Month: August 2009

606 டேக்குகள் வாங்கிய விளம்பரப் படம்

ஒரு விளம்பரத்துக்காக என்ன பாடுபடுகிறார்கள் எனப் பாருங்கள்.

விளம்பரங்கள் பற்றிய தொடக்க நிலைப் புரிதலுக்கு லக்கி எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்ற புத்தகம் படிக்கலாம். சென்னை வந்தால் லேண்ட் மார்க்கில் உள்ள புத்தகங்களை , குறிப்பாக விளமபர சம்பந்த புத்தகங்களை மேய்வது வழக்கம். அலிக் பதம்ஸீ (லிரில் சோப், சர்ஃப் லலிதாஜி, காமசூத்ரா காண்டம்கள் போன்ற புகழ் பெற்ற விளம்பரங்களை உருவாக்கியவர்) எழுதிய டபுள் லைப் என்ற புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

தண்டோரா போன்றோர் விளம்பரத்துறையில் தங்கள் அனுபவங்களைப் பதிவாக எழுதினால் என்னைப் போல் வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் கத்துக் குட்டிகளுக்கு உதவியாக இருக்கும்.

ஐஸ் கிரீம் விளம்பரங்கள் எப்படி எடுக்கப் படுகின்றன என்ற வீடியோ ஒரு முறை பார்த்திருக்கிறேன். அவ்வளவு சூடான பல்புகளைப் போட்டு எரிக்கும் இடத்தில் ஐஸ் கிரீம் எப்படி உருகாமல் இருக்கிறது என்று தெரியுமா?

உண்மையில் அது ஐஸ்கிரீம் அல்ல. தெர்மோக்கோல் துகள்கள்; வர்ணம் பூசப்பட்டவை. ஐஸ் கிரீமிலிருந்து பறக்கும் புகை சிகரெட் புகை எனத் தெரிய வரும்போது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

.

Advertisements

பழங்குடி ஓவியங்கள் – காந்திராஜன்

நமது முன்னோர்கள் அதாங்க பழங்குடிகள் வரைந்த ஓவியங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆண், பெண் மற்றும் விலங்கினங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறியீடு வைத்து வரைந்திருக்கிறார்கள். இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா?

இருக்குங்க. தென் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களிலும் அதே சமயத்தில் வரையப்பட்ட தென்னாப்ரிக்கப் பழங்குடிகள் வரைந்த ஓவியங்களும் கிட்டத்தட்ட ஒரே சாயலையும் ஒரே குறியீடுகளையும் கொண்டிருக்கிறது. எந்த வித தகவல் தொடர்பு வசதிகளுமற்று இருந்தகாலத்தில் இந்த ஒற்றுமை ஆச்சர்யகரமானது.


இவ்வித பழங்குடி ஓவியங்களை மீட்டெடுப்பதில் இந்தியாவில் ஈடுபட்டுள்ள மூவருள் தமிழகத்தைச் சேர்ந்த காந்திராஜன் முக்கியமான் ஆளுமை. அவர் இதுவரை தேடியெடுத்த ஓவியங்களைப் பார்வைக்கு வைக்கிறார். ஆகஸ்ட் 27 முதல் நடக்கவிருக்கும் மதுரை புத்தகக் கண்காட்சியில் இவற்றைப் பார்வையிடலாம்.

இது குறித்து நரன் எனக்கு அனுப்பிய மடல்

இந்தியமரபு ஓவியமீட்டெடுப்பின் மிக முக்கிய ஆளுமை K.T.காந்திராஜன் .
ஓவியர் , கலை வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர்.
இந்தியாவின் மலைபகுதிகளிலும் , கோவில் நகரங்களிலும் ,குகை புறங்களிலும் சுற்றி அலைந்து அங்கிருக்கும் சுவரோவியங்களையும் , பாறை ஓவியங்களையும் ,ஆதி பழங்குடி ஓவியங்களையும் , நிறைய மீட்டெடுப்பு செய்திருக்கிறார் .

அவற்றை ஒரு குறும்படமாகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் .தற்பொழுது
மதுரையில் நடக்கவிருக்கும் புத்தக கண்காட்சி வளாகத்தில் “நான் மாட கூடல் ” அரங்கில் அவரின் ஒருங்கிணைப்பில் புகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி நடக்கவிருக்கிறது .

