விமர்சனம்

லூசியா – கன்னடத் திரைப்படம்

Lucia

கன்னடத் திரையுலகில் நடிகராக அறிமுகமான பவன் குமார், ”லைஃபு இஷ்டனே” என்றொரு நகைச்சுவை படமொன்றை இயக்குகிறார். அதன்பின், லூசியா திரைப்படத்திற்கான ஸ்கிரிப்டைத் தயார் செய்துகொண்டு, முன்னணி நடிகர்களை அணுகுகிறார். “இதெல்லாம் ஒரு படமா?” என எல்லோருமே உதறித்தள்ளிவிட, மனம்நொந்து தனது வலைப்பக்கத்தில் இதைப்பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறார். அவரது ரசிகர்கள், நண்பர்கள் என சுமார் 110 பேர் சேர்ந்து 55 லட்சம் ரூபாயை 27 நாட்களில்,  சேகரித்துக் குடுக்கின்றனர்; Crowd Funding என்கிற அடிப்படையில்.

உற்சாகமாகப் படத்தைத் தயாரிக்கிறார்.  அடுத்த சோதனையாக அதை வாங்கி வெளியிட எந்த விநியோகஸ்தரும் தயாராக வரவில்லை. மீண்டும் விரக்தி மேலிட, லண்டன் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்க, அங்கே அது ரசிகர்களால் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. உடனே விநியோகஸ்தர்கள் விழித்துக் கொண்டு ஓடி வர, திரையிட்ட முதல் வாரத்திலேயே 2 கோடி வசூலித்திருக்கிறது.

இதரப் படங்களைப் போல மேலோட்டமாக, அல்லது அசிரத்தையாகப் பார்த்தால் இது உங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. கதை  3 திரிகளாகச் சொல்லப்படுகிறது. மருத்துவமணையில் வெகுநாட்களாக கோமாவில் இருக்கும் நிக்கி, அவனை விடுதலை(கருணைக் கொலை) செய்துவிடத் துடிக்கும் அவனது காதலி, அவளின் நோக்கம் என்ன என்பதை விசாரிக்கும் காவல்துறை, என இதெல்லாம் நடப்பதின் இடையிடையே, நிக்கிக்கு விபத்து எப்படி ஏற்பட்டது என்பதின் முன் கதையைச் சொல்கிறார்கள்.

திரையரங்கொன்றின் பால்கணியில், தாமதமாக வரும் நபர்களை டார்ச் விளக்கின் ஒளியின் உதவியோடு, அழைத்துச் சென்று அவரவர்க்கான இருக்கையில் அமரச் செய்யும் தொழிலாளி  நிக்கி. குறைந்த அளவே படிப்பு, எந்தத் தனிப்பட்ட திறமையும் இல்லாத, பெண் தோழிகளை வசீகரிக்கவியலாதவன். இந்த ஏக்கம் அவன் ஆழ்மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.  இரவில் சரியாக உறக்கம் வருவதில்லை.

அப்படியான ஓரிரவில் வீதியில் நடை பழகுகிறான்,  காவல்துறையினர் அவனைக் கேலி செய்து ஓடவிடுகின்றனர். சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் இருவர் இவனைப் பார்த்து சிரிக்க, இவனது பிரச்சனையத் தெரிந்து கொண்டு “லூசியா” என்ற மாத்திரையை அறிமுகப் படுத்துகிறார்கள். அந்த மாத்திரையின் உதவியால் நல்ல தூக்கமும் கனவும் வருகிறது.

கனவு நமக்கெல்லாம் வருவதுதான். என்றாலும் நிக்கிக்கு, அந்த மாத்திரையின் காரணமாக வரும் கனவு வித்தியாசமாக இருக்கிறது. காலையில் எந்தக் கனவின் இடையில் எழுகிறானோ அதன் தொடர்ச்சியை அன்றைய இரவில் காண்கிறான்; மெகாத்தொடர் போல. கனவில் வருவதெல்லாம், இவன் இயல்வாழ்வில் அடையமுடியாமல் போனவைகளின் நீட்சி. நிக்கிக்கு முன்னணி கதாநாயகன் ஆகவேண்டும் என்பதுதான் ஆசை. அது கனவில் நிறைவேறுகிறது. இவனை கல்யாணம் செய்ய மறுக்கும் பெண், கணவில் இவனிடம் வாய்ப்புக்காக ஏங்கும் நடிகையாக.

இந்தப் படத்தில் நடித்த பெரும்பாலோர், ஒரே படத்தில் இரண்டு வேடங்களைச் செய்கின்றனர். ஒன்று நிஜத்தில், இன்னொன்று நிக்கியின் கனவில். நிக்கி – சினிமாத் தியேட்டர் ஊழியனாக நனவில், முன்னணி நடிகனாகக் கனவில். ஸ்வேதா – பிட்சாக் கடை ஊழியராக நனவில், சினிமா வாய்ப்புக்காக ஏங்கும் மாடலாக கனவில். சங்கரன்னா – தியேட்டர் உரிமையாளராக நனவில், நிக்கியின் மேனேஜராகக் கனவில்.

நனவிற்கும், கனவிற்கு வித்தியாசம் காட்ட, நனவைக் கலரிலும் கனவைக் கருப்பு வெள்ளையிலும் காட்டியிருக்கிறார்கள். மூன்று திரிகளையும், சற்றும் விலகாது கூடவே சென்றால், நல்லதொரு சினிமா அனுபவம்.

