Uncategorized

சொல்லிய வண்ணம் செயல்.

 

“அஞ்சல் வழியில் இளங்கலை வணிகவியல் படிக்கப் போகிறேன்” என அப்பா சொன்னபோது, அவருக்கு வயது 47.

அப்பா அப்படித்தான். கோ ஆப்பரேட்டிவ் டிப்ளோமா முடித்துவிட்டு, நூற்பாலை ஒன்றின் பண்டகசாலையில் விற்பனையாளராக இருந்தவர். தனது மேலாளர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார், அந்த இடத்துக்குத் தன்னைத் தகுதி உள்ளவனாக ஆக்கிக் கொள்ளும் முயற்சி அது. சொன்னது போலவே, தேர்வில் வெற்றி பெற்று மேலாளராக ஆகிவிட்டார்.

“பிஞ்சு போன செருப்பை அதைத் தைப்பவரிடம் கொடுத்துவிட்டு அவரைக் கூர்ந்து கவனிச்சிருக்கியா? அதைத் தைப்பதில்தான் தன் முழு வாழ்க்கையுமே இருக்கிறது என்பதுபோல் ஈடுபாட்டுடன் இருப்பார். தைத்து முடித்ததும் செருப்பின் பிற வார்களையும் சோதிப்பார். அதன் பிறகு உன்னுடைய இன்னொரு கால் செருப்பையும் வாங்கி சோதிப்பார். உன்னிடம் கொடுத்துப் போடச்சொல்லி, உன் கால்களில் அது சரியாகப் பொருந்துகிறதா என்பதைக் கவனிப்பார். சட்டென உன் முகத்தையும் பார்ப்பார் பாத்திருக்கியா? அதுதான் செய் நேர்த்தி, தான் செய்த வேலை மீதான நம்பிக்கை.”

“அது மாதிரித்தான் நம்ம வேலாயுதமும், முடி வெட்டிமுடித்ததும், நாம காசைக் கொடுக்கும்போது, மீண்டும் ஒரு முறை இருபக்கமும் பார்ப்பார். கிருதா ஒரு ரோமக்கணம்தான் வித்தியாசம் இருக்கும், அதையும் சரி பண்ணித் திருப்தியாகிக் கொள்வார். இந்த செய்நேர்த்தி கைகூடினாப் போதும் மற்றெதெல்லாம் உனக்கு சுலபமாக் கைசேரும்.”

சொல்லுவதோடு நில்லாமல். செய்தும் காட்டினார். அவர் மேலாளராகி, ஓய்வு பெறும்வரை, திண்டுக்கல் மாவட்டத்திலேயே சிறந்த கூட்டுறவு பண்டகசாலை என்ற விருதைத் தொடர்ந்து பெற்றார்.

இன்று அப்பாவின் 16ஆவது நினைவு நாள்.

தமிழும் நானும்

513bl4ujt5l-_sx257_bo1204203200_

சொக்கன் எழுதியிருக்கும் நல்ல தமிழில் எழுதுவோம் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். 2009ல் நான் எழுதிய இந்தப் பதிவு ஞாபகம் வந்தது. எனவே மீள் பதிவு.

எல்லோருக்கும் நல்ல தமிழய்யா வாய்த்தால் நல்ல தமிழ் படிக்கலாம். மேலும் படிக்க ஆர்வம் வரும். எனக்கு ஒரு நல்ல தமிழைய்யா கிடைத்தார் 9,10 படிக்கும்போது. அவர் வகுப்பு என்றாலே எல்லோரும் ஆர்வமாக இருப்போம். லீவு எடுப்பதென்றால் அவரது வகுப்பு இல்லாத நாளாக இருக்க வேண்டுமே என நினைப்போம்.

புத்தகமேதும் எடுத்து வரமாட்டார். உள்ளே நுழைந்ததும் இன்று என்ன பாடம் என்பதையும் சொல்ல மாட்டார். புத்தகத்தில் உள்ளதுபோல் வரிசைக்கிரமமாக நடத்தவும் மாட்டார். பெரும்பாலும் கதைகள் மூலமே பாடம் நடத்திச் செல்வார்.

ஒரு கணவனும் மனைவியும் துணிக்கடைக்குப் போகிறார்கள். சில சேலைகளைப் பார்த்தும் பிடிக்காமல் ஒரு குறிப்பிட்ட சேலையை எடுத்துக் காட்டச் சொல்கிறார் மனைவி. அதற்குக் கடைக்காரர் , “அது சீமாட்டியும் வாங்க முடியாத சேலை” என்கிறார். காரணம் அதன விலை. கணவன் கையிலிருக்கும் காசுக்கான சேலை வாங்கித்தருகிறார். மனைவிக்குத் திருப்தியில்லை. ஏதேதோ புலம்பியவாறே வருகிறார். இதனால் கணவன் எரிச்சலடைகிறார்.

வீட்டிற்கு வந்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். சாப்பாடு சுவையாக இல்லை. எரிச்சலுடன் “நாயும் தின்னாத சோறு” எனச்சொலியவாறே வெளியேறுகிறான்.