தமிழ் ஓவியம் மற்றும் மரபு சூழலில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும் .
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள் .
தொடர்புக்கு

K.T.காந்திராஜன்-9840166590

தகவலுக்கு நன்றி நரன்.

.

பயோடேட்டா – பரிசல்காரன்


பெயர் : ”பரிசல்”காரன்

இயற்பெயர் : கிருஷ்ணகுமார்

இதரப் பெயர்கள் : ஓடக்கார மாரிமுத்து, 24 X 7, Bond, Trend Setter, அனந்த்பாலா

சமீபத்திய பெயர் : கார்க்காரன்

வயது : காதலிக்கும் வயதல்ல

தொழில் : பதிவெழுதி பிறர் எதிர்ப்பதிவு எழுத விஷய தானம் செய்வது

உப தொழில் : ஏற்றுமதி நிறுவனத்தின் ஆல் இன் ஆல் அழகு ராஜா

நண்பர்கள் : பகிரங்கக் கடிதம் எழுதாதவர்கள்

எதிரிகள் : ஊருக்குள் இல்லை

சிறு வயது ஆசை : எழுத்தாளராக (வீட்டுப்பாடம் தவிர்த்து)

தற்போதைய ஆசை : பத்திரிக்கையில் பெயர் வர (திருமணப்பத்திரிக்கை அல்ல)

சமீபத்திய ஏமாற்றம் : குசும்பனின் தமிழ்மண மெயில்.

ஏக்கம் : அழகிய யுவதிகளை சைட் அடிக்க

துக்கம் : அவர்கள் அங்கிள் என அழைப்பது.

ஆசைப்பட்டது : சினிமாவில் கதாநாயகனாக

ஆனது : உமாவின் நாயகனாக

கலக்க நினைத்தது : விளம்பரத்துறையில்

கலக்கிக் கொண்டிருப்பது : மீராவுக்கும் மேகாவுக்கும் ஹார்லிக்ஸ்

சமீபத்திய எரிச்சல் : நட்சத்திர வாரத்தில் எழுத நேரம் கிடைக்காமல் போனது

நீண்ட நாள் எரிச்சல் : அட்வைஸ் ஆறுமுகத்தின் எதிர்ப்பதிவு

சமீபத்திய சாதனை : குறுகியகாலத்தில் 2.5 லட்சம் ஹிட்டும் 425 பாலோயரும்

நீண்ட நாள் சாதனை : 93 லிருந்து எழுத்தாளராக ஏமாற்றிக் கொண்டிருப்பது

அப்படியே இங்க ஒரு வாழ்த்தையும் சொல்லிட்டுப் போங்க.

.

கதம்பம் – 20-08-09இரு சக்கர வாகனங்களில் ஒரு குடும்பமே பயணம் செய்கையில் மனம் பதைபதைக்கும் அதிலும் பின் சீட்டில் கடைசியாக இருக்கும் பெண் (பெரும்பாலும் குடும்பத்தலைவி) பாதி சீட்டிலும் மீதிக் கம்பியிலும் அமர்ந்து சாகசம் செய்வது பயமுறுத்தும். சற்றுப் பருமனான பெண்மணிகளின் நிலை வருத்தமுறச் செய்யும்.

அடர்மழை பெய்யும் நாளொன்றில் நான் கண்ட காட்சி இது. இரண்டாவதாக அமர்ந்திருக்கும் பெண்மணியின் இருகைகளிலும் தூக்க முடியாத அளவுக்கு பைகளை வைத்துக் கொண்டு எந்தப் பிடிமானமும் இல்லமல் பயணிப்பதைப் பாருங்கள். எதற்கிந்த சாகசம்?

************************************************************************************

வாராந்திர இதழ்களைப் படிக்கும்போது சில விஷயங்கள் சட்டென மனதில் பதிந்துவிடும். அப்படிப் படித்த ஒன்று இங்கே.

