Month: December 2009

இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் (????)

.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்குத் தோழர்கள் இருவர்; எம்.பாலசுப்ரமணியனும், சண்முக சுந்தரமும். பெரும்பாலும் மூவரும் ஒருவர் வீட்டில் விளையாடுவதும் படிப்பதுமாகக் கழிந்த பருவம். அப்படி ஒரு முறை இருவரும் என் வீடு வந்திருந்த போது. கிராமத்திலிருந்து வந்திருந்த என் அத்தை (அப்பாவின் அக்கா) கேட்டார், ” நீ என்ன ஜாதிடா?”

பாதிச் சாப்பாடு தட்டில் இருக்க எழுந்து போனவன்தான் சண்முகம். அதன் பின் ஆண்டிறுதி வரை என்னுடன் அவன் பேசவே இல்லை. மேற்படிப்புக்கு அவன் வேறு பள்ளிக்கும் நான் வேறு பள்ளிக்கும் சென்றுவிட்டோம். அவன் என்ன ஜாதி என்பது பற்றிய அக்கறை ஏதுமற்றுத்தான் பழகினோம் என்றாலும் அத்தை விதைத்த அந்த விதை எங்களிடையே ஒரு விரிசலை ஏற்படுத்தி விட்டது.

அதைப்போலத்தான் இப்பொழுதும் வலையில் நடக்கிறது. பொதுவான கருத்துக்களை எழுதியும் பழகியும் வந்த நண்பர்கள் இப்பொழுது கட்சி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். If you are not with me, you are against me. என்ற சித்தாந்தம் இங்கு நன்றாகச் செல்லுபடியாகிறது.

மேலும் பின்னூட்டம் இடும் சிலரும் இதுதான் தக்க வாய்ப்பென்று தங்கள் மன வக்கிரங்களையும் இறக்கி வைக்க இது களம் அமைத்துத் தருகிறதென்ற அடிப்படைப் புரிதல் இரு சாரரிடமும் இல்லை என்பது மிக வருத்தமேற்படுத்துகிறது.

அடிப்படைப் பிரச்சினையை ஒட்டியும் வெட்டியும் பேசுவதை விட்டு,, கிளைவாய்க்கால்களை வெட்டி வெட்டி அவரவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க, ஆறு வற்றிப் போனதுதான் சோகம்.

நான் வீடு வாங்கப் பணம் போதாமல் தவித்த போது கை கொடுத்த பதிவர்களில் ஒருவர் இந்து, ஒருவர் முஸல்மான். கிட்டத்தட்ட 8 மாதங்களாகி விட்டன. இப்பொழுதுதான் ஒருவருக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறேன். இன்னொருவருக்கு இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும். அவர்கள் எதைப் பார்த்து எனக்கு உதவினார்கள்?. இத்தனைக்கும் ஒருவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை அப்பொழுது. இருவருமே நான் கேட்காமல் என் நிலையறிந்து தானாக முன் வந்து என் வங்கிக் கணக்கை வாங்கி பணம் அனுப்பினார்கள்.

நல்ல அறுசுவை விருந்தைப் பரிமாறி நடுவில் மலத்தையும் வைக்கும் உங்கள் நாகரீகம் அருவெறுப்பூட்டுகிறது எனக்கு. சலிப்பும் அயர்ச்சியும் மேலோங்குகிறது.

என்றாலும் உங்களைப் போன்றவர்களை இனங்கண்டு ஒதுங்கிப் போகவும் போலல்லாதவர்களை அறிந்து கொண்டு நட்பு பாராட்டவும் வாய்த்திருக்கிறது. எனக்கது போதும் எப்போதும்.

வாழ்க்கை மிகவும் அழகானது, அதை உணரும்போது. நாமே அதை வலிந்து சிக்கலாக்கிக் கொள்கிறோம்.

டிஸ்கி : இது என் போன்று எந்தக் கட்சியிலும் இல்லாத மிதவாதிகளுக்கு. மதவாதிகளுக்கு இங்கிடமில்லை.

டிஸ்கி 2: நன்றி முரளிக் குமார் பத்மனாபன்.

.

Advertisements

எத்தனையெத்தனை முத்தங்கள்

.

சென்ற வாரம் நண்பரொருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். மிக மகிழ்ச்சியாக இருந்தார். காரணம் அவருக்குப் பேத்தி பிறந்திருக்கிறாள். உச்சபட்ச மகிழ்ச்சிக்குக் காரணம் கேட்டத்தில் தன் வம்சச் சங்கிலி அறுபடாமல் அடுத்த தலைமுறை தொடர்கிறது என்பதே என்றார்.

பாட்டிகள் தாத்தாக்கள் பேரக்குழந்தைகள் மீது மிக அதிக அன்பும் பாசமும் உடையவராக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? குழந்தைகள் செய்யும் சின்னச் சின்னக் குறும்புகளை ரசித்தவாறே நாட்களை நகர்த்துவர். வாழ்க்கைப் போராட்டத்தில் சற்று நின்று இளைப்பாறி தன் குழந்தகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியாமல் போனதை சரிசெய்வது போன்றது அது.

