Month: September 2009

கதம்பம் – 24-09-09

அக்பர் அரசவையில் ஒரு நாள் விவாதமொன்று எழுந்தது; பூமியின் மையப் புள்ளி எதுவென. எவருக்கும் தெரியவில்லை, பீர்பாலும் அரசவையில் இல்லை அச்சமயம். பிறரெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர், பீர்பால் வசமாக மாட்டப் போகும் வினா இதுவென.

சற்றுத் தாமதமாக சபைக்கு வந்த பீர்பால் உள்ளே நுழைகையிலேயே கண்டுகொண்டார் ஏதோவொன்று தன்னை நோக்கி எய்யப்படுமென. கேள்வியும் அவரை நோக்கி வீசப்பட, சட்டென வெளியேறினார். விடை தெரியாமல் வெளியேறினார் என அனைவரும் ஆர்ப்பரித்திருக்க, மீண்டும் உள்ளே வந்தவர் வெளியே அழைத்தார் அரசரை.

தரையில் தான் ஆணியறைந்த ஒரு இடத்தைக் காட்டி, “ இதுதான் பூமியின் மையப்புள்ளி ” என்றார் அரசரிடம். திகைத்த அரசர் “எப்படி?” என வினவ.

“இல்லையென மற்றவர்களை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார்.

இதைப் போலத்தான் இருக்கிறது, ஒரு திரைப்படத்தை ஆளாளுக்கு அலசிப் பிழிந்து காயப் போட்டிருப்பது. இதுதான் மையப்புள்ளி என அவரவருக்கு விருப்பமான இடத்தில் ஆணி அறைந்து கொண்டிருக்கிறார்கள். தமிழன் மலையாளி என்ற புது கோணத்தை யாரும் சிந்திக்கவில்லை என அறச்சீற்றம் கொண்டிருக்கிறார் ஆசிப்.

மொத்தத்தில் உ போ ஒருவன் சீரியஸ் படமாக இருக்குமென நினைத்தால் நல்ல காமெடிப் படமாக ஆகிவிட்டது.

***********************************************************************************

அழகிய பெரியவனின் நெரிக்கட்டு சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. நல்ல மொழி நடையுடன் மூன்றாவது வரியில் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார். கடலூர் பகுதிகளில் கண்மணி குணசேகரன், தங்கர் பச்சான் (குடி முந்திரி- படித்திருக்கிறீர்களா?) இருவரையும்தான் இதுவரை படித்திருக்கிறேன். அழகிய பெரியவன் எழுத்து என்னை ஈர்த்து விட்டது.

தான் காதலிக்கும் பெண்ணின் தாயார் கரகம் ஆடுபவள் என்பதால் கரகாட்டத்தைத் தவிர்க்கும் முகமாக வெளியூர் சென்றுவிடும் கதை நாயகன், திரு விழா முடிந்திருக்குமெனத் திரும்பி வர, அப்பொழுது ஏற்படும் களேபரத்தில் ரசாபாசமாகி விடுகிறது. மிச்சத்தை நீங்களே படியுங்கள் நல்ல வாசிப்பனுபவம்.

முன்பே வேறு சமயம் தலைப்புக் கதையான நெரிக்கட்டை வாசித்திருக்கிறேன். எனினும் மொத்தமாக வாசிக்கையில் எழுத்தாளரின் ஆளுமை வெளிப்படுகிற்து. யுனைட்டட் ரைட்டர்ஸ் வெளியீடான இச்சிறுகதைத் தொகுப்பின் விலை 50 ரூபாய் மட்டுமே.

**************************************************************************************

விகடனில் வந்த அந்நியன் கவிதைக்கு அழைத்துப் பாராட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி. அதைவிட மோசமான அனுபவம் சமீபத்தில். எனது பக்கத்து வீட்டை வாங்கியவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். வாங்கி மாதக்கணக்காக ஆகியும் கிரகப் பிரவேசம் நடத்தப்படாமலே இருந்தது. ஒரு நாள் இரவு 11.00 மணிக்கு பேச்சுச் சத்தம் கேட்கவே வெளியே சென்று பார்த்தால் வீட்டின் உரிமையாளரும் இன்னும் இருவருமிருந்தனர்.

”காலையில் கிரகப் பிரவேசம் செய்கிறோம்” என்றார்.

“பால், தண்ணி எது வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றேன்.

“இல்லை சார் எவ்வரிதிங் இஸ் கம்ப்லீட்லி அர்ரேன்ஜ்டு” என்றார்.

காலை 6 மணிக்குப் பார்த்தால் யாரையும் காணோம். 4 மணிக்கே பூஜை செய்து விட்டு 6:30 இண்டெர் சிட்டியைப் பிடித்துச் சென்னை சென்றுவிட்டார்களாம்.

அடப் பாவிகளா வீடு கிரகப் பிரவேசம் என்பது நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் சேர்ந்திருந்து மகிழ வேண்டிய ஒரு விசேசமல்லவா? அவர்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் வேண்டாமா?

**************************************************************************************

காமிக்ஸ் பிரியர்களால் இரும்புக்கை மாயாவியையும், சி ஐ டி லாரஸையும் ஜானி நீரோவையும் மறக்க முடியாது. அ கொ தீ க பற்றி உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? (கா கா தே கா இன்னும் இருக்கிறாதா மிஸ்டர் குமாரி ஆனந்தன்?)

