சினிமா

கிஸ்மத் – மலையாளத் திரைப்படம்

 

பெரும்பாலும் சினிமாக்களில்,  காதலர்களில் ஒருவர் இறந்துபோக நேரிடுமானால், மற்றவர் பைத்தியமாகவோ அல்லது அவரது நினைவில் வாழ்க்கையைத் தொலைத்தவராகவோ அல்லது  இறந்துபோவதாகவோ அமைக்கப்படும். மாறாக இப்படத்தில் காதலன் இறந்துபோனதும் முடிந்துவிடும் கதையின் நீட்சியாகக் காட்டப்படும் இறுதி 5 நிமிடக் காட்சிகள் ஒரு குறுங்கவிதை. படத்தை வேறு தளத்திற்கு நகர்த்திவிடுகிறது.

23 வயது இர்ஃபானுக்கு 28 வயது அனிதாமீது காதல். கல்லூரிப் படிப்பை(பொறியியல்) பாதியில் விட்ட இர்ஃபான் வேலை ஏதுமற்றவன். அவ்வாறு வேலை செய்து சம்பாதித்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லாத அளவுக்கு வசதியான குடும்பத்தின் இளையவன். தன் விருப்பம் என பழைய பைக்குகளத் தேடி வாங்கி வந்து அதன் தோற்றம் மாற்றிப் பொலிவேற்படுத்தி ஓட்டுவதில் ஒரு பெருமிதம் கொண்டவன்.

அனிதா ஆராய்ச்சி மாணவி. ஏழை, தலித் குடும்பத்தில் உதித்தவள். எதேச்சையாக ஒரு மோதலில் சந்திக்கும் இர்ஃபான் மீது முதலில் கோபம் கொண்டாலும் அவன் நடவடிக்கைகளாலும் நல்லெண்ணத்தினாலும் ஈர்க்கப்பட்டு காதல் கொள்கிறாள். அவளது ஆராய்ச்சிக்கு இர்ஃபான் முன்வந்து உதவி செய்ய காதல் மேலும் இறுகிறது.

இர்ஃபான் வீட்டில் பெண்பார்க்க ஆரம்பிக்க, அவன் அனிதாவைப் பற்றி சொல்ல, வீட்டில் எதிர்ப்பு கிளம்புகிறது. உடனே அனிதாவைக் கூட்டிக் கொண்டு காவல் நிலையம் சென்று பாதுகாப்பு கோறுகிறான். அதுதான் அவன் உணர்சிவயப்பட்டு செய்யும் தவறு. ஏன் என பின்விரியும் காட்சிகளில் தெளிவாகிறது.

படத்தின் ஆகச்சிறந்த சித்தரிப்பு, காவல் நிலையம். ஒரு காவல் நிலையமொன்றில் இயல்பாக நடக்கும் அன்றாட நிகழ்வுகளை எந்தப் பூச்சும் பாசாங்குமற்று கன்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார்கள். காவல் ஆய்வாளராக வரும் விநய் கூடக் குறைச்சல் இன்றி ஒரு ஆய்வாளரை அவரது நிறைகுறையுடன் கன்முன்னே காட்டுகிறார்.

புதிதாகச் சேரவரும் கான்ஸ்டபிளை நிறுத்தி வைத்துக் கொண்டே பேசுவதும், அதே சமயம் உள்ளே வரும் கான்ஸ்டபிள் பணியில் இருப்பவரை வேண்டுமென்றே உட்காரச் சொல்லுவதுமாக ரேக்கிங் செய்வதை போன்ற நடவடிக்கை ஒரு சிறு உதாரணம். “என்ன? வேற வேலை ஏதும் கிடைக்கலியா? இப்ப இதான் ஈசி இல்ல, நல்ல சம்பளம், கூடுதலாகக் கிம்பளம்” என்றவாரே புதிதாக வந்தவரை நோட்டம் பார்ப்பதில் அசத்துகிறார். இவர்தான் பிரேமம் படத்தில் காலேஜ் வாத்தியாராக வந்து மலரைக் காதலிப்பாரே, “ஜாவா இஸ் ரக்கட். ஜாவா இஸ் சிஸ்டமேட்டிக்” என்று பாடம் நடத்துவாரே அவர்தான்.

எல்லாக் கவல்நிலையங்களிலும் ஆய்வாளாருக்கு வேண்டியவர் சிலர் இருப்பர், கட்டப் பஞ்சாயத்து கோஷ்டி, இதில் கே டி. அஸ்ஸாமி இளைஞன் ஒருவன் மீது புகார், சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டதாக. கே டி உடனே ஆஜராகி, தனது உறவினர்கள் இருவரைக் காயப்படுத்திவிட்டதாகவும், மருத்துவச் செலவுக்கு 2000 ரூபாய் வாங்கித்தரச்சொல்லியும் பைசல் செய்கிறார். அஸ்ஸாமி இளைஞன் பேசும் ஹிந்தி இவர்களுக்குப் புரியவில்லை, ஆய்வாளர் வினய் ஹிந்தியில் பேசியவாறே முரட்டுத்தனமாக உடல்காயமேற்படுத்தி அவனைச் சம்மதிக்கச் செய்வார். காவல் நிலையத்தில் அனைவருக்கும் தெரியும் அவன் அஸ்ஸாமி என்று , ஆனாலும் பெங்காலி என்பர். வினய் மட்டும்தான், “நீ அஸ்ஸாமியாடா, நக்ஸலா” என நக்கலாகக் கேட்பார்.

நாமும் அப்படித்தானே – முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதி.  அஸ்ஸாம் ஜார்க்கன்ட் காரனென்றால் நக்ஸலைட். காவல்நிலையத்தை அப்பட்டமாகக் காட்டியதின் மூலமாக சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிறார் அறிமுக இயக்குநர் – ஷாநவாஸ் கே பாவக்குட்டி. இவர் பொன்னானி நகரின் முனிசிபல் கவுன்சிலராக இருந்தபோது, 23 வயது B.Tech மாணவனுக்கும் 28 வயது தலித் பெண்ணிற்கும் இடையே வந்த காதலால் நடந்த உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் விளைந்தது இப்படம்.

காவலர் ஒருவர், கைப்பற்றி நிலையத்தில் நிறுத்தியிருந்த பைக்கின் எஞ்சினைத் திருடி விற்றுவிடுகிறார். விற்பனை செய்ய உதவியவனைப் பிடித்து அவன்தான் திருடன் எனக் கோர்ட்டில் ஒப்படைப்பதும், அதற்கு அவனைச் சம்மதிக்கக் கையாளும் நடவடிக்கைகளும், காவல்துறை எப்படித் தங்கள் சகஉழியரைக் காப்பாற்ற யாரைவேண்டுமானாலும் ஈவு இரக்கமின்றிப் பலிகொடுக்கும் என்பதன் வெளிப்பாடு அது.