சீமாட்டியும், நாயும் இந்த இரண்டு வார்த்தையிலும் என்னடா புரிந்தது? ” என்பார்.

”அய்யா இரண்டிலும் உம் வருகிறது”

“சரி. என்ன வித்தியாசம்”

”தெரியலை அய்யா”

“ஒண்ணு உயர்வைச் சொல்லுது . மற்றது இழிவைச் சொல்லுது. ஒரே ”உம் ” இரு அர்த்தங்கள் தருகிறதில்லையா? ஒன்று உயர்வு சிறப்பு உம்மை. மற்றது இழிவு சிறப்பு உம்மை”

ஏறக்குறைய முப்பது வருடங்கள் கழித்தும் இன்னும் மறக்கவில்லை.

ராமச்சந்திரன் அய்யா உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.

ஆனால் இப்பொழுது தமிழய்யாக்கள் அதிகம் இல்லை எல்லொரும் தமிழ் ஆசிரியர்கள் அல்லது தமிழ் டீச்சர். அவர்களிடம் பேசினால் தமிழில் பாரதிதாசனுக்குப் பின் புலவர்கள் யாருமில்லை என்பார்கள். அல்லது திரைப்படப் பாடலாசிரியர்கள்தான் கவிஞர்கள்.

உங்களுக்குத் தெரிந்த தமிழாசிரியர் யாருமிருந்தால் அவரிடம் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், அசோகமித்திரன் ஆகியோரின் எழுத்துக்களை விவாதியுங்கள். உண்மை புரியும்.

பார்க்கும் வேலை வேறு வாழும் வாழ்க்கை வேறென்பதாக ஆகிவிட்டது அவர்களுக்கு.

பின் குறிப்பு : எல்லா தமிழாசிரியர்களுமே அப்படியல்ல; ஆனால் பெரும்பான்மையினர்.

பன்னருவாள் கொண்டறுத்த பிச்சிப்பூ

vannadasan

”வடவள்ளி நவாவூர் பிரிவு அருணாசலம் நகரிலிருந்து அதிகாலை உற்சாகத்துடன் உங்களுக்கு வணக்கம் சொல்லி நிகழ்ச்சியில் உங்களுடன் இணைவது, உங்கள் அன்பு ——-.”

”சரி, சொல்லுங்க என்ன பாட்டு வேணும்.”

அழைத்தவர் அத்தனை உற்சாகத்துடன் சொல்லியதை, ஒரு வித ஈடுபாடற்ற எந்திரத்தனத்துடன் கேட்பார், அறிவிப்பாளர்.

எனக்குத் தெரிந்து,  கோவை பண்பலையில் அறிவிப்பாளர்களாக இருப்பவர்கள், ஒருவித விரக்தி மனநிலையில், சிற்றேட்டில் இருந்து பேரேட்டில் பதியும் அரசு அலுவலகத்தனத்துடன் பணியாற்றுவது போலிருக்கும்.

இவர்களில் ஒருவர் வண்ணதாசனைப் பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யும்போதே, கிலியடிக்கிறதல்லவா? அப்படித்தான் ஆயிற்று.

” ஒரு சிறிய இசை. இதில் உள்ள சிறுகதைகளை எழுதும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?”

இதற்கும் சிரத்தை எடுத்துப் பதில் சொன்னார் வண்ணதாசன், அது அவரது சிறப்பு.  என் ஆதங்கம் அதுவல்ல. பேட்டி எடுத்தவருக்கு வண்ணதாசனைப் பற்றி ஏதும் தெரியவில்லை, அல்லது எப்படிக் கேள்விகளைத் தொடுக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறைகூட இல்லை.

மேலதிகமாக, சாகித்ய அகாடமியின், விருதுக்குத் தேர்வு செய்யும் நடைமுறைகள் பற்றிய அடிப்படைத் தகவல்களாவது தெரியுமா என்பதும் சந்தேகமே.

உச்சகட்ட வன்முறை,  எந்த அறிவிப்பும் இல்லாமல் பேட்டிக்கு இடையிடையே பாட்டை ஒலிபரப்பியது. இதுதான் உங்கள் இலக்கிய சேவை எனில் தயவு செய்து வேண்டாம். விட்டுவிடுங்கள், இலக்கியம் பிழைத்துப் போகட்டும்.

ஒரு நல்ல வானொலிப் பேட்டி எப்படி இருக்க வேண்டும் என்பதை பிஎஸ்ஜி சமுதாய வானொலியில்(107.8) கேட்க வாய்த்தது.  கு.ஞானசம்பந்தன் அவர்களை மாணவர்கள் பேடி காண, ஆசிரியர்கள் நெறிப்படுத்தினர். நேர்த்தியான ஒன்று. ஞானசம்பந்தன் மிக மகிழ்ந்தார்.

அன்பான வானொலி அதிகாரிகளே, ஒரு கலைஞனைக் கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை, மரியாதைக் குறையச் செய்துவிடாதீர்கள். கலைஞனைத் தன் தோள்களில் எற்றிக் கொண்டாடும் தேசமே பெருமையுடன் முன்னோக்கி நகரும்.

