Month: February 2010

விதைகள் விழுந்த நிலம்

விதைகள் புதைந்திருக்கும்
நிலமெப்போதும்
வெம்புவதில்லை

திசையெங்கும்
வேர்கள் கிளைத்துக்
கிழிக்கும்போதும்
வருந்துவதில்லை

விருட்சம்
வசந்தத்தின் வனப்பில்
தன் நிலை மறக்கையில்
புலம்புவதில்லை நிலம்

புயலோ, மழையோ,
இடியோ, வெயிலோ
எம்மாற்றமும் இன்றி
எப்போதும்போல்
விருட்சத்தைத்
தாங்கியபடியே

பின்னொரு நாளில்
விருட்சம் வீழும்போதும்
வேர்க்ளைத் தன்னுள்ளே
புதைக்கும் நிலம்
எப்போதும் அழுவதுமில்லை.

அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்

12 சிறுகதைகள். ஒவ்வொன்றிலும் கதாசிரியன் ஏதோ ஒரு பாத்திரத்தில். சிலதில் முக்கியமானவராக சிலதில் சாதாரணமானவராக, சிலதில் வந்து போகிறவராக. தொடர்ச்சியாக வாசிக்கையில் ஒரு நாவலாக விரியும் இப்படைப்பின் பிற்பகுதியில் இன்னொரு நுட்பம் இருக்கிறது.

சிறுகதைகளின் முடிவு குறித்து வாசகனுக்கு வேறு விதமான கருத்து இருப்பது உண்மை. இந்தச் சிறுகதைகளுக்கு ஒன்றிற்கு மேல் சாத்தியப்பட்ட முடிவுகளையும் கொடுக்கிறார். சில முடிவுகளை நம்மைக் கற்பனை செய்துகொள்ளச் செய்கிறார்.

நாவலாகப் பார்த்தால் நாவல். சிறுகதைகளாகப் பார்த்தால் சிறுகதைகள். என்றாலும் இதில் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் ஆச்சர்யமானவை. உங்களுக்குத் தேவையான சாத்தியக்கூறுகளை எடுத்துக் கொண்டு நீங்களே ஒரு நாவலைக் கட்டமைக்க முடியும்.

க்யூபிஸம் என்ற முறையில் சொல்லப்பட்ட இந்த நாவலில் வெளிப்படும் அங்கதத்தை நான் மிகவும் ரசித்தேன்.

நாவலின் தலைப்பு “அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்” ஆசிரியர் எம் ஜி சுரேஷ்.

எம்.ஜி சுரேஷ் பற்றி மேலும் அறிந்து கொள்ள.

ஆசிரியரின் மற்றொரு நாவல் சிலந்தி. பொதுவாக எழுத்தாளர் தன்மை ஒருமையில் எழுதுவார்கள் அல்லது அவன் அவள் என ஒருமையில் அழைத்து எழுதுவார்கள். இவர் ஒரு வித்தியாசமாக நீங்கள் என நம்மை அழைத்து எழுதியிருக்கும் நாவல் இது.

ஒரு வித்தியாசமான கண்ணாமுச்சி விளையாட்டு இந்நாவலைப் படிப்பது. ஆசிரியர்தான் கொலைக் குற்றம் செய்தவர். நாம் அதைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளர். வழக்கமான அங்கதம் இக்கதையிலும் விரவியிருக்கிறது.

அதிலும் ஆசிரியர் சொல்லும் நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் அல்லது பெண்ணாக இருந்தால் என இரு சாத்தியப்பாட்டிலும் கதை பயனிக்கிறது. இந்நாவல் விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். வாசிக்கும் நாமே வாசிக்கும் கதையில் ஒரு கதாபாத்திரமாக மாறும் விந்தை.

இவ்விரு நாவல்களையும் தேடி வாசிக்கத் தூண்டியது சாருவின் கீழ்கண்ட ஒரு பத்தி ( தாந்தேயின் சிறுகதை என்ற பதிவில் )

// எழுத்தாளர்களல்லாத எழுத்தாளர்களைக்கூட(தமிழவன், பெருமாள் முருகன், யுவன் சந்திர சேகர்) என்னால் சகித்துக் கொள்ள முடியும், ஆனால் எம் ஜி சுரேஷ் போன்ற விபத்துக்கள் தமிழ்சூழலில் மட்டுமே சாத்தியம்//

சுரேசும், யுவனும் சம்பிரதாயக் கதைசொல்லலிருந்து விலகி மொழியின் பல்வேறு பட்ட சாத்தியங்களை முயற்சித்திருக்கிறார்கள். நவீன இலக்கியத்திற்கு தன்னை விட்டால் வேறெவரும் அத்தரிட்டி இல்லை என முழங்கிவரும் சாரு இவர்களை வெறுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஏன் பெருமாள் முருகன்?

