சிறுகதை

கையெழுத்து

சண்முக நதி தாண்டியதும் ஓரத்தில் இருக்கும் தோப்பில் சைக்கிளை நிறுத்தினான் வெங்கடேஷ்.  நாங்களும் நிறுத்தினோம்(நான், சுரேஷ், பார்த்திபன்).

”ஏண்டா”

”டேய் நல்லாக் கேட்டுக்குங்க. இப்ப நாம செய்யப் போற காரியம் நம்ம நாலு பேருக்கு மட்டும்தான் தெரியும். லீக்காச்சு, நான் பொல்லாதவனாகிடுவேன்”னு மிரட்டினான்.  அவன் அடிக்கடி “கர்லாக் கட்டை” “டம்பள்ஸ்” “பெஞ்ச் ப்ரஸ்” என்றெல்லாம் பயமுறுத்துவான். எனவே இயல்பாகவே அவன் மீது ஒரு பயம்.

“சரிடா சொல்லு”

“டேய் நீங்க எல்லாம் ப்ரொக்ரஸ் கார்டு கையெழுத்து வாங்கிக் கொடுத்திட்டீங்க. நான் இன்னும் கொடுக்கலை. இன்னைக்குத்தான் கடைசி நாள். அதுக்குத்தான் ஒரு ஐடியா பண்ணி இருக்கேன்”

”என்னடா அது?”

”எங்க அண்ணன் ஹேண்ட் ரைட்டிங்கும் ராஜாவோட(நான்) ஹேண்ட் ரைடிங்கும் ஒரே மாதிரி இருக்கும். எங்க அண்ணன் பாலசுப்ரமணியன்ன்னு சேர்த்து எழுதுவாரு அதுதான் அவரது கையெழுத்து.  இப்ப ராஜாவும் அதே மாதிரிப் ப்ராக்டிஸ் பண்ணி போடப் போறான்.”

“டேய் என்ன மாட்டி விடாதடா. நாஞ்செய்ய மாட்டேண்டா”

“வேற வழி இல்லை நீதான் செஞ்சாகணும்”

“சரி அப்பா கையெழுத்துக்குப் பதிலா ஏன் அண்ணன் கையெழுத்துன்னு கேட்டா என்ன பண்ணுவே?”

”அது என்னோட ப்ராப்ளம், அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சிடுவேன்.”

வேற வழி இல்லாமல் நான் நாலைந்து விதங்களில் கையெழுத்துப் போட்டுக் காட்ட, சின்னச் சின்னத் திருத்தங்களுக்குப் பிறகு ஒன்றை ப்ரக்ரஸ் கார்டில் போட்டுத் தொலைத்தேன். ஆனாலும் அடி வயிற்றில் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது. இந்த ஒரு கையெழுத்துடன் இது ஓய்ந்திடும்னு என நினைத்தது எவ்வளவு முட்டள்தனம்.

ராஜாராம் வாத்தியார் நல்ல ஆஜானுபாகுவான தோற்றமுள்ளவர். தொழிலதிபர், ஒரு ஆத்ம திருப்திக்காக வேலைக்கு வருபவர். பையன்கள் படிப்பைவிட ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பவர். எங்கள் வகுப்பு ஆசிரியர்.

”யாரெல்லாம் இன்னும் ப்ரக்ரஸ் கார்டு திரும்பத் தரல?”

”எல்லோரும் குடுத்தாச்சு சார்”னு கோரஸாகச் சொன்னோம்.

“சரி இன்னைக்குக் குடுத்தவன் மட்டும் எந்திரி”ன்னாரு

வெங்கடேஷ் எந்திரிச்சு நின்னான்.

“ஏண்டா இவ்வளவு லேட்டு?”

“சார் அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிருக்காங்க. வந்திருவாங்கன்னு பார்த்தேன். வரலை. அதான் அண்ணங்கிட்டக் கையெழுத்து வாங்கி வந்தேன்”

“என்னது அண்ணங்கிட்டயா? யாருகிட்டக் கேட்டு அப்படிச் செஞ்சே? எங்கிட்டக் கேட்டிருக்கணுமில்ல?”

“இல்ல சார் அப்பா இருந்திருந்தாக்கூட அண்ணஞ் சொன்னாத்தான் போடுவாரு”

கார்டை எடுத்துப் பார்த்ததும் அவருக்கு என்ன சந்தேகம் தோன்றியதோ தெரியவில்லை, “டேய் உண்மையைச் சொல்லு இது உங்க அண்ணன் கையெழுத்துத்தானா?”  எனக்கு பயத்தில் யூரின் வந்திடும் போல இருந்தது. பார்த்தியும் சுரேஷும் என்னையே குறுகுறுன்னு பார்த்தார்கள்.

“ஆமா சார்”னு கொஞ்சங்கூடப் பயப்படாமல் சொன்னான் வெங்கடேஷ்.

“அப்படின்னா ஒண்ணு செய், இது உங்க அண்ணன் கையெழுத்துத்தான்னு நாளைக்கு அவர்கிட்ட இருந்து ஒரு லெட்டர் வாங்கிட்டு வா”

“சரி சார்”

சண்முக நதி தாண்டியதும் ஓரத்தில் இருக்கும் தோப்பில் சைக்கிளை நிறுத்தினான் வெங்கடேஷ் ; மறுநாள். நாங்களும் நிறுத்தினோம்.

ப்ரக்ரஸ் கார்டில் கையெப்பமிட்டது தான்தான் என அவன் அண்ணன் எழுதியது போல் ஒரு லெட்டர் எழுதி எடுத்து வந்திருந்தான்.

அதில் நான் பாலசுப்ரமணியன் எனக் கையெழுத்திட்டேன்.

இந்த பஸ்ஸு சிங்காநல்லூர் போவுமோ?

 

”இந்த பஸ்ஸு சிங்காநல்லூர் போவுமோ?” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் ரகு.

”இது போவாது, நீ தின்னேலியா?” என்றான்

”ஆமா அண்ணாச்சி, பக்கத்துல கோவில்பட்டி”

“கோவில்பட்டில எங்கடே? நான் லட்சுமி மில் கோட்டர்ஸ்” ஆவலாகக் கேட்டான் ரகு

“ஸ்ரீனிவாச நகர் அண்ணாச்சி”

“அங்க யாரு மகண்டே நீ?”

“ராமையா இருக்காவள்லா அவுக மகன்.”

”சின்னவனாடே? உங்க அண்ணன் கஸ்தூரி நல்லா இருக்கானா? இப்ப எங்க இருக்கான்?”

“ஆமா.  அண்ணேம் இப்ப கொவைத்துல இருக்கான்”

“சரிடே இங்க எங்க வந்த ? மணி 10 ஆச்சு இப்ப”

”நீலிக் கோணாம் பாளையம் போகணும் அண்ணாச்சி. அங்கன எங்க அப்பாவுக்கு ஒரு ஃப்ரண்டு இருக்காவ, அவுக வேலை வாங்கித் தாரேம்னு சொல்லி இருக்காக”

”கடேசி பஸ்ஸு இப்பத்தாம் போகுது 10 நிமிஷம் ஆச்சு. சரி நீ ஒண்ணு பண்ணு ஏங்கூட வந்து ராத்தங்கிட்டு காலேல போ, நானே பஸ் ஏத்தி விடுறேன்”

இரவு எஸார்கேபி மெஸ்ஸில் நல்ல உணவும் வாங்கிக் கொடுத்து அவன் நன்றாக உறங்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறான்.

ரகு வழக்கமாகக் காலையில் 7.30 மணிக்குத்தான் எந்திரிப்பான். அன்றைக்கும் அதே மாதிரித்தான், ஆனால் அறை மட்டும் வித்தியாசமாக இருந்திருக்கிறது. வழக்கமாக ஹேங்கரில் தொங்கும் சட்டை பேண்ட்களைக் காணவில்லை.  இடதுபுறம் இருந்த இரு சூட்கேசுகளில் ஒன்றைக் காணவில்லை. அலறி அடித்து என்னென்ன காணமற்போயிற்று என லிஸ்ட் எடுத்திருக்கிறான். வாட்ச், மோதிரம், பர்ஸில் இருந்த பணத்தில் 300 குறைந்திருக்கிறது. பேண்ட் சர்ட்களில் நல்லவைகளாகப் பார்த்து எடுத்துச் சென்றிருக்கிறான். அதிக விலை கொடுத்து வாங்கிய ஜீன்ஸ் இரண்டும் கோவிந்தா.

