Month: October 2009

வாழும் வரை போராடு


கோமங்கலம் புதூர் கிராமம் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் வழியில் இருக்கிறது. ஓரளவு பெரிய கிராமம். பகல் நேரத்தில் நின்று செல்லும் மப்சல் பேருந்துகள் இரவில் நிறபதில்லை. ஒரு அவசர வேலையாக வெளியூர் சென்று நள்ளிரவில் திரும்பும் நீங்கள் பொள்ளச்சியில் ஏறி கோமங்கலம்புதூரில் இறங்க வேண்டுமென டிக்கட் கேட்கிறீர்கள். நடத்துனர் அதற்கு கோமங்கலம் நிற்காது எனக் கறாராகச் சொல்லி உடுமலை டிக்கட் கொடுத்து உங்களை உடுமலையில் இறக்கி விட்டுச் செல்கிறார்.

இந்தச் சூழ்நிலையில் உங்கள் எதிர் விளைவு என்னவாக இருக்கும்?

இரவு முழுவதும் உடுமலை பேருந்து நிலையத்தில் காத்திருந்து அதிகாலை முதல் பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேருவீர்கள்; மனதிற்குள் அந்த நடத்துனரை திட்டியவாறே. சில நாட்களில் இதை மறந்துவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடுவீர்கள்.

ஆனால் கோமங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராஜு வித்தியாசமானவர். அவருக்கு நேர்ந்த இச்சம்பவத்தை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்து நடத்துனருக்கு அபராதம் விதிக்குமாறு செய்திருக்கிறார்.

இதிலென்ன இருக்கு? அவருக்கு வேறு வேலை இல்லை. எனக்கு எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருக்கு என்கிறீர்களா? நீங்கள் சொல்லுவதும் ஒரு விதத்தில் ஞாயம்தான். அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை.

ஏனெனில் அவர் கோவைச் சிறையில் ஆயுள் கைதி. 6 நாட்கள் பரோல் லீவில் ஊருக்கு போனபோது நேர்ந்ததுதான் இது. பரோல் முடிந்து அவர் மீண்டும் சிறைக்கு வந்ததும் கோவை நுகர்வோர் நீதி மன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உடல் நலக் குறைவு போன்றவற்றைச் சொல்லி 10,000 ரூபாய் இழப்பீடும் கேட்கிறார்.

அந்தக் கடிதத்தையே பிராதாக எடுத்துக் கொண்டு நீதிபதி நடத்துனர் முருகனுக்கு சம்மன் அனுப்புகிறார். முருகன் ஆஜரானதும் நீதிபதி முன்பாக சமரசம் செய்து கொண்டு 10,000 க்குப் பதிலாக 3,000 என பைசல் ஆகிறது.

அபராதத் தொகையை கோவையிலுள்ள உடல் ஊனமுற்றோர் விடுதிக்கு நன்கொடையாக அளித்துவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார் ராஜு.

எத்தனை படிப்பினைகள் இவ்வொரு சம்பவத்தில்.

1. போராடும் குணத்தை எந்தச் சூழலிலும் விடக்கூடாது. ஆயுள் கைதியாக இருந்தாலும்கூட.
2. எந்தச் சூழலிலும் தாழ்வு மனப்பான்மை கூடாது. தானொரு ஆயுள் கைதி என்ற தாழ்வு மனப்பான்மையுடன் அவர் இதை அணுகவில்லை.
3. நீதி எல்லோருக்கும் பொதுவானது. ஆயுள் கைதி கொடுக்கும் பிராதெல்லாம் முக்கியமா என அதை உதாசீனப்படுத்தாமல், வெறும் கடித்ததை வைத்தே வழக்கை நடத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதி.
4. தவறை ஒத்துக் கொள்வது. செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு தன்னைத் திருத்திக் கொண்ட நடத்துனர்.
5. உதவி செய்ய சூழ்நிலை ஒரு தடையல்ல. கிடைத்தவரை லாபம் என எண்ணாமல் பணத்தை நன்கொடையாக அளித்த ராஜு ஒரு பாடம்.