ஏறு வெயில் மற்றும் கங்கணம் மாதிரியான நாவல்கள் மூலம் திருச்செங்கோட்டு வாழ்க்கை முறைகளையும் அந்த மக்களை அவர்கள் வேர்வை வீச்சத்துடனும் உழைப்பின் உவர்ப்புடனும் கண்முன்னே நடமாடவிட்டவர் பெருமாள் முருகன்.

ஒரு எழுத்தாளரை இப்படி மொத்தமாகப் புறக்கனிக்க என்ன காரணம்?

எப்படி இருந்தாலும் தேடி வாசிக்கத் தூண்டிய சாருவிற்கு நன்றி.

.

சென்ற வார உலகம்

The World This Week என்றொரு நிக்ழச்சி 80 களின் இறுதியில் வந்தது. தொகுத்து வழங்கியவர் இன்றைய NDTV உரிமையாளர் திரு.பிரணாய் ராய். மிகச் சிறந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக அக்காலகட்டத்தில் வந்து கொண்டிருந்தது. Alpha Plus மற்றும் நஸ்ருதீன் ஷா வழங்கிய TurinignPoint இரண்டும் எனக்குப் பிடித்த மற்ற நிகழ்ச்சிகள்.

TWTW சென்ற வாரம் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒரு மணி நேரத்தில் சுவைபட வழங்கிய ஒரு நிகழச்சி. மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் வழக்கம் போலவே இருக்க இந்நிகழ்ச்சி மட்டும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். காலவெள்ளத்தில் அவரும் தனியார் தொலைக்காட்சி உரிமையாளராக ஆகி, மற்ற தொலைக்காட்சிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார். சில சமயம் நல்ல நிகழ்ச்சிகளும் வருகிறது.

அதே போலத்தான் பதிவுலகில் அநேகப் பதிவுகள் எழுதப்பட்டாலும் எல்லாப் பதிவுகளும் எல்லாராலும் படிக்கப் படுவதில்லைல்; அந்த நோக்கத்தில் எழுதப் படவில்லை என்றாலும். சில நல்ல பதிவுகள் பெரும் கவனத்தைப் பெறாமல் போவதும் சில சுமாரான பதிவுகள் (அளவு கோல் ஆளாளுக்கு மாறுபடும்) அதிக வோட்டுக்கள் வாங்கி பரிந்துரையில் இருப்பதும் தொழில்நுட்பக் குளறுபடி மற்றும் கூட்டுமுயற்சி போன்ற காரணங்கள்தான்.

குழுமங்களில் இருப்பவர்களுக்கு குழும உறுப்பினர் ஒருவர் ஒரு நல்ல பதிவைப் படித்தால் அதை உடனே சுட்டியுடன் குழுமத்தில் வெளியிடுகிறார். உடனே அனைவரும் அதைப் படிக்க ஏதுவாகிறது. அந்தப் பதிவும் போதிய கவனம் பெறுகிறது.

என்னுடைய கதம்பத்தில் சில கவிதைகளையும், சிறுகதைகளையும் அறிமுகப் படுத்தினேன். அதே போல மேலும் சிலரும் செய்கிறார்கள். என்றாலும் இதை ஒரு தனி வலைப்பூவில் செய்தால் ஒரு பொதுவெளியில் அனைவரும் பார்க்க, படிக்க ஏதுவாகும் என்ற மாதவராஜின் சிந்தனை வரவேற்கப் ப்டவேண்டியது.

பொதுவாக கீழ்கண்ட விஷய்ங்களைச் செய்வதாக முடிவு செய்திருக்கிறோம்.

