மும்பை ஏர்போர்ட்டிலிருந்து அனுஜன்யாவை அழைத்து வீட்டுக்குச் செல்ல வழியும் முகவரியும் கேட்டேன். அவர் வீட்டுத் தொலைபேசி எண்ணைக் கொடுத்து பேசச் சொன்னார். ”ஆட்டோவிற்கு எவ்வளவு கேட்பான்” என்பது உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டேன்.
வெளியே வந்ததும் ஆட்டோக்காரன், “எங்க சார்?”
நான் போக வேண்டிய இடத்தைச் சொன்னதும், “ப்ரீ பெய்டுல 350 ஆகும் சார், நீங்க 250 கொடுங்க போதும்”
நான், “ 100 ரூபாய்க்கு வருவியா?”
“சரி வாங்க”
அரை மணி நேரத்தில் வீடடைந்தேன். அருமையான காபி சாப்பிட்டுக் காத்திருந்தேன் அனுஜன்யாவிற்கு. அனுஜன்யாவின் தங்கமணி நல்ல புத்தகங்களைப் படிக்கிறார்;நல்ல திரைப்படங்களைத் தேடிப் பார்க்கிறார். அனுஜன்யாவின் கவிதைகளைப் பொறுத்துக் கொள்கிறார்.
அவர் வந்தததும் ஆரம்பித்த பேச்சு, இரவு உணவு, நடை, மீண்டும் காபி என நீண்டு நள்ளிரவைக் கடந்தது.
அடுத்த நாளிரவு கேஸ்கேட் என்ற உணவு விடுதியில் இரவு உணவை உண்டோம்.
நல்ல ஆம்பியன்ஸ். பாருடன் இணைந்த உணவு விடுதி. உள்ளே நுழைந்ததும் 6 கடிகாரங்களை வைத்து உலகின் மற்ற முக்கிய நகரங்களில் மணி என்ன என்பதையும் காட்டுகிறார்கள். அனுஜன்யாவிடம் கேட்டேன், “உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுமாறு இந்த கடிகாரங்களை வைத்திருப்பதன் நோக்கம் என்ன? ”
“நேரம் காலம் தெரியாமல் தண்ணி அடிக்கிறாங்கன்னு யாரும் சொல்லக் கூடாதுல்ல அதுக்குத்தான்”
அனுஜன்யாவின் நண்பர் சந்துரு அந்த இரவை நல்ல கலகலப்பாக்கினார். சரளமான பழமொழிகளை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சொல்லி அசரவைத்தார். வெளிநாட்டு வங்கி ஒன்றின் உயரதிகாரியான அவர் உயர்தர ஆங்கிலத்திலிருந்து சட்டென பேச்சுவழக்கிற்கு மாறுவது சுவராசியமாக இருந்தது.
“தட் ஃபெல்லொவ் ஃபெயில்ஸ் டு டிஃபெரென்சியேட், செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன், லெட் ஹிம் ஃபீல் த பின்ச், பட்டாத்தான் புத்தி வரும்”
சர்வர் ஒருவர் வந்து சந்துருவப் பார்த்து, “எக்ஸ்க்யூஸ் மீ, உங்க ஐ டி கார்டக் கொஞ்சம் தர்றீங்களா?”ன்னார்.
சிறிது நேரத்தில் திரும்ப வந்து, “உங்களுக்கு 10% டிஸ்கவுண்ட் இருக்கு சார்” அப்படின்னார். உடனே ரெம்பப் பெருமையா எங்களை பார்த்தார். ஆட்டுக்கு மஞ்சத் தண்ணி தெளிச்சிருக்காங்கன்னு புரியல அவருக்கு, பாவம்.
சாப்பிட்டு முடிச்சதும் பில்ல நேரா அவரிடமே கொடுத்து பேமெண்டும் வாங்கினார் சர்வர்.