காமிக்ஸ் பிரியர்களுக்கான வலைத்தளம் இதோ.

**************************************************************************************

நேசமித்ரனின் கவிதை ஒன்று இம்முறை.

வார்த்தைகளை வசக்கிப் போட்டுக் கவிதை நெய்து கொண்டிருக்கும் காலத்தில் வார்த்தைகள் தானக வந்து விழுந்தாற்போல நேர்த்தியா இருக்கிறது.

பிறை மீதேறி
உன் பெயர் சொல்லி தீக்குளிப்பேன் என்றவன்
நுரைக்க நுரைக்க கழிவறையில் ஆணுறை கழற்றிய போதே
மாற்றி விட்டான் அலைபேசி எண்ணை…
வருத்தம் எதுவும் இல்லை
உவந்து கொடுத்தேன்
தேவையாய் இருந்தது எனக்கும்
ஆனால் முத்தத்தை எச்சிலாக்கிய நொடி
விடைபெறுகையில் வேசி மகன்
வேறு பெயர் சொல்லி விளித்ததே...!

நேசமித்ரன்

இளைய தளபதியை வாழ்த்துவோம்

வலையுலக இளைய தளபதி கார்க்கிக்கு இன்று பிறந்த நாள்.

வில்லு எடுத்து குருவி சுடும் வேட்டைக்காரன்
வசீகரா சொல்லுக்குச் சொந்தக்காரன்
ஹைதையில் இருக்கும் அழகிய தமிழ் மகன்
காதலுக்கு மரியாதை தருபவன்

வணங்க வயதில்லை வாழ்த்துகிறேன்.

உங்களைப் போல் ஒருவன் அல்லது உங்களில் ஒருவன்

ர்விங் வாலஸ் எழுதிய செகண்ட் லேடி புத்தகத்தை வாசித்திருப்பீர்கள். அதில் அமெரிக்கப் பிரசிடெண்டின் மனைவியைக் கடத்தி வைத்துக் கொண்டு அவருக்குப் பதிலாக வேறொரு பெண்ணை அவரது இடத்தில் அனுப்பி விடுவார்கள். ஆள்மாறாட்டம் ஏற்படுத்தும் சம்பவங்கள் சுவையான நாவலாக விரியும்.

ஒரு நாட்டின் பிரசிடெண்டைக் கதாபாத்திரமாக வைத்தெல்லாம் நாவல் எழுதுகிறார்களே அதே போல தமிழில் சாத்தியமா என்று வியந்திருக்கிறேன். சுஜாதா சில முயற்சிகள் செய்தார் எனினும் அதை பூடகமாகவே செய்ய வேண்டிய நிர்பந்தமிருந்தது அவருக்கு.

முதல்வனில், முதலமைச்சர் திருக்குறள் சொல்லும் தமிழறிஞராக வந்தது சர்ச்சையைக் கிளப்பியது ஞாபகமிருக்கக்கூடும். அதன் காரணமாகவே ரஜனி அப்படத்தைத் தவிர்த்தார் எனவொரு பேச்சும் உண்டு.

உன்னைப் போல் ஒருவனில் நடித்திருக்கும்(!?) முதலமைச்சர் குரல் நல்ல முயற்சி. அந்த வசனங்களும் கத்தி மேல் நடப்பது போலத்தான். குறிப்பாக , “ இது நமது தேர்தல் வெற்றியைப் பாதிக்காதே ?” எனக் கேட்கும்போது உண்மைக்கு வெகு அருகில் எழுதப் பட்ட வசனம் இதுவாகத்தான் இருக்கக்கூடும். அக்குரலில் வெளிப்பட்ட வசனங்கள் யாவும், சம்பவம் உண்மையாக நடந்திருந்தால் இம்மி பிசகாமல் இப்படித்தான் இருந்திருக்கும் என்பது போல இருந்தது.


திரைப்படத்தைத் திரைப் படமாகப் பார்க்காமல் ஏதோ சமுதாய விரோதச் செயல் செய்து விட்டது போல வந்த விமர்சனங்கள் ஒட்ட மறுக்கின்றன. இப்படம் தீவிர வாதத்தைப் போதிக்கிறது பார்த்தவன் தீவிரவாதியாகிவிடும் அபாயம் இருக்கிறதென்றெல்லாம் கூக்க்குரல். எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள் ”எதால சிரிக்கதுன்னு யோசிக்கிறேன்” என்று. தமிழ்ப் படத்தின் வில்லன் இறுதியில் சாகிறான் அல்லது குறந்தபட்சம் நல்லவனாக மாறுகிறான். அதன்படி தமிழகமே நல்லவர்களின் கூடாரமாக இருந்திருக்க வேண்டுமல்லவா?

இன்னொரு வியாதி படைப்பை விமர்சிக்காமல் படைப்பாளியை விமர்சிப்பது. கமல் எப்படி நல்ல படம் எடுக்க முடியும்? அவர்தான் அவாளாயிற்றே? ரக விமர்சனங்களை எழுதியவர்கள் மன நோய்க்கு ஆட்பட்டவர்களேயன்றி வேறெப்படி இருக்க முடியும்?

அடுத்த முறை கமல் படம் எடுக்குமுன் இந்த அய்யாசாமிகளிடம் அக்மார்க் முத்திரை பெற முயற்சிப்பது நல்லது. ஏனெனில் படத்துக்குச் சென்ஸார் சர்டிஃபிகேட் கிடைக்கிறதோ இல்லையோ இந்த அறிவு(இல்லாத) ஜீவிகளின் முத்திரை முக்கியம்.

