சிறுகதைகள்

வெளிவாங்கும் காலம்.

 

கொங்கு வட்டார வழக்கில் எழுதுவதில் பெருமாள் முருகன், மணல்வீடு ஹரிகிருஷ்ணன் வரிசையில் வைத்துப் பாராட்டத் தக்கவர் என்.ஸ்ரீராம்.

கொங்கு வட்டார வழக்கு என்றாலும் கோவைப் பகுதியில் பேசுவதும், ஈரோட்டுப் பக்கம் பேசுவதும் சற்று வித்தியாசமாக இருக்கும். இவர் தாராபுரத்துக்காரர் என்பதால், அந்தப் பகுதி கொங்கு வட்டார வழக்கு இவரது கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

14 கதைகள் கொண்ட இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தும் கணையாழி, தீராநதி, படித்துறை போன்ற சிற்றிழிதழ்களில் ஏற்கனவே வெளியானவை. அதில் சில பரிசு பெற்ற கதைகள்.

தலைப்புக் கதையான வெளிவாங்கும் கதை, தன் அப்பாவிற்கெதிராக மகன் எடுக்கவிழையும் ஆயுதம் பற்றியது. நம் எல்லோருக்குள்ளும் அத்தகைய வெறுப்பு அப்பா மீதிருந்ததும் பின்பு அது நீர்த்துப் போனதையும் வெளிக்காட்டும் கதை.

என்றாலும் எனக்குப் பிடித்த கதை நெட்டுக்கட்டு வீடுதான். வேலைக்காரர்களிடம் நாம் வரம்பற்று, நம்மை மீறிப் பேசிவிடுவதும் அதன் பின்விளைவும். செல்லியக் கவுண்டர்களையும், ராமையாக் கம்மாளனையும் நம் தினவாழ்வில் எதிர்கொள்கிறோம், வேறுவேறு விதங்களில்.

கோழி திருடுபவன் பற்றிய “ஆதாயவாதிகள்” சிறுகதை என் பால்யவயதில் நான் பார்த்துப் பிரமித்த பண்டாரப் பெரியப்பாவை ஞாபகமூட்டியது. தலையாரி வேலை பார்த்தவர். என்றாலும், கோழி திருடுவது அவரது பிறவிக் குணம். ஈரச்சாக்கைப் போட்டுத் தொழுவத்தில் இருக்கும் கோழியைச் சத்தமில்லாமல் லவட்டுவதில் சூரர்.

கவுண்டர்களுக்கும் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும் இடையே காலகாலமாக ஓடிக் கொண்டிருக்கும் பகை, சிறுகதைகளின் அடிநாதமாக வெளிப்படுகிறது. ”என்னைக்கும் எரும மேல ஏறினா சவாரி, எஜமாங்க மேல ஏறின ஒப்பாரி, இனிமேலவது புரிஞ்சு நடந்துங்கடா” என்ற வரிகளில் தெறிக்கும் வன்மமும் குரோதமும் விவரிக்க இயலாதது. உன்மையில், இந்த ஏற்றத் தாழ்வுகளில் இருந்து அவர்களை விடுவிக்காதவரை சமஉரிம, சமூகநீதி  என்பதெல்லாம் வெறுமனே பெயரளவில்தான்.

நகரவாழ்வின் தினசரி நெருக்கடிகளிலிருந்து, ஓய்வெட்டுத்து ஆசுவாசப்படுத்த சொந்த ஊருக்குப் போவது போன்ற அனுபவத்தைத் தருகிறது இக்கதைகள். அந்த மண்ணும் மக்களும் அச்சு அசலாய் நம் கண்முன்னே. தாமரை நாச்சி, சிவபாலக் கவுண்டர், தரகுக்காரன், முனி போன்றவர்களையும் தாராபுரம் மண்ணையும் தரிசித்து வரலாம்.

பாஸ்கர் சக்தியின் முயல் தோப்பு

தினவாழ்வில் நாம் எதிர்கொள்ள நேரிடும் சாதரண மனிதர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டவைதான் பாஸ்கர் சக்தியின் புனைவுகள். ”முயல் தோப்பு” அச்சட்டத்தில் வெகுவாகப் பொருந்துகிறது.

இரட்டையர் என அறியப்பட்ட க.சீ.சிவக்குமாரும் இவரும் சமகாலத்தில் எழுத வந்தவர்கள். பொருள்தேடும் சூட்சுமம் க.சீ.சிக்கு பிடிபடாமல் போனது. குறைந்தபட்ச சமரசம் என்ற சூத்திரத்தைக் கைக்கொண்டு பாஸ்கர் சக்தி, தன்னைத் தக்க வைத்துக் கொண்டார். எழுத்தாளன் சிலகாலமேனும் பொருளாதாரச் சிக்கலின்றி உயிர்வாழ்வது  எழுத்துக்கு நல்லது. மேலும் சில படைப்புகள் வரக்கூடும்.

