Month: March 2010

மேலதிகத் தகவலுக்கு அழையுங்கள்

சென்ற வாரம் தலைச்சேரி வரைப் பயணம். மதியம் இரண்டு மணிக்குக் கிளம்பும் கண்ணனூர் பாஸஞ்சரில் சென்றேன். மதியம் இரண்டு மணிக்குக் கிளம்பிய வண்டி ஒரு கி மீ க்கு ஒரு முறை நின்று இரவு 9.30க்குத் தலைச்சேரி சென்று சேர்ந்தது.

ஜன்னோலர இருக்கையும் படிக்கச் சில புத்தகங்களும் இருந்ததால் பயணம் சுவராசியமாகவே இருந்தது. பயணத்தை மேலும் சந்தோஷமாக்கிய நிகழ்வொன்று.

மேலிருக்கைக்குச் செல்லும் பயணி தன் காலணியையும் உடன் எடுத்தார். என்னருகே அமர்ந்திருந்தவர் (வட நாட்டவர், நல்ல தமிழ் பேசினார்) “ வேண்டாங்க செருப்பக் கீழ போடுங்க. மேல கொண்டு போனா அதிலிருந்து மண்ணா உதிரும் எங்க தலை மேல” என்றார்.

பயணி அசரவில்லை, “ நான் அப்படித்தான் கொண்டு போவேன்” என்றார்.

வ.நாட்டவர், “சரி. கீழே விழுந்தால் நான் ஜன்னல் வழியே வெளியே எறிந்து விடுவேன்” என்று எச்சரித்தார்.

”மர்பி”யின் விதிப்படியே அந்தச் செருப்பும் மேலிருந்து கீழே விழுந்தது அதுவும் வடநாட்டவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் மீதே.

சொன்னபடியே சடாரெனெ கண் இமைக்கும் நேரத்தில் வெளியே எறிந்துவிட்டார் செருப்பை.

மேலிருந்து கீழே இறங்கியவர், “யார்ரா நீ உன் பேரென்ன பேரென்ன சொல்லு, சொல்லு” எனச் சலமபினார்.

வ. நா ஆசாமி, ”பேரு எதுக்கு?” என வினவினார்

செ.ஆசாமி,”அடுத்த ஸ்டேசன்ல ரயில்வே போலீசிடம் புகார் கொடுக்க” என்றார்.

வ்.நா ஆசாமி , “ பேர் மட்டும் போதுமா அட்ரஸும் வேணுமா? ” என மேலும் கீழும் அவரைப் பார்த்தார்.

“அட்ரசும் கொடு” என்றார் செ.ஆசாமி தெனாவெட்டாக.

ஒரு பேப்பரை எடுத்து சரசரவென எழுதினார் வ.நா. ஆசாமி.

Soni A Gandhi,
10 Jan Path House
Parliament House Road,
Naya Delhi – 100001
Mobile : 95949 39291

செ ஆசாமியும், “உனக்கு இருக்குடி அடுத்த ஸ்டேசனில் “ என்றவாரே அட்ரசை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டே மேலே போனார்; ஆனால் ஒன்றும் செய்யவில்லை. ஒரு வேளை வக்கீல் நோட்டீஸ் அனுப்புவாராக இருக்கும்.

முகவரி டுபாக்கூர் என்றாலும் இந்த மனிதர் ஏன் மொபைல் எண்ணைக் கொடுத்தார் என யோசித்தவாறே இருந்தேன்.

த்லைச்சேரியில் இறங்கி விடுதி அறையில் இருந்த டி வியை ஆன் செய்தேன் ஐ பி எல் பார்க்கலாம் என.

அபிசேக் ப்ச்சன் ஐடியா விளம்பரத்தில் தோன்றிச் சொன்னார், “ மேலதிக்கத் தகவலுக்கு அழையுங்கள் 95 94 93 92 91

Advertisements

அங்காடித் தெரு – விமர்சனங்கள்

சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு இந்தளவு நான் ஒன்றிப் பார்த்த திரைப்படம் வேறில்லை. – பா.ரா.