பிரசவ வார்டுகளில் காத்திருக்கும் அப்பாக்களின் கண்களில் தெரியும் ஆர்வத்தை விட தாத்தா பாட்டிகளின் ஆர்வம் அளவுக்கதிகமாகவே இருக்கும். பேரக் குழந்தைகளுடனான வாழ்வில் தங்கள் பால்யத்தை மீண்டும் வாழ்வதாக உணருகிறார்கள். தன் வாழ்வை மீண்டும் ஒரு முறை வாழ்வதான ஒரு ஒப்புமை போல.

நண்பரின் பரவசத்தை வார்த்தைகளில் இங்கே வடித்திருக்கிறேன்.

அங்கங்கே ஞாபகம் இருக்கிறது
அம்மாவின் முத்தங்கள்
வேர்வையும்
மஞ்சள் வாசமும் கலந்து

அடுத்து வந்த முத்தங்களில்
வாசமேதுமில்லை வீச்சம்தான்
பூண்டு, வெங்காயம்
அங்கு விலாஸ் புகையிலை
சொக்கலால் ராம்சேட் பீடி
சில சமயம்
சாராயமும் கூட

பெப்பர்மிண்ட் வாசம்
கலந்திருந்தது
ஒண்ணாப்பில்
கலா கொடுத்த முத்தத்தில்

குட்டிக்குரா வாசமிருந்தது
13ல் பானு கொடுத்ததில்

பயமும் பதட்டமுமே
மிஞ்சியதால்
வாசம் மறந்துவிட்டது
17ல் ராதாவிடம்
வாங்கியதில்

மண்டபத் தனிமையில்
மாலை கழுத்திலாட
பட்டு சரசரக்க
மனைவியின் முதல் முத்தம்

தொட்டுத் தூக்கும்போதெல்லாம்
கிட்டிய பட்டு மகளின்
எச்சில் முத்தம்

இவை யேதும் ஈடாகா
என் மகளின் மகளின்
பால் வாசம் வீசும்
பச்சை முத்தத்திற்கு

.

கனவு இல்லம்

.

கார்னர் சைட் என்றார் அப்பா
கட்டாயம் வாங்கிடச் சொல்லி
வரைவோலை அனுப்பினேன்

வாஸ்து நாளொன்றைப் பார்த்து
வரச்சொல்லி தொலைபேசினார்

சேர்த்து வைத்த விடுமுறைகள்
செலவாகக் கிள்ம்பினேன்

பூமி பூஜை முடிந்த கையுடன்
வங்கி மேலாளருக்கொரு வணக்கம்

கேட்டது எல்லாம்(!?)
கொடுத்ததும் கிடைத்தது
வீட்டுக் கடன்

நல்லதொரு முகூர்த்த நாளில்
புது மனை புகு விழாவும் ஆயிற்று

எவ்வித மாற்றமுமின்றி
எப்போதும் போல்
கழிகிறது வாழ்க்கை
அம்மா வீட்டில் அவளும்
அரபு நாட்டில் நானுமாய்

pict courtesy :resortpointe.com

.

கதம்பம் – 25-12-09

.

நண்பர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

பைபிளில் எத்தனையோ வசனங்கள் இருந்தாலும் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

”நான் உன்னைக் கைவிடுவதுமில்லை உன்னை விட்டு விலகுவதுமில்லை”

கடவுள் உங்கள் கூடவே இருந்து உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

வேட்டைக் காரனை எல்லோரும் துவைத்துத் தொங்க விட்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தது நர்சிம்மின் பதிவு. பதிவைப் பார்த்ததும் அவரை அழைத்துப் பேசினால் மனிதர் பொங்கி விட்டார். ”அண்ணாச்சி இன்னும் எழுதனும்னு நெனைச்சிருந்தேன். எவனாவது விஜய் ரசிகன் (கார்க்கி அல்ல) போட்டுத்தள்ளிடுவானோன்னு பயம் அதான் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கேன்” என்றார். ஹும் அடக்கி வாசிச்சதே இவ்வளவுன்னா?

ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய் ஸ்டார், சூர்யா அப்பொழுதுதான் நடிகராகி இருக்கிறார். அந்தப் படத்திலிருந்து துவங்கி எவ்வளவு உயரம் வந்து விட்டார் சூர்யா. விஜய் தேங்கி விட்டார். சூர்யாவிற்குச் சொல்லிக்கொள்ளும்படி காக்க காக்க, கஜினி பொன்ற படங்கள் இருக்கையில் விஜய்க்கு அப்படி ஏதும் இல்லை என்பது கொடுமை.

எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதின் நஷ்டம் இதுதான்.

நாலு நாள் ஊருக்குப் போகிறேன் என்னை யாரும் தேடாதீர்கள் என ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார் ஆதி. இவரை யாரும் தேடமாட்டார்கள் என்ற புரிதல் கூட இல்லாத அப்பாவி பாவம். அதற்கு வந்த பதில் மின்னஞ்சல் அதைவிட சிரிப்பு.

“நாலு நாள்தானா???? அவ்வ்வ்வ்வ்வ்”

“இந்த நாலு நாள் இனிய நாலு நாள்”

கேபிளின் பதில் உச்சம். “ என்னாது ஊருக்கு போறீங்களா. அப்ப திரும்ப வரும் போது குறும்படத்தோட இல்ல வருவீங்கா.. மக்கா.. எல்ல்லாரும் அலர்ட்டா இருங்கா….. ஓடுங்க.. பின்னாடி ஒரு படம் வருது.. (இங்கிலீஷ் த்மிழ் டப்பிங் பட வசனத்தில் படிக்கவும்)”

ஆனாலும் ரெம்பத்தான் ஓட்டுறாங்கப்பா.

