இலக்கியம்

முதல் சமூக நீதிப் போராளி

தன் சீடனின் திறமையின் மீதான அதீத நம்பிக்கையில் துரோணர் சொன்னார், “இச்சபையில் இவனை வெல்ல எவரும் உண்டோ?” திறமையில் சற்றும் குறையாத கர்ணன் சொன்னான் “உள்ளேன் அய்யா”
 
பரஸ்பர நிதி நிறுவனங்கள்கூட யாரும் படித்துவிடமுடியாத 5 அளவு எழுத்தில் “சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை” எனப் பொறுப்புத் துறப்புக் குடுக்கின்றன. துரோணர் அப்படியெல்லாம் சொல்லவில்லை. “வெல்ல, அரசவம்சத்தினன் உளனோ?” எனக் கேட்டிருந்தால் நியாயம்.
 
“யார் நீ? எத்தேச அரசன்?” கர்ணன் நிலைகுலைகிறான். உடுக்கை உழந்தவன் இடுக்கையைக் களைய, துரியோதனன் சபையேறிச் சொன்னான், ”ஒன்றே சாதி”
 
கற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும் வண்மைகை
உற்றவர்க்கும் வீரரென்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக்
கொற்றவர்க்கும் உண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்கும் ஒன்றுசாதி நன்மைதீமைய இல்லையால்.
 
அ.சொ.பொருள்
நலன் நிறைந்த = நலம் நிறைந்த
வண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும்
வாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும்
கோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும்
நற்றவர்க்கும் = நல்ல தவம் செய்தவர்களுக்கும்
நன்மைதீமை இல்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை
 
உடுக்கை இழந்தான் கைபோல என்ற குறளை, எங்கள் தமிழய்யா ராமச்சந்திரன் நடத்திக் கேட்க வேண்டும். “டேய் உடுக்கை இழந்தவன் என்றால் அடிக்கிற உடுக்கு இல்லடா, போட்டிருக்கிற துணி. அதுகூட அவுந்துபோய் அம்மனமாகி நிக்கிம்போது வந்து தோள்ல இருக்க துண்ட எடுத்துக் கட்டி விடுறது இல்லைடா. அது அவிழும் முன்பே உதவுறது. உதாரணமா நீ பள்ளிக்கூடப் பைய ஒரு கைலயும் சாப்பாட்டுப் பைய இன்னொரு கைலயும் எடுத்துட்டுப் போறே திடீர்னு உன் கால்சட்டை கழறுதுன்னு வச்சுக்கோ என்ன செய்வே? டபக்னு உன் முழங்கையால இடுக்கிக்கிட்டு ரெண்டு பையையும் கீழ வச்சிட்டு சரி பண்ணிக்குவ இல்ல, அது மாதிரித்தான். எப்படி முழங்கை அனிச்சையாக உடனே உதவுதோ அது போல உதவுவதுதான் நல்ல நட்பு.”
 
நல்ல தமிழய்யா அமைவது, ஊழ்வினை.
Advertisements

முகிலினி – பாய்ந்தோடும் கசப்பு

 

 

70களின் இறுதியில் தென்னக நூற்பாலைகள், போனஸ் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. பழநியிலுள்ள விஜயகுமார் மில்ஸ் மட்டும் தொடர்ந்து இயங்கியது. “டேய், சைமால எவ்வளவு சதவீதம் முடிவாகுதோ அதைவிட 2% அதிகமா போனஸ் தர்றேண்டா, போய் வேலையைப் பாருங்க” என ஆலை முதலாளி உறுதியளித்ததால். சைமாவில் 35% என முடிவாகியதால்; 37% கொடுத்தார். தீபாவளிக்கு 25% என்றும் பொங்கலுக்கு 12% என்றும்.