**********************************************************************************

மனிகண்டன் சென்னையிலிருக்கும் மென்பொருள் வல்லுனர். மெரினாக் கடற்கரையில் நண்பர்கள் சிலருடன் மாதம் ஒரு நாள் கூடி நல்ல கவிதைகள் படிக்கிறார்கள். அவர் எழுதியதில் இது எனக்குப் பிடித்த ஒன்று

***********************************************************************************

பயணங்கள் எபோதும் தன்னுள் ஆச்சர்யத்தைப் பொதிந்து வைத்திருக்கும். கற்றுக்கொள்ள விஷயங்களைக் கல்பதருவாகத் தந்தவண்ணமே இருக்கும். அப்படியான ஒரு மும்பை நோக்கிய பயணத்தில் எடுத்த படம் இது. பெற்றோர் இருவருக்கும் வயது 45 க்கு மேல் இருக்கும். சிகிட்சை மேற்கொண்டு பிறந்த குழந்தை. குழந்தையின் கண்களைப் பாருங்கள். என்ன ஒரு எக்ஸ்பிரஸிவ் கண்கள்.

*************************************************************************************
அவள் விகடனில் சில சமயம் நல்ல கவிதைகள் வரும்.


************************************************************************************

பிரபல பதிவரின் அக்காள் மகள் இந்தக் குழந்தை. யாரெண்று தெரிகிறதா? கண்களைப் பார்த்தால் சொல்லி விடலாம்.

மருதமலையில் மொட்டையடித்தபின் சூப்பராகக் கொடுத்த போஸ் இது.

***********************************************************************************

பரிசல்காரனின் பெயர்க்காரணம் புரிகிறதா?

கிரி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து படகோட்டும்போது கிளிக்கியது

டிஸ்கி : எல்லாமே என்னுடைய K750i செல் போனில் எடுத்த படங்கள். பிக்காஸோவில் கொஞ்சம் நகாசு வேலைகள் செய்திருக்கிறேன். எழுத ஒன்றும் மேட்டர் இல்லை என்றால் இப்படித்தான் பெரிய எடுத்தாளர்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) ஆகணும்.
.

பயோடேட்டா – அனுஜன்யா

பெயர் : யூத்

உண்மைப் பெயர் : அனுஜன்யா

வயது : கல்லூரிக்குப் போகும் வயது அல்ல

தொழில் : கவிதை எழுதி டெரராக்குவது

உப தொழில் : 8 மணி நேர வங்கி வேலைக்கு 7 மணி நேரம் பிரயாணம் செய்வது

பிடித்தது : ஐ பாடில் பாட்டுக் கேட்க

பிடிக்காதது : தங்கமணியிடம் பாட்டுக் கேட்க

எழுத முடிந்தது : சிற்றிதழ்களில் கவிதை

எழுத முடியாதது : எல்லோருக்கும் புரியும் கவிதை

சமீபத்திய ஆசை : சிறுகதைப் பட்டறையில் கலந்து கொள்ள

நெடுநாள் ஆசை : பதிவர்களுடன் சுற்றுலா செல்ல

சமீபத்திய சாதனை : நவீன விருட்சத்தில் கதை

நீண்ட கால சாதனை : யூத் போல பாவ்லா

சமீபத்திய ஏமற்றம் : உரையாடல் 20ல் இல்லாதது

நீண்டகால ஏமாற்றம் : யூத் என எவரும் நம்பாதது

.

ஊஞ்சலாட்டம்

கை மீறிச் சென்ற காரியங்களின்
எதிர்மறை விளைவுகள்
துக்கம் கவியச் செய்கின்றன
பெருமழைக்கு முன்னான
கருமேகம் போல்

வார்த்தைகளின் கூர்மையில்
காயம்பட்டுச்
சிந்தும் ரத்தத்துளிகள்
வரைகின்றன
யாருக்கும் புரியாத ஓவியங்களை

என்றாலும்

கடந்து செல்பவளின்
இடுப்புக் குழந்தை
கண்விரிய சிரித்த
கையசைப்பிலும்

குறுகலான சந்தில்
ஸ்கூட்டியில் எதிர்ப்படும்
பெண்ணின் குழப்ப முகபாவங்களும்
குறுகுறுப்புடன் சொல்லும் சாரியும்

சைடு ஸ்டாண்ட் போட்ட பைக்கின்
கண்ணாடியில் தலை சீவும்
ஒற்றைக்கால் இளஞனின்
சந்தோஷமும்

என
வேறொரு உலகமும் விரிகிறது

நம்பிக்கைக்கும்
அவநம்பிக்கைக்கும்
இடையேயான
ஊசலாட்டமாகக்
கடக்கிறது வாழக்கை.

