நட்சத்திரக் கதம்பம்.- 4/7/09

சென்ற வாரம் செமஸ்டர் முடிவுகளை வெளியிட்டார்கள். பாரதியார் பல்கலைக் கழகத்தின் வெப் செர்வர் (தமிழ்ல என்னப்பா?) தவங்கி விட்டது. பாவம் மாணவ மாணவிகள் தவியாய்த் தவித்து விட்டார்கள்.

தேர்வு முடிவுகளை அந்தந்த கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிடலாமே? ஏறக்குறைய அனைத்து மாணவர்களும் மின்னஞ்சல் முகவரி வைத்திருக்கிறார்கள். நேரடியாக அவர்களுக்கே கூட அனுப்பலாம். மென் பொருளில் இதெல்லாம் சாத்தியமே. பல்கலைக் கழகம் முயலுமா?

*******************************************************************************

கோவையில் அதிகப் பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் கோவையின் சாபக்கேடான மேம்பாலங்களை மேம்படுத்தும் வழியொன்றும் தென்படவில்லை. இருப்பதே இரண்டு மேம்பாலங்கள்தான். இரண்டிலுமே தொழில்நுட்பக் கோளாறு. லேசாகத் தூறல் போட்டால்கூட பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி விடுகிறது. உபயோகிக்க இயலாதாகிவிடுகிறது. சமயங்களில் நல்ல மழை பெய்யும்போது பாலத்தின் ஒரு புறமிருந்து மறுபுறம் செல்ல 45 நிமிடங்களாகி விடுகிறது. ரயில் ஏறச் செல்பவர்கள் படும் பதைபதைப்பு மனதை வாட்டக்கூடியதாக இருக்கிறது.

ஏதாவது ஒரு கல்லூரிப் பேராசிரியர் இதை ஒரு சவாலாக எடுத்துச் சரி செய்யலாம். இறுதியாண்டு மாணவர்களுக்கு இதை பிராஜக்டாகக் கொடுக்கலாம்.
வேலை முடிந்த மாதிரியும் இருக்கும் மாணவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைத்த மாதிரியும் இருக்கும்.

*******************************************************************************

அவினாசி சாலை மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களுக்குப் புதிதாக ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கிறார்கள். இரு சக்கர வாகனங்கள் பாலத்திற்கு கீழேயும் நான்கு சக்கர வாகனங்கள் பாலத்தின் மேலேயும் என்று. இதைச் சரியாகக் கடைபிடிக்கிறார்களா எனச் சரிபார்க்க நான்கு புறங்களிலும் நான்கு காவலர்கள் வேகாத வெயிலில் நின்று சிரமப் படுகிறார்கள். சமயங்களில் பெண் காவலரும்கூட. அவர்களைச் சில சமயம் ஏமாற்றிவிட்டு இரு சக்கர வாகனங்கள் பாலத்தின் மேலே பயணிக்கின்றன. தனிமனித ஒழுக்கம் முக்கியம்.

*******************************************************************************

பின்னூட்ட வள்ளல் நைஜீரியா ராகவன் வந்திருந்தார் கோவைக்கு குடும்பத்துடன். நான், செல்வா, சஞ்சய் மற்றும் வெட்டிப்பீடியா சுரேஷ் எல்லோரும் போய் சந்தித்தோம்.

இரண்டு மணி நேர உரையாடல்களுக்குப் பிறகு உணவருந்தச் சென்றோம் விடுதியறையுடன் இணைக்கப்பட்ட உணவகத்தில். அநியாயத்திற்குக் காலதாமதம் செய்ததுடன், குறைந்த பட்ச சேவைகளைக்கூட ஒன்றுக்கு இரு முறை கேட்டுப் பெற வேண்டி இருந்தது.

ஒரு கட்டத்தில் உணவக மேலாளரை அழைத்து சேவைக் குறைபாடுகள் என்னென்ன என்பதைக் கோபப்படாமல் அதே நேரம் அழுத்தமாகச் சொன்னார். அவரது அணுகுமுறையின் விளைவை உடனடியாகக் கண்டுணர முடிந்தது.

