கவிதை

தோற்ப நும் குடியே

War

உயிலின்படியே பாகம் பிரித்தாயிற்று. என்றாலும் பொதுவில் நிற்கும் மாமரத்தின் பலனை யார் அனுபவிப்பது என்பதில் சிக்கல்.

அப்பா, “எலேய் என்ன ரெண்டு பேரும் ஏம்லே எசலுதிய? ஊர்ல என்னல சொல்லுவானுவோவோ? பாண்டியண்ணாச்சி பசங்க அடிச்சிக்கிட்டு
பொரளுதானுவோன்னுதானே? உங்காமத் திங்காம உங்களுக்குன்னு சம்பாதிச்சு வச்சுட்டுப்போன உங்கப்பனுக்குக் கெட்ட பேர ஏம்லே உண்டாக்குதிய?” என்றும் சொல்லிப் பார்த்தார்.

கடைசியில் மரத்தை குத்தகைக்கு விட்டு பணத்தைச் சரிபாதியாக வைத்துக் கொள்வது என்று முடிவானது. பகை, நெருப்பு, கடன்  மூன்றையும் மீதம் வைக்காமல் தீர்க்க வேண்டும் என்பது உண்மையாகி விட்டது.

தம்பியின் தொந்திரவு தாங்க முடியாமல், நிலத்தை விற்றுவிட்டு மாமனார் ஊரில் நிலம் வாங்கி பாடுபடுவதாகத் திட்டம், அண்ணனுக்கு. தம்பி நிலை ஆப்பசைத்த குரங்கு. சொந்த அண்ணனையே சகிக்க முடியாதவனா மாற்றானை சகிப்பான்? ஊர் முழுவதும் கடன் வாங்கி, தானே வாங்கி விட்டான். என்றாலும், விவசாயம் செய்யக் கை முதல் இல்லாமலும் வட்டி கட்ட முடியாமலும் நொடிந்து விட்டான். அண்ணனும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.  புது இடவாகு புடிபடவில்லை. வேலையாட்களும் சரியாக அமையவில்லை.

இது தொன்றுதொட்டதுதான். நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் போரிட நேர்கையில், கோவூர் கிழார் பாடியதும் இதைத்தான்,

போர்க்களத்தில் நிற்பது, வேப்பமாலை அணிந்த பாண்டியனும் அல்லன், பனையிலை அணிந்த சேரனும் அல்லன். ஒரு பக்கம் ஆத்தி மாலை அணிந்த நீ. உன்னை எதிர்த்து ஆத்தி மாலை அணிந்த உன் சகோதரன்.

உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் சோழன் குடி தோற்றதாக ஊர் பேசுமே? மாறாக இருவருமே வெற்றி கொள்ளும் வகையில் போரின் நியதியும் இல்லையே. நீங்கள் செய்வது உங்கள் குலத்திற்கு அழகில்லை.

உங்கள் அழிவை எதிர்பார்த்துத் தங்கள் தேர்களை அலங்கரித்துக் காத்திருக்கு இதர மன்னர்களுக்கு உங்கள் செயல் உடல் பூரிப்பை அளிக்கிறது.

இரும்பனை  வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பநும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
குடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே.

Advertisements

பேசாத பேச்செல்லாம்

பிரம்பு வாத்தியார் கந்தசாமி,
பாட்டு டீச்சர் சரஸ்வதி,
இடிந்து விழுந்த ஏழாப்புக் கட்டிடம்
தோத்து அழுத கபடிப் போட்டி
மயங்கி விழுந்த சுதந்திர தின மார்ச்
மாற்றலாகிப் போன சாந்தி டீச்சர்
எட்டாப்பில் திருமணமாகிய புனிதா
என
பேச எவ்வளவோ இருந்தும்
அவனைப் பற்றியே
அரை மணிநேரம் பேசிச் சென்றான்
எதிர்பாராத தருணமொன்றில்
சந்திக்க நேர்ந்த
பள்ளித் தோழன்.

கலைடாஸ்கோப் – 26/07/2010

.

நீண்ட நாட்களுக்குபிறகு கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போயிருந்தேன் குடும்பத்தோடு. பழைய நாகர்கோவில், நெல்லை முகங்களைக் காணவில்லை. இருந்த சிறுவர்களுக்கும் நாம் பேசுவது புரியவில்லை, அவர்கள் பேசுவது நமக்குப் புரியவில்லை.

“தும் பிஹாரிஹே க்யா?” என்றேன் என் உடைந்த ஹிந்தியில்.