தண்டவாளக் கற்களுக்கிடையே கிளர்ந்தெழுந்த செடி மொட்டு விட்டு மலர்வதைப் போன்ற இவ்வித நிகழ்வுகள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதோடு வாழ்க்கையின் மீதான் நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறதல்லவா?

****************************************************************************************

ramalingam said…

இதில் கைதி வழக்குப் போட்டது மட்டும்தான் பாஸிட்டி
வ். மற்றதெல்லாம் just coincidences. அவற்றில் எந்த வாழ்க்கை
ப் பாடமும் இல்லை. ஊழலும், லஞ்சமும் மலிந்து விட்ட இன்றைய
சூழ்நிலையில் இவை,
எல்லோரும் நல்லவரே என்ற தவறான நம்பிக்கையைக் கொடுத்து விடும். இதை வைத்து முடிவுகட்டி அந்தக் கைதி வெளியே வந்தால் ரொம்ப சிரமப்படுவார்.

**************************************************************************************

அன்பின் ராமலிங்கம்,

பிறர் போலல்லாது உங்களுக்கு மாற்றுப் பார்வை இருக்கிறாதென்பது மகிழ்வாக இருக்கிறது. என்றாலும் உங்கள் கருத்துக்கள் மீதெனக்கு விமர்சனமும் இருக்கக்கூடும் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களென நம்புகிறேன்.

//இதில் கைதி வழக்குப் போட்டது மட்டும்தான் பாஸிட்டிவ். //

நீங்கள் மட்டும்தான் அவரைக் கைதி என்றழைத்திருக்கிறீர்கள். உங்கள் அடிமனதில் அவர் கைதி என்பதாழப் பதிந்திருக்கிறது. ஆனால் நீதிபதி அவ்வாறில்லாமல் நீதியின் பால் நின்றிருக்கிறார். அதி பாஸிட்டிவ் அல்லவா?

//மற்றதெல்லாம் just coincidences. //

இல்லை என்பதுதான் என் தரப்பு. லட்சங்களில் சம்பளம் வாங்கும் பொழுது அளிக்கும் நன்கொடையை விட இதைப் போன்றோர் அளிக்கும் நன்கொடை மதிப்பு மிக்கது.

//அவற்றில் எந்த வாழ்க்கைப் பாடமும் இல்லை. //

உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு இருப்பதாகவும், இருக்கக்கூடுமெனவும் நம்பியதால் எழுதினேன். பின்னூட்டங்களும் அதை உறுதிப் படுத்துகிறது.

//ஊழலும், லஞ்சமும் மலிந்து விட்ட இன்றையசூழ்நிலையில் //

இது ஒரு வித பொது மனோபாவம். என்றாலும் வேறு விதத்தில் வளர்ந்துகொண்டுதானிருக்கிறோம். இப்படி இருக்கே என்று இடிந்து போய் யாரும் அவரவர் வேலைகளைப் பார்ப்பதிலிருந்து ஒதுங்கி விடுவதில்லை. எங்குதான் இல்லை லஞ்சம்? அதைப் புறந்தள்ளி அடுத்து இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். லஞ்சம் லஞ்சம் எனப் புலம்புவதில் அர்த்தமில்லை. சில சமயங்களில் லஞ்சம் கொடுத்துத்தான் காரியம் சாதிக்க வேண்டும் அதனால் 10 பேருக்கு நல்லது நடக்குமென்றால் கொடுக்க வேண்டியதுதானே?

ஆனால் தனி மனிதனாக உங்கள் சுகத்திற்காக லஞ்சம் கொடுக்காமல் இருக்கலாம். அதை விட முக்கியம் லஞ்சம் வாங்காமல் இருப்பது.

