Month: July 2013

நம்மிலிருந்து தொடங்கும் மாற்றம் – Mother and Child

ஒன்றின் மீதான தீரா வெறுப்பு, அதன் மறுபக்கத்தை அல்லது அப்படி ஒன்று இருக்கக்கூடும் என்பதைக்கூட பார்க்க மறுத்து விடுகிறது.

நம்மை நன்குபுரிந்து கொண்டவர்கள், நம்மீதான அக்கறையில் சொல்லும்போது அதை உதாசீனப் படுத்திவிடுகிறோம். ஆனால் அந்நபர் மீண்டும் மீண்டும், அதை நோக்கி நம்மைச் செலுத்தும் போது, சரி அதையும்தான் பார்ப்போமே என நாம் முயலும்போது, நிதர்சனம் நாம் கற்பனை செய்து கொண்டிருந்ததற்கு நேர்மாறாகவே இருக்கிறது; பெரும்பாலும்.

போலவே, வாழ்க்கையில் நமக்கு நேர்ந்த கசப்பனுவங்களின் தொகுப்பாக ஒரு கண்ணாடி அணிந்து கொள்கிறோம். மீத வாழ்வை அதன் மூலமே பார்த்து மேலும் மேலும் நம்மை ரணமாக்கிக் கொள்கிறோம். உன்மையில் நமக்காக ஒன்று இன்னொருத்தருக்காக ஒன்று என்ற பேதம் ஏதுமில்லை. நடப்புக்களை அவரவர் பார்வையிலேயே புரிந்து கொள்கிறோம்.  நமது கண்ணாடியை நீக்கி விட்டு நோக்கும் போது உலகம் நமக்கு வேறு விதமாக நாம் நினைத்ததற்கு மாறாகத் தோன்றுகிறது. அணிந்திருக்கும் கண்ணாடியைக் கழட்டி வெற்றுக்கண்ணால் நம்மைக் காணச்செய்ய உற்ற துணை தேவைப்படுகிறது.

குறிப்பாகப் பெண்கள் இத்தகைய கண்ணாடி அணிவதோடு மட்டுமல்லாது தம்மைச் சுற்றி ஒரு மாயச்சுவர் எழுப்பிக் கொள்கிறார்கள். அதைத் தாண்டி உள்ளே எவரையும் அனுமதிப்பதில்லை. தங்களுடை முன்கூட்டிய மதிப்பீட்டின் வழியே பிறரையும், அது எவராகிலும், பார்க்கிறார்கள்.

கரன் அப்படியான ஒரு பெண்மணி, 14 வயதில் கர்ப்பம் தரித்து குழந்தையை அடாப்சனுக்குக் கொடுக்க நேரிடுகிறது. அதன்பிறகு அவரது வாழ்க்கை நோயுற்றிருக்கும் அம்மாவைப் பார்த்துக் கொள்வதிலேயே போய் விடுகிறது அவரது உலகில் அம்மாவைத் தவிர வேற்று மனிதர்களுக்கு இடமில்லை. வீட்டு வேலைக்காரியிடம்கூட, இவ்வகை முதிர்கன்னிகளுக்கேயான சிடு சிடு கடு கடு குணத்துடனேயே பழகுகிறார். குறிப்பாக வேலைக்காரியின் குழந்தையை அவருக்குப் பிடிப்பதில்லை.

அம்மாவும் இறந்துபோக தனிமரமாகிறார். கரனைக் குறித்து அவர் அம்மா, “கரன் பாவம் வேதனைப்படுகிறாள், அதற்கு நான்தான் காரணம்” என்று சொன்னதைச் சொல்கிறாள் வேலைக்காரி.  உடனே கரன், “அதை அவர் என்னிடமல்லவா சொல்லி இருக்க வேண்டும்?” என்று வெடிக்கிறாள். அதற்கு வேலைக்காரி, “அவருக்கு உன்னைக் கண்டு பயம் கரன்” என்கிறாள்.  கரன் அதிர்ச்சியாகிறாள் பெற்ற அம்மாவே பயப்படும் அளவுக்கா நாம் நடந்து கொண்டோம் என.

கரன் வாழ்க்கையில் குறுக்கிடும் சக ஊழியர் பேக்கோ, கரனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறார். முதலில் கரன் மிகப் பிடிவாதமாக இருக்கிறார், தன் வட்டத்தவிட்டு வெளியே வர மறுக்கிறார்.
“I am a difficult person, I demand more from others, I know it is bad. But that’s how I am” எனத் தீர்மானமாகச் சொல்கிறார்.