“நஹி நஹி ஒரியா” என்கிறான்.

பாதிக்கு மேல் வெளி மாநில ஆட்கள். முன்பெல்லாம் சீருடை அணிந்திருப்பார்கள். பையன்கள் பார்வைக்கு மிகவும் பொடியன்களாக இருப்பதால் சீருடை கொடுத்துச் சிக்கலில் மாட்டவேண்டாம் என விட்டுவிட்டார்கள் போல இருக்கிறது.

வடவள்ளியில் காலை 8 முதல் 9 மணி வரை பாதிக்குப் பாதி வெளிமாநில ஆட்கள் முகம்தான் தென்படுகிறது. இவர்கள் தட்டிப் பறித்த வேலையைச் செய்து கொண்டிருந்தவர்கள் தற்பொழுது எங்கே?

*****************************************************************

”ஒம்மக்கிட்ட நான் என்னத்தச் செல்லியதுக்கு? நாம குடிச்சதுக்கு, வண்டியில கொலேரம் சந்தைக்குப் பெய் அவ சரக்கெடுத்து தந்ததுக்கு, இப்ப வாண்டினதுக்கு எதுக்குமே நீரு நயாபைசா குடுக்கேல. இனிமேலும் கனவாயிட்டே வெறுங்கையோட பெய் நின்னா அவ சீலையை உரிஞ்சி தலையில கெட்டீற்ரு ஆடுவான்னு உள்ள சங்கதி உமக்குத் தெரியாதா?”

மேலே உள்ள உரையாடல் உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் தயங்காமல் குமாரசெல்வா எழுதிய கயம் சிறுகதைத் தொகுப்பைப் படிக்கலாம். நல்ல சிறுகதைகள், ஆனால் குமரி மாவட்டத்தின் விளவங்கோடு பகுதியில் பேசப்படும் பேச்சுவழக்கில் எழுதி இருக்கிறார்; அச்சு அசலாக. பக்-192-196 வட்டாரச் சொற்களுக்கு விளக்கமும் சொல்லி இருக்கிறார்.

கயம் சிறுகதை நன்றாக இருக்கிறது. கதை, கதைக்குள் கதை, அதற்குள் ஒரு கதை என ஒரு சிக்கலான கதை. குறுவெட்டி என்ற கதையைத் தவறவிடாதீர்கள். தனக்கு பால்வினை நோய் இருக்குமோ என்ற அச்சத்தில் ஆட்படுபவன் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகிறான் என்பதுதான் கதை. அதை வைத்து கம்யூ தோழர் ஒருவர் செய்யும் அரசியல் சிரிப்பை வரவழைக்கிறது.

காலச்சுவடு பதிப்பகம் – விலை ரூ. 150

*******************************************************************

நானும் செல்வாவும் மதராசபட்டிணம் பார்த்தோம். எனக்குப் பிடித்திருந்தது. பீரியட் படம் எடுப்பதன் சிரமங்களைப் புரிந்து கொண்டால் இந்தப் படத்தில் விஜயின் உழைப்பு புரியலாம்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் காட்சி அமைப்பிலும், குறிப்பாக எடிட்டிங்கிலும் அதை சரி செய்து விடுகிறார்கள். ஆர்யாவின் உடை விஷயத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றபடி கிராபிக்ஸ் துணையுடன் நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். என் தனிப்பட்ட அபிப்ராயம் ஜி வி பிரகாஷின் இசை படத்திற்குப் பொருந்தி வரவில்லை என்பதே.

Music should create and complement a mood for the frame என்ற கூற்று நினைவு கொள்ளத் தக்கது.

*******************************************************************

வெக்கை

வெந்து புழுங்கியத்தில்
விசிறியை ஓடவிட்டேன்

வட்டப் படலமாய்த்

தொங்கிச் சுழன்ற
மின்விசிறி இறக்கைகள்
மூன்றாகப் பிரிந்து
ஒன்றை ஒன்று
துரத்தத் துவங்கியதில்
சாயம் போயிருந்த
அந்த இறக்கைகள்
என்னைக் கடப்பதை
எண்ணத் தொடங்கியது காலம்

என்னைச் சூழ அடர்ந்த காற்று

காதோரங்களில் நரை ஏற்றியதில்
பதட்டமாகி விசிறியை நிறுத்தினேன்

வெந்து புழுங்கியது வெளி

அனுஜன்யா எழுதிய கவிதை இது.