அடுத்த முறை ஒரு சிற்பியைப் பேட்டி எடுக்க நேர்ந்தால், குறைந்தது ஒரு அம்மி கொத்துநரையாவது ஏற்பாடு செய்யுங்கள். கல்லைப் பற்றியும் உளியைப் பற்றியும் தெரிந்தவராக இருப்பார்.

நம்பிக்கைகளைப் புதுப்பித்தல்

happy-new-year-2017-meme-4

நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நெஞ்சு நிறைய மகிழ்ச்சியையும் அளவற்ற குதூகலத்தையும் வழங்கட்டும்.

புத்தாண்டு மலர்வதைத் தன் தோழிகளுடன் கொண்டாடச் சென்றுவிட்டால் சின்னவள். மனைவி, பெரியவள் மற்றும் நான் மூவரும் கொடி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். 11.30க்கு தூக்கம் தள்ளினாலும் விழித்திருந்தார் மனைவி.

மணி 12 ஆனதும் வழக்கமில்லா வழக்கமாக, கேக் ஒன்றைக் கொண்டு வந்து வாங்க வெட்டலாம் என்றார். நானும் பெரியவளும் ஆச்சர்யமாகப் பார்த்தோம். ஏன்றாலும் பாடியபடியே வெட்டித் தின்றோம். ஆளுக்கொரு பேனா அன்பளித்து மேலும் ஆச்சர்யப்படுதினார். இந்தப் புத்தாண்டு நன்றாக இருக்கப் போகிறது என்பதற்கு, இது ஒரு அடையாளம்.

இன்றும் கொண்டாட்டம் தொடர்ந்தது. ஸ்டார் பிரியாணி ஹோட்டலில் குடும்பத்துடன் மதிய விருந்து. எனக்குப் பிடித்த மட்டன் பிரியாணி சில்லி, இறால் என.

சப்னா புக் ஹவுஸில், சொக்கன் எழுதிய “நல்ல தமிழில் எழுதுவோம்” என்ற புத்தகமும் ராஜமுருகன் எழுதிய ”நல்ல சோறு” என்ற புத்தகமும் வாங்கினேன். நல்லதாக ஆரம்பிக்க வேண்டுமல்லவா? அதுவும் எனக்குப் பிடித்த தமிழும் சோறும்.

குழந்தைகளுடன் டங்கல் (யுத்தம்) திரைப்படம் மாலைக் காட்சி. நேற்றே இதன் தியேட்டர் பிரிண்ட் கிடைத்தது என்றாலும் பிடிவாதமாகத் தியேட்டரில்தான் பார்ப்பேன் என்றதால், மகள் முன்பதிவு. திரைப்படம் குறித்து எழுத நிறைய இருக்கிறது.  என்றாலும் இத்தனை நேர்த்தியான திரைக்தையும் அதை மேலும் மெருகூட்டும் விதமான் எடிட்டிங்குமாகப் படம் மிகச்சிறந்த ஒன்று.

வழக்கமான தொலைபேசி,  குறுஞ்செய்தி, வாட்சப் வாழ்த்துக்களுடன் ஒரு ராங் கால் அழைப்பாளரும், மன்னிப்பு கேட்டு, பின் புத்தாண்டு வாழ்த்துகளையும் சொன்னார். கூடுதல் மகிழ்ச்சி.

ஒரு நாளுக்கு இத்தனை சிறப்பான அனுபங்களைத் தந்து புத்தாண்டு நன்றாக முகிழ்த்திருக்கிறது. தொடரட்டும்.

தொடரும் என்ற நம்பிக்கைதானே வாழ்க்கை.

 

வியர்வை வாசம்

 

Maithonமைத்தான், தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஆற்றினருகே அமைந்த கிராமம். டாடா பவரும், தாமோதர் வாலி கார்ப்பரேசனும் கூட்டாக ஒரு அனல் மின் நிலையம் (1050 MW) அமைக்கத் திட்டமிடுகிறார்கள்.

நிலம் கையகப்படுத்துதல் முதல் வேலை. கிராமத்தினர் இதை அறிந்து கொண்டு எதிர்க்கின்றனர். டாடா இடமிழப்போருக்கு வேலை அளிப்பதாக உத்திரவாதமளிக்கிறது; சுமார் 300 பேர். 1500 பேர் கிட்டத்தட்டத் தேவைப்படும்போதும் 300பேருக்கு வேலை அளிப்பது என்பது நல்லதுதானே?

பேச்சு வார்த்தை முடிந்து பத்திரம் சரிபார்ப்பின் போது டாடா 800 பேருக்கு வேலை அளிக்க வேண்டி வருகிறது. 300 எப்படி 800 ஆனது?

இங்குதான் கிராமத்தினரின் முன்யோசனை நம்மை வியக்க வைக்கிறது. பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, தங்களுடைய நிலங்களை குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் பகிர்ந்து பங்களித்து விடுகின்றனர். உதாரணமாக குடும்பத் தலைவர் பேரில் இருக்கும் நிலம், மகன்கள் மூவர் பெயரில் பதிவு செய்யப் பட்டுவிட்டது. போலவே மாமன், மச்சான், பங்காளி என சுண்டல் விநியோகம் போல.