தொகுப்பிலுள்ள கதைகள் பெரும்பாலும் தேனி சுற்று வட்டாரத்தை கதைக்களமாகக் கொண்டவை. மனிதர்களின் உறவுச்சிக்கல்கள், அதன் தாக்கமான விரிசல்கள், வன்மம், குரோதம் போன்றவை வெகு எளிதாக எந்தவித ஓங்காரமுமின்றி வெளிப்படுகின்றன.

தலைப்புக் கதையான முயல்தோப்பு, தானே உண்டாக்கிய தோப்பை தன் வம்சத்தினர் விற்றுக் காசாக்க முயல்வதை எதிர்ப்பதுதான். உண்டாக்குதல் என்பது வலி மிகுந்தது. தரிசாக, புதர்மண்டிக் கிடக்கும் காட்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சீராக்கி, விளையாக்கி, நீர் பாய்ச்சி நேராக்கி என அது ஒரு தவம். கர்ம யோகம். வெளியிலிருந்து பார்க்கும் நமக்குப் புரிவதில்லை, ஒரு இடத்தை விற்க ஏன் இத்தனை அழிச்சாட்டியம் என. ஆனல் அது அவர்கள் ஆன்மாவுடன் தொடர்பிலிருப்பதை நாம் ஒரு போதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.

என்றாலும் என்னளவில் “உடல் உறுப்புகள்” என்ற கதையே சிறந்தது எனச் சொல்வேன். எத்தகைய சிற்பமாக இருந்தாலும் அப்படியே நகலெடுத்ததுபோல் வார்ப்பில் வடித்துவிடும் கலைஞன், தினவாழ்வை எதிர்கொள்ள நேரிடும் சிக்கல்களச் சொல்கிறது. இறுதியில் அவரது திறமை பயன்படுத்தப்படுகிறது என்றாலும் அவருக்கு ஆதம திருப்தி கிட்டியிருக்குமா என்ற கேள்வியினை முன் வைத்து முடிகிறது கதை.

தேவையற்ற அலங்காரங்கள், வார்தைச் சிலம்பங்கள் ஏதுமற்ற எளிய கதைகள்.

வலவன் – டிரைவர் கதைகள்

ஒரு நல்ல புனைவு நம்மை உள்ளிழுத்துக் கொள்ள இரண்டு காரணங்களைச் சொல்வேன். ஒன்று கதை நிகழும் களம் நமக்குப் பரிச்சயமானதாக இருப்பது. இரண்டு, கதை மாந்த்தர்களைப் போன்றவர்களை நம் வாழ்வில் சந்தித்திருப்பது.
சுதாகர் கஸ்தூரியின் “வலவன்” சிறுகதைத் தொகுப்பில் எனக்கு இரண்டுமே வாய்க்கப் பெற்றது.

கதைக்களங்களான மும்பை, புனே, நாஷிக், வாபி, டாமன், சில்வாசா போன்ற இடங்களுக்குப் பணி நிமித்தமாகப் போயிருக்கிறேன். மட்டுமல்லாது, அனல் மின் நிலையங்கள், இரும்பு உருக்காலைகள் போன்றவைதான் வாடிக்கையாள நிறுவனங்கள். பெரும்பாலும் இவை ஊருக்கு வெளியே 30-40 கிமி தூரத்தில்தான் அமைந்திருக்கும். எனவே வாடகைக்காரை நாள் முழுவதும் பேசி ஏற்பாடு செய்துகொள்வேன். கதைகளில் வரும் ஓட்டுநர்களைப் போன்றவர்களைச் சந்தித்திருக்கிறேன்.

வெகு எளிய மொழ்யில் எந்தவிதப் பாசாங்கும் பூச்சுகளுமற்ற சிறுகதைகள். சுஜாதா சொல்வார் கதையில் உண்மை கொஞ்சம் கலந்து இருக்கும்போதுதான் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என. அதே போல இக்கதைகள் அனைத்தும் near truthல் எழுதப்பட்டவை. கதைகளின் சிறப்பே எந்தப் புள்ளியில் உணமையிலிருந்து புனைவாக மாறுகிறது என்பதை அறிய முடியாமல் நடக்கிற பாய்ச்சல்தான்.

மொத்தம் பத்து சிறுகதைகள் தொகுப்பில். அவற்றைத் தரவரிசைப் பட்டியல் இடுவது முறையற்றது. என்றாலும் என்னை அதிகம் ஈர்த்தைவை “தந்தையுமானவன்” மற்றும் “ஆதிமூலம்”.

முதல் கதையாக செண்பகாவின் அப்பாவை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். ஓட்டுநர்களுக்கும் நம்மைப் போலவே குடும்பம் இருக்கும், குழந்தைகள் இருப்பர், அவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் இருக்கும் என்பதை மறந்துவிட்டு நமது குடும்பம் நமது தேவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குகிறோம் என்பதை அற்புதமாகச் சொன்ன கதையது.