படத்திற்கு ஆகச்சிறந்த பங்களிப்பு எடிட்டர் குழுவிடமிருந்து. இத்தனை சவாலான கதையை, மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

நிக்கி போன்ற இளைஞர்களைத் தினவாழ்வில் நாம் எதிர்கொள்கிறோம். அவர்களிடமிருந்து நமக்குத் தேவையான வேலை/சேவையைப் பெற்றுக் கொண்டு அவர்களை உதாசீனப்படுத்தி விடுகிறோம். அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசாபாசங்களும் ஏக்கங்களும் இருக்கும் என்பதைக் கவனிக்க மறந்துவிடுகிறோம்.

பவன் குமாருக்குத் திரை நடிகர்கள் மீது, குறிப்பாக அவர்களது அலட்டல்மீது ஒரு வெறுப்பு இருக்கும் போலிருக்கிறது. நிக்கி கனவில் முன்னணி நடிகனாகிச் செய்யும் அடாவடி அலட்டல்கள் சிரிப்பை வரவழைத்தாலும் அதுதான் உண்மை.

இதைத் தமிழில் “எனக்குள் ஒருவன்” என்ற பெயரில் சித்தார்த் நடித்திருக்கிறார். படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இதற்கடுத்த படமாகத்தான் “U Turn” படத்தை எடுத்திருக்கிறார்.

Advertisements

ஓலைப்பீப்பி -மலையாளத் திரைப்படம்

olappeeppi-movie-review

ஓற்றை வரியில் எழுதிவிடமுடிகிற கதைதான். சிறுவயதில் ஊரைவிட்டு ஓடிப் போகும் உன்னி 30 வருடம் கழித்து வருகிறான். ஒரு நல்ல திரைக்கதை “What if” என்றொரு கேள்வியை முன்வைத்து, அதன் விடையை விரிதெழுதுவதாக இருக்க வேண்டும். இருக்கிறது.

மகுடேஸ்வரனின் கவிதையொன்று இப்படி முடியும்,
வாழ்ந்து கெட்டவர்களின்
வீட்டுக் கொல்லைப் புறத்தில்
இன்றும்
கேட்டுக்கொண்டிருக்கிறது
பெண்களின் விசும்பல் ஒலி.

இதைத்தான் திரைக்கதையாக்கியிருக்கிறார் கிரிஷ் கைமல். செழித்தோங்கி வாழ்ந்த ஆறாம் தரவாட்டின், அதிகப்படியான நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்கிறது அரசு, ஜமீந்தாரி ஒழிப்புச் சட்டத்தின் மூலம். மிஞ்சுவதெல்லாம், ஒரு வீடும் அதைச்சுற்றியுள்ள சிறு நிலமும்.

முத்தஸ்ஸியின் மகன் கோவிந்தன் இருந்த சிறு நிலத்தையும் ராஜப்பனிடம் அடகு வைத்துப் பணம் பெற்று வெளியூர் சென்றிடுகிறான். மகளை ஒரு நம்பூதிரிக்குத் திருமணம் செய்து கொடுக்க, மனிதத்தன்மையே இல்லாத முசுடு நம்பூதிரி, தன் மகன் உன்னியை வெறுக்கிறார், ஜாதக பலன்களைக் காரணம் காட்டி. வேறு வழியில்லாமல், உன்னியை முத்தஸ்ஸியிடம் விட்டு உன்னியின் அம்மாவும் நம்பூதிரியுடன் வேறூருக்குச் செல்ல, 80 வயது முத்தஸ்ஸியும், 8 வயது உன்னி மேனோனும், பந்தலுக்குக் கொடி ஆதரவு என்றாற்போல.

உன்னி மேல் முத்தஸ்ஸிக்கு அளவுகடந்த பிரியம். அவனுக்குச் சமைத்துக் கொடுத்து, குளிக்கச் செல்லும்போது கூடவே சென்று, பள்ளியிலிருந்து வரத் தாமதமானல் வழி நோக்கி நின்று என்று எல்லா அசைவிலும் உன்னியே. “நீ மிடுக்கன், நான்னாயி வரு” என்று சொல்வதை இத்தனை வாஞ்சையுடன் சொல்ல முடியுமா என வியக்க வைக்கிறார் புனசேரி காஞ்சனா. 1970களில் முன்னணி நடிகையாக இருந்தவர், 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வந்திருக்கிறார்.

கூன் விழுந்த உடம்பு, தடி ஊன்றி நடை, கண்சுறுக்கிப் பார்த்தல், விரல்கள நெற்றியில் வைத்து தூரத்தில் வரும் நபரைக் கூர்ந்து நோக்குதல், கால் நீட்டி அமர்தல், பேரனைக் காணாது தவித்தல், தவங்கித் தவங்கி நடத்தல் என அருமையான பாத்திரவார்ப்பு, உன்னி குளத்தில் குளிக்கையில், பாட்டியை எண்ணச் சொல்லிவிட்டு நீருக்குள் முங்குகிறான், எண்ண ஆரம்பிக்கும்போது இருக்கும் பாவத்திற்கும், எண்ணிக்கை அதிகமாக அதிகமாக முகத்தில் கவிழும் பயமும், இறுதியில் “உன்னி, உன்னீ, உன்னீஈஈஈஈ” என அலறும்போதும் காட்டும் பாவமும், அந்தக் காட்சியை எடுத்த இயக்குனரையும், காஞ்சனாவையும் என்ன வார்த்தைச் சொல்லிப் பாராட்டினாலும் தகும்.