டாடாவுக்கு வேறு வழி இல்லை. 800 பேரையும் எடுத்தாகிவிட்டது. எடுத்து காண்டிராகடர்கள் கையில் கொடுத்து உன் பாடு அவன்பாடு எனக் கை கழுவி விட்டார்கள்.

காண்டிராக்டர்கள் பாடுத்தான் திண்டாட்டம். கிராமத்தினர் எவரும் வேலை செய்யும் மனநிலையில் இல்லை. ஆனால் சமபளம் மட்டும் வேண்டும், அது தங்கள் உரிமை என்பது அவர்கள் எண்ணம்.

காலையில் 9 மணிக்கு உள்ளே வந்ததும் மெயின் கேட் அடைக்கப்படும் பின்பு மதியம் ஒரு மணிக்குத்தான் உணவுக்காகத் திறக்கப்படும். வெளியே செல்லும் நபர் மீண்டும் உள்ளே வர மாட்டார். நன்றாகப் படுத்து உறங்கிவிடுவார். அல்லது ஆடு மாடு மேய்த்தல்.

சரி 9 மணியிலிருந்து ஒரு மணி வரையாவது வேலை செய்வார்களா என்றால் அதுவும் இல்லை. கேண்டீன் அல்லது கழிப்பிடங்களில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு மதியம் கம்பி நீட்டி விடுகிறார்கள்.

காண்டிராக்டர்களில் ஒருவர் நேற்று மீட்டிங்கில் அளித்த புள்ளி விவரம். 104 பேரில் மூவர் மட்டுமே 8 மணி நேரம். 30-40 பேர் 4 மணி நேரம். மற்றவர்கள் வேலையே செய்வது கிடையாது.

லால் சலாம் சகாக்களே.

நெஞ்சத்து அகநக

Guru1983 ஆகஸ்டில்தான் குருநாதனை முதலில் பார்த்தது. சிலரைப் பார்த்ததும் காரணமின்றிப் பிடித்துவிடும் அவனையும் அப்படித்தான், பட்டையான ப்ரேம் போட்ட கண்ணாடி, நெஞ்சு வரைக்கும் பேண்டை ஏத்தி இன் பண்ணி, வயிறே இல்லாமல் மடித்தால் ஒடிந்து விடுவான் போல.
அப்பொழுது நினைக்கவில்லை அந்த நட்பு 30 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் என. டிப்ளொமா படித்து முடித்ததும் இருவரும் ஒரே அறையில் வசிக்க நேர்ந்தது நட்பை இன்னும் இறுக்கமாக ஆக்கியது. எனக்கு 150 ரூபாயும் அவனுக்கு 400 ரூபாயும் சம்பளம் என்ற போதிலும் எந்த எதிர்பார்ப்புகளுமற்று கழிந்த நாட்கள் அவை.
குருவைச் சந்திக்கும்வரை எந்த ஆங்கில நாவலையும் வாசித்தவனில்லை நான். அதிகபட்சமாக ரீடர்ஸ் டைஜஸ்டில், லைஃப் இஸ் லைக் தட், காலேஜ் காம்பஸ், ஆல் இன் அ டேய்ஸ் வொர்க் என்ற மூன்று நகைச்சுவைப் பத்திகளை மட்டுமே படிக்க வாய்க்கும். அதிலும் 10 படித்தால் ஒன்று புரியும். அதுதான் எனது ஆங்கிலப் புலமை. குரு எனக்கு நேர் எதிர். ஆங்கில மீடியன். தும்முவதுகூட ஹெச் என்றுதான்.
டவுன்ஹாலில் உள்ள சூஸ் அண்ட் ரீட் வாடகை நூலகத்திற்கு அழைத்துச் சென்று ஜெஃப்ரி ஆர்ச்சரின், நாட் எ பென்னி மோர் நாட் அ பென்னி லெஸ் என்ற புத்தகத்தை வாசிக்கத் தந்தான். அப்பொழுது முதல் பேய் பிடித்தாற் போல வாசிக்க ஆரம்பித்தாயிற்று. அலிஸ்டர் மெக்லீன், ராபர்ட் லுட்லம், ஃப்ரெடெரிக் ஃபோர்ஸித் என்று ஆரம்பித்து இன்றும் தொடர்கிறது.
இன்றுகூட, பீகாரில் பாட்னாவிற்கருகில் உள்ள அனல்மின் நிலையத்தில் வேலை முடித்து அறைக்கு வந்ததும், ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகமான கமெத் தெ ஹவர்தான் துணை.
நல்ல நண்பர்கள் அமைவது வரம். நட்பு, நீண்ட நாள் நிலைத்திருப்பது சுகம்.
எனில், நான் சுகவாசி.

நித்ரா

சித்தார்த் பரதன் இயக்கி நடித்திருக்கும் நித்ரா திரைப்படம், அவரது தந்தை இயக்கத்தில் அதே பெயரைக் கொண்டு வெளியானதின் நவீன வடிவம். 