இந்த நிகழ்வுகளுக்கிடையே, கே டி இர்ஃபானின் குடும்பத்தினருக்குச் சொல்லிவிட, அவர்கள் வந்து இர்ஃபானை அழைத்துச் சென்று விடுகிறார்கள். அனிதா என்ன ஆனாள், காதல் என்ன ஆயிற்று என்பதெல்லாம் உங்கள் திரையில்.

Advertisements

லூசியா – கன்னடத் திரைப்படம்

Lucia

கன்னடத் திரையுலகில் நடிகராக அறிமுகமான பவன் குமார், ”லைஃபு இஷ்டனே” என்றொரு நகைச்சுவை படமொன்றை இயக்குகிறார். அதன்பின், லூசியா திரைப்படத்திற்கான ஸ்கிரிப்டைத் தயார் செய்துகொண்டு, முன்னணி நடிகர்களை அணுகுகிறார். “இதெல்லாம் ஒரு படமா?” என எல்லோருமே உதறித்தள்ளிவிட, மனம்நொந்து தனது வலைப்பக்கத்தில் இதைப்பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறார். அவரது ரசிகர்கள், நண்பர்கள் என சுமார் 110 பேர் சேர்ந்து 55 லட்சம் ரூபாயை 27 நாட்களில்,  சேகரித்துக் குடுக்கின்றனர்; Crowd Funding என்கிற அடிப்படையில்.

உற்சாகமாகப் படத்தைத் தயாரிக்கிறார்.  அடுத்த சோதனையாக அதை வாங்கி வெளியிட எந்த விநியோகஸ்தரும் தயாராக வரவில்லை. மீண்டும் விரக்தி மேலிட, லண்டன் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்க, அங்கே அது ரசிகர்களால் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. உடனே விநியோகஸ்தர்கள் விழித்துக் கொண்டு ஓடி வர, திரையிட்ட முதல் வாரத்திலேயே 2 கோடி வசூலித்திருக்கிறது.

இதரப் படங்களைப் போல மேலோட்டமாக, அல்லது அசிரத்தையாகப் பார்த்தால் இது உங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. கதை  3 திரிகளாகச் சொல்லப்படுகிறது. மருத்துவமணையில் வெகுநாட்களாக கோமாவில் இருக்கும் நிக்கி, அவனை விடுதலை(கருணைக் கொலை) செய்துவிடத் துடிக்கும் அவனது காதலி, அவளின் நோக்கம் என்ன என்பதை விசாரிக்கும் காவல்துறை, என இதெல்லாம் நடப்பதின் இடையிடையே, நிக்கிக்கு விபத்து எப்படி ஏற்பட்டது என்பதின் முன் கதையைச் சொல்கிறார்கள்.

திரையரங்கொன்றின் பால்கணியில், தாமதமாக வரும் நபர்களை டார்ச் விளக்கின் ஒளியின் உதவியோடு, அழைத்துச் சென்று அவரவர்க்கான இருக்கையில் அமரச் செய்யும் தொழிலாளி  நிக்கி. குறைந்த அளவே படிப்பு, எந்தத் தனிப்பட்ட திறமையும் இல்லாத, பெண் தோழிகளை வசீகரிக்கவியலாதவன். இந்த ஏக்கம் அவன் ஆழ்மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.  இரவில் சரியாக உறக்கம் வருவதில்லை.

அப்படியான ஓரிரவில் வீதியில் நடை பழகுகிறான்,  காவல்துறையினர் அவனைக் கேலி செய்து ஓடவிடுகின்றனர். சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் இருவர் இவனைப் பார்த்து சிரிக்க, இவனது பிரச்சனையத் தெரிந்து கொண்டு “லூசியா” என்ற மாத்திரையை அறிமுகப் படுத்துகிறார்கள். அந்த மாத்திரையின் உதவியால் நல்ல தூக்கமும் கனவும் வருகிறது.

கனவு நமக்கெல்லாம் வருவதுதான். என்றாலும் நிக்கிக்கு, அந்த மாத்திரையின் காரணமாக வரும் கனவு வித்தியாசமாக இருக்கிறது. காலையில் எந்தக் கனவின் இடையில் எழுகிறானோ அதன் தொடர்ச்சியை அன்றைய இரவில் காண்கிறான்; மெகாத்தொடர் போல. கனவில் வருவதெல்லாம், இவன் இயல்வாழ்வில் அடையமுடியாமல் போனவைகளின் நீட்சி. நிக்கிக்கு முன்னணி கதாநாயகன் ஆகவேண்டும் என்பதுதான் ஆசை. அது கனவில் நிறைவேறுகிறது. இவனை கல்யாணம் செய்ய மறுக்கும் பெண், கணவில் இவனிடம் வாய்ப்புக்காக ஏங்கும் நடிகையாக.

இந்தப் படத்தில் நடித்த பெரும்பாலோர், ஒரே படத்தில் இரண்டு வேடங்களைச் செய்கின்றனர். ஒன்று நிஜத்தில், இன்னொன்று நிக்கியின் கனவில். நிக்கி – சினிமாத் தியேட்டர் ஊழியனாக நனவில், முன்னணி நடிகனாகக் கனவில். ஸ்வேதா – பிட்சாக் கடை ஊழியராக நனவில், சினிமா வாய்ப்புக்காக ஏங்கும் மாடலாக கனவில். சங்கரன்னா – தியேட்டர் உரிமையாளராக நனவில், நிக்கியின் மேனேஜராகக் கனவில்.

நனவிற்கும், கனவிற்கு வித்தியாசம் காட்ட, நனவைக் கலரிலும் கனவைக் கருப்பு வெள்ளையிலும் காட்டியிருக்கிறார்கள். மூன்று திரிகளையும், சற்றும் விலகாது கூடவே சென்றால், நல்லதொரு சினிமா அனுபவம்.

படத்திற்கு ஆகச்சிறந்த பங்களிப்பு எடிட்டர் குழுவிடமிருந்து. இத்தனை சவாலான கதையை, மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

நிக்கி போன்ற இளைஞர்களைத் தினவாழ்வில் நாம் எதிர்கொள்கிறோம். அவர்களிடமிருந்து நமக்குத் தேவையான வேலை/சேவையைப் பெற்றுக் கொண்டு அவர்களை உதாசீனப்படுத்தி விடுகிறோம். அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசாபாசங்களும் ஏக்கங்களும் இருக்கும் என்பதைக் கவனிக்க மறந்துவிடுகிறோம்.

