Month: January 2010

ரோப் – ஹிட்ச்காக்கின் திரைப்படம்

.

கோணங்கள் திரைப்பட இயக்கம் கோவையில் நல்ல திரைப்படங்களைத் திரையிட்டு வருவதுடன் அதையொட்டிய விவாதங்களையும் ஆரோக்கியமாக வழி நடத்தி வருகிறது. எந்த வித லாப நோக்கமுமற்று நடத்தப்படும் இவ்வியக்கம் 2003 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது,

வாரம்தோறும் ஞாயிறு மாலை ஒரு திரையிடலும் விவாதமும் நடக்கும். இந்த வாராம் ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் ரோப் திரைப்படம்.

ROPE
A film by Alfred Hitchcock
Country:USA
Year ; 1948
Run time :80 minutes
English with English subtitles
24th January 2010; 5.45pm
Perks Mini Theater
Perks School , opp Boat House,
Trichy Road, Coimbatore
Call: 94430 39630
http://konangalfilmsociety.blogspot.com/

இந்தப் படத்தைப் பற்றிய நண்பர் ரகுநாதனின் பார்வை இங்கே

.

Advertisements

சீவன் – கந்தர்வன் சிறுகதைகள்

பின் நவீனத்துவ, இருத்தலியல், கட்டுடைத்தல் போன்ற கோட்பாடுகளும் இன்ன பிற ஜல்லியடித்தலும் ஏதுமில்லாத தெளிந்த நீரோட்ட எழுத்து நடையில் கதை எழுதியவர் கந்தர்வன். அவரது கதைகளில் அதிகமும் மண்ணின் மணமும் வேர்வை வீச்சமும் கலந்திருக்கும்.

கஞ்சி என்ற ஒற்றைவார்த்தை தவிர வேறெதுவும் பேசாத பைத்தியக்கரனைப் பற்றி(சீவன்), தேடித் தேடிச் செடிகள் கொணர்ந்து வீட்டில் வைத்து வளர்க்கும் ஆசை பற்றி (பூவுக்குக் கீழே), நுகர்வோர் கலாச்சாரப் பிடியில் சிக்கிக் சீரழிவதைப் பற்றி(அடுத்தது), திருமணச் செலவைக் கட்டுப் படுத்த கண்டுகொண்ட தீர்வு பற்றி(மங்கலநாதர்), மரங்களுடனான நெருக்கமும், அவைகள் வெட்டி வீழ்த்தப் படும்போதெழும் துக்கத்தைப் பற்றி(மைதானத்து மரங்கள்), வேலைக்குப் போகும் பெண்கள் படும் சிரமங்கள் பற்றி(இரண்டாவது ஷிஃப்ட்), தனக்குப் பாத்யதை இல்லாத ஆனால் தான் உரிமை கொண்டாடிய பொருள் கைவிட்டுப் போகும்போவது பற்றி(சாசனம்), ஒரு வேலைக்காரன் தோள் துண்டும் படும் அவஸ்தையும் அதனால் அவன் படும் அவஸ்தையும் பற்றி (துண்டு), சிரமப்படு வீடொன்றைக் கட்டி வட்டி கட்ட முடியாமல் அதை வாடகைக்கு விட்டு வேறொரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்க நேர்வது பற்றி(ஒவ்வொரு கல்லாய்), சந்தையில் மாடு வாங்கினால் சரியாக வராது என மந்தையில் மாடு வாங்கிக் காயடிக்கும் கொடுமை பற்றி(கொம்பன்) என முத்தான பத்துக் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார்எனக்குப் பிரியமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் சீவன் என்ற தலைப்பில்.

முன்னுரையில் தமிழ்ச்செல்வன், “ தீவிர வாசகனுக்குக் கதைகள் வெறும் கதைகளாக மட்டுமே நிற்பதில்லை. சில கதைகள் அவன் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகி விடுவதுண்டு “