கச்சிதமான திரைக்கதை, கண்ணுக்கினிய காட்சியமைப்பு, நேர்த்தியான இயக்கம், நடித்தவர்களின் நிறைவான பங்களிப்பு எனத் தவறவிடக்கூடாத படம்.Image

அடையாளமின்றித் தவித்தல் ஒருவித அவஸ்தை எனில் தவறான அடையாளத்துடன் வாழநேர்வது கொடுமை. தன் வாழ்வில் நேர்ந்த அதிர்ச்சி ஒன்றின் காரணமாக மனநிலை தவறி வாழ நேர்கிறது சித்தார்த்துக்கு, இரண்டு வருடங்கள் மட்டுமே. அதன் பின் அதிலிருந்து மீண்டு மற்றவர்கள்போல் வாழ அவர் எடுக்கும் பிரயத்னங்களும், அதற்கு முட்டுக்கட்டையாக வரும் மற்றவர்களின், குத்தல் பேச்சும், சுட்டிக் காட்டுதலும் எனத் தன்னை மீட்கப் போராடுவதே கதை.

தான் காதலித்தவளையே கைபிடித்தாலும், எதுவும் சுலபமாக இல்லை அவருக்கு. ஒரு கட்டத்தில் எல்லோரும் தன்னையே கவனிக்கிறார்கள், தன்னைக் குறித்தே பேசுகிறார்கள், ஏளனம் செய்கிறார்கள் என்ற பிம்பத்தைத் தன்னுள்ளே ஏற்படுத்திக் கொண்டு மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார். 

எப்படி மீள்கிறார் என்பதே கதை. 

சித்தார்த், ரிமா கலிங்கல், ஜிஸ்னு, தலைவாசல் விஜய், கேபிசிஏ லலிதா என முக்கிய நடிகர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

சாலக்குடி வனப்பகுதியைக் கேமிரா அள்ளி அள்ளிப் பருக்கத் தருகிறது. ஒளிப்பதிவாளர் தாகிருக்கு ஒரு சல்யூட்.

மலையாளத்திரையுலகின் புது அலை  ,வினீத் ஸ்ரீனிவாசன், கோபி முரளி, சித்தார்த் பரதன் போன்ற வாரிசுகளின் பங்களிப்பால் செறிவுறுகிறது.
 

அம்மருந்து போல்வாரும் உண்டு

பரோடாவில், இரண்டு நாள் பயிலரங்கு; 12 பேர் பங்கேற்றோம். ஆரம்பம் முதலே அந்தப் பெண் வெகு ஈடுபாட்டுடனும் பங்கேற்றார். 32 அல்லது 33 வயதிருக்கக்கூடும். தனது துறையின் தேவைகள் மற்றும் சிரமங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.

மதிய உணவின் போது அவரருகே அமர்ந்து மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் இந்தியக் கிளையில் பணி, வேலை நேரமும் அவர்களை அனுசரித்து மதியம் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை.

அவரது பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்ததாக,

“எத்தனை குழந்தைகள்?” என்றேன்

“மூன்று”

“என்ன படிக்கிறாங்க?”

“பெரியவ ஒன்பது, அடுத்தவ அஞ்சு சின்னவ ரெண்டு”

”வேலைக்குப் போயிட்டா குழந்தைகளை யார் பாத்துப்பா?”

காலையில் குழந்தைகளைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு இரவு நேரச் சாப்பட்டையும் தயார் செய்து வைத்துவிடுவாராம், குழந்தைகள் மாலை வந்து தாங்களே தயாராகி உணவையும் உண்டு அம்மாவுக்காகக் காத்திருப்பார்களாம்.

“உங்க வீட்டுக்காரர் என்ன பண்றார்?, இதுல எல்லாம் உதவியா இருக்க மாட்டாரா?”

“அவர் இல்லைங்க இறந்து இரண்டு வருடங்கள் ஆச்சு”

“அய்யோ சாரிங்க. எப்படி பெண் குழந்தைகளைத் தனியாக விட்டுட்டு? கூடத் துணைக்கு யாரும் இல்லையா?”

“அம்மா, தங்கச்சி கூட இருக்காங்க, அவளுக்கு முடியலை. அப்பா இல்லை, அவர் போனதுக்கப்புறமா அவங்க சைடு சப்போர்ட்டும் இல்லை”

“எப்படி சமாளிக்கிறீங்க?”

“எங்க வீட்டு உரிமையாளர் குடும்பம் ரொம்ப நல்ல மாதிரிங்க. என் குழந்தைகளை அவங்க பேரக்குழந்தைகள் மாதிரிப் பாத்துக்கிடுவாங்க. அவங்க இல்லைன்னா நான் மிகவும் சிரமப் பட்டிருப்பேன்”

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு

மூதுரை – 20

முதல் வரியில், உடன்பிறந்தார் மட்டுமே சுற்றத்தார் என்றிருக்க வேண்டாம் என்று மாற்றிவிட்டு, வரிகளைக் கொஞ்சம் மாத்திப் போட்டுப் படிக்கலாம்.