நான் பழகிய ஓட்டுநர்களுள் சர்தார்ஜிகள் முதலிடம் பெறுவர். அவர்களது அர்ப்பணிப்பும், ஏற்றுக் கொண்டதை, நம்மிடம் சொன்னபடி செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருப்பதை, குறிப்பாக நம் உடல்நலம் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பதை நேரில் அறிந்திருக்கிறேன். இதிலும் இரண்டு கதைகள் உண்டு “மஞ்சித் சிங்” மற்றும் “ஹரிசிங்”

லட்சுமண் கதை நிகழும் ஆதிகளமான புளியரைதான் அப்பாவின் சொந்த ஊர், அங்குதான் நான் 9ஆம் வகுப்புப் படித்தேன்.

நன்றி சுதாகர், பிரயாண நினைவுகளைக் கிளர்த்தியதற்கு.

வெள்ளெருக்கு – கண்மணி குணசேகரன்

விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துப் பனிமனைத் தொழிலாளியான கண்மணி குனசேகரன், 1993 லிருந்து எழுதி வருகிறார்.

தலைமுறைக் கோபம் – கவிதைத் தொகுப்பு
உயிர்த்தண்ணீர் – சிறுகதைகள்
அஞ்சலை – நாவல்
ஆதண்டார் கோயில் குதிரை – சிறுகதைகள்
காற்றின் பாடல் – கவிதைகள்
வெள்ளெருக்கு – சிறுகதைகள்
கோரை – நாவல்

இவற்றில் அஞ்சலை நாவலும், கோரை நாவலும் படித்திருக்கிறேன். தற்பொழுது வெள்ளெருக்கு படித்துக் கொண்டிருக்கிறேன்.

புதிய புத்தகங்கள் வாங்கினால் அதைப் பிரித்து முகர்ந்து பார்ப்பது ஒரு பழக்கம். அந்தத் தாளின் மணம் வீசுமே அதற்காகத்தான். ஆனால் குணசேகரனின் புத்தகங்களில் அவர் வசிக்கும் பகுதியில் நடமாடும் மனிதர்களின் வியர்வை வாடையும் அந்த மண்ணிலிருந்தெழும் கார நெடியும்தான் வீசுகிறது. இவ்வளவு இயல்பான எழுத்தில் மனிதர்களை நம்முன் உலவ விட முடியுமா என வியக்கவைக்குமெழுத்து அவருடையது.

காற்று கொஞ்சம் வேகமாக அடித்தது. ஊரில் அவனைப் பார்க்கிறேன், இவனைப் பார்க்கிறேன் என மார் தட்டிக் கொண்டவர்கள், வெட்டியவர்கள், குத்தியவர்கள், மண்ணைக் கவ்வியவர்கள், மண்ணை வாரி வீசியவர்கள், வேடப்பர் கோவிலில் சீட்டு எழுதிக் கட்டியவர்கள், அடுத்தவன் மனைவிக்கு ஆப்பு வைத்தவர்கள், கிண்டல் கீநூட்டு பேசியவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என ஓயாமல் ஓடித் திரிந்தவர்கள் எரிந்தும் புதைந்தும் எதுவுமற்றுப் போன இடம் இருட்டில் ஊமையாய்க் கிடந்தது.

என்ன ஒரு வீச்சு பாருங்கள். இவரது அஞ்சலை நாவலைப் படித்தவர்கள் சொல்லுங்கள் கருவாச்சி காவியத்திற்கு எந்த விதத்தில் குறைந்தது என்று. பிரபல வெளிச்சம் பாயத வெகு சில நல்ல எழுத்தாளர்களுள் இவருமொருவர்.

அய்யனாரின் விமர்சனம்
உமா கதிரின் விமர்சனம்
கண்மணி குனசேகரனுக்கு சுந்தர ராமசாமி விருது
கண்மணி குனசேகரன் கவிதைகள்

வெள்ளெருக்கு பற்றி சென்ஷி

மஹாராஜாவின் ரயில் வண்டி – அ முத்துலிங்கம்


புத்தகம் பற்றிய

பா ரா வின் விமர்சனம்
லேகாவின் (யாழிசை) விமர்சனம்
திண்ணையில் வந்த விமர்சனம்

இதைத்தவிர இப்புத்தகத்திற்கான வேறு நல்ல விமர்சனம் படித்திருந்தால் பின்ன்னூட்டத்தில் சொல்லவும்.

ஜெயமோகனின் நேர்காணல்

மஹாராஜாவின் ரயில் வண்டி – அ முத்துலிங்கம்


புத்தகம் பற்றிய

பா ரா வின் விமர்சனம்
லேகாவின் (யாழிசை) விமர்சனம்
திண்ணையில் வந்த விமர்சனம்

இதைத்தவிர இப்புத்தகத்திற்கான வேறு நல்ல விமர்சனம் படித்திருந்தால் பின்ன்னூட்டத்தில் சொல்லவும்.

ஜெயமோகனின் நேர்காணல்