கோபிசெட்டிபாளையம்

சென்ற இரண்டு நாட்களாக கோபிசெட்டி பாளையத்தில் டேரா. நல்ல பச்சை பசேலென கண்ணைப் பறிக்கிறது ஊர். நல்ல தட்பவெட்பமும் சேர்ந்து ரம்மியமாக இருந்தது. கோடையில் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. நகர சந்தடிகள் ஏதுமற்ற சிறு நகரம்.  இச்சிறிய நகரத்தைச் சுற்றிஎப்படி இத்தனை கல்வி நிலையங்கள் வந்தன எனத் தெரியவில்லை. மாநில அளவில் ரேங்க் வாங்கும் பள்ளிகள் பெரும்பாலும்.

எமரால்டு லாட்ஜில்தான் தங்கல். நாங்கள் சென்ற போது ஏசி, டீலக்ஸ் அறை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள். சரி இருக்கும் அறையைக் கொடுங்கள் என்றது டபிள் ரூம் ஒன்றைக் கொடுத்தார்கள்.  “சோப்பு டவல் குடுப்பா” என்று சொன்னால் ரூம்பாய் சொன்னதைக்கேட்டதும் கடுப்புத்தான் வந்தது. “சார் அதெல்லாம் ஏசி ரூமில் தங்குபவர்களுக்கு மட்டும்தான்” அடப் பாவிகளா? இரவு 9.30 மணிக்கு அடைத்திருந்த கதவைத் திறக்கச் சொல்லி டவல் வாங்கினோம்.

லாட்ஜிற்கு எதிரில் அம்மன் மெஸ் இருக்கிறது. சுடச்சுட மதியச் சாப்பாடு வித் கறிக்குழம்பு, சிக்கன் குழம்பு மற்றும் மீன் குழம்புடன். நல்ல சுவையான உணவு. 40 ரூபாய்தான். மற்ற ஐட்டங்களும் விலை குறைவுதான். நான் தமிழ்நாட்டின் அனேக இடங்களுக்குச் சென்று சாப்பிட்டிருக்கிறேன். குடல் வருவல் இவர்கள் செய்த மாதிரி எங்கும் சாப்பிட்டதில்லை. ஹோட்டலின் உள்ளே அடித்திருக்கும் பெயிண்ட் தான் இண்டஸ்டிரியல் க்ரே கலர் எனவே ஒரு டல் லுக் இருக்கிறது. மற்றபடி சுவையான சாப்பாட்டிற்கு உத்திரவாதம்.

 

காஃபிர்களின் கதை என்ற தொகுப்பைத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். தொகுத்தவர் கீரனூர் ராஜா. முஸ்லிம் அல்லாத எழுத்தாளர்கள் எழுதிய முஸ்லிம் கதைகள் என்ற அடிப்படையில் தொகுக்கப் பட்டிருக்கிறது. தமிழின் முக்கியமான புத்தகம். தவறாமல் வாசியுங்கள். 18 கதைகள் கொண்ட தொகுப்பில் பாரதி முதல் தமிழின் முக்கிய எழுத்தாளார்கள் எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

எனக்கு மிகவும் பிடித்த சு.ராவின் விகசிப்பு கதை புதிய அகத்திறப்பைக் கொடுத்தது மறு வாசிப்பில். நாஞ்சில் நாடன் வழக்கம் போல் நல்லதொரு சிறுகதை படைத்திருக்கிறார். அனேகமாக இது ஒன்றுதான் இந்தத் தொகுப்பிற்காகவென எழுதப் பட்டதாக இருக்க வேண்டும். மற்றதெல்லாம் ஏற்கனவே எழுதி வெளியான கதைகள் என நினைக்கிறேன்.

எஸ்.ராவின் ஹசர் தினார் அருமையான சிறுகதை. வழக்கம்போல புனைவிற்கும் வரலாற்றிற்கும் இடையில் சடுகுடு ஆடியிருக்கிறார். பிரபஞ்சனின் கதை சுமார்தான்.  இந்நூலினைப் பற்றி இங்கே ஒரு விமர்சனம் படியுங்கள்.

 

ரண்டு அப்பாயிண்ட்மெண்ட்களுக்கு இடையே 1 மணி நேரம் இடைவெளி இருந்தது, “செல்வக்குமார், பாரியூர் அம்மன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஒரு தடவை கூப்பிட்டிருந்தார்கள் பார்த்துவிடுவோமா? “ என்றேன்.

“சரி சார் பார்த்திடலாம்”

“உங்களுக்கு இடம் தெரியுமா?”

”பாரியூர் அம்மன் கோவில் இங்கே இருந்து 3 கிமீதான் சார். அங்கே சென்று விசாரித்துக் கொள்ளலாம்”என்றார்.

கோவிலருகில், அப்படி ஒரு பள்ளி இருப்பதற்கான அறிகுறியே இல்லை. யாருக்கும் தெரியவில்லை. என்கொயரி நோட்டைப் பார்த்து அழைத்தால், “சார் நீங்க இருக்கும் இடத்தில் இருந்து 20 கிமி வரணும். பங்களாப் புதூர் எனக் கேட்டு வாருங்கள்” என்றார்.

“செல்வா ஒண்ணு நிச்சயம்”

“என்ன சார்”

”சிங்கப்பூர் ஹார்டுவேர்ஸ்க்கு எப்படிப் போகணும்னு உங்ககிட்ட வழி கேட்கமாட்டேன்”

 

 

 

 
 

2 comments

Leave a comment