ரூல் பார்ட்டி சிக்ஸ்

புதிதாக வந்த காண்ட்ராக்ட் ஒன்றின் எஸ்டிமேசன் தயாரித்துக் கொண்டிருந்தான் சேது. ”சுகுணா எலிகான்ஸ்” நிறுவனத்தில் டிராஃப்ட்ஸ்மேன் என்ற பதவியென்றாலும் மற்ற வேலகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வான். எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம். ஆனால் மிகவும் சென்ஸிட்டிவ்வான ஆசாமி.

”சேது” இண்டர்காமில் அழைத்தது அவனது முதலாளி வேணுகோபால்.

“என்ன சார்?”

“நாளைக்கு உனக்கு முக்கியமான் இன்ஸ்டலேசன் ஏதுமிருக்கா? ரூல் பார்ட்டி ஸிக்ஸ் இன்ஸ்பெக்சன் இருக்கு, காவேரிக்கும், ஹிந்துஸ்தானுக்கும். நீ சமாளிக்க முடியுமா? ”

“இன்ஸ்டலேசன் ஏதுமில்ல சார். எல்லாம் ரொட்டீன் மெயிண்டனன்ஸ்தான். ஐ வில் மேனேஜ். ஏ இ யாரு? ராஜகோபாலா?”

“இல்லப்பா விஸ்வநாதன்”

“அவரு எனக்குப் பழக்கமில்லையே சார்?”

“பிரச்சினை இல்லை. க்ளையண்ட் ரெண்டு பேருகிட்டயும் பேசீட்டேன். குப்தா கார் அனுப்புறேன்ன்னு சொல்லியிருக்கார். இதுதான் டிரைவர் செல் நம்பர். எப்ப வேணுமோ அப்பக் கூப்பிட்டுக்கோ. அட்வான்ஸ் ஒரு பத்தாயிரம் வாங்கிக்கோ. ”

“சரி சார் ஏ இ நம்பர் கொடுங்க”

டுத்த நாள் காலை 7 மணிக்கே சேதுவின் மொபைலுக்கு அழைப்பு வந்தது அவன் முதலாளியிடமிருந்து. “சேது அந்தாள் உனக்காகத்தான் காத்திருக்காராம்”

“சார் 9 மணிக்குப் போனாப் பத்தாதா?”

“இல்லப்பா இவரு கொஞ்சம் விவகாரமான ஆள். சீக்கிரம் போ”

“சரி சார்”

7.30 மணிக்கு ஏ இ இருக்கும் மேன்சனில் இருந்தான். ஷேவ் செய்யாத முகத்துடன் தோளில் ஒரு துண்டுமாகக் காட்சி தந்தவரை முதல் பார்வையிலேயே வெறுத்தான். எப்படி ஒரு நாள் முழுவதும் இந்தாளுடன் குப்பை கொட்டப் போகிறோம் என பயந்தான்.

“சார்”

“யாரு?”

“இன்னைக்கு இன்ஸ்பெக்சன், காவேரி ப்ளவர் மில்ஸ், ஹிந்துஸ்தான் ரீரோலிங் ரெண்டும்”

“உம்பேரு என்னப்பா?”

“சேது. எத்தனை மணிக்குக் கிளம்பனும் சார்? காரை வரச் சொல்லனும்.”

”உடனே வரச் சொல்லு வேலை இருக்கு.”

“சரி சார்” என்றவாரே வெளியே வந்து கார் டிரைவரை அழைத்தான்.

“கார் வந்திருச்சா”

“வந்திருச்சு சார்”

“சரி அண்ணபூர்ணா போய் இந்த ப்ளாஸ்க்குல காப்பி வாங்கி வரச் சொல்.”

டிரைவரிடம் காசு கொடுத்து காப்பி வாங்கிவர அணுப்பினான். 14 லட்சரூபாய்க் கார் ரெண்டு காப்பிக்காகப் பறந்தது. ரெண்டு காப்பிக்கே 15 ரூபாய்தான் ஆகும் அதுக்கு ஆகும் பெட்ரோல் செலவு?

வந்த காபியைக் குடித்துவிட்டு குளித்து பின், பூஜை செய்தார் அரைமணி நேரம் பக்திப் பழமாக. எல்லாம் முடிந்து வந்து காரில் ஏறியவாறே , “ டிபன் ஹவுசுக்கு விடச் சொல்லுப்பா அங்கதான் டிபன் சூப்பராக இருக்கும்”

அது நாம் போக வேண்டிய திசைக்கு எதிர் திசை எனச் சொல்ல வாயெடுத்தவன், அமைதியாக டிரைவருக்கு இடத்தைச் சொன்னான்.