நம்முடன் பிறந்தே கொல்லும் வியாதிக்கு மருந்து நம்முடன் பிறக்காத மலையில் வளருகிற மூலிகைகளாகும். அதைப் போலவே, நமக்குச் சுற்றத்தார் என்றால் உடன் பிறந்தவர்கள் மட்டுமல்ல. நம்முடன் பிறந்தவர் அல்ல என்றாலும், தூரத்து மலையில் வளரும், பிணி தீர்க்கும் மருந்தைப் போன்றவர்களும் உண்டு.

உருவு கண்டு எள்ளாமை

kullan

”ஜப்பான் எங்க? இன்னும் வரலையா?”ன்னு கேட்டப்ப எனக்கு எதுவும் புரியவில்லை. கேட்டது அப்பாவின் மேலாளர். நான் அப்பாவைக் காண அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன்.

”இப்ப வந்திருவாப்டி”ன்னு அப்பா சொல்லும்போது இன்னும் குழப்பம்.

சிறிது நேரத்தில் வந்து சேர்ந்த மனிதர் 4 அடிக்கும் குறைவாகவே இருந்தார். நல்ல சிவப்பு. குறுகிய கண்கள். என்னுடன் படிக்கும் வசந்தியின்  அப்பா.

கடகடவென்று அவருக்கு ஏப்பித்திருந்த வேலைகளைச் செய்து முடித்தவிதத்ததையும், இனிச் செய்ய வேண்டியவைகளையும் சொன்னார். சிறிது நேரம் சென்ற பின், “இவருக்கு ஏன் ஜப்பான்னு பேரு?” என அப்பாவிடம் கேட்க, “ஆளு குள்ளமா இருக்காருல்ல, அதான்”

எனக்கு வருத்தமாகவே இருந்தது. வசந்தி நல்ல உயரம், அவள் அம்மா மாதிரி எனப் பின்னாளில் இருவரையும் ஒரு சேரப் பார்த்தபோது தெரிந்தது.

எட்டாம் வகுப்பில் சாந்தி டீச்சர் மாறுதலில் வந்து சேர, எங்கள் படிப்பு சற்று உருப்பட்டுவிடுமென்ற நம்பிக்கை வந்தது. ஒரு நாள் வகுப்பில், ”யார் உங்கள் ரோல் மாடல்?” எனக் கேட்க ஆளாளுக்கு ”ஜெய்சங்கர், முத்துராமன்” என சினிமா நடிகர்கள் பெயரைச் சொல்ல, வசந்தி, ”எனக்கு எங்கப்பாதான் ரோல் மாடல் டீச்சர்” என்றாள்

“குட், அவருகிட்ட என்ன பிடிக்கும்?”

”டீச்சர், அவரு குள்ள உருவம், அத வச்சு மத்தவங்க கிண்டல் பண்ணுவாங்க. ஏன் என்னைக்கூட இவனுக எல்லாம், அதச் சொல்லிக் கிண்டல் பண்ணுவாங்க. ஆனா அவரு அது பத்தி ஒரு நாள்கூட வருத்தப் படமாட்டாரு. கேட்டா, நம்ம வேலையக் கரெக்டா செஞ்சா உருவம் என்னடா செய்யும்? என்னைவிட உயரமா ஒண்ணுமே செய்யாம இருக்கதவிட நான் எவ்வளவோ பரவாயில்லை அப்படின்னு சொல்லுவாரு. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்”

 மடல்பெரிது தாழை; மகிழினிது கந்தம்

உடல்சிறியா ரென்றிருக்க வேண்டா – கடல்பெரிது

மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்

உண்ணீரு மாகி விடும்.

-மூதுரை(12) – அவ்வை

 தாழை மடல் மிகப் பெரியது, ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது, மிக மிகச் சிறியதாக இருக்கும் மகிழம்பூ, நல்ல வாசம் வீசுகிறது. அதைப் போலவே கடல் மிகப் பெரியது என்றாலும் அதன் நீரைக் குடித்துத் தாகம் தீர்க்க இயலாது. அதே சமயம், கடற்கரையோரம் சிறு ஊற்றில் கிடைக்கும் நீரோ தாகம் தீர்க்கவல்லது.

உடலின் அளவை வைத்து ஒருவரைப் பெரியவர், சிறியவர் எனப் பாகுபடுத்துதல் வேண்டாமே.

ஐந்து சுந்தரிகள் என்ற மலையாளப் படத்தில் வரும் குள்ளனும் மனைவியும் பகுதியைப் பார்க்கும்போது ஜப்பான் இல்லை இல்லை ஆறுமுகம் சார் ஞாபகம் வந்தது.

நம்மிலிருந்து தொடங்கும் மாற்றம் – Mother and Child

ஒன்றின் மீதான தீரா வெறுப்பு, அதன் மறுபக்கத்தை அல்லது அப்படி ஒன்று இருக்கக்கூடும் என்பதைக்கூட பார்க்க மறுத்து விடுகிறது.

