பரிசல்

உங்களைப் போல் ஒருவன் அல்லது உங்களில் ஒருவன்

ர்விங் வாலஸ் எழுதிய செகண்ட் லேடி புத்தகத்தை வாசித்திருப்பீர்கள். அதில் அமெரிக்கப் பிரசிடெண்டின் மனைவியைக் கடத்தி வைத்துக் கொண்டு அவருக்குப் பதிலாக வேறொரு பெண்ணை அவரது இடத்தில் அனுப்பி விடுவார்கள். ஆள்மாறாட்டம் ஏற்படுத்தும் சம்பவங்கள் சுவையான நாவலாக விரியும்.

ஒரு நாட்டின் பிரசிடெண்டைக் கதாபாத்திரமாக வைத்தெல்லாம் நாவல் எழுதுகிறார்களே அதே போல தமிழில் சாத்தியமா என்று வியந்திருக்கிறேன். சுஜாதா சில முயற்சிகள் செய்தார் எனினும் அதை பூடகமாகவே செய்ய வேண்டிய நிர்பந்தமிருந்தது அவருக்கு.

முதல்வனில், முதலமைச்சர் திருக்குறள் சொல்லும் தமிழறிஞராக வந்தது சர்ச்சையைக் கிளப்பியது ஞாபகமிருக்கக்கூடும். அதன் காரணமாகவே ரஜனி அப்படத்தைத் தவிர்த்தார் எனவொரு பேச்சும் உண்டு.

உன்னைப் போல் ஒருவனில் நடித்திருக்கும்(!?) முதலமைச்சர் குரல் நல்ல முயற்சி. அந்த வசனங்களும் கத்தி மேல் நடப்பது போலத்தான். குறிப்பாக , “ இது நமது தேர்தல் வெற்றியைப் பாதிக்காதே ?” எனக் கேட்கும்போது உண்மைக்கு வெகு அருகில் எழுதப் பட்ட வசனம் இதுவாகத்தான் இருக்கக்கூடும். அக்குரலில் வெளிப்பட்ட வசனங்கள் யாவும், சம்பவம் உண்மையாக நடந்திருந்தால் இம்மி பிசகாமல் இப்படித்தான் இருந்திருக்கும் என்பது போல இருந்தது.


திரைப்படத்தைத் திரைப் படமாகப் பார்க்காமல் ஏதோ சமுதாய விரோதச் செயல் செய்து விட்டது போல வந்த விமர்சனங்கள் ஒட்ட மறுக்கின்றன. இப்படம் தீவிர வாதத்தைப் போதிக்கிறது பார்த்தவன் தீவிரவாதியாகிவிடும் அபாயம் இருக்கிறதென்றெல்லாம் கூக்க்குரல். எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள் ”எதால சிரிக்கதுன்னு யோசிக்கிறேன்” என்று. தமிழ்ப் படத்தின் வில்லன் இறுதியில் சாகிறான் அல்லது குறந்தபட்சம் நல்லவனாக மாறுகிறான். அதன்படி தமிழகமே நல்லவர்களின் கூடாரமாக இருந்திருக்க வேண்டுமல்லவா?

இன்னொரு வியாதி படைப்பை விமர்சிக்காமல் படைப்பாளியை விமர்சிப்பது. கமல் எப்படி நல்ல படம் எடுக்க முடியும்? அவர்தான் அவாளாயிற்றே? ரக விமர்சனங்களை எழுதியவர்கள் மன நோய்க்கு ஆட்பட்டவர்களேயன்றி வேறெப்படி இருக்க முடியும்?

அடுத்த முறை கமல் படம் எடுக்குமுன் இந்த அய்யாசாமிகளிடம் அக்மார்க் முத்திரை பெற முயற்சிப்பது நல்லது. ஏனெனில் படத்துக்குச் சென்ஸார் சர்டிஃபிகேட் கிடைக்கிறதோ இல்லையோ இந்த அறிவு(இல்லாத) ஜீவிகளின் முத்திரை முக்கியம்.