மக்களின் பேராசை டுபாக்கூர் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவதில் வெளிப்படுகிறது. ஆறே மாதத்தில் பணம் இரண்டு மடங்கு என்பதை எப்படி ந்ம்புகிறார்கள் எனத் தெரியவில்லை. எந்தத் தொழிலும் இது சாத்தியமில்லை.

சமீபத்தில் பணம் இழந்தவர் கொடுத்த வாக்குமூலம், “ ஆல்ட்டோ கார் வாங்கலாம்னு 2.5 லட்சம் வச்சிருந்தேன். இரண்டு மடங்கா கிடைச்சா ஹோண்டா சிட்டி கார் வாங்கலாமேன்னு அதுல போட்டேன். இப்ப உள்ளதும் போச்சு” அடப் பாவிகளா ஆசைக்கு அளவில்லையா?

ரூ 5000 கட்டி மெம்பர் ஆன பின் விளம்பரங்களை க்ளிக் செய்தால் பணம் கிடைக்கும் எனச் சொல்லி ஒருவர் சுருட்டியிருக்கிறார். ஆளுக்கு 5000 என்பதற்கு பதிலாக குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை X 5000 எனக் கட்டியிருக்கிறார்கள். இவர்கள் கிளிக்கிய விளம்பர நிறுவனங்களிடமும் நல்ல பணம் பெற்றிருக்கிறான் சுருட்டியவன். சுருட்டிய பணம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? 200 கோடி.

இந்த மாத மணல்வீடு (ஆசிரியர் ஹரி கிருஷ்ணன், ஏர்வாடி, குட்டப்படி அஞ்சல் மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம். செல் : 9894605371) இதழிலிருந்து கார்த்திகேயனின் கவிதை

மொன்னை மனசு

முற்றத்தில்
மழைநீர் கொஞ்சம்
மிச்சமிருக்கிறது

கத்திக் கப்பல்
செய்துதாவென்றது
குழந்தை

கத்தி எதெற்கென்றேன்

முட்டும் மீனை
வெட்டுவதற்கு என்றது
விழிகள் விரிய

முனை கொஞ்சம்
மழுங்கலாகச்
செய்து கொடுத்தி விட்டேன்

தெலுங்கானா பிரச்சினை நாள்தோறும் புதிய ரூபம் எடுக்கிறது. தேன்கூட்டைக் கலைத்தவனின் நிலைதான் மத்திய அரசுக்கு. இருந்தாலும் கார்க்கி ஹைதையிலிருந்து கிளம்பிய உடனே இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததில் ஏதும் கனெக்சன் இருக்குமோ?

சொர்க்கம் மதுவிலா?

.

எனது முந்தைய சஞ்சய் ஏ சி பதிவின் தொடர்ச்சி இது.

இராமச்சந்திரன் தமிழசிரியர் மட்டுமல்ல. தமிழறிஞர். அவரது பட்டிமன்றப் பேச்சுக்கு பழனியில் ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. என் போன்றோர் தமிழில் வாசிக்கவும், எழுதவும் ஆர்வமூட்டியவர்.

இருந்தும் அவரது இறுதிக்காலம் மெச்சும்படி இல்லை. யாருமற்ற வனாந்திரத்தில் இறந்து கிடந்தார். மூன்று நாட்களுக்கு எந்தத் தகவலுமற்று அலைமோதியதில், மாடு மேய்ப்பர் ஒருவர் கண்டெடுத்தார் அவரது உடலை. நாயும் நரியும் தின்றது போக மீதத்தை பொறுக்கி எடுத்து வந்து எரித்தோம்.

உழைப்பால் உயர்ந்த இரண்டு பெண்கள் . அவர்கள் டிப்ளமொ முடித்ததும் ஒரு பொறியியல் கல்லூரியின் லேபில் வேலைக்கு சேர்கிறார்கள். அங்கிருந்தவாறே பகுதி நேர படிப்பில் B.E. பின்பு M.E முடித்து Phd உம் முடித்து விட்டனர். ஒருவர் அதே கல்லூரியில் விரிவுரையாளர். இன்னொருவர் லண்டன் மாநகரில் உள்ள பொறியியல் கல்லுரியில் விரிவுரையாளர்.

இருவருமின்று செல்வத்தில் கொழித்தாலும் அவர்களது சொந்த ஊரில், வீதியில் நல்ல பெயர் கிடையாது. காரணம் அவர்களல்ல.

அது ஒரு கம்யூட்டர் தயாரித்து விற்கும் நிறுவனம். மும்பை தலைமையிடம். கடந்த காலாண்டு விறபனைச் செயல்பாடுகளையும் அடுத்த காலாண்டு திட்டங்களயும் பற்றி விரிவாகப் பேச ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரண்டு நாட்கள் நடக்கும் அந்நிகழ்வின் முதல் நாள் இரவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் விளைவாக அடுத்த நாள் ஒருவர் அந்நிறுவனத்திலிருந்து எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வெளியேற்றப் படுகிறார். இத்தனைக்கும் நல்ல விறபனையாளர் அவர். முதல் மூன்று இடத்தில் இருப்பவர். ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் அதிக இன்செண்டிவ் வாங்குபவர்.