என்னை அழைத்தான் போனில். சுருக்கமாக நடந்ததைச் சொன்னான். ”இரு வருகிறேன்” எனச் சொல்லி அரை நாள் லீவு சொல்லிவிட்டு அவன் அறைக்குச் சென்றேன்.

”முதல்ல உங்க அப்பாவுக்கு போனப் போட்டு ஸ்ரீனிவாசா நகர்ல ராமையாவப் பார்க்கச் சொல்லு” என்றேன்

”பார்த்து?”

”பார்த்து அவரோட மகன் சின்னவன எங்கன்னு கேட்கச் சொல்லுடா. அதுக்கப்புறம் மத்த விவரங்களைச் சொல்லலாம்” என்றேன். அவன் அப்பாவிடம் நானே பேசினேன், “அப்பா ஒரு சின்ன ஹெல்ப், நம்ம ஸ்ரீனிவாசா நகர் ராமையா மகன் சின்னவன் எங்க கம்பெனில வேலை கேட்டு வந்திருக்கான்.  காசு புழங்கும் வேலை. கொஞ்சம் பையன் எப்படின்னு விசாரிச்சுச் சொனீங்கன்னா நல்லா இருக்கும்.”

“சரிப்பா”

“முடிஞ்சா அவங்க வீட்டுல போன் இருந்தா என்னைக் கூப்பிடச் சொல்லுங்களேன் மத்தியானமா.”

“சரிப்பா, போன் இருந்தாக் கூப்பிடச் சொல்றேன் “

மதியம் இரண்டு மணிக்கு ராமையா அழைத்தார். “வணக்கங்க நான் ராமையா பேசுறேன்”

“வணக்கங்க. உங்க பையன் அங்க வந்தாரா?”

“இல்லையே அவம் வேலை தேடி அங்கதான வந்திருக்கான்”

”வேலை தேடி வந்ததெல்லாம் உண்மைதாங்க. வந்த இடத்துல ராத்திரி லேட்டாச்சுன்னு எம்ஃப்ரண்டு ரூம்ல தங்க வச்சிருக்கான். அவன் கொஞ்சம் காசையும் டிரஸ், வாட்ச் எல்லாம எடுத்துட்டுப் போயிட்டான்.  எங்க போயிருப்பான்னு தெரியுமா?”

“அய்யோ பாதரவே. இந்த முடிவானோட இதே எழவாப் போச்சே”என்றார். எனில் பையன் இதே வேலையாத்தான் திரிஞ்சிருக்கான். “போனக் கொஞ்சம் அவருகிட்டக் கொடுங்க” என்றேன்.

“அப்பா இவரு பையன் வேலை தேடி கோயமுத்தூருக்கு வந்திருக்கான். வந்த இடத்துல நம்ம ரகுவைப் பாத்து அவம் ரூம்ல ராத்தங்கி இருக்கான். காலேல பார்த்தா கொஞ்சம் டிரஸ், வாட்ச், காசு எல்லாம் எடுத்துட்டுப் போயிட்டான். அவரு பையனுக்கு இதே வேலதாம் போல அவரே சொல்லுதாரு அதை. நீங்க அங்கனயே இருங்க மொத்தம் எம்புட்டு ஆச்சுன்னு நானும் ரகுவும் கால்குலேட் பண்ணிச் சொல்றோம்”

“இந்தப் பயலுக்கு ஏம் இந்த வேண்டா வேலை, வெறுவாக்கெட்டவன்”

“விடுங்க நடந்தது நடந்து போச்சு. இனி ஆக வேண்டியதைப் பார்ர்ப்போம்”

மொத்தத் தொகையக் கணக்குப் பண்ணி அதில் கொஞ்சம் குறைத்து அவரிடம் வாங்கி விட்டோம்.

இது நடந்து 20 வருஷம் ஆச்சு. இப்பவும் நான் ரகுவுக்குப் போன் பண்ணினா ஹலோ சொல்லுவதற்குப் பதிலாக “இந்த பஸ்ஸு சிங்க நல்லூர் போவுமோ?”

*&^%$#@#$%^&*

 

 

கலைடாஸ்கோப் – 29-08-10

மாருதி நிறுவனத்தின் லேட்டஸ்ட் விளம்பரங்கள் நன்றாக இருக்கின்றன. என்னதான் தொழில்நுட்பம், சிறப்பு என்று விளம்பரப்டுத்தினாலும் இந்தியர்கள் மைலேஜைத்தான் பார்ப்பார்கள் என சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மற்ற விளம்பரங்கள் இங்கே

அவர்க்ள் மட்டுமல்ல பதிவுலகிலும் சிலர் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். யாரை விமர்சித்தால் மைலேஜ் கிடைக்கும் என்று பார்த்துத்தான் அவதாரம் எடுக்கிறார்கள்; பெண்ணியக் காவலர்களாக, ஆணாதிக்க எதிர்ப்பாளராக, உடனடி நீதிபதியாக. அறச்சீற்றத்தோழர்களும், கொள்கைக்காக நட்பைத் துறந்த கோமானும் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. யாரவது பார்த்தால் தகவல் சொல்லவும்.

எப்படியோ நான் சொல்லி வந்தது உண்மை என ஆகி விட்டது.

உண்மையை யாரும் நம்புவதில்லை. பசும்பாலிலிருந்து தயாரித்த மோரைத் விற்கத் தெருத்தெருவாக அலைய வேண்டி இருக்கிறது. கள் உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போய் விடுகிறது. -கபீர்தாசர்.

***************************************************************

கதவு சிறுகதைதான் நான் முதன் முதலில் படித்த கி ராவின் சிறுகதை. அந்தச் சிறுவர்கள் இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் மனதிலிருந்து மறையவில்லை. அதன் பிறகு தேடிப் படித்ததில் நாற்காலி மிகவும் பிடித்திருந்தது.

கரிசல் மண்ணை அதன் வாசத்தோடும் வீச்சத்த்தோடும் நம் முன்னே காட்டியவர்.
கரிசல் காட்டு வாழ்க்கையை கதைகளில் படம்பிடித்துப் பத்திரப்படுத்தியவர் அவர்.

அனைத்துச் சிறுகதைகளையும் அகரம் பதிப்பகம் ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. விலை 200 ரூபாய்.

கிராமத்துத் தென்றலை (சு)வாசிக்க நினைப்பவர்களுக்கு நல்ல தேர்வு இது. வாசித்துத்தான் பாருங்களேன்.

***************************************************************

ஆறாவது வனத்தின் தீராத ரணத்தை ஆற்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய “நாலு பெண்கள்” பார்த்தேன். பத்மப்ரியா, காவ்யா மாதவன், நந்திதாதாஸ், கீது மோகந்தாஸ் என முன்ணனி நடிகைகள் சிறப்பாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

நான்கு குறுங்கதைகளை எடுத்துக் கோர்த்திருக்கிறார். நான்கும் நான்கு கதைக்களனைக் கொண்டிருந்தாலும் பெண்ணின் சிரமம் என்ற நூலெடுத்துக் கோர்த்திருக்கிறார்.

படம் பற்றிய காலச்சுவட்டில் சுகுமாரன் எழுதிய விமர்சனம்

***************************************************************

இம்மாத உயிர்மையில் மலேசியவாசுதேவன் பற்றி ஷாஜி எழுதுய மறதியில் கரைந்த மகத்தான பாடகன் என்ற கட்டுரை அற்புதமாக இருந்தது. மிக நீண்ட நல்ல அலசல். மலேசியாவின் ஆளுமையை உள்ளபடி எடுத்து வைத்த கட்டுரை.

அவர் கொடுத்திருந்த பட்டியல் எல்லாமே அருமையான பாடல்கள். வாசுதேவன் பாட்ல்கள் தொகுப்பு என ஒரு டிவிடி வாங்கிக் கேட்டேன். என்ன ஒரு வெர்சாட்டிலிட்டி.

எனக்குப் பிடித்த பாடல்களில் சில.
1. ஆகாய கங்கை பூந்தேன் மழை தூவி
2. கோடை காலக் காற்றே
3. பனி விழும் பூ நிலவில்
4. இளம் வயசுப் பொண்ணை வசியம் செய்யும் வளைவிக்காரி
5. ஏ ராசாத்தி ராசாத்தி

***************************************************************

இவ்வாரக் கவிதை.

உள்ளதிலேயே
சிறந்த புகைப் படத்தைத்தான்
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.

வந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.

பதில் இல்லை.

– பா.ராஜாராம் – ஆனந்த விகடனில்

கலைடாஸ்கோப் – 26/07/2010

.