இறுதிவரை எங்களுக்கு நல்ல உபசரிப்பும் தரமான சேவையும் கிடைத்தது.

*******************************************************************************

கோவை சூலூரைச் சேர்ந்த மதன் தற்சமயம் வேலை நிமித்தம் வசிப்பது பெங்களூருவில்.

“தாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்” என்று தன்னைப்பற்றிச் சொல்லும் மதனின் எழுத்துக்களில் தென்படும் நல்ல மொழியாளுமையும் வார்த்தைகளில் வீச்சும் என்னைப் பிரமிக்க வைக்கிறது.

பாடம்

சொட்டிச் சொட்டி
வீணாகாமல் இருக்க
நீர்க்குழாயின் கைப்பிடியை
இறுக்கி, இறுக்கி
மூடி வைத்ததிலோ என்னவோ
திடீரென ஓர் நாள்
மறை தளர்ந்து விட்டது.
பின்வந்த நாட்களில்
குழாயை மூடுகையில்தான்
புரிகிறது
எந்தப் புள்ளியில்
இறுக்குதல்
நிறுத்தப்பட்டிருந்தால்
நீரும் ஒழுகாது
மறையும் மழுங்காது
என்பது.

மதன்

*******************************************************************************

”சிங்கப்பூருக்கு ஒரு டூர் அடிக்கலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு செலவாகும்னு தெரியலை” ன்னு நண்பன் கிட்டச் சொன்னா, “நினைக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் செலவாகாது” ன்னு சொல்லுறான்.

.

46 comments

  1. //சென்ற வாரம் செமஸ்டர் முடிவுகளை வெளியிட்டார்கள். பாரதியார் பல்கலைக் கழகத்தின் வெப் செர்வர் (தமிழ்ல என்னப்பா?) தவங்கி விட்டது. பாவம் மாணவ மாணவிகள் தவியாய்த் தவித்து விட்டார்கள்.

    தேர்வு முடிவுகளை அந்தந்த கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிடலாமே? ஏறக்குறைய அனைத்து மானவர்களும் மின்னஞ்சல் முகவரி வைத்திருக்கிறார்கள். நேரடியாக அவர்களுக்கே கூட அனுப்பலாம். மென் பொருளில் இதெல்லாம் சாத்தியமே. பல்கலைக் கழகம் முயலுமா?
    //

    வெப் சர்வர் மூலம் தான் தனியாருக்கான மின் அஞ்சல்களும் இயங்குது. அது பழுதாகி விட்டால் மின் அஞ்சல் அனுப்ப முடியாது

  2. //”சிங்கப்பூருக்கு ஒரு டூர் அடிக்கலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு செல்வாகும்னு தெரியலை” ன்னு நண்பன் கிட்டச் சொன்னா, “நினைக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் செலவாகாது” ன்னு சொல்லுறான்.
    //

    🙂

    சிங்கைப் பதிவர்கள் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்

  3. நன்றி கோவி,

    வெப் செர்வர் தொங்கியதற்கான காரணம் ஒரே நேரத்தில் அத்துனை பேரும் அந்த முகவரியை அனுகியதுதான். அதற்காகத்தன் குறைந்த பட்சம் அந்தந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பலாமே?

  4. //நினைக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் செலவாகாது” ன்னு சொல்லுறான்.//

    LOL :))))))))))

  5. புரொபைல் போட்டோ சூப்பரேய்ய்ய்ய்ய்ய்! :))

  6. /
    ஒரு கட்டத்தில் உனவக மேளாலரை அழைத்து சேவைக் குறைபாடுகள் என்ன என்ன என்பதைக் கோபப்படாமல் அதே நேரம் அழுத்தமாகச் சொன்னார். அவரது அனுகுமுறையின் விளைவை உடனடியாகக் கண்டுணர முடிந்தது.

