது நினைவில் வாழ்க்கையைத் தொலைத்தவராகவோ அல்லது  இறந்துபோவதாகவோ அமைக்கப்படும். மாறாக இப்படத்தில் காதலன் இறந்துபோனதும் முடிந்துவிடும் கதையின் நீட்சியாகக் காட்டப்படும் இறுதி 5 நிமிடக் காட்சிகள் ஒரு குறுங்கவிதை. படத்தை வேறு தளத்திற்கு நகர்த்திவிடுகிறது.

23 வயது இர்ஃபானுக்கு 28 வயது அனிதாமீது காதல். கல்லூரிப் படிப்பை(பொறியியல்) பாதியில் விட்ட இர்ஃபான் வேலை ஏதுமற்றவன். அவ்வாறு வேலை செய்து சம்பாதித்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லாத அளவுக்கு வசதியான குடும்பத்தின் இளையவன். தன் விருப்பம் என பழைய பைக்குகளத் தேடி வாங்கி வந்து அதன் தோற்றம் மாற்றிப் பொலிவேற்படுத்தி ஓட்டுவதில் ஒரு பெருமிதம் கொண்டவன்.

அனிதா ஆராய்ச்சி மாணவி. ஏழை, தலித் குடும்பத்தில் உதித்தவள். எதேச்சையாக ஒரு மோதலில் சந்திக்கும் இர்ஃபான் மீது முதலில் கோபம் கொண்டாலும் அவன் நடவடிக்கைகளாலும் நல்லெண்ணத்தினாலும் ஈர்க்கப்பட்டு காதல் கொள்கிறாள். அவளது ஆராய்ச்சிக்கு இர்ஃபான் முன்வந்து உதவி செய்ய காதல் மேலும் இறுகிறது.

இர்ஃபான் வீட்டில் பெண்பார்க்க ஆரம்பிக்க, அவன் அனிதாவைப் பற்றி சொல்ல, வீட்டில் எதிர்ப்பு கிளம்புகிறது. உடனே அனிதாவைக் கூட்டிக் கொண்டு காவல் நிலையம் சென்று பாதுகாப்பு கோறுகிறான். அதுதான் அவன் உணர்சிவயப்பட்டு செய்யும் தவறு. ஏன் என பின்விரியும் காட்சிகளில் தெளிவாகிறது.

படத்தின் ஆகச்சிறந்த சித்தரிப்பு, காவல் நிலையம். ஒரு காவல் நிலையமொன்றில் இயல்பாக நடக்கும் அன்றாட நிகழ்வுகளை எந்தப் பூச்சும் பாசாங்குமற்று கன்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார்கள். காவல் ஆய்வாளராக வரும் விநய் கூடக் குறைச்சல் இன்றி ஒரு ஆய்வாளரை அவரது நிறைகுறையுடன் கன்முன்னே காட்டுகிறார்.

புதிதாகச் சேரவரும் கான்ஸ்டபிளை நிறுத்தி வைத்துக் கொண்டே பேசுவதும், அதே சமயம் உள்ளே வரும் கான்ஸ்டபிள் பணியில் இருப்பவரை வேண்டுமென்றே உட்காரச் சொல்லுவதுமாக ரேக்கிங் செய்வதை போன்ற நடவடிக்கை ஒரு சிறு உதாரணம். “என்ன? வேற வேலை ஏதும் கிடைக்கலியா? இப்ப இதான் ஈசி இல்ல, நல்ல சம்பளம், கூடுதலாகக் கிம்பளம்” என்றவாரே புதிதாக வந்தவரை நோட்டம் பார்ப்பதில் அசத்துகிறார். இவர்தான் பிரேமம் படத்தில் காலேஜ் வாத்தியாராக வந்து மலரைக் காதலிப்பாரே, “ஜாவா இஸ் ரக்கட். ஜாவா இஸ் சிஸ்டமேட்டிக்” என்று பாடம் நடத்துவாரே அவர்தான்.

எல்லாக் கவல்நிலையங்களிலும் ஆய்வாளாருக்கு வேண்டியவர் சிலர் இருப்பர், கட்டப் பஞ்சாயத்து கோஷ்டி, இதில் கே டி. அஸ்ஸாமி இளைஞன் ஒருவன் மீது புகார், சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டதாக. கே டி உடனே ஆஜராகி, தனது உறவினர்கள் இருவரைக் காயப்படுத்திவிட்டதாகவும், மருத்துவச் செலவுக்கு 2000 ரூபாய் வாங்கித்தரச்சொல்லியும் பைசல் செய்கிறார். அஸ்ஸாமி இளைஞன் பேசும் ஹிந்தி இவர்களுக்குப் புரியவில்லை, ஆய்வாளர் வினய் ஹிந்தியில் பேசியவாறே முரட்டுத்தனமாக உடல்காயமேற்படுத்தி அவனைச் சம்மதிக்கச் செய்வார். காவல் நிலையத்தில் அனைவருக்கும் தெரியும் அவன் அஸ்ஸாமி என்று , ஆனாலும் பெங்காலி என்பர். வினய் மட்டும்தான், “நீ அஸ்ஸாமியாடா, நக்ஸலா” என நக்கலாகக் கேட்பார்.