நீண்ட நாட்களுக்குபிறகு கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போயிருந்தேன் குடும்பத்தோடு. பழைய நாகர்கோவில், நெல்லை முகங்களைக் காணவில்லை. இருந்த சிறுவர்களுக்கும் நாம் பேசுவது புரியவில்லை, அவர்கள் பேசுவது நமக்குப் புரியவில்லை.

“தும் பிஹாரிஹே க்யா?” என்றேன் என் உடைந்த ஹிந்தியில்.

“நஹி நஹி ஒரியா” என்கிறான்.

பாதிக்கு மேல் வெளி மாநில ஆட்கள். முன்பெல்லாம் சீருடை அணிந்திருப்பார்கள். பையன்கள் பார்வைக்கு மிகவும் பொடியன்களாக இருப்பதால் சீருடை கொடுத்துச் சிக்கலில் மாட்டவேண்டாம் என விட்டுவிட்டார்கள் போல இருக்கிறது.

வடவள்ளியில் காலை 8 முதல் 9 மணி வரை பாதிக்குப் பாதி வெளிமாநில ஆட்கள் முகம்தான் தென்படுகிறது. இவர்கள் தட்டிப் பறித்த வேலையைச் செய்து கொண்டிருந்தவர்கள் தற்பொழுது எங்கே?

*****************************************************************

”ஒம்மக்கிட்ட நான் என்னத்தச் செல்லியதுக்கு? நாம குடிச்சதுக்கு, வண்டியில கொலேரம் சந்தைக்குப் பெய் அவ சரக்கெடுத்து தந்ததுக்கு, இப்ப வாண்டினதுக்கு எதுக்குமே நீரு நயாபைசா குடுக்கேல. இனிமேலும் கனவாயிட்டே வெறுங்கையோட பெய் நின்னா அவ சீலையை உரிஞ்சி தலையில கெட்டீற்ரு ஆடுவான்னு உள்ள சங்கதி உமக்குத் தெரியாதா?”

மேலே உள்ள உரையாடல் உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் தயங்காமல் குமாரசெல்வா எழுதிய கயம் சிறுகதைத் தொகுப்பைப் படிக்கலாம். நல்ல சிறுகதைகள், ஆனால் குமரி மாவட்டத்தின் விளவங்கோடு பகுதியில் பேசப்படும் பேச்சுவழக்கில் எழுதி இருக்கிறார்; அச்சு அசலாக. பக்-192-196 வட்டாரச் சொற்களுக்கு விளக்கமும் சொல்லி இருக்கிறார்.

கயம் சிறுகதை நன்றாக இருக்கிறது. கதை, கதைக்குள் கதை, அதற்குள் ஒரு கதை என ஒரு சிக்கலான கதை. குறுவெட்டி என்ற கதையைத் தவறவிடாதீர்கள். தனக்கு பால்வினை நோய் இருக்குமோ என்ற அச்சத்தில் ஆட்படுபவன் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகிறான் என்பதுதான் கதை. அதை வைத்து கம்யூ தோழர் ஒருவர் செய்யும் அரசியல் சிரிப்பை வரவழைக்கிறது.

காலச்சுவடு பதிப்பகம் – விலை ரூ. 150

*******************************************************************

நானும் செல்வாவும் மதராசபட்டிணம் பார்த்தோம். எனக்குப் பிடித்திருந்தது. பீரியட் படம் எடுப்பதன் சிரமங்களைப் புரிந்து கொண்டால் இந்தப் படத்தில் விஜயின் உழைப்பு புரியலாம்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் காட்சி அமைப்பிலும், குறிப்பாக எடிட்டிங்கிலும் அதை சரி செய்து விடுகிறார்கள். ஆர்யாவின் உடை விஷயத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றபடி கிராபிக்ஸ் துணையுடன் நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். என் தனிப்பட்ட அபிப்ராயம் ஜி வி பிரகாஷின் இசை படத்திற்குப் பொருந்தி வரவில்லை என்பதே.

Music should create and complement a mood for the frame என்ற கூற்று நினைவு கொள்ளத் தக்கது.

*******************************************************************

வெக்கை

வெந்து புழுங்கியத்தில்
விசிறியை ஓடவிட்டேன்

வட்டப் படலமாய்த்

தொங்கிச் சுழன்ற
மின்விசிறி இறக்கைகள்
மூன்றாகப் பிரிந்து
ஒன்றை ஒன்று
துரத்தத் துவங்கியதில்
சாயம் போயிருந்த
அந்த இறக்கைகள்
என்னைக் கடப்பதை
எண்ணத் தொடங்கியது காலம்

என்னைச் சூழ அடர்ந்த காற்று

காதோரங்களில் நரை ஏற்றியதில்
பதட்டமாகி விசிறியை நிறுத்தினேன்

வெந்து புழுங்கியது வெளி

அனுஜன்யா எழுதிய கவிதை இது.

சென்ற மாதம் நேரில் சந்தித்தபோது அவரது ஆதங்கம் வெளிப்பட்டது. “அனானிப் பின்னூட்டங்கள்கூடச் சரி அண்ணாச்சி, ஆனால் நான் மிகவும் மதித்த சிலரே அப்படி எழுதியதால் வருத்தமாக இருக்கு” என்றார்.

மீண்டு(ம்) வாருங்கள் நண்பரே.

சீவன் – கந்தர்வன் சிறுகதைகள்

பின் நவீனத்துவ, இருத்தலியல், கட்டுடைத்தல் போன்ற கோட்பாடுகளும் இன்ன பிற ஜல்லியடித்தலும் ஏதுமில்லாத தெளிந்த நீரோட்ட எழுத்து நடையில் கதை எழுதியவர் கந்தர்வன். அவரது கதைகளில் அதிகமும் மண்ணின் மணமும் வேர்வை வீச்சமும் கலந்திருக்கும்.

கஞ்சி என்ற ஒற்றைவார்த்தை தவிர வேறெதுவும் பேசாத பைத்தியக்கரனைப் பற்றி(சீவன்), தேடித் தேடிச் செடிகள் கொணர்ந்து வீட்டில் வைத்து வளர்க்கும் ஆசை பற்றி (பூவுக்குக் கீழே), நுகர்வோர் கலாச்சாரப் பிடியில் சிக்கிக் சீரழிவதைப் பற்றி(அடுத்தது), திருமணச் செலவைக் கட்டுப் படுத்த கண்டுகொண்ட தீர்வு பற்றி(மங்கலநாதர்), மரங்களுடனான நெருக்கமும், அவைகள் வெட்டி வீழ்த்தப் படும்போதெழும் துக்கத்தைப் பற்றி(மைதானத்து மரங்கள்), வேலைக்குப் போகும் பெண்கள் படும் சிரமங்கள் பற்றி(இரண்டாவது ஷிஃப்ட்), தனக்குப் பாத்யதை இல்லாத ஆனால் தான் உரிமை கொண்டாடிய பொருள் கைவிட்டுப் போகும்போவது பற்றி(சாசனம்), ஒரு வேலைக்காரன் தோள் துண்டும் படும் அவஸ்தையும் அதனால் அவன் படும் அவஸ்தையும் பற்றி (துண்டு), சிரமப்படு வீடொன்றைக் கட்டி வட்டி கட்ட முடியாமல் அதை வாடகைக்கு விட்டு வேறொரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்க நேர்வது பற்றி(ஒவ்வொரு கல்லாய்), சந்தையில் மாடு வாங்கினால் சரியாக வராது என மந்தையில் மாடு வாங்கிக் காயடிக்கும் கொடுமை பற்றி(கொம்பன்) என முத்தான பத்துக் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார்எனக்குப் பிரியமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் சீவன் என்ற தலைப்பில்.

முன்னுரையில் தமிழ்ச்செல்வன், “ தீவிர வாசகனுக்குக் கதைகள் வெறும் கதைகளாக மட்டுமே நிற்பதில்லை. சில கதைகள் அவன் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகி விடுவதுண்டு “

உண்மைதான் மங்கல்நாதர் கதையைப் படித்தபோது என் அம்மா அவர்கள் திருமணம் நடந்ததை ப் பற்றிச் சொல்லுவதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. “ஊரடைக்கப் பந்தல் அஞ்சு வீதியும், 7 நாள் கல்யாணம், பவுன் 15 ரூபாதான், எல்லா விதியிலும் மாட்டு வண்டி நிக்கும், மாடுகளுக்கு தீவனம் போடம் மட்டுமே ஒரு ஆள், வீதில இருக்க எல்லாத் திண்ணையிலும் சாப்பாட்டுப் பந்தி நடந்துட்டே இருக்கும், சாம்பார் வாளிப் பிசுக்கக் கழுவக் கூட நேரமிருக்காது. தவசுப் பிள்ளைகள்(சமையல்காரர்கள்) ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை பாத்துட்டே இருந்தாங்க, மாட்டு வண்டிகள்ல காய்கறி வந்து இறங்கிட்டே இருக்கும்”

யோசித்துப் பாருங்கள் இன்றிது சாத்தியமா? அப்படி ஒரு திருமணத்தைத்தான் நடத்துகிறார் தன் முதல் மகளுக்கு மங்கல் நாதர் கதையில் வரும் மாமா. செலவு கட்டுக்கடங்காமல் கை மீறிச் செல்ல, அடுத்த மகள் திருமணத்திற்கு அவர் எடுத்த முடிவு?

