லூசியா – கன்னடத் திரைப்படம்

Lucia

கன்னடத் திரையுலகில் நடிகராக அறிமுகமான பவன் குமார், ”லைஃபு இஷ்டனே” என்றொரு நகைச்சுவை படமொன்றை இயக்குகிறார். அதன்பின், லூசியா திரைப்படத்திற்கான ஸ்கிரிப்டைத் தயார் செய்துகொண்டு, முன்னணி நடிகர்களை அணுகுகிறார். “இதெல்லாம் ஒரு படமா?” என எல்லோருமே உதறித்தள்ளிவிட, மனம்நொந்து தனது வலைப்பக்கத்தில் இதைப்பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறார். அவரது ரசிகர்கள், நண்பர்கள் என சுமார் 110 பேர் சேர்ந்து 55 லட்சம் ரூபாயை 27 நாட்களில்,  சேகரித்துக் குடுக்கின்றனர்; Crowd Funding என்கிற அடிப்படையில்.

உற்சாகமாகப் படத்தைத் தயாரிக்கிறார்.  அடுத்த சோதனையாக அதை வாங்கி வெளியிட எந்த விநியோகஸ்தரும் தயாராக வரவில்லை. மீண்டும் விரக்தி மேலிட, லண்டன் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்க, அங்கே அது ரசிகர்களால் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. உடனே விநியோகஸ்தர்கள் விழித்துக் கொண்டு ஓடி வர, திரையிட்ட முதல் வாரத்திலேயே 2 கோடி வசூலித்திருக்கிறது.

இதரப் படங்களைப் போல மேலோட்டமாக, அல்லது அசிரத்தையாகப் பார்த்தால் இது உங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. கதை  3 திரிகளாகச் சொல்லப்படுகிறது. மருத்துவமணையில் வெகுநாட்களாக கோமாவில் இருக்கும் நிக்கி, அவனை விடுதலை(கருணைக் கொலை) செய்துவிடத் துடிக்கும் அவனது காதலி, அவளின் நோக்கம் என்ன என்பதை விசாரிக்கும் காவல்துறை, என இதெல்லாம் நடப்பதின் இடையிடையே, நிக்கிக்கு விபத்து எப்படி ஏற்பட்டது என்பதின் முன் கதையைச் சொல்கிறார்கள்.

திரையரங்கொன்றின் பால்கணியில், தாமதமாக வரும் நபர்களை டார்ச் விளக்கின் ஒளியின் உதவியோடு, அழைத்துச் சென்று அவரவர்க்கான இருக்கையில் அமரச் செய்யும் தொழிலாளி  நிக்கி. குறைந்த அளவே படிப்பு, எந்தத் தனிப்பட்ட திறமையும் இல்லாத, பெண் தோழிகளை வசீகரிக்கவியலாதவன். இந்த ஏக்கம் அவன் ஆழ்மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.  இரவில் சரியாக உறக்கம் வருவதில்லை.

அப்படியான ஓரிரவில் வீதியில் நடை பழகுகிறான்,  காவல்துறையினர் அவனைக் கேலி செய்து ஓடவிடுகின்றனர். சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் இருவர் இவனைப் பார்த்து சிரிக்க, இவனது பிரச்சனையத் தெரிந்து கொண்டு “லூசியா” என்ற மாத்திரையை அறிமுகப் படுத்துகிறார்கள். அந்த மாத்திரையின் உதவியால் நல்ல தூக்கமும் கனவும் வருகிறது.

கனவு நமக்கெல்லாம் வருவதுதான். என்றாலும் நிக்கிக்கு, அந்த மாத்திரையின் காரணமாக வரும் கனவு வித்தியாசமாக இருக்கிறது. காலையில் எந்தக் கனவின் இடையில் எழுகிறானோ அதன் தொடர்ச்சியை அன்றைய இரவில் காண்கிறான்; மெகாத்தொடர் போல. கனவில் வருவதெல்லாம், இவன் இயல்வாழ்வில் அடையமுடியாமல் போனவைகளின் நீட்சி. நிக்கிக்கு முன்னணி கதாநாயகன் ஆகவேண்டும் என்பதுதான் ஆசை. அது கனவில் நிறைவேறுகிறது. இவனை கல்யாணம் செய்ய மறுக்கும் பெண், கணவில் இவனிடம் வாய்ப்புக்காக ஏங்கும் நடிகையாக.

இந்தப் படத்தில் நடித்த பெரும்பாலோர், ஒரே படத்தில் இரண்டு வேடங்களைச் செய்கின்றனர். ஒன்று நிஜத்தில், இன்னொன்று நிக்கியின் கனவில். நிக்கி – சினிமாத் தியேட்டர் ஊழியனாக நனவில், முன்னணி நடிகனாகக் கனவில். ஸ்வேதா – பிட்சாக் கடை ஊழியராக நனவில், சினிமா வாய்ப்புக்காக ஏங்கும் மாடலாக கனவில். சங்கரன்னா – தியேட்டர் உரிமையாளராக நனவில், நிக்கியின் மேனேஜராகக் கனவில்.

நனவிற்கும், கனவிற்கு வித்தியாசம் காட்ட, நனவைக் கலரிலும் கனவைக் கருப்பு வெள்ளையிலும் காட்டியிருக்கிறார்கள். மூன்று திரிகளையும், சற்றும் விலகாது கூடவே சென்றால், நல்லதொரு சினிமா அனுபவம்.

படத்திற்கு ஆகச்சிறந்த பங்களிப்பு எடிட்டர் குழுவிடமிருந்து. இத்தனை சவாலான கதையை, மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

நிக்கி போன்ற இளைஞர்களைத் தினவாழ்வில் நாம் எதிர்கொள்கிறோம். அவர்களிடமிருந்து நமக்குத் தேவையான வேலை/சேவையைப் பெற்றுக் கொண்டு அவர்களை உதாசீனப்படுத்தி விடுகிறோம். அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசாபாசங்களும் ஏக்கங்களும் இருக்கும் என்பதைக் கவனிக்க மறந்துவிடுகிறோம்.

பவன் குமாருக்குத் திரை நடிகர்கள் மீது, குறிப்பாக அவர்களது அலட்டல்மீது ஒரு வெறுப்பு இருக்கும் போலிருக்கிறது. நிக்கி கனவில் முன்னணி நடிகனாகிச் செய்யும் அடாவடி அலட்டல்கள் சிரிப்பை வரவழைத்தாலும் அதுதான் உண்மை.

இதைத் தமிழில் “எனக்குள் ஒருவன்” என்ற பெயரில் சித்தார்த் நடித்திருக்கிறார். படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இதற்கடுத்த படமாகத்தான் “U Turn” படத்தை எடுத்திருக்கிறார்.

Leave a comment