மனிதர்களை எடைபோடுவது, நாம் பார்க்கக் கிடைக்கிற நடவடிக்கைகளைக் கொண்டே அமைகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. என்னேரமும் குடி என இருக்கும் கேசவனை உன்னியின் தங்கை சகித்துக் கொள்வது, அவளை மீட்டெடுத்தவன் அவன் என்பதால்; அதை உன்னி அறிய நேரும்போது கேசவன் மீதிருக்கும் வெறுப்பு அன்பாக மாறுவதை அத்தனை இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

தங்கள் வீட்டில் கூலிக்காரனாக இருந்த ராஜப்பன், இன்று அரசியல் படிநிலைகளில் மேலேறி தங்கள் இடதையே வளைத்துக் கொள்வதும், அவனிடமே யாசகம் கேட்க வேண்டிய நிலையும், உன்னி பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற போட்டிகளில் முதலாவதாக வந்ததைக் கௌரவிக்க, தனிப்பட்ட சன்மானமாய் ராஜப்பன் வழங்கும் 21 ரூபாயைக் கொண்டு ரேசன் வாங்கும் நிலையும், எப்படியாயினும் உன்னியை நன்றாய்ப் படிக்க வைக்கும் முத்தஸ்ஸியின் தீர்மானமும் என நல்ல காட்சிப்படுத்துதல்கள்.

சற்று எளிதான வேடங்களிலேயே நடித்துவந்திருக்கும் பிஜு மேனனுக்கு (வளர்ந்த உன்னி) இது ஒரு நல்ல வாய்ப்பு, நியாயம் செய்திருக்கிறார். சின்ன வயது உன்னியாக நடித்திருக்கும் தேவப் ப்ரயகன், ஆச்சர்யமூட்டுகிறார். நடிப்பிற்கு வயதென்பதே கிடையாது என்பதை, காஞ்சனா, பிஜு, தேவப்ரயாகன் ஆகிய மூவர் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர். இது அவரது முதல் முயற்சி என்பதை நம்ப முடியவில்லை என்னால், இன்னும்.

ஒரு பத்திருபது நாட்கள் சொந்த ஊருக்குச் சென்று, நீங்கள் விளையாடிக் களித்த இடம், நண்பர்கள், உறவினர், அண்டை அயலார் என எல்லோரையும் சந்தித்து வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள், எனில் இது ஒரு விர்ச்சுவல் பயணம்.

ஓலைப்பீப்பி, ஓட்டாள், மன்றோ ஐலண்ட் என, வயதானவருக்கும் பேரனுக்கும் இடயேயான உறவுப் படமாகப் பிடிக்கிறது, சமீபமாக. எனக்கும் வயதாகிறதோ?

தீராத ரணம்பைக்கை ஸ்டண்டில் விடும்போதே சிக்னலைக் கவனித்திருக்க வேண்டும். ஏமாந்து விட்டேன்.

“செந்திலா? குமரனா?”

“ஆறாவது வனம்”

“அஙக போடுங்க” என்று சொல்லி ஒரு பார்வை பார்த்தார். அங்கே மொத்தமே 10 வண்டிகள்தான் இருந்தன. சரி நல்ல படத்துக்குக் கூட்டம் குறைவாக வருவது சகஜம்தானே என்று நினைத்துக் கொண்டேன்.

கோடம்பாக்கத்தில் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு நல்ல கதை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கையில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நல்ல கதையைச் சிரமப்பட்டு மிக மோசமாக எடுத்திருக்கிறார்கள்.

இண்டெர்வெல் பிளாக்கில் நல்ல திருப்பமும், க்ளைமேக்ஸில் அதிரடியான முடிவும் கொண்ட ஒரு கதையை இதற்கு மேலும் யாராலும் சொதப்ப முடியாது என்பது போலச் சொதப்பி இருக்கிறார்கள்.

கதாநாயகனாக நடிப்பது மிகச் சுலபம் என்றும் இயல்பாக நடிப்பது எப்படி என்றும் நடித்துக் காட்டி இருக்கிறார் கதாநாயகன். மொத்தப் படத்துக்கும் ஒரே முகபாவம். இந்தப் படத்துக்கு இது போதும் என்று நினைத்திருப்பார் போலும். சில காட்சிகளில் கருப்பாக இருக்கிறார். அடுத்த காட்சிகளில் நல்ல சிவப்பாக இருக்கிறார். கண்டினியூட்டி என்பதுதான் டைரக்சனின் பாலபாடம். இயக்குனர் அதில் நன்றாகக் கோட்டை விட்டிருக்கிறார்.

“மலர், நாளைக்கு நாம சென்னை போறோம்”

“எதுக்கு மாமா?”

“போலிஸ் ஸ்டேசன்ல வரச்சொல்லி இருக்காங்க”

அடுத்த காட்சி போலிஸ் ஸ்டேசன். 3 வயதுக் குழந்தைகூடச் சொல்லி விடும் அது சென்னையிலுள்ள ஒரு போலிஸ் ஸ்டேசன் என்று. இயக்குனர் மிகப் பொறுப்பாகக் கார்டு போடுகிறார் “CHENNAI POLICE STATION”. யாருக்காக இந்தக் கார்டு என்பது அவருக்கே வெளிச்சம். சி கிளாஸ் ஆடியன்சுக்கு என்றால் தமிழில் அல்லவா போட வேண்டும். ஒரு வேளை ஆஸ்கரைக்(!?) குறி வைத்தோ?