”இது கந்தர்வனைப் பற்றிய சிறு அறிமுகத்திற்காகத்தான். இதைப் படித்து மேலும் கந்தர்வனின் கதைகளைத் தேடிப் படிக்க ஆர்வம் ஏற்படுத்தும் ஒரு முயற்சிதான் என்கிறார் ” முன்னுரையில் தமிழ்ச்செல்வன் . முழுத்தொகுப்பு வம்சி வெளியிட்டிருக்கிறார்கள். வாங்க வேண்டும்.

நூல் : சீவன்
வகை : தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தேர்வு : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை, 044-24332424, 24332924
விலை : ரூ.30

இப்புத்தகத்தை வாசிக்கத் தந்த செல்வேந்திரனுக்குக் கூடுதல் ப்ரியமும் கூடவே நன்றிகளும்.

கதம்பம் – 24-09-09

அக்பர் அரசவையில் ஒரு நாள் விவாதமொன்று எழுந்தது; பூமியின் மையப் புள்ளி எதுவென. எவருக்கும் தெரியவில்லை, பீர்பாலும் அரசவையில் இல்லை அச்சமயம். பிறரெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர், பீர்பால் வசமாக மாட்டப் போகும் வினா இதுவென.

சற்றுத் தாமதமாக சபைக்கு வந்த பீர்பால் உள்ளே நுழைகையிலேயே கண்டுகொண்டார் ஏதோவொன்று தன்னை நோக்கி எய்யப்படுமென. கேள்வியும் அவரை நோக்கி வீசப்பட, சட்டென வெளியேறினார். விடை தெரியாமல் வெளியேறினார் என அனைவரும் ஆர்ப்பரித்திருக்க, மீண்டும் உள்ளே வந்தவர் வெளியே அழைத்தார் அரசரை.

தரையில் தான் ஆணியறைந்த ஒரு இடத்தைக் காட்டி, “ இதுதான் பூமியின் மையப்புள்ளி ” என்றார் அரசரிடம். திகைத்த அரசர் “எப்படி?” என வினவ.

“இல்லையென மற்றவர்களை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார்.

இதைப் போலத்தான் இருக்கிறது, ஒரு திரைப்படத்தை ஆளாளுக்கு அலசிப் பிழிந்து காயப் போட்டிருப்பது. இதுதான் மையப்புள்ளி என அவரவருக்கு விருப்பமான இடத்தில் ஆணி அறைந்து கொண்டிருக்கிறார்கள். தமிழன் மலையாளி என்ற புது கோணத்தை யாரும் சிந்திக்கவில்லை என அறச்சீற்றம் கொண்டிருக்கிறார் ஆசிப்.

மொத்தத்தில் உ போ ஒருவன் சீரியஸ் படமாக இருக்குமென நினைத்தால் நல்ல காமெடிப் படமாக ஆகிவிட்டது.

***********************************************************************************

அழகிய பெரியவனின் நெரிக்கட்டு சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. நல்ல மொழி நடையுடன் மூன்றாவது வரியில் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார். கடலூர் பகுதிகளில் கண்மணி குணசேகரன், தங்கர் பச்சான் (குடி முந்திரி- படித்திருக்கிறீர்களா?) இருவரையும்தான் இதுவரை படித்திருக்கிறேன். அழகிய பெரியவன் எழுத்து என்னை ஈர்த்து விட்டது.

தான் காதலிக்கும் பெண்ணின் தாயார் கரகம் ஆடுபவள் என்பதால் கரகாட்டத்தைத் தவிர்க்கும் முகமாக வெளியூர் சென்றுவிடும் கதை நாயகன், திரு விழா முடிந்திருக்குமெனத் திரும்பி வர, அப்பொழுது ஏற்படும் களேபரத்தில் ரசாபாசமாகி விடுகிறது. மிச்சத்தை நீங்களே படியுங்கள் நல்ல வாசிப்பனுபவம்.

முன்பே வேறு சமயம் தலைப்புக் கதையான நெரிக்கட்டை வாசித்திருக்கிறேன். எனினும் மொத்தமாக வாசிக்கையில் எழுத்தாளரின் ஆளுமை வெளிப்படுகிற்து. யுனைட்டட் ரைட்டர்ஸ் வெளியீடான இச்சிறுகதைத் தொகுப்பின் விலை 50 ரூபாய் மட்டுமே.

**************************************************************************************

விகடனில் வந்த அந்நியன் கவிதைக்கு அழைத்துப் பாராட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி. அதைவிட மோசமான அனுபவம் சமீபத்தில். எனது பக்கத்து வீட்டை வாங்கியவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். வாங்கி மாதக்கணக்காக ஆகியும் கிரகப் பிரவேசம் நடத்தப்படாமலே இருந்தது. ஒரு நாள் இரவு 11.00 மணிக்கு பேச்சுச் சத்தம் கேட்கவே வெளியே சென்று பார்த்தால் வீட்டின் உரிமையாளரும் இன்னும் இருவருமிருந்தனர்.

”காலையில் கிரகப் பிரவேசம் செய்கிறோம்” என்றார்.

“பால், தண்ணி எது வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றேன்.

“இல்லை சார் எவ்வரிதிங் இஸ் கம்ப்லீட்லி அர்ரேன்ஜ்டு” என்றார்.

காலை 6 மணிக்குப் பார்த்தால் யாரையும் காணோம். 4 மணிக்கே பூஜை செய்து விட்டு 6:30 இண்டெர் சிட்டியைப் பிடித்துச் சென்னை சென்றுவிட்டார்களாம்.

அடப் பாவிகளா வீடு கிரகப் பிரவேசம் என்பது நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் சேர்ந்திருந்து மகிழ வேண்டிய ஒரு விசேசமல்லவா? அவர்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் வேண்டாமா?

**************************************************************************************

காமிக்ஸ் பிரியர்களால் இரும்புக்கை மாயாவியையும், சி ஐ டி லாரஸையும் ஜானி நீரோவையும் மறக்க முடியாது. அ கொ தீ க பற்றி உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? (கா கா தே கா இன்னும் இருக்கிறாதா மிஸ்டர் குமாரி ஆனந்தன்?)

காமிக்ஸ் பிரியர்களுக்கான வலைத்தளம் இதோ.

**************************************************************************************

நேசமித்ரனின் கவிதை ஒன்று இம்முறை.

வார்த்தைகளை வசக்கிப் போட்டுக் கவிதை நெய்து கொண்டிருக்கும் காலத்தில் வார்த்தைகள் தானக வந்து விழுந்தாற்போல நேர்த்தியா இருக்கிறது.

பிறை மீதேறி
உன் பெயர் சொல்லி தீக்குளிப்பேன் என்றவன்
நுரைக்க நுரைக்க கழிவறையில் ஆணுறை கழற்றிய போதே
மாற்றி விட்டான் அலைபேசி எண்ணை…
வருத்தம் எதுவும் இல்லை
உவந்து கொடுத்தேன்
தேவையாய் இருந்தது எனக்கும்
ஆனால் முத்தத்தை எச்சிலாக்கிய நொடி
விடைபெறுகையில் வேசி மகன்
வேறு பெயர் சொல்லி விளித்ததே...!

நேசமித்ரன்

கதம்பம் – 13-08-09

நவீன விருட்சம் இந்த இதழ் புதுக்கவிதை தொடங்கி 50 ஆவது வருட இதழாக மலர்ந்திருக்கிறது. அடியேனின் கவிதை – தக்கைகள் அறியா நீரின் ஆழம் – அதில் பிரசுரமாகி இருக்கிறது. எனவே எனக்கும் ஒரு பிரதி அனுப்பியிருக்கிறார் அழகிய சிங்கர்.