பவன் குமாருக்குத் திரை நடிகர்கள் மீது, குறிப்பாக அவர்களது அலட்டல்மீது ஒரு வெறுப்பு இருக்கும் போலிருக்கிறது. நிக்கி கனவில் முன்னணி நடிகனாகிச் செய்யும் அடாவடி அலட்டல்கள் சிரிப்பை வரவழைத்தாலும் அதுதான் உண்மை.

இதைத் தமிழில் “எனக்குள் ஒருவன்” என்ற பெயரில் சித்தார்த் நடித்திருக்கிறார். படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இதற்கடுத்த படமாகத்தான் “U Turn” படத்தை எடுத்திருக்கிறார்.

ஓலைப்பீப்பி -மலையாளத் திரைப்படம்

olappeeppi-movie-review

ஓற்றை வரியில் எழுதிவிடமுடிகிற கதைதான். சிறுவயதில் ஊரைவிட்டு ஓடிப் போகும் உன்னி 30 வருடம் கழித்து வருகிறான். ஒரு நல்ல திரைக்கதை “What if” என்றொரு கேள்வியை முன்வைத்து, அதன் விடையை விரிதெழுதுவதாக இருக்க வேண்டும். இருக்கிறது.

மகுடேஸ்வரனின் கவிதையொன்று இப்படி முடியும்,
வாழ்ந்து கெட்டவர்களின்
வீட்டுக் கொல்லைப் புறத்தில்
இன்றும்
கேட்டுக்கொண்டிருக்கிறது
பெண்களின் விசும்பல் ஒலி.

இதைத்தான் திரைக்கதையாக்கியிருக்கிறார் கிரிஷ் கைமல். செழித்தோங்கி வாழ்ந்த ஆறாம் தரவாட்டின், அதிகப்படியான நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்கிறது அரசு, ஜமீந்தாரி ஒழிப்புச் சட்டத்தின் மூலம். மிஞ்சுவதெல்லாம், ஒரு வீடும் அதைச்சுற்றியுள்ள சிறு நிலமும்.

முத்தஸ்ஸியின் மகன் கோவிந்தன் இருந்த சிறு நிலத்தையும் ராஜப்பனிடம் அடகு வைத்துப் பணம் பெற்று வெளியூர் சென்றிடுகிறான். மகளை ஒரு நம்பூதிரிக்குத் திருமணம் செய்து கொடுக்க, மனிதத்தன்மையே இல்லாத முசுடு நம்பூதிரி, தன் மகன் உன்னியை வெறுக்கிறார், ஜாதக பலன்களைக் காரணம் காட்டி. வேறு வழியில்லாமல், உன்னியை முத்தஸ்ஸியிடம் விட்டு உன்னியின் அம்மாவும் நம்பூதிரியுடன் வேறூருக்குச் செல்ல, 80 வயது முத்தஸ்ஸியும், 8 வயது உன்னி மேனோனும், பந்தலுக்குக் கொடி ஆதரவு என்றாற்போல.

உன்னி மேல் முத்தஸ்ஸிக்கு அளவுகடந்த பிரியம். அவனுக்குச் சமைத்துக் கொடுத்து, குளிக்கச் செல்லும்போது கூடவே சென்று, பள்ளியிலிருந்து வரத் தாமதமானல் வழி நோக்கி நின்று என்று எல்லா அசைவிலும் உன்னியே. “நீ மிடுக்கன், நான்னாயி வரு” என்று சொல்வதை இத்தனை வாஞ்சையுடன் சொல்ல முடியுமா என வியக்க வைக்கிறார் புனசேரி காஞ்சனா. 1970களில் முன்னணி நடிகையாக இருந்தவர், 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வந்திருக்கிறார்.

கூன் விழுந்த உடம்பு, தடி ஊன்றி நடை, கண்சுறுக்கிப் பார்த்தல், விரல்கள நெற்றியில் வைத்து தூரத்தில் வரும் நபரைக் கூர்ந்து நோக்குதல், கால் நீட்டி அமர்தல், பேரனைக் காணாது தவித்தல், தவங்கித் தவங்கி நடத்தல் என அருமையான பாத்திரவார்ப்பு, உன்னி குளத்தில் குளிக்கையில், பாட்டியை எண்ணச் சொல்லிவிட்டு நீருக்குள் முங்குகிறான், எண்ண ஆரம்பிக்கும்போது இருக்கும் பாவத்திற்கும், எண்ணிக்கை அதிகமாக அதிகமாக முகத்தில் கவிழும் பயமும், இறுதியில் “உன்னி, உன்னீ, உன்னீஈஈஈஈ” என அலறும்போதும் காட்டும் பாவமும், அந்தக் காட்சியை எடுத்த இயக்குனரையும், காஞ்சனாவையும் என்ன வார்த்தைச் சொல்லிப் பாராட்டினாலும் தகும்.

மனிதர்களை எடைபோடுவது, நாம் பார்க்கக் கிடைக்கிற நடவடிக்கைகளைக் கொண்டே அமைகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. என்னேரமும் குடி என இருக்கும் கேசவனை உன்னியின் தங்கை சகித்துக் கொள்வது, அவளை மீட்டெடுத்தவன் அவன் என்பதால்; அதை உன்னி அறிய நேரும்போது கேசவன் மீதிருக்கும் வெறுப்பு அன்பாக மாறுவதை அத்தனை இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

தங்கள் வீட்டில் கூலிக்காரனாக இருந்த ராஜப்பன், இன்று அரசியல் படிநிலைகளில் மேலேறி தங்கள் இடதையே வளைத்துக் கொள்வதும், அவனிடமே யாசகம் கேட்க வேண்டிய நிலையும், உன்னி பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற போட்டிகளில் முதலாவதாக வந்ததைக் கௌரவிக்க, தனிப்பட்ட சன்மானமாய் ராஜப்பன் வழங்கும் 21 ரூபாயைக் கொண்டு ரேசன் வாங்கும் நிலையும், எப்படியாயினும் உன்னியை நன்றாய்ப் படிக்க வைக்கும் முத்தஸ்ஸியின் தீர்மானமும் என நல்ல காட்சிப்படுத்துதல்கள்.

சற்று எளிதான வேடங்களிலேயே நடித்துவந்திருக்கும் பிஜு மேனனுக்கு (வளர்ந்த உன்னி) இது ஒரு நல்ல வாய்ப்பு, நியாயம் செய்திருக்கிறார். சின்ன வயது உன்னியாக நடித்திருக்கும் தேவப் ப்ரயகன், ஆச்சர்யமூட்டுகிறார். நடிப்பிற்கு வயதென்பதே கிடையாது என்பதை, காஞ்சனா, பிஜு, தேவப்ரயாகன் ஆகிய மூவர் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர். இது அவரது முதல் முயற்சி என்பதை நம்ப முடியவில்லை என்னால், இன்னும்.