நாமும் அப்படித்தானே – முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதி.  அஸ்ஸாம் ஜார்க்கன்ட் காரனென்றால் நக்ஸலைட். காவல்நிலையத்தை அப்பட்டமாகக் காட்டியதின் மூலமாக சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிறார் அறிமுக இயக்குநர் – ஷாநவாஸ் கே பாவக்குட்டி. இவர் பொன்னானி நகரின் முனிசிபல் கவுன்சிலராக இருந்தபோது, 23 வயது B.Tech மாணவனுக்கும் 28 வயது தலித் பெண்ணிற்கும் இடையே வந்த காதலால் நடந்த உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் விளைந்தது இப்படம்.

காவலர் ஒருவர், கைப்பற்றி நிலையத்தில் நிறுத்தியிருந்த பைக்கின் எஞ்சினைத் திருடி விற்றுவிடுகிறார். விற்பனை செய்ய உதவியவனைப் பிடித்து அவன்தான் திருடன் எனக் கோர்ட்டில் ஒப்படைப்பதும், அதற்கு அவனைச் சம்மதிக்கக் கையாளும் நடவடிக்கைகளும், காவல்துறை எப்படித் தங்கள் சகஉழியரைக் காப்பாற்ற யாரைவேண்டுமானாலும் ஈவு இரக்கமின்றிப் பலிகொடுக்கும் என்பதன் வெளிப்பாடு அது.

இந்த நிகழ்வுகளுக்கிடையே, கே டி இர்ஃபானின் குடும்பத்தினருக்குச் சொல்லிவிட, அவர்கள் வந்து இர்ஃபானை அழைத்துச் சென்று விடுகிறார்கள். அனிதா என்ன ஆனாள், காதல் என்ன ஆயிற்று என்பதெல்லாம் உங்கள் திரையில்.

லூசியா – கன்னடத் திரைப்படம்

Lucia

கன்னடத் திரையுலகில் நடிகராக அறிமுகமான பவன் குமார், ”லைஃபு இஷ்டனே” என்றொரு நகைச்சுவை படமொன்றை இயக்குகிறார். அதன்பின், லூசியா திரைப்படத்திற்கான ஸ்கிரிப்டைத் தயார் செய்துகொண்டு, முன்னணி நடிகர்களை அணுகுகிறார். “இதெல்லாம் ஒரு படமா?” என எல்லோருமே உதறித்தள்ளிவிட, மனம்நொந்து தனது வலைப்பக்கத்தில் இதைப்பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறார். அவரது ரசிகர்கள், நண்பர்கள் என சுமார் 110 பேர் சேர்ந்து 55 லட்சம் ரூபாயை 27 நாட்களில்,  சேகரித்துக் குடுக்கின்றனர்; Crowd Funding என்கிற அடிப்படையில்.

உற்சாகமாகப் படத்தைத் தயாரிக்கிறார்.  அடுத்த சோதனையாக அதை வாங்கி வெளியிட எந்த விநியோகஸ்தரும் தயாராக வரவில்லை. மீண்டும் விரக்தி மேலிட, லண்டன் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்க, அங்கே அது ரசிகர்களால் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. உடனே விநியோகஸ்தர்கள் விழித்துக் கொண்டு ஓடி வர, திரையிட்ட முதல் வாரத்திலேயே 2 கோடி வசூலித்திருக்கிறது.

இதரப் படங்களைப் போல மேலோட்டமாக, அல்லது அசிரத்தையாகப் பார்த்தால் இது உங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. கதை  3 திரிகளாகச் சொல்லப்படுகிறது. மருத்துவமணையில் வெகுநாட்களாக கோமாவில் இருக்கும் நிக்கி, அவனை விடுதலை(கருணைக் கொலை) செய்துவிடத் துடிக்கும் அவனது காதலி, அவளின் நோக்கம் என்ன என்பதை விசாரிக்கும் காவல்துறை, என இதெல்லாம் நடப்பதின் இடையிடையே, நிக்கிக்கு விபத்து எப்படி ஏற்பட்டது என்பதின் முன் கதையைச் சொல்கிறார்கள்.

திரையரங்கொன்றின் பால்கணியில், தாமதமாக வரும் நபர்களை டார்ச் விளக்கின் ஒளியின் உதவியோடு, அழைத்துச் சென்று அவரவர்க்கான இருக்கையில் அமரச் செய்யும் தொழிலாளி  நிக்கி. குறைந்த அளவே படிப்பு, எந்தத் தனிப்பட்ட திறமையும் இல்லாத, பெண் தோழிகளை வசீகரிக்கவியலாதவன். இந்த ஏக்கம் அவன் ஆழ்மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.  இரவில் சரியாக உறக்கம் வருவதில்லை.

அப்படியான ஓரிரவில் வீதியில் நடை பழகுகிறான்,  காவல்துறையினர் அவனைக் கேலி செய்து ஓடவிடுகின்றனர். சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் இருவர் இவனைப் பார்த்து சிரிக்க, இவனது பிரச்சனையத் தெரிந்து கொண்டு “லூசியா” என்ற மாத்திரையை அறிமுகப் படுத்துகிறார்கள். அந்த மாத்திரையின் உதவியால் நல்ல தூக்கமும் கனவும் வருகிறது.