இரண்டாம் பக்கத்தில் முதல் படைப்பாக பிரசுரமாகி இருப்பது அனுஜன்யாவின் பிக்பாக்கட் கதை. மிக மகிழ்ச்சியாக இருந்தது. அச்சில் வாசிக்க மிக நன்றாக இருந்தது. வலையில் வாசிக்கும்போது ஏதோ ஒன்றை இழந்தாற்போலத்தான் இருக்கிறது.

ஜெ மோ வலையில் எழுதுவதை தொகுப்பாக தற்பொழுது நிகழ்தல் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகமாக வாசிக்க அருமையான அனுபவம்.

*********************************************************************************

சென்றவாரம் குடும்பத்துடன் கொச்சி, குருவாயூர் ஒரு அவசரச் சுற்றுலா சென்றிருந்தேன். கொச்சியின் தட்பவெட்ப நிலை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். 2 மணிக்கு நல்ல வெயில் 2.05க்கு பலத்த மழை சாலையில் நடமாட்டமே இல்லை. 2.10 சுத்தமாக வெறித்து விட்டது வெயிலும் அடிக்கிறது. ஸ்விட்ச் போட்டாற்போல சாலையில் ஜன நடமாட்டம்.

மேரி, ஆனி, ஜார்ஜ், எலிசி, விக்டோரியா, டோமினி, ரெஜினா, அன்னி, ஜோய், ராபர்ட் என பத்துக் குழந்தைகள் பெற்று வளர்த்தும் என்னை எடுத்து வளர்த்த ரோசம்மா விதைத்த விதைதான் மலையாளக் கரையோரம் ஒதுங்கச் சொல்கிறதோ என்னவோ?

கொச்சியிலிருந்து குருவாயூர் சென்று திரும்பினோம். குருவாயூரில் அருமையான தரிசனம். குழந்தைக் கிருஷ்ணனைப் பார்த்தாலே மனதுக்கு ஒரு தெம்பு வந்து விடுகிறது. கேரளாவில் செட்டில் ஆக வேண்டுமென்ற ஆவல் வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.

*********************************************************************************

ஏர்டெல்லின் விளம்பரங்கள் எப்போதும் தரமிக்கவையாகவும் கற்பனைவளமிக்கதாகவும் இருக்கும். காகிதக் கப்பலை மழையில் நனையாமல் காப்பாற்றும் குழந்தைகள் விளம்பரம் நல்ல கவிதை.

அதே போல டாடா டோகோமோவின் விளம்பரங்களும் நன்றாக இருக்கிறது. கோல் போட்டவன் குதூகலம் சங்காக மாறுவது நல்ல நகைச்சுவை.

உடனே ஒரு லோக்கல் விளம்பரம் வந்து கழுத்தறுப்பதுதான், சென்னைவாசிகளின் பாஷையில், படா பேஜாராக் கீது மாமே.

*********************************************************************************

யாத்ரா, வாசு, நந்தா, சேரல், ரெஜோ, முகுந்த், முத்துவேல் போன்றோர்கள் நல்ல கவிதைகள் படைத்துவரும் அதே நேரத்தில் கவனிப்பையும் பெற்றுவிட்டார்கள். அவர்களைபோலவே நல்ல கவிதைகள் எழுதிவரும் கார்த்தி (அல்லது கார்ட்டின்?) எழுதிய இக்கவிதை என்னைக் கவர்ந்த்த்து.

வீட்டில் அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தாலும் மேஜை நிறைய வார, மாத இதழ்கள் இருந்தாலும் சுண்டல் அல்லது வேர்க்கடலை மடித்திருந்த காகிதத்தைத் திருப்பித் திருப்பிப் படிப்பது ஒரு சுகம். அதைத்தான் பேசுகிறது இக்கவிதை.


கூம்புகளுக்குள்

நீங்கள்
பாலிதீன் பைகளைப்
புறக்கணித்து விட
இன்னுமொரு காரணம்
இந்த வேர்கடலைப் பேப்பர்கள்

கூம்புகளைப் பிரிப்பதில்
மட்டும் கவனமிருக்கட்டும்

கவிதையோ
கதை போன்றவொன்றோ
இருக்கலாம்
இரண்டு பக்கங்களுக்குள்

தீக்குளித்து
என்றோ செய்தியானவன்
எண்ணெய்த் தீற்றலோடு
தென்படலாம்

கடைசி வார்த்தை மட்டும்
யாருக்கோ சிக்காத
குறுக்கெழுத்துப் புதிரொன்றும்
சிக்கிக் கொள்ளலாம்

ஆகவே
அடுத்த முறையேனும்
வீசியெறியாமல்
விரித்துப் பார்த்துவிடுங்கள்

கெட்டியான பேப்பரென்றால்
அட்டைப் பட நாயகிக்கும்
அதிர்ஷ்டமுண்டு..
பின்பக்கத்தில்
சொப்பனஸ்கலிதம் தீர்க்கும்
விளம்பரம் இல்லாதிருப்பது உத்தமம்.

– கார்த்தி என்

*********************************************************************************

கேரளாவைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் வசிப்பது அமெரிக்காவில். அங்கு நடந்த ஒரு போட்டியில் 10 நிமிடத்தில் 38 ஹாட் டாக் சாப்பிட்டு முதல் பரிசைப் பெற்றார்.

கேரளாவில் அதைச் செய்தியாக வெளியிடும்போது 10 நிமிடத்தில் 38 நாய்களைச் சாப்பிட்டார் என மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். செய்தியை வெளியிட்டது கம்யூனிஸ்ட் தோழர்களின் அதிகாரப்பூர்வப் பத்திரிக்கை.

.

எள்ளும் எலிப் புழுக்கையும்

”அண்ணாச்சி”

”சொல்லுடே அய்யப்பா?”

”மனசே சரியில்ல அண்ணாச்சி”

“என்னடே இப்பத்தாம் அந்தபுள்ள முத்தம்மா உன்னக் காதலிக்கிறேன்னுட்டாளே. பின்ன என்ன? “

“அவங்கண்ணனுக்குத் தெரிஞ்சு போச்சுன்னு சொல்லுதா?”

“எப்படிடே?”

“பொஸ்தவத்துக்குள்ள எம்போட்டாவ வச்சிருக்கா. அத அவம் பாத்துட்டான்.”

“என்ன கேட்டாம்?”

“இதெல்லாம் நல்லதுக்கில்ல. அம்புட்டுத்தாம்னு சொல்லியிருக்காம்.”

“நல்ல வேலை, அந்தப் புள்ளைய பகவதிபுரத்துக்குக் கூட்டீட்டுப் போயி நீ செஞ்ச காரியமெல்லாம் அவனுக்குத் தெரியாது. தெரிஞ்சுதோ ஒங்க அம்மைகிட்டகுடிச்ச பாலக் கக்க வச்சிருவாம் பாத்துக்கிடு. ஏம்டே இப்படி மோசி குடிச்ச மாடு கணக்கா அலயுதிய?”

“அண்ணாச்சி ரெம்பத்தான் கிண்டல் பண்ணாதியோ”

“சரிடே இப்பம் என்னை என்ன செய்யச் சொல்லுதே?”

“நீங்கதான் நல்லபடியா முடிச்சு வைக்கணும்.”

”ஏதோ சின்னப் பயலுவ. என்னத்தையும் பேசுதீயன்னு கண்டுங்காணாம இருந்தா, இப்ப தோளுல ஏறி காதுல மோளுங்கற கதையாவுல்ல இருக்கு”

”அப்படியெல்லாஞ் சொல்லப்பிடாது அண்ணாச்சி”

“சரிடே. அந்தப் புள்ள ஸ்ட்ராங்க இருக்காளா? இல்ல அவங்கப்பா சுப்பையனக் கண்டு பாவாடையில மோண்டுறுவாளா?”

“அதெல்லாம் இல்ல அண்ணாச்சி. டபுள் ஸ்ட்ராங்கு”

“இதுல உங்கூட யாரெல்லாம் உண்டும்”

“வீரைய்யா, அய்யம்பெருமாள், இசக்கி மூணு பேரும் இருக்கானுவ”

“சரி ஒரு காரியஞ் செய். கொஞ்சம் துட்டு உண்டாக்கு. ஒரு வாரத்துக்குள்ள உனக்கு ஒரு வழி செய்யலாம். அதுக்குள்ள அங்கன அவளக் காங்கப் போனம் எசலியாயிடுச்சுன்னு ஆவலாதி கொண்டாராதா”

“அண்ணாச்சி, எம்புட்டுத் துட்டு வேணும்?”