சென்ற மாதம் நேரில் சந்தித்தபோது அவரது ஆதங்கம் வெளிப்பட்டது. “அனானிப் பின்னூட்டங்கள்கூடச் சரி அண்ணாச்சி, ஆனால் நான் மிகவும் மதித்த சிலரே அப்படி எழுதியதால் வருத்தமாக இருக்கு” என்றார்.

மீண்டு(ம்) வாருங்கள் நண்பரே.

நான் குரங்கு


நான் குரங்கு.
பானைக்குள் விழுந்து கள் குடிக்கும்குரங்கு.
வாலைக் கண்டு பாம்பென்று பதறும் வழிவந்ததில்லை.
நுனிவாலில் எழுந்து படம் விரிக்கும் பாம்பை
பகடி சொல்லும் குரங்கு.

நான் குரங்கு.
காண்பதையெல்லாம் களவுண்டு தின்றும்
கும்பிக்குள் தடநெருப்பு அடங்காத குரங்கு.

நான் குரங்கு.
நினைவுக் கோளாறால் மதியழிந்த குரங்கு.
எல்லா மரத்திற்கும் தாவி
எல்லா கிளைகளையும் உலுக்கி
எல்லா இலைகளையும் உதிர்த்து விட்ட பின்னும்
நினைவடங்காப் பெருவெறியில்
மண்ணைக்கீறி வேரைக் கடிக்கும் மூடக்குரங்கு.

நான் ஒரு குரங்கு.
தீங்கொன் றறியாத அப்பாவிக் குரங்கு.
ஒடிந்த கிளைகளை ஆட்டிப்பார்க்கும்,
நைந்த கனிகளை முகர்ந்து பார்க்கும்,
உதிர்ந்த இலைகளை அள்ளிக்கொண்டு போய்
மரத்திலேயே ஒட்டப்பார்க்கும் பேதைக் குரங்கு.

நான் ஒரு குரங்கு.
அடிக்கடி ஆப்பில் அகப்பட்டுழலும் அழுமூஞ்சிக்குரங்கு.
மருந்தில்லாக் கொடுநோயால் தாக்குண்ட குரங்கு.

நான் ஒரு குரங்கு.
கரணமிட்டு கையேந்தும் குரங்கு.
மலத்தினும் புழுத்த யாரினும் கடைய இழிக்குரங்கு.

ஆனாலும் நான் குரங்கு.

பானைக்குள் விழுந்து கள்குடிக்கும் குரங்கு.
படம் விரிக்கும் பாம்பை பகடி சொல்லும் குரங்கு.
பெருவெறி மூளும் கடுவளிக்குரங்கு.
ஊழியை வாலில் கட்டி இழுத்து வரும் குரங்கு.
தென் இலங்கை தீக்குரங்கு.
பதின்மதக்களிறு ஓருடலின் உள்ளே புகுந்திட்ட குரங்கு.
நான் குரங்கு…

என்னடா இந்த ஆளு சுயசரிதைக்கவிதை எழுதறானேன்னு யோசிக்கிறீங்களா? இல்லைங்க இது நண்பர் சத்யமூர்த்தி என்ற இசை எழுதியது. கொஞ்சமா எழுதினாலும் நிறைவா எழுதும் ஆள். இவரது பல்சர் கவிதையைப் படிங்க அதிலுள்ள படிமக் குறியீடு அசத்தலா இருக்கு.

கலைடாஸ்கோப் – 17-07-2010

.

இன்றைய (அ)லட்சியம் நாளைய (ஏ)மாற்றம்.

திருச்சியில் ஒரு ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம். இரண்டுமே சரிதானே?

*******************************************************************

திருச்சியில் இருக்கும் எங்கள் நிறுவன எக்ஸிக்யூட்டிவின் பைக் ரிப்பேராகி விட்டது. ஆனால் இரண்டு நாட்கள் தொடர் அலைச்சல் இருந்தது. ஆட்டோ பேசினால் கட்டுபடி ஆகவில்லை.

என்ன செய்யலாம் என மேன்சன்காரர்களிடம் பேசியதில் சுலபமான தீர்வு கிட்டியது.

சைக்கிள் கடை ஒன்றில் டிவிஎஸ் எக்ஸ் எல் வண்டி வாடகைக்குத் தருகிறார்கள். தெரிந்தவர்கள் உறுதி சொல்ல வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் மட்டுமே. பெட்ரோல் அவர்களே போட்டுத் தருகிறார்கள். இடையில் நின்றால் பெட்ரோல் போட வேண்டியது நமது வேலை.