கனவு நமக்கெல்லாம் வருவதுதான். என்றாலும் நிக்கிக்கு, அந்த மாத்திரையின் காரணமாக வரும் கனவு வித்தியாசமாக இருக்கிறது. காலையில் எந்தக் கனவின் இடையில் எழுகிறானோ அதன் தொடர்ச்சியை அன்றைய இரவில் காண்கிறான்; மெகாத்தொடர் போல. கனவில் வருவதெல்லாம், இவன் இயல்வாழ்வில் அடையமுடியாமல் போனவைகளின் நீட்சி. நிக்கிக்கு முன்னணி கதாநாயகன் ஆகவேண்டும் என்பதுதான் ஆசை. அது கனவில் நிறைவேறுகிறது. இவனை கல்யாணம் செய்ய மறுக்கும் பெண், கணவில் இவனிடம் வாய்ப்புக்காக ஏங்கும் நடிகையாக.

இந்தப் படத்தில் நடித்த பெரும்பாலோர், ஒரே படத்தில் இரண்டு வேடங்களைச் செய்கின்றனர். ஒன்று நிஜத்தில், இன்னொன்று நிக்கியின் கனவில். நிக்கி – சினிமாத் தியேட்டர் ஊழியனாக நனவில், முன்னணி நடிகனாகக் கனவில். ஸ்வேதா – பிட்சாக் கடை ஊழியராக நனவில், சினிமா வாய்ப்புக்காக ஏங்கும் மாடலாக கனவில். சங்கரன்னா – தியேட்டர் உரிமையாளராக நனவில், நிக்கியின் மேனேஜராகக் கனவில்.

நனவிற்கும், கனவிற்கு வித்தியாசம் காட்ட, நனவைக் கலரிலும் கனவைக் கருப்பு வெள்ளையிலும் காட்டியிருக்கிறார்கள். மூன்று திரிகளையும், சற்றும் விலகாது கூடவே சென்றால், நல்லதொரு சினிமா அனுபவம்.

படத்திற்கு ஆகச்சிறந்த பங்களிப்பு எடிட்டர் குழுவிடமிருந்து. இத்தனை சவாலான கதையை, மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

நிக்கி போன்ற இளைஞர்களைத் தினவாழ்வில் நாம் எதிர்கொள்கிறோம். அவர்களிடமிருந்து நமக்குத் தேவையான வேலை/சேவையைப் பெற்றுக் கொண்டு அவர்களை உதாசீனப்படுத்தி விடுகிறோம். அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசாபாசங்களும் ஏக்கங்களும் இருக்கும் என்பதைக் கவனிக்க மறந்துவிடுகிறோம்.

பவன் குமாருக்குத் திரை நடிகர்கள் மீது, குறிப்பாக அவர்களது அலட்டல்மீது ஒரு வெறுப்பு இருக்கும் போலிருக்கிறது. நிக்கி கனவில் முன்னணி நடிகனாகிச் செய்யும் அடாவடி அலட்டல்கள் சிரிப்பை வரவழைத்தாலும் அதுதான் உண்மை.

இதைத் தமிழில் “எனக்குள் ஒருவன்” என்ற பெயரில் சித்தார்த் நடித்திருக்கிறார். படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இதற்கடுத்த படமாகத்தான் “U Turn” படத்தை எடுத்திருக்கிறார்.

ஓலைப்பீப்பி -மலையாளத் திரைப்படம்

olappeeppi-movie-review

ஓற்றை வரியில் எழுதிவிடமுடிகிற கதைதான். சிறுவயதில் ஊரைவிட்டு ஓடிப் போகும் உன்னி 30 வருடம் கழித்து வருகிறான். ஒரு நல்ல திரைக்கதை “What if” என்றொரு கேள்வியை முன்வைத்து, அதன் விடையை விரிதெழுதுவதாக இருக்க வேண்டும். இருக்கிறது.

மகுடேஸ்வரனின் கவிதையொன்று இப்படி முடியும்,
வாழ்ந்து கெட்டவர்களின்
வீட்டுக் கொல்லைப் புறத்தில்
இன்றும்
கேட்டுக்கொண்டிருக்கிறது
பெண்களின் விசும்பல் ஒலி.

இதைத்தான் திரைக்கதையாக்கியிருக்கிறார் கிரிஷ் கைமல். செழித்தோங்கி வாழ்ந்த ஆறாம் தரவாட்டின், அதிகப்படியான நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்கிறது அரசு, ஜமீந்தாரி ஒழிப்புச் சட்டத்தின் மூலம். மிஞ்சுவதெல்லாம், ஒரு வீடும் அதைச்சுற்றியுள்ள சிறு நிலமும்.

முத்தஸ்ஸியின் மகன் கோவிந்தன் இருந்த சிறு நிலத்தையும் ராஜப்பனிடம் அடகு வைத்துப் பணம் பெற்று வெளியூர் சென்றிடுகிறான். மகளை ஒரு நம்பூதிரிக்குத் திருமணம் செய்து கொடுக்க, மனிதத்தன்மையே இல்லாத முசுடு நம்பூதிரி, தன் மகன் உன்னியை வெறுக்கிறார், ஜாதக பலன்களைக் காரணம் காட்டி. வேறு வழியில்லாமல், உன்னியை முத்தஸ்ஸியிடம் விட்டு உன்னியின் அம்மாவும் நம்பூதிரியுடன் வேறூருக்குச் செல்ல, 80 வயது முத்தஸ்ஸியும், 8 வயது உன்னி மேனோனும், பந்தலுக்குக் கொடி ஆதரவு என்றாற்போல.