தாயாரின் இறப்பும் தனிமையும் கரனைக் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கோ பக்கம் நகர்த்துகிறது. பழக்கம் வலுவாகி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். கரனின் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்கிறது. கரனின் ஸ்டெப் மகள் கேட்கிறாள், “ஏன் இது வரை உங்கள் மகள் எங்கே இருக்கிறாள் எனத் தேட முயற்சிக்கவில்லை, Find her now… before time runs out. After that, only regret remains. And regret is a killer.” அடுத்த நாள் முதல்,  மகளைத் தேடும் முயற்சியில் இறங்குகிறாள்.

கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் கரன் தற்போது வேலைக்காரியுடன் நல்ல உறவை பேணுவதோடு மட்டுமல்லாது வேலைக்காரியின் குழந்தையைச் சொந்த பேத்தி போலவே கவனித்து விளையாடி மகிழகிறாள்.

கரனின் மகளான எலிசபெத் 37 வயதான அழகிய, தனித்துவம் மிக்க, சுயசார்பான, சுயமரியாதையைப் பேணுகிற, எதிலும் தீர்மானமான, முன்னுக்கு வரத் துடிக்கும் வக்கீல். அவள் நேர்முகத் தேர்வில் தன்னைப் பற்றிச் சொல்வதில் இருந்து அவளைப் பற்றிய தெளிவான பிம்பம் நமக்கு உருவாகிறது
I live alone. I’ve never been married, and l have no plans to marry. I value my independence above all things. , That way I don’t have any expectations to fulfill… other than my own, which are great enough.

அவள் புதிதாகச் சேரும் நிறுவனத்தின் அதிபர் பால் உடன் அவளுக்கு உறவு உண்டாகி அதன் மூலம் கருவுண்டாகிறது.  கருத்தரித்திருப்பது தெரிந்து தற்போதைய வேலையை விட்டுவிட்டு மிகச்சுமாரான ஒரு வேலையை வேறு நிறுவனத்தில் தேடிக் கொள்கிறாள்.

“A person inside a person” என்ற வினோதத் தாய்மை நிலை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கிறது. அவள் வசிக்கும் அபார்ட்மெண்டில் இருக்கும் பார்வையிழந்த சிறுமியும் தன் பங்கிற்கு எலிசபெத்தின் மனதை மாற்றி அவளது அம்மாவைத் தேடச் செய்கிறாள்.

லூசி, ஜோசப் தம்பதியினர், பேக்கரி நடத்துகிறவர்கள்,  குழந்தை அடாப்சனுக்கு முயற்சிக்கிறார்கள். லூசியால் குழந்தைக்குத் தாயாக முடியாது என்பதால் அடப்சனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரே, 21 வயதுக் கல்லூரி மாணவி கர்ப்பம் தரித்திருப்பவள் அடாப்சனுக்குச் சம்மதிக்கிறாள் சில நிபந்தனைகளோடு. லூசி தம்பதியினரைக் கேள்விகளால் குடைந்தெடுக்கும் ரே,  ”உங்கள் பழக்க வழக்கங்கள், என் குழந்தை வளரப் போகும் சூழ்நிலை முதலியவற்றைப் பார்த்தபின்பே என் குழந்தையை உங்களுக்குத் தத்துக் குடுப்பதா இல்லையா “ என முடிவு செய்வேன் எனக் கறாராகச் சொல்கிறாள். எல்லாவற்றுக்கும் சம்மதித்து குழந்தை பிறக்கக் காத்திருக்கின்றனர்.

கரன், எலிசபெத்தைக் கண்டடைந்தாளா? எலிசபெத்தின் குழந்தை என்ன ஆகிறது(திரும்பவும் அடாப்சனா?), ரேயின் குழந்தை லூசி தம்பதிகளுக்குக் கிடைத்ததா என்பதெல்லாம் மீதிக் கதை.

ஆனால் கதையில் மையஓட்டமாக நான் கருதுவது Character Transformation என்பதைத்தான். ஆரம்பகாலக் கரனுக்கும் படத்தின் இறுதியில் இருக்கும் கரணுக்குமான குண வேறுபாடுகள். எலிசபெத்தின் கறார்தனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தாய்மை நிலையின் உன்னதத்தை உணர்வது. மிகமிகக் கறாரான மதிப்பீடுகளுடன் இருந்த ரேயின் மாறுதல் இவை எல்லாம் படத்தின் முக்கிய அம்சங்கள்.