ஒரு பத்திருபது நாட்கள் சொந்த ஊருக்குச் சென்று, நீங்கள் விளையாடிக் களித்த இடம், நண்பர்கள், உறவினர், அண்டை அயலார் என எல்லோரையும் சந்தித்து வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள், எனில் இது ஒரு விர்ச்சுவல் பயணம்.

ஓலைப்பீப்பி, ஓட்டாள், மன்றோ ஐலண்ட் என, வயதானவருக்கும் பேரனுக்கும் இடயேயான உறவுப் படமாகப் பிடிக்கிறது, சமீபமாக. எனக்கும் வயதாகிறதோ?

மாநகரம் – உள்ளும் புறமும்

maanagaram-movie-review

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த உனர்வை அளித்தது “மாநகரம்”

ஒன்றுக்கொன்று தொடர்புள்ள சிறு சிறு சம்பவங்கள். ஊடாடும் மாந்தர்கள் அறியாமலேயே தன்னளவில் செய்துவிட நேர்கிற செயல்கள் அடுத்தவரையும் பாதிக்கிற வகையில் அமைந்து விடுவதான, தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு.

ஸ்ரீ, சந்தீப், ரெஜினா ஆகிய மூவரும் பிரதானக் கதாபாத்திரங்கள் என்றாலும், சார்லி, முனீஸ்வரன் போன்ற இதரர்களின் பங்களிப்பும் அற்புதமாக அமைந்திருக்கிறது.

பாத்திரச் செதுக்கலும் அதற்கான நடிகர் தேர்வும் படத்தை உயர்த்துகிறது. சந்தீப் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திலிருந்து இம்மியும் பிசகவில்லை. ஒரு மாதிரியான பிடிவாதம் கொண்ட இளைஞன், தான் நினைத்ததே சரி என்றெண்ணும் வகை. அல்லு அர்ஜுனின் தம்பி போல இருக்கிறார்.

ஸ்ரீ, இடம் பெயர்தலின் அவலத்தை எப்போதும் முகத்தில் தேக்கியவாறே இருக்கிறார். மரியாதையாதயான வேலையில் இருந்தாலும், சந்தீப்பின் காதலை உதறிவிட முடியாமல் அவதிப்படும் வேடம் ரெஜினாவுக்கு. சிறப்பாகச் செய்திருக்கிறார்.

மிகத்தரமான ஒளிப்பதிவு பகல்நேரச் சென்னையையும் அதன் இருண்ட இரவையும் துல்லியமாகக் காட்டுகிறது. பாடல்களில் ஏமாற்றினாலும், பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார் ரியாஸ். மிகவேகமாக நகரும் திரைக்கதைக்கு மெருகூட்டுவது மிகத்திறமையான எடிட்டிங்.

கதையோடு ஒட்டாமல்,  நகைச்சுவை என்ற பெயரில் ஆயாசம் ஏற்படுத்தும் தமிழ்ச் சினிமாவில், முனீஸ்வரனை வைத்து தேவையான அளவு கதை நகரும் போக்கிலேயே காமெடி செய்திருப்பது சிறப்பு. வெகு இறுக்கமாக் இருக்கும் திரைக்கதையில் முனீஸ்வரனின் நகைச்சுவை சிறிது ஆசுவாசம் தருகிறது.

மொத்தத்தில் இது ஒரு சுவையான கூட்டாஞ்சோறு. சபாஷ் லோகேஸ்.

கலைடாஸ்கோப் – 29-08-10

மாருதி நிறுவனத்தின் லேட்டஸ்ட் விளம்பரங்கள் நன்றாக இருக்கின்றன. என்னதான் தொழில்நுட்பம், சிறப்பு என்று விளம்பரப்டுத்தினாலும் இந்தியர்கள் மைலேஜைத்தான் பார்ப்பார்கள் என சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மற்ற விளம்பரங்கள் இங்கே

அவர்க்ள் மட்டுமல்ல பதிவுலகிலும் சிலர் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். யாரை விமர்சித்தால் மைலேஜ் கிடைக்கும் என்று பார்த்துத்தான் அவதாரம் எடுக்கிறார்கள்; பெண்ணியக் காவலர்களாக, ஆணாதிக்க எதிர்ப்பாளராக, உடனடி நீதிபதியாக. அறச்சீற்றத்தோழர்களும், கொள்கைக்காக நட்பைத் துறந்த கோமானும் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. யாரவது பார்த்தால் தகவல் சொல்லவும்.

எப்படியோ நான் சொல்லி வந்தது உண்மை என ஆகி விட்டது.

உண்மையை யாரும் நம்புவதில்லை. பசும்பாலிலிருந்து தயாரித்த மோரைத் விற்கத் தெருத்தெருவாக அலைய வேண்டி இருக்கிறது. கள் உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போய் விடுகிறது. -கபீர்தாசர்.

***************************************************************

கதவு சிறுகதைதான் நான் முதன் முதலில் படித்த கி ராவின் சிறுகதை. அந்தச் சிறுவர்கள் இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் மனதிலிருந்து மறையவில்லை. அதன் பிறகு தேடிப் படித்ததில் நாற்காலி மிகவும் பிடித்திருந்தது.

கரிசல் மண்ணை அதன் வாசத்தோடும் வீச்சத்த்தோடும் நம் முன்னே காட்டியவர்.
கரிசல் காட்டு வாழ்க்கையை கதைகளில் படம்பிடித்துப் பத்திரப்படுத்தியவர் அவர்.

அனைத்துச் சிறுகதைகளையும் அகரம் பதிப்பகம் ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. விலை 200 ரூபாய்.

கிராமத்துத் தென்றலை (சு)வாசிக்க நினைப்பவர்களுக்கு நல்ல தேர்வு இது. வாசித்துத்தான் பாருங்களேன்.

***************************************************************

ஆறாவது வனத்தின் தீராத ரணத்தை ஆற்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய “நாலு பெண்கள்” பார்த்தேன். பத்மப்ரியா, காவ்யா மாதவன், நந்திதாதாஸ், கீது மோகந்தாஸ் என முன்ணனி நடிகைகள் சிறப்பாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

நான்கு குறுங்கதைகளை எடுத்துக் கோர்த்திருக்கிறார். நான்கும் நான்கு கதைக்களனைக் கொண்டிருந்தாலும் பெண்ணின் சிரமம் என்ற நூலெடுத்துக் கோர்த்திருக்கிறார்.

படம் பற்றிய காலச்சுவட்டில் சுகுமாரன் எழுதிய விமர்சனம்

***************************************************************

இம்மாத உயிர்மையில் மலேசியவாசுதேவன் பற்றி ஷாஜி எழுதுய மறதியில் கரைந்த மகத்தான பாடகன் என்ற கட்டுரை அற்புதமாக இருந்தது. மிக நீண்ட நல்ல அலசல். மலேசியாவின் ஆளுமையை உள்ளபடி எடுத்து வைத்த கட்டுரை.