“அது வேணும் லச்ச ரூபா. தாலி கட்டணும்னு ஆசை வச்சிருக்க நீதாம்டே சொல்லணும் அத. கூடக் கொறைய வச்சாலும் பெரிய நோட்டு அஞ்சாவும் பாத்துக்கிடு”

அண்ணாச்சி அப்படித்தாம். மிலிட்டேரியில இருந்து ரிடையராகி வந்திட்டாருன்னும், இல்ல இவர வச்சுச் சமாளிக்க முடியாம வடநாட்டுப் பயலுவ அனுப்பிட்டாங்கன்னும் ஊருக்குள்ள பேச்சு. 40 வயசுக்கு மேல அவருக்கு வாக்கப் பட ஒருத்தியும் தயாரா இல்லை. தயாராக இருந்த ஒரு சிலவளுவள இவருக்குப் பிடிக்கல. அப்படியே காலங் கடந்துருச்சு. குடும்பம் குட்டின்னு ஒண்ணுங் கெடையாதுல்லா, எப்பவும் வயசுப் பசங்களோடதான் சாவகாசம் எல்லாம்.

அடுத்த வாரம், முத்தம்மாவும், ராசாத்தியும் செங்கோட்டைக்குச் சினிமாவுக்குப் போறோம்னு சொல்லீட்டு தெக்குமேடு பஸ்ல ஏறிட்டாங்க. அதுக்கு முன்னால அவளோட பத்தாப்பு டி சி ஜெராக்ஸ் காப்பியும் முக்கியமான ட்ரெஸ் ரெண்டயும் ஒரு வொயர் கூடையில போட்டு அண்னாச்சிகிட்டக் கொடுத்து வச்சிருந்தா.

இலஞ்சியில் இறங்கிட்டாங்க. பின்னால வண்டியில வந்தானுவ சேக்காளிக. மாலை புது வேட்டி, சேலை எல்லாம் ரெடி. இலஞ்சிக் குமாரர் கோய்ல்ல வச்சுக் கல்யாணத்த முடிச்சுட்டு நேரா தெங்காசி பஸ் ஏறிட்டாங்க ரெண்டு பேரும். அங்கன எறங்கி மதுர பஸ்ல ஏறுர வரை அவங்க ரெண்டு பேரு உயிரும் அவங்ககிட்ட இல்ல. கடையநல்லூர் தாண்டுனதும்தான் மூச்சே வந்துச்சு.

அண்ணாச்சி கொடுத்த மதுரை அட்ரஸ்ல போய் ரெண்டு நாள் நல்லா தங்கி இருந்த பின்னாடி மதுரா கோட்ஸ்ல ஒரு வேலையும் கெடைச்சது. முதல் மாசச் சம்பளம் வாங்குனதும் தனியா ஒரு வீடு பாத்து போய்ட்டாங்க.

ஆறு மாசத்துல ஒரு தடவைகூட ஊர்ப் பக்கம் வரவேயில்லை. முத்தம்மா புள்ளையாண்டதும் அவங்கம்மை ஞாபகம் வந்திருச்சு.

“ஏங்க எங்க அம்மையப் பாக்கணும்போல இருக்குங்க. கண்ணுக்குள்ளேயே நிக்கா”

“அதுக்கென்ன அண்ணாச்சிகிட்ட நோட்டம் பாக்கச் சொல்லியிருக்கேன். இன்னைக்குப் போன் பண்ணுதம்னு சொல்லியிருக்காவ. உங்க அண்ணம்தாம் இன்னும் குதிக்கானாம்”

”அதெல்லாம் என்னப் பார்த்தா எல்லாத்தையும் மறந்துருவாம்”

“சரி பார்ப்போம”

அண்ணாச்சி நோட்டம் பாத்து , “ ஏலே அதிர்ஷடக் காரப் பெயலே எல்லாஞ்சரியாயிருச்சு. அவுக வீட்டுலயும் உங்க வீட்டுலயும் பேசியாச்சு. ஒரு 10 நாள் லீவு எடுத்துட்டு வந்தன்னா ஊரறியக் கல்யாணம்னு சொல்லிட்டாவ. பத்து களஞ்சும் பத்தாயிரம் ரொக்கமும் போடுதம்னு சொன்னாக”ன்னு சொன்னாரு.

ரெண்டு பேருக்கும் சந்தோஷம் அள்ளுது. 10 நாளு லீவு எடுத்துட்டு ஊருக்குப் போனாங்க. பஸ்டாண்டுல நின்னு வரவேத்து ஆரத்தி எல்லாம் எடுத்து வீட்டுக்குக் கூட்டீட்டுப் போனாங்க.

பாலும் பழமும் சாப்பிடச் சொல்லீட்டு, “மருமவனே நீங்க உங்க வீட்டுக்குப் போங்க முகூர்த்தம் முடிஞ்சதும் நாங்களே அனுப்பி வெக்கோம்”னாங்க.

இவனும் ரெண்டு நாளா சேக்காளிகளோட எசலிக்கிட்டு ஒரே கும்மளமடிக்காம். ஆதாளி பண்ணுதாம். எப்படிக் கடத்துனாம், மொதல்ல எங்க கூட்டீட்டு போனாம் என்ன செஞ்சாம்னு கதைகதையாச் சொல்லுதாம்.

மூணாநாளு இவன் அங்கன போயி அந்தப் பிள்ளயப் பாக்கலாம்னு போறான். எல்லாரும் கூடி உக்காந்துக்கிட்டு வேற மாதிரிப் பேசுதானுவ. ”எலே நீ என்ன ஜாதி எங்க பிள்ள என்ன ஜாதி. உனக்கு எங்க ஜாதிப் பிள்ள கேக்குதோ?”ங்கானுவ ஆளாளுக்கு.

இவனுக்கு ஒண்ணும் புரியல. பைய நவண்டு வந்து அண்ணாச்சி கிட்டப் பேசுதாம், “ என்ன நடக்குது அண்ணாச்சி. எனக்குப் பயமா இருக்கு” ங்கான்.

“நம்மள ஏமாத்திக் கழுத்தறுத்துட்டானுவடே. நம்ப வச்சு மோசம் பன்ணீட்டானுவ. அந்தப் புள்ள வவுத்துல இருந்ததக் கலச்சிட்டானுவ. புண்ணு ஆறுனதும் அம்பாசமுத்திரக்காரனுக்கு கட்டிக் கொடுக்கப் போறானுவளாம்”

முத்தம்மாவுக்கு இப்பம் மூணு புள்ளீவ பெரியவ எட்டு படிக்கா அடுத்தவம் ஆறாப்பு. கடைக்குட்டி இப்பத்தாம் ஒண்ணாப்பு. புள்ளீவள பள்ளியோடத்துக்குப் பத்தி விட்டுட்டு அவ புருசன் மாடசாமி வச்சிருக்க டீக்கடைக்கு மே வேலைக்குப் போயிருவா. 10 மணிக்கு மேல வடை பஜ்ஜி போண்டா எல்லாம் சுடச்சுடப் போட்டுத் தருவா. வியாபாரம் ஓரளவுக்கு நடக்குது. இடம் வாங்கிப் போட்டிருக்காவ ரெண்டு பேரும். சீக்கிரம் வீடும் எடுத்துருவாவ.

அய்யப்பன் இப்பம் திருச்சியில இருக்காம். தெங்காசியிலதாம் பெண்ணெடுத்தது. மாமனார் வழியில ரயில்வேல காங்க்மேன் வேலை வாங்கியாச்சு. 25 களஞ்சும் 25 ஆயிரம் ரொக்கமும் குடுத்து தன்னோட பொண்ணையும் கொடுத்தாரு புண்ணியவான். ரயில்வே கோட்டர்ஸ்ல எல்லா வசதியும் இருக்கு. ஒரே பையன் கான்வெண்ட்டுல படிக்காம்.

என்னது? அண்ணாச்சி என்ன ஆனாருன்னா கேக்கிய? இந்தா இப்பம் குளிக்க கூட்டீட்டு வருவாவ பாருங்க. அந்தா நாலாவதா வாராரு பாருங்க அவருதான். ஆளு மெலிஞ்சு போய் மொகமெல்லாம் வத்திப் போயி.

ஏம்னா கேக்கிய? அவரு சனக்கைய எடுத்துட்டானுவ ரெண்டு வீட்டுக் காரனுவளும்.

குற்றாலம் வந்தீகன்னா குளிக்க மட்டுமில்ல அண்ணாச்சியையும் பாக்கலாம். வாரீயளா?

.