.

கதம்பம் – 13-08-09

நவீன விருட்சம் இந்த இதழ் புதுக்கவிதை தொடங்கி 50 ஆவது வருட இதழாக மலர்ந்திருக்கிறது. அடியேனின் கவிதை – தக்கைகள் அறியா நீரின் ஆழம் – அதில் பிரசுரமாகி இருக்கிறது. எனவே எனக்கும் ஒரு பிரதி அனுப்பியிருக்கிறார் அழகிய சிங்கர்.

இரண்டாம் பக்கத்தில் முதல் படைப்பாக பிரசுரமாகி இருப்பது அனுஜன்யாவின் பிக்பாக்கட் கதை. மிக மகிழ்ச்சியாக இருந்தது. அச்சில் வாசிக்க மிக நன்றாக இருந்தது. வலையில் வாசிக்கும்போது ஏதோ ஒன்றை இழந்தாற்போலத்தான் இருக்கிறது.

ஜெ மோ வலையில் எழுதுவதை தொகுப்பாக தற்பொழுது நிகழ்தல் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகமாக வாசிக்க அருமையான அனுபவம்.

*********************************************************************************

சென்றவாரம் குடும்பத்துடன் கொச்சி, குருவாயூர் ஒரு அவசரச் சுற்றுலா சென்றிருந்தேன். கொச்சியின் தட்பவெட்ப நிலை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். 2 மணிக்கு நல்ல வெயில் 2.05க்கு பலத்த மழை சாலையில் நடமாட்டமே இல்லை. 2.10 சுத்தமாக வெறித்து விட்டது வெயிலும் அடிக்கிறது. ஸ்விட்ச் போட்டாற்போல சாலையில் ஜன நடமாட்டம்.

மேரி, ஆனி, ஜார்ஜ், எலிசி, விக்டோரியா, டோமினி, ரெஜினா, அன்னி, ஜோய், ராபர்ட் என பத்துக் குழந்தைகள் பெற்று வளர்த்தும் என்னை எடுத்து வளர்த்த ரோசம்மா விதைத்த விதைதான் மலையாளக் கரையோரம் ஒதுங்கச் சொல்கிறதோ என்னவோ?

கொச்சியிலிருந்து குருவாயூர் சென்று திரும்பினோம். குருவாயூரில் அருமையான தரிசனம். குழந்தைக் கிருஷ்ணனைப் பார்த்தாலே மனதுக்கு ஒரு தெம்பு வந்து விடுகிறது. கேரளாவில் செட்டில் ஆக வேண்டுமென்ற ஆவல் வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.

*********************************************************************************

ஏர்டெல்லின் விளம்பரங்கள் எப்போதும் தரமிக்கவையாகவும் கற்பனைவளமிக்கதாகவும் இருக்கும். காகிதக் கப்பலை மழையில் நனையாமல் காப்பாற்றும் குழந்தைகள் விளம்பரம் நல்ல கவிதை.

அதே போல டாடா டோகோமோவின் விளம்பரங்களும் நன்றாக இருக்கிறது. கோல் போட்டவன் குதூகலம் சங்காக மாறுவது நல்ல நகைச்சுவை.

உடனே ஒரு லோக்கல் விளம்பரம் வந்து கழுத்தறுப்பதுதான், சென்னைவாசிகளின் பாஷையில், படா பேஜாராக் கீது மாமே.

*********************************************************************************

யாத்ரா, வாசு, நந்தா, சேரல், ரெஜோ, முகுந்த், முத்துவேல் போன்றோர்கள் நல்ல கவிதைகள் படைத்துவரும் அதே நேரத்தில் கவனிப்பையும் பெற்றுவிட்டார்கள். அவர்களைபோலவே நல்ல கவிதைகள் எழுதிவரும் கார்த்தி (அல்லது கார்ட்டின்?) எழுதிய இக்கவிதை என்னைக் கவர்ந்த்த்து.

வீட்டில் அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தாலும் மேஜை நிறைய வார, மாத இதழ்கள் இருந்தாலும் சுண்டல் அல்லது வேர்க்கடலை மடித்திருந்த காகிதத்தைத் திருப்பித் திருப்பிப் படிப்பது ஒரு சுகம். அதைத்தான் பேசுகிறது இக்கவிதை.