இந்த இடம் எனக்குப் பிடிக்கவில்லை, இந்த இடம் லாஜிக் உதைக்கிறது என உருப்படியாக எழுதுங்கள். அதை விட்டு விட்டு கமல் ”மூலம்” வந்தவ்ர் போல நடக்கிறார் என எழுதுவது முறையா? இந்தளவுக்கு வேறெந்தச் சமுதாயமும் கலைஞன் மீதான தனிமனித வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதில்லை.

தான் பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் வலியையும் வேதனைகளையும் உள்வாங்கி, அதை உரமாக்கிக் கொண்டு அடுத்த படைப்பைத் தரும் கலைஞனுக்குக் குறைந்த பட்ச மரியாதை செய்யாவிட்டால்கூடப் பரவாயில்லை; தயவு செய்து அவமரியாதை செய்யாதீர்கள். இதை எல்லாக் கலைஞனுக்கும் பொதுவாகத்தான் சொல்கிறேன்.

உங்களுக்குப் பிடிக்கவில்லையா பிடிக்கவில்லை என எழுதுங்கள். எப்படி இப்படியெல்லாம் எடுக்கலாம் எனக் கேள்வி கேட்கும் அதிகாரம் யார் வழங்கியது? ஒரு பைசாகூடச் செலவு செய்யாமல் கூகிள் வழங்கும் இலவச தளத்தில் இருந்து கொண்டு கூப்பாடு போடுபவர்கள் கோடிகளில் செலவு செய்து எடுக்கப் பட்ட படத்தை குப்பை எனச் சொல்வதில் இருக்கும் நகைமுரண் அயற்சியை ஏற்படுத்துகிறது.

கேபிள் சங்கர் போன்ற துறைசார்ந்தவர்கள் எழுதும் விமர்சனத்திற்கும் பிறர் எழுதிய விமர்சனத்திற்கும் உள்ள வித்தியாசங்களைப் பாருங்கள். எதை வேண்டுமானாலும் என் தளத்தில் எழுதுவேன் என்பது உங்கள் உரிமையானாலும் அடுத்தவனைப் பற்றிய அவதூறு எழுதுமுன் ஒரு நொடியாவது யோசியுங்கள். ஏனெனில் அக்கலைஞனும் உங்களைப் போல் ஒருவன் அல்லது உங்களில் ஒருவன்.

ற்றபடி, படம் இஸ்லாமியச் சகோதரர்களை வன்முறையாளர்கள் எனச் சித்தரிக்கிறது என்பது சொத்தை வாதம். ஏனெனில் படத்தயாரிப்பில் இஸ்லாமியச் சகோதரர்களும் பங்களித்திருக்கின்றனர். அதைவிட முக்கியம் ஹிந்தியில் கமல் வேடத்தைச் செய்திருந்தவர் நஸ்ருதீன் ஷா. இந்தச் சுட்டியில் முக்கிய பங்களிப்பைச் செய்தவர்களின் பெயர்கள் இருக்கிறது.

வடவள்ளி காளிதாஸ் திரையரங்கில்தான் இப்படத்தைப் பார்த்தேன். குத்துப் பாட்டும், கேலிக்கூத்தான காமெடிகளும், பறந்து பறந்து தாக்கும் (பூமியின் ஆகர்ஷண சக்தியைப் பரிகசிக்கும்) சண்டைகளுமற்ற ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி அரங்கை விட்டு வெளியே வருபவர்கள் பேசுவதிலிருந்த பொதுவான கருத்து.

”I’ve failed over and over and over again in my life and that is why I succeed” Michael Jordan. மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் கமலுக்கு என் வணக்கங்கள்.

இவ்விரண்டு விமர்சனங்களும் என்னைக் கவர்ந்தவை. படத்தைப் பாராட்டியதற்காக அல்ல. நல்ல நடைக்காகவும், நேர்மையாகத் திரைப் படத்தை அலசியிருப்பதற்காகவும்.

பரிசல் காரன்

ஆதிமூலகிருஷ்ணன்

டிஸ்கி : தமிழகத்தில் பிறக்காமல் போயிருந்தால் மேற்கு வங்கத்தில் பிறக்கத்தான் ஆசைப் பட்டிருப்பேன் என்பார் என் தந்தை. ஏனெனில் இவ்விரண்டு மாநிலங்கள்தான் கலைஞர்களைக் கொண்டாடியவை என்பதவரது அபிப்ராயம். நல்ல வேளை அவர் இன்று இல்லை.

.

நெருநல் உளனாகி


தாயமோ, ஓரெண்டோ,
சோநாலோ, ஓராறோ
அல்லது ஈராறோ
எது விழுமென
எவருக்கும் தெரியாது

ஏற்றம் தரவென
ஏணிகள் காத்திருப்பது போலவே
படங்கொண்டாடும் பாம்புகளும்
காத்திருக்கின்றன
விடங்கொண்ட பற்கள் நீட்டி

நெருநல் உளனாகி
இன்றவனை இல்லாதோனாக்கும்
எழுதிமேற்செல்லும்
விதியின் கைகளாடும் விளையாட்டிது

உருள்வது பகடையெனினும்
உருட்டப்படுவது வாழ்க்கை

படம் உதவி : சுப்பையா சார்வாள்.

.

