சமூகம்

கவலைகளால் கரையும் காலம்

.

பத்தாண்டுக்கொருமுறை வரும் கணக்கெடுப்பு. முப்பதிற்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதில் வாங்க வேண்டுமென்பதால், இம்முறை மனைவியுடன் துணைக்குச் சென்றேன; விரைந்தவர் முடித்தல் வேண்டி. கேள்விகள் குடும்பத்தினரின் பொருளாதர நிலை குறித்தேவெனினும் அவர்களதை எதிர்கொண்டவிதம் வேடிக்கையாக இருந்தது.

வருமானவரித்துறைக்குத் தகவல் அனுப்புவீரோவெனவும் ஒரு கேள்வி. இன்னுமெதை இலவசமாகத் தர இந்தக் கணக்கெடுப்பெனக்கூட ஒரு வினவல்; வெளித்தொங்குமவர் நாக்கினை உள்ளிழுத்து.

அவ்வீட்டின் இல்லத்தலைவர் கல்லூரியொன்றின் துறைதலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். இரு மகன்கள். ஒருவர் கலிபோர்னியாவிலும் மற்றவர் இலண்டனிலும். மாதந்தோரும் வரும் பணம் பத்தாதோ என வியக்கும் வண்ணமிருந்ததவர் கேள்வி, “எங்களுக்கு இலவசத் தொலைக்காட்சி என்று கிட்டும்?”

இன்னொரு வீட்டில் இல்லமெங்கும் விதேசிப் பொருட்கள் சூழ சுதேசிகளாய் தலைவரும் இல்லக் கிழத்தியும். இம்மாதம் பார்சலில் வரும் பொருளை வீட்டில் வைக்க இடமேதுமில்லை. கேட்ட கேள்வியோ மூர்ச்சையாக்கியவொன்று, “உயிர் காக்க்கும் உயர் சிகிட்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டை என்று கிடைக்கும்?”

இதுகுறித்து நண்பரிடம் விசனப்பட்டபோது சொன்ன அவரது அனுபவம் இன்னும் வேதனையளிப்பதாக இருக்கிறது.

தமிழகத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமது. ஆண்டு விற்றுமுதல் (turn over) இரண்டாயிரம் கோடியைத் தாண்டும். எப்பொழுதும் தொழில்முனைவோரை பேட்டி எடுப்பதை விடுத்து அவர்தம் பெற்றோரை நேர்காணல் செய்தாலென்ன என்றொரு எண்னம் நண்பருக்கு. விரைகிறாவர் கிராமம்தேடி. காத்திருக்கிறார் சிறிது நேரம். காத்திருப்பில் நேரம் கரைய, ஊர் சுற்றிவரக் கிளம்புகிறார். காணவந்தவரைக் காண்கிறார் எதிரே, வெள்ளையும் சொள்ளையுமாக; ஓரடி பின்தொடரும் ஏவலாள் தலையில் அரசு வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. “கிடைக்கும்போது வாங்கிடணும் தம்பி” என்றொரு அறிவுரையுடன்.

இலவசங்களினால் கட்டமைக்கப்படும் இச்சமுதாயத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்ற கவலைகளால் கரைகிறது காலம்.

நமக்கு நாமே குத்து – எப்ப?

.

1) வழக்கமா சூப்பரா சமைக்கிறவங்க, நண்பனைக் கூட்டிட்டு வர்ரேன்னு 2 நாளைக்கு முன்னாடிச் சொன்னதுக்கபுறமும் சொதப்பலா சமைச்சு வைப்பாங்களே, அப்ப.

2) வாஸ்துபடி பீரோ கிழக்க பாக்க இருந்தாத்தாங்க நல்லதுன்னு ஒரு ஞாயித்துக்கிழமை லீவக்கூடஅனுபவிக்கவிடாம நம்ம உயிரை வாங்கிட்டு, வாஸ்து சரியில்லைன்னு ஒரு மாசத்துலயே வீட்டையே மறுபடி தலைகீழா மாத்த முயற்சிப்பாங்களே, அப்ப

3) ரெண்டே ரெண்டு லார்ஜுக்கு பெரிய அலைப்பற பன்ணுவாங்க ஆனா அவஙக அண்ணனோ மாமாவோ ஃபுல் மப்புல அலப்பற பண்ணுறப்ப கம்முன்னு இருப்பாங்களே, அப்ப

4 – அ) குழந்தைகளைக் கூட்டீட்டு எங்கயாவது போலாம்ன்னு ப்ளான் பண்ணுனா அம்மாவாசை, சஷ்டின்னு எதையாவது சொல்லுவாங்களே, அப்ப

