காணமல் போனவர்கள்

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

அன்றாடம் நம் கண்முன் காணும் சிலரைச் சில நாட்களாகக் (ஆண்டுகளாக?) காண்பதில்லை என்பது நமது புத்திக்கு உரைப்பதே இல்லை என்பதான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வாறான ஒரு தேடலில் ஞாபகங்களின் உள்ளடுக்குகளிருந்து கிளர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலர்.

1. ஆப்பக்கார ஆச்சி.

ஆச்சி என்றாலே செட்டி நாட்டு ஆச்சி ஞாபகம் வந்தாலும் ஆச்சி என்பது தென் மாவட்டங்களில் பாட்டியைக் குறிக்கும். ஆப்பக்கார ஆச்சி வித்தியாசமான ஒரு நபர். குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவராகவோ அல்லது மருமகள் கொடுமைக்கு ஆட்பட்டவராகவோ இருப்பார். அவர் குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தவியலாத பாசத்தையும் நேசத்தையும் தான் ஆப்பம் விற்கும் இடங்களில் இருக்கும் சிறு குழந்தைகளிடம் கசியவிடுவார். இடுங்கிய கண்களினூடான வசீகரச் சிரிப்பு கொள்ளை கொள்வதாக இருக்கும்.

சில சமயம் சம்சாரி வீடுகளில்(வயல் வேலை செய்பவர்கள்) உள்ள குழந்தைகளுக்கு பசி அதிகமிருக்கும் ஆனால் வசதி இருக்காது. ஒன்று அல்லது இரண்டு ஆப்பங்களை சாப்பிட்டுவிட்டு மேலும் ஆப்பத்துக்கு ஏங்கும் கண்களைக் கண்டுவிடும் ஆச்சி, இலவசமாகவே மேலும் இரண்டை வழங்கிச் செல்வார். அதே ஆச்சி மச்சு வீட்டு ஆட்களிடம் பைசா சுத்தமாகக் கறந்து விடுவார்.

இப்பொழுது எங்கேனும் இந்த ஆச்சிகளைப் பார்க்க முடிகிறதா?

2. சேமியாப் பாயாசம் விற்பவர்.

செங்கோட்டை, தென்காசி குற்றாலம் சுற்றுப்புறங்களில் மிகவும் பிரபலமானது இந்த சேமியாப் பாயாசம். பொதுவாக கிராமங்களில் அரிசிப் பாயாசம் அல்லது பருப்புப் பாயாசம்தான் வைப்பர். சேமியாப் பாயாசம் என்பது எட்டாக்கணி. திருவிழா நாட்கள் மற்றும் கடைசி வெள்ளிகளில் சில வீடுகளில் சாத்தியப்படுவது.

எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் ஒரு திரி ஸ்டவ் அல்லது கனன்று கொண்டிருக்கும் கரி அடுப்பு, அதன்மேல் வைத்த அலுமினியப் பாத்திரம். இவ்விரண்டையும் ஒன்றாகக் கட்டி வைத்திருப்பார். அலுமினியப் பாத்திரத்தின் மீதிருக்கும் தட்டு உள்ளிருக்கும் அகப்பையின் காம்பு வெளியே நீட்டிக் கொண்டிருக்க வசதியாக. இன்னொரு கையில் நான்கைந்து கண்ணாடி டம்ளர்கள் வைத்திருப்பார்.

கேட்டவுடன் ஒரு அகப்பையில் கோதி கண்ணாடி கிளாசில் தருவார். நான் சொல்லும் பகுதிகள் ஆரியங்காவுக் கணவாய்க் காற்றும் சிலுசிலுவென குளிரும் அடிக்கும் பகுதி எனவே அவர் தரும் பாயாசம் சுடச்சுட அமுதம் போல இருக்கும்.

”ச்சேமியாப் பாயாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ” என உச்ச குரலில் ஒலித்த இந்தக் குரலைத் தற்போது கேட்டவருண்டோ?

3. எண்ணைக்காரச் செட்டி(யார்?).

ஜாதியை இழிவாகக் குறிப்பிடுதல்ல நோக்கம். அவரது பெயர் பெரும்பாலும் ஏதோ ஒரு பெருமாளாகத்தான் இருக்கும்( ஐய்யம் பெருமாள், சக்திப் பெருமாள், கண்வதிப் பெருமாள்). தலையில் மும்பைவாலாக்கள் வைத்திருப்பதுபோல் ஒரு பெரிய பெட்டி. உள்ளே எண்ணெய்ப் பாத்திரங்கள் இருக்கும். அளந்து ஊத்த உழக்கும், துடைக்க ஒரு துணியும் வைத்திருப்பார்.

ஒரு ஊருக்குள் யாரார் வீட்டில் எத்தனை நபர்கள் யார் வீட்டில் அதிகம் செலவாகும் யார் வீட்டுக்கு வாராவாரம் செல்ல வேண்டும் யார் வீட்டுக்கு மாதம் ஒருமுறை செல்லவேண்டும் என எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பார். என்னதான் கறாராக வியாபாரம் பார்த்தாலும் மதிய உணவு யாராவது ஒரு வாடிக்கையாளர் வீட்டில்தான் இருக்கும். அதற்கு ஒரு ஆழாக்கு எண்ணெய் கூடுதலாகக் கொடுப்பர். ஒரு வகைப் பண்டமாற்றுப் போல. G for H லும், இதயத்திலும் மறைந்து போன இவர்களை எங்கேனும் பார்த்ததுண்டா?

4. உப்புக்காரத் தாத்தா.

ஒற்றைமாட்டு வண்டியில் வரும் இரட்டைநாடி ஆசாமி. இரண்டு மூட்டைகள் உப்பு வைத்திருப்பார். உப்ப்ப்ப்பேஏஏஏஏஎய்ய்ய்ய் என்ற சத்தம் கேட்டதும் அடுத்த வீதியில் இருப்பவர்கூட கிடாப் பெட்டியை தயார் செய்து வைத்திருப்பார்கள். சுப்பையா என்ற பெயர் கிராமங்களில் அதிகம். உப்பு என்றால் கணவரைக் குறிக்குமென வேறு பெயர்களில் உப்பை அழைக்கும் பெண்களிடம் வேண்டுமென்றே வழக்கடிப்பார்.

நாள் முழுவதும் சுற்றி விற்றது போக மீதமுள்ள அரை அல்லது கால் மூட்டையை யாராவது ஒருவர் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு கிளம்பிவிடுவார். மீண்டும் அடுத்த மாதம்தான் வருவார்.

உப்பிட்ட இந்த நல்லவரைக் கூட மறந்துவிட்டோம்.

மேலும் சிலரை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

.

Advertisements