வெகுநாட்களுக்கு இதைப் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தேன், 83ல் டிப்ளமோ படிக்க, கோவை பிஎஸ்ஜிக்கு வரும் வரை. ஒருமுறை வகுப்புத் தோழன் அய்யாசாமி சொன்னான், “இதெல்லாம் என்ன போனசு, எங்க விஸ்கோஸ்ல குடுப்பாங்க 55% . ஒரு சூட்கேஸ்ல பணத்தை அடுக்கி சூட்கேசோட கொடுத்திருவாங்க”. வெகு ஆண்டுகளுக்கு அந்தப் பிரமிப்பு விலகாமல் இருந்தது. அதன் பிறகு விஸ்கோசில் நடந்ததெல்லாம் ஒரு துன்பவியல் சரிதம். இரா.முருகவேளின் “முகிலினி” நாவல் அதை விரிவாக அலசுகிறது.

நாவலின் மையச்சரடு பவாணி ஆறுதான். நதிக்கரையில் தோன்றிய விஸ்கோஸ் ஆலை நதியைச் சார்ந்தியங்கிய மக்கள், அவர்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல், வாழ்வு முறை, உறவுகள் ஆகியவற்றில் ஏற்படுத்திய பாதிப்புகளை, மூன்று தலைமுறைக்காலம் நீண்டிருக்கும் நாவல் பேசுகிறது.

பாக்கிஸ்தான் பிரிவினையில் ஏற்பட்ட பெரும்சேதங்களில் வெளியே தெரியாத ஒன்று, இந்தியாவில் இருந்த நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சு விளைவிக்கும் நிலப்பகுதியில் பெரும்பான்மை பாக்கிஸ்தான் பக்கம் போய்விட்டதுதான். பஞ்சுத் தட்டுப்பாட்டைப் போக்க என்ன வழி என யோசிக்கும், கோவையின் மிகப் பெரிய நூற்பாலையின் முதலாளி கஸ்தூரிசாமியும் அவரது மனைவி சௌதாமினியும் எடுக்கும் முடிவுதான் செயற்கை நூலிழையை உற்பத்தி செய்வது.

செயற்கை நுலிழையை பெட்ரோலியப் பொருட்கள் மூலமாகவோ அல்லது மரக்கூழ் மூலமாகவோ தயாரிக்கலாம். இவர்கள் இரண்டாம் முறையைத் தேர்வு செய்கிறார்கள். இத்தாலியிலுள்ள விஸ்கோஸா ஆலையுடன் பங்கு ஒப்பந்தம் செய்துகொண்டு, தேவையான எந்திரங்களையும், மூலப்பொருட்களையும் அவரகளிடமிருந்தே பெற்று, உற்பத்தியை ஆரம்பிக்கிறார்கள்.

ஆலை, சார்ந்தோர் வாழ்வில் ஏற்படுத்தும் நேரிடையான மற்றும் மறைமுகமான ஏற்றம் அலசப்படுகிறது; ஊழியர் ராஜு மூலம். அடிப்படையில் தமிழார்வமும் திராவிடக் கட்சியின் மீது அபிமனமும் கொண்ட அவர் பின்னாட்களில் அரசியல் செயல்பாடுகள் குறித்து விரக்தியுறுவது, நிதர்சனமாக் வெளியாகிறது. அதே நேரம் கோவையிலிருக்கும் மற்ற மில்கள் செயலிழந்து மூடப்படுவதும், பெரிய ஆலைகள் நிரந்தர ஊழியர்களை வீட்டுக்கனுப்பி ஒப்பந்த அடிப்படையில் பெண்பிள்ளைகளைக் கொண்டு இயங்குவதும், அதன் மூலம் வீழ்ச்சியுறும் வாழ்வை ஆரான் மூலமும் சொல்லியிருக்கிறார். கோவை நுற்பாலைகளில் “சுமங்கலி திட்டம்” என்றால் என்ன என்று விசாரித்தறியுங்கள் நாம் உடை அணியும் ஒவ்வொரு முறையும் கூசிப்போய்விடுவோம்.