4 -ஆ) டூர் முழுவதும் ஆகுற செல்வ அடுத்து 3 மாசத்துக்குச் சொல்லி சொல்லிக் காட்டிட்டே இருப்பாங்களே, அப்ப

5) பட்டுச்சேலை நல்லா இருக்கேன்னு ஒரு ஆளப்பாத்தா குத்தமாய்யா? அது மாதிரி ஒண்ணு வாங்கிக் கொடுக்கலாமேன்னு யோசிக்கிறப்ப, “என்ன ஜொள்ளு”ம்பாங்களே, அப்ப

6)அவங்க அம்மாவோ, அப்பாவோ வரும்போது இருக்கிற குஷி, நம்ம வீட்டு ஆளுக வரும்போது இல்லாட்டக் கூடப் பரவாயில்லைங்க, இந்த இடுப்பு வலியும் மத்த வலியும் அந்த சமயத்துல வந்து உக்காருமே, அப்ப்

7) பையனோ, பொண்ணோ ஆசையா வந்து நம்ம மேல விழுவாங்க அதுதான் நமக்கு ஆறுதலே, ஆனா அப்ப “ஏய் போய் ஹோம் வொர்க்க முடி. என்னவோ பெரிய அதிசய அப்பா”ம்பாங்களே, அப்ப

8) நல்லா அடிக்கிற கலர்ல மேட்சே இல்லாத டிசைனை எடுத்து வச்சுக்கிட்டு நம்மகிட்ட அபிப்ராயம் கேப்பாங்க. நல்லா இருக்குன்னாலும் பிரச்சினை, இல்லைன்னாலும் பிரச்சினை. அந்த மாதிரி சமயத்துல

9) எங்கயாவது ரொமாண்டிக்கான டூர் போயிருக்கப்ப, ஏங்க பால் பைய எடுத்திட்டிங்களா, பாத்ரூம் கதவச் சாத்தீட்டீங்களா? பேப்பர்காரங்கிட்டச் சொல்லீட்டிங்களான்னு நச்சரிப்பாங்க, அப்ப

10) ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து ஏதாவது நாலு வார்த்தை பேசி சிரிச்சு இருக்கலாம்னு பார்த்தா, எப்பப் பாத்தாலும் சீரியல் பாக்குறாங்களே, அப்ப

இதையும் ஒருக்காப் படிங்க

.

சீரல்ல அவர்கண் படின்

.

பொதுவெளியில் சாதியின் பயன் உறவுமுறைத் திருமணம் என்பதன் நீட்சியாகத் தொடர்கிறது என்பதைத் தவிர்த்து வேறெதுவும் இல்லாத சூழலில் சாதிய ஆதரவுக்குரல்கள் நசுக்கப்பட வேண்டும்.

இது கோவியாரின் பதிவில் உள்ள வரி. அப்படித்தான் நடக்கிறதா? சாதி முன்னெப்போதையும் விட வீறு கொண்டு இருக்கிறது. தன் மாயக்கரங்களை எங்கெங்கும் நீட்டி பரவுகிறது என்பது என் வாதம். சாதீய ஆதரவுக் குரல்களை எழுப்புவதும் நாம்தானே?

தென் தமிழகத்தின் ஆதிக்கச் சாதியினர், திருமணம் மற்றும் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் போஸ்டர்களிலும் தங்கள் பெயரைச் சாதியுடன் தான் எழுதுகிறார்கள். ஆனால் அவர்களே தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது அதன் உட்பிரிவில் எதைக் கொடுத்தால் மிகப் பிற்படுத்தப்பட்ட் அல்லது சீர் மரபினர் வகையில் ஆதாயங்களைப் பெறமுடியும் எனப் பார்த்துத்தான் சேர்க்கிறார்கள்.

ஒரு முறை திருநெல்வேலியில் விடுதி அறை கிடைக்காமல் திண்டாடினேன். சுரண்டையில் இருக்கும் என் மச்சினனை அழைத்துச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட விடுதிக்குச் சென்று அங்கிருந்து அழைக்கச் சொன்னார். அழைத்தால் அந்த விடுதியில் இருப்பவரிடம் என்ன பேசினாரோ தெரியாது உடனே, “ஏங்க நீங்க அவரோட அத்தான்னு சொல்றதில்லையா? என்னங்க இது”ன்னு சொல்லி உடனே அறை கொடுத்தார். “என்னடே சொன்னே?” என்று கேட்டால், “அது எதுக்கு உமக்கு” என்று மழுப்புகிறான். சாதியின் பெயரால் ஆதிக்கம் அந்த அளவுக்கு. ஆனால் பள்ளிச் சான்றிதழில் ”சீர் மரபினர்”

இன்னும் சிலர் வாழும் இடம் வேறிடமாக இருந்தாலுல் தங்கள் சொந்த ஊரில் சான்றிதழ் வாங்கினால் அதிக பலனிருக்கும் என்பதால் அங்கு சென்று ஆட்களைப் பிடித்து வாங்கி விடுகிறார்கள். சரி அப்படித்தான் மிகவும் சிரமப்பட்டவர்கள், அவர்கள் குழந்தைகள் இந்தப் பயனை அனுபவிக்கட்டும் என்றால் அதுவும் இல்லை; நல்ல வசதியுடன் வாழ்கிறவர்கள்.