அவர் கொடுத்திருந்த பட்டியல் எல்லாமே அருமையான பாடல்கள். வாசுதேவன் பாட்ல்கள் தொகுப்பு என ஒரு டிவிடி வாங்கிக் கேட்டேன். என்ன ஒரு வெர்சாட்டிலிட்டி.

எனக்குப் பிடித்த பாடல்களில் சில.
1. ஆகாய கங்கை பூந்தேன் மழை தூவி
2. கோடை காலக் காற்றே
3. பனி விழும் பூ நிலவில்
4. இளம் வயசுப் பொண்ணை வசியம் செய்யும் வளைவிக்காரி
5. ஏ ராசாத்தி ராசாத்தி

***************************************************************

இவ்வாரக் கவிதை.

உள்ளதிலேயே
சிறந்த புகைப் படத்தைத்தான்
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.

வந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.

பதில் இல்லை.

– பா.ராஜாராம் – ஆனந்த விகடனில்

தீராத ரணம்பைக்கை ஸ்டண்டில் விடும்போதே சிக்னலைக் கவனித்திருக்க வேண்டும். ஏமாந்து விட்டேன்.

“செந்திலா? குமரனா?”

“ஆறாவது வனம்”

“அஙக போடுங்க” என்று சொல்லி ஒரு பார்வை பார்த்தார். அங்கே மொத்தமே 10 வண்டிகள்தான் இருந்தன. சரி நல்ல படத்துக்குக் கூட்டம் குறைவாக வருவது சகஜம்தானே என்று நினைத்துக் கொண்டேன்.

கோடம்பாக்கத்தில் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு நல்ல கதை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கையில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நல்ல கதையைச் சிரமப்பட்டு மிக மோசமாக எடுத்திருக்கிறார்கள்.

இண்டெர்வெல் பிளாக்கில் நல்ல திருப்பமும், க்ளைமேக்ஸில் அதிரடியான முடிவும் கொண்ட ஒரு கதையை இதற்கு மேலும் யாராலும் சொதப்ப முடியாது என்பது போலச் சொதப்பி இருக்கிறார்கள்.

கதாநாயகனாக நடிப்பது மிகச் சுலபம் என்றும் இயல்பாக நடிப்பது எப்படி என்றும் நடித்துக் காட்டி இருக்கிறார் கதாநாயகன். மொத்தப் படத்துக்கும் ஒரே முகபாவம். இந்தப் படத்துக்கு இது போதும் என்று நினைத்திருப்பார் போலும். சில காட்சிகளில் கருப்பாக இருக்கிறார். அடுத்த காட்சிகளில் நல்ல சிவப்பாக இருக்கிறார். கண்டினியூட்டி என்பதுதான் டைரக்சனின் பாலபாடம். இயக்குனர் அதில் நன்றாகக் கோட்டை விட்டிருக்கிறார்.

“மலர், நாளைக்கு நாம சென்னை போறோம்”

“எதுக்கு மாமா?”

“போலிஸ் ஸ்டேசன்ல வரச்சொல்லி இருக்காங்க”

அடுத்த காட்சி போலிஸ் ஸ்டேசன். 3 வயதுக் குழந்தைகூடச் சொல்லி விடும் அது சென்னையிலுள்ள ஒரு போலிஸ் ஸ்டேசன் என்று. இயக்குனர் மிகப் பொறுப்பாகக் கார்டு போடுகிறார் “CHENNAI POLICE STATION”. யாருக்காக இந்தக் கார்டு என்பது அவருக்கே வெளிச்சம். சி கிளாஸ் ஆடியன்சுக்கு என்றால் தமிழில் அல்லவா போட வேண்டும். ஒரு வேளை ஆஸ்கரைக்(!?) குறி வைத்தோ?

இண்டெர்வெல் பிளாக்கில் வரும் திருப்பம் கதைக்கு முக்கியமான ஒன்று. ஆனால் அதை ஏதோ சாதாரண ஒன்று என்பதாகக் காட்டி இருக்கிறார்கள். நாயகன் கையில் இறந்துவிட்ட நாயகியின் அஸ்தி. நாயகியின் சொந்த ஊரில் கரைக்க வேண்டும் என்பதற்காக அஙே வருகிறார். ஆனால் நாயகியை அவள் மாமனுடன் கோவிலில் பார்க்கிறான் நாயகன். நாயகன் முகத்தில் அதிர்ச்சியைக் காட்ட எந்த விதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை இயக்குனர். இந்தக் காட்சியை அமைத்த விதம் மிக மிக மோசம். ரீ ரிக்கார்டிங்கும் ஆகச் சிறந்த சொதப்பல். இசையமைப்பாளர் இன்னும் என்பதுகளிலிருந்து வெளியே வரவில்லை.

காட்சியமைப்பில் ஒன்றைச் சொல்லுவார்கள். ஒரு காட்சியின் முடிவில் ஒரு லின்க் வைக்க வேண்டும் சிறிது நேரம் கழித்து அடுத்த காட்சி வரும்போது இந்தக் காட்சியுடன் தொடர்பு படுத்தவும், விட்ட இடத்திலிருந்து தொடரவும் அது உதவ வேண்டும். அதே போல ஒரு காட்சியின் தொடக்கம் அதற்கு முன் விட்ட இடத்திலிருந்து எந்தத் தொய்வுமில்லாது தொடங்க வேண்டும். அப்படி எல்லாம் இல்லாமல் ஒரு பின் நவீனத்துவத் திரைப்படம் போல் எடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் எடிட்டரைச் சந்தித்து ஒரே ஒரு கேள்விதான் கேட்கவேண்டும். “எப்படிங்க?”. அசாத்தியத் திறமை இருக்கும் ஒருவரால்தான் இதைத் தொகுத்திருக்கவே முடியும்; பாவம் அவர்.

விஸ்காம் படிக்கும் இளைஞர்களே சிறந்த குறும்படங்களை படைத்துக் கொண்டிருக்கையில் , தொழில்நுட்பத்தையும் தேவையான பணத்தையும் கைவசம் வைத்துக் கொண்டு விழலுக்கிறைத்துவிட்டார்கள்.

பொதுவாக ஒரு படைப்பிற்குப் பின் உள்ள உழைப்பை மதிக்க வேண்டும் என்றே நான் வாதிட்டு வந்திருக்கிறேன்; இதுவரை. இந்தப் படம் ஒரு விதிவிலக்கு.

ஆறாவது வனம் – தீராத ரணம்.

சுறா – காலம் வரைந்த காவியம்

எம்மேல கை வைக்கிறதுக்கு முன்னால ஒரு தடவைக்கு ரெண்டுதடவை யோசிச்சு வை. வச்சிட்டா அப்புறம் யோசிக்க நீ இருக்க மாட்டே.

