ஓலைப்பீப்பி -மலையாளத் திரைப்படம்

olappeeppi-movie-review

ஓற்றை வரியில் எழுதிவிடமுடிகிற கதைதான். சிறுவயதில் ஊரைவிட்டு ஓடிப் போகும் உன்னி 30 வருடம் கழித்து வருகிறான். ஒரு நல்ல திரைக்கதை “What if” என்றொரு கேள்வியை முன்வைத்து, அதன் விடையை விரிதெழுதுவதாக இருக்க வேண்டும். இருக்கிறது.

மகுடேஸ்வரனின் கவிதையொன்று இப்படி முடியும்,
வாழ்ந்து கெட்டவர்களின்
வீட்டுக் கொல்லைப் புறத்தில்
இன்றும்
கேட்டுக்கொண்டிருக்கிறது
பெண்களின் விசும்பல் ஒலி.

இதைத்தான் திரைக்கதையாக்கியிருக்கிறார் கிரிஷ் கைமல். செழித்தோங்கி வாழ்ந்த ஆறாம் தரவாட்டின், அதிகப்படியான நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்கிறது அரசு, ஜமீந்தாரி ஒழிப்புச் சட்டத்தின் மூலம். மிஞ்சுவதெல்லாம், ஒரு வீடும் அதைச்சுற்றியுள்ள சிறு நிலமும்.

முத்தஸ்ஸியின் மகன் கோவிந்தன் இருந்த சிறு நிலத்தையும் ராஜப்பனிடம் அடகு வைத்துப் பணம் பெற்று வெளியூர் சென்றிடுகிறான். மகளை ஒரு நம்பூதிரிக்குத் திருமணம் செய்து கொடுக்க, மனிதத்தன்மையே இல்லாத முசுடு நம்பூதிரி, தன் மகன் உன்னியை வெறுக்கிறார், ஜாதக பலன்களைக் காரணம் காட்டி. வேறு வழியில்லாமல், உன்னியை முத்தஸ்ஸியிடம் விட்டு உன்னியின் அம்மாவும் நம்பூதிரியுடன் வேறூருக்குச் செல்ல, 80 வயது முத்தஸ்ஸியும், 8 வயது உன்னி மேனோனும், பந்தலுக்குக் கொடி ஆதரவு என்றாற்போல.

உன்னி மேல் முத்தஸ்ஸிக்கு அளவுகடந்த பிரியம். அவனுக்குச் சமைத்துக் கொடுத்து, குளிக்கச் செல்லும்போது கூடவே சென்று, பள்ளியிலிருந்து வரத் தாமதமானல் வழி நோக்கி நின்று என்று எல்லா அசைவிலும் உன்னியே. “நீ மிடுக்கன், நான்னாயி வரு” என்று சொல்வதை இத்தனை வாஞ்சையுடன் சொல்ல முடியுமா என வியக்க வைக்கிறார் புனசேரி காஞ்சனா. 1970களில் முன்னணி நடிகையாக இருந்தவர், 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வந்திருக்கிறார்.

கூன் விழுந்த உடம்பு, தடி ஊன்றி நடை, கண்சுறுக்கிப் பார்த்தல், விரல்கள நெற்றியில் வைத்து தூரத்தில் வரும் நபரைக் கூர்ந்து நோக்குதல், கால் நீட்டி அமர்தல், பேரனைக் காணாது தவித்தல், தவங்கித் தவங்கி நடத்தல் என அருமையான பாத்திரவார்ப்பு, உன்னி குளத்தில் குளிக்கையில், பாட்டியை எண்ணச் சொல்லிவிட்டு நீருக்குள் முங்குகிறான், எண்ண ஆரம்பிக்கும்போது இருக்கும் பாவத்திற்கும், எண்ணிக்கை அதிகமாக அதிகமாக முகத்தில் கவிழும் பயமும், இறுதியில் “உன்னி, உன்னீ, உன்னீஈஈஈஈ” என அலறும்போதும் காட்டும் பாவமும், அந்தக் காட்சியை எடுத்த இயக்குனரையும், காஞ்சனாவையும் என்ன வார்த்தைச் சொல்லிப் பாராட்டினாலும் தகும்.

மனிதர்களை எடைபோடுவது, நாம் பார்க்கக் கிடைக்கிற நடவடிக்கைகளைக் கொண்டே அமைகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. என்னேரமும் குடி என இருக்கும் கேசவனை உன்னியின் தங்கை சகித்துக் கொள்வது, அவளை மீட்டெடுத்தவன் அவன் என்பதால்; அதை உன்னி அறிய நேரும்போது கேசவன் மீதிருக்கும் வெறுப்பு அன்பாக மாறுவதை அத்தனை இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

தங்கள் வீட்டில் கூலிக்காரனாக இருந்த ராஜப்பன், இன்று அரசியல் படிநிலைகளில் மேலேறி தங்கள் இடதையே வளைத்துக் கொள்வதும், அவனிடமே யாசகம் கேட்க வேண்டிய நிலையும், உன்னி பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற போட்டிகளில் முதலாவதாக வந்ததைக் கௌரவிக்க, தனிப்பட்ட சன்மானமாய் ராஜப்பன் வழங்கும் 21 ரூபாயைக் கொண்டு ரேசன் வாங்கும் நிலையும், எப்படியாயினும் உன்னியை நன்றாய்ப் படிக்க வைக்கும் முத்தஸ்ஸியின் தீர்மானமும் என நல்ல காட்சிப்படுத்துதல்கள்.

சற்று எளிதான வேடங்களிலேயே நடித்துவந்திருக்கும் பிஜு மேனனுக்கு (வளர்ந்த உன்னி) இது ஒரு நல்ல வாய்ப்பு, நியாயம் செய்திருக்கிறார். சின்ன வயது உன்னியாக நடித்திருக்கும் தேவப் ப்ரயகன், ஆச்சர்யமூட்டுகிறார். நடிப்பிற்கு வயதென்பதே கிடையாது என்பதை, காஞ்சனா, பிஜு, தேவப்ரயாகன் ஆகிய மூவர் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர். இது அவரது முதல் முயற்சி என்பதை நம்ப முடியவில்லை என்னால், இன்னும்.

ஒரு பத்திருபது நாட்கள் சொந்த ஊருக்குச் சென்று, நீங்கள் விளையாடிக் களித்த இடம், நண்பர்கள், உறவினர், அண்டை அயலார் என எல்லோரையும் சந்தித்து வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள், எனில் இது ஒரு விர்ச்சுவல் பயணம்.

ஓலைப்பீப்பி, ஓட்டாள், மன்றோ ஐலண்ட் என, வயதானவருக்கும் பேரனுக்கும் இடயேயான உறவுப் படமாகப் பிடிக்கிறது, சமீபமாக. எனக்கும் வயதாகிறதோ?

Leave a comment