ஒரு துப்பறியும் கதை

இந்தக் கதைய எழுதுற நான் நீங்களாகக்கூட இருக்கலாம், அது முக்கியமில்லை. ஆனா நானோ நீங்களோ இப்படி ஒரு சிக்கல்ல சிக்காம இருப்பதுதான் முக்கியம்.

என்ன நடந்துச்சுன்னு சொல்லுன்னு கோபமாக் கேக்குறீங்க. சரி சரி. புரியுது. ஆனா நீங்களும் என்னை மாதிரி போலீஸ் ஸ்டேசனுக்கெல்லாம் போய்ட்டு அவமானப் பட்டு வந்திருந்தீங்கன்னா நான் பட்ட கஷ்டம் உங்களுக்குப் புரியும்.

போன வாரம் ஒரு நாள் மதியம் சாப்பாட்டுக்கப்புறம் கட்டையச் சாய்க்கலாம்னு யோசிச்சிட்டிருக்கப்பத்தான் போன் வந்தது என் மனைவிகிட்ட இருந்து, “ஏங்க கொஞ்சம் ஸ்கூல் வரைக்கும் வர முடியுமா?”

“ஏம்ப்பா என்ன ஆச்சு?”

“ஒரு சின்னப் பிரச்சினைங்க”

“ஏன் உங்க ஹெச் எம் இல்லையா?”

“இருக்காரு. நீங்க வாங்க உடனே”

சரின்னு கிளம்பிப் போனா ஹெச் எம் கூட இன்னும் நாலஞ்சு டீச்சர்களும் இருக்காங்க. ஹெச் எம்முக்கு எதிரா ஒரு 35 வயசு மதிக்கிறாப்ல ஒரு பெண்மணி உக்காந்திருக்காங்க. நல்ல பணக்காரக் களை முகத்திலயும் உடையிலயும்.

“என்ன சார்”னு ஹெச் எம்மப் பார்த்துக் கேட்டேன்.

அதுக்கு அவரு பதில் சொல்லுறதுக்கு முன்னாடியே , “இவரு யாரு?”ன்னாங்க அந்தம்மா.

“டீச்சர் ஹஸ்பெண்டு”ன்னாரு ஹெச் எம்.

“இதுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வெளியாளுங்கள எல்லாம் இதில நுழைக்கிறீங்க?”

“அவரு எங்க வெல்விஷர்மா. ஸ்கூலுக்கு நெறைய உதவி பண்ணியிருக்காரு. அதனாலதான்.”

ஹெச் எம் என்னப் பார்த்து, “ சார் நம்ம ஸ்கூல் பசங்க ரெண்டு பேரு இவங்க வீட்டுக்குப் போய் தண்ணி குடிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் அவங்க செல் போனக் காணோம்னு புகார் தர்ராங்க”

“என்ன மாடல் மேடம்?”

“ சோனி எரிக்ஸன் கே 750 ஐ”

“எப்ப இருந்து காணோம்?”

“10.30 மணிக்கு ரெண்டு பசங்க வந்தாங்க. குடிக்கத் தண்ணி வேணும்னாங்க. குடுத்தேன். இன்னும் வேணும்னாங்க. உள்ள போயிட்டு வர்ரதுக்குள்ள போயிட்டாங்க. நான் வேற வேலைகளைப் பாத்துட்டிருந்தேன். அரை மணி நேரமா போனே வரலை. பார்த்தா போனையே காணோம்.”

“சார் பசங்க ரெண்டு பேரையும் வீட்டுல பார்த்தீங்களா?”

“வீட்டுக்கு ஆளனுப்பிப் பார்த்தாச்சு. ரெண்டு பசங்களும் வீட்டுல இல்லை”

“அப்ப நிச்சயம் ஆட்டையப் போட்டுட்டாங்க. சரி மேடம் ஈவினிங் வரைக்கும் டயம் கொடுங்க. கிடைக்கலைன்னா அவங்க பேரண்ட்ஸ் கிட்டச் சொல்லிப் புதுசு வாங்கித்தாரோம்”

அவங்க மனசில்லாமத்தான் போனாங்க. ஆனா போகும்போதே “சாயங்காலம் வரைக்கும்தான் காத்திருப்பேன். கிடைக்கலைன்னா போலீசுக்குப் போயிடுவேன். அது மட்டும் இல்லை டைரக்டரேட் வரைக்கும் புகார் பண்ணுவேன்”ன்னு மிரட்டிட்டுப் போனாங்க.

“சார் பணம் போனாலும் போகுது. ஆனா நம்ம ஸ்கூல் மானம் போயிறக் கூடாது. முக்கியமா பசங்க. ஏதோ தப்புப் பண்ணீட்டாங்க. அதுக்காக அவங்க ஃப்யூச்சர ஸ்பாயில் பண்ணக் கூடாது.” அப்படின்னு ஆதங்கப்பட்டாரு ஹெச் எம்.

அதுக்கப்புறம் நம்ம ஆபரேசன் மொபைல் செர்ச்ச ஆரம்பிச்சேன். ” சார் இந்த ஊர்ல மொத்தம் 10 இல்லன்னா 12 செல்போன் கடைதான் இருக்கும். நாம் ஒரு செகன் ஹேண்ட் மொபைல் வாங்குற மாதிரி கடைகடையா ஏறி இறங்கி இந்த மாடல்தான் வேணும்னா, நிச்சயமா மாட்டும். நாம ஒரு நாலு பிரி்வா பிரிஞ்சு போனா சீக்கிரமா கவர் பண்ணிடலாம்”னு ஆரம்பிச்சோம்.

ஒரு மணி நேரத்துல பி டி மாஸ்டர் என்னைக் கூப்பிட்டார், “ சார் கொஞ்சம் செல் ப்ளானெட்டுக்கு வாங்க.” அந்தக் க்டையில போய் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா பையன் உண்மையச் சொல்லீட்டான். “ரெண்டு பசங்க கொண்டு வந்தாங்க சார். ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்”ன்னு சொன்னான். “சரிப்பா அந்தப் பணத்த நாங்க கொடுக்குறோம் நீ செல்லத் தா”ன்னு கேட்டுட்டு இருக்கப்பவே போலீசு வந்திச்சு கடைக்குள்ள.

“இங்க யார்ரா சரவணன்?”

”நாந்தான் சார்”ன்னு பவ்யமா சொன்னான் கடைக்காரன்.

“ஏண்டா திருட்டு மொபைலா வாங்குறே”ன்னு ரெண்டு அடி போட்டாரு.

“இல்ல சார் இல்ல சார்”

“என்ன நொள்ள சார். நடரா ஸ்டேசனுக்குன்னு” அவனத்தள்ளீட்டுப் போயிட்டாங்க.

”என்ன சார் இது?”ன்னாரு ஹெச் எம். “அந்தம்மாதான் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கணும் சார். சரி விடுங்க அவங்களே பாத்துப்பாங்க”ன்னு நாங்க வீட்டுக்குப் போயிட்டோம்

மொபைல் தொலைஞ்சு போச்சு அதுகிடைச்சிடுச்சுன்னு இதோட சுபம்னு போடலாம்னு பார்த்தா முடியல.

ரெண்டு நாள் கழிச்சு ஒரு கான்ஸ்டபிள் எங்க ஆபீசுக்கு வந்து, “ சார் கொஞ்சம் ஸ்டேசனுக்கு வர முடியுமா?”ன்னாரு

“எதுக்குங்க?”

“வாங்க எஸ் ஐ சொல்லுவாரு”ன்னாரு

சரின்னு அவருகூட ஸ்டேசனுக்குப் போனா, “நீங்கதான் துப்பறியும் சங்கர்லாலோ?”ன்னு நக்கலாக் கேட்டாரு எஸ் ஐ.

“சார் எனக்கு ஒண்ணும் புரியலை”

“செல் போன் திருடு போனா எங்க கிட்ட புகார் கொடுக்கணும் நாங்க விசாரிப்போம். அத விட்டுட்டு நீங்களா அதச் செய்யக் கூடாது”ன்னாரு

“இல்ல சார். படிக்கிற பசங்க பாழாயிடக் கூடாதுன்னுதான்”

“இப்படி விடக்கூடாது. இவனுங்கதான் பினாடி பெரிய பெரிய கேடியா வருவாங்க”

“சரி சார் இப்ப நான் என்ன பண்ணனும்?”

“நீங்க எல்லாம் இதுல உள் கையோன்னு எங்க டிபார்ட்மெண்டுல இப்ப டாக் இருக்கு. இனிமேல் இப்படிச் செய்யாதீங்க. சரியா?”

“சரி சார்”னு சொல்லீட்டு வந்திட்டேன்.