இதே போலத்தான் கோவையில் இருக்கும் ஒரு சாதியினர். தங்கள் வீடுகளுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை நுழைய அனுமதிப்பதில்லை. ஆனால் சாதி வழங்கும் அனுகூலங்களை மட்டும் பெறுகிறார்கள்.

ஒரே சாதிக்கு இரண்டு பெயர்கள் ஒன்று உயர்வாகத் தங்களைப் பற்றிப் பெருமை பேச ம்ற்றொன்று அதன் உட்பிரிவு மூலம் பலன்களை அனுபவிக்க என்ற நடைமுறை களைந்தால் நலம்.

இரட்டைக் குவளை முறை இன்னமும் இருக்கிறது. கொங்கு மண்டலத்தில்தான் அது அதிகம். வறியவர்கள் வறியவர்களாகவும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

தறி முதலாளிகளில் சிலர் தன்னிடம் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் படிப்பதை விரும்புவதில்லை. இரண்டு காரணங்கள் – ஒன்று இயல்பாகவே அந்தக் குழந்தைகள் நன்றாகப் படிப்பதும் தன் குழந்தை தேறாதவனாக இருப்பதும் சங்கடத்தில் ஆழ்த்துகிற்து. இரண்டு அந்தக் குழந்தைகள் படித்து வேறு வேலைக்குச் சென்றுவிட்டால் இவர்களுக்கு வேலைக்காரர்கள் கிடைப்பதரிது.

ஒரு கிடாவெட்டில் கூட அனைவரும் சமமாக அமர்ந்து உணவு உண்ணமுடியாது. இவர்களுக்குத் தனிப்பந்திதான். பாலியல் கொடுமைகள் பற்றி இங்கு பொது வெளியில் எழுத முடியாது.

அதே போலத்தான் தலைவர்களைச் சாதிச் சங்கங்கள் கேவலப்படுத்துவதும். சொத்து சுகம் நாடார் / சொந்தந்தனை நாடார் / பொன்னென்றும் நாடார் / பொருள் நாடார் /தான்பிறந்த அன்னையையும் நாடார் /ஆசைதனை நாடார் /நாடொன்றே நாடித் – தன் /நலமொன்றும் நாடாத /நாடாரை நாடென்றார். கண்ணதாசன் இத்தனைமுறை நாடார் என்றதாலோ என்னவோ நாடார் சங்கப் போஸ்டர்களில், காலண்டர்களில் வலம் வருகிறார் பெருந்தலைவர் காமராசர். வ உ சியையும் விடவில்லை இவர்கள். நடிகர் கார்த்திக்கை வைத்துச் செய்த கோமாளித்தனம் இன்னும் பிரபலம்.

அரசியல் கட்சிகள் சாதிவாரியாக வேட்பாளர்களை நிறுத்துவதும் சாதிச்சங்கங்களை ஆதரிப்பதும் வேறென்ன?

உலக மக்களே ஒன்றுபடுங்கள் எனக்கூவும் தோழர்களும் தங்கள் குழந்தைதையைச் சேர்க்கும்போதும் இதே நெறிமுறையைக் கடைபிடிக்கிறார்கள்.

அந்த இந்த இசங்களை, ஈயங்களை, துவாக்களை ஒழிப்பதைவிட்டு முதலில் மாற்றங்களை நம்மிடமிருந்தே நாம் தொடங்கவேண்டும்.

சமீபத்தில் என்னுடைய பிரிண்டிங் மெஷினை விற்கும்போது புரோக்கர் சொன்னது, “சார் 50,000 ரூபாய் குறைச்சுன்னாலும் நம்ம ஆளுகளுக்குக் கொடுங்க சார்”.

அது சரி.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

கலைஞர் உரை:

சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.

.

வேட்ப மொழிவதாம் சொல்

”அப்பா”

“சொல்லுப்பா”

“பாலு அங்கிள் ரெம்பப் பெரியவராப்பா?”

“ஏன் கேக்குறே?”

“இல்ல போன வாரம் அவர் வீட்டுக்குப் போயிருந்தம்ல அப்ப பார்த்தேன் பெரிய பெரிய புத்தகங்கள் எல்லாம் வச்சிருந்தாரு. அதெல்லாம் அவரு படிப்பாராப்பா?”