    இறுதிவரை எங்களுக்கு நல்ல உபசரிப்பும் தரமான சேவையும் கிடைத்தது.
    /

    இதைத்தான் சினிமால எங்க அடிச்சா அங்க வலிக்கும்ங்கிறாங்களோ??
    :))

  7. //
    “நினைக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் செலவாகாது”
    //

    Exactly!
    Well said.
    :)))))))))))

  8. /
    தனிமனித ஒழுக்கம் முக்கியம்.
    /

    கோயமுத்தூர்காரவிங்களா இப்படி இருக்காது யாராச்சும் தம்புசெட்டிபட்டிகாரங்க அப்படி பாலத்துமேல போயிருப்பாங்க!
    :))))))))))))

  9. அண்ணே,

    நமக்கு உடுமலை தான்.. நம்ம ஊர் செய்திகள தெரிஞ்சுகிட்டதுல மகிழ்ச்சி..

    தண்ணீர்க்குழாய் பற்றிய படைப்பு அழகு.

  10. //வெப் செர்வர் (தமிழ்ல என்னப்பா?) //

    ”வழங்கி”

    வெங்கடேஷ்

  11. /////”சிங்கப்பூருக்கு ஒரு டூர் அடிக்கலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு செல்வாகும்னு தெரியலை” ன்னு நண்பன் கிட்டச் சொன்னா, “நினைக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் செலவாகாது” ன்னு சொல்லுறான்.
    ////

    நம்ம கூட பழகரவங்க வேற எப்பிடி இருப்பாங்க!!

  12. நட்சத்திரக் கதம்பம் – நல்லா இருக்குது!

    மதனின் கவிதை அருமை!

  13. //எந்தப் புள்ளியில்
    இறுக்குதல்
    நிறுத்தப்பட்டிருந்தால்//

    மதனின் “பாடம்” மனதில் நிறுத்த வேண்டியது.

  14. நல்லாயிருக்கு அண்ணாச்சி.

    நானும் எங்கப்பா மாதிரியே சிங்கப்பூருக்கு டூர் போகணும்னு நெனைச்சேன்!

  15. நட்சத்திர கதம்பம் சிறப்பு.மதனின் கவிதை குறித்த பகிர்வு மகிழ்ச்சியளிக்கிறது.

  16. அங்கண்ணன் கடை ருசி இன்னும் அப்படியே இருக்கா?

  17. கலக்கல் கதம்பம் அண்ணாச்சி.. அதிலும் இமெயில் மூலம் ரிசல்ட் ஐடியாவும், மேம்பால ஐடியாவும் சூப்பர்…

  18. கதம்பம் அருமை… 🙂

    மதன் பதிவை ரீடர்’லே இணைச்சாச்சு… அறிமுகத்துக்கு நன்றி… 🙂

  19. அட்டகாசம் அண்ணாச்சி… .அந்த தண்ணீர்க்குழாய் கவிதை பல விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது.

  20. கோவையின் சாலைப் போக்குவரத்தின் இப்போதைய நிலையைப் பகிர்ந்ததற்கு நன்றி … நல்ல சாலைகள் மற்றும் civic sense இது தான் நம்மிடம் இல்லாதது ஆனால் இதில் என்ன சிரமம் என்பதன் அரசியல் தான் எனக்கு எரிச்சலூட்டுகிறது … கோவையைப் பற்றி அடிக்கடி எழுதுங்கள் – அது நல்லதோ கெட்டதோ … கதம்பத்தின் கடைசி பூவை ரசித்தேன் …

  21. நன்றி ஆயில்ஸ்
    நன்றி சிவா. ஆனா சொன்ன முறைதான் முக்கியம். He was FIRM but POLITE. he had Neither shown anger nor hatred. He knows how to milk. I have learn t a lesson.

    நன்றி செந்தில்.
    நன்றி தீபா
    நன்றி சிவா. அதச் சொன்னதே நீங்கதான்னு போட்டிருக்கலாம். சரி பாவம்னு விட்டுட்டேன். :-)))))))

    நன்றி சென்ஷி. மதனின் மற்ற கவிதைகளையும் படித்துப் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்க்கும்.