இதைப் போல இன்னும் என்னற்ற சம்பவங்களைச் சொல்லலாம். உங்களிடமும் அநேகம் இருக்கக்கூடும். எல்லாச் சீரழிவுக்கும் காரணம் மது.

தமிழாசிரியர் எங்களெக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக இருந்தார். அவரது வகுப்புக்களை இழக்க யாரும் தயாராக இருந்ததில்லை. அவரைப் பற்றி ஒரு பதிவே தனியாக எழுதலாம் அந்த அளவுக்கு ஆளுமை உள்ளவர். இறுதியாக அவரை நான் பார்க்க நேர்ந்த காட்சி என் எதிரிக்கும் வேண்டாம்.

பெண்கள் இருவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். மிகுந்த சிரமத்திற்கிடையேதான் டிப்ளொமொ படித்தனர். ஒவ்வொரு முறை செமஸ்டர் கட்டணமும் பரிட்சைக் கட்டணமும் தாமதமாகத்தான் கட்டுவார்கள். இருவரது குடும்பமுமே அவர்கள் அம்மாக்களால்தான் நடத்தப் பட்டு வந்தது.

அவர்கள் தந்தையர் கிடைத்தப் பணத்தில் கிடைத்ததை குடித்து விட்டு கண்ட இடத்தில் விழுந்து கிடப்பார்கள். பலமுறை நானே என் தோள்களில் எடுத்து வந்து குளிப்பாட்டி இருக்கிறேன். இன்னும் ஒரு குடிகாரனின் மகளாகத்தான் பாவிக்கப் படுகின்றனர்.

அந்த விற்பனையாள நண்பர் மிகவும் இனியவர் பழகுவதற்கு. மரியாதையாகப் பேசுபவர். திருமணம் நிச்சயமாகி இருந்தது. ஆனாலும் போதைக்கு அடிமை. முதல் நாள் இரவில் நடந்த காக்டெயிலில் கட்டுப்பாட்டை இழந்து சேர்மனை அவன் இவன் எனப் பேசிவிட்டார். அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட மான இழப்பால் அவர் செல்லுமிடத்தில் எல்லாம் அவருக்கு இரண்டாம் தர மரியாதையே கிட்டியது.

குடிப்பது என்பது ஒரு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக ஆரம்பித்தாலும் முடிவென்னவோ திண்டாட்டமாக ஆகி விடுகிறது; பெரும் பாலோருக்கு. குடிக்கும்போது இருக்கும் மனநிலையைக் காட்டிலும் குடிக்கு முன்னதான மனநிலையும் முக்கியமானது. நான் பெருங்குடிகாரன் என்னால் 6 ரவுண்டு தாங்க முடியும் ஒரு புல் பாட்டில் அடிப்பேன் எனச் சவடால் விடும் ஆசாமிகள்தான் மூன்றாம் ரவுண்டிலோ அல்லது ஒரு குவார்ட்டரிலோ கவிழ்ந்து விடுகிறார்கள்.

குடிப்பதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையும் முக்கியமானது. சிலர் தங்கள் வீராப்பைக் காட்டக் குடித்துவிட்டு மொத்த நிகழ்வையும் துன்பகரமாக ஆக்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் இது வரை குடிக்க ஏதும் கிடைக்காதது போல குடிக்க ஆரம்பித்து எல்லோருக்கும் முன்னாடியே மட்டை ஆகி விடுகிறார்கள்.

குடிப்பது ஒன்றும் பாவமில்லை. ஆனால் நாம் குடிப்பதால் நம்மைச் சார்ந்தவருக்கு நாம் ஏற்படுத்தும் இழப்புகள்தான் முக்கியமானவை. பொருள், நேரம், அவமானம், உடல் நலம் என எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் சொல்வதால் நான் குடிப்பதில்லை என்ற நல்ல பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்;நானும் குடிகாரன். சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறேன். உங்களுக்கும் பயன்படலாம்.

1. குடித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டாம். நீங்கள் வீடு வந்து சேரும் வரை அவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும். உங்களை அனுப்பி வைத்தவர்களுக்கும் அதே அவஸ்தை. தங்கும் இடவசதி இருந்தால்தான் நான் குடிக்கவே ஆரம்பிப்பேன்.

2. குடித்துவிட்டு உங்கள் குழந்தைகளைக் கொஞ்சாதீர்கள். உங்களைப் பற்றிய மதிப்பில் மிகத் தாழ்ந்து விடுவீர்கள். நான் குடிப்பபேன் என என் குடும்பத்திற்குத் தெரிந்தாலும் குடித்த நிலையில் என்னை அவர்கள் ஒரு போதும் பார்த்ததில்லை.

3. நீங்கள் குடிப்பது உங்கள் மனைவிக்குப் பிடிக்கவில்லை எனில் அதைத் தொட்டுக் கூடப் பார்க்காதீர்கள். மணவாழ்க்கைக்கு உலை வைப்பதில் மதுவிற்குத்தான் முதலிடம்.

4. குடித்த பிறகு பெண்களுடன் பேசவோ அல்லது அவர்களைப் பார்க்கவோ வேண்டி இருப்பின், இரண்டில் ஏதாவதொன்றைத் தவிர்த்தல் நல்லது. குடிகார பிம்பம் பெண்கள் மனதில் இருந்து விரைவில் அகலுவதில்லை. நீங்கள் இறந்தாலும்கூட ஒழிந்தான் ஒரு குடிகாரன் என்பதான எண்ணம்தான் அவர்களிடம் இருக்கும்.