கூம்புகளுக்குள்

நீங்கள்
பாலிதீன் பைகளைப்
புறக்கணித்து விட
இன்னுமொரு காரணம்
இந்த வேர்கடலைப் பேப்பர்கள்

கூம்புகளைப் பிரிப்பதில்
மட்டும் கவனமிருக்கட்டும்

கவிதையோ
கதை போன்றவொன்றோ
இருக்கலாம்
இரண்டு பக்கங்களுக்குள்

தீக்குளித்து
என்றோ செய்தியானவன்
எண்ணெய்த் தீற்றலோடு
தென்படலாம்

கடைசி வார்த்தை மட்டும்
யாருக்கோ சிக்காத
குறுக்கெழுத்துப் புதிரொன்றும்
சிக்கிக் கொள்ளலாம்

ஆகவே
அடுத்த முறையேனும்
வீசியெறியாமல்
விரித்துப் பார்த்துவிடுங்கள்

கெட்டியான பேப்பரென்றால்
அட்டைப் பட நாயகிக்கும்
அதிர்ஷ்டமுண்டு..
பின்பக்கத்தில்
சொப்பனஸ்கலிதம் தீர்க்கும்
விளம்பரம் இல்லாதிருப்பது உத்தமம்.

– கார்த்தி என்

*********************************************************************************

கேரளாவைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் வசிப்பது அமெரிக்காவில். அங்கு நடந்த ஒரு போட்டியில் 10 நிமிடத்தில் 38 ஹாட் டாக் சாப்பிட்டு முதல் பரிசைப் பெற்றார்.

கேரளாவில் அதைச் செய்தியாக வெளியிடும்போது 10 நிமிடத்தில் 38 நாய்களைச் சாப்பிட்டார் என மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். செய்தியை வெளியிட்டது கம்யூனிஸ்ட் தோழர்களின் அதிகாரப்பூர்வப் பத்திரிக்கை.

.

ஆதி பயோடேட்டா


பெயர் : ஆதி
பழைய பெயர் : தாமிரா
வயது : தொப்பை போடும் வயது அல்ல
தொழில் : பதிவு எழுதுவது
உபதொழில் : மற்ற நேரங்களில் அலுவலகம் செல்வது
நண்பர்கள் : பாலோயர்ஸ், பின்னூட்டம் இடுபவர்கள்
எதிரிகள் : பின்னூட்டம் இடாதவர்கள்
பிடித்த வேலை : தங்கமணி பதிவு எழுதுவது

பிடிக்காத வேலை : மேலதிகாரி செய்யச் சொல்லுவது

பிடித்த உணவு : ரமா சமைப்பது (வேறு வழியில்லாததால்)

பிடிக்காத உணவு : இனிமேல்தான் கண்டுபிடிக்கணும் (தொப்பையே சாட்சி)
விரும்புவது : நண்பர்களுடன் அரைட்டை அடிக்க
விரும்பாதது : ரமா கடைக்குப் போகச் சொல்லுவது

புரிந்தது : திருமணத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பது
புரியாதது : எப்படித்தான் மத்தவனெல்லாம் சமாளிக்கிறான் என்பது
சமீபத்திய எரிச்சல் : சுபாவை சமாளிக்க முடியாதது
நீண்டகால எரிச்சல் : ரமாவிடம் பல்பு வாங்குவது(அடிக்கடி)
சமீபத்திய சாதனை : கார்க்கியை வைத்து குறும்படம்
நீண்டகால சாதனை : கேமராவை வைத்துப் படம் காட்டுவது

டிஸ்கி : இதையும், இதையும் படிங்க.

ஆங்கோர் ஏழைக்கு


சிவராமனுக்கும், சுந்தருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். எத்தனை பெரிய காரியத்தைச் செய்திருக்கிறீர்கள்! பாராட்ட வார்த்தைகள் இல்லை.

எழுத ஊக்குவித்ததுமட்டுமல்லாமல் அடுத்த போட்டிக்கு இன்னும் பலரைத் தயார் செய்திருக்கிறீர்கள். பின்னூட்டங்கள், பதிவுகள் மூலமாகப் பாராட்டுவதைத் தாண்டி இது நேரடி ஊக்குவித்தல்.