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

அன்றாடம் நம் கண்முன் காணும் சிலரைச் சில நாட்களாகக் (ஆண்டுகளாக?) காண்பதில்லை என்பது நமது புத்திக்கு உரைப்பதே இல்லை என்பதான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வாறான ஒரு தேடலில் ஞாபகங்களின் உள்ளடுக்குகளிருந்து கிளர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலர்.

1. ஆப்பக்கார ஆச்சி.

ஆச்சி என்றாலே செட்டி நாட்டு ஆச்சி ஞாபகம் வந்தாலும் ஆச்சி என்பது தென் மாவட்டங்களில் பாட்டியைக் குறிக்கும். ஆப்பக்கார ஆச்சி வித்தியாசமான ஒரு நபர். குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவராகவோ அல்லது மருமகள் கொடுமைக்கு ஆட்பட்டவராகவோ இருப்பார். அவர் குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தவியலாத பாசத்தையும் நேசத்தையும் தான் ஆப்பம் விற்கும் இடங்களில் இருக்கும் சிறு குழந்தைகளிடம் கசியவிடுவார். இடுங்கிய கண்களினூடான வசீகரச் சிரிப்பு கொள்ளை கொள்வதாக இருக்கும்.

சில சமயம் சம்சாரி வீடுகளில்(வயல் வேலை செய்பவர்கள்) உள்ள குழந்தைகளுக்கு பசி அதிகமிருக்கும் ஆனால் வசதி இருக்காது. ஒன்று அல்லது இரண்டு ஆப்பங்களை சாப்பிட்டுவிட்டு மேலும் ஆப்பத்துக்கு ஏங்கும் கண்களைக் கண்டுவிடும் ஆச்சி, இலவசமாகவே மேலும் இரண்டை வழங்கிச் செல்வார். அதே ஆச்சி மச்சு வீட்டு ஆட்களிடம் பைசா சுத்தமாகக் கறந்து விடுவார்.

இப்பொழுது எங்கேனும் இந்த ஆச்சிகளைப் பார்க்க முடிகிறதா?

2. சேமியாப் பாயாசம் விற்பவர்.

செங்கோட்டை, தென்காசி குற்றாலம் சுற்றுப்புறங்களில் மிகவும் பிரபலமானது இந்த சேமியாப் பாயாசம். பொதுவாக கிராமங்களில் அரிசிப் பாயாசம் அல்லது பருப்புப் பாயாசம்தான் வைப்பர். சேமியாப் பாயாசம் என்பது எட்டாக்கணி. திருவிழா நாட்கள் மற்றும் கடைசி வெள்ளிகளில் சில வீடுகளில் சாத்தியப்படுவது.

எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் ஒரு திரி ஸ்டவ் அல்லது கனன்று கொண்டிருக்கும் கரி அடுப்பு, அதன்மேல் வைத்த அலுமினியப் பாத்திரம். இவ்விரண்டையும் ஒன்றாகக் கட்டி வைத்திருப்பார். அலுமினியப் பாத்திரத்தின் மீதிருக்கும் தட்டு உள்ளிருக்கும் அகப்பையின் காம்பு வெளியே நீட்டிக் கொண்டிருக்க வசதியாக. இன்னொரு கையில் நான்கைந்து கண்ணாடி டம்ளர்கள் வைத்திருப்பார்.

கேட்டவுடன் ஒரு அகப்பையில் கோதி கண்ணாடி கிளாசில் தருவார். நான் சொல்லும் பகுதிகள் ஆரியங்காவுக் கணவாய்க் காற்றும் சிலுசிலுவென குளிரும் அடிக்கும் பகுதி எனவே அவர் தரும் பாயாசம் சுடச்சுட அமுதம் போல இருக்கும்.

”ச்சேமியாப் பாயாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ” என உச்ச குரலில் ஒலித்த இந்தக் குரலைத் தற்போது கேட்டவருண்டோ?

3. எண்ணைக்காரச் செட்டி(யார்?).

ஜாதியை இழிவாகக் குறிப்பிடுதல்ல நோக்கம். அவரது பெயர் பெரும்பாலும் ஏதோ ஒரு பெருமாளாகத்தான் இருக்கும்( ஐய்யம் பெருமாள், சக்திப் பெருமாள், கண்வதிப் பெருமாள்). தலையில் மும்பைவாலாக்கள் வைத்திருப்பதுபோல் ஒரு பெரிய பெட்டி. உள்ளே எண்ணெய்ப் பாத்திரங்கள் இருக்கும். அளந்து ஊத்த உழக்கும், துடைக்க ஒரு துணியும் வைத்திருப்பார்.

ஒரு ஊருக்குள் யாரார் வீட்டில் எத்தனை நபர்கள் யார் வீட்டில் அதிகம் செலவாகும் யார் வீட்டுக்கு வாராவாரம் செல்ல வேண்டும் யார் வீட்டுக்கு மாதம் ஒருமுறை செல்லவேண்டும் என எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பார். என்னதான் கறாராக வியாபாரம் பார்த்தாலும் மதிய உணவு யாராவது ஒரு வாடிக்கையாளர் வீட்டில்தான் இருக்கும். அதற்கு ஒரு ஆழாக்கு எண்ணெய் கூடுதலாகக் கொடுப்பர். ஒரு வகைப் பண்டமாற்றுப் போல. G for H லும், இதயத்திலும் மறைந்து போன இவர்களை எங்கேனும் பார்த்ததுண்டா?

4. உப்புக்காரத் தாத்தா.