சாப்பிட்டு முடித்ததும், “ கொஞ்சம் செக்சன் வரைக்கும் போய் இன்னைக்கான இன்ஸ்ட்ரக்சன் எல்லாம் கொடுத்துட்டு போகலாம்”. கார் மீண்டும் வந்தபாதைக்கே திரும்பியது. 11 மணிவரைக் காக்க வைத்துப் பின்தான் வந்தார்.

வரும்போதே “ஏதாவது நல்ல ஜூஸ் கடைக்கு விடச் சொல்லுப்பா. வெயில் தாங்க முடியல”

காவேரி பிளவர் மில்ஸ் ஊருக்கு வெளியே கோபித்துக் கொண்டு தனியே போனது மாதிரி தள்ளி இருந்தது; பொள்ளாச்சி ரோட்டில். மில் வளாகத்தினுள் கார் நுழைந்ததும் டிரைவர் கேட்டார், “ சார், ஆபீசுக்கா? பவர்ஹவுசுக்கா? ”

“ஆபீசுக்கே போப்பா” என்றார் ஏ இ.

உள்ளே நுழைந்ததும், “அப்ரூவ்டு டிராயிங்க் எங்கப்பா, அடிசனல் லோடு சாங்க்சன் லெட்டர் கொடு” என்றார். எல்லாவற்றையும் தயாராக வைத்திருந்த எலெக்ட்ரிக்கல் சூப்பர்வைசரிடமிருந்து வாங்கிக் கொண்டு தீவிரமாக ஆராய்ந்தார்.

“ஏம்ப்பா எல்லாம் ஸ்கீமேட்டிக் டிராயிங்க்ல இருக்க மாதிரி எரக்சன் பண்ணியிருக்கீங்களா? இல்ல உங்க இஷ்டத்துக்கு பண்ணி வச்சிருக்கீங்களா?”

“எல்லாம் டிராயிங்க்ல இருக்க மாதிரி பக்காவா இருக்கு சார்” என்றார் சூப்பர்வைசர் பவ்யமாக.

“இருந்தாச் சரி” என்றாவறே சேதுவைப் பார்த்தார். பார்வையின் அர்த்தம் புரிந்து உடனே அக்கவுண்டட்டைப் பார்த்தான் சேது. கைமாறியது கவர். கவரை வெளிப்புறமாகத் தடவிப் பார்த்தவர் கேள்விக் குறியுடன் சேதுவைப் பார்த்தார்.

“நீங்க சொன்ன அமவுண்ட் இருக்கு சார் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களா இருக்கு” என்று நம்பிக்”கையூட்டி”னான் சேது.

அதற்குள் அக்கவுண்டண்ட் கோதுமை ரவை, வெள்ளை ரவை, கோதுமை மாவு மூன்றும் தலா 5 கிலோ காரில் ஏற்றி விட்டார்.

”சரி” எனத் திருப்தியாகத் தலையாட்டியவர் ”போலாம்” எனச் சொன்னார்.

காரில் ஏறியதும், “அங்கண்ணன் கடை பிரியணி சாப்பிடணும்ப்பா ரெம்ப நாளாச்சு” என்றார். அவர் சாப்பிட்டதை விட டேபிளில் இறைத்ததுதான் அதிகம். பூண்டு வாசம் வீசும் ஏப்பத்துடன் மதியச் சாப்பாடு முடிந்ததும் அடுத்த கம்பெனி நோக்கி ஓடத் தொடங்கியது கார்.

ஹிந்துஸ்தான் ஸ்டீல் ரீரோலிங் மில். காலையில் நடந்த அதே சடங்குகள் இங்கும் நிறைவேறியபின், அறைக்குச் செல்வார் எனப் பார்த்தால் அலுவலகம் செல்ல வேண்டுமென்றார். மேலும் ஒரு இரண்டு மணி நேரம் காக்க வைத்து காத்துப் பின் 7.00 மணிக்கு வெளியே வந்தவர் சூர்யா ஹோட்டலுக்குக் காரை விடச் சொன்னார்.

பாரில் செட்டிலானவரை, நேரமாவதைச் சுட்டிக் காட்டிக் கைத்தாங்கலாக அழைத்து வந்து காரில் ஏற்றி அவரது அறையில் இறக்கி விட்டு காந்திபுரம் பஸ்ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டான் சேது.

காலைமுதல் ஆன செலவுகளைக் கணக்குப் போட்டு அதிர்ந்தான். தங்கச்சிக்கு செமஸ்டர் பீஸ் கட்ட அடமானம் வைத்த பைக்கின் ஆர் சி புக்கை மீட்டிருக்கலாம். ஊரில் வீட்டுக்கு ஓடு மாத்தியிருக்கலாம். ”ஹும்” பெருமூச்சுத்தான் விடமுடிந்தது.