உன்னி மேல் முத்தஸ்ஸிக்கு அளவுகடந்த பிரியம். அவனுக்குச் சமைத்துக் கொடுத்து, குளிக்கச் செல்லும்போது கூடவே சென்று, பள்ளியிலிருந்து வரத் தாமதமானல் வழி நோக்கி நின்று என்று எல்லா அசைவிலும் உன்னியே. “நீ மிடுக்கன், நான்னாயி வரு” என்று சொல்வதை இத்தனை வாஞ்சையுடன் சொல்ல முடியுமா என வியக்க வைக்கிறார் புனசேரி காஞ்சனா. 1970களில் முன்னணி நடிகையாக இருந்தவர், 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வந்திருக்கிறார்.

கூன் விழுந்த உடம்பு, தடி ஊன்றி நடை, கண்சுறுக்கிப் பார்த்தல், விரல்கள நெற்றியில் வைத்து தூரத்தில் வரும் நபரைக் கூர்ந்து நோக்குதல், கால் நீட்டி அமர்தல், பேரனைக் காணாது தவித்தல், தவங்கித் தவங்கி நடத்தல் என அருமையான பாத்திரவார்ப்பு, உன்னி குளத்தில் குளிக்கையில், பாட்டியை எண்ணச் சொல்லிவிட்டு நீருக்குள் முங்குகிறான், எண்ண ஆரம்பிக்கும்போது இருக்கும் பாவத்திற்கும், எண்ணிக்கை அதிகமாக அதிகமாக முகத்தில் கவிழும் பயமும், இறுதியில் “உன்னி, உன்னீ, உன்னீஈஈஈஈ” என அலறும்போதும் காட்டும் பாவமும், அந்தக் காட்சியை எடுத்த இயக்குனரையும், காஞ்சனாவையும் என்ன வார்த்தைச் சொல்லிப் பாராட்டினாலும் தகும்.

மனிதர்களை எடைபோடுவது, நாம் பார்க்கக் கிடைக்கிற நடவடிக்கைகளைக் கொண்டே அமைகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. என்னேரமும் குடி என இருக்கும் கேசவனை உன்னியின் தங்கை சகித்துக் கொள்வது, அவளை மீட்டெடுத்தவன் அவன் என்பதால்; அதை உன்னி அறிய நேரும்போது கேசவன் மீதிருக்கும் வெறுப்பு அன்பாக மாறுவதை அத்தனை இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

தங்கள் வீட்டில் கூலிக்காரனாக இருந்த ராஜப்பன், இன்று அரசியல் படிநிலைகளில் மேலேறி தங்கள் இடதையே வளைத்துக் கொள்வதும், அவனிடமே யாசகம் கேட்க வேண்டிய நிலையும், உன்னி பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற போட்டிகளில் முதலாவதாக வந்ததைக் கௌரவிக்க, தனிப்பட்ட சன்மானமாய் ராஜப்பன் வழங்கும் 21 ரூபாயைக் கொண்டு ரேசன் வாங்கும் நிலையும், எப்படியாயினும் உன்னியை நன்றாய்ப் படிக்க வைக்கும் முத்தஸ்ஸியின் தீர்மானமும் என நல்ல காட்சிப்படுத்துதல்கள்.

சற்று எளிதான வேடங்களிலேயே நடித்துவந்திருக்கும் பிஜு மேனனுக்கு (வளர்ந்த உன்னி) இது ஒரு நல்ல வாய்ப்பு, நியாயம் செய்திருக்கிறார். சின்ன வயது உன்னியாக நடித்திருக்கும் தேவப் ப்ரயகன், ஆச்சர்யமூட்டுகிறார். நடிப்பிற்கு வயதென்பதே கிடையாது என்பதை, காஞ்சனா, பிஜு, தேவப்ரயாகன் ஆகிய மூவர் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர். இது அவரது முதல் முயற்சி என்பதை நம்ப முடியவில்லை என்னால், இன்னும்.

ஒரு பத்திருபது நாட்கள் சொந்த ஊருக்குச் சென்று, நீங்கள் விளையாடிக் களித்த இடம், நண்பர்கள், உறவினர், அண்டை அயலார் என எல்லோரையும் சந்தித்து வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள், எனில் இது ஒரு விர்ச்சுவல் பயணம்.

ஓலைப்பீப்பி, ஓட்டாள், மன்றோ ஐலண்ட் என, வயதானவருக்கும் பேரனுக்கும் இடயேயான உறவுப் படமாகப் பிடிக்கிறது, சமீபமாக. எனக்கும் வயதாகிறதோ?

நன்கலம் நன்மக்கட் பேறு

 

ஜெயமாலன், மகிழ்வாக இருக்கிறது குழந்தைகள் அரும்புவதைப் பார்க்கையில். உன்னுடைய இளவயதில் உனக்குக் கிட்டாத பலவற்றையும் அவர்களுக்குப் பெற்றுத் தரவேண்டும் என நீ ஓய்வு ஒழிச்சலில்லாமல் பாடுபடுவதைக் காண்கின்றேன். எதிர்காலம் குறித்துத் திட்டமிட்டுச் சேமித்தலும் அவசியம்.