//எல்லோரும் நல்லவரே என்ற தவறான நம்பிக்கையைக் கொடுத்து விடும். //

எல்லோரும் நல்லவெரே என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. அவரவர் நிலையில் இருந்து பார்த்தால்தான் அது சரியா தவறா எனத் தெரியும். உங்களுக்குச் சரியெனப் படுவது எல்லோருக்கும் சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

//இதை வைத்து முடிவுகட்டி அந்தக் கைதி வெளியே வந்தால் ரொம்ப சிரமப்படுவார்.//

மீண்டும் கைதி என்கிறீர்கள். அவர் ஏன் சிரமப்படுவார்? ஆயுள் கைதியாக இருப்பதைவிட வேறு என்ன பெரிய சிரமம் வந்துவிடப் போகிறது?அவர் கைதியாக இருக்கும்போதே போராடவும் போராடிக் கிடைத்ததை பிறருக்குக் கொடுத்து மகிழவும் தெரிந்திருக்கிறது.

இதைவிட வாழக்கைக்கான படிப்பினையை வேறு எந்தப் புத்தகமும் கொடுத்துவிட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

Advertisements

எழுத மறந்த கதை


நண்பர்கள் முரளிக் குமார் மற்றும் ஜோசப் பால்ராஜ் இருவரும் நான் எழுத வந்த கதை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தனர். இருவருக்கும் நன்றி. இன்றைய ராகு கேது பெயர்ச்சிப் பலனில் ஒத்தி போட்டிருந்த வேலைகளெல்லாம் உடனடியாக முடியும் எனப் போட்டிருந்தது. முதல் வேலையாக இதை முடித்து விட்டேன்.

வாசிக்கும் பழக்கம் சிறுவயதிலேயே தொடங்கி விட்டது. குமுதம், கல்கி, விகடன், குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, சினிமா எக்ஸ்பிரஸ் என எல்லா வார மாத இதழ்களும் எங்கள் வீட்டில் இருக்கும். என் தந்தை ஒரு சர்குலேசன் லைப்ரரி நடத்தினார். உடன் வேலை பார்க்கும் 10 பேரைச் சேர்த்துக் கொண்டு ஆளுக்கு ஒரு இதழ் என வாங்கி பரிமாறிக் கொள்ளும் ஏற்பாடு அது. பாடப்புத்தகங்களை விட இந்தப் புத்தகங்களைத்தான் அதிகம் படித்திருக்கிறேன்.

மறக்க முடியாத இரு இதழ்கள் மயன் மற்றும் திசைகள்.(பதிவர்கள் யாரிடமாவது இதன் பிரதிகள் இருக்குமா?) மயனில் சுஜாதா எழுதிய கம்ப்யூட்டரை எளிதாகக் கற்றுக் கொள்ளுங்கள் கட்டுரை கம்ப்யூட்டர் பற்றிய ஆர்வத்தைத் தூண்டியது. பைனரியை எளிதாகச் சொல்லித்தர இரண்டு டம்ளர்களை உபயோகப்ப்டுத்தியிருப்பார். திசைகள் வித்தியாசமான பத்திரிக்கை. இளைஞர்களைக் குறி வைத்து சாவி நடத்தியது. மயன் இதயம் பேசுகிறது மணியன் நடத்தியது. கொஞ்ச காலமே வந்தாலும் இவ்விரு பத்திரிக்கைகளும் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். திசைகள் பத்திரிக்கையிலிருந்து உருவானவர்களில் மாலனும், இயக்குனர் வசந்தும் ஞாபமிருக்கிறார்கள் மற்றவர்கள் பற்றித் தெரியவில்லை. சுப்ரஜா, சாருப்பிரபா சுந்தர், இரவிச்சந்திரன் எல்லாம் என்ன ஆனார்கள்?