*******************************************************************

”வாங்க உட்காருங்க”
“நன்றி சார்”
“என்ன படிச்சிருக்கீங்க?”
“பி ஏ”
“பி ஏல என்ன மேஜர்?”
“மேஜர்லாம் இல்ல சார்”
“அதெப்படி? சரி மொழி தவிர வேற என்ன பாடம் படிச்சீங்க?”
” ஜியாக்ரபி”
“பி ஏ ஜியாக்ரபியா?”
“இருங்க சார் நான் இன்னும் சொல்லி முடிக்கலை”
“சொல்லுங்க”
“ஜியாக்ரபி, ஸ்டேட்டிஸ்டிக்ஸ், ஹிந்தி”
“என்னது இதெல்லாம்?”
“நான் பி ஏவில் படித்த பாடங்கள்”
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதெப்படி ஒருவர் இளங்கலையில் இம்முன்றையும் ஒருசேரப் படிக்க முடியும். ஜியாக்ரபி படிக்கவும், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் படிக்கவும் வேறு வேறு மனநிலை தேவை. கூடவே இந்தி படிக்க முற்றிலும் வேறு மனநிலை தேவை.

பி எஸ் சியில் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி & மேத்ஸ் மூன்றையும் ஒரு சேரப் படிக்கிறார்கள். குல்பர்காவில் மட்டுமல்ல; மொத்த கர்னாடகாவிலும் இதே நிலைதான். ஒருவேளை எம் ஏ அல்லது எம் எஸ்சியில் தனிப்பாடமாகப் படிப்பார்களோ?

*******************************************************************

வித்தியாசமான விளம்பரங்கள் செய்வதில் மெக் டொனால்டு காரர்கள் பிரபலமானவர்கள். அவரகளது கடைகளில் இலவசமாக காப்பி தருவதை இப்படி விளம்பரித்திருக்கிறார்கள்.


விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு விளக்குக் கம்பமாகவும் ஆச்சு. இதைத்தான் கிராமங்களில் ஆடு மேச்சமாதிரியும் ஆச்சு அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு என்பார்கள்.

*******************************************************************

இந்த வாரம் ஜீவ்ஸின் கவிதை; குழுமத்தில் பகிரப்பட்ட ஒன்று.

தவறுகள்..

அலுவலகத்தின் பிரச்சினை
அகத்தின் பிரச்சினை
அனைத்தும் சேர்ந்திருக்க
அப்பாவென்று அழைத்து
கை பிடித்து விளையாட
அழைக்கும் குழந்தையிடம்
உரத்தக் குரலெழுப்பி
கை உயர்த்தி நிற்கையில்
செய்யாத தவறுக்கெல்லாம்
அப்பாவும் அம்மாவும் அடித்த
வலி சுரீரென எழுகிறது

கவிதையின் இறுதியில் ”உள்ளங்கையில்” என்ற வார்த்தை இருக்கிறது. அது இல்லாமலேயே செறிவாக இருப்பதாகத் தோன்றியதால் நீக்கியிருக்கிறேன்.
அவரின் சிறுகதை அகநாழிகை இதழில் வெளியாகி இருக்கிறது.

காட்சிப்பிழை

மெதுவாகத் தொடங்கும் வீடியோவில்
தன் ஆடைகளைக் களையத் துவங்குகிறாள்
அப்பெண்மணி
”வேற யாரும் பாக்க மாட்டாங்களே?
நீ பாத்ததும் டெலீட் பண்ணிடணும்.
வெளிய தெரிஞ்சா அவ்வளவுதான் நான் செத்திடுவேன்”
என்ற பிதற்றலுடன்

“கண்டிப்பாத் வெளியே தெரியாது,
என் மீது நம்பிக்கையில்லையா ?”
என்ற உத்திரவாதத்திற்குபின்
மீண்டும் உற்சாகமாகக் களைகிறாள்.

அவள் அங்கங்களைப் பற்றிய
சந்தேகம் ஏதுமின்றிக்
காட்சிப் படுத்துகிறது கேமரா
இறுதியில்
ஒரு புணரும் காட்சியுடன்
முடிவடைகிறது.

காட்சிகள் கொடுத்த
கிளர்ச்சிகளைவிட
பொய்த்துப் போன நம்பிக்கைக்கள்
அயர்ச்சியைத் தருகின்றன.

இதை வாசிக்கும்
இத்தருணத்தில்
எங்கேனும் ஒருத்தி
தன் ஆடைகளைக்
களைந்து கொண்டிருப்பாள்
கேமிரா முன்பாக

வேறு வார்த்தைகளில்
அதே கேள்விகளுடனும்
அதே உத்திரவாதத்துடனும்.