இந்த இடத்துல கூட இப்படியே நிறுத்திவிடலாம். எல்லாம் சுலபமா முடிஞ்சுதுன்னு எழுதி முடிக்கலாம் . ஆனா நாம நினைக்கிற மாதிரியா இருக்கு?

அந்தம்மாவுக்கு மொபைலும் கிடைக்கல(ஏட்டு அமுக்கீட்டாரு). அதுக்குப் பதிலா ஒரு டப்பா செட்டக் காமிச்சு இதுதான்ன்னு சொல்லியிருகாங்க. வெறுத்துப் போய் அவங்க புதுசாவே வாங்கீட்டாங்க.

ஸ்டேசன்ல பசங்களோட பேரன்ஸ்கிட்ட இருந்து மொபைல் வித்த பணம்னு ரெண்டாயிரத்தையும் கறந்துட்டாங்க.

பசங்க ரெண்டு பேரையும் டி சி வாங்கி வேற பள்ளிக்கூடத்துல சேத்துட்டாங்க.

இந்த மாதிரின்னு ஏ இ ஓ வுக்கும் புகார் கொடுத்துட்டாங்க, ஸ்கூலுக்கு என்கொயரி போட்டிருக்காங்க.

அந்தம்மா மட்டும் ஒரு அரை மணி நேரம் பொறுமையா இருந்த்திருக்கலாமேன்னு நீங்க பெருமூச்சு விடுறது எனக்கு இங்க கேக்குது என்ன செய்ய?

Life is a game of ifs and buts.

.

ஃப்ளாஷ் பேக்


திரையரங்கை ஒட்டி இருக்கும் மண்டபத்தில்தான் சரவணன் தங்கை ரேவதிக்குத் திருமணம். முதல்நாளிரவே வரச் சொல்லி அன்புக் கட்டளை. சொன்னபடி ஆஜராகிவிட்டேன் குடும்பத்துடன். காரைப் பார்க்கிங் பண்ண இடம் கிடைக்கத்தான் தாமதமாகி விட்டது. அடுத்த வீதியில்தான் நிறுத்த முடிந்தது.

மண்டபத்தை கலை ரசனையுடன் அலங்கரித்திருந்தனர். முதல் நாள் இரவு வரவேற்பு என்பதால் மணவறை அலங்காரம் ஏதும் செய்யவில்லை. நள்ளிரவில் ஆரம்பித்து அதிகாலையில் முடிப்பார்கள். அதற்குத் தேவையான சம்பங்கி மற்றும் கலர் பூக்கள் அருகே மூட்டையில் தயாராக இருந்தது.

நடை பழகும் யுவதிகளும், அவர்களைப் பின் தொடரும் வாலிபர்களும், இன்று பார்க்கமுடியாமல் போன சீரியலில் என்ன ஆகியிருக்கும் என்று அலசும் மாமியார்களும் , அடுத்து என்ன புடவை வாங்கலாம், என்ன நகை வாங்கலாம் என திட்டம் போடும் நடுவயதுப் பெண்மணிகளும், தயாராக இருக்கும் மகளின் கல்யாணச் செல்வு குறித்த கவலை தோய்ந்த பெரிசுகளுமென மண்டபம் கலந்துகட்டி நிறைந்திருந்தது. இந்தக் கவலைகள் ஏதுமற்றுச் சுற்றித் திரிந்த குழந்தைகள் கூட்டம் ஒரு சோபை தந்திருந்தது.

”டாடி மம்மி வீட்டில் இல்லை” என்ற ரகசியத்தை இசைக்குழுவினர் சத்தமாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தனர். நாதஸ்வரமும், தவிலும் உறையிலிருந்து பிரிக்காமல் சுவரோரமாகத் தள்ளி வைக்கப் பட்டிருந்தது. வீடியோக்காரர்கள் பி சி ஸ்ரீராம் லெவலுக்கு சுட்டுக் கொண்டிருந்தார்கள். புகைப்படக் கலைஞரும் சளைத்தவர் இல்லை.

வாழ்த்துவோருக்கான வரிசை நீண்டதாக இருந்தது. எல்லோரும் மாப்பிள்ளை சைடு. ரேவதியின் அழகிலும் குணத்திலும் மயங்கி மணமகன் முறையாகப் பெண் கேட்டு நடக்கும் திருமணம். மணமகனும் ரேவதிக்கேற்ற அழகன். மணமகன் வீட்டினருக்கும் ரேவதியைப் பிடித்துப் போக எல்லாச் செலவும் தங்களுடையது எனச் சொல்லிவிட்டனர்.

ரவணனும் நானும் ஒன்றாக டிப்ளாமோ படித்தோம். பின் இருவரும் இரு வருடங்கள் மண்டபத்தின் பின்பக்கத் தெருவில் ஒரு அறையில் தங்கிச் சின்னச் சின்னக் கம்பெனிகளில் வேலை என்ற பெயரில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தோம். நல்ல வேலையில் செட்டிலாக இருவருக்குமே மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது; வேறு வேறு ஊர்களில்.

“இந்த மண்டபம் ஞாபகமிருக்காடா?” என்றான் சரவணன்.

“மறக்க முடியுமாடா?” என்றேன் பேச்சிலர் தின ஞாபகங்களுடன்.

” எந்தங்கச்சி கல்யாணம் இவ்வளவு பெரிய மண்டபத்துல நடக்கும்னு நான் நெனைச்சுக் கூடப் பார்க்கலடா?” என்றான் விழிகள் உதிர்த்த கண்ணீர் முத்துக்களுடன்.

சரவணனின் தோளைத் தட்டி அமைதிப் படுத்தினேன். அதற்குள் வேறு யாரோ, “மாப்ப்பிள்ளை பட்டுவேட்டி சட்டை எங்க வச்சிருக்கீங்க” என்று அவனைக் கூப்பிட என்னை விட்டுப் பிரிந்தான்.

ரவுப் பந்தி நடக்க ஆரம்பித்திருந்தது. டைனிங்க் ஹால் அமளிதுமளிப்பட்டது. இரண்டு மூன்று பேர் ஒரு இளைஞனைத் தாக்கிக் கொண்டிருந்தனர். விலக்கி விட்டு என்னவெனக் கேட்டதில், “ நானும் வந்ததிலிருந்து பாக்குறேன் சார். பேந்தப் பேந்த முழிக்கிறான். நான் கேட்டா மாப்பிள்ளை வீடுங்கிறான். அவர் கேட்டதுக்கு பொண்ணு வீடுங்குறான். சாப்பாட்டுக்குன்னே வந்திருக்கான் சார்”

“சரி சரி விடுங்க நான் விசாரிக்கிறேன்” என அவன் தோள் மீது கை போட்டு அவனை தனியே அழைத்து வந்தேன்.

“சார் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. மில்லுக்குப் போயிட்டிருந்தேன் இப்ப அதுக்கும் வழியில்ல. கட்டிட வேலைக்கும் போய்ப் பார்த்தேன். என்னால முடியல. இன்னைக்கு நைட் சாப்பிட்டா எப்படியும் ரெண்டுநாள் தாக்காட்டிடுவேன். ப்ளீஸ்”

அவனை அழைத்து வந்து தியேட்டருக்கு முன் இருக்கும் புரோட்டாக் கடையில் முட்டை புரோட்டாவும் குடல் குழம்பும் வாங்கித்தந்தேன். என் விசிட்டிங்க் கார்டைக் கொடுத்து “ நாளை மறுநாள் என்னை வந்து பார். ஏதாவது வேலை தருகிறேன்” என்றேன்.

“நன்றி சார். இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் “ என்றான் கலங்கிய கண்களுடன்.

“சரி சரி. மறக்காம வா “ என்று அவனை அனுப்பிவிட்டு மண்டபத்துக்குள் நுழைந்தேன்.

வேகவேகமாக என்னை நோக்கி வந்த சரவணன், ”எங்கடா போன இவ்வளவு நேரம்? ஏதோ பிரச்சினைன்னு சொன்னாங்க, என்னடா?” என்றான்.

“ஞாபகமிருக்கான்னு கேட்டியே இங்க ஒருத்தன் பிளாஷ் பேக்க நடத்தியே காமிச்சுட்டுப் போயிட்டான்.”

“பாவம், நம்ம டெக்னிக் அவனுக்குத் தெரியலை அதான் மாட்டிக்கிட்டான்” என்றான் சரவணன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவாறே.

உரையாடல் – சமூக கலை இலக்கிய அமைப்புச் சிறுகதைப் போட்டிக்கு எனது படைப்பு.

.