விஷ்ணுபுரம் விருது – 2011 விழாத் துளிகள்

விஷ்ணுபுரம் விருது விழாவன்று மதியம் சாப்பிடும்போது ஜெயன், யுவன் அடுத்து நான் என்ற வரிசையில் அமர்ந்தோம். யுவன் திடீரென என்னிடம் திரும்பி, “என்பெயர் யுவன் சந்திர சேகர்.  (ஜெய)மோகன் என்னை எழுத்தாளார்னு இன்விடேசன், போஸ்டரில் எல்லாம் போட்டிருப்பதால் நானும் ஒரு எழுத்தாளர்னு சொல்லிக்கிறேன். நாம இதுக்கு முன்னாடி சந்திச்சிருக்கோமா?” என்றார்.

”சந்திச்சிருக்கோம் யுவன் “ என்றேன்

”எப்ப? எனக்கு ஞாபகம் இல்லையே?”

”இரண்டு வருடங்களுக்கு முன்னால் சிவராமனும், ஜ்யோவ்ராம் சுந்தரும் நடத்திய சிறுகதைப் பட்டறையில், பாரா எடுப்பு தொடுப்பு முடிப்புன்னு பேசி அமர்ந்ததும், நீங்க எந்திரிச்சு அப்படி எல்லாம் எதுவும் இல்லாம எழுதுனதுதான் என் சிறுகதைகள். ஆதாரமா சிறுகதைக்கு இருக்கும் வடிவத்தை உடைக்கும் விதமாகத்தான் என் கதைகள் இருக்கும்”னு நீங்க பேசினீங்க.

”ஆமா ஞாபகம் இருக்கு. ஆனா அன்னைக்கு இப்படி கையில் ஸ்க்ரட்சுடன் யாரையும் பார்த்த ஞாபகம் இல்லையே?”

”இல்லை யுவன். இந்த ஸ்கரட்ச் தற்காலிகம்தான்” என்றேன்.

பெரிய எழுத்தாளர் என்ற பந்தா ஏதுமில்லாமல் இயல்பாகப் பழகியதும், நான் யுவன் என்று பெயர் சொல்லி அழைத்த போது அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளாமல் அதுதான் தனக்குப் பிடித்திருக்கு எனச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.

யுவனிடம் எனக்குப் பிடித்தது அவரது அபாரமான நகைச்சுவை உணர்வு. வெகு சிலரால்தான் தன்னைச் சுற்றி இருப்பவர்களை இப்படி டைனமிக்காக வைத்திருக்க முடியும்.

விழாவிற்கு முதல் நாள் மதியமே வந்துவிட்டார் எஸ்ரா.  அப்பொழுது தொடங்கிய இலக்கிய அரட்டை அவர் அவசரவசரமாக ரயில் ஏறும் வரை தொடர்ந்தது.

கொஞ்சம் கூடத் தயங்காமல் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்குத் தொடர்ந்து பதிலளித்து உரையாடலை செம்மைப் படுத்தினார்.

நான் துயில் நாவல் பற்றிக் கேட்டேன். சமீபத்தில் மருத்துவமனையில் இருந்தபோது படித்ததால் எனக்குப் பிடித்திருந்தது.  குறிப்பாக கீழே உள்ள பத்தி.

மனிதர்கள் தங்கள் உடலை எப்போதும் ஒரு இயந்திரத்தைப் போலத்தான் பயன்படுத்துகிறார்கள். அது செம்மையாக இயங்கிக் கொண்டிருக்கும்வரை அவர்கள் அதைக் கவனிப்பதே இல்லை. ஆனால் அதில் ஏதாவது கோளாறு வந்துவிட்டால் உடனே பயம் கொண்டு விடுகிறார்கள்

நோயின் காரணத்தை அறிவதைவிடவும் அதிலிருந்து உடனே மீளவேண்டும் என்பதிலேதான் பொது நாட்டமிருக்கிறது.*நோய் உண்மையில் ஒரு விசாரணை. உடல் எப்படி இயங்குகிறது எது அதன் ஆதாரம் என்ற கேள்விக்கான விசாரணை. உடலை அறிவதுதான் மனிதனின் முதல் தேடல். நாமோ அதை ஒரு தண்டனையாகக் கருதுகிறோம்.

நோய் ஒரு நல்ல ஆசான். அது மனிதனுக்கு வேறு எவர் கற்றுத் தந்ததையும்விட அதிகம் தந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் நோயிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்கிறான். அப்போதுதான் அவனுக்கு உடலின் அமைப்பும் நுணுக்கமும் விசித்திரங்களும் புரியத் தொடங்குகிறது.

ஆனால் நோயிலிருந்து விலகியதும் இந்தப் பாடங்களை மறந்துவிடுகிறான்.

”அந்த நாவலை எழுதும்போது உங்கள் மனநிலை என்ன?” என்று கேட்டேன்

“நானே வலிந்து வரவைத்துக் கொண்ட சிக்னெஸ்ஸுடந்தான் எழுதினேன். ஒன்றுமே செய்யாமல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருப்பேன். வீட்டில் அனைவரும் திட்டுவார்கள் ” என்றார்.

முதல் அத்தியாயத்தில் எல்லோரும் ரயிலுக்காகக் காத்திருப்பார்கள் அனால் வராது. இறுதி அத்தியாயத்தில் ரயில் வரும் யாரும் அதற்காகக் காத்திருக்க மாட்டார்கள். மேலும் நோய் பற்றிய நாவல் என்பதால் வாசிப்பவனை அயர்ச்சி கொள்ளச் செய்யவே முதல் அத்தியாயத்தை வேண்டுமென்றே நீட்டி எழுதினேன் என்றார்.

மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்துத் தொடர் உரையாடலைச் சாத்தியப்படுத்திய எஸ்ராவுக்கு நன்றிகள் பல.

One comment

Leave a comment