படம் பார்த்து திரும்பும் போது ஒரு நல்ல நாவலை படித்த திருப்தியுடன் திரும்ப முடிகின்றது. – பொன்.சுதா

எல்லாவற்றுக்கும் மேல் அஞ்சலியின் “outstanding perfomence ” – தண்டோரா மணி

வாழ்க்கையின் கன பரிமாணத்தில் சந்தோஷம், வலி, அன்பு, காதல், சகிப்புதன்மை, தியாகம், என்று அனைத்தையும் அதன் அழுத்தம் குறையாமல் யதார்த்தமாகவும் எளிமையாகவும் இதுவரை தொட்டு பார்த்திராத கதைகளத்தில் படைத்திருப்பது ஒரு அனுபவமாய் அமைந்த நல்ல திரைப்படம் – பட்டர்ப்ளை சூர்யா.

இது ரெங்கநாதன் தெருவின் கதை மட்டுமல்ல. இந்த தேசத்தின், இந்த காலத்தின் கதை. நகரங்களின் அதிகாலைகள் எல்லாம் இலட்சக்கணக்கில் இப்படியான இளைஞர்களை விழுங்கியபடியே விடிகின்றன. சூரியன் உதிப்பதையும், மறைவதையும் அவர்கள் ஒருநாளும் பார்த்திட முடியாமல் சபிக்கப்பட்டுப் போகிறார்கள். உண்ணவும், உடுக்கவும், உறையவும் முடிகிற அவர்களுக்கு, மூச்சுவிட முடியாத வாழ்விடங்களே கிட்டுகின்றன. ஈவு இரக்கமற்ற முறையில் காயப்படுத்தப்படுவதற்கும் அவர்கள் பழகிப் போகிறார்கள். எதிர்காலம் எப்போதும் அவர்களுக்கு அருகில் இல்லை. இவை எல்லாவற்றையும் ‘அங்காடித் தெரு’ சொல்கிறது – மாதவராஜ்.

உலக சினிமாக்களை பார்க்கும்போது ஏன் இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழில் வருவது கிடையாது என்று மாய்ந்து போவதை நிவர்த்தி செய்து இருக்கும் வசந்தபாலனை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும்.
என் வாழ்வில் நான் பார்த்த மிகச் சிறந்த பத்து தமிழ்ப் படங்களின் வரிசையில் கண்டிப்பாக அங்காடித் தெருவும் இருக்கும் – கார்த்திகைப் பாண்டியன்.

இயக்குனர் வசந்த பாலனை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படம் முழுக்க, முழுக்க இயக்குனரின் படம். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்பு தெரிகிறது. இப்படம் அவருக்கு ம்ட்டுமல்ல, அவரின் தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள் கூட பெருமை கொடுக்கும் படம். – கேபிள் சங்கர்.

மூணு மணிநேரம் ரெங்கநாதன் தெருவில் இருந்தது போல் இருந்தது – ஜெட்லி, சங்கர். சித்து

ஒரு சாமானியனின் விமர்சனப் பார்வை

அங்காடி தெரு அற்புதமான படம். இதுபோல ஒரு படம் வந்து எத்தனை நாள் ஆகிறது. வழக்கமாக படங்களை பேசிப்பேசி உண்டுபண்ணி எடுப்பார்கள் போல. கதை எந்தூரிலே நடக்குறது என்று கேட்கலாம். இந்தக்கதை இதோ இங்கேயே நடக்குறது முடிந்தால் போய் பாருய்யா என்று சொல்லுவது மாதிரி இருக்கிறது படம்.

நான் ஒரு விளம்பர எழுத்தாளன். போர்டு எழுதுகிறேன். நான் ஏழு வருசம் இந்த கடை அருகே உள்ள இன்னொரு கடையிலே வேலை பார்த்தேன். இதே மாதிரி கடைதான். நான் அறிந்து அனுபவிச்ச வாழ்க்கை இந்தப்படத்திலே இருக்குறது. நான் படத்தை பார்த்து நேற்று ராத்திரி முழுக்க நினைத்து நினைத்து அழுதுகொண்டே இருந்தேன். இன்னும் நிறைய தடவை இந்த சினிமாவை பார்ப்பேன்.

இன்றைக்கு பிரவுசிங்குக்கு வந்தபோது நிறைய பேரிடம் பேசினேன். பார்த்தவர்கள் ஒன்று ரெண்டு பேர்தான். அதிலே கொஞ்சம் படித்த்து பெரிய நிலையில் இருக்கிறவர்கள் சிலர் சேச்சே இதெல்லாம் ஓவர் என்று சொன்னார்கள். கொஞ்சம் ஜாஸ்தியாக சொல்லிவிட்டார் என்று சொன்னார்கள்.ஆனால் ரொம்ப கம்மியாகச் சொல்லியிருக்கிறார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ரொம்ப அடக்கி வாசித்தது மாதிரி இருக்குறது.