என் கதை(!?) தேர்வாகவில்லை எனினும் நான் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். வென்றவர்களில் பலர் என் நண்பர்கள். மீதிப்பேருடன் நட்பு பாராட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

குறிப்பாக ரெஜோ வாசன். உயிரோடை சிறுகதைப் போட்டியிலும் வென்றவருக்கு இது இன்னுமொரு சிறப்பு. என் கதம்பம் ஒன்றில் இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இன்னும் பல உயரங்களை அடைவார்.

தமிழன் கறுப்பி என்ற பெயரில் எழுதி வரும் காண்டீபராஜ் அறிமுகமானது தமிழ்பிரியன் மூலமாக. நல்ல நண்பர். மயக்கும் மொழி நடைக்குச் சொந்தக் காரர்.
காண்டீபன் தன்னுடைய பரிசுபணத்தை ஏழைக் குழந்தை ஒன்றுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கித் தரப் பயன்படுத்தச் சொன்னார். ஆகஸ்ட் மாதம் ஆகிவிட்டது எல்லாக் குழந்தைகளும் தேவையான நோட்டுக்களை வாங்கியிருப்பார்கள். மேலும் ரோட்டரி மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் மே மாதமே நோட்டுக்களை வழங்கி விடுகின்றன. அரசாங்கமே புத்தகங்களை இலவசமாக வழங்குகிறது. எனவே நல்லதொரு எளிய ஆங்கிலம்-தமிழ் அகராதி வாங்கிக் கொடுக்கலாம். 100 ரூபாய் அளவில் வாங்கினால் 15 குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். காலம் முழுவதும் பயனுள்ளதாக இருக்குமெனச் சொன்னேன். சரி எனச் சொல்லியிருக்கிறார்.

என் மனைவி வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மானவர்களுக்குக் கொடுக்கலாம். 15 பேருக்கு மட்டும் கொடுத்தால் மற்ற மாணவர்கள் ஏமாற வாய்ப்பிருக்கு. வேறு எவருக்காவது தங்கள் பரிசுப்பணத்தை இவ்வாறு உபயோகமாக்க என்ணம் இருப்பின் சிவராம்னுக்கும் எனக்கும் மெயில் அனுப்புங்கள்.

ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று கொடியேற்றியபின் பரிசளித்தால் குழந்தைகளும் மகிழ்வர் ஆசிரியர்களுக்கும் பரிசை வழங்குவதற்காக ஒரு நாளை ஒதுக்க வேண்டிய அவசியமிராது.

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டும், கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்களும்.

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்

காண்டீபராஜுக்கு என் தனிப்பட்ட நன்றி கலந்த வணக்கங்கள்.

பி.கு : சென்னையிலிருக்கும் பதிவர்கள் பதிப்பகத்தாரிடம் பேசி ச்லுகை விலைக்கு அகராதியை வாங்கித் தர முடிந்தால நலம். அதன் பலன இன்னொருக் குழந்தைக்கு புத்தக வடிவில் அளிக்க முடியும். 20% தள்ளுபடி கிடைத்தால் 3 புத்தகங்கள் மேலும் வாங்க முடியும்.

.

ஓடினால்தான் ஆறு. தேங்கினால் குட்டை.

எனது மக்கட் பதர் பதிவில் நர்சிம் இட்டிருந்த பின்னூட்டத்தில் ஜெயிக்க வேண்டுமென்ற வெறி இருக்கும் எவனும் ஜெயித்து விடுவான் என்று எழுதியிருந்தார். அது முற்றிலும் உண்மை. குறைந்த வசதிகளுக்குச் சமரசம் செய்து கொள்ளாமல் அடுத்த இலக்கை நோக்கிச் செல்பவர்களுக்கு வெற்றி அருகில்தான்.

ஓடினால்தானே ஆறு? தேங்கியிருந்தால் வெறும் குட்டை தானே?