5. நிதானமிழக்கிறீர்கள் என்பதை உணர ஆரம்பித்ததும் உங்கள் நண்பரிடம் உண்மையைச் சொல்லி விடுங்கள். அதன் பிறகு அவர் கட்டுப்பாட்டில் நீங்கள் இருத்தல் நலம். இல்லையெனில் அவரவர் வேலையைப் பார்த்துச் சென்று விடுவர். நீங்கள் மப்புத் தெளியும் வரை அங்கேயே இருக்க வேண்டி வரும்.

6. எல்லா சரக்கையும் கலந்து அடிக்காதீர்கள். இருப்பதிலேயே அது மிகவும் ஆபத்தானது. அதன் பிறகு உங்கள் கட்டுப்பாட்டில் ஏதும் நடக்காது.

7. குடிப்பதற்கு மிக அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் மது கலக்கிறதோ அத்தனை வேகத்தில் நீங்கள் நிதானமிழக்கிறீர்கள். என் டிப்ளொமா கிளாஸ் மேட் மைக்கேல் கேவின் அலெக்ஸும் அவனது அப்பாவும் மது அருந்துவதைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் இருவரும் அருந்தியவாறே செஸ் விளையாடியது மட்டுமல்லாமல். ஆட்டம் முடிந்ததும் மைக்கேல் எங்கெல்லாம் தவறு செய்தான் எனபதை ஒவ்வொரு கட்டத்திலும் அவர் காய்களை அடுக்கி விவரித்த விதம் அலாதியானது. இருவரும் ஒரு புல் பாட்டிலில் முக்கால் வாசி காலி செய்திருந்தார்கள்.

நீங்கள் மதுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்களா அல்லது மது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதில்தான் இருக்கிறது உங்கள் வாழ்வும் தாழ்வும்.

அது ஏன்?


1. என்னதான் தங்கமணி சொல்லுறதுக்கு நாம நோன்னு சொன்னாலும் கடைசில அவங்க சொல்லுறதுதான் நடக்குது. நாமும் அதைத்தான் செய்கிறோம். தெரிந்திருந்தும் உடனே நோ சொல்கிறோமே; அது ஏன்?

2. என்னதான் நாம் பார்த்துப் பார்த்து செலக்ட் செய்தாலும் அது தங்கமனியிடம் இருக்கும் கலராகவோ அல்லது டிசைனாகவோ அமைந்து விடுகிறதே; அது ஏன்?

3. தங்கமணியின் பெற்றோர் வரும் நாள் பார்த்து அலுவலகத்தில் அதிக வேலையும் வீட்டுக்குத் தாமதமாக வரும்படி அமைகிறதே; அது ஏன்?

4. அலுவலகத்தில் சூப்பராகப் பொய் சொல்லி சமாளிக்கும் நாம் தங்கமணியிடம் சொல்லும் பொய்யின் சாயம் மட்டும் உடனே வெளுத்து விடுகிறதே; அது ஏன்?

5. சாதாரணமா தங்கமணி சொல்லும் 10 பொருட்களை வாங்கி வருகிறோம். ஆனா மறக்காம வாங்கிட்டு வாங்கன்னு சொல்லுறது மட்டும் மறந்து போயிடுதே; அது ஏன்.

6. நல்ல பசியோட வரும் அன்னைக்குப் பாத்து முடியலைங்கன்னு ஏதாவது சுலபமான ஐட்டம் சமைச்சு வக்கிறாங்க. ஆனா நல்லா ஒரு பிடி பிடிச்சுட்டு வர்ர அன்னைக்கு சூப்பரா சமைச்சு வைக்கிறாங்களே; அது ஏன்.

7. ஒவ்வொரு திருமண நாளன்றும், இனிமே தங்மணி எதிர்பார்க்கிற மாதிரி நல்ல ரங்கம்ணியா நடந்துக்கணும்னு சபதம் எல்லாம் எடுத்துட்டு, அடுத்த நாளே ஆகப்பெரிய பல்பு வாங்குறோமே; அது ஏன்?

8. தங்கமணி கையில இருக்க வரைக்கும் சமத்தா இருக்கிற நம்ம குட்டிமணிகள் நம்ம கைக்கு வந்ததும் கரெக்டா ஒன் பாத்ரூம் போறாங்களே; அது ஏன்?

9. ஒரு ப்ரண்ட அவாய்ட் பண்ணனும்னு நினைச்சுகிட்டு இருப்போம். அவன் வந்து கூப்பிட்டது, டக்குன்னு சட்டைய மாட்டிக்கிட்டு கிளம்பிடறமே; அது ஏன்.

10. அரைமணி நேரம் பதிவப் படிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டு பதிவப் படிக்க ஆரம்பிச்சா இன்னும் அரைமணி நேரம்னு நீட்டிட்டே போயி தங்கம்ணிகிட்ட திட்டு வாங்குறோமே: அது ஏன்?

.
.

வளர்சிதை மாற்றம்.


மு கு : இது ஒரு பொண்ணோட டைரிக் குறிப்பு. தேதி முக்கியமில்லை.