குழந்தைகள் இருவரையும் சுயசிந்தனையும், தற்சார்பும் உடையவர்களாக வளர்த்துவா. நான் அப்படித்தான் செய்தேன். எனக்கு மாரடைப்பு வந்த அந்த ராத்திரியில் சின்ன மகள் எந்தப் பதட்டமும் கொள்ளாமல் மருத்துவரிடம் பேசி செய்ய வேண்டியவைகளைச் செய்து, அம்மாவைப் பயமுறுத்தாவண்ணம் தகவல் சொல்லி, கால்டாக்ஸி ஏற்பாடு செய்து, இரவு முழுவதும் விழித்திருந்து, காலை என் அலுவலத்திற்குத் தகவல் சொல்லி, அவசரத்திற்கு முன்பணமும் ஏற்பாடு செய்து என அவளது செயல்பாடுகள் அபாரமானவை.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடு, அமர்ந்து பேசு, அவர்களைப் புரிந்து கொள், அவர்கள் உலகில் நீ நுழை, எண்ண ஓட்டத்தை அறிந்துகொள். ஒருபோதும் நேரடியான அறிவுரைகளைக் கூறாதே. ஒரு செயலினால் விளையக்கூடிய சாதக பாதகங்களைச் சொல்லி,  செய்வதா வேண்டாமா என்ற முடிவுகளை அவர்களை எடுக்கச் செய். நீ சொல்லிச் செய்வதைக் காட்டிலும் அவர்களாக முடிவெடுத்தால் அதில் ஈடுபாடு அதிகமாகும், விட்டு விலக மாட்டார்கள்.

உன் வரவு செலவு எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வரவுக்குத் தக்கன ஆசைப்படுவதும், வரவறிந்து செலவு செய்யவும் கைவசமாகும். காசுபணம்தான் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் என்பது பொய்யான கருத்துரை. செல்வந்தர் வீட்டில் குழந்தைகள் படிக்காதது குறித்து விசனப்படுதலும், சரியான நட்பு அமையாமல் துன்புறுதலும் நடக்கிறது என்பதை நீயும் அறிவாய்.

விடுமுறை நாட்களை அவர்களுக்காகவே ஒப்புக் கொடுத்துவிடு. எங்காவது அழைத்துப் போ, கோவில், சுற்றுலாத்தலம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என.  முக்கிய நோக்கம், பிற மனிதர்களப் பார்த்துக் கற்றுக் கொள்வதும், தயக்கமின்றி உறவாடுவதும், வீட்டுக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை உணரச் செய்தலுமே.

போலவே, மேல்படிப்பில் அவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மாணிக்கட்டும். நீ அழுத்தம் கொடுக்காதே. வழக்கமான பெற்றோர் போல என்ஜினியரிங்தான் படிக்கணும் என்றெல்லாம் இப்பொழுதே யோசிக்காதே. அவர்கள் வளர்ந்து வரும் காலத்தில் இதைவிட நல்ல பட்ட/பட்டயப் படிப்புகள் வரக்கூடும். அவர்களது ஆர்வம், வேலை வாய்ப்பு/சொந்தத் தொழில் செய்ய வாய்ப்பு இரண்டையும் கொண்டு முடிவெடு.

Happiness is when you realize, your children have turned out to be good people.  Happy Parenting.

 

பெயரில் என்ன இருக்கிறது?

 

பச்சைமுத்து என்றுதான் எனக்கு முதலில் பெயரிடப்பட்டிருந்தார்கள். அம்மா வழித் தாத்தாவின் பெயர். அப்போதெல்லாம் பெயர் வைப்பது எளிது. தாத்தா பாட்டிகளின் பெயர் வைத்து முடிந்ததும் குலதெய்வப் பெயர் இன்னும் குழந்தைகள் பிறந்தால் இஷ்ட தெய்வத்தின் பெயர்.

வசதிப்பட்டவாறு விளிப்பர் என்னை;  “முத்து”, “பச்சை”, “பச்சமுத்தா” என்றெல்லாம். ஐந்தரை வயது ஆகும்வரை அந்தப் பெயரே நிலைத்திருந்தது. பள்ளியில் சேர்க்கும்போதுதான் ஆசிரியர்கள், “என்னங்க இது பழைய பேரா இருக்கே? கொஞ்சம் மாடர்னா வச்சாத்தான் நல்லா இருக்கும்” என்க, அப்பாவும் சரி என்றுவிட்டார். அப்பா இலக்கிய மன்றத் தலைவர் என்பதால், இளஞ்சேட்சென்னி, நன்மாறன், இளமாறன் என யோசிக்க, ஆசிரியர் ராமச்சந்திரன் உடனே மறுத்து, ராஜேந்திரன் எனப் பெயரிட்டுப் பதிவும் செய்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த இருவருள் ஒருவர் பெயர் அது.