ஒற்றைமாட்டு வண்டியில் வரும் இரட்டைநாடி ஆசாமி. இரண்டு மூட்டைகள் உப்பு வைத்திருப்பார். உப்ப்ப்ப்பேஏஏஏஏஎய்ய்ய்ய் என்ற சத்தம் கேட்டதும் அடுத்த வீதியில் இருப்பவர்கூட கிடாப் பெட்டியை தயார் செய்து வைத்திருப்பார்கள். சுப்பையா என்ற பெயர் கிராமங்களில் அதிகம். உப்பு என்றால் கணவரைக் குறிக்குமென வேறு பெயர்களில் உப்பை அழைக்கும் பெண்களிடம் வேண்டுமென்றே வழக்கடிப்பார்.

நாள் முழுவதும் சுற்றி விற்றது போக மீதமுள்ள அரை அல்லது கால் மூட்டையை யாராவது ஒருவர் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு கிளம்பிவிடுவார். மீண்டும் அடுத்த மாதம்தான் வருவார்.

உப்பிட்ட இந்த நல்லவரைக் கூட மறந்துவிட்டோம்.

மேலும் சிலரை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

.

நூற்றி ஆறு புள்ளி நாலு


சிடியில் பாட்டுக் கேட்பதை விட எஃப் எம்மில் கேட்க எனக்குப் பிடிக்கும். சிடியில் கேட்கும்போது அடுத்து என்ன பாட்டு என்பது தெரிந்து விடுகிறது. என்னதான் ரேண்டம் ஆப்சன் வைத்திருந்தாலும் எஃப் எம்தான் பெஸ்ட். எஃப் எம்மில் எதிர்பார்க்காத பாட்டு வந்து விழும்போது அதையொட்டிய ஞாபகங்களைத் தட்டி எழுப்பும். சமீபத்தில் கேட்ட “ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது “ என்ற பாட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன வர்த்தக சேவையை ஞாபகப்படுத்தியது.

ஒரு கட்டத்தில் தொ கா வின் ஆதிக்கமும் கேசட்/சிடி ப்ளேயர்கள் ஆதிக்கம் ரேடியோவின் புகழை மங்கச் செய்தாலும் அதற்கான வசீகரம் குறையவில்லை. ரேடியோவின் மறு அவதாரமாக பண்பலை வந்திருக்கிறது.

மார்ச் மாதம் 2002 ல்தான் பண்பலை வானொலி கோவைக்கு வந்தது. முதலில் சூரியன் எஃப் எம் தான். அதன் பிறகு ஒவ்வொன்றாக. சூரியன் லான்ச்சுக்கு செய்திருந்த விளம்பரம் நன்றாக இருந்தது; ஆவலைத் தூண்டும் விதமாக இருந்தது. கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க என்ற வாசகம் மட்டும் பின் புலத்தில் கல்லுரி மாணவி, குடும்பத்தலைவி, இளைஞர், வியாபாரி என யாராவது ஒருவர் படம் இருக்கும். என்ன விளம்பரம் எதைப் பற்றி என்ற ஆவலை எல்லோரிடமும் விதைத்தது.

சூரியன் எஃப் எம் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. நிகழ்ச்சிகளில் வித்தியாசமும் இருந்தது. கிட்டு மாமா- சூசி மாமி, ப்ளேடு நம்பர் ஒன், சின்னத் தம்பி பெரிய தம்பி சில குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நிகழ்ச்சிகள். இரவின் மடியில் என்ற ஆர் ஜி லக்ஷ்மி நாராயணன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியும் நன்றாகத்தான் இருந்தது. நாளாக நாளாக ஒரே பார்மேட்டில் வருவதால் போரடித்து விட்டது. இடையில் வேறு சில எஃப் எம்களும் வந்து விட்டதால் நல்ல ஆர் ஜேக்களும் வெளியேறி விட்டனர்.

புதிதாக வந்த எஃப் எம்களில் ஹலோ எஃப் எம் நன்றாகச் செய்கிறார்கள். வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் இளவயது ஆர் ஜேக்கள் என களை கட்டுகிறது.

சி ஐ டி செங்கல் என ஒரு நிகழ்ச்சி. தமிழ் பாட்டு ஒன்றை பாடச் செய்து அது எந்தப் பாட்டிலிருந்து காப்பி செய்யப் பட்டது என மூலப் பாட்டையும் போட்டு இசையமைப்பாளர்கள் மானத்தை வாங்குகிறார்கள்.

வேஸ்ட் விளம்பரம், கவிஞர் கஸ்மால், கப்சா டெலி நெட்நொர்க், அஞ்சலி அப்பர்ட்மெண்ட் (மேனேஜர் மாதவன்), கூர்க்கா குருசிங் என வித்தியாசமான நிகழ்ச்சிகளுடன் அவர்கள்தான் இப்பொழுது முன்னிலை.

சமையல் சகீலா என்றொரு நிகழ்ச்சி. சமையல் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பது.

“மேடம் வறுத்த மீன் எப்படி செய்யுறது?”

“கடையில மீன் ஃப்ரை வாங்குங்க. உங்க வாழ்க்கையில நடந்த வருத்தமான சம்பவத்தை நினைச்சுக்குங்க. இப்ப சாப்பிடுங்க. அதுதான் வருத்த மீன்.”