காலேஜ் ஃபர்ஸ்ட் டே இன்னைக்கு. ரெம்பப் பேமஸான காலேஜ். இடம் கிடைக்கிறதே பெரிசு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும்தான் நன்றி சொல்லணும். அவங்க மனசு நோகம நடந்துக்கணும். அவங்களுக்கு பேரும் புகழும் வாங்கித்தர்ற மாதிரி நடந்துக்கணும். ஐ லவ் மை மாம் அண்ட் டாட். தெ ஆர் சிம்ப்லி க்ரேட்.

காலேஜ் சேந்ததுக்கப்புறமா நேரமே இல்லை. அதான் எழுதலை. ஐ லைக் காலேஜ். ஸ்கூல் மாதிரி இல்லாம ஜாலியா இருக்கு. ஸ்கூல்ல எல்லாருக்கும் பயப்படணும். இங்க அப்படி இல்ல. ஜஸ்ட் டோண்ட் கேர். பசங்கதான் பாவம் இம்ப்ரெஸ் பண்ணப் பாக்குறாங்க.

இந்த லலிதா ரெம்ப மோசம். நான் ஸ்ரீராமுக்கு ரூட் விடுறேன்னு கலாட்டா பண்ணுறா. ம் நானாவது அப்படியெல்லாம் செய்யுறதாவது. ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ் அவ்வளவுதான். நான் யாரையும் லவ் பண்ண மாட்டேம்ப்பா. அப்பா படுற சிரமம் தெரியும். அம்ம படுற கஷ்டம் அதை விட அதிகம். எப்படித்தான் வேலைக்கும் போய்ட்டு வீட்டையும் மேனேஜ் பண்ணுறாங்களோ?

இன்னைக்கு ஒரு இண்டரெஸ்டிங்கான விஷயம் நடந்தது.ஸ்ரீராமும் நானும் காபி ஷாப் போனோம். ஸ்ரீராம் நல்ல பையன். தெளிவா இருக்கான். நல்ல கோல்ஸ் எல்லாம் வச்சிருக்கான். காதல் கீதல்ல எல்லாம் அவனுக்கு இண்ட்ரஸ்ட் இல்லை என்னை மாதிரியே. வீ ஆர் ஃப்ரண்ட்ஸ். ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்.

எல்லொரும் அன்ன ரெம்ப ஓட்டுராங்கப்பா. நான் ஸ்ரீராமோட சேர்ந்து சுத்துறது காதலாம். வேற எதுவுமில்லையாம். என்னாலயே நம்ப முடியல அவஙக சொல்லுறது. ஸ்ரீராமக் கேட்டா நிறுத்தாம சிரிக்கிறான். எங்க ஃப்ரன்ட்ஷிப்ப புரிஞ்சுக்க, நம்ப முடியாத அளவுக்கு எல்லொரும் இருக்காங்க. சுத்த மோசம். எனக்கு அப்பா அம்மாதான் முக்கியம்

ஸ்ரீராம் இன்னைக்குப் ப்ரபோஸ் பண்ணுனான். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஃப்ரண்ட்ஸா இருப்போம்னுதானே பழகுனான்.அப்புறமென்ன? எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு ஆனா லவ்வெல்லாம் பண்ணமாட்டேன். எனக்குப் படிக்கணும்.

வா செல்லம் வாவா செல்லம் பாட்டு எனக்கு ரெம்பப் பிடிக்குது ஏனோ தெரியலை.

ஸ்ரீராமப் பார்க்க பாவமா இருக்கு பழைய கலகலப்பு இல்லை அவங்கிட்ட. எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கான். எல்லோரும் நாந்தான் காரணம்ங்கிறாங்க. நான் என்ன பண்ணினேன். ப்ரண்ட்ஸ்னு சொல்லித்தானே பழகுனோம்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க.

ஒரு வேளை நாந்தான் தப்பு பண்ணீட்டேனோ? டேய் ஸ்ரீராம் சாரிடா.

ஒரு ஃப்ரண்ட் கஷ்டப் படுறத என்னால தாங்கிக்க முடியல. அதனாலும் நானும் சரின்னு சொல்லிட்டேன். ஸ்ரீராம் இப்பத்தான் பழைய ஸ்ரீராமா இருக்கான்.எனக்கு இப்பத்தான் நிம்மதி. என்னால ஒருத்தன் கஷ்டப் படுறத தாங்கிக்க முடியல.

ஆனாலும் இந்த ஸ்ரீராம் மோசம். பிரண்ட்ஸா இருந்தப்ப்ப இந்த சேட்டை எல்லாம் எங்க வச்சிருந்தான்னு தெரியலை? கொஞ்சம் வரம்பு மீறித்தான் பழ்குறான். ஆனா அதுதான் பிடிச்சிருக்கு.

டேய் ஸ்ரீராம், நாயே, பேயே, பன்னிக்குட்டி, புஜ்ஜிகுட்டி செல்லம். எப்படிடா என்னை இப்படி மாத்துனே? ஐ லவ் யு ஸ்ரீராம். யூ ஆர் சிம்ப்லி க்ரேட்.

டிஸ்கி : செமஸ்டர்ல கப்பு வாங்கி,அப்பா அம்மா காலெஜுக்கு வந்து ஹெச் ஓ டியப் பாத்து விஷய்ம் தெரிஞ்சு, படிப்பை நிறுத்தி, கதிரவனைக் கல்யாணம் பண்ணி கையில ஒண்ணு வயித்துல ஒண்ணுன்னு வழக்கமா முடிக்காம முடிவ உங்க கையில விட்டுட்டேன்.