இந்த வசனம் ஒன்றே போதும் படம் வெற்றி என முரசறைந்து சொல்ல.

டயலாக் டெலிவெரியின் போது விஜய் காட்டும் முகபாவனை ஹாலிவுட் படங்களில் ரோஜர் மூர், சீன் கானரி போன்றோர் கூடக் காட்டாத ஒன்று.

ஹெலிஹாப்டரிலிருந்து விஜய் இறங்கும் ஸ்டைல் அசத்துகிறது இன்னும் இருபது வருடங்களுக்கு தளபதியை அடிச்சிக்க ஆளே இல்லை.

கோட் சூட்டில் கம்பீரமாக இருக்கிறார். எந்த டிரஸ் என்றாலும் அபாரமாகப் பொருந்துகிறது. தாடி பிறருக்கு சோகத்தைக் காட்டும் ஆனால் தளபதிக்கு அதுவே கூடுதல் கவர்ச்சி.

வழக்கமான விஜய் படம் என்றாலும் 50ஆவது படம் என்ற வித்தியாசத்தைச் சொல்லி அசத்தி இருக்கிறார் விஜய்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குப் பிடித்திருந்தது.

டிஸ்கி : நான் ட்ரைலரச் சொன்னேன்.

அங்காடித் தெரு – விமர்சனங்கள்

சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு இந்தளவு நான் ஒன்றிப் பார்த்த திரைப்படம் வேறில்லை. – பா.ரா.

படம் பார்த்து திரும்பும் போது ஒரு நல்ல நாவலை படித்த திருப்தியுடன் திரும்ப முடிகின்றது. – பொன்.சுதா

எல்லாவற்றுக்கும் மேல் அஞ்சலியின் “outstanding perfomence ” – தண்டோரா மணி

வாழ்க்கையின் கன பரிமாணத்தில் சந்தோஷம், வலி, அன்பு, காதல், சகிப்புதன்மை, தியாகம், என்று அனைத்தையும் அதன் அழுத்தம் குறையாமல் யதார்த்தமாகவும் எளிமையாகவும் இதுவரை தொட்டு பார்த்திராத கதைகளத்தில் படைத்திருப்பது ஒரு அனுபவமாய் அமைந்த நல்ல திரைப்படம் – பட்டர்ப்ளை சூர்யா.

இது ரெங்கநாதன் தெருவின் கதை மட்டுமல்ல. இந்த தேசத்தின், இந்த காலத்தின் கதை. நகரங்களின் அதிகாலைகள் எல்லாம் இலட்சக்கணக்கில் இப்படியான இளைஞர்களை விழுங்கியபடியே விடிகின்றன. சூரியன் உதிப்பதையும், மறைவதையும் அவர்கள் ஒருநாளும் பார்த்திட முடியாமல் சபிக்கப்பட்டுப் போகிறார்கள். உண்ணவும், உடுக்கவும், உறையவும் முடிகிற அவர்களுக்கு, மூச்சுவிட முடியாத வாழ்விடங்களே கிட்டுகின்றன. ஈவு இரக்கமற்ற முறையில் காயப்படுத்தப்படுவதற்கும் அவர்கள் பழகிப் போகிறார்கள். எதிர்காலம் எப்போதும் அவர்களுக்கு அருகில் இல்லை. இவை எல்லாவற்றையும் ‘அங்காடித் தெரு’ சொல்கிறது – மாதவராஜ்.

உலக சினிமாக்களை பார்க்கும்போது ஏன் இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழில் வருவது கிடையாது என்று மாய்ந்து போவதை நிவர்த்தி செய்து இருக்கும் வசந்தபாலனை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும்.
என் வாழ்வில் நான் பார்த்த மிகச் சிறந்த பத்து தமிழ்ப் படங்களின் வரிசையில் கண்டிப்பாக அங்காடித் தெருவும் இருக்கும் – கார்த்திகைப் பாண்டியன்.

இயக்குனர் வசந்த பாலனை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படம் முழுக்க, முழுக்க இயக்குனரின் படம். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்பு தெரிகிறது. இப்படம் அவருக்கு ம்ட்டுமல்ல, அவரின் தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள் கூட பெருமை கொடுக்கும் படம். – கேபிள் சங்கர்.

மூணு மணிநேரம் ரெங்கநாதன் தெருவில் இருந்தது போல் இருந்தது – ஜெட்லி, சங்கர். சித்து

ஒரு சாமானியனின் விமர்சனப் பார்வை

அங்காடி தெரு அற்புதமான படம். இதுபோல ஒரு படம் வந்து எத்தனை நாள் ஆகிறது. வழக்கமாக படங்களை பேசிப்பேசி உண்டுபண்ணி எடுப்பார்கள் போல. கதை எந்தூரிலே நடக்குறது என்று கேட்கலாம். இந்தக்கதை இதோ இங்கேயே நடக்குறது முடிந்தால் போய் பாருய்யா என்று சொல்லுவது மாதிரி இருக்கிறது படம்.

நான் ஒரு விளம்பர எழுத்தாளன். போர்டு எழுதுகிறேன். நான் ஏழு வருசம் இந்த கடை அருகே உள்ள இன்னொரு கடையிலே வேலை பார்த்தேன். இதே மாதிரி கடைதான். நான் அறிந்து அனுபவிச்ச வாழ்க்கை இந்தப்படத்திலே இருக்குறது. நான் படத்தை பார்த்து நேற்று ராத்திரி முழுக்க நினைத்து நினைத்து அழுதுகொண்டே இருந்தேன். இன்னும் நிறைய தடவை இந்த சினிமாவை பார்ப்பேன்.

இன்றைக்கு பிரவுசிங்குக்கு வந்தபோது நிறைய பேரிடம் பேசினேன். பார்த்தவர்கள் ஒன்று ரெண்டு பேர்தான். அதிலே கொஞ்சம் படித்த்து பெரிய நிலையில் இருக்கிறவர்கள் சிலர் சேச்சே இதெல்லாம் ஓவர் என்று சொன்னார்கள். கொஞ்சம் ஜாஸ்தியாக சொல்லிவிட்டார் என்று சொன்னார்கள்.ஆனால் ரொம்ப கம்மியாகச் சொல்லியிருக்கிறார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ரொம்ப அடக்கி வாசித்தது மாதிரி இருக்குறது.