இந்த இடம் எனக்குப் பிடிக்கவில்லை, இந்த இடம் லாஜிக் உதைக்கிறது என உருப்படியாக எழுதுங்கள். அதை விட்டு விட்டு கமல் ”மூலம்” வந்தவ்ர் போல நடக்கிறார் என எழுதுவது முறையா? இந்தளவுக்கு வேறெந்தச் சமுதாயமும் கலைஞன் மீதான தனிமனித வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதில்லை.

தான் பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் வலியையும் வேதனைகளையும் உள்வாங்கி, அதை உரமாக்கிக் கொண்டு அடுத்த படைப்பைத் தரும் கலைஞனுக்குக் குறைந்த பட்ச மரியாதை செய்யாவிட்டால்கூடப் பரவாயில்லை; தயவு செய்து அவமரியாதை செய்யாதீர்கள். இதை எல்லாக் கலைஞனுக்கும் பொதுவாகத்தான் சொல்கிறேன்.

உங்களுக்குப் பிடிக்கவில்லையா பிடிக்கவில்லை என எழுதுங்கள். எப்படி இப்படியெல்லாம் எடுக்கலாம் எனக் கேள்வி கேட்கும் அதிகாரம் யார் வழங்கியது? ஒரு பைசாகூடச் செலவு செய்யாமல் கூகிள் வழங்கும் இலவச தளத்தில் இருந்து கொண்டு கூப்பாடு போடுபவர்கள் கோடிகளில் செலவு செய்து எடுக்கப் பட்ட படத்தை குப்பை எனச் சொல்வதில் இருக்கும் நகைமுரண் அயற்சியை ஏற்படுத்துகிறது.

கேபிள் சங்கர் போன்ற துறைசார்ந்தவர்கள் எழுதும் விமர்சனத்திற்கும் பிறர் எழுதிய விமர்சனத்திற்கும் உள்ள வித்தியாசங்களைப் பாருங்கள். எதை வேண்டுமானாலும் என் தளத்தில் எழுதுவேன் என்பது உங்கள் உரிமையானாலும் அடுத்தவனைப் பற்றிய அவதூறு எழுதுமுன் ஒரு நொடியாவது யோசியுங்கள். ஏனெனில் அக்கலைஞனும் உங்களைப் போல் ஒருவன் அல்லது உங்களில் ஒருவன்.

ற்றபடி, படம் இஸ்லாமியச் சகோதரர்களை வன்முறையாளர்கள் எனச் சித்தரிக்கிறது என்பது சொத்தை வாதம். ஏனெனில் படத்தயாரிப்பில் இஸ்லாமியச் சகோதரர்களும் பங்களித்திருக்கின்றனர். அதைவிட முக்கியம் ஹிந்தியில் கமல் வேடத்தைச் செய்திருந்தவர் நஸ்ருதீன் ஷா. இந்தச் சுட்டியில் முக்கிய பங்களிப்பைச் செய்தவர்களின் பெயர்கள் இருக்கிறது.

வடவள்ளி காளிதாஸ் திரையரங்கில்தான் இப்படத்தைப் பார்த்தேன். குத்துப் பாட்டும், கேலிக்கூத்தான காமெடிகளும், பறந்து பறந்து தாக்கும் (பூமியின் ஆகர்ஷண சக்தியைப் பரிகசிக்கும்) சண்டைகளுமற்ற ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி அரங்கை விட்டு வெளியே வருபவர்கள் பேசுவதிலிருந்த பொதுவான கருத்து.

”I’ve failed over and over and over again in my life and that is why I succeed” Michael Jordan. மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் கமலுக்கு என் வணக்கங்கள்.

இவ்விரண்டு விமர்சனங்களும் என்னைக் கவர்ந்தவை. படத்தைப் பாராட்டியதற்காக அல்ல. நல்ல நடைக்காகவும், நேர்மையாகத் திரைப் படத்தை அலசியிருப்பதற்காகவும்.

பரிசல் காரன்

ஆதிமூலகிருஷ்ணன்

டிஸ்கி : தமிழகத்தில் பிறக்காமல் போயிருந்தால் மேற்கு வங்கத்தில் பிறக்கத்தான் ஆசைப் பட்டிருப்பேன் என்பார் என் தந்தை. ஏனெனில் இவ்விரண்டு மாநிலங்கள்தான் கலைஞர்களைக் கொண்டாடியவை என்பதவரது அபிப்ராயம். நல்ல வேளை அவர் இன்று இல்லை.