    நன்றி ராமு. அந்தக் கவிதை நிறைய விஷயங்களைச் சொல்லாமல் சொல்லுகிறது.

    நன்றி கிருஷ்ணா.
    நன்றி முத்துவேல். மதனும் உங்களை மாதிரித்தான் நல்ல கவிதைகள் எழுதுகிறார். இந்த நாள் இனிய நாள் கவிதை பாருங்கள்.

    நன்றி மணி(தண்டோரா). அங்கண்ணன் ருசி அப்படியேதான் இருக்கிறது. ஆனால் நகரில் ராஜு மெஸ் (ஹரி பவன்), வேணு பிரியானி ஹோட்டல் இரண்டும்தான் இப்ப டாப்பு.

    நன்றி முரளி.
    நன்றி இராம் மதன் இப்ப பெங்களூருவில்தான் இருக்கிறார்.

    நன்றி மகேஷ். அதுதான் கவி மனது. நாம் அன்றாடம் புழங்கும் விஷயம்தான் ஆனால் அதற்குத் தனி அர்த்தம் இக்கவிதை மூலம் கிட்டுகிறது பாருங்கள்.

  22. நன்றி நந்தா. எல்லோரும் தற்காலிகத் தீர்வுக்குத்தான் முயல்கிறார்களே தவிர தொலை நோக்கொன்றும் இல்லை.

  23. வெப் சர்வர் = இணைய வழங்கி…
    கதம்பம், மணம்.

  24. கதம்பம் நன்றாக இருந்தது.

    மதனின் கவிதை அருமை.

    //“நினைக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் செலவாகாது” ன்னு சொல்லுறான்.//

    மக்கள் தெளிவாதான் இருக்காங்க 😉

  25. நட்சத்திரக் கதம்பம் மணக்கிறது!

  26. வேலன் அண்ணாச்சி.. தமிழ் அழகான மொழி தான்.. ஆனாலும் சிற்சில தருணங்கள் தரும் நெகிழ்வை 'நன்றி' என்ற மூன்றெழுத்துச் சொல்லில் அடக்க முடியாததற்கு தமிழைக் குறை சொல்லிப் புண்ணியமில்லை..

    இருந்தாலும் இப்போது உங்களுக்கும் மற்றும் முத்துவேல், ராமலக்ஷ்மி, ராம், மணிநரேன், சென்ஷி ஆகிய நட்புள்ளங்களுக்கும் என் நன்றிகளை சொல்வது என் கடமை.

    அனைவருக்கும் நன்றி!

  27. கதம்பம் மணக்கிறது.

    சிங்கைக்கு சென்று வாருங்கள்
    வாழ்த்துக்கள்!!

    அதிகம் செலவாகாது.

  28. //”சிங்கப்பூருக்கு ஒரு டூர் அடிக்கலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு செலவாகும்னு தெரியலை”//

    கொஞ்சம் டைமும், கொஞ்சம் மின்சாரமும் செலவாகும் என்று சொல்லுங்க… மணற்கேணி 2009 போட்டியில் கலந்துக்கிட்டு கட்டுரை எழுத சொல்லுங்க:)))

    யப்பா சிங்கை மக்களா நோட் பண்ணுங்கப்பா எப்படி எல்லாம் விளம்பரம் செய்கிறேன் என்று:)

  29. ///“நினைக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் செலவாகாது” ன்னு சொல்லுறான்.////

    அதானே! வாழ்க உங்கள் நண்பர்!
    வளர்க அவருடைய நகைச்சுவை உணர்வு!

  30. உள்கட்டமைப்பு என்கிற சமாச்சாரம் கோவைக்கு எதிர்காலத்தில் ஒரு பெரும் தலைவலியாக இருக்கப் போகிறது.

  31. கவிஞர் அறிமுகம்+கவிதை நன்று.
    மற்றவை அரட்டை. அதிலும் பொது விசயம் கவனிக்கவேண்டியது.