அதன்பிறகு 9 ஆம் வகுப்புப் படிக்கையில் பழனிக்குக் குடி பெயர்ந்தோம். அங்கிருந்த நூலகரிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார் என் தந்தை. என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி அது. நாவல்களைத் தொடர்கதையாகப் படித்த எனக்கு முழு நாவலையும் ஒரே வீச்சில் படிக்கக் கிடைத்தது.

எல்லோரையும் போல குறும்பூர் குப்புசாமி, சாண்டில்யன் என ஆரம்பித்து சுஜாதா, மாலன், பாலகுமாரன், சுப்ரமண்யராஜு என விரிவடைந்தது. என்றாலும் எழுதும் நோக்கம் ஒரு போதும் தோன்றியதில்லை. முதலில் நல்ல வாசகனாக இருந்து பிறகுதான் எழுத வரவேண்டும் என வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சுஜாதா சொல்லியிருக்கிறார். எனவே எழுதும் ஆசையின்றிக் கிடைத்தையெல்லாம் படித்துக் கொண்டிருந்தேன்.

2007 நவம்பர் வாக்கில் வார இதழ் ஒன்றில் வந்த பிளாக் அறிமுகம் மூலம் சிலரது பதிவுகளை படிக்கவும் பலரது வலைகளை மேயவும் வாய்த்தது. புது உலகம் கண்முன்னே விரிந்தது. எழுதவதற்கான எளிதான வாய்ப்பு எனப் புரிந்தது. என்றாலும் என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்ற தயக்கம் அடிமனதில் இருந்தது. சிலருக்குப் பின்னூட்டம் மட்டும் இட்டுக் கொண்டு காலத்தைக் கடத்தினேன்.

பிறகுதான் 2008 மே வாக்கில் இத்தளத்தை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எழுதிய பதிவுகளெல்லாம் குப்பைதான். அது ட்ரையல் பால் போடுவது போல. முதலில் பரிசல், வெயிலான் என சிறிது சிறிதாக நட்பு வட்டம் சேர்ந்தது. எனக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது நான் எழுத வந்த அதே வேளையில் எழுத வந்த நண்பர்கள் பரிசல், ஆதி, வெண்பூ, அப்துல்லா, நர்சிம், அனுஜன்யா என இன்றையப் பிரபலப் பதிவர்கள்தாம். மொய் செய்தும் எதிர் மொய் செய்தும் வளர்த்துக் கொண்ட இந்த வட்டத்திற்கு வெளியே பெயர் தெரிய ஆரம்பித்ததும் அதன் பின் நானும் எழுதுகிறேன் என எழுதிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியும்.

எழுதிச் சாதித்தது எதுவும் இல்லை என்றாலும், 100 க்கு 100 பதிவுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து உதவி செய்யத் தயாராக இருப்பதாக வந்த மின்னஞ்சல் மிக முக்கியமானது. இதன் மூலம் அனுஜன்யாவுடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. நியூக்ளியஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் ஹெச் ஆர் மேனஜர் சுகன்யாவிற்கு வேலை தரவும் மேற்படிப்புக்கு உதவி செய்யவும் தயாராக இருப்பதாக அனுப்பிய மின்னஞ்சல் ஆத்ம திருப்தியைத் தந்தது.

நட்சத்திர வாரத்தில் எழுதிய பதிவுகளும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. விகடன், நவீன விருட்சம் வார்த்தை போன்ற சிற்றிதழ்களில் எனது எழுத்துகள் வெளியாகி இருக்கின்றன. எதையும் சாதிக்காவிட்டாலும் ஒன்றும் சோடை போகவில்லை என்று சொல்லிக் கொள்ளலாம்.

The fishermen know that the sea is dangerous and the storm terrible, but they have never found these dangers sufficient reasons for remaining ashore.

Vincent Van Gogh

.

புரிந்ததும் புரியாததும்

சென்ற பதிவு பலருக்குப் புரியவில்லை. புரிந்தவர்களுக்கும் தொடர்பென்னவெனப் புரியவில்லை. பரவாயில்லை. அதை நான் விளக்கப் போவதில்லை. முல்லா கதை ஒன்று மட்டும் சொல்லலாம்.