நாளையோ அல்லது
நாளை மறுநாளோ
உங்கள் பார்வைக்கு
அது வரக்கூடும்
என்பதறியாமல்

கலைடாஸ்கோப் – 5/4/10

அங்காடித் தெருவைப் பற்றி பதிவர்கள் பாராட்டி எழுதியது மகிழ்வாக இருந்தது. சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு படைப்பு இதுவரை வந்ததில்லை.

ஆனாலும் சுரேஷ் கண்ணன் பதிவில் வந்த பின்னூட்டங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளில் இந்த இரண்டு கேள்விகள் சமுதாயத்தின் மீதான அக்கறையை முன்வைக்கின்றன. இக்கேள்விகளுக்கு இயக்குனர் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்; அடுத்த படத்திலாவது.

1. டிவிஎஸ் க்ரூப்பும், அம்பானிங்களும் சுரண்டுறதை தெகிரியமா படமெடுக்குற தில்லு இந்த இயக்குனருக்கு இல்லையே?

2. இந்த படம் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறதா?. உண்மையில் ரசிகர்களை பாதித்து இருந்தால், அந்த அங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர் கூட்டம் பத்து சதவீதம் குறைந்து இருக்க வேண்டும், அல்லது அங்கு வேலை பார்க்கும் இரண்டு சதவீதம் ஊழியர்களாவது ராஜினாமா செய்து வேற வேலை, வியாபரத்திற்கு சென்று இருக்க வேண்டும்

இவ்விரண்டு கேள்விகளும் விரிவாகப் பதிவாக இங்கே

**********************************************************

இந்தமுறை கோவை இந்து மக்கள் கட்சி ஒரு வித்தியாசமான பிரச்சினையை முன் வைத்துப் போராடுகிறது.

சானியாவுக்கு இந்திய அரசு வழங்கிய பட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க? இ ம க சம்பத்தை வளர்த்து விட்ட பத்திரிக்கைக்காரரகளைச் சொல்ல வேண்டும்.

**********************************************************

கலைஞர் தொலைக் காட்சியில் வியாழன் இரவு 10.30 க்கு ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது. இயக்குனர் கனவுகளோடிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. அவர்கள் இயக்கைய குறும்படமொன்றைத் திரையிட்டு விளக்க வாய்ப்பளிக்கிறார்கள். நடுவர்களாக மதனும், பிரதாப் போத்தனும்.

பிரபல இயக்குனர் ஒருவர் சிறப்பு விருந்தினராக வருகிறார். அலசல் பயனுள்ளதாகவும் குறும்படத்தை எடுத்தவர் தன்னைச் செதுக்கிக் கொள்ளவும் உதவுகிறது.

சிலருக்கு வாய்ப்பும் கிட்டுகிறது. சென்றவாரக் குறும்படத்தில் நடித்தவருக்கு வசந்தபாலனின் அடுத்தபடத்தில் நடிக்க வாய்ப்புக் கிட்டியது.

**********************************************************

வாழ்க்கையை அதன் இயல்பான குரூரத்துடனும், கொப்பளிக்கும் கோபத்துடனும், வாட்டி எடுக்கும் வெறுப்புடனும் இன்னும் இயாலமை, பொறாமை என அதன் கறைபடிந்த பக்கங்களை நாவலாக்கி எழுதுவதில், பெண் எழுத்தாளர்களில் சு.தமிழ்ச்செல்வி, எனக்குப் பிடித்தவர்.

அவர் எழுதிய கற்றாழை, அளம், கீதாரி மூன்று நாவல்களையும் பரிந்துரைக்கிறேன். மூன்றுமே வேறு வேறு களங்களைக் கொண்டது என்றாலும் வாழ்வை அதன் போக்கிலேயே எழுதி இருப்பது சிறப்பாக இருக்கிறது. எந்த இடத்திலும் எழுத்தாளர் முன் வந்து தன் மொழி ஆளுமையையோ அல்லது தன்னுடைய தத்துவ விசாரத்தையோ வெளிப்படுத்தவில்லை.

சில சமயம் இயல்பாக இருப்பதே சிறப்பான அழகல்லவா?

புத்தகங்கள் மருதா பதிப்பக வெளியீடு.
முகவரி :
மருதா பதிப்பகம்,
10 ரயில் நிலையச் சாலை,
இடமலைப் புதூர்,
திருச்சி – 620012.
தொ பே : 0431-2473184.
மின்னஞ்சல் : marutha1999.rediffmail.com

நினைவூட்டியதற்கு நன்றி அப்துல்லா.