ஆர்ஜேக்களின் மொழியும் அவர்கள் பொது அறிவும் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை மாலை நேர நிகழ்ச்சி ஒன்றில் ஒரு டன் என்றால் 100 கிலோ எனச் சொன்னார். உடனே நான் அழைத்து ஒரு டன் என்றால் ஆயிரம் கிலோ என விளக்கமளித்ததும், ஒலிபரப்பிக் கொண்டிருந்த பாடல் முடிந்தவுடன் மன்னிப்பும் கேட்டு திருத்தமும் சொன்னார்.

அதே போல போலிஸ் கமிஷனருக்கும், கலெக்டருக்கும் இன்னும் சில உயர் அதிகாரிகளுக்கும் அவர்கள் அட்வைஸ் செய்வது காமெடியாக இருக்கும். இன்னும் கலைஞருக்கு மட்டும்தான் சொல்லவில்லை; ஸ்டாலினுக்கு துணை முதல்வரானதுக்கு வாழ்த்துச் சொல்லி எப்படி நாட்டை நிர்வாகிக்க வேண்டுமென சில அறிவுரைகளையும் சொன்னார்கள். இது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் அளிப்பார்கள்.

அவரகள் வாங்கும் சம்பளம் மிகக் குறைவே. சமீபத்தில் ஒரு ஆர்ஜே நமது செல்வேந்திரனை அணுகி ஏதும் வேலை கிடைக்குமா எனக் கேட்டிருக்கிறார். ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு கிடைக்கும் எனக் கேட்ட செல்வேந்திரனுக்குக் கிடைத்த பதிலால் இன்னும் புலம்பிக் கொண்டிருக்கிறார்; அவ்வளவு குறைவு.

மாரியம்மன் கோவில் திருவிழா மேடையில் திடீரென ஏற்றப் பட்டவர் எப்படிப் பேசுவாரோ அதே போலப் பேசவும் செய்கின்றனர் சிலர். வந்து என்ற வார்த்தை அவர்கள் வாயில் அடிக்கடி வந்து மாட்டிக் கொள்கிறது.

”வெளிநாட்டுல இருக்க நம்ம ஆளுங்கல்லாம் வந்து அவங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் வந்து பணம் அனுப்புவாங்க. அதுக்கு வந்து நம்ம அஞ்சல் துறை வந்து ஈசியா ஒரு வழி வந்து பண்ணியிருக்காங்க.”

இதுக்கு அவர் வெளிநாட்டில் இருந்து நேரடியாகவே வந்து கொடுத்துவிட்டு ப் போய் விடலாம்.

படம் உதவி : http://www.gjmedia.co.uk.

.

கதம்பம் – 09-09-09 09:09

சென்ற வார வெள்ளிக் கிழமை கமலும் காதலும் நிகழ்ச்சிக்கு விவிஐபி பாஸில் அழைத்துச் சென்றார் செல்வேந்திரன். எஸ் பி பி, சித்ரா போன்ற சீனியர்களுடன் ஹரிச்சரன், கார்த்திக், மதுமதி, ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி போன்றோரும் வந்திருந்தனர். நிகழ்ச்சி சிறப்பாகவே நடந்ததெனினும் திருஷ்டிப் பரிகாரமாக அமைந்தது அர்ச்சனாவின் தொகுத்து வழங்கலும் ஸ்ரீராம் பார்த்தசாரதி கொலை செய்த ஜேசுதாஸின் அண்ணாவின் நல்ல பாடல்களும்.

தான் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலேயே பேசிக்(பினாத்திக்? ) கொண்டிருந்தார் அர்ச்சனா. அர்ச்சனா டவுன் டவுன் என்ற பேரோசை அவர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

கண்ணே கலைமானே போன்ற நல்ல பாடலையெல்லாம் தேவையில்லாத சங்கதிகளைப் போட்டு கடித்துத் துப்பினார் ஸ்ரீராம். ஒரே ஆறுதல் ஹரிச்சரனும், கார்த்திக்கும். இருவரும் எஸ்பிபியுடன் இணைந்து பாடினார்கள். நிறைவாகவே செய்தனர் இருவரும். அதிலும் இளமை இதோ இதோ பாடலை ஹை பிட்ச்சிலும் நன்றாகப் பாடினார் ஹரிச்சரன். சொர்க்கம் மதுவிலே பாடலை கார்த்திக் அபாரமாகப் பாடினார். அவரது உடல் மொழி – வீட்டுக்கு அடங்காத பிள்ளை என்ற தோற்றத்தைத் தந்தாலும் எஸ் பி பியிடம் அவர் காட்டிய மரியாதை மெச்சத்தகுந்தது.

ஒரு பாட்டுக்கு சைந்தவி மேடைக்கு வர அவரிடம் எஸ் பி பி , “ இந்தப் பாடலை நான் பாடிய போது நீ பிறந்திருக்கக்கூட மாட்டே. ஆனாலும் உன்னை மாதிரி இளைய பாடகருடன் பாட சந்தர்ப்பம் கிடைத்தது நான் செய்த பாக்கியம் ”என்றார். அநியாயத்துக்கு மாடஸ்டா இருக்கார். அதனால்தான் இத்தனை இளைஞர்கள் பாட வந்தாலும் அவர் கொடி பறக்குது போல.

************************************************************************************

வந்தணா என்ற பெண் பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். பரிட்சையில் காப்பி அடித்து மாட்டிக் கொண்டார். பெற்றோரை அழைத்து வரச் சொன்னதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாராம். எல்லோரும் பள்ளியில் கொடுமை செய்கிறார்கள் எனப் பேசிக் கொண்டிருக்க என் மனைவியின் தரப்பு (ஆசிரியை) வேறு விதமாக இருக்கிறது.