“ஆமாச் செல்லம்”

“அவரு எழுத்தாளர்னு கேள்விப்பட்டேம்பா உண்மையா?”

“ஆமாப்பா புத்தகம் எல்லாம் எழுதி வெளியிட்டிருக்கார். பெரிய பெரிய எழுத்தாளர்களோட பழகுறவர் அவருப்பா”

“சரிப்பா,நீங்க ரெண்டு பேரும் ஆர்க்யூ பண்ணும்போது அவரு உங்களை நாயின்னாரே உங்களுக்குக் கோவம் வரலையா?”

“தம்பி, அவரும் நானும் ஒரு விஷயம் குறித்துப் பேசினோம், என் சைடுல ஸ்ட்ராங்கா நிறையப் பாயிண்ட்ஸ் இருந்துச்சு அவருகிட்ட இருந்த பாயிண்ட்டுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டேன். என்னை மடக்க வழி தெரியாமல் அவரு அப்படிச் சொல்லிட்டாரு. உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் நிதானமிழந்துட்டாரு”

“உங்களுக்குக் கோவம் வரலையா?”

“எதுக்குக் கோபப்டணும்? இப்ப உனக்குப் பிடிச்ச சாக்லேட் ஒரு கையிலயும் பிடிக்காத சாக்லேட் ஒரு கையிலேயும் வச்சா நீ எத எடுத்துக்குவே?”

“எனக்குப் பிடிச்ச சாக்லேட்ட”

“அதுமாதிரித்தான் நானும் அந்த அங்கிள்கிட்ட இருக்க நல்லத மட்டும் எடுத்துக்கிட்டு மிச்சத்த அந்த அங்கிள்கிட்டயே விட்டுட்டேன்”

”சரிப்பா, எப்படிப் பேசக்கூடாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்”

”எப்படிப் பேசணும்னும் தெரிஞ்சுக்கோ”

“எப்படிப்பா?”

”கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.”

“என்ன அர்த்தம்ப்பா?”

கலைஞர் தாத்தா சொல்றாரு, “ கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்”.

சாலமன் பாப்பையா சொல்றாரு, “ நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்)”

நன்றி : திருக்குறள்.காம்

.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தல்

பெங்களூர் ராமன், நண்பனின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் . தெருவில் இரண்டு பேர் சரமாரியாக மாறி மாறித் திட்டிக் கொண்டிருந்தனர். இவன் பாட்டுக்குச் சிவனே என்று போய்க் கொண்டிருந்தான்.

திடீரென இவன் பெயர் அடிபடுவதைக் கேட்ட்டான். சரி வேறு யாரோ ராமன் போலிருக்கிறது என்று சும்மா இருந்தான். ஆனால் திட்டியவன் ஊர் பெயர் உட்பட ”பெங்களூர் ராமன் அயோக்கியன் ” என மீண்டும் அழுத்தம் திருத்தமாககச் சொன்னான்.

ராமன் எட்டி அவன் சட்டையைப் பிடித்து கேட்டான், “எலேய் ஏண்டா அப்படிச் சொன்னே?”.

திட்டியவன் ஏதும் பதில் சொல்லவில்லை. அது கூடப் பரவாயில்லை, “சட்டை நல்லா இருக்கில்ல? லூயி பிலிப் , கசக்காதே “ என நக்கல் அடித்தான்.

பொறுமை இழந்த ராமன், “ நீ ஒரு அப்பனுக்குப் பிறந்தவனா இருந்தா, என்னை திட்டினதுக்குக் காரணம் சொல்லுடா” என்றான்.

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அய்யப்பன் வந்து, “ஏண்டா அவன் சட்டையைப் பிடிக்கிறே? ” என்று சத்தம் போட்டார்.

“என்ன நடந்ததுன்னு கேளுங்க சார்” என்றான் ராமன்.

“என்ன நடந்தாலும் பரவாயில்லை அவன் சட்டையைப் பிடித்தது தவறு ” என்றார் மீண்டும் அய்யப்பன்.

“நல்லா இருக்குய்யா உங்க ஞாயம் ” என்று நொந்து கொண்டே கிளம்பினான் ராமன்.

அய்யப்பன் அண்ணன் பையன் கேட்டான் , ”ஏஞ்சித்தப்பா, என்ன நடந்ததுன்னு கேக்காமச் சண்டைய விலக்கி விடுறீங்களே? எனக்கு இது சரியாப் படலையே?”

“அடப்போடா லூசு திட்டுனவன் நம்ம ஆளுடா அவனுக்குச் சப்போர்ட் பண்ணாம எவனோ ரோட்டுல போறவனுக்கா சப்போர்ட் பண்ண?” என்றார் அய்யப்பன்.

.