.

Advertisements

கதம்பம் – 17/07/09

பரிசல் காரன் – கிருஷ்ணாவை வேறெவரையும் விடச் சற்றதிகமாக தெரியுமெனக்கு. அவர்கள் நிறுவனத்தில் வேலைப்பளு காரணமாக் என்னுடன் உரையாடுவதைக் கூடக் குறைத்துக் கொண்டார். வலைப்பக்கமும் அதிகமாகக் காண முடியவில்லை. செப்டம்பர் வரை வரும் எல்லா ஞாயிறுகளிலும் வேலை செய்தால்தான் கையில் இருக்கும் ஆர்டரை குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். சென்ற வாரம் நாங்கள் ஏறபாடு செய்திருந்த டூருக்கும் வரவில்லை.

இந்த நிலையில்தான் தமிழ்மண நட்சத்திரமானார். எப்படிச் சமாளிக்கப் போகிறார் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவுகளைக் குறைத்துக் கொண்டார். எங்கே பதிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலையில் கவனக் குறைவாக இருந்து விடுவாரோ என்ற என் எண்ணத்தை புரிந்து கொண்டவர் போலவே நடந்துகொண்டார். அது சரி எப்பொழுதும் இருக்கும் துருவ நட்சத்திரம்தானே அவர்.
முன்னுரிமை அளிக்க வேண்டியது எது என்ற தெளிவோடு இருக்கும் அவரைப் பாராட்டுகிறேன்.

***********************************************************************************

அரசாங்க மருத்துவமனைகளில் இலவச இருதய அறுவை சிகிச்சை பெற உங்கள் வருட (கவனிக்கவும் வருட) வருமானம் ரூ 12,000 க்கும் குறைவானது என கிராம நிர்வாக அலுவலர் சான்றளிக்க வேண்டும். உண்மை வேறாக இருந்தாலும் கி நி அ வாங்குவதை வாங்கிக் கொண்டு சான்றளித்து விடுவார். அதைக் கொடுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள்.

ஆனால் புதிதாக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது கி நி அ க்களுக்கு. அதன்படி யாருக்கும் ரு.24000க்கு குறைவாக வருமானச் சான்றிதழ் வழங்கக் கூடாதாம்.

இதற்கு இலவச அறுவைச் சிகிச்சை நிறுத்தம் என அறிவித்திருக்கலாம்.

**********************************************************************************

டெல்லி மெட்ரோ வேலைகளில் ஏற்பட்ட விபத்து துரதிருஷ்டமானது. ஆனால் மற்ற அரசியல்வாதிகளைப் போலல்லாமல் உடனே ஸ்பாட்டுக்கு வந்து ஆறுதலளித்ததும் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ததும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் மீதான நல்லெண்ணத்தை அதிகரித்தது.

அரசு அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது சரியான முடிவு. இவரைப் போன்றவர்களையும் அனுப்பி விட்டால் அவரை ஆதர்சமாகக் கொண்டு செயல்படும் மற்றவர்களுக்கு அது நம்ம்பிக்கையிழக்கச் செய்து விடும்.

மாதவராஜ் பதிவில் குறிப்பிட்டபடி பங்கேற்பவர்களுக்கு திட்டத்தின் மீதான belonging உடைபடாமல் காப்பாற்றுவது முக்கியம்.

பத்திரிக்கைகள் அவரைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என எழுதுவது எதன் அடிப்படையில்? ஒரு வேளை பாலக்காடு தமிழ் நாட்டில் இருக்கோ?

**********************************************************************************

நாடோடி இலக்கியன் திருப்பூரில் இருக்கிறார். சென்ற வாரம் சனிக்கிழமை சந்தித்தேன். பொதுவாக ஒருவர் ரசிக்கும் பாடலகளை வைத்து அவரை எடை போடுவேன். அந்த விதத்தில் என் ரசனைக்கு 100% சதவீதம் ஒத்துபோகும் ஒருவர் அவர். 80 களில் வந்த இளையராஜா பாடல்களில் அதிகம் பேசப்படாத நல்ல பாடல்களைச் சொன்ன மாத்திரத்தில் பாடினார். இந்த வாரம் அவரது கவிதை ஒன்று.