உண்மைதான் மங்கல்நாதர் கதையைப் படித்தபோது என் அம்மா அவர்கள் திருமணம் நடந்ததை ப் பற்றிச் சொல்லுவதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. “ஊரடைக்கப் பந்தல் அஞ்சு வீதியும், 7 நாள் கல்யாணம், பவுன் 15 ரூபாதான், எல்லா விதியிலும் மாட்டு வண்டி நிக்கும், மாடுகளுக்கு தீவனம் போடம் மட்டுமே ஒரு ஆள், வீதில இருக்க எல்லாத் திண்ணையிலும் சாப்பாட்டுப் பந்தி நடந்துட்டே இருக்கும், சாம்பார் வாளிப் பிசுக்கக் கழுவக் கூட நேரமிருக்காது. தவசுப் பிள்ளைகள்(சமையல்காரர்கள்) ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை பாத்துட்டே இருந்தாங்க, மாட்டு வண்டிகள்ல காய்கறி வந்து இறங்கிட்டே இருக்கும்”

யோசித்துப் பாருங்கள் இன்றிது சாத்தியமா? அப்படி ஒரு திருமணத்தைத்தான் நடத்துகிறார் தன் முதல் மகளுக்கு மங்கல் நாதர் கதையில் வரும் மாமா. செலவு கட்டுக்கடங்காமல் கை மீறிச் செல்ல, அடுத்த மகள் திருமணத்திற்கு அவர் எடுத்த முடிவு?

”இது கந்தர்வனைப் பற்றிய சிறு அறிமுகத்திற்காகத்தான். இதைப் படித்து மேலும் கந்தர்வனின் கதைகளைத் தேடிப் படிக்க ஆர்வம் ஏற்படுத்தும் ஒரு முயற்சிதான் என்கிறார் ” முன்னுரையில் தமிழ்ச்செல்வன் . முழுத்தொகுப்பு வம்சி வெளியிட்டிருக்கிறார்கள். வாங்க வேண்டும்.

நூல் : சீவன்
வகை : தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தேர்வு : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை, 044-24332424, 24332924
விலை : ரூ.30

இப்புத்தகத்தை வாசிக்கத் தந்த செல்வேந்திரனுக்குக் கூடுதல் ப்ரியமும் கூடவே நன்றிகளும்.

அன்புள்ள செல்வராகவன்

.

அன்புள்ள செல்வராகவன்,

எதுக்கய்யா இப்படி ஒரு படத்தை எடுத்தீர்கள்? ஆளாளுக்குப் பிரிச்சு மேய்கிறார்கள். கொஞ்ச நாளாக டல்லடித்துக் கொண்டிருந்த பதிவுலகிற்கு நல்ல வேட்டை.

சென்ற வருடம் மொத்தம் 99 தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளனவாம். ஒன்றைக் கூடவா நீங்கள் பார்க்கவில்லை. அந்தப் படங்கள் அனைத்திலும் நிறைந்து வழிந்த லாஜிக் என்ற வஸ்து உங்கள் படத்தில் ஒரு இடத்தில்கூடத் தென்படவில்லையே? அது ஏனய்யா? குறைந்த பட்சம் லாஜிக் என்ற வார்த்தையைக் கூட ஒரு பாத்திரமும் பேசவில்லையே. அது ஏன்?

அது ஏனய்யா வியட்னாமுக்கு விமானத்தில் செல்லாமல் கப்பலில் செல்கிறாகள். விமானத்தில் செல்லலாமே? என்ன மூன்று மடங்கு செல்வாகும் என்று யோசிக்கிறீர்களா? அதுதான் புனைவுன்னு முதலிலேயே கார்டு போட்டாச்சே. அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானங்களை வாடகைக்கு பிடித்துப் போனார்கள் எனக் காட்ட வேண்டியதுதானே?

காரின் ஜன்னல் வழியாக கார்த்தி இறங்க வேண்டிய அவசியம் என்ன? கார் கதவு ரிப்பேர் என எங்காவது கார்டு போட்டீரா? இல்லை கதாபாத்திரம்தான் எங்காவது சொல்லுகிறதா? 35 கோடி செலவில் படம் எடுத்தும் அவருக்கு ஒரு சட்டை வாங்கித் தர மனதில்லையே உமக்கு? என்ன ஆளய்யா நீர்?

கடலுக்குள்ளிருந்து மனிதர்களைக் கவ்விப்பிடிப்பது என்ன என கார்டு போட்டீரா? என்ன என நாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் அவ்வளவுதானே?

பாம்பு வரும்னு ஆண்ட்ரியாவுக்கு எப்படித் தெரியும்? அவங்க என்ன படிச்சிருக்காங்க? எங்க படிச்சாங்க? எதையுமே சொல்லவில்லை. காலேஜ் அட்மாஸ்பியரில் ஒரு குத்துப் பாட்டு வைத்திருக்கலாம்? வடை போச்சே!