  32. பாலங்கள் குறைபாட்டுக்கு மாணவர்களை என்ன செய்யச்சொல்லுகிறீர்கள்.? புரியலை.. சொல்யூஷன் வேண்டுமானால் கொடுக்கமுடியும், ஆனால் வேலை அரசு நினைத்தால்தான் முடியும் இல்லையா.. மேலும் சொல்யூஷன் கொடுக்கவும் நல்ல என்ஜினியர்கள் அரசிடம் உண்டு. வேலை செய்யத்தான் ஆளில்லை என நினைக்கிறேன்.

    மற்றவை பிரமாதம் வழக்கம் போல..

  33. நன்றி வைத்யா.
    நன்றி நரேன்
    நன்றி TVRK சார்.
    நன்றி மதன். உணர்ச்சிவசப் படாதீங்க. இன்னும் நல்ல கவிதைகளப் படைத்துத் தாருங்கள்.

    நன்றி ரம்யா. என்னை மாதிரி சமுதாய மேம்பாட்டுக்காகப் பாடுபடும் எழுத்தாளர்களை உங்கள் மாதிரி ஆட்கள்தான் பயணச்செலவை ஏற்றுக் கொள்ளவேண்டும். (இனிமே பின்னூட்டமே போடல சாமீங்கிறீங்களா?)

    நன்றி குசும்பா. நீயும் தேர்வுக் குழுவா? எனக்குக் கொஞ்சம் உதவி பண்ணுப்பா.

    நன்றி சுப்பையா சார்.
    நன்றி செல்வா.
    நன்றி முத்துராமலிங்கம்.

    ஆதி, பாலங்கள் குறைபாட்டைச் சிக்கனமாக எப்படிச் சரிசெய்வது நவீன முறைகளைப் பயன்படுத்தி என கல்லூரிப் பேராசிரியர்கள் உதவலாம். மாணவர்கள் இதை ஒரு ஆய்வுப் ப்ராஜெக்டாகச் செய்து அரசுக்குச் சமர்ப்பிக்கலாம். முன்னெடுக்க வேண்டும் அதுதான் முக்கியம்.

  34. ஈரோட்டுல Institute of Road and Transport Technology அப்படீனு ஒரு அரசு கல்லூரி இருக்குதே. அவங்க கிட்ட கேட்ட சொல்வாங்களோ?
    பாலத்த விடுங்க, ஒரு அஞ்சு வருசம் நிக்கிற மாதிரி ரோடு போட ஒரு நுட்பத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  35. வடகரை வேலன் அவர்களே,

    "கோவை சூலூரைச் சேர்ந்த மதன் தற்சமயம் வேலை நிமித்தம் வசிப்பது பெங்களூருவில்"
    பெங்களுரில் என்றால் அந்த ஊர் கோபித்துக்கொள்ளுமா?
    தமிழை வேண்டாது வெறுப்பவர்கள்தான் பெங்களூருவுக்குப் போகிறேன் என்று வலிந்து எழுதுகின்றனர். நீங்களுமா?
    பெங்களூரு போகிறேன் என்பது வரை தமிழில் போகலாம். மேலும் தாண்டுவதேனோ?

    அன்புடன்
    ரா.ராதா

  36. நன்றி இந்தியன்.

    நன்றி ரா.ராதா.

    பெங்களூர் – பெங்களூரு
    பாம்பே – மும்பை
    கல்கட்டா – கொல்கத்தா
    கொச்சின் – கொச்சி
    கொயிலோன் – கொல்லம்

    இதில் தமிழை வெறுப்பது எங்கே வருகிறது. நமது அண்டை(சண்டை) மாநிலமானாலும் அவர்கள் உணர்வைப் புரிந்து கொள்வதுதானே நலம்.

    மற்ற மானிலத்தவர் எல்லாம் தற்பொழுது சென்னை என்றுதானே சொல்கிறார்கள்?