இண்டெர்வெல் பிளாக்கில் வரும் திருப்பம் கதைக்கு முக்கியமான ஒன்று. ஆனால் அதை ஏதோ சாதாரண ஒன்று என்பதாகக் காட்டி இருக்கிறார்கள். நாயகன் கையில் இறந்துவிட்ட நாயகியின் அஸ்தி. நாயகியின் சொந்த ஊரில் கரைக்க வேண்டும் என்பதற்காக அஙே வருகிறார். ஆனால் நாயகியை அவள் மாமனுடன் கோவிலில் பார்க்கிறான் நாயகன். நாயகன் முகத்தில் அதிர்ச்சியைக் காட்ட எந்த விதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை இயக்குனர். இந்தக் காட்சியை அமைத்த விதம் மிக மிக மோசம். ரீ ரிக்கார்டிங்கும் ஆகச் சிறந்த சொதப்பல். இசையமைப்பாளர் இன்னும் என்பதுகளிலிருந்து வெளியே வரவில்லை.

காட்சியமைப்பில் ஒன்றைச் சொல்லுவார்கள். ஒரு காட்சியின் முடிவில் ஒரு லின்க் வைக்க வேண்டும் சிறிது நேரம் கழித்து அடுத்த காட்சி வரும்போது இந்தக் காட்சியுடன் தொடர்பு படுத்தவும், விட்ட இடத்திலிருந்து தொடரவும் அது உதவ வேண்டும். அதே போல ஒரு காட்சியின் தொடக்கம் அதற்கு முன் விட்ட இடத்திலிருந்து எந்தத் தொய்வுமில்லாது தொடங்க வேண்டும். அப்படி எல்லாம் இல்லாமல் ஒரு பின் நவீனத்துவத் திரைப்படம் போல் எடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் எடிட்டரைச் சந்தித்து ஒரே ஒரு கேள்விதான் கேட்கவேண்டும். “எப்படிங்க?”. அசாத்தியத் திறமை இருக்கும் ஒருவரால்தான் இதைத் தொகுத்திருக்கவே முடியும்; பாவம் அவர்.

விஸ்காம் படிக்கும் இளைஞர்களே சிறந்த குறும்படங்களை படைத்துக் கொண்டிருக்கையில் , தொழில்நுட்பத்தையும் தேவையான பணத்தையும் கைவசம் வைத்துக் கொண்டு விழலுக்கிறைத்துவிட்டார்கள்.

பொதுவாக ஒரு படைப்பிற்குப் பின் உள்ள உழைப்பை மதிக்க வேண்டும் என்றே நான் வாதிட்டு வந்திருக்கிறேன்; இதுவரை. இந்தப் படம் ஒரு விதிவிலக்கு.

ஆறாவது வனம் – தீராத ரணம்.

ஆயிரத்தில் ஒருவன் – நன்றி செல்வா

.

தமிழில் ஃபேண்டசிப் படங்கள் இரண்டே வகைதான். மாயா ஜால விட்டலாச்சார்யா வகை மற்றும் ராமநாராயணன் வகைக் கடவுள் படங்கள். சமீபத்தில் வந்த ஈரம் வித்தியாசமான விதிவிலக்கு.

தற்பொழுது வரும் தமிழ் மொழியாக்கப் படங்கள் ஓரளவுக்கு ஓக்கே என்றாலும் கோட்டும் டையும் அணிந்த ஒருவன் சென்னை பாஷை அல்லது பொருந்தாத பழமொழிகளைக் கொண்டு வட்டார வழக்கில் பேசுவது எரிச்சல் ஊட்டுகிறது.

இந்தப் பின்புலத்தில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு நல்ல முயற்சி. இரண்டு விஷயங்களுக்காக செல்வராகவனைப் பாராட்ட வேண்டும். இது போல ஒரு ஃபேன்டசிக் கதையை எடுக்க நினைத்ததற்காகவும், அதை சிறப்பாக எடுத்ததற்காகவும்.

ஆயிரத்தெட்டு லாஜிக் ஓட்டைகளை இப்பொழுது சொல்ல முடியும் என்றாலும் படம் பார்க்கும் பொழுது அடுத்து என்ன என்ற ஆவலும், படத்தை பிரசெண்ட் செய்த விதமும் அதை மறக்கடித்திருப்பது உண்மை.

தொல் பொருள் ஆராய்ச்சியும், அதன் சாதக பாதகங்களும் ஆங்கிலப் படங்கள்மூலம் ஏறகனவே பார்த்ததுதான் என்றாலும் ஆரம்பக் காட்சிகளே அசத்தலாக இருக்கின்றன. குறிப்பாக சட் சட் என மாறும் காட்சியமைப்பு.

படத்தின் கதை என்ன என்பது கிட்டத்தட்ட மனப்பாடப் பகுதி செய்யுள் போல எல்லோரும் ஒரு முறை சொல்லி விட்டார்கள். படத்தில் எனக்குப் பிடித்த அம்சங்களாக நான் கருதுவது:-

1. கார்த்தியின் பாத்திரப் படைப்பு. சுஜாதா கதையில் வரும் வசந்தைப் போல. கதையோட்டத்தில் தன் தனித்தன்மையை இழந்து முக்கியமானவனாக மாறுவது. (முத்துக்குமரன் பாத்திரத்திற்கு சரியான ஆசாமி யாராவது அந்தக் கதையை முயலலாம் கார்த்தியை வைத்து)

2. தமிழ்த் திரைப் படங்களில் பெரும்பாலும் கதாநாயகர்களை ஒட்டியே பெண் பாத்திரங்கள் சித்தரிக்கபடும். மாறாக இப்படத்தில் பெண்பாத்திரங்கள் இரண்டுமே தன்னிச்சையாக சுய சிந்தனை உள்ளவர்களாக வேறு ஒரு நோக்கம் உள்ளவர்களாகக் காட்டியிருப்பது.