நான் அந்தப் பதிவில் சொல்ல வந்தது அவர்களது அறியாமை மற்றும் உடல் வளையாமைதான். எந்த வேலையானாலும் அதில் முன்னேற நிச்சயம் ஒரு வழியிருக்கும். அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அது முன்னேற முயற்சி செய்பவனுக்குத்தான் தென்படும்; மற்றவனுக்கு அது முட்டுச்சந்துதான்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களைப் பின்னிருந்து செலுத்துவது வெற்றி பெற வேண்டுமென்ற வெறி ஒன்றே. இதற்கு பிரபலங்களை எடுத்துக்காட்டாகக் கொள்வதைவிட நம் சக பதிவர் தமிழ் பிரியன் – ஜின்னா அவர்களின் வாழ்க்கையே நல்ல பாடம்.

அவரது பதிவிலிருந்து

1996 ஆவது வருடம் +2 எனப்படும் மேல்நிலைத் தேர்வை எழுதி 70% க்கு கொஞ்சம் குறைவாக மதிப்பெண்களைப் பெற்றிருந்தேன். அதற்கு அடுத்த என்ன படிக்கலாம் என்று தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டு திரிந்து கொண்டிருந்தேன். அப்ப தான் வீட்டில் பெரிசா வெடி குண்டு ஒன்றைப் போட்டார்கள்… படிச்சு கிழிச்சது வரை போதும், அடுத்து படிக்கவெல்லாம் ‘வெள்ளையப்பன்’ இல்லைன்னு…

என்னடா இது ஏதேதோ கனவு கண்டோமே எல்லாமே புட்டுக்கிச்சா என்று கவலையுடம் இருக்க வேண்டி வந்தது. வீட்டையும் குறை சொல்ல முடியாது., அப்ப சூழ்நிலை அப்படி… சகோதரிக்கு அப்போது தான் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தோம். செலவுகள் அதிகமாகி வீட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது.

ஆனாலும் எங்காவது இலவசமாக படிக்க வாய்ப்பு இருக்குமான்னு தெரிந்த இடங்களில் கேட்டுப் பார்த்தோம். ஏதாவது ITI, பாலி டெக்னிக்கிலாவது படிக்க முயற்சி செய்தாலும் எல்லாமே சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்து கொண்டிருந்தது. பாலிடெக்னிக்கில் கூட செமஸ்டர் பீஸ், ஹாஸ்டல் பீஸ், போக்குவரத்து செலவு என்று முழி பிதுங்கி விடும் என்று தெரிந்தது. எனவே படிப்பை துறக்க வேண்டி வந்தது.

அதே போல் தம்பிக்கும் சில காரணங்களால் படிப்பை நிறுத்த வேண்டி வந்தது. (தம்பி, தற்போது 26 வயதில் 10 வது பரீட்சை எழுதுகிறான். பெருமையாக இருக்கிறது). 1996 ஜூலையில் 18 ஆயிரம் முதலீட்டில் எனக்கும், எனது தம்பிக்கும் சேர்த்து ஒரு பெட்டிக் கடை போல் அப்பாவால் வைத்து தரப்பட்டது. படிப்பைத் தொடர இயலாத சோகத்துடன் கடையை நடத்தத் தொடங்கினோம். ஓரளவு வீட்டுச் செலவை தாக்குபிடித்து கடை நடந்தது. இது 1997 ஜூலை வரை தொடர்ந்தது. இதற்குள் படிப்பின் வாசம் முழுவதுமாக நீங்கி இருந்தது.

அப்போது தான் அந்த திருப்புமுனை ஒரு இன்லேண்ட் லெட்டர் வடிவில் வந்தது. அதை எழுதி இருந்தது எங்களுடைய தூரத்து உறவினர் மதிப்பிற்குரிய பீர் முகம்மது அவர்கள். (எனது பாட்டிக்கு மாமா மகன்) தொலைவில் உள்ள ஒரு ஊரில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவரது பள்ளியில் நடக்கும் ஒரு கேம்பஸ் இண்டர்வியூ பற்றி எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில் சுருக்கம் இதுதான்.

வளைகுடாவில் இருக்கும் தமிழர்களால், தமிழர்களைக் கொண்டு, …………களுக்காக நடத்தப்படும் ஒரு நிறுவனம் +2 வரைப் படித்தவர்களைத் தெரிவு செய்து இலவசமாக ஒரு வருடம் தொழிற்கல்வியை இந்தியாவில் கற்றுக் கொடுத்து, வளைகுடாவில் உள்ள தனது நிறுவனத்தில் வேலையும் தரும். இலவசமாக தொழிற்கல்வி கற்றுத் தந்து, இலவ்சமாக அழைத்துச் செல்வதால் குறைந்த ஊதியத்திற்கு ஏழு ஆண்டுகள் பணி செய்ய வேண்டுமென்பது முக்கிய நிபந்தனை.