  37. மேம் பாலத்தில் தண்ணீர் தேங்குகிறதா? அதிசியம் தான்.படம் பார்த்தால் ஓரளவு தெளிவுற முடியும்.
    பெரிய ஆட்கள் உதவி எல்லாம் இதற்கு வேண்டாம் மக்களுக்கு செய்யனும் என்ற சேவை மனப்பாண்மை மட்டும் இருந்தாலும் போலும்.
    சிங்கை போய் வர எவ்வளவு செலவாகும்??
    வடகரை —> சென்னை (எனக்கு தெரியாது)
    இப்ப டிக்கெட் சிங்கை வெள்ளி 520 ஆகும்.( ஒரு வெள்ளி 32 சொச்சம்).
    உள்ளூரை சுற்றிப் பார்க்க மற்றும் சில்லரை செலவுகள் தான் அதுவும் கிட்டத்தட்ட 500 வெள்ளியாகிவிடும்.முஸ்தாபாவில் சாமான்கள் வாங்க வேண்டும் என்றால் அதற்கு தனியாக போட்டுக்கொள்ளுங்கள்.

  38. கலக்குறீங்க கதம்பத்துல அண்ணாச்சி

    தனி மனித ஒழுக்கம் என்பது தானாகவே வரவேண்டும் – நம்மிடம் குறைவு தான்

  39. அண்ணாச்சி ,
    தனிமனித ஒழுக்கம் கோவையில மட்டுமில்ல, எங்கயுமே இல்ல.
    தஞ்சாவூர்ல சிக்னல்ல சிவப்பு விளக்கு எரிஞ்சதுன்னு நான் வண்டிய நிறுத்திட்டு காத்திருக்கேன், பின்னாடி வந்த அரசு போக்குவரத்து கழக நகரப் பேருந்து ஓட்டுநர் விடாம ஹார்ன் அடிச்சு என்னைய போக சொல்லுறாரு. வண்டியில இருந்து இறங்கி சிவப்பு விளக்கு எரியிறப்ப போகமாட்டேன், சும்மா ஹார்ன் அடிக்காதன்னு சொன்னேன். நீ போகலன்னா வழிய விடு, நான் போறேன்னு அந்த ஓட்டுநர் சொல்லுறாரு. முடியாது போ, உன்னால முடிஞ்சத பாருன்னு சொல்லிட்டு நின்னுட்டேன். பெரிய கொடுமை என்னான்னா நடு ரோட்ல இவ்வளவு சண்டையும் நடக்கிறப்ப போக்குவரத்து காவலர் தனக்கு அதுக்கும் சம்மந்தமேயில்லங்கிறமாதிரி நின்னுக்கிட்டு இருந்தாரே தவிர, ஒன்னும் கேட்கல அவரு.

  40. அண்ணாச்சி,
    சிங்கப்பூர் வர்றதுமட்டுமில்ல, இப்ப எல்லாம் நாம‌ எந்த நாட்டுக்கும் வேணும்ணாலும் கவலையேப்படாம போயிட்டு வரலாம். எல்லா நாட்டுலயும் தான் நமக்கு சொந்தகாரங்க இருப்பாங்களே.

    சிங்கப்பூருக்கு வரணும்னா மணற்கேணி – 2009ல‌ கலந்துக்கங்க.

  41. மின்னஞ்சல் மூலமா தேர்வு முடிவுகளை அனுப்புவது கூட மிக நல்ல யோசனை தான். இப்ப இருக்க மாணவர்கள்ல மின்னஞ்சல் முகவரி இல்லாதவங்களே கிடையாது.

    சாலை, பாலங்கள் மேம்பாட்டுக்கு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்யலாம், சிறந்த ப்ராஜெக்ட்ட அரசாங்கம் தேர்வு செய்து அதை நடைமுறைப் படுத்தலாம். அல்லது கோவையில் இருக்கும் தொழிலதிபர்கள், பொதுமக்கள் எல்லாரும் இணைந்து நமக்கு நாமே திட்டம் போட்டுக்க வேண்டியது தான்.

    ஏற்கனவே சிறு துளி அமைப்பு செம கலக்கு கலக்கிட்டு இருக்காங்கள்ல? அது மாதிரி பல அமைப்புகள் வரணும்.

  42. கோரிக்கைகள் கதம்பமா இருக்கு..??!!