பாம்புங்க எல்லாம் ஏன் மொத்தமா வருது? தனித்தனியா வந்து ஹீரொகிட்ட அடிவாங்குற வில்லன் அடியாட்கள் மாதிரி ஒண்ணொன்னா அனுப்பியிருக்கலாமே?

தண்ணிக்குள்ளே விழுந்தவங்க எப்படி 3 பேரும் ஒண்ணா ஒரே இடத்துல இருக்காங்க? குறைந்தது 10 மீ இடைவெளி வேணும்னு அரசுப் பேருந்துகளின் பின்புறம் எழுதியிருப்பதைப் படித்ததில்லையா?

புதைகுழி மேல் நிழல் விழுந்தால் புதைகுழி ஃப்யூசாகிடும்னு எந்த புத்தகத்தில் இருக்கு? நீங்க சொன்னா நாங்க நம்பனுமா?

அவ்வளவு பெரிய கல்லை எப்படி உருட்டினார்கள்? அதுவும் பசியுடன் இருக்கும் மூவரும்? இதெல்லாம் ஆங்கில படத்தில் ஓக்கே. தமிழ்ப் படத்தில் செய்தால் நாங்க கேள்வி கேப்பம்ல?

இப்படி அடுக்கடுக்கா கேள்வி கேட்க இடம் கொடுத்து ஒரு படத்தை எடுத்த உங்களை என்ன செய்ய?

அடுத்த படம் பாகம் இரண்டு எனச் சொல்லி இருக்கிறீர்கள். நான் சொல்லுவது போல் நடந்தால் நீங்களும், உங்கள் படமும் தப்பிக்கலாம்.

1. ஸ்க்ரிப்டை எழுதி எங்களிடம் கொடுக்க வேண்டும். எங்களிடமுள்ள பதிவர்களில் சிலரைக் கொண்ட வலைக்கமிட்டி அமைத்து, அதில் லாஜிக் உள்ளதா எனத் தரப் பரிசோதனை செய்து தேர்ந்தெடுக்கப்பட்டால் நீங்கள் அதைத் திரைப் படமாக எடுக்கலாம்.

2. படம் எடுக்க எவ்வளவு கால அவகாசம் எனச் சொல்ல வேண்டும். அதிலிருந்து தாமதமாகும் நாள் ஒவ்வொன்றிற்கும் 36% வட்டி வசூலிக்கப்படும். 12% நிர்வாகச் செலவுகளுக்கு வைத்துக் கொண்டும் மீதி 24% தயாரிப்பாளருக்கு வழங்கப் படும். தவறும் பட்சத்தில் உங்களுக்கு வழங்கப் படும் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வலைக் கமிட்டியாருக்கு அதிகாரம் உண்டு.

3. தயாரிப்பாளர் தரும் பணம் எவ்வளவு? என்ன வகையில் அதைச் செலவு செய்தீர்கள் என நாளதுவாரியாக கணக்கை எங்களிடம் காண்பிக்க வேண்டியது, அதைக் வலைக் கமிட்டியார் ஆய்வு செய்து தனிக்கை செய்தபின் அடுத்த கட்டப் பணம் வழங்கப் பரிந்துரைக்கப் படும்.

4. ஒரு(வழியாகப்) படம் எடுத்து முடிந்ததும் வலைக் கமிட்டியிடம் திரையிட்டுக் காட்ட வேண்டியது. வலைக் கமிட்டியார் அதிருப்தி தெரிவிக்கும் பட்சத்தில் வெளியிடத் தடை விதிக்கப் படும்.

5. வலைக் கமிட்டியார் ஒரு வேளை திருத்தங்கள் ஏதேனும் பரிந்துரைத்தால் அதை உம் சொந்தச் செல்வில் எடுக்க வேண்டும். வலைக் கமிட்டியோ அல்லது தயாரிப்பாளரோ பொறுப்பேற்கமாட்டார்கள்.

6. திரைப்படம் வெளியாகி அதிருப்தியைச் சம்பாதிக்கும் பட்சத்தில், வலைக் கமிட்டி ஒன்று கூடி நீங்கள் மேலும் திரைப்படம் எடுக்கலாமா, அதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா என விவாதித்து முடிவு செய்யும்.