நம்மை நன்குபுரிந்து கொண்டவர்கள், நம்மீதான அக்கறையில் சொல்லும்போது அதை உதாசீனப் படுத்திவிடுகிறோம். ஆனால் அந்நபர் மீண்டும் மீண்டும், அதை நோக்கி நம்மைச் செலுத்தும் போது, சரி அதையும்தான் பார்ப்போமே என நாம் முயலும்போது, நிதர்சனம் நாம் கற்பனை செய்து கொண்டிருந்ததற்கு நேர்மாறாகவே இருக்கிறது; பெரும்பாலும்.

போலவே, வாழ்க்கையில் நமக்கு நேர்ந்த கசப்பனுவங்களின் தொகுப்பாக ஒரு கண்ணாடி அணிந்து கொள்கிறோம். மீத வாழ்வை அதன் மூலமே பார்த்து மேலும் மேலும் நம்மை ரணமாக்கிக் கொள்கிறோம். உன்மையில் நமக்காக ஒன்று இன்னொருத்தருக்காக ஒன்று என்ற பேதம் ஏதுமில்லை. நடப்புக்களை அவரவர் பார்வையிலேயே புரிந்து கொள்கிறோம்.  நமது கண்ணாடியை நீக்கி விட்டு நோக்கும் போது உலகம் நமக்கு வேறு விதமாக நாம் நினைத்ததற்கு மாறாகத் தோன்றுகிறது. அணிந்திருக்கும் கண்ணாடியைக் கழட்டி வெற்றுக்கண்ணால் நம்மைக் காணச்செய்ய உற்ற துணை தேவைப்படுகிறது.

குறிப்பாகப் பெண்கள் இத்தகைய கண்ணாடி அணிவதோடு மட்டுமல்லாது தம்மைச் சுற்றி ஒரு மாயச்சுவர் எழுப்பிக் கொள்கிறார்கள். அதைத் தாண்டி உள்ளே எவரையும் அனுமதிப்பதில்லை. தங்களுடை முன்கூட்டிய மதிப்பீட்டின் வழியே பிறரையும், அது எவராகிலும், பார்க்கிறார்கள்.

கரன் அப்படியான ஒரு பெண்மணி, 14 வயதில் கர்ப்பம் தரித்து குழந்தையை அடாப்சனுக்குக் கொடுக்க நேரிடுகிறது. அதன்பிறகு அவரது வாழ்க்கை நோயுற்றிருக்கும் அம்மாவைப் பார்த்துக் கொள்வதிலேயே போய் விடுகிறது அவரது உலகில் அம்மாவைத் தவிர வேற்று மனிதர்களுக்கு இடமில்லை. வீட்டு வேலைக்காரியிடம்கூட, இவ்வகை முதிர்கன்னிகளுக்கேயான சிடு சிடு கடு கடு குணத்துடனேயே பழகுகிறார். குறிப்பாக வேலைக்காரியின் குழந்தையை அவருக்குப் பிடிப்பதில்லை.

அம்மாவும் இறந்துபோக தனிமரமாகிறார். கரனைக் குறித்து அவர் அம்மா, “கரன் பாவம் வேதனைப்படுகிறாள், அதற்கு நான்தான் காரணம்” என்று சொன்னதைச் சொல்கிறாள் வேலைக்காரி.  உடனே கரன், “அதை அவர் என்னிடமல்லவா சொல்லி இருக்க வேண்டும்?” என்று வெடிக்கிறாள். அதற்கு வேலைக்காரி, “அவருக்கு உன்னைக் கண்டு பயம் கரன்” என்கிறாள்.  கரன் அதிர்ச்சியாகிறாள் பெற்ற அம்மாவே பயப்படும் அளவுக்கா நாம் நடந்து கொண்டோம் என.

கரன் வாழ்க்கையில் குறுக்கிடும் சக ஊழியர் பேக்கோ, கரனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறார். முதலில் கரன் மிகப் பிடிவாதமாக இருக்கிறார், தன் வட்டத்தவிட்டு வெளியே வர மறுக்கிறார்.
“I am a difficult person, I demand more from others, I know it is bad. But that’s how I am” எனத் தீர்மானமாகச் சொல்கிறார்.

தாயாரின் இறப்பும் தனிமையும் கரனைக் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கோ பக்கம் நகர்த்துகிறது. பழக்கம் வலுவாகி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். கரனின் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்கிறது. கரனின் ஸ்டெப் மகள் கேட்கிறாள், “ஏன் இது வரை உங்கள் மகள் எங்கே இருக்கிறாள் எனத் தேட முயற்சிக்கவில்லை, Find her now… before time runs out. After that, only regret remains. And regret is a killer.” அடுத்த நாள் முதல்,  மகளைத் தேடும் முயற்சியில் இறங்குகிறாள்.

கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் கரன் தற்போது வேலைக்காரியுடன் நல்ல உறவை பேணுவதோடு மட்டுமல்லாது வேலைக்காரியின் குழந்தையைச் சொந்த பேத்தி போலவே கவனித்து விளையாடி மகிழகிறாள்.