**********************************************************

இசை என்றழைக்கப்படும் சத்யமூர்த்தியின் கவிதை இந்தமுறை. ஞாயிற்றுக் கிழமைகளின் மதியப் பொழுதுகள் ஏகாந்தமானவை. விவரிக்க இயலாத ஆச்சர்யங்களையும் ஆசுவாசங்களையும் அளிப்பவை. அந்த அனுபவத்திலொரு கவிதை.

தென்றல் என்றழைக்கப்படும் ஞாயிற்றுகிழமையின் காற்று

பிஸ்கட்டைப் பிட்டு
தேநீரில் நனைத்து சுவைப்பது போல
இந்த ஞாயிற்றுகிழமையைப் பிட்டு
ஒரு கோப்பை மதுவில் நனைத்து சுவைக்கிறேன்.
மூளைக்குள் கத்திக்கொண்டிருந்த
அலுவலகத்தின் நா
அறுக்கப்பட்டு விட்டது.
மைதானங்களில் மகிழ்ச்சி
ஒரு ரப்பர் பந்தென
துள்ளிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
இக் கொதி நிலம் திடீரெனக் குளிர்ந்து
பெய்கிறது ஒரு ரம்யமான மழை.
ஞாயிற்றுகிழமையின் காற்றுக்குதானா தென்றல் என்று பெயர்
என்றொரு வரி தோன்றியது.
இதையடுத்து உருகிவழிந்த
கண்ணீரின் துளியொன்று
கோப்பைக்குள் சிந்த
எடுத்து அருந்தினேன்.
தாளாத தித்திப்பு அது!
தாளாத தித்திப்பு அது!

**********************************************************

குறிப்பு : இந்த வாரச் சிரிப்பு பதிவிலேயே இருக்கிறது.

கலைடாஸ்கோப் – 25/03/10

கலைடாஸ்கோப் தீட்டும் வண்ணக் கலவைகள் வசீகரமானவை. அவை எழுப்பும் எண்ணற்ற சாத்தியக்கூறுகள் முடிவில்லாதவை. எனக்கு 10 வயதிருக்கும்போது குமரிமுனைக்குச் சுற்றுலா சென்றபோது வாங்கியது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக அதைக் கையிலேயே வைத்திருந்தேன்.

பின் PSG Techல் பணிபுரியும்போது, கலைடாஸ்கோப் டிசைன்ஸ் போட பேஸிக்கில் ஒரு ப்ரொக்ராம் எழுதி அதைப் பின் போர்ட்ரானில் மாற்றி அதையே பாஸ்கலில் மற்றும் சி++ ல் எழுதினோம்.

அதன் பிறகு மீண்டும் இப்பொழுது. நன்றி நேசமித்ரன்.

************************************************************

திருப்பூரில் உள்ள விடுதி ஒன்றில் ஒரு தம்பதியினர் அறை எடுத்துத் தங்கினர். உறவினர் திருமண வரவேற்பிற்கு வந்ததாகவும், தாங்கள் இருவரும் போலராய்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் சொல்லிக் கொண்டனர்.

மாலை அறையிலிருந்து கிளம்பிச் செல்கின்றனர், கையில் ஒரு பெரிய அன்பளிப்புப் பெட்டியுடன். இரவு வெகு நேரம் ஆகியும் அவர்கள் அறைக்குத் திரும்பவில்லை; அடுத்த நாளும் வரவில்லை.

சந்தேகப்பட்டு நிர்வாகத்தினர் அறைக்கதவை உடைத்துத் திறந்தால் உள்ளே வைத்திருந்த எல் சி டி டி வியைக் காணவில்லை.

இதுதான் ரூம் போட்டு யோசிப்பதோ?

************************************************************

Unnumbered account என்ற புத்தகம் வாசித்தேன் கிரிஸ்டோபர் ரீச் எழுதியது.

ஸ்விஸ் வங்கிகளில் நடக்கும் தில்லு முல்லுக்களை அடிப்படையாகக் கொண்டது. நாவலில் எழுதியுள்ளபடிதான் நடக்கிறது என்றால் ஆபத்துத்தான். ஸ்விஸ் வங்கிகளைக் கட்டுப்படுத்துவதே உலக போதைப்பொருள் கடத்துபவர்களும், ஆயுதம் விற்பனையாளர்களும்தான் என்பதாகச் சொல்கிறது நாவல். இது எந்த அளவுக்கு உண்மை என வங்கித் துறையில் பணியாற்றும் பதிவர்கள் சொல்லலாம்.