குறிப்பு : இந்தக கட்டுப்பாடுகள் நீங்கள் எடுக்கும் படத்திற்கு மட்டும்தான். பிறர் எடுக்கும் படத்தைப் பற்றி கவலைப் பட மாட்டோம். முடிந்தால் ஆங்கிலத்தில் எடுத்துத் தமிழ் சப் டைட்டிலுடன் வெளியிடுங்கள் அப்பொழுது லாஜிக் பார்க்க மாட்டோம். கேமரூனெல்லாம் எங்களிடம் ஸ்கிரிப்ட்டைக் காட்டினார் தெரியுமா? வரவு செலவுக் கணக்கெல்லாம் நாங்கள்தான் ஆடிட் செய்தோம்.

…………………………………………………………. வேலனின் கடிதம் தொடரும்

.

ஆயிரத்தில் ஒருவன் – நன்றி செல்வா

.

தமிழில் ஃபேண்டசிப் படங்கள் இரண்டே வகைதான். மாயா ஜால விட்டலாச்சார்யா வகை மற்றும் ராமநாராயணன் வகைக் கடவுள் படங்கள். சமீபத்தில் வந்த ஈரம் வித்தியாசமான விதிவிலக்கு.

தற்பொழுது வரும் தமிழ் மொழியாக்கப் படங்கள் ஓரளவுக்கு ஓக்கே என்றாலும் கோட்டும் டையும் அணிந்த ஒருவன் சென்னை பாஷை அல்லது பொருந்தாத பழமொழிகளைக் கொண்டு வட்டார வழக்கில் பேசுவது எரிச்சல் ஊட்டுகிறது.

இந்தப் பின்புலத்தில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு நல்ல முயற்சி. இரண்டு விஷயங்களுக்காக செல்வராகவனைப் பாராட்ட வேண்டும். இது போல ஒரு ஃபேன்டசிக் கதையை எடுக்க நினைத்ததற்காகவும், அதை சிறப்பாக எடுத்ததற்காகவும்.

ஆயிரத்தெட்டு லாஜிக் ஓட்டைகளை இப்பொழுது சொல்ல முடியும் என்றாலும் படம் பார்க்கும் பொழுது அடுத்து என்ன என்ற ஆவலும், படத்தை பிரசெண்ட் செய்த விதமும் அதை மறக்கடித்திருப்பது உண்மை.

தொல் பொருள் ஆராய்ச்சியும், அதன் சாதக பாதகங்களும் ஆங்கிலப் படங்கள்மூலம் ஏறகனவே பார்த்ததுதான் என்றாலும் ஆரம்பக் காட்சிகளே அசத்தலாக இருக்கின்றன. குறிப்பாக சட் சட் என மாறும் காட்சியமைப்பு.

படத்தின் கதை என்ன என்பது கிட்டத்தட்ட மனப்பாடப் பகுதி செய்யுள் போல எல்லோரும் ஒரு முறை சொல்லி விட்டார்கள். படத்தில் எனக்குப் பிடித்த அம்சங்களாக நான் கருதுவது:-

1. கார்த்தியின் பாத்திரப் படைப்பு. சுஜாதா கதையில் வரும் வசந்தைப் போல. கதையோட்டத்தில் தன் தனித்தன்மையை இழந்து முக்கியமானவனாக மாறுவது. (முத்துக்குமரன் பாத்திரத்திற்கு சரியான ஆசாமி யாராவது அந்தக் கதையை முயலலாம் கார்த்தியை வைத்து)

2. தமிழ்த் திரைப் படங்களில் பெரும்பாலும் கதாநாயகர்களை ஒட்டியே பெண் பாத்திரங்கள் சித்தரிக்கபடும். மாறாக இப்படத்தில் பெண்பாத்திரங்கள் இரண்டுமே தன்னிச்சையாக சுய சிந்தனை உள்ளவர்களாக வேறு ஒரு நோக்கம் உள்ளவர்களாகக் காட்டியிருப்பது.

3. லாஜிக் என்ற வஸ்து கடைசி வரை எங்குமே தட்டுப்படாமல் இருப்பதை கதையின் ஓட்டத்திலும் காட்சிப்படுத்துதலிலும் மறக்கடித்திருப்பது. அடுத்து என்ன என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறதே தவிர. லாஜிக் இடிப்பது தெரியவில்லை.