1. பதிவர்கள் / பதிவரல்லாத வாசிப்பாளர் எவராக இருந்தாலும் மின்ன்ஞ்சல் அனுப்பலாம்.
2. கடந்த வாரத்தில் தாங்கள் படித்ததில் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தலாம்.
3. அந்தப் பதிவுக்கான சுட்டி இணைத்தல் அவசியம்
4. ஏன் பிடித்தது என்பதற்கான ஒரு குறிப்பும் குறைந்தது 10 வரிகள் இருத்தல் நலம்.
5.பதிவை விமர்சிக்கலாம். பதிவை எழுதியவ்ர் மீதான விமர்சனத்தை வெளியிட இயலாது.
6. ஒருவரே தொடர்ந்தும் எழுதலாம்.
7. அதிகப் பதிவர்கள் இருக்கும் பட்சத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.
8. இங்கு வெளியிடப் படுவது மட்டுமே அது நல்ல பதிவுகள் மற்றவை அவ்வாறல்ல என்ற கொள்ளக் கூடாது.
9. தங்கள் சொந்தப் படைப்பைப் பற்றி எழுதுதல் கூடாது.
10.இங்கே பதியப்படும் கருத்துகள் பரிந்துரைத்தவரின் கருத்துக்கள். இந்த வலைப்பூவை நடத்துபவர்களின் கருத்துக்கள் உடன்படவோ அல்லது மாறுபட்டோ இருக்கலாம்.

வாடாத பக்கங்களை வாசிக்க இங்கே வாருங்கள்.

உங்கள் பங்களிப்பை jothi.mraj@gmail.com அல்லது vadakaraivelan@gmail.com க்கு மின்னஞ்சல் மூலம் செய்யலாம்.

ஊருக்குப் போயிருந்தேன்

70 களின் பிற்பகுதியில்தான் எங்கள் ஊருக்கு(வடகரை) பேருந்து வசதி கிடைத்தது. அது வரை 5 கி மீ தூரமுள்ள பம்புளி (பைம்பொழில் என்ற அழகான தமிழ்ப்பெயரின் மரூஉ) -இல் இறங்கி நடக்க வேண்டும் அல்லது மாட்டுவண்டிப் பயணம். அப்பொழுதெல்லாம் பழனியில் இருந்து செல்ல 12 மனி நேரம் ஆகும்; இப்பொழுது அதிகப்பட்சம் 7 மணி நேரம்தான் ஆகிறது.

12 மணி நேரப் பயணம் என்பதால் எங்களை வரவேற்க மாட்டுவண்டி கட்டி வந்து காத்திருப்பார்கள் என் மாமன்மார். அப்பா, அம்மா, நான் என மூன்றே பேர்தான் என்றாலும் 3 அல்லது 4 மாட்டு வண்டிகளில் படை திரண்டு வந்திருப்பார்கள்.

“எதுக்கு வீனா அலைச்சல்” என்ற அப்பவின் கேள்விக்கு அத்தானையும் மருமவனையும் பாக்கதவிட வேற என்ன பெரிய சோலி?” என்பதான பதில்தான் வரும். ஒரு கடாப் பெட்டி நிறைய அவித்த சோளம், தட்டைப் பயிறு, அவல் என பசியாற பண்டங்களுமிருக்கும். அதெல்லாம் அன்பில் முக்குளித்த தினங்கள். ஞாபக அடுக்குகளில் தூசு படிந்து போனவை.

40 வருட இடைவெளியில் மீண்டும் அதே அனுபவம் ஞாயிறு காலை.

எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பாகவே சென்று சேர்ந்தது நீல மலை விரைவுத் தொடர் வண்டி. முதலில் அப்துல்லா வந்தார் பின்னர் கார்க்கி, சங்கர் இருவரும். மூன்று வண்டிக்குத்தான் ஆட்கள் இருந்தோம் என்றாலும் நர்சிம் நானும் வருவேன் காத்திருங்கள் எனச் சொல்லி தன் பிரியத்தைப் பிடிவாதமாகப் பொழிந்தார்.

முதல் நாள் இரவு 2 மணிக்குத்தான் புதுக் கோட்டையிலிருந்து வந்திருக்கிறார் அப்துல்லா. இருந்தாலும் காலை 4 மணிக்கு எங்களை வரவேற்க வந்திருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. கார்க்கி, சங்கர் இருவருமே முதல் நாளிரவு சரியாக உறங்கவில்லை என அவர்கள் கண்கள் காட்டிக் கொடுத்தன. ஆனாலும் அவர்கள் முகத்தில் பரவிய மகிழ்ச்சி அளபரியதாக இருந்தது.