3. லாஜிக் என்ற வஸ்து கடைசி வரை எங்குமே தட்டுப்படாமல் இருப்பதை கதையின் ஓட்டத்திலும் காட்சிப்படுத்துதலிலும் மறக்கடித்திருப்பது. அடுத்து என்ன என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறதே தவிர. லாஜிக் இடிப்பது தெரியவில்லை.

4. எது நிகழ்காலம், எது கனவுலகம் எனத் தெரியாமல் ஒன்றிலிருந்து ஒன்று என முன் பின்னாகச் சென்று வரும் ஃபேண்டசித்தன்மை.

5. மிக நேர்த்தியான ஒளிப்பதிவு, நகரம், காடு, மலை, பாலைவனம், நீர் நிலை என அனைத்துப் பிரதேசங்களையும் அருமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

செல்வாவிடம் கேட்கச் சில கேள்விகள்.

1. ஜி வி பிரகாஷிடம் இன்னும் நன்றாக வேலை வாங்கயிருக்கலாமே?

2. சோழ மக்களைக் காண்பிக்கும்போது இருக்கும் இருட்டுக்கு என்ன குறியீடு. ஏன் அவர்களைக் கறுப்பர்களாகக் காட்ட வேண்டும்?

வடவள்ளி ஸ்ரீராம் தியேட்டரில்தான் இப்படத்தைப் பார்த்தேன். வழக்கமாக நக்கல் நையாண்டி என படத்தின் இடை இடையே கத்தும் கூட்டம் அமைதியாகப் படம் பார்த்தது ஆச்சர்யமானது. படம் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். வெளிவரும்போது குடும்பப் பெண்கள் பேச்சிலிருந்து (”இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கு”) படம் அவர்களுக்கும் பிடித்திருக்கிறது எனத் தெரிகிறது.

ஹாலிவுட் திரைப்படங்களை DVDயில் பார்த்து ரசிக்கும் மேல்தட்டு மக்களுக்கு இப்படம் பிடிக்காமல் இருக்கலாம். எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. DVD கிடைத்தாலும் மொழிப் பிரச்சினை இருக்கிறது. எனவே என்னைப் போன்ற மத்திய தர ரசனை உள்ள ஆசாமிகளுக்கு இந்தப் படம் பிடித்திருக்கிறது.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி செல்வா.

.

உங்களைப் போல் ஒருவன் அல்லது உங்களில் ஒருவன்

ர்விங் வாலஸ் எழுதிய செகண்ட் லேடி புத்தகத்தை வாசித்திருப்பீர்கள். அதில் அமெரிக்கப் பிரசிடெண்டின் மனைவியைக் கடத்தி வைத்துக் கொண்டு அவருக்குப் பதிலாக வேறொரு பெண்ணை அவரது இடத்தில் அனுப்பி விடுவார்கள். ஆள்மாறாட்டம் ஏற்படுத்தும் சம்பவங்கள் சுவையான நாவலாக விரியும்.

ஒரு நாட்டின் பிரசிடெண்டைக் கதாபாத்திரமாக வைத்தெல்லாம் நாவல் எழுதுகிறார்களே அதே போல தமிழில் சாத்தியமா என்று வியந்திருக்கிறேன். சுஜாதா சில முயற்சிகள் செய்தார் எனினும் அதை பூடகமாகவே செய்ய வேண்டிய நிர்பந்தமிருந்தது அவருக்கு.

முதல்வனில், முதலமைச்சர் திருக்குறள் சொல்லும் தமிழறிஞராக வந்தது சர்ச்சையைக் கிளப்பியது ஞாபகமிருக்கக்கூடும். அதன் காரணமாகவே ரஜனி அப்படத்தைத் தவிர்த்தார் எனவொரு பேச்சும் உண்டு.

உன்னைப் போல் ஒருவனில் நடித்திருக்கும்(!?) முதலமைச்சர் குரல் நல்ல முயற்சி. அந்த வசனங்களும் கத்தி மேல் நடப்பது போலத்தான். குறிப்பாக , “ இது நமது தேர்தல் வெற்றியைப் பாதிக்காதே ?” எனக் கேட்கும்போது உண்மைக்கு வெகு அருகில் எழுதப் பட்ட வசனம் இதுவாகத்தான் இருக்கக்கூடும். அக்குரலில் வெளிப்பட்ட வசனங்கள் யாவும், சம்பவம் உண்மையாக நடந்திருந்தால் இம்மி பிசகாமல் இப்படித்தான் இருந்திருக்கும் என்பது போல இருந்தது.