கஞ்சி வரதப்பா

தனிக்குடித்தனம் போவதென்பது ஒரு கனவாகத் திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே தொடங்கி விடும். மெதுவாக சண்டை போட்டோ இல்லை சமாதானமாகவோ அந்த நாளும் வந்து விடும். வெளியூரில் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு வேறு வழியில்லை. ஆரம்பத்தில் குஷியாக இருந்து நாளாக நாளாக எப்படி மாறுகிறது ஓவ்வொரு நிலையிலும்? கீழ பாருங்க.

*****************************************************************************************

ஏங்க எத்தனை மணிக்கு வருவீங்க?

ஏம்ப்பா

இல்லை இன்னைக்கு முள்ளங்கி சாம்பார், அவரைக்காய் பொரியல், பச்சடி, மோர்க்குழம்பு, ரசம், தயிர் தாளிச்சு வச்சிருக்கேன். சீக்கிரமா சப்பிட வாங்க.

சரி சரி நீ என்ன பண்ணியிருந்தாலும் லன்ச் டயத்துலதான் வர முடியும்

*****************************************************************************************

எத்தனை மணிக்கு வருவீங்க?

ஏம்ப்பா?

இன்னைக்கு புளிக்க்குழம்பு வச்சு உருளைக்கிழங்கு, பொடிமாஸ், ரசம் பண்ணீருக்கேன் தயிர் இருக்கு. சாப்பிட வாங்க.

சரிப்பா வந்துடறேன்.

*****************************************************************************************
.
எத்தனை மணிக்கு?

ஏம்ப்பா?

இன்னைக்கு வத்தக் குழம்பு வச்சு அப்பளம் பொரிச்சிருக்கேன் தயிரும் ஊறுகாயும்.

சரிப்பா.

*****************************************************************************************

ஏங்க?

ஏம்ப்பா?

இன்னைக்கு ரசம் வச்சு பருப்புச் சட்னிதான் வச்சிருக்கேன்.

சரிப்பா.

*****************************************************************************************

வருவீங்களா?

ஏம்ப்பா?

இன்னைக்கு ஒன்ணும் பண்ணல. அங்கியே ஏதாச்சும் சப்பிட்டுக்குங்க.

உனக்கு?

நான் ரெண்டு தோசை ஊத்திக்கிறேன்.

சரிப்பா.

*****************************************************************************************

ஏங்க வரும்போது எனக்கும் சாப்பாடு வாங்கி வந்திருங்க.

*****************************************************************************************

இந்த நிலை எல்லோருக்கும் வந்தே தீரும் . என்ன ஆளாளுக்கு நேரம் வேறுபடும். தப்பிக்க முடியாது. அம்மா கைப்பக்குவத்தில் தயாராகும் சாப்பாட்டு ஐட்டங்கள் மனசிலாடுவதும் நாக்கில் எச்சில் ஊறுவதும் பக்க விளைவுகள்.

.

எட்டுத் திக்கும்


எங்கே? என்ற கேள்விக்கு
கிழக்கென்றான் முதலாமவன்
மறுதலித்த மற்றவன்
மேற்கென்றான்.

வடமேற்கென்றான்
வண்டியில் இருந்தவன்
இல்லை இல்லை
வடகிழக்கென்றான்
வாயில் பீடியுடன் ஒருவன்.

தென்மேற்காக இருக்குமோ
என சம்சயித்தார் தொந்தி ஆசாமி
தென் கிழக்காகவும் இருக்கலாமென்றார்
வட்டச் செயலாளர்.

வடக்கையும் தெற்கையும்
எவரும் சொல்லவில்லையெனினும்
ஒன்று புரிந்தது

இவர்களுக்கு
எங்கே என்று தெரியவில்லை;
கூடவே திசைகளும்.

டிஸ்கி : எந்த உள்குத்தும் இல்லை. அட நம்புங்கப்பா.

டிஸ்கி 2 : திட்டத் தோன்றினால் நிரந்தர யூத்(?!) அனுஜன்யாவைத் திட்டலாம் அவர்தான் தொலைபேசியில் அழைத்துக் கவிதை எழுதச் சொன்னவர்.

.

அவமானங்களைத் தின்று

உங்களிடம் முப்பதாயிரம் ரூபாய் பணம் இருக்கிறது 500 ரூபாய் நோட்டுக்களாக. வர வேண்டிய பழைய பாக்கி வசூலானது. பணத்தை திருப்பிக் கொடுத்தவரே உங்களை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து, பேருந்தில் ஏற்றி விடுகிறார். இருக்கை தேடும் பதட்டத்தில் அவருக்கு விடை சொல்லக் கூட மறந்து விடுகிறீர்கள். இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்கிறீர்கள். இதற்குள் நகரத்தை விட்டு வெளியே வந்து விடுகிறது பேருந்து. இன்னும் 30 கி மி தூரம் போக வேண்டும். நடத்துனர் பயணச் சீட்டுக்கான கட்டணத்தைக் கேட்டதும் 500 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுக்கிறீர்கள். அவர் உங்களை மேலும் கீழும் பார்த்து விட்டு, நிறுத்தச் சொல்லி இறக்கி விடுகிறார். எப்படி உணர்வீர்கள்?