4. எது நிகழ்காலம், எது கனவுலகம் எனத் தெரியாமல் ஒன்றிலிருந்து ஒன்று என முன் பின்னாகச் சென்று வரும் ஃபேண்டசித்தன்மை.

5. மிக நேர்த்தியான ஒளிப்பதிவு, நகரம், காடு, மலை, பாலைவனம், நீர் நிலை என அனைத்துப் பிரதேசங்களையும் அருமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

செல்வாவிடம் கேட்கச் சில கேள்விகள்.

1. ஜி வி பிரகாஷிடம் இன்னும் நன்றாக வேலை வாங்கயிருக்கலாமே?

2. சோழ மக்களைக் காண்பிக்கும்போது இருக்கும் இருட்டுக்கு என்ன குறியீடு. ஏன் அவர்களைக் கறுப்பர்களாகக் காட்ட வேண்டும்?

வடவள்ளி ஸ்ரீராம் தியேட்டரில்தான் இப்படத்தைப் பார்த்தேன். வழக்கமாக நக்கல் நையாண்டி என படத்தின் இடை இடையே கத்தும் கூட்டம் அமைதியாகப் படம் பார்த்தது ஆச்சர்யமானது. படம் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். வெளிவரும்போது குடும்பப் பெண்கள் பேச்சிலிருந்து (”இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கு”) படம் அவர்களுக்கும் பிடித்திருக்கிறது எனத் தெரிகிறது.

ஹாலிவுட் திரைப்படங்களை DVDயில் பார்த்து ரசிக்கும் மேல்தட்டு மக்களுக்கு இப்படம் பிடிக்காமல் இருக்கலாம். எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. DVD கிடைத்தாலும் மொழிப் பிரச்சினை இருக்கிறது. எனவே என்னைப் போன்ற மத்திய தர ரசனை உள்ள ஆசாமிகளுக்கு இந்தப் படம் பிடித்திருக்கிறது.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி செல்வா.

.

கதம்பம் – 6/01/10

.

அவியல், என்ணங்கள், காக்டெயில், துவையல் போன்ற பெயர்களில் எழுதப் படும் கதம்பத்தின் ஆதார உள்ளடக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து எழுதுகிறார் சங்கர்; கொத்து பரோட்டா என்ற தலைப்பில். ஒரு வாரம் அவரது கொத்து பரோட்டாவைச் சாப்பிடவில்லை எனில் ஏதோ ஒன்றை இழந்தாற்போல் இருக்கிறது. நல்ல சுவை.

********************************************************************

புத்தகச் சந்தை பற்றிய பதிவுகளைப் படிக்க சந்தோஷமாக இருக்கிறது. பதிவர்கள் புத்தகங்களை வாங்குவதும் அது குறித்து பதிவிடுவதும் நல்லது. நானும் சில புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன்.

1. சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன். ( 40+ வயதிலிருப்போருக்குப் பிடிக்கும்)
2. ஆழி சூழ் உலகு – ஜோ டி க்ரூஸ். ( மிகச் சிறந்த ஆக்கம்; மிக இள வயதில் (39). நல்ல தேர்ந்த ஆய்வுக்குப் பின் எழுதிய நாவல்)
3. கடவு – திலீப் குமார் ( குறிப்பாக மூங்கில் குருத்து சிறுகதை. வெகு குறைவாக எழுதும் நல்ல எழுத்தாளர்)
(கடவு, மூங்கில் குறுத்து இரண்டும் வேறு வேறு சிறுகதைத் தொகுதிகள் என அழைத்துச் சொன்ன சிவராமனு(பைத்தியக்காரன்)க்கு நன்றி. மேலும் இரண்டின் பிரதிகள் இப்பொழுது கிடைப்பதில்லை எனவும் சொல்கிறார்)

4. நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பு
5. ஜெயமோஹன் குறுநாவல்கள் தொகுப்பு
6. கோரை – கண்மணி குண சேகரன் ( ஒரு சாதாரண கோரைப் புல் ஒரு மனிதனை வாழ்க்கையின் விளிம்பிற்கே துரத்தித் துரத்தி அடிப்பதை விவரித்திருப்பார்)
7. அளம் – சு.தமிழ்ச்செல்வி (உப்பளத்தையும் அதன் வாழ்க்கைமுறைகளையும் மையமாகக் கொண்ட நாவல்)
8. எனது வீட்டின் வரைபடம் – ஜே பி சாணக்யா. (சிறுகதைகளின் தொகுப்பு)
9. குறுக்குத் துறை ரகசியங்கள் – நெல்லைக் கண்ணன். (நெல்லைத் தமிழில் எள்ளல் கட்டுரைகள்)