திரைப்படத்தைத் திரைப் படமாகப் பார்க்காமல் ஏதோ சமுதாய விரோதச் செயல் செய்து விட்டது போல வந்த விமர்சனங்கள் ஒட்ட மறுக்கின்றன. இப்படம் தீவிர வாதத்தைப் போதிக்கிறது பார்த்தவன் தீவிரவாதியாகிவிடும் அபாயம் இருக்கிறதென்றெல்லாம் கூக்க்குரல். எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள் ”எதால சிரிக்கதுன்னு யோசிக்கிறேன்” என்று. தமிழ்ப் படத்தின் வில்லன் இறுதியில் சாகிறான் அல்லது குறந்தபட்சம் நல்லவனாக மாறுகிறான். அதன்படி தமிழகமே நல்லவர்களின் கூடாரமாக இருந்திருக்க வேண்டுமல்லவா?

இன்னொரு வியாதி படைப்பை விமர்சிக்காமல் படைப்பாளியை விமர்சிப்பது. கமல் எப்படி நல்ல படம் எடுக்க முடியும்? அவர்தான் அவாளாயிற்றே? ரக விமர்சனங்களை எழுதியவர்கள் மன நோய்க்கு ஆட்பட்டவர்களேயன்றி வேறெப்படி இருக்க முடியும்?

அடுத்த முறை கமல் படம் எடுக்குமுன் இந்த அய்யாசாமிகளிடம் அக்மார்க் முத்திரை பெற முயற்சிப்பது நல்லது. ஏனெனில் படத்துக்குச் சென்ஸார் சர்டிஃபிகேட் கிடைக்கிறதோ இல்லையோ இந்த அறிவு(இல்லாத) ஜீவிகளின் முத்திரை முக்கியம்.

இந்த இடம் எனக்குப் பிடிக்கவில்லை, இந்த இடம் லாஜிக் உதைக்கிறது என உருப்படியாக எழுதுங்கள். அதை விட்டு விட்டு கமல் ”மூலம்” வந்தவ்ர் போல நடக்கிறார் என எழுதுவது முறையா? இந்தளவுக்கு வேறெந்தச் சமுதாயமும் கலைஞன் மீதான தனிமனித வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதில்லை.

தான் பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் வலியையும் வேதனைகளையும் உள்வாங்கி, அதை உரமாக்கிக் கொண்டு அடுத்த படைப்பைத் தரும் கலைஞனுக்குக் குறைந்த பட்ச மரியாதை செய்யாவிட்டால்கூடப் பரவாயில்லை; தயவு செய்து அவமரியாதை செய்யாதீர்கள். இதை எல்லாக் கலைஞனுக்கும் பொதுவாகத்தான் சொல்கிறேன்.

உங்களுக்குப் பிடிக்கவில்லையா பிடிக்கவில்லை என எழுதுங்கள். எப்படி இப்படியெல்லாம் எடுக்கலாம் எனக் கேள்வி கேட்கும் அதிகாரம் யார் வழங்கியது? ஒரு பைசாகூடச் செலவு செய்யாமல் கூகிள் வழங்கும் இலவச தளத்தில் இருந்து கொண்டு கூப்பாடு போடுபவர்கள் கோடிகளில் செலவு செய்து எடுக்கப் பட்ட படத்தை குப்பை எனச் சொல்வதில் இருக்கும் நகைமுரண் அயற்சியை ஏற்படுத்துகிறது.

கேபிள் சங்கர் போன்ற துறைசார்ந்தவர்கள் எழுதும் விமர்சனத்திற்கும் பிறர் எழுதிய விமர்சனத்திற்கும் உள்ள வித்தியாசங்களைப் பாருங்கள். எதை வேண்டுமானாலும் என் தளத்தில் எழுதுவேன் என்பது உங்கள் உரிமையானாலும் அடுத்தவனைப் பற்றிய அவதூறு எழுதுமுன் ஒரு நொடியாவது யோசியுங்கள். ஏனெனில் அக்கலைஞனும் உங்களைப் போல் ஒருவன் அல்லது உங்களில் ஒருவன்.

ற்றபடி, படம் இஸ்லாமியச் சகோதரர்களை வன்முறையாளர்கள் எனச் சித்தரிக்கிறது என்பது சொத்தை வாதம். ஏனெனில் படத்தயாரிப்பில் இஸ்லாமியச் சகோதரர்களும் பங்களித்திருக்கின்றனர். அதைவிட முக்கியம் ஹிந்தியில் கமல் வேடத்தைச் செய்திருந்தவர் நஸ்ருதீன் ஷா. இந்தச் சுட்டியில் முக்கிய பங்களிப்பைச் செய்தவர்களின் பெயர்கள் இருக்கிறது.

வடவள்ளி காளிதாஸ் திரையரங்கில்தான் இப்படத்தைப் பார்த்தேன். குத்துப் பாட்டும், கேலிக்கூத்தான காமெடிகளும், பறந்து பறந்து தாக்கும் (பூமியின் ஆகர்ஷண சக்தியைப் பரிகசிக்கும்) சண்டைகளுமற்ற ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி அரங்கை விட்டு வெளியே வருபவர்கள் பேசுவதிலிருந்த பொதுவான கருத்து.

”I’ve failed over and over and over again in my life and that is why I succeed” Michael Jordan. மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் கமலுக்கு என் வணக்கங்கள்.

இவ்விரண்டு விமர்சனங்களும் என்னைக் கவர்ந்தவை. படத்தைப் பாராட்டியதற்காக அல்ல. நல்ல நடைக்காகவும், நேர்மையாகத் திரைப் படத்தை அலசியிருப்பதற்காகவும்.