தமிழிலும் இதே போன்ற முயற்சிதான் அர்ஸ் அன்புக்கரசுவாக மாறும் அன்பே சிவம். அதை மிக சப்டில் ஆகச் சொல்லி இருப்பார் கமல். நல்லதொரு முயற்சி என சுரேஷ் கண்ணன் சொல்வார்.

பாலின் மகள் எலிசபெத்தைப் பார்த்து ”Is that my father’s child you are carrying?” என வெகு இயல்பாகக் கேட்பதிலாகட்டும், பால் “if the child is mine, please come to me I will take care of both of you” எனச் சொல்வதிலாகட்டும். ரேயின் கறார்தனத்துக்கு எந்தவித எதிர்ப்புமின்றி ஜோசப்பும் லூசியும் பணிவதிலாகட்டும், கரனின் ஸ்டெப் மகள் அவளை மிக இயல்பாக ஏற்றுக் கொள்வதிலாகட்டும், படத்தில் மோசமானவர் என எவருமே இல்லை. ஆனாலும் சூழ்நிலை எப்படிப் புரட்டிப் போட்டு விளையாடுகிறது என்பதுதான் கதை.

மிக நல்ல படம். கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒன்று.

வழக்கம் போலவே படுக்கையறைக் காட்சிகளும், உடலுறவுக் காட்சிகளும் ( நன்றி – ) உண்டு படத்தில். குடும்பத்துடன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.

இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லிப் பரிந்துரைத்த   அண்ணாவுக்கு நன்றி.

Advertisements

21 கிரம்ஸ்

21_grams_movie

மாற்று இதயத்திற்காகக் காத்திருக்கிறான் மைக்கேல், கணித மேதை. மாற்று இதயம் கிடைத்து அறுவைச் சிகிச்சை முடிந்து நினைவு வந்ததும் கேட்கும் முதல் கேள்வி,

“எனக்குப் பொருத்தப் பட்டிருப்பது யாருடைய இதயம்?”

”யாரிடமிருந்து பெறப்பட்டது யாருக்கு அளிக்கப் படுகிறது என்ற விவரங்களை நாங்கள் ஒரு போதும் சொல்வதில்லை” என மறுத்துவிடுகிறார் மருத்துவர்.

இருப்பினும், தனக்குப் பொருத்தப் பட்டிருப்பது பாலின் இதயம் என்பதைக் கண்டுபிடித்து விடுகிறான். பால் மற்றும் அவனது இரண்டு குழந்தைகளும் விபத்தில் இறந்தனர் என அறியும் போது பாலின் மனைவி கிறிஸ்டினா மீது ஒரு பரிதாபம் கலந்த அன்பு தோன்றுகிறது. கிறிஸ்டினாவுடன் நெருங்கிப் பழகுகிறான்.

விபத்திற்குக் காரணமான ஜாக்கின் மனைவி நல்லதொரு வக்கீலை வைத்து வாதாடி சாட்சிகள் ஏதுமில்லை என்ற அடிப்படையில் அவனை விடுவித்துவிடுகிறாள்.

ஒரு நெகிழ்வான தருணத்தில் வெடித்தழும் கிறிஸ்டினா, “பாலையும் குழந்தைகளையும் இழந்து நான் அல்லாடிக் கொண்டிருக்கிறேன், ஆனால் அவர்களைக் கொன்றவன் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கிறான். வி மஸ்ட் கில் ஹிம்” என்கிறாள்.

பிற்பாதிக் கதை அவனைத் தேடிக் கொல்ல முயற்சிப்பதுதான். ஒரு சாதாரணப் பழிவாங்கும் கதையான இதை சுவாரசியமாக்குவது நான்-லீனியராகச் சொல்லப் பட்டிருக்கும் விதம்தான்.

விபத்து, அதற்கு முன், அதற்கு பின் என மூன்று காலங்களில் நடக்கும் கதையை, எந்த வரைமுறையும் இல்லாமல் முன்னுக்குப் பின்னாக காட்டுகிறார்கள். ஒரு புதிரை விடுவிப்பது போல் பார்க்கும் நமக்கு சவாலாகவே இருக்கிறது. இறுதியில் எல்லாக் காட்சிகளும் அதனதன் இடத்தில் பொருந்திப் போகையில் முழுமையான திரைக்கதை நமக்குக் கிடைக்கிறது.

நல்ல படம்.

குடும்பத்துடன் பார்ப்பதைத் தவிர்க்கவும். படுக்கையறைக் காட்சிகள் உண்டு.

21கிராம் என்ற தலைப்பிற்கான காரணம் படத்தின் இறுதியில் சொல்லப் படுகிறது.