இதெல்லாம் மாணவரை ஆசிரியர் அடிக்கக் கூடாது என்ற சட்டத்தால் வந்ததுதான். முன்பெல்லாம் ஆசிரியர் மாணவரை அடிப்பதும் திட்டுவதும் சகஜமாக இருந்தது. நாலு பேருக்கு முன்னால் திட்டினாரே எனப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இப்பொழுதெல்லாம் ஆசிரியர்கள் திட்டவே பயப் படுகின்றனர். எனவே கொஞ்சம் சத்தமாகப் பேசினாலும் திட்டுவதாக நினைத்துக் கொண்டு அதி தீவிர முடிவுக்கு ஆளாகின்றனர்.

அது சரி காப்பி அடித்தது சரியா?

************************************************************************************

மதிலுகள் என்ற அடூர் கோபால கிருஷ்ணன் திரைப் படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கக் கூடும். அது பற்றிய புத்தகம் ஒன்றை வாசிக்கக் கிடைத்தது. காலச்சுவடு வெளியீடு.

வைக்கம் முகமது பஷீர் எழுதிய மதிலுகள் நாவலை விட, நாவல் எந்தச் சூழ்நிலையில் எழுதப் பட்டது என்ற ராஜவிள ரமேசனின் கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கிறது.

அந்நாவல் திரைப்படமாக்கப் பட்ட விதம் பற்றிய அடூரின் கட்டுரையும் முகியமான ஒன்று. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருப்பவர் கவிஞர் சுகுமாரன். அவரை 13ஆம் தேதி நடக்கவிருக்கும் சிறுகதைப் பட்டறையில் சந்திக்கலாம்.

மீண்டும் அப்படத்தைப் பார்க்கும் ஆவல் எழுகிறது.

*************************************************************************************

இசை என சிற்றிதழ் பரப்பில் அறியப்படும் சத்திய மூர்த்தி கோவைக்காரர். பார்ப்பது மருந்தாளுநர் உத்தியோகம் என்றாலும் கொள்ளை கொள்வது கவி மனங்களை. பழகுவதற்கு இனிய இவரை சமீபத்தில் வ உ சி பூங்காவில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தது ஒரு இனிய அனுபவம். உறுமீன்களற்ற நதி என்ற கவிதைத் தொகுதி காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியாகி இருக்கிறது.

கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது

கர்த்தர் வருகிறார்
அவர் நமக்காய் கொண்டு வரும்
புளித்த அப்பங்கள்
ரொம்பவே புளித்து விட்டன
ஆனால், கர்த்தர் வருகிறார்

உங்கள் அன்பில்
நண்பர்களுக்கு சலிப்பேறி விடலாம்
உங்கள் காதலியை
புத்திசாலிகள் களவாடிக் கொள்ளலாம்
கர்த்தர் வருகிறார்

பாதி வழியில் அவர் வாகனம்
பழுதாகி நின்று விட,
அவர் நடந்து வருகிறார்
ஆனாலும் கர்த்தர் வருகிறார்

இன்னுமொரு தேர்தல் முடியட்டும்
இன்னொரு மக்களாட்சி மலரட்டும்
கர்த்தர் வருகிறார்

எப்போதும் மிரட்டிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் மிரட்டட்டும்
எப்போதும் இறைஞ்சிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் இறைஞ்சட்டும்
இரட்சிப்பின் நாயகர் வருகிறார்

கர்த்தர் ஒருவரே
அவருக்கு உதவியாளர்கள் யாருமில்லை
அவரே எல்லா இடங்களுக்கும்
வர வேண்டி இருக்கிறது
ஆனாலும் அவர் வருகிறார்

நீதியின் மீது பசிதாகமுடையோருக்கு
இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும்
வெகு காலம் பற்கடிப்பில் உள்ளோர்
இன்னும் கொஞ்சம் கடிக்கட்டும்
கர்த்தாதி கர்த்தர் வருகிறார்
இன்னும் கொஞ்சம் எரிகணைகள் வீழட்டும்
இன்னும் கொஞ்சம் ஓலங்கள் கூடட்டும்
கர்த்தர் வருகிறார்

பயப்படாதே சிறு மந்தையே!
கர்த்தர் on the way.

இசை (சத்ய மூர்த்தி)

************************************************************************************

புதுசா எழுத வந்தவர்களில் என்னைக் கவர்ந்தவர் ரமேஷ் விஜய். தமிழ் நகைச்சுவை என்ற இவரது வலைத்தளத்தை நீங்களும் பாருங்களேன். நல்ல நகைச்சுவைக்கு உத்திரவாதம்; யோசிக்கவும் வைக்கிறார் சில பதிவுகளில்.

************************************************************************************

பிறந்தாளுக்கு வாழ்த்துச் சொன்னதும், ”அண்ணாச்சி நெஞ்சத் தொடுறா மாதிரி எதாவது சொல்லுங்க”ன்னார் சஞ்சய்.

“பனியன்” அப்படின்னேன் நான். அதுக்கப்புறம் லைன்ல வரவேயில்லை.

.

இரு துருவங்கள்


சிதம்பரம் ஆசிரியர் போன் செய்திருந்தார். “தம்பி என் மருமகனை உங்களிடம் அனுப்புகிறேன் ஏதோ ஒரு வேலை வாங்கிக் கொடுங்கள்” என்றார்.