இந்தமாதிரி கடைகளிலே வேலை பார்க்க போகிறபோது சர்ட்டிபிகெட் ஒரிஜினல் கேட்பார்கள். அதை அவர்கள் வங்கி வைத்துக்கொள்ளுவார்கள் கடையிலே துணி விக்க போவதற்கு எதுக்கு ஒரிஜினல் சர்ட்டிபிகெட் என்று யாருமே கேட்க மாட்டார்கள். அந்த சர்டிபிகெட்டை திரும்ப வாங்கவே முடியாது. அதனாலே வேலையை விட்டு விலக முடியாது. மேலே படிக்க முடியாது. படத்திலே இதைக் காட்டியிருக்கலாம். நான் எம் எல் ஏ சொல்லித்தான் வாங்கினேன்.

அதேமாதிரி பெண்கள் மேலே கை வைப்பது ரொம்ப அதிகம். எல்லாருமே கை வைப்பார்கள். நீங்கள் காட்டிய இந்த கடையிலேயே ஒரு வயசான அண்ணாச்சி உண்டு. கருங்காலி மாதிரி. மூக்குப்பொடி போடுவார். அவர் காலையிலே வந்ததுமே மீட்டர்கம்பால் பையன்களை சும்மாவே அடிப்பார். பெண்களை பப்ளிக்காகவே பிடிப்பார். இந்த படத்திலே ஹீரோயினை கற்பாக காட்டுவதற்காக கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கிறார்கள்.

அதே மாதிரி சாப்பாடு. சாப்பாட்டுக்காக இப்டி சண்டை போடுவார்களா என்று ஒருத்தர் கேட்டார். பின்னாடி வரக்கூடிய சீன்களிலே சண்டையை காணுமே என்று ஒருத்தர் சொன்னார். அது தெளிவாக படத்திலே இருக்கிறது. முதல் நாள் லிங்குவும் மாரியும் சமாதானமாக லேட்டாக போகிறார்கள். லேட்டாகப்போனால் அப்டித்தான் இருக்கும். ஆனைவாந்தி என்று சொல்லுவோம். சரியாக நேரத்திலே போனால் சாப்பிட்டுட்டு வரலாம். ஆனால் அந்த அரைமணிக்கூர் நேரத்தில்தான் நாம் எல்லா சொந்த வேலையையும் பாக்கணும். ஊருக்கு போன் பேசணும். இன்லண்ட் லெட்டர் வாங்கணும். வேற நேரமே இல்லியே. அதனால்தான் அப்படி சண்டை.

அதேமாதிரி மூத்த பையன்கள் மற்ற விஷயங்களுக்கு கட்டாயப்படுத்துவார்கள். கங்காணிகளும் கூப்பிடுவார்கள். அது பெரிய கஷ்டம். குளிக்கிற இடத்திலே வந்து நின்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அதெல்லாம் கொடுமை சார்.

எல்லாவற்றையும் நல்லா காட்டியிருக்கிறீர்கள். கருங்காலி அந்த ஸ்கிரீனை இழுத்து விடுவது பயங்கரமாக இருக்கிறது. அந்த ஸ்டைல். ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். ஒரஞினல் ஆளையே தெரியும்போல.

நல்ல படம் சார். நெஞ்சிலே ஈரம் உள்ளவனுக்கு இந்த படம் பிடிக்கும். சும்மா விஜய் படம் பாக்கும் ஆட்களுக்கு பிடிக்காது.

ஒரே ஒரு விசயம் மட்டும் உறுத்தல். அண்ணாச்சிக்கடைகள் மட்டும் அப்டி இல்லை. நானும் அதே சாதிதான். மத்த சாதிக்கடைகளும் இதே லெச்சணம்தான். மார்வாடிப்பையன்கள் படுகிற பாடு ரொம்பக் கொடுமை. ஆனால் வடசென்னை பையன்களை ஒண்ணுமே செய்ய முடியாது

அப்ப்றம் கடைசியா ஒரு விசயம். இங்கே இருந்து பையன்களை கூட்டிட்டு போகும்போது வீட்டிலே அம்மா அப்பாவை கூப்பிட்டு ஒரு லம்ப் தொகை கொடுத்து வட்டிபோட்டு எழுதி வாங்கித்தான் கொண்டு போவார்கள். அதை வட்டியோடே கட்டாமல் மீள முடியாது