********************************************************************

பிரம்மரம் என்ற மோகன்லாலின் திரைப்படத்தைப் பார்க்க வாய்க்கவில்லை நேற்றுவரை. நான் வழக்கமாக சிடி வாங்கும் கடையில் சொல்லி வைத்து ஒரிஜினல் VCD வாங்கிப் பார்த்தேன். என்ன ஒரு நடிப்பு மோகன் லாலிடமிருந்து!

செய்யாத குற்றத்திற்காக சிறைசெல்லும் லால் திரும்ப வந்து வேறு பெயரில் வாழ்கிறார். குடும்பம் குழந்தை என அமைதியானவாழ்க்கை. ஒரு திருமண நிக்ழவொன்றில் சந்திக்கும நபர் அவரது பழைய வாழ்க்கையின் அடையாளங்களைத் தெரிந்தவர். வெளிச்சத்துக்கு வருகிறது. அவரது குழந்தையே அவரைக் கொலைகாரன் என்கிறது. தான் கொலைகாரன் அல்ல என்பதை நிரூபிக்க தன் வகுப்புத் தோழர்களைத் தேடிச் செல்கிறார்.

அவர்களிடம் தன் தரப்பைச் சொல்லி உதவி கேட்கிறார். மறுப்பவரைக் கிட்டத் தட்ட கடத்தி வருகிறார். அவர் குழந்தைக்கு உண்மை தெரிந்ததா? அதன் பின் அவரது வாழ்க்கை செல்லும் திசை என்ன என்பதே மீதக் கதை.

இவ்வளவு அடர்த்தியான ஒரு கதையை எடுத்துக் கொண்டு நேர்த்தியாகப் படைத்திருக்கிறார். பிளஸ்ஸி. இவரது மற்ற படங்களும் நல்ல படங்களே; கருத்த பக்‌ஷிகள், தன்மத்ரா, கல்கத்தா ந்யூஸ்.

நல்ல திரைப்படம் பார்த்த நிறைவு.

********************************************************************

இந்த முறை மதனின் கவிதை ஒன்று

பொய்க்கால் கவிதை

#fullpost{display:inline;}

சற்று வலுவாகத் தட்டினால்
உடைந்துவிடும்படி சொல்லிவிட்ட
ஒரு பொய்யை
ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
இறுதியில் கவிதைக்குள்
இட்டு வைத்தேன்.
பின்னந்தக்
கவிதையை ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
கிடைக்காமல்,
இறுதியில்
நான் பொய்யே சொல்லவில்லையே
என்று கவிதையிடம்
சொல்லிவிட்டேன்.

கவிதையைத் திரும்பத் திரும்பப் படித்தால் வேறு வேறு படிமானங்கள் கிடைக்கின்றன, வீட்டில், அலுவலகத்தில், வெளியிடத்தில் என.

********************************************************************

இந்த வார மொக்கை.

தமிழ் வெளிநாட்டில்தான் வாழ்கிறது – ஆர் எம் வீரப்பன்

அப்புறம் எதுக்கு செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்துறாங்க?

********************************************************************
.

காற்றிலிருந்து நீளும் கைகள்

.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்தப் புத்தாண்டு துவக்கத்தை கண்ட்ரி கிளப்பில் கொண்டாடுவதென்று முடிவு செய்தோம். ஸ்பான்சர் நமது எதிர்காலப் பிரதமர் சஞ்செய்.

7.30 மனிக்கு கோவையில் இருக்க வேண்டும் என்ப் படித்து படித்து சொல்லியும் பரிசல் 7.30க்குத்தான் திருப்பூரிலிருந்து கிளம்பினார். 9.00 மணிக்கு அவரும் வெயிலானும் கோவை வந்து சேர நானும் செல்வாவும் சஞ்செய் மற்றும் ராமைப் பிக்கப் செய்து கொண்டு இன்னொரு காரில் கிளம்பினோம்.