பரிசல் காரன்

ஆதிமூலகிருஷ்ணன்

டிஸ்கி : தமிழகத்தில் பிறக்காமல் போயிருந்தால் மேற்கு வங்கத்தில் பிறக்கத்தான் ஆசைப் பட்டிருப்பேன் என்பார் என் தந்தை. ஏனெனில் இவ்விரண்டு மாநிலங்கள்தான் கலைஞர்களைக் கொண்டாடியவை என்பதவரது அபிப்ராயம். நல்ல வேளை அவர் இன்று இல்லை.

.

கதம்பம் – 17/08/08

புளிக்காய்ச்சல்
பூம்பருப்பு (கடலப் பருப்பு வேகவைத்துத் தாளித்தது)
கோஸ் பொரியல்
புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு
உருளைக்கிழங்கு பொரியல்.
இனிப்பு பூந்தி
சிப்ஸ்
அப்பளம்
வடை
சாதம்
பருப்பு + நெய்
சாம்பார்
ரசம்
பாயசம்
மோர்

இதெல்லாம் கல்யாணச் சாப்பாடு இல்லீங்க. நேற்று மதுரையில் ஒரு குடும்பத்தில் 10 ஆம் நாள் காரியத்திற்குப் போயிருந்தபோது நான் சாப்பிட்டதுதான்.

இப்படியா துக்கம் கொண்டாடு(!)வது? இறந்தவர் 65 வயதுப் பெண்மணி. அவரது நினவை யாரும் போற்றியது போலத் தெரியவில்லை. பேசியதெல்லாம் அரசியலும், கிரிக்கெட்டும்தான். இதில் சாப்பாட்டில் குறை சொன்னதுதான் மனதை நெருடுகிறது.

**********************************************

மதுரைக்குப் போகும்போது ரன் படமும், திரும்பி வருபோது வின்னர் படமும் பார்த்தேன். முன்னதில் விவேக் காமெடி, பின்னதில் வடிவேல்.

இருவர் காமெடியையும் ஒப்பிட்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.

விவேக் காமெடிக்காக பிறரை இழிவுபடுத்தத் தயங்குவதில்லை. அண்டங்காக்கா, தொழுவத்தில் கட்ட வேண்டியது என்று கொஞ்சம்கூட மரியாதையே இல்லாமல் அப்பாவையே நக்கலடிக்கிறார். மற்றவர்களையும் அவ்வாறே – (கிராஜுவேட் பாடியக் கரக்ட் பண்ணுறியா?). எல்லோரையையும் ஏளனமாகத்தான் அழக்கிறார்.

ஆனால், வடிவேல் (கைப்புள்ள) தனனை இழிவுபடுத்திக் கொண்டு நம்மை நகைக்க வைக்கிறார். ஒவ்வொரு முறையும் ஏதாவது இக்கட்டில் மாட்டிக் கொண்டு நம்மை சிரிக்க வைக்கிறார். மற்றவர்கள்தான் அவரை ஏளனமாக அழைக்கிறார்கள்.

டனால் தங்கவேலு திரைப்படத்தில்கூட யாரையும் இழிவுபடுத்தி அழைக்க மாட்டாராம். அவரது காமெடியெல்லாம் மிகவும் டீசெண்டாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது ‘எழுத்தாளர் பைரவன்’ (கல்யாணப்பரிசு) காமெடிதான்.

இப்ப இருப்பதில் வடிவேலுதான் தாக்குப் பிடிக்கிறார். விவேக்கின் காமெடி ட்ராக்குகளை எழுதிய பிரசன்னக்குமார் இறந்துவிட்டார். வேறு நல்ல ஆள் கிடைக்கும்வரை விவேக் நிலை கவலைதான்.

*****************************************************

தசாவதாரத்திற்குமுன் சிவாஜி 9 வேடங்களில் நடித்த நவராத்திரிதான் ஒருவர் அதிகபட்ச வேடங்களில் நடித்தது என்று நினைத்திருந்தேன், இந்தச் செய்தியைக் ‘காலச் சுவடு’ பத்திரிக்கையில் படிக்கும்வரை. (எழுதியவர் – எஸ்.சட்டநாதன், நெல்லை)

தமிழில்
1941-ல் ‘ஆர்யமாலா’ பி யூ சின்னப்பா 10 வேடங்கள்
1950-ல் ‘திகம்பர சாமியார்’ எம் என் நம்பியார் 12 வேடங்கள்

ஹாலிவுட்டில்
1913 ‘குயின் விக்டோரியா’ ரோல்ப் லெஸ்லீ 27 வேடங்கள்
1915 பர்த் ஆஃப் எ நேஷன்’ ஜோஸப் ஹான்பெர்ரி 14 வேடங்கள்
1929 ‘ஒன்லி மீ’ லுபினோ லேன் 24 வேடங்கள்
1964 ‘ நோ கொஸ்டின்ஸ் ஒன் சாட்டர்டே ராபர்ட் ஹிர்ஷ் 12 வேடங்கள்.

டோண்டு, சுப்பையா போன்ற இளைஞர்கள் மேலதிகத் தகவல்கள் தருவார்களா?

***********************************************

ஏனென்றால், Betrayal can only happen if you are in love என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. காதலை விட வேறு எந்த இடத்திலும் துரோகத்தின் வலிமை அவ்வளவு தீவிரமாகவும், கடுமையாகவும் இருப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலான கொலைகள் காதலை முன்வைத்து நடக்கின்றன.