இந்த மாதிரி பல விசயங்கள் படத்திலே இல்லை. கொஞ்சம் கம்மியாகச் சொல்லி இருக்கிறீர்கல். ஆனால் சினிமாவிலே இந்தளவுக்கு சொன்னதே பெரிசு சார்

ரொம்ப நன்றி. டைரக்டர், நீங்க ரெண்டுபேர் காலிலேயும் விழுந்து கும்பிடவேண்டும் போல இருக்கிறது. பிரவுசிங் பண்ணும் இடத்திலேதான் நீங்கதான் வசனம் என்று சொல்லி இந்த சைட்டை காட்டினார்கள். நான் நிறைய படித்தேன். கீதை நனறாக இருக்கிறது. நான் தியானம் செய்து வருகிறேன்

குமாரசாமி

By Kumasami perumal on Mar 28, 2010

நன்றி : அங்காடி தெரு கடிதங்கள் 2

கலைடாஸ்கோப் – 25/03/10

கலைடாஸ்கோப் தீட்டும் வண்ணக் கலவைகள் வசீகரமானவை. அவை எழுப்பும் எண்ணற்ற சாத்தியக்கூறுகள் முடிவில்லாதவை. எனக்கு 10 வயதிருக்கும்போது குமரிமுனைக்குச் சுற்றுலா சென்றபோது வாங்கியது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக அதைக் கையிலேயே வைத்திருந்தேன்.

பின் PSG Techல் பணிபுரியும்போது, கலைடாஸ்கோப் டிசைன்ஸ் போட பேஸிக்கில் ஒரு ப்ரொக்ராம் எழுதி அதைப் பின் போர்ட்ரானில் மாற்றி அதையே பாஸ்கலில் மற்றும் சி++ ல் எழுதினோம்.

அதன் பிறகு மீண்டும் இப்பொழுது. நன்றி நேசமித்ரன்.

************************************************************

திருப்பூரில் உள்ள விடுதி ஒன்றில் ஒரு தம்பதியினர் அறை எடுத்துத் தங்கினர். உறவினர் திருமண வரவேற்பிற்கு வந்ததாகவும், தாங்கள் இருவரும் போலராய்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் சொல்லிக் கொண்டனர்.

மாலை அறையிலிருந்து கிளம்பிச் செல்கின்றனர், கையில் ஒரு பெரிய அன்பளிப்புப் பெட்டியுடன். இரவு வெகு நேரம் ஆகியும் அவர்கள் அறைக்குத் திரும்பவில்லை; அடுத்த நாளும் வரவில்லை.

சந்தேகப்பட்டு நிர்வாகத்தினர் அறைக்கதவை உடைத்துத் திறந்தால் உள்ளே வைத்திருந்த எல் சி டி டி வியைக் காணவில்லை.

இதுதான் ரூம் போட்டு யோசிப்பதோ?

************************************************************

Unnumbered account என்ற புத்தகம் வாசித்தேன் கிரிஸ்டோபர் ரீச் எழுதியது.

ஸ்விஸ் வங்கிகளில் நடக்கும் தில்லு முல்லுக்களை அடிப்படையாகக் கொண்டது. நாவலில் எழுதியுள்ளபடிதான் நடக்கிறது என்றால் ஆபத்துத்தான். ஸ்விஸ் வங்கிகளைக் கட்டுப்படுத்துவதே உலக போதைப்பொருள் கடத்துபவர்களும், ஆயுதம் விற்பனையாளர்களும்தான் என்பதாகச் சொல்கிறது நாவல். இது எந்த அளவுக்கு உண்மை என வங்கித் துறையில் பணியாற்றும் பதிவர்கள் சொல்லலாம்.

ஒரு வங்கி இன்னொரு வங்கியைக் கபளீகரம் செய்ய முயல்வதையும், அதில் ஏற்படும் கார்ப்பரேட் துரோகங்கள், ஏமாற்றுதல்கள், பழிவாங்கல் என நாவல் பல தளத்தில் விரிகிறது.

நல்ல பொழுது போக்கு நாவல்.