நெடுந்தூரம் பயணம் செய்து ஒரு நகரத்தை அடைகிறீர்கள். இயற்கை உபாதை கழிக்க இடம் தேடுகிறீர்கள். கட்டணக் கழிப்பிடத்தை அடைந்து 50 ரூ நோட்டை நீட்டுகிறீர்கள். சில்லரை இல்லை எனச் சொல்லி உங்களை மறுதலிக்கிறார். எப்படி உணர்கிறீர்கள்?

உங்கள் காரை பழுது நீக்க விட்டிருக்கும் நாளொன்றில், நடு இரவில் வந்திறங்கிய உறவினரை அழைத்துச் செல்ல ஆட்டோ பேசுகிறீர்கள். ஆட்டோக்காரர் இருக்கையிலிருந்து அசையாமலேயே உங்களை உதாசீனப் படுத்துகிறார். எப்படி உணர்வீர்கள்?

அந்த அரசாங்க உயரதிகாரியை உங்களுக்கு நன்றாகத் தெரியும். நல்ல பழக்கமும்கூட. அந்த அலுவலகத்தில் ஆக வேண்டிய காரியம் ஒன்றை அவரிடம் வேண்டிச் செய்து கொள்கிறீர்கள். அதில் செய்ய வேண்டிய திருத்தம் ஒன்றிற்காக மீண்டும் அதே அலுவலகம் செல்லும்போது அட்டெண்டரால் உதாசீனப் படுத்தப் படுகிறீர்கள்.

உங்கள் முதல் குழந்தையை பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறீர்கள். உலகின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீகர்கள். வெள்ளை நிற தேவதைகள் அந்த ரோஜாக் குவியலை எடுத்து வந்து உங்கள் கையில் கொடுக்கக் காத்திருக்கிறீர்கள். மாறாக, கொண்டு வந்து கொடுப்பவர் எரிச்சல் பட்டவாறே “ம்ம் பார்த்துக்குங்க ” என்கிறார் ஏதோவொரு பண்டமொன்றைப் போல. எப்படி உணர்வீர்கள்?

இதைப் போன்றோ அல்லது இதைவிடக் கூடுதலாகவோ ஒவ்வொரு நாளும் அவமானம் நம்மைப் பிடுங்கித் தின்றவாறே இருக்கிறது. தவிர்க்கவியலா கையாலாகாத்தனத்தின் பிடியிலாட் பட்டிருக்கிறோம்.

இன்னார் இவரென்ற பாகுபாடுகளேதுமற்று, எவர் வாயிலிருந்தும் வெளிப்படும் வார்த்தைகள் அவமானப்படுத்தலைத் தவிர வேறொன்றையும் இலக்காகக் கொள்வதில்லை.

பெற்றோர், உற்றார், உறவினர், கொண்டான், கொடுத்தான், உடன் பிறந்தோர், கட்டியவள், நண்பன், ஆசிரியர், அலுவலக மேலதிகாரி, முதலாளி என யாவருக்கும் இஃதொன்றே பிரதானத் தொழிலோ?

விளக்கணைத்ததும் கவிழும் இருட்டைப் போல அவமானம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. மேற்சட்டையிட்டு ஒட்டிய வயிறு மறைத்தல் போல அவரவரால் இயன்றதைக் கொண்டு மூடி மறைத்து வாழ்தல் இயல்பாகப் போயிற்றிங்கு.

அவமானத்திற்குள்ளாக்குபவனுக்கு உள்ளாக்கிய சந்தோஷம் ஒன்றே கிட்டுகிறது. ஆகிற காரியம் ஆகும்போதுதான் ஆகிறதென்றாலும் அவமானத்திற்குள்ளக்குவதால் அவசரமாக ஆவதில்லை. எனினும் அவமானத்திற்குள்ளானவன் சபை நடுவே ஆடை விலகியவன் போலாகிறான். அதுவல்ல நோக்கமென்றாலும் அஃதொரு ஊக்குவிணையாக அமையலாம் சில பொழுது.

என்றாலும் ஆக்குபவனும், ஆக்கப் படுபவனுக்குமான இடைவெளி இந்தப் புள்ளியிலிருந்து இந்தப் பொழுதிலிருந்தே விரியத் தொடங்கி விடுகிறது. மேலுமது ஒரு பொழுதும் ஒத்திசைவைத் தருவதில்லை. நிர்பந்தத்தின் காரணமாயொரு சமயம் இசைவது போலிருந்தாலும், அது காட்சிப் பிழையேயன்றி வேறில்லை. உள்ளிருக்கும் வன்மம் காத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பிற்காக.

எவ்வாறாயினும், ஒன்றையடைந்ததும் அதன் மீதான ஆசை நீர்க்க, அடுத்ததொன்றிற்கேங்கும் வாழ்க்கை, தடித்துப் போகவைத்திருக்கிறது நமது தோலை.

எதையெதையோ எதெதுவோடோவெல்லாம் கட்டிக் கலந்து தின்று பழகிய நமக்கிப்போது உணவாக ஆகிப் போனது அவமானங்களே; அதையே தின்கிறோமென்ற அவமானமுமற்று.

எனக்கிருக்கும் ஐயமொன்றுதான். வாழ்க்கையென்பதென்ன? நாம் வாழ்ந்து கொண்டிருப்பதா? அல்லது இழந்து கொண்டிருப்பதா?