நர்சிம் வரும்போதே ஒரு கவிதையுடன் வந்தார். “நீங்கள் எழுதியதிலேயே இதுதான் சிறந்த கவிதை என்றேன்”, வழக்கம் போல வழிந்தார். கால் முளைத்த அந்தக் கவிதையின் தலைப்பு அஸ்வின். அழகான கண்கள். குறும்பு கொஞ்சும் பாவனைகள் என எல்லோரையும் கவர்ந்தான்.

உறவினர் வீட்டு விசேசமொன்றில் முகம் முழுக்கச் சிரிப்புடன் கிடைக்கும் வரவேற்பிற்கும் மேலான ஒன்றாக இருந்தது.

பொருள் வயிற் பிரிவின் நிமித்தம் கைநழுவிய மாமன் மைத்துனர் உறவு இழைகளை மீட்டெடுக்கிறது இந்த வலை.

.

சிவராமன் என்றொரு பைத்தியக்காரன்

.

ன் பதிவென்றிற்கு பின்னூட்டமிட்ட சிவராமன் அதை அழைத்துச் சொன்னவிதம் பிடித்திருந்தது. சொன்ன காலமும் அப்படியே என்னுள் உறைந்திருக்கிறது. ஒரு மாலை நேரம் புது வீட்டின் மாடியில் மேற்கே மறையும் சூரியன் தீட்டிய செக்கர் வான ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது சிவராமன் அழைத்ததால் அந்தக் காட்சியை சிவராமனுக்கு அடையாளமாக ஆக்கிவிட்டது மனது.

என் பக்கத்தையெல்லாம் சிவராமன் படிக்கிறார் எனபதே பெருமை என்கின்றபோது பின்னூட்டமிட்டு அதையும் அழைத்துப் பாராட்டிய பெருந்தன்மை பாராட்டிற்குரியது.

அதன் பிறகான தொடர் அழைப்புக்களில் நெருக்கம் அதிகமாகியது. சிறுகதைப் பட்டறை குறித்த அறிவிப்பும், தொடர் விளக்கமும் என் பங்கேற்பு குறித்த அக்கறையும் என அடுத்தடுத்த அழைப்புக்கள் ப்ரியத்திற்குரியவராக அவரை மாற்றியது.

பட்டறை நடக்கும்போதுதான் முரளி மூலம் அறிந்தேன் கைக்காசைப் போட்டு நடத்துகிறார் என்பதும், செலவு கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது என்பதும். செலவைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றதற்கு மறுத்து விட்டார். சரி ஓரளவுக்கு வசதியான ஆளாக இருப்பார் போல என இருந்து விட்டேன்.

நட்சத்திர வாரத்தின் முதற்பதிவு புரட்டிப் போட்டுவிட்டது என்னை. ஒரு எழுத்தாளனாக இதுவரை அவர் மீது நான் வைத்திருந்த பிம்பத்திற்கும் சிவராமன் என்ற தனிமனிதனுக்கும் இருக்கும் இடைவெளி கடந்துவிட முடியாததாக இருக்கிறது.

ஒரு சாமானியனாக அன்றாட வாழ்வைக் கடத்த, கடும் இன்னல்களுக்கிடையில் இலக்கிய சேவை செய்வதென்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. என்றாலும் எப்படியும் வாசகர்களைப் படிக்க வைப்பதிலும் ஒருத்தனையாவது உருப்படியாக எழுத வைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதிலும் சிவராமனை மிஞ்ச ஆளே இல்லை.

அவரது வாசிப்பின் பரப்பும், ஆழமும் மிகுந்த ஆச்சர்யமூட்டுவதாக இருக்கிறது. நல்ல எழுத்து தன்னுடைய மேதமையப் பறைசாற்றாமல் அதே நேரம் பிற நல்ல படைப்புக்களை அறிமுகப் படுத்தும்.சிவராமன் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அதைத் தொடர்ந்து செய்தவாறே இருக்கிறார்.

மார்ட்டினி அருந்திவிட்டு தங்கள் நாய்க்கு அடுத்த வேளைச் சோற்றுக்கு இல்லையே என விசனப்படும் எழுத்தாளர்கள் நிறைந்திருக்கும் காலத்தில் பட்டினி இருந்தாவது இலக்கியச் சேவை செய்யும் சிலரும் இருக்கிறார்கள்.

நல்ல நகைமுரண் இது.

.