எதைப் பற்றி என்றாலும் ஒரு கருத்து வைத்திருப்பார் முல்லா. எனவே அவரை மேடையில் ஏற்றி விட்டு கேள்வி கேட்டு கும்மி அடிக்கலாம் என நினைத்த கும்பல் ஒன்று ஒரு விசேச நாளில் அவரை மேடை ஏற்றியது.

மைக்கைப் பிடித்த முல்லா கேட்டார், “நண்பர்களே நான் என்ன பேசப் போகிறேன் எனத் தெரியுமா?”.

கூட்டத்தினர் : ”தெரியாது”

முல்லா : “நான் என்ன பேசப் போகிறேன் என்றே தெரியாதவர்களிடம் பேசிப் பிரயோஜனமில்லை” என்று சொல்லி இறங்கிப் போய்விட்டார்.

மீண்டும் ஒரு முறை முல்லாவை மேடை ஏற்றினர். மைக்கைப் பிடித்த முல்லா கேட்டார், “நண்பர்களே நான் என்ன பேசப் போகிறேன் எனத் தெரியுமா?”.

கூட்டத்தினர் : ”தெரியும்”

முல்லா : “உங்களுக்குத் தெரிந்ததை நான் மீண்டும் பேசுவதில் என்ன பிரயோஜனம்? “என்று சொல்லியவாறே இறங்கிப் போய்விட்டார்.

இந்த முறை அவரை எப்படியும் மாட்டிவிட வேண்டுமென்று முடிவு செய்து அவரை மீண்டும் மேடையேற்றினர். அவரது வழக்கமான கேள்விக்கு ஒரு பாதி ”தெரியும் “ எனவும் மற்றொரு பாதி “தெரியாது” எனவும் பதிலளித்தனர்.

உடனே முல்லா சொன்னார், “ தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்”

டிஸ்கி : நண்பர்களே இந்தப் பதிவாவது புரிந்ததா?

.

வல்லுனர் ரங்காச்சாரி


”அடுத்த பந்தை வாலாஜா முனையிலிருந்து வீச இருப்பவர் மார்ஷல். எதிர் கொள்ளவிருப்பவர் ஸ்ரீகாந்த்”

”வீசும் கை விக்கெட்டின் மேல் வர வீசினார். சற்று அளவு குறைவாக வந்து விழுந்த பந்தை முன்காலிலே சென்று ஓங்கி அடிக்கிறார். அவருக்கு அது ஆறு ரன்களைப் பெற்றுத்தருமா ? இல்லை நான்கா? இல்லை இல்லை எல்லைக் கோட்டின் அருகே இருந்த தடுப்பாளர் அதைப் பிடித்து விடுகிறார். இத்துடன் ஸ்ரீகாந்தின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது. அவரது ஓட்ட எண்ணிக்கை 12345 இந்திய அனியன் ஆட்ட எண்ணிக்கை 67890”

”இந்தப் பந்தைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன வல்லுனர் ரங்காச்சாரி அவர்களே?”

“பந்தை வீசியவரும் இன்ஸ்விங்கர் என்ற வகையிலே நன்றாகத்தான் வீசினார். அதை அடித்தவரும் கவர் டிரைவ் என்ற முறையில் அதை நன்றாக அடித்து ஆடினார். எல்லைக் கோட்டின் அருகே பிடித்தவரும் நன்றாகப் பிடித்துவிட்டார்”

”மொத்தத்தில் ரசிகர்களுக்கு நல்ல தரமான கிரிக்கெட் ஆட்டம் காணக் கிடைக்கிறது”

”நன்றி ரங்காச்சாரி அவர்களே”

டிஸ்கி : நான் வன்முறையாளன் அல்ல என என்னை அழைத்துச் சொன்ன அத்துனை நல் உள்ளங்களுக்கும் நன்றி.