கரனின் மகளான எலிசபெத் 37 வயதான அழகிய, தனித்துவம் மிக்க, சுயசார்பான, சுயமரியாதையைப் பேணுகிற, எதிலும் தீர்மானமான, முன்னுக்கு வரத் துடிக்கும் வக்கீல். அவள் நேர்முகத் தேர்வில் தன்னைப் பற்றிச் சொல்வதில் இருந்து அவளைப் பற்றிய தெளிவான பிம்பம் நமக்கு உருவாகிறது
I live alone. I’ve never been married, and l have no plans to marry. I value my independence above all things. , That way I don’t have any expectations to fulfill… other than my own, which are great enough.

அவள் புதிதாகச் சேரும் நிறுவனத்தின் அதிபர் பால் உடன் அவளுக்கு உறவு உண்டாகி அதன் மூலம் கருவுண்டாகிறது.  கருத்தரித்திருப்பது தெரிந்து தற்போதைய வேலையை விட்டுவிட்டு மிகச்சுமாரான ஒரு வேலையை வேறு நிறுவனத்தில் தேடிக் கொள்கிறாள்.

“A person inside a person” என்ற வினோதத் தாய்மை நிலை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கிறது. அவள் வசிக்கும் அபார்ட்மெண்டில் இருக்கும் பார்வையிழந்த சிறுமியும் தன் பங்கிற்கு எலிசபெத்தின் மனதை மாற்றி அவளது அம்மாவைத் தேடச் செய்கிறாள்.

லூசி, ஜோசப் தம்பதியினர், பேக்கரி நடத்துகிறவர்கள்,  குழந்தை அடாப்சனுக்கு முயற்சிக்கிறார்கள். லூசியால் குழந்தைக்குத் தாயாக முடியாது என்பதால் அடப்சனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரே, 21 வயதுக் கல்லூரி மாணவி கர்ப்பம் தரித்திருப்பவள் அடாப்சனுக்குச் சம்மதிக்கிறாள் சில நிபந்தனைகளோடு. லூசி தம்பதியினரைக் கேள்விகளால் குடைந்தெடுக்கும் ரே,  ”உங்கள் பழக்க வழக்கங்கள், என் குழந்தை வளரப் போகும் சூழ்நிலை முதலியவற்றைப் பார்த்தபின்பே என் குழந்தையை உங்களுக்குத் தத்துக் குடுப்பதா இல்லையா “ என முடிவு செய்வேன் எனக் கறாராகச் சொல்கிறாள். எல்லாவற்றுக்கும் சம்மதித்து குழந்தை பிறக்கக் காத்திருக்கின்றனர்.

கரன், எலிசபெத்தைக் கண்டடைந்தாளா? எலிசபெத்தின் குழந்தை என்ன ஆகிறது(திரும்பவும் அடாப்சனா?), ரேயின் குழந்தை லூசி தம்பதிகளுக்குக் கிடைத்ததா என்பதெல்லாம் மீதிக் கதை.

ஆனால் கதையில் மையஓட்டமாக நான் கருதுவது Character Transformation என்பதைத்தான். ஆரம்பகாலக் கரனுக்கும் படத்தின் இறுதியில் இருக்கும் கரணுக்குமான குண வேறுபாடுகள். எலிசபெத்தின் கறார்தனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தாய்மை நிலையின் உன்னதத்தை உணர்வது. மிகமிகக் கறாரான மதிப்பீடுகளுடன் இருந்த ரேயின் மாறுதல் இவை எல்லாம் படத்தின் முக்கிய அம்சங்கள்.

தமிழிலும் இதே போன்ற முயற்சிதான் அர்ஸ் அன்புக்கரசுவாக மாறும் அன்பே சிவம். அதை மிக சப்டில் ஆகச் சொல்லி இருப்பார் கமல். நல்லதொரு முயற்சி என சுரேஷ் கண்ணன் சொல்வார்.

பாலின் மகள் எலிசபெத்தைப் பார்த்து ”Is that my father’s child you are carrying?” என வெகு இயல்பாகக் கேட்பதிலாகட்டும், பால் “if the child is mine, please come to me I will take care of both of you” எனச் சொல்வதிலாகட்டும். ரேயின் கறார்தனத்துக்கு எந்தவித எதிர்ப்புமின்றி ஜோசப்பும் லூசியும் பணிவதிலாகட்டும், கரனின் ஸ்டெப் மகள் அவளை மிக இயல்பாக ஏற்றுக் கொள்வதிலாகட்டும், படத்தில் மோசமானவர் என எவருமே இல்லை. ஆனாலும் சூழ்நிலை எப்படிப் புரட்டிப் போட்டு விளையாடுகிறது என்பதுதான் கதை.

மிக நல்ல படம். கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒன்று.

வழக்கம் போலவே படுக்கையறைக் காட்சிகளும், உடலுறவுக் காட்சிகளும் ( நன்றி – ) உண்டு படத்தில். குடும்பத்துடன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.

இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லிப் பரிந்துரைத்த   அண்ணாவுக்கு நன்றி.