இந்தமாதிரி கடைகளிலே வேலை பார்க்க போகிறபோது சர்ட்டிபிகெட் ஒரிஜினல் கேட்பார்கள். அதை அவர்கள் வங்கி வைத்துக்கொள்ளுவார்கள் கடையிலே துணி விக்க போவதற்கு எதுக்கு ஒரிஜினல் சர்ட்டிபிகெட் என்று யாருமே கேட்க மாட்டார்கள். அந்த சர்டிபிகெட்டை திரும்ப வாங்கவே முடியாது. அதனாலே வேலையை விட்டு விலக முடியாது. மேலே படிக்க முடியாது. படத்திலே இதைக் காட்டியிருக்கலாம். நான் எம் எல் ஏ சொல்லித்தான் வாங்கினேன்.

அதேமாதிரி பெண்கள் மேலே கை வைப்பது ரொம்ப அதிகம். எல்லாருமே கை வைப்பார்கள். நீங்கள் காட்டிய இந்த கடையிலேயே ஒரு வயசான அண்ணாச்சி உண்டு. கருங்காலி மாதிரி. மூக்குப்பொடி போடுவார். அவர் காலையிலே வந்ததுமே மீட்டர்கம்பால் பையன்களை சும்மாவே அடிப்பார். பெண்களை பப்ளிக்காகவே பிடிப்பார். இந்த படத்திலே ஹீரோயினை கற்பாக காட்டுவதற்காக கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கிறார்கள்.

அதே மாதிரி சாப்பாடு. சாப்பாட்டுக்காக இப்டி சண்டை போடுவார்களா என்று ஒருத்தர் கேட்டார். பின்னாடி வரக்கூடிய சீன்களிலே சண்டையை காணுமே என்று ஒருத்தர் சொன்னார். அது தெளிவாக படத்திலே இருக்கிறது. முதல் நாள் லிங்குவும் மாரியும் சமாதானமாக லேட்டாக போகிறார்கள். லேட்டாகப்போனால் அப்டித்தான் இருக்கும். ஆனைவாந்தி என்று சொல்லுவோம். சரியாக நேரத்திலே போனால் சாப்பிட்டுட்டு வரலாம். ஆனால் அந்த அரைமணிக்கூர் நேரத்தில்தான் நாம் எல்லா சொந்த வேலையையும் பாக்கணும். ஊருக்கு போன் பேசணும். இன்லண்ட் லெட்டர் வாங்கணும். வேற நேரமே இல்லியே. அதனால்தான் அப்படி சண்டை.

அதேமாதிரி மூத்த பையன்கள் மற்ற விஷயங்களுக்கு கட்டாயப்படுத்துவார்கள். கங்காணிகளும் கூப்பிடுவார்கள். அது பெரிய கஷ்டம். குளிக்கிற இடத்திலே வந்து நின்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அதெல்லாம் கொடுமை சார்.

எல்லாவற்றையும் நல்லா காட்டியிருக்கிறீர்கள். கருங்காலி அந்த ஸ்கிரீனை இழுத்து விடுவது பயங்கரமாக இருக்கிறது. அந்த ஸ்டைல். ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். ஒரஞினல் ஆளையே தெரியும்போல.

நல்ல படம் சார். நெஞ்சிலே ஈரம் உள்ளவனுக்கு இந்த படம் பிடிக்கும். சும்மா விஜய் படம் பாக்கும் ஆட்களுக்கு பிடிக்காது.

ஒரே ஒரு விசயம் மட்டும் உறுத்தல். அண்ணாச்சிக்கடைகள் மட்டும் அப்டி இல்லை. நானும் அதே சாதிதான். மத்த சாதிக்கடைகளும் இதே லெச்சணம்தான். மார்வாடிப்பையன்கள் படுகிற பாடு ரொம்பக் கொடுமை. ஆனால் வடசென்னை பையன்களை ஒண்ணுமே செய்ய முடியாது

அப்ப்றம் கடைசியா ஒரு விசயம். இங்கே இருந்து பையன்களை கூட்டிட்டு போகும்போது வீட்டிலே அம்மா அப்பாவை கூப்பிட்டு ஒரு லம்ப் தொகை கொடுத்து வட்டிபோட்டு எழுதி வாங்கித்தான் கொண்டு போவார்கள். அதை வட்டியோடே கட்டாமல் மீள முடியாது

இந்த மாதிரி பல விசயங்கள் படத்திலே இல்லை. கொஞ்சம் கம்மியாகச் சொல்லி இருக்கிறீர்கல். ஆனால் சினிமாவிலே இந்தளவுக்கு சொன்னதே பெரிசு சார்

ரொம்ப நன்றி. டைரக்டர், நீங்க ரெண்டுபேர் காலிலேயும் விழுந்து கும்பிடவேண்டும் போல இருக்கிறது. பிரவுசிங் பண்ணும் இடத்திலேதான் நீங்கதான் வசனம் என்று சொல்லி இந்த சைட்டை காட்டினார்கள். நான் நிறைய படித்தேன். கீதை நனறாக இருக்கிறது. நான் தியானம் செய்து வருகிறேன்

குமாரசாமி

By Kumasami perumal on Mar 28, 2010

நன்றி : அங்காடி தெரு கடிதங்கள் 2

ரோப் – ஹிட்ச்காக்கின் திரைப்படம்

.

கோணங்கள் திரைப்பட இயக்கம் கோவையில் நல்ல திரைப்படங்களைத் திரையிட்டு வருவதுடன் அதையொட்டிய விவாதங்களையும் ஆரோக்கியமாக வழி நடத்தி வருகிறது. எந்த வித லாப நோக்கமுமற்று நடத்தப்படும் இவ்வியக்கம் 2003 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது,

வாரம்தோறும் ஞாயிறு மாலை ஒரு திரையிடலும் விவாதமும் நடக்கும். இந்த வாராம் ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் ரோப் திரைப்படம்.

ROPE
A film by Alfred Hitchcock
Country:USA
Year ; 1948
Run time :80 minutes
English with English subtitles
24th January 2010; 5.45pm
Perks Mini Theater
Perks School , opp Boat House,
Trichy Road, Coimbatore
Call: 94430 39630
http://konangalfilmsociety.blogspot.com/

இந்தப் படத்தைப் பற்றிய நண்பர் ரகுநாதனின் பார்வை இங்கே

.

அன்புள்ள செல்வராகவன்

.

அன்புள்ள செல்வராகவன்,

எதுக்கய்யா இப்படி ஒரு படத்தை எடுத்தீர்கள்? ஆளாளுக்குப் பிரிச்சு மேய்கிறார்கள். கொஞ்ச நாளாக டல்லடித்துக் கொண்டிருந்த பதிவுலகிற்கு நல்ல வேட்டை.

சென்ற வருடம் மொத்தம் 99 தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளனவாம். ஒன்றைக் கூடவா நீங்கள் பார்க்கவில்லை. அந்தப் படங்கள் அனைத்திலும் நிறைந்து வழிந்த லாஜிக் என்ற வஸ்து உங்கள் படத்தில் ஒரு இடத்தில்கூடத் தென்படவில்லையே? அது ஏனய்யா? குறைந்த பட்சம் லாஜிக் என்ற வார்த்தையைக் கூட ஒரு பாத்திரமும் பேசவில்லையே. அது ஏன்?