************************************************************

இந்த முறை வினாயக முருகனின் கவிதைகள் இரண்டு

விளம்பரம்
———-

எல்லா இடத்திலும்
எப்படியோ பூத்துவிடுகிறது
ஒரு விளம்பரம்

எதிர்வீட்டில் திடீரென பூத்திருந்தது
இங்கு சைக்கிளை நிறுத்தாதீர்
கூட ஒரு செல்போன் விளம்பரம்

நேற்று
ஒரு பலான படம் பார்த்துக்கொண்டிருந்தேன்
நிகழ்ச்சியின் இந்த பகுதியை வழங்குபவர்
ஒரு ஊதுபத்தி விளம்பரம்
எனக்கு புரியவேயில்லை

நான் கடவுள்
————

தேநீர்க்கடையில் சந்தித்தவர்
நான் கடவுள் என்றார்
அப்ப நான்?
நீயும் கடவுள் என்றார்
அவன்?
அவள் இவன்
அனைவரும் கடவுள் என்றார்
கடவுளைச் சந்தித்ததில்
கடவுளுக்குப் பரம திருப்தி

தேநீர் குடித்த காசுக்கு
கடன் சொல்லும்போது மட்டும்
ஒரு பொல்லாத கடவுள்
இன்னொரு கடவுள் முகத்தில்
”சுடுதண்ணிய ஊத்திடுவேன் என்றார்

கவிதைகளில் ஒளிந்திருக்கும் சன்ன நையாண்டி சிறப்பஎனக்குப் பிடிக்கிறது

************************************************************

மகன் : இளங்கலை, முதுகலை என்றால் என்னப்பா?

அப்பா : பக்கத்து வீட்டுக் கலையரசி சின்னப் பெண்ணா இருக்கதால இளங்கலை. அவளுக்குக் கல்யாணம் ஆகி அம்மா மாதிரி பெரிய பெண்ணா ஆனதும் முதுகலை.

படம் உதவி : fotosearch.com

மார்க்கெட்டிங் துறை ஆட்கள் தேவை

கேரள மாநிலம் தலைச்சேரியைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் Sixo Software Solutions என்ற நிறுவனத்திற்கு Software மற்றும் Web Development துறையில்
Marketing Executives தேவை

Name of the Post : Asst. Project Managers(Marketing)

Education : Degree / Diploma

Experience : 1 or 2 years (Freshers can also apply)

Place of Work : 1. Coimbatore (to cover Coimbatore, Pollachi, Udumalpet, Ooty)
2. Salem (To cover Salem & Erode)
3. Karur (To Cover Karur & Namakkal)

சமீபத்திய புகைப்படம் ஒன்றையும் இணைத்து தங்கள் சுயவிவரக் குறிப்பை அனுப்பவும். தங்களது தற்போதைய சமபளம் மற்றும் எதிர்பார்க்கும் சம்பளம் இரண்டையும் தவறாமல் குறிப்பிடவும்.

Please forward your resumes to : veeyar.cbe@gmail.com

All the Best.

கதம்பம் – 15/03/10

கதம்பம் என்ற தலைப்பில் நான்தான் முதலில் எழுதிவந்தேன் என நமது மரியாதைக்குரிய மூத்த பதிவர் திரு.லதானந்த் அவர்கள் தனது வலையில் எழுதியிருப்பதாக நண்பர் சுட்டி தந்தார். முதலில் எழுதிய தேதி முதற்கொண்டு ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

இப்படித்தான் நமது சக பதிவர் ஜாக்கி சேகர் முதலில் காக்டெயில் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தார். நான் பின்னூட்டத்தில், “ இதே தலைப்பில் கார்க்கி எழுதிக் கொண்டிருக்கிறார். நீங்கள் வேறு தலைப்பில் எழுதினால் நலம்” என்றேன். அவரும் உடனே நன்றி சொல்லி சேண்ட்விச் என்ற பெயரில் எழுதுகிறார். இதே போல் திரு.லதானந்த் அவர்களும் சுட்டியிருந்தால் உடனே சரி செய்திருக்கலாம்.

அது சரி பெயரில் என்ன இருக்கிறது? உள்ளடக்கம்தானே ராஜா.

அவரது வயது மற்றும் அனுபவம் இரண்டுக்கும் மரியாதை செய்யும் விதமாக இந்தப் பத்தியை இனி வேறு பெயரில் எழுத உத்தேசம். நல்ல பெயரைப் பரிந்துரையுங்களேன்.

இது வரை வந்த பரிந்துரைகள்
வானவில் / கலைடாஸ்கோப் / தோரணம்

************************************************************

இந்தப் பெயர் வைக்கும் விவகாரத்தில் வைரமுத்து கில்லாடி. அவர் எழுதிய இரண்டு நாவல்களில் ஒன்று இதிகாசம் மற்றொன்று காவியம்.