எப்படித் தொலைப்பது?!

வழக்கமாகச் செல்லும்
இப்பாதையின்
இதே இடத்தில்தான்
முன்பொருமுறை
முக்கியமான பொருளொன்றைத்
தொலைத்தேன்,
ராசியில்லா இவ்விடத்தைக்
கடக்கும் போதெல்லாம்
இருக்கும் பொருட்களை
அனிச்சையாய் தடவிப்
பார்த்துக் கொள்கிறேன்,
பொருளைக் கண்டெடுத்தவனும்
இப்பாதையை வழக்கமாக்கி
கொண்டவனாய் இருப்பின்,
இதே இடத்தை
நன்றியோடு நினைவு கூர்ந்து
நகர்ந்து போகக் கூடும்,
எனக்கான பிரச்சனை என்னவெனில்
தொலைந்தப் பொருள் தொலைந்ததுதான்,
இவ்விடத்தைக் கடக்கயில் வரும்
இப்படியான நினைவுகளை
எப்படித் தொலைப்பது?!

ஒரு மறு வாசிப்பில் கவிதையில் வரும் பொருளைக் காதலியாக நினைத்துப் பாருங்கள்; இழப்பின் வலி புரியக்கூடும்.

********************************************************************************

ஜோசப் பால்ராஜ் தனது ஸ்டேட்டஸ் மெஸேஜாகச் சில பொன்மொழிகளைப் போடுவார். அது அந்தந்த சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக இருக்கும். சமீபத்திய ஒன்று.

Engineers like to solve problems. If there are none, they create one.

இதில் Engineers என்பதற்குப் பதில் அவரவருக்குப் பிடித்ததைப் போட்டுக் கொள்ளலாம்.

********************************************************************************

மெயிலில் பின்னூட்டமிடுவதில் உள்ள சிரமங்களைப் புரிய வைத்த உங்களுக்கு நன்றி. நீங்கள் கேட்டுக் கொண்டதற்கினங்கி பின்னூட்டமிடும் வாய்ப்பு திறக்கப் படுகிறது; மட்டுறுத்தலுடன்.

அதே போல் பிறர் பதிவுக்கும் பின்னூட்டம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை மின்னஞ்சல் மூலமும் மின்னரட்டையிலும் உணரவைத்த உங்களுக்கு நன்றி. எனது பின்னூட்டம் தொடரும், நல்ல பதிவுகளுக்கு.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்; குறிப்பாக சஞ்சய், கிரி இருவருக்கும்.
முகம் தெரியாத எதிரியுடனான நிழல் யுத்தத்தில் நான் இழக்கவிருந்தது என்னவென்பதைப் புரிய வைத்ததால்.

மேலும் யாரோ ஓரிருவருக்காக, என்மீதபிமானம் வைத்திருக்கும் மீதித் தொன்னூற்றெட்டுப் பேரை விட்டு ஏன் விலக வேண்டும்?

.

பரிசலும், கோவியும் பின்னே ஞானும்.

விசித்திரமானது பரிசல் மனம். அவியல் ஆன்மிகம் அனைத்துப் பொருள் உரைத்தாலும் மிகச் சரியாக பரிசல் மனம் என்பது எப்படி செயல்படுகின்றது என்பதற்கான தெளிவுரை எவருமே இதுவரை எழுதவில்லை.

ஒரு நாளைக்கு பரிசல் மனத்தில் தோன்றும் எண்ணங்கள் சுமார் 40,000 வரை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை சனி, ஞாயிறு வேறுபடலாம்.

பரிசல் மனதில் தோன்றும் பதிவுகளில் முதன்மையான இருவகைகளில் ஒன்று நல்ல பதிவுகள், மற்றது கும்மிப் பதிவுகள், இதைத் தவிர்த்து மூன்றாவதாக ஒருவகை பதிவுகள் உண்டு அவை விடைபெறுகிறேன் பதிவுகள் என்ற வகையில் வரும்.