நானும் பெயருக்கு உண்மையுள்ளவனாக இந்தி கற்றுக் கொள்ளாமல்தான் இருந்தேன், 50 வயது வரை. பணி நிமித்தம் வெளி மாநிலங்களில் அலைந்து திரிந்ததால் ஓரளவு பேசக் கற்றுக் கொண்டேன். சொல்ல வந்தது அதுவல்ல.

என் மனைவி அரசுப் பள்ளி ஆசிரியர். முழுஆண்டு விடுமுறைக்கு முன், பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தகள், அடுத்த கல்வியாண்டில் சேர்க்கைக்குத் தயாராக இருக்கும் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பில், எழுத்துப் பணியில் அவருக்கு உதவினேன். வீதியின் பெயர், வீட்டு என், அப்பா பெயர், குழந்தைகளின் பெயர் மற்றும் வயது ஆகியன பதியப்பட வேண்டும்.

வரிசையாக வாசித்துக்கொண்டே வந்த போது, ஒரு குடும்பத்தில் அக்காவுக்கும் தம்பிக்கும் இட்ட பெயர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அக்காளின் பெயர் திரவுபதி, தம்பியின் பெயர் அர்ஜுன். என்ன எண்ணத்தில் இப்படிப் பெயர் வைத்தார்கள் எனத் தெரியவில்லை. குழந்தைகள் வளர்ந்து பருவவயதை எட்டும்போது சிக்கல்தான்.

திராவிடக் கட்சிகள் தலையெடுத்ததும் நல்ல தமிழ்ப் பெயர்களைத் தங்கள் குழந்தைக்கு வைத்தார்கள். அரசு, இளங்கோ, புத்தொளி, புதுமலர், இளஞ்செழியன், நெடுஞ்செழியன், தமிழரசு, தமிழ்ச்செல்வன் என்றெல்லாம். கூடவே வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியும் நம்மைப் படுத்தினார்கள், ஜீவானந்தன் உயிரன்பன் ஆனதைப்போல.

முன்பெல்லாம் ஊர்ப்பெயரை முன்னொட்டாக  வைப்பது வழக்கம். “மாயுரம் வேதநாயகம்பிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம், காருக்குறிச்சி அருனாசலம்”. பின்னாட்களில் ஊர்ப்பெயரே நிலைத்துவிட்ட ஆட்களும் உண்டு, “ஆர்க்காட்டார், பொங்கலூரார்”

கேரளாவில், “ஆற்றூர் ரவிவர்மா, வைக்கம் முகமது பஷீர், வயலார் ரவி” என்பது மட்டுமல்லாமல், தரவாடு எனப்படும் குடும்ப்பபெயரையும் வைத்துக் கொள்வார்கள், “வலியவீட்டில் ராமச்சந்திரன், படிக்கல் வேனுகோபாலன்” என.

பெயரில் என்ன இருக்கிறது? எப்படி அழைத்தாலும் பெயர்தானே? என்ன பெயர் வைத்தாலும்,  பப்பிம்மா, புஜ்ஜிக் குட்டி எனச்செல்லமாக ஏதோவொன்றால்தான் அழைக்கப் போகிறோம், நமது குழந்தைகளை.

வெளிவாங்கும் காலம்.

 

கொங்கு வட்டார வழக்கில் எழுதுவதில் பெருமாள் முருகன், மணல்வீடு ஹரிகிருஷ்ணன் வரிசையில் வைத்துப் பாராட்டத் தக்கவர் என்.ஸ்ரீராம்.

கொங்கு வட்டார வழக்கு என்றாலும் கோவைப் பகுதியில் பேசுவதும், ஈரோட்டுப் பக்கம் பேசுவதும் சற்று வித்தியாசமாக இருக்கும். இவர் தாராபுரத்துக்காரர் என்பதால், அந்தப் பகுதி கொங்கு வட்டார வழக்கு இவரது கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

14 கதைகள் கொண்ட இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தும் கணையாழி, தீராநதி, படித்துறை போன்ற சிற்றிழிதழ்களில் ஏற்கனவே வெளியானவை. அதில் சில பரிசு பெற்ற கதைகள்.

தலைப்புக் கதையான வெளிவாங்கும் கதை, தன் அப்பாவிற்கெதிராக மகன் எடுக்கவிழையும் ஆயுதம் பற்றியது. நம் எல்லோருக்குள்ளும் அத்தகைய வெறுப்பு அப்பா மீதிருந்ததும் பின்பு அது நீர்த்துப் போனதையும் வெளிக்காட்டும் கதை.

என்றாலும் எனக்குப் பிடித்த கதை நெட்டுக்கட்டு வீடுதான். வேலைக்காரர்களிடம் நாம் வரம்பற்று, நம்மை மீறிப் பேசிவிடுவதும் அதன் பின்விளைவும். செல்லியக் கவுண்டர்களையும், ராமையாக் கம்மாளனையும் நம் தினவாழ்வில் எதிர்கொள்கிறோம், வேறுவேறு விதங்களில்.

கோழி திருடுபவன் பற்றிய “ஆதாயவாதிகள்” சிறுகதை என் பால்யவயதில் நான் பார்த்துப் பிரமித்த பண்டாரப் பெரியப்பாவை ஞாபகமூட்டியது. தலையாரி வேலை பார்த்தவர். என்றாலும், கோழி திருடுவது அவரது பிறவிக் குணம். ஈரச்சாக்கைப் போட்டுத் தொழுவத்தில் இருக்கும் கோழியைச் சத்தமில்லாமல் லவட்டுவதில் சூரர்.