அது ஏனய்யா வியட்னாமுக்கு விமானத்தில் செல்லாமல் கப்பலில் செல்கிறாகள். விமானத்தில் செல்லலாமே? என்ன மூன்று மடங்கு செல்வாகும் என்று யோசிக்கிறீர்களா? அதுதான் புனைவுன்னு முதலிலேயே கார்டு போட்டாச்சே. அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானங்களை வாடகைக்கு பிடித்துப் போனார்கள் எனக் காட்ட வேண்டியதுதானே?

காரின் ஜன்னல் வழியாக கார்த்தி இறங்க வேண்டிய அவசியம் என்ன? கார் கதவு ரிப்பேர் என எங்காவது கார்டு போட்டீரா? இல்லை கதாபாத்திரம்தான் எங்காவது சொல்லுகிறதா? 35 கோடி செலவில் படம் எடுத்தும் அவருக்கு ஒரு சட்டை வாங்கித் தர மனதில்லையே உமக்கு? என்ன ஆளய்யா நீர்?

கடலுக்குள்ளிருந்து மனிதர்களைக் கவ்விப்பிடிப்பது என்ன என கார்டு போட்டீரா? என்ன என நாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் அவ்வளவுதானே?

பாம்பு வரும்னு ஆண்ட்ரியாவுக்கு எப்படித் தெரியும்? அவங்க என்ன படிச்சிருக்காங்க? எங்க படிச்சாங்க? எதையுமே சொல்லவில்லை. காலேஜ் அட்மாஸ்பியரில் ஒரு குத்துப் பாட்டு வைத்திருக்கலாம்? வடை போச்சே!

பாம்புங்க எல்லாம் ஏன் மொத்தமா வருது? தனித்தனியா வந்து ஹீரொகிட்ட அடிவாங்குற வில்லன் அடியாட்கள் மாதிரி ஒண்ணொன்னா அனுப்பியிருக்கலாமே?

தண்ணிக்குள்ளே விழுந்தவங்க எப்படி 3 பேரும் ஒண்ணா ஒரே இடத்துல இருக்காங்க? குறைந்தது 10 மீ இடைவெளி வேணும்னு அரசுப் பேருந்துகளின் பின்புறம் எழுதியிருப்பதைப் படித்ததில்லையா?

புதைகுழி மேல் நிழல் விழுந்தால் புதைகுழி ஃப்யூசாகிடும்னு எந்த புத்தகத்தில் இருக்கு? நீங்க சொன்னா நாங்க நம்பனுமா?

அவ்வளவு பெரிய கல்லை எப்படி உருட்டினார்கள்? அதுவும் பசியுடன் இருக்கும் மூவரும்? இதெல்லாம் ஆங்கில படத்தில் ஓக்கே. தமிழ்ப் படத்தில் செய்தால் நாங்க கேள்வி கேப்பம்ல?

இப்படி அடுக்கடுக்கா கேள்வி கேட்க இடம் கொடுத்து ஒரு படத்தை எடுத்த உங்களை என்ன செய்ய?

அடுத்த படம் பாகம் இரண்டு எனச் சொல்லி இருக்கிறீர்கள். நான் சொல்லுவது போல் நடந்தால் நீங்களும், உங்கள் படமும் தப்பிக்கலாம்.

1. ஸ்க்ரிப்டை எழுதி எங்களிடம் கொடுக்க வேண்டும். எங்களிடமுள்ள பதிவர்களில் சிலரைக் கொண்ட வலைக்கமிட்டி அமைத்து, அதில் லாஜிக் உள்ளதா எனத் தரப் பரிசோதனை செய்து தேர்ந்தெடுக்கப்பட்டால் நீங்கள் அதைத் திரைப் படமாக எடுக்கலாம்.

2. படம் எடுக்க எவ்வளவு கால அவகாசம் எனச் சொல்ல வேண்டும். அதிலிருந்து தாமதமாகும் நாள் ஒவ்வொன்றிற்கும் 36% வட்டி வசூலிக்கப்படும். 12% நிர்வாகச் செலவுகளுக்கு வைத்துக் கொண்டும் மீதி 24% தயாரிப்பாளருக்கு வழங்கப் படும். தவறும் பட்சத்தில் உங்களுக்கு வழங்கப் படும் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வலைக் கமிட்டியாருக்கு அதிகாரம் உண்டு.

3. தயாரிப்பாளர் தரும் பணம் எவ்வளவு? என்ன வகையில் அதைச் செலவு செய்தீர்கள் என நாளதுவாரியாக கணக்கை எங்களிடம் காண்பிக்க வேண்டியது, அதைக் வலைக் கமிட்டியார் ஆய்வு செய்து தனிக்கை செய்தபின் அடுத்த கட்டப் பணம் வழங்கப் பரிந்துரைக்கப் படும்.

4. ஒரு(வழியாகப்) படம் எடுத்து முடிந்ததும் வலைக் கமிட்டியிடம் திரையிட்டுக் காட்ட வேண்டியது. வலைக் கமிட்டியார் அதிருப்தி தெரிவிக்கும் பட்சத்தில் வெளியிடத் தடை விதிக்கப் படும்.

5. வலைக் கமிட்டியார் ஒரு வேளை திருத்தங்கள் ஏதேனும் பரிந்துரைத்தால் அதை உம் சொந்தச் செல்வில் எடுக்க வேண்டும். வலைக் கமிட்டியோ அல்லது தயாரிப்பாளரோ பொறுப்பேற்கமாட்டார்கள்.

6. திரைப்படம் வெளியாகி அதிருப்தியைச் சம்பாதிக்கும் பட்சத்தில், வலைக் கமிட்டி ஒன்று கூடி நீங்கள் மேலும் திரைப்படம் எடுக்கலாமா, அதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா என விவாதித்து முடிவு செய்யும்.

குறிப்பு : இந்தக கட்டுப்பாடுகள் நீங்கள் எடுக்கும் படத்திற்கு மட்டும்தான். பிறர் எடுக்கும் படத்தைப் பற்றி கவலைப் பட மாட்டோம். முடிந்தால் ஆங்கிலத்தில் எடுத்துத் தமிழ் சப் டைட்டிலுடன் வெளியிடுங்கள் அப்பொழுது லாஜிக் பார்க்க மாட்டோம். கேமரூனெல்லாம் எங்களிடம் ஸ்கிரிப்ட்டைக் காட்டினார் தெரியுமா? வரவு செலவுக் கணக்கெல்லாம் நாங்கள்தான் ஆடிட் செய்தோம்.

…………………………………………………………. வேலனின் கடிதம் தொடரும்

.