இதில் இருந்து இரண்டு விஷயங்கள் எனக்குப் புரிந்தது . ஒண்று சாப்பிடப் போகும்போது ஐடி கார்ட அணியக்கூடாது. இரண்டு சந்துரு என்னோட பதிவுகளப் படிக்கிறது இல்லை. (என்னோட இந்தப் பதிவப் படிச்சிருந்த தப்பிச்சிருப்பாரு)
அடுத்தநாள் காலை மும்பை கார்ப்பரேசன் பேருந்தில் பூனாவிற்குப் பயணம். பேருந்துகளை நல்லவிதமாகப் பராமரிக்கிறார்கள். வால்வோ பேருந்து, குளிர்பதனபடுத்தப்பட்டது. வழியெங்கும் கண்ணுக்கினிய பச்சை பசேலென இயற்கைக் காட்சிகள். அருகிலிருந்தவர் சொன்னார், ”நவம்பர் டிசம்பர்ல வந்தீங்கன்னா அருமையாக இருக்கும்”
சாப்பிட ஒரு இடத்தில் நிறுத்தினார்கள் அனைத்து வசதிகளும் அமைந்த வளாகம். நல்ல சுவையான உணவு, சரியான விலை. நமது ஊரில் சாலை ஓரங்களில் போக்குவரத்து கழகப் பேருந்துகளை வழக்கமாக் நிறுத்துமிடத்தில் புளிச்ச தோசை மாவில் ஊத்தாப்பம் கொடுத்து 35 ரூபாய் வசூலிக்கும் கொடுமை நினைவுக்கு வந்தது. கழிவறைகளையும் சரியாகப் பராமரிக்கிறார்கள். இலவசம்.
மலையைக் குடைந்தமைந்த பாதைகளில் பயணம் செய்தது புதிய அனுபவம். திரும்ப மும்பை வரும்பொழுது வாடிக்கையாளரின் காரில் பயணித்தது மலைப்பாதைகளை நன்கு ரசிக்க உதவியது.
இரவு கிளம்பிய குர்லா எக்ஸ்பிரஸில் சக பயணிகளுடனான அனுபவம் வித்தியாசமாக இருந்தது.
ஆடிட்டர் ஒருவர் தனது மனைவி பையன்(8 ஆம் வகுப்பு), பாலக்காட்டைச் சேர்ந்த பெண்மணி அவரது மகன் (9ஆம் வகுப்பு) ஆகிய இருவரது குழந்தை வளர்ப்பு முறைகளை கவனிக்க முடிந்தது.
ஆடிட்டர் தனது மகன் சுய சிந்தனை உள்ளவனாக வளர வேண்டுமென மெனக்கெடுவது தெரிகிறது. இதைச் சாப்பிடு எனச் சொல்லாமல், இதெல்லாம் கிடைக்கும் உனக்கு என்ன வேண்டுமெனக் கேட்கிறார். அதே போல் உணவு வந்து விட்டதே என்பதற்காகச் சாப்பிடச்சொல்லி வற்புறுத்தவில்லை. உனக்கு எப்பொழுது பசிக்கிறாதோ அப்பொழுது சாப்பிடு எனச் சொல்கிறார். பேண்ட்ரிக்குச் சென்று வேண்டுமென்பதை வாங்கிச் சாப்பிடு எனச் சொல்கிறார். ஒவ்வொரு ஸ்டேசனிலும் கீழே இறங்கி அந்த மக்கள் மற்றும் சுற்றுபுறச் சூழலைக் கவனிக்கச் செய்கிறார்.
மாறாக பா கா பெண்மணி தனது மகனை இன்னும் சிறுவனாக எண்ணிக் கொண்டிருக்கிறார். ஸ்டேசனில் கீழே இறங்க விடுவதில்லை.”ரயில் கிளம்பிடும் நீ ஓடி வந்து ஏற முடியாது” என்கிறார். அவன் என்ன சாபிட வேண்டும்; எப்பொழுது சாப்பிட வேண்டுமென்பதை அவரே முடிவு செய்கிறார். ஒரு முறை பாத் ரூம் சென்றவன் நீண்ட நேரமாகியதால், பாத்ரூம் கதவருகில் சென்று காத்திருந்தார்.
இரண்டாமவன் வளார்ந்து பெரியவனானதும் நிச்சயமாக அவன் மனைவி சொல்வதைக் கேட்பவனாகத்தான் இருப்பான். ஏனெனில் வளர்வது வரை அவனம்மா தீர்மானிக்கிறார். வளர்ந்ததும் அவனது மனைவி. அவனுக்கென்று சுயமாக ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.
என்னுடைய 14 வயதில் நான் வளர்ந்த முறையை நினைத்துப் பார்த்து மிக மகிழ்ந்தேன். பாவம் இந்த பையன் சபிக்கப் பட்டவன் இதே போலத்தான் வெகு பெற்றோர் தங்கள் குழந்தைகளை நடத்துகிறார்கள்.
.