கவுண்டர்களுக்கும் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும் இடையே காலகாலமாக ஓடிக் கொண்டிருக்கும் பகை, சிறுகதைகளின் அடிநாதமாக வெளிப்படுகிறது. ”என்னைக்கும் எரும மேல ஏறினா சவாரி, எஜமாங்க மேல ஏறின ஒப்பாரி, இனிமேலவது புரிஞ்சு நடந்துங்கடா” என்ற வரிகளில் தெறிக்கும் வன்மமும் குரோதமும் விவரிக்க இயலாதது. உன்மையில், இந்த ஏற்றத் தாழ்வுகளில் இருந்து அவர்களை விடுவிக்காதவரை சமஉரிம, சமூகநீதி  என்பதெல்லாம் வெறுமனே பெயரளவில்தான்.

நகரவாழ்வின் தினசரி நெருக்கடிகளிலிருந்து, ஓய்வெட்டுத்து ஆசுவாசப்படுத்த சொந்த ஊருக்குப் போவது போன்ற அனுபவத்தைத் தருகிறது இக்கதைகள். அந்த மண்ணும் மக்களும் அச்சு அசலாய் நம் கண்முன்னே. தாமரை நாச்சி, சிவபாலக் கவுண்டர், தரகுக்காரன், முனி போன்றவர்களையும் தாராபுரம் மண்ணையும் தரிசித்து வரலாம்.

முகிலினி – பாய்ந்தோடும் கசப்பு

 

 

70களின் இறுதியில் தென்னக நூற்பாலைகள், போனஸ் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. பழநியிலுள்ள விஜயகுமார் மில்ஸ் மட்டும் தொடர்ந்து இயங்கியது. “டேய், சைமால எவ்வளவு சதவீதம் முடிவாகுதோ அதைவிட 2% அதிகமா போனஸ் தர்றேண்டா, போய் வேலையைப் பாருங்க” என ஆலை முதலாளி உறுதியளித்ததால். சைமாவில் 35% என முடிவாகியதால்; 37% கொடுத்தார். தீபாவளிக்கு 25% என்றும் பொங்கலுக்கு 12% என்றும்.

வெகுநாட்களுக்கு இதைப் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தேன், 83ல் டிப்ளமோ படிக்க, கோவை பிஎஸ்ஜிக்கு வரும் வரை. ஒருமுறை வகுப்புத் தோழன் அய்யாசாமி சொன்னான், “இதெல்லாம் என்ன போனசு, எங்க விஸ்கோஸ்ல குடுப்பாங்க 55% . ஒரு சூட்கேஸ்ல பணத்தை அடுக்கி சூட்கேசோட கொடுத்திருவாங்க”. வெகு ஆண்டுகளுக்கு அந்தப் பிரமிப்பு விலகாமல் இருந்தது. அதன் பிறகு விஸ்கோசில் நடந்ததெல்லாம் ஒரு துன்பவியல் சரிதம். இரா.முருகவேளின் “முகிலினி” நாவல் அதை விரிவாக அலசுகிறது.

நாவலின் மையச்சரடு பவாணி ஆறுதான். நதிக்கரையில் தோன்றிய விஸ்கோஸ் ஆலை நதியைச் சார்ந்தியங்கிய மக்கள், அவர்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல், வாழ்வு முறை, உறவுகள் ஆகியவற்றில் ஏற்படுத்திய பாதிப்புகளை, மூன்று தலைமுறைக்காலம் நீண்டிருக்கும் நாவல் பேசுகிறது.

பாக்கிஸ்தான் பிரிவினையில் ஏற்பட்ட பெரும்சேதங்களில் வெளியே தெரியாத ஒன்று, இந்தியாவில் இருந்த நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சு விளைவிக்கும் நிலப்பகுதியில் பெரும்பான்மை பாக்கிஸ்தான் பக்கம் போய்விட்டதுதான். பஞ்சுத் தட்டுப்பாட்டைப் போக்க என்ன வழி என யோசிக்கும், கோவையின் மிகப் பெரிய நூற்பாலையின் முதலாளி கஸ்தூரிசாமியும் அவரது மனைவி சௌதாமினியும் எடுக்கும் முடிவுதான் செயற்கை நூலிழையை உற்பத்தி செய்வது.

செயற்கை நுலிழையை பெட்ரோலியப் பொருட்கள் மூலமாகவோ அல்லது மரக்கூழ் மூலமாகவோ தயாரிக்கலாம். இவர்கள் இரண்டாம் முறையைத் தேர்வு செய்கிறார்கள். இத்தாலியிலுள்ள விஸ்கோஸா ஆலையுடன் பங்கு ஒப்பந்தம் செய்துகொண்டு, தேவையான எந்திரங்களையும், மூலப்பொருட்களையும் அவரகளிடமிருந்தே பெற்று, உற்பத்தியை ஆரம்பிக்கிறார்கள்.