பரிசலுக்கு பதிவுகள் உற்பத்தி தன்னிச்சையான செயல் போன்றது தான். தட்டச்சு செய்யும் போது ஒவ்வொரு விரலையும் சிந்தித்து சிந்துத்து அழுத்துவதில்லை. பழக்கத்தின் காரணமாக நினைக்க நினைக்க அடித்துக் கொண்டே இருக்கும், நமது விரல் செயல்படுகிறது என்ற உணர்வே இல்லாது தட்டச்சு செய்வது போன்றது தான் பரிசல் மனதில் தோன்றும் பதிவுகள். அவை அனிச்சையானது. அடுத்த வினாடியில் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்றாலும் சிந்தனைகளில் எதாவது பதிவு ஓடிக் கொண்டே இருக்கும்,

புதுப்பதிவருக்கு பின்னுட்டம் வரும் வரை பதிவுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் அதன் பிறகு அலை அலையாய் பதிவுகள் ஏற்பட்டு கும்மி வளர்ச்சியின் விதையாக மாறிவிடும். ஆரம்பத்தில் தேடலாக தொடங்கும் பதிவுகள் பிறகு மொக்கையாக மாறிவிடும்.

பரிசலால் சிந்திக்கக் கூடிய (அதாவது சுய சிந்தனை) நிலையில் அவர் மனதில் மேற்சொன்ன பகுப்பில் (நல்ல / கெட்ட / தேவையற்ற) பதிவுகள் சுழல ஆரம்பிக்கின்றன. இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே அவருக்குத் தோன்றும் பதிவுகள் சுமார் 50 இருக்கும். ஒரு இரண்டு நிமிடம் எதுவுமே செய்யாமல் அவர் மன ஓட்டத்தை மட்டுமே கவனித்தால் அவர் எப்படியெல்லாம் பதிவுகள் போடுகிறார் என்பது பற்றி அறிவீர்கள், அந்த இரண்டு நிமிடத்தில் தோன்றிய பதிவுகளில் 90 விழுக்காடு நல்ல பதிவுகளாகவே இருக்கும்.

பரிசலுக்கு பதிவு எழுதும் அயற்சியைவிட கும்மிப் பின்னுட்டமிடும் அயற்சியே சோர்வை மிகுதியாகத் தரும். இந்த சோர்வின் மூல காரணிகளே அதிகப் கும்மிதான். நல்ல பதிவுகள் மனச்சோர்வை ஏற்படுத்தாது மாறக உற்சாகம் தரும், விடைபெறுகிறேன் வகைப் பதிவுகள் மனச்சோர்வை ஏற்படுத்தும். அவர் எழுதியதில் 10% கும்மிப் பதிவுகளும், 80% நல்ல பதிவுகளும் இருக்கிறது.

அவரது மூளையில்(?) இருந்துதான் பதிவுகளுக்கான சக்திகள் செலவிடப்படுகின்றன. மூளை தொடர்ந்து இயங்கும் போது தேவையற்ற பதிவுகளுக்கான சக்தி குறைந்து மனச்சோர்வாகிறது. உடல் நலம் மனநலத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதால் உடல்சோர்வும் ஏற்படுகிறது. தகுந்த பயிற்சியின் மூலம் தேவையற்ற பதிவுகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். வெற்றிப் பதிவாளர்கள் அனைவருமே இலக்கு ஒன்றின் மீதான குறியில் ஒருமுகமாகி தேவையற்ற பதிவுகளைக் குறைத்துக் கொண்டவர்கள் தானே.

இன்னும் எழுதலாம் படிப்பவர்கள் சோர்ந்துவிடுவார்கள் ! – இது இங்கு நான் எழுதிய கும்மிப் பதிவு! 🙂

டிஸ்கி : ஒன்னும் புரியலைன்னா கோவி எழுதிய இந்தப் பதிவு பாருங்க. பரிசல் எழுதுன(?) இந்தப் பதிவையும் பாருங்க