ஒரு வங்கி இன்னொரு வங்கியைக் கபளீகரம் செய்ய முயல்வதையும், அதில் ஏற்படும் கார்ப்பரேட் துரோகங்கள், ஏமாற்றுதல்கள், பழிவாங்கல் என நாவல் பல தளத்தில் விரிகிறது.

நல்ல பொழுது போக்கு நாவல்.

************************************************************

இந்த முறை வினாயக முருகனின் கவிதைகள் இரண்டு

விளம்பரம்
———-

எல்லா இடத்திலும்
எப்படியோ பூத்துவிடுகிறது
ஒரு விளம்பரம்

எதிர்வீட்டில் திடீரென பூத்திருந்தது
இங்கு சைக்கிளை நிறுத்தாதீர்
கூட ஒரு செல்போன் விளம்பரம்

நேற்று
ஒரு பலான படம் பார்த்துக்கொண்டிருந்தேன்
நிகழ்ச்சியின் இந்த பகுதியை வழங்குபவர்
ஒரு ஊதுபத்தி விளம்பரம்
எனக்கு புரியவேயில்லை

நான் கடவுள்
————

தேநீர்க்கடையில் சந்தித்தவர்
நான் கடவுள் என்றார்
அப்ப நான்?
நீயும் கடவுள் என்றார்
அவன்?
அவள் இவன்
அனைவரும் கடவுள் என்றார்
கடவுளைச் சந்தித்ததில்
கடவுளுக்குப் பரம திருப்தி

தேநீர் குடித்த காசுக்கு
கடன் சொல்லும்போது மட்டும்
ஒரு பொல்லாத கடவுள்
இன்னொரு கடவுள் முகத்தில்
”சுடுதண்ணிய ஊத்திடுவேன் என்றார்

கவிதைகளில் ஒளிந்திருக்கும் சன்ன நையாண்டி சிறப்பஎனக்குப் பிடிக்கிறது

************************************************************

மகன் : இளங்கலை, முதுகலை என்றால் என்னப்பா?

அப்பா : பக்கத்து வீட்டுக் கலையரசி சின்னப் பெண்ணா இருக்கதால இளங்கலை. அவளுக்குக் கல்யாணம் ஆகி அம்மா மாதிரி பெரிய பெண்ணா ஆனதும் முதுகலை.

படம் உதவி : fotosearch.com

விதைகள் விழுந்த நிலம்

விதைகள் புதைந்திருக்கும்
நிலமெப்போதும்
வெம்புவதில்லை

திசையெங்கும்
வேர்கள் கிளைத்துக்
கிழிக்கும்போதும்
வருந்துவதில்லை

விருட்சம்
வசந்தத்தின் வனப்பில்
தன் நிலை மறக்கையில்
புலம்புவதில்லை நிலம்

புயலோ, மழையோ,
இடியோ, வெயிலோ
எம்மாற்றமும் இன்றி
எப்போதும்போல்
விருட்சத்தைத்
தாங்கியபடியே

பின்னொரு நாளில்
விருட்சம் வீழும்போதும்
வேர்க்ளைத் தன்னுள்ளே
புதைக்கும் நிலம்
எப்போதும் அழுவதுமில்லை.

கதம்பம் – 6/01/10

.

அவியல், என்ணங்கள், காக்டெயில், துவையல் போன்ற பெயர்களில் எழுதப் படும் கதம்பத்தின் ஆதார உள்ளடக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து எழுதுகிறார் சங்கர்; கொத்து பரோட்டா என்ற தலைப்பில். ஒரு வாரம் அவரது கொத்து பரோட்டாவைச் சாப்பிடவில்லை எனில் ஏதோ ஒன்றை இழந்தாற்போல் இருக்கிறது. நல்ல சுவை.

********************************************************************

புத்தகச் சந்தை பற்றிய பதிவுகளைப் படிக்க சந்தோஷமாக இருக்கிறது. பதிவர்கள் புத்தகங்களை வாங்குவதும் அது குறித்து பதிவிடுவதும் நல்லது. நானும் சில புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன்.

1. சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன். ( 40+ வயதிலிருப்போருக்குப் பிடிக்கும்)
2. ஆழி சூழ் உலகு – ஜோ டி க்ரூஸ். ( மிகச் சிறந்த ஆக்கம்; மிக இள வயதில் (39). நல்ல தேர்ந்த ஆய்வுக்குப் பின் எழுதிய நாவல்)
3. கடவு – திலீப் குமார் ( குறிப்பாக மூங்கில் குருத்து சிறுகதை. வெகு குறைவாக எழுதும் நல்ல எழுத்தாளர்)
(கடவு, மூங்கில் குறுத்து இரண்டும் வேறு வேறு சிறுகதைத் தொகுதிகள் என அழைத்துச் சொன்ன சிவராமனு(பைத்தியக்காரன்)க்கு நன்றி. மேலும் இரண்டின் பிரதிகள் இப்பொழுது கிடைப்பதில்லை எனவும் சொல்கிறார்)

4. நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பு
5. ஜெயமோஹன் குறுநாவல்கள் தொகுப்பு
6. கோரை – கண்மணி குண சேகரன் ( ஒரு சாதாரண கோரைப் புல் ஒரு மனிதனை வாழ்க்கையின் விளிம்பிற்கே துரத்தித் துரத்தி அடிப்பதை விவரித்திருப்பார்)
7. அளம் – சு.தமிழ்ச்செல்வி (உப்பளத்தையும் அதன் வாழ்க்கைமுறைகளையும் மையமாகக் கொண்ட நாவல்)
8. எனது வீட்டின் வரைபடம் – ஜே பி சாணக்யா. (சிறுகதைகளின் தொகுப்பு)
9. குறுக்குத் துறை ரகசியங்கள் – நெல்லைக் கண்ணன். (நெல்லைத் தமிழில் எள்ளல் கட்டுரைகள்)

********************************************************************

பிரம்மரம் என்ற மோகன்லாலின் திரைப்படத்தைப் பார்க்க வாய்க்கவில்லை நேற்றுவரை. நான் வழக்கமாக சிடி வாங்கும் கடையில் சொல்லி வைத்து ஒரிஜினல் VCD வாங்கிப் பார்த்தேன். என்ன ஒரு நடிப்பு மோகன் லாலிடமிருந்து!

செய்யாத குற்றத்திற்காக சிறைசெல்லும் லால் திரும்ப வந்து வேறு பெயரில் வாழ்கிறார். குடும்பம் குழந்தை என அமைதியானவாழ்க்கை. ஒரு திருமண நிக்ழவொன்றில் சந்திக்கும நபர் அவரது பழைய வாழ்க்கையின் அடையாளங்களைத் தெரிந்தவர். வெளிச்சத்துக்கு வருகிறது. அவரது குழந்தையே அவரைக் கொலைகாரன் என்கிறது. தான் கொலைகாரன் அல்ல என்பதை நிரூபிக்க தன் வகுப்புத் தோழர்களைத் தேடிச் செல்கிறார்.

அவர்களிடம் தன் தரப்பைச் சொல்லி உதவி கேட்கிறார். மறுப்பவரைக் கிட்டத் தட்ட கடத்தி வருகிறார். அவர் குழந்தைக்கு உண்மை தெரிந்ததா? அதன் பின் அவரது வாழ்க்கை செல்லும் திசை என்ன என்பதே மீதக் கதை.

இவ்வளவு அடர்த்தியான ஒரு கதையை எடுத்துக் கொண்டு நேர்த்தியாகப் படைத்திருக்கிறார். பிளஸ்ஸி. இவரது மற்ற படங்களும் நல்ல படங்களே; கருத்த பக்‌ஷிகள், தன்மத்ரா, கல்கத்தா ந்யூஸ்.

நல்ல திரைப்படம் பார்த்த நிறைவு.

********************************************************************

இந்த முறை மதனின் கவிதை ஒன்று

பொய்க்கால் கவிதை

#fullpost{display:inline;}

சற்று வலுவாகத் தட்டினால்
உடைந்துவிடும்படி சொல்லிவிட்ட
ஒரு பொய்யை
ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
இறுதியில் கவிதைக்குள்
இட்டு வைத்தேன்.
பின்னந்தக்
கவிதையை ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
கிடைக்காமல்,
இறுதியில்
நான் பொய்யே சொல்லவில்லையே
என்று கவிதையிடம்
சொல்லிவிட்டேன்.

கவிதையைத் திரும்பத் திரும்பப் படித்தால் வேறு வேறு படிமானங்கள் கிடைக்கின்றன, வீட்டில், அலுவலகத்தில், வெளியிடத்தில் என.

********************************************************************

இந்த வார மொக்கை.

தமிழ் வெளிநாட்டில்தான் வாழ்கிறது – ஆர் எம் வீரப்பன்

அப்புறம் எதுக்கு செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்துறாங்க?

********************************************************************
.