காலியாக வந்த S9 பஸ்ஸில் ஏறி, இருக்கையில் தொப்பென விழுந்தான். அவனது உடல்மொழியைக் கவனித்த அருகிலிருந்தவர் கேட்டார், “தம்பி இவ்வளவு டயர்டா இருக்கீங்க. என்ன வேலை பாக்குறிங்க?”

“மாமா வேலை” என்றான்; ஒரு வாழ்நாளுக்கான வெறுப்பை மனதில் தேக்கியவாறு.

டிஸ்கி : ரூல் 46 : மின்வாரியம் அனுமதியளித்தப்டி மின்மோட்டார் மற்றும் உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளாதா என்பதை சோதனை செய்வது. உதவிப் பொறியாளர் நேரில் சோதனை செய்து அதை உறுதி செய்ய வேண்டும்.

.

17 comments

  1. போட்டிக்குத் தீவிரமா தயாராகறீங்களா அண்ணாச்சி? நல்லா வந்திருக்கு.

    அனுஜன்யா

  2. என்னத்த சொல்ல? என்னோட வேலையிலும் நான் அடிக்கடி இது மாதிரி செய்ய வேண்டியிருக்கும்? இதை விட கொஞ்சம் அதிகமாவே!

  3. நல்லா இருக்கு…

    “ரூல் பார்ட்டி சிக்ஸ்” – புரியலயே? எதாவது டெக்னிகல் வார்த்தையா?

  4. //டிபன் ஹவுசுக்கு விடச் சொல்லுப்பா//

    Where is this in CBE?

    What is Rule Party Six?

    ***

    The flow is like Jeffry Archer short story… 😉

  5. நல்லா இருக்கு வேலன்.

    //ஒரு வாழ்நாளுக்கான வெறுப்பை மனதில் தேக்கியவாறு.//

    இந்த வரி வேண்டாம்.

    சுஜாதா நெடி எல்லோருக்கும் டிகாஷன் மாதிரி percolate ஆகி ஓடிக்கொண்டிருக்கிற்து.

    ஆள் செட் பண்ணி லஞ்ச ஊழலில்
    மாட்டப்போகிறானோ என்ற பீலிங் வருகிற்து கதையின் போக்கில்.முடிவு வேறு மாதிரி ஆகிறது.

    சேதுவும் அவன் முதலாளியும் both are also party to this crime.

    “மாமா வேலை” என்று சேது சொன்னதும் அனுதாபம் அவன் மீது வருவது இயற்கை. நகைமுரண்.

    வாழ்த்துக்கள்!

  6. //ஊருக்கு வெளியே கோபித்துக் கொண்டு தனியே போனது மாதிரி //

    கைதட்டினேன் அண்ணாச்சி!

    இது போட்டிக்கா? ஆமென்றால் சுட்டி எங்கே?

    நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் அனுபவப்பட்ட மாதிரி இருக்கிறது!

  7. படிப்பதற்கு ஸ்வாரஸ்யமான சிறுகதை நடை.

  8. //நம்பிக்”கையூட்டி”னான் //

    super anna 🙂

  9. நல்லா இருக்குங்க அண்ணாச்சி. நல்ல flow.அர்த்தமுள்ள கதை.

  10. நல்ல flow. சுவரஷ்யமான நடை ரசித்து வாசித்தேன்

  11. அந்த பின்குறிப்பு இல்லாமலே இருந்திருக்கலாம் அண்ணாச்சி.. போட்டி கதையா..?

  12. நல்ல கதை வடகரை வேலன். சுவாரஸ்யமான நடை. ஆனால் ஆன செலவு கம்பெனியின் செலவுதானே? அதை தன்னுடைய சொந்த பொருளாதாரத்துடன் ஏன் ஒப்பிட வேண்டும்?

  13. கலக்கல் அண்ணாச்சி..

    1500 ரூபாய் (!) போட்டிக்கா???????

  14. நன்றி அனுஜன்யா. போட்டிக்கு வேற கதை. இது முன்னோட்டம்.

    நன்றி சிவா. நிதர்சனம் இதைவிடக் கொடுமையா இருக்கும்.

    நன்றி மகேஷ்.

    நன்றி ராஜு, கோவை டி சாபி ரோடு கிழக்கில் இருக்கு.

    நன்றி ரவி. அந்த வாசகம் தேவைதான் என நான் நினைக்கிறேன்.

    நன்ரி பரிசல்.
    நன்றி நந்தா
    நன்றி அப்துல்
    நன்றி முத்துவேல்
    நன்றி மண்குதிரை
    நன்றி குசும்பன்
    நன்றி சங்கர்
    நன்றி சூரியன்
    நன்றி அமர பாரதி
    நன்றி கார்க்கி

  15. பலரது வாழ்வில் இது நிஜமே!

    கதை சொன்ன விதம் மிக அருமை.

Leave a comment