படத்தில் நடக்கும் அத்தனை கொலைகளுக்கும் காரணமாக இருப்பது ஒரு பெண்ணின் வார்த்தைகள்தான். எக்ஸ் கவுன்ஸிலராக இருக்கும் கனகுவின் அண்ணனுக்கு அவர் எதிர்பார்த்த படி கட்சித் தலைவர் பதவி கிடைக்காததால் மிகவும் நொந்து போய்க் கிடக்கிறார். அப்போது அவர் மனைவி “இவரும் உக்கார்ந்து கிட்டு இருக்கார் பதவி வரும் வரும்னுட்டு; எங்கே வந்துது? கோவில் திருவிழா அன்னிக்குக் கூட வெளியே தலை காட்ட முடியாம பொம்பளை மாதிரி மொட்ட மாடில போய் ஒளிஞ்சுக் கிட்டு இருந்தார் ” என்று பலவாறாகப் பேசி அவமானப் படுத்துகிறாள். இந்தப் பேச்சுதான் கனகுவை உசுப்பி விடுகிறது. ” வீட்டில் பெண்கள் கூட நம்மை மதிக்க மாட்டேன் என்கிறார்கள்; இனிமேல் வாழ்ந்து என்ன பயன்? ” என்று அழகரிடம் சொல்லி அவனையும் பரமனையும் தங்கள் எதிரியைத் தீர்த்துக் கட்டத் தூண்டிவிடுகிறான். இரண்டு சாதாரண இளைஞர்கள் கொலைகாரர்களாக மாறி அந்தக் கொலை இறுதியில் கொல்லப் படுவதற்கு எக்ஸ் கவுன்ஸிலரின் மனைவியின் ஒரே ஒரு பேச்சுதான் காரணமாய் அமைகிறது.

சுப்பிரமணியபுரம் விமர்சனம் – சாரு நிவேதிதா

பாலபாரதியின் புத்தகம் – விமர்சனங்கள்


தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பீர்களா? ‘ஆமாம், ஒரே ஒரு முறை நினைத்திருக்கிறேன்’ என்று சொல்பவர்கள் நம்மில் அனேகர் உண்டு.

உடலளவில் ஆணாகவும், மனத்தளவில் பெண்ணாகவும் இருக்கும் சிலருக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்? தினம் தினம் செத்துப் போகலாம் என்று நினைத்துக் கொண்டே வாழ்க்கையை எப்படியாவது முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே இவர்கள்.

தங்கள் வாழ்க்கையின் அவலத்தைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு திருநங்கை – வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டாள். அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வருகிறது.

எனது தந்தையின் மரணமும், தங்கையின் மரணமும் என்னை உலுக்கியதைவிட அந்தத் திரு நங்கையின் தற்கொலை என்னை அதிகம் நிலைகுலைய வைத்தது. இதைவிட சோகம் அந்தத் தற்கொலைச் சம்பவம், காவல்துறைப் பதிவுகளில் விபத்து என்றே பதிவு செய்யப் பட்டது.

பெண்களாகவும் இல்லாமல், ஆண்களாகவும் இல்லமல் திருநங்கைகளாக மாறியவர்களுக்கு வாழக்கையின் மீது இருக்கும் தீராக் காதலே இந்தப் புனைவு. – பின் அட்டை.

(‘அவன் – அது = அவள்’, எழுதியவர், யெஸ். பாலபாரதி, பக்கம், 184, விலை: ரூ. 120/-, தோழமை வெளியீடு, 5ஈ, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை)

பைத்தியக்காரனின் விமர்சனம்இங்கே
சேவியரின் விமர்சனம்இங்கே
லக்ஷ்மியின் விமர்சனம்இங்கே

பாலபாரதியின் புத்தகம் – விமர்சனங்கள்


தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பீர்களா? ‘ஆமாம், ஒரே ஒரு முறை நினைத்திருக்கிறேன்’ என்று சொல்பவர்கள் நம்மில் அனேகர் உண்டு.

உடலளவில் ஆணாகவும், மனத்தளவில் பெண்ணாகவும் இருக்கும் சிலருக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்? தினம் தினம் செத்துப் போகலாம் என்று நினைத்துக் கொண்டே வாழ்க்கையை எப்படியாவது முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே இவர்கள்.

தங்கள் வாழ்க்கையின் அவலத்தைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு திருநங்கை – வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டாள். அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வருகிறது.

எனது தந்தையின் மரணமும், தங்கையின் மரணமும் என்னை உலுக்கியதைவிட அந்தத் திரு நங்கையின் தற்கொலை என்னை அதிகம் நிலைகுலைய வைத்தது. இதைவிட சோகம் அந்தத் தற்கொலைச் சம்பவம், காவல்துறைப் பதிவுகளில் விபத்து என்றே பதிவு செய்யப் பட்டது.

பெண்களாகவும் இல்லாமல், ஆண்களாகவும் இல்லமல் திருநங்கைகளாக மாறியவர்களுக்கு வாழக்கையின் மீது இருக்கும் தீராக் காதலே இந்தப் புனைவு. – பின் அட்டை.

(‘அவன் – அது = அவள்’, எழுதியவர், யெஸ். பாலபாரதி, பக்கம், 184, விலை: ரூ. 120/-, தோழமை வெளியீடு, 5ஈ, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை)

பைத்தியக்காரனின் விமர்சனம்இங்கே
சேவியரின் விமர்சனம்இங்கே
லக்ஷ்மியின் விமர்சனம்இங்கே