ஆலை, சார்ந்தோர் வாழ்வில் ஏற்படுத்தும் நேரிடையான மற்றும் மறைமுகமான ஏற்றம் அலசப்படுகிறது; ஊழியர் ராஜு மூலம். அடிப்படையில் தமிழார்வமும் திராவிடக் கட்சியின் மீது அபிமனமும் கொண்ட அவர் பின்னாட்களில் அரசியல் செயல்பாடுகள் குறித்து விரக்தியுறுவது, நிதர்சனமாக் வெளியாகிறது. அதே நேரம் கோவையிலிருக்கும் மற்ற மில்கள் செயலிழந்து மூடப்படுவதும், பெரிய ஆலைகள் நிரந்தர ஊழியர்களை வீட்டுக்கனுப்பி ஒப்பந்த அடிப்படையில் பெண்பிள்ளைகளைக் கொண்டு இயங்குவதும், அதன் மூலம் வீழ்ச்சியுறும் வாழ்வை ஆரான் மூலமும் சொல்லியிருக்கிறார். கோவை நுற்பாலைகளில் “சுமங்கலி திட்டம்” என்றால் என்ன என்று விசாரித்தறியுங்கள் நாம் உடை அணியும் ஒவ்வொரு முறையும் கூசிப்போய்விடுவோம்.

இயற்கை விவசாயத்தின் மீது காதல் கொண்டிருக்கும் திருநாவுக்கரசின் செயல்பாடுகள் மூலமாக, ஆர்கானிக் பொருட்கள் என்ற பெயரில் நடக்கும் வியாபாரச் சீரழிவுகளையும், அது மக்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கும் மாயையும் தெளிவாக்குகிறார்.

இந்த நாவலை பல நாவல்களாக பி(வி)ரித்தெழுதியிருக்கலாம் முருகவேள், அத்தனை அடர்த்தி. உண்மையான மனிதர்கள் வேறு பெயர்களில் உலவுவதும், சற்றே முலாம் பூசிய உன்மைச் சம்பவங்களும், குறைந்த சதவீதம் புனைவு கலந்ததுமான நல்லதொரு நாவல்.

காங்கிரஸ், ஜனதா, கம்யூனிச, திராவிட அரசியலை விவரிக்க முருகவேள் எடுத்திருக்கும் முயற்சியும், அதன் பின்னுள்ள உழைப்பும் அபாரம். நாவலில் இழையோடும் கருப்பையும் அதனால் வந்த கசப்பையும் குறிக்கும் விதமாக, நாவலின் அட்டைப்படம் கருப்பு வண்ணத்தில் அமைந்திருப்பது சிறப்பு.

சொல்லிய வண்ணம் செயல்.

 

“அஞ்சல் வழியில் இளங்கலை வணிகவியல் படிக்கப் போகிறேன்” என அப்பா சொன்னபோது, அவருக்கு வயது 47.

அப்பா அப்படித்தான். கோ ஆப்பரேட்டிவ் டிப்ளோமா முடித்துவிட்டு, நூற்பாலை ஒன்றின் பண்டகசாலையில் விற்பனையாளராக இருந்தவர். தனது மேலாளர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார், அந்த இடத்துக்குத் தன்னைத் தகுதி உள்ளவனாக ஆக்கிக் கொள்ளும் முயற்சி அது. சொன்னது போலவே, தேர்வில் வெற்றி பெற்று மேலாளராக ஆகிவிட்டார்.

“பிஞ்சு போன செருப்பை அதைத் தைப்பவரிடம் கொடுத்துவிட்டு அவரைக் கூர்ந்து கவனிச்சிருக்கியா? அதைத் தைப்பதில்தான் தன் முழு வாழ்க்கையுமே இருக்கிறது என்பதுபோல் ஈடுபாட்டுடன் இருப்பார். தைத்து முடித்ததும் செருப்பின் பிற வார்களையும் சோதிப்பார். அதன் பிறகு உன்னுடைய இன்னொரு கால் செருப்பையும் வாங்கி சோதிப்பார். உன்னிடம் கொடுத்துப் போடச்சொல்லி, உன் கால்களில் அது சரியாகப் பொருந்துகிறதா என்பதைக் கவனிப்பார். சட்டென உன் முகத்தையும் பார்ப்பார் பாத்திருக்கியா? அதுதான் செய் நேர்த்தி, தான் செய்த வேலை மீதான நம்பிக்கை.”

“அது மாதிரித்தான் நம்ம வேலாயுதமும், முடி வெட்டிமுடித்ததும், நாம காசைக் கொடுக்கும்போது, மீண்டும் ஒரு முறை இருபக்கமும் பார்ப்பார். கிருதா ஒரு ரோமக்கணம்தான் வித்தியாசம் இருக்கும், அதையும் சரி பண்ணித் திருப்தியாகிக் கொள்வார். இந்த செய்நேர்த்தி கைகூடினாப் போதும் மற்றெதெல்லாம் உனக்கு சுலபமாக் கைசேரும்.”

சொல்லுவதோடு நில்லாமல். செய்தும் காட்டினார். அவர் மேலாளராகி, ஓய்வு பெறும்வரை, திண்டுக்கல் மாவட்டத்திலேயே சிறந்த கூட்டுறவு பண்டகசாலை என்ற விருதைத் தொடர்ந்து பெற்றார்.

இன்று அப்பாவின் 16ஆவது நினைவு நாள்.