இதில் நம்மைக் கவர்ந்தது இலவசக் கல்வி என்பது மட்டுமே. கடிதத்தில் நேர்முகத் தேர்வு நடக்கும் தேதி ஏதும் இல்லை. தொலைபேசவும் வாய்ப்பு இல்லாததால் உடனே கிளம்பி சென்றோம். நாங்கள் சென்ற அன்று தான் நேர்முகத் தேர்வு. சுமார் 25 பேர்களைத் தேர்ந்தெடுக்க 250 மாணவர்கள் இருந்தனர். எப்படியோ தட்டுத் தடுமாறி அதில் தேறினேன். அடுத்த ஒரு வருடம் ஒரு சிறப்பான கல்வி நிலையத்தில் கல்வி மற்றும் செய்முறைப் பயிற்சிகள். அனைத்திலும் முதலாக தேறி சாதனை வேறு..

கடையை தம்பியும், அப்பாவும் பார்த்துக் கொண்டனர். 1998 ஆகஸ்ட்டில் ஓராண்டு கல்வி முடிய செப்டம்பரில் விமானம் ஏறி துபாயில் இறங்கியாகி விட்டது. அப்போது வயது 19 + தான். அடுத்த 5 1/2 ஆண்டுகள் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலை. வேலை செய்த இடத்தில் ஒரு எகிப்து மருத்துவரின் உதவியால் கணிணியும் கற்றுக் கொண்டாகி விட்டது. (எனது மொக்கை பதிவுகளுக்கு கணிணி கற்றுக் கொடுத்தவரை காரணமாக்காதீர்கள்… 😉 )

இதற்குள் ஓட்டு வீடு கான்கிரீட் போட்ட வீடாகி இருந்தது. பின்னர் 4 மாத விடுமுறையில் இந்தியா. மீண்டும் 1 1/2 வருடம் என 7 ஒப்பந்த ஆண்டுகள் முடிந்தது. கான்கிரீட் போட்ட வீடு மாடி வீடானது. அதற்குப் பிறகு வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு வந்து திருமணம். பழைய ஊதியத்தை விட மூன்று மடங்கு ஊதியத்தில் புனித மெக்காவுக்கு அருகிலேயே புதிய வேலை……… வாழ்க்கை தொடர்கின்றது.

எங்கேயோ ஆரம்பித்து எங்கோ முடிந்து விட்டது………… நான் கருதும் திருப்புமுனை அந்த நல்லவரின் இன்லேன்ட் கடிதம்… மேலும் கணிணி கற்றுக் கொண்டது, வேலையில் வைத்திருந்த வெறி,

ஜின்னா தற்பொழுது இன்னொரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான அல்லா அவரை எப்பொழுதும் உடனிருந்து காக்கட்டும்.

என்னுடைய எழுத்துக்களெப்பொழுதும் நம்பிக்கை விதைகளை விதைத்த படியே இருக்க வேண்டுமென்பதில் நான் கவனமாக இருக்கிறேன். சென்ற பதிவுகூட அவர்களைக் குறித்த வருத்தமே தவிர அவநம்பிக்கை இல்லை. இவர்களுக்கு நாமென்ன செய்யப் போகிறோம் என்பதான ஒரு கேள்வியை எழுப்பத்தானே தவிர அவர்களை நிந்திக்க இல்லை.

வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது. அதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்பவன் வெற்றி பெறுகிறான்; வெறுமே புலம்புபவன் வீனாகிறான்.

பார்ட் டைமில் டிப்ளொமா, பி இ மற்றும் எம் ஈ படிப்பவர்களின் அனுபவங்களைத் தொகுத்தாலே போதும் நல்ல சுய முன்னேற்றக் கட்டுரைகள் கிடைக்கும்.

திண்ணியர்கள் எண்ணியாங்கு எய்துவரென்பதுதானே அய்யன் சொன்னது.

.