படைப்புகள் காலத்தால் அழியாமல் காவியம் என்றும் இதிகாசம் என்றும் நிலைத்திருக்கையில் அன்னார் தலைப்பு வசீகரம். புத்தகம் தலைப்புக்கு நேர்மை செய்யவில்லை என்பது வேறு விஷயம்.

அவர் நல்ல திரைப்பாடலாசிரியர் என்பது உண்மை. நல்ல நாவலாசிரியரா?

************************************************************

அனல்காற்று – ஜெயமோஹன் எழுதி தமிழினி வெளியிட்ட நாவல்.

பொருந்தாக் காமம் மற்றும் பருவக் காதல் இரண்டிற்கும் இடையில் அல்லாடும் ஒருவனின் கதை.

சீன் பை சீன் ஆக ஒரு திரைக்கதை மாதிரியே எழுதி இருக்கிறார். படித்து முடித்து பின் முன்னுரையைப் படிக்கும்போதுதான் தெரிகிறது பாலு மகேந்திரா கேட்டதற்காக எழுதிய கதையாம் அது. படமாக எடுக்கப்படாமல் நின்று விட்டது.

ஒரே மூச்சில் படிக்க வைத்தது ஜெ மோ வின் எழுத்து. காமத்தையும் காதலையும் அதனதன் இயல்புடன் வெகு நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார். கதாசிரியர் எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காமல் விஷயத்தை அதன் போக்கில் சொல்லி இருப்பது சிறப்பு.

நல்ல நாவல்.

************************************************************

இந்த முறை மண்குதிரையின் கவிதை.

எங்கள் ஊருக்கு கடவுள் வந்திருந்தார்

எதிர் வீட்டு கருப்பசாமி அண்ணன்
தன் குடும்ப அட்டையை
30 ருபாய்க்கு வாடகைக்கு விடுவதை
பார்த்துவிடுகிறார்

எங்கள் வீதியின் முடிவில் இருக்கும்
ஒரு நியாயவிலை அங்காடியில்
தராசு முள் சரிவதை
தன் நுட்பமான பார்வையால்
கண்டுபிடித்து விடுகிறார்

வட்டாச்சியர் அலுவலகம் அமைந்திருக்கிற
நகரின் முக்கியமான சந்திப்பில்
தேநீர் அருந்த நுழையுமவர்
பின்பக்கம் சில ஆயிரம் ரூபாய்க்கு
ஒரு அரசு அதிகாரி தன் கையெழுத்தை
விற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு கோபமடைகிறார்

புகார் கொடுக்க காவல் நிலையத்திற்குச் சென்றபோது
அங்கொரு ஏழைப் பெண்ணின் கற்புக்கு
நெடிய பேரம் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து
அதிர்ச்சியடைகிறார்

நிதானமின்றித் துடிக்கும் தன் மனதை
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
சன்னதி தெருவிலிருக்கும் பெரிய கட்டிடத்திற்கு வருகிறார்
அங்கே எங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வர் காட்சியளித்துக் கொண்டிருப்பதே
அந்த அதிகாரியின் கையெழுத்தை விற்ற காசில்தான்

விரக்தியடைந்து
தேர்ந்த மொழியால் எங்களைச் சபித்தவாறு
விரைந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்
முக்கியமான சாலையைக் கடக்கும் போது
நாங்கள் தேர்ந்தெடுத்த எம் எல் ஏ கட்டிய பாலம் இடிந்து
சிகிச்சை பலனின்றி
எங்கள் அரசு பொது மருத்துவமனையில் மரணமடைகிறார்

ஒரே கவிதையில் இப்படி சமூகச் சீரழிவுகள் அனைத்தையும் சாடமுடியுமா? சாடியிருக்கிறார். நன்றாக இருக்கிறது. உண்மை சுடுகிறது.

************************************************************

சின்னவளின் சைக்கிள் பஞ்சர் ஆகி விட்டதால் அதை ஒட்ட சைக்கிள் கடை தேடினோம். ஒரு கடையைக் கண்டதும் நான் நின்றேன். அவள் இங்கே வேண்டாமென்றாள்.

“ஏண்டா?” என்றதற்கு பெயர்ப்பலகையைச் சுட்டிக் காட்டினாள்.

“இங்கு பஞ்சர் போடப்படும்”

நல்லா இருக்க டியுபைப் பஞ்சர் செய்வார்களோ?