மறுக்க முடியாது. ஒரு காலத்தில் அவர் வீட்டில்தான் குடியிருந்தோம் மேலும் எனக்கும் சில விஷயங்கள சமயத்தில் உதவியிருக்கிறார். “சரி வரச்சொல்லுங்க சார்” என்றேன்.

மருமகன் இளைஞர் என நினைக்காதீர்கள். அவருக்கும் ஆச்சு வயசு 35. இரு குழந்தைகள் பெரியவள் 2 ஆம் வகுப்பு, சின்னவள் யு கே ஜி. மனைவி அரசு பள்ளி ஆசிரியை.

அடுத்த நாள் வந்திருந்தார். “மாமா நீங்க வேலை வாங்கித் தருவீங்கன்னு சொன்னாரு” என்றபடியேதான் பேச்சை ஆரம்பித்தார். நான் அவர் நலம், அவர் மனைவி குழந்தைகள் நலம் முதலியவற்றை விசாரித்தறிந்தபின், “சரி பயோ டேட்டா கொடுங்கள்”என்றேன்.

”எடுத்து வரவில்லை” என்றார்.

“சரி இந்தப் பேப்பரில் எழுதிக் கொடுங்கள்” என்றேன்.

கடவுளே இது போல ஒரு பயோ டேட்டாவுக்கு எவனுமே வேலை கொடுக்க மாட்டான். பி காம் படித்திருக்கிறார் என்பதைக்கூட எழுத மறந்து விட்டார்.

”சரி என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீங்க” என்றதற்கு, “ எதுவாக இருந்தாலும் சரி”

“இல்லைங்க அடிப்படையா இவ்வளவு தேவைன்னு இருக்குமே?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அதான் அவ சம்பாதிக்கிறாளே அப்புறமென்ன? இப்பக்கூட எங்க மாமனாருக்காகத்தான் வேலைக்கு போறேன்” என்று மேலும் அதிர்ச்சியூட்டினார்.

“சரி உங்க பயோடேட்டாவை மெயில் அனுப்புங்கள்” எனச்சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

விரக்தியுற்று அமர்ந்திருக்கையில், “சார்” அழைத்தது விக்னேஷ்

“சொல்லு விக்கி”

“இந்த வாரம் எவ்வளவு பேப்பர் சார்?”

“20000 ஏம்பா?”

“இல்ல சார் இந்த வாரம் காபிஸ் அதிகம் வரும்னு சொன்னீங்களே அதுதன் இன்னும் ரெண்டு பசங்க ஏற்பாடு செய்து கொள்ளலாமான்னுதான் கேட்டேன்”

“போதும் போன தடவை வந்த மாதிரி 10 பேர் வந்தாப் போதும்.”

“சரி சார்” என்று கட் செய்தான்.

விக்கினேஷ் கல்லூரி மாணவன். விடுமுறை நாட்களில் சின்னச் சின்ன வேலைகள் செய்து தனக்கான கல்விச் செலவை தானே பார்த்துக் கொள்வான். என் அச்சகத்தில் அச்சடிக்கப்படும் வார இதழ் ஒன்றை மடித்துத் தரும் வேலை, ஒவ்வொரு சனிக்கிழமை 10 பேரை அழைத்து வருவான், ஒரு பத்திரிக்கைக்கு இவ்வளவு எனப் பேசி வாங்கிக் கொள்வான். அவர்களுக்கான கூலி போக அவனுக்கும் ஓரளவுக்கு கையில் நிற்கும். சில சமயங்களில் இரவு வேலை இருந்தாலும் செய்வான்.

ஆசிரியரின் மருமகன் போன்றோர் அவநம்பிக்கையை வழியெங்கும் விதைத்துச் சென்றாலும், விக்கி போன்ற இளைஞர்கள்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

.

பயோடேட்டா – சஞ்சய் காந்தி

பெயர் : சஞ்சு மாப்பி

உண்மைப் பெயர் : சஞ்சய் காந்தி

வயது : சைட் அடிக்கும் வயதல்ல

தொழில் : என்னேரமும் ஆன்லைனில் இருப்பது

உப தொழில் : வீட்டு உபயோகப் பொருட்கள் டிஸ்ட்ரிப்யூட்டர்

பிடித்தது : சொந்தமாகச் சமைக்க

பிடிக்காதது : அதைச் சாப்பிட

நண்பர்கள் : கோஷ்டி கானம் பாடுபவர்கள்

எதிரிகள் : கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிறது; ஜின்னாவால்.

சமீபத்திய ஆசை : லோக்கல் கவுன்சிலர் ஆக

நெடுநாள் ஆசை : பிரதம மந்திரி ஆக

சமீபத்திய சாதனை : மாணிக் தாகூர் வெற்றி பெறப் பாடுபட்டது

நீண்ட கால சாதனை : காங்கிரஸ் நல்ல கட்சி என சாதிப்பது

சமீபத்திய ஏமற்றம் : இளம்பெண்கள் அங்கிள் என அழைக்க ஆரம்பித்திருப்பது

நீண்டகால ஏமாற்றம் : கனவில் வரும் பெண்களுக்கு உடனே திருமணம் ஆகிவிடுவது

சமீபத்திய சந்தோஷம் : பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி வருவது

நீண்டகால சந்தோஷம் : ராஜிவ் காந்திக்கே அண்ணனாக இருப்பது