அகோரப் பசி என அனைவரும் அரற்றவே, ஆச்சியப்பரில் தஞ்சம் புகுந்தோம். நன்றாக உண்டபின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். கிட்டத்தட்ட பாலக்காடே வந்துவிடுமோ என்ற அச்சத்தில், ”சஞ்செய் உனக்கு வழி தெரியுமா?” என்றேன்.

“போங்க அண்ணாச்சி நானே ஒருதடவைதான் வந்திருக்கேன் அதுவும் பகலில், இப்படி நடுராத்திரியில் கூட்டி வந்தால் யாருக்குத் தெரியும் ?” என்றான். நல்ல வேளையாக கூட இருந்த செல்வேந்திரன் தயவால் இடத்தை அடைந்தோம்.


உஷா ஊதுப் கூட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இரவு 11.30 மனிக்கும் அவரது உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது. “And then sing with me at the banks of the Cauvery” என்று 70 களில் பாடிய அதே குரலை இன்னும் தக்க வைத்திருக்கிறார். மட்டுமல்லாது கூட்டத்தை மயக்கும் வித்தையில் கை தேர்ந்தவர்.

சரியாக 12.00 மணிக்கு எல்லோரையும் வாழ்த்திப் பாடி விட்டு மேலும் இரண்டு பாடல்களைப் பாடினார்; சமீபத்தில் வெளியான படத்திலிருந்து. கூட்டம் கொத்துக் கொத்தாகக் கலைய ஆரம்பித்தது. என்ன பாட்டு என்பது உங்களுக்கே இன்னேரம் தெரிந்திருக்கும்.

நாங்களும் கூட்டம் ஓரளவுக்குக் குறைந்த பின் இடத்தைக் காலி செய்தோம். காரருகே வந்து பார்த்தால் பின் சக்கரத்தில் காற்று இல்லை. ஜாக்கி போட்டு சக்கரத்தைக் கழட்டிவிட்டு ஸ்டெப்னி சக்கரத்தை எடுத்துப் பார்த்தால் அதிலும் காற்றில்லை. என்ன செய்ய என்று புரியாமல் தவித்தோம்.

பரிசல், “ஸ்டெப்னி இருக்காப்பா” என்றால்

”இருக்குண்ணா, ஆனா திருப்பூர்ல ” என்று கடித்தான். உமா நோட் திஸ் பாயின்ட். பரிசல் காரிலிரிந்த ஸ்டெப்னியை எடுத்து மாட்ட முயற்சிக்கையில் இரண்டும் வேறு வேறு அமைப்பில் இருந்தது.

என்ன செய்வதென்ற யோசனையில் இருக்கும்போது ராம் சொன்னது, “ ஏங்க இன்னொரு ஆல்ட்டோ இருக்கான்னு பாக்கலாம்” எல்லாக் கார்களும் கிளம்பிச் சென்றுவிட்ட நிலையில் வாய்ப்புக் குறைவென்றாலும் முயன்று பார்க்கலாம் என நானும் செல்வேந்திரனும் சென்று ஒரு ஆல்ட்டோவைக் கண்டுபிடித்து விட்டோம். கார் உரிமையாளரிடம் பேசியதில் ஆரம்பத்தில் அவர்கள் தயங்கினாலும் எங்கள் நிலையறிந்து உதவினார். அவருடைய சக்கரத்தை மாட்டியபின் எங்களுடனே பஞ்சர் போடும் கடை வரை (மெயின் ரோட்டிலிருந்து உள்ளே 5 கி மீ யும், மெயின் ரோட்டில் கிட்டத்தட்ட 7 கி மி ) பொறுமையாக வந்து இருந்து அவர்களது சக்கரத்தைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றனர்.

சிக்கலான தருணங்களில் எதிர்பாராஇடங்களிலிருந்து கிடைக்கும் இது போன்ற உதவிகள் வாழ்க்கை மீதான நம்பிக்கையையும் பிடிப்பையும் அதிகப்படுத்துகின்றன.

கதிரின் ஒரு பயணமும், பெரிய பாடமும் பதிவைப் படித்துவிட்டு அவருடன் சாட் செய்யும்போது நான் சொன்ன வரி இங்கே பொருத்தமாக இருக்கும்.

காற்றில் கைவீசித் துழாவும்போது சட்டெனப் பற்றியிழுக்கும் கைகள் கடவுளின் கைகள்.

.