இயற்கை விவசாயத்தின் மீது காதல் கொண்டிருக்கும் திருநாவுக்கரசின் செயல்பாடுகள் மூலமாக, ஆர்கானிக் பொருட்கள் என்ற பெயரில் நடக்கும் வியாபாரச் சீரழிவுகளையும், அது மக்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கும் மாயையும் தெளிவாக்குகிறார்.

இந்த நாவலை பல நாவல்களாக பி(வி)ரித்தெழுதியிருக்கலாம் முருகவேள், அத்தனை அடர்த்தி. உண்மையான மனிதர்கள் வேறு பெயர்களில் உலவுவதும், சற்றே முலாம் பூசிய உன்மைச் சம்பவங்களும், குறைந்த சதவீதம் புனைவு கலந்ததுமான நல்லதொரு நாவல்.

காங்கிரஸ், ஜனதா, கம்யூனிச, திராவிட அரசியலை விவரிக்க முருகவேள் எடுத்திருக்கும் முயற்சியும், அதன் பின்னுள்ள உழைப்பும் அபாரம். நாவலில் இழையோடும் கருப்பையும் அதனால் வந்த கசப்பையும் குறிக்கும் விதமாக, நாவலின் அட்டைப்படம் கருப்பு வண்ணத்தில் அமைந்திருப்பது சிறப்பு.

கூப்பிடுவது எமனாகக்கூட இருக்கலாம் – வா மு கோமு

எழுத்துலகில் முத்திரை பதித்த எழுத்தாளர்களின்(ஜெயகாந்தன், சுஜாதா) பாதிப்போடு எழுதவந்து பின் தங்களுக்கான தனி நடையைக் கைகொண்டு வெற்றி பெற்றவர்கள் ஏராளம். வா மு கோமு தனக்கெனத் தனி எழுத்துவகை மூலம் (பெரும்பாலும் பாலியல் சார்ந்த) தனி இடத்தைப் பிடித்தவர். அவரது கள்ளி நாவலும் சிறுகதைத் தொகுப்பும் சொல்லத் தக்க படைப்புக்கள்.

ஆனால் எல்லாப் பிரபலங்களுக்கும் நேரும் விபத்து அவருக்கும் நேர்கிறது. ஏற்கனவே எழுதப்பட்ட ஜீரோ டிகிரியை அசலாகக் கொண்டு இவர் ஒரு நகல் படைக்க முயன்றிருக்கிறார். ஏமாற்றமே மிஞ்சுகிறது.

”இந்த நாவலைப் படிக்கும் நீங்கள்” என்று சாரு ஒரு லிஸ்ட் கொடுத்திருப்பார், அதே லிஸ்ட் இந்தப் படைப்பிலும் வேறு தலைப்பில்.என்னதான் சாரு இவரைத் தன் வாரிசாக(இவர் விருமபாவிட்டாலும்) அறிவித்தாலும் அப்படியே காப்பி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். கற்பனை வறட்சியா?

ஜாங்கிரி, லட்டு, பாதுசா, மிக்சர், முருக்கு, பக்கோடா போன்ற இனிப்பு மற்றும் காரங்களை ஒன்றாகக் கலக்கி சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்நாவல். ஒரு வேளை அந்த சுவை பிடித்தவர்களுக்குப் பிடிக்கலாம்.

முன்பே வெளியான சாந்தமானியும் இன்ன பிற காதல் கதைகளும் படைப்பே ஒரு அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த ஒன்று. அதன் நீட்சி இந்தப் படைப்பிலும் உண்டு. இதை விட்டு வெளியே வாருங்கள் கோமு. நீங்கள் சார்ந்திருக்கும் சமுதாயம் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது இதுவல்ல. வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்புக்களைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இப்படி வலையிலிருந்து தரவிறக்கம் செய்தவைகளை அல்ல.

நாவலின் ஒரு அத்தியாயம்கூட நாவலின் இரண்டாம் தலைப்பான “நாவலல்ல கொண்டாட்டம் ” என்பதற்கு நேர்மையாக இல்லை. ஒருவேளை இரண்டாம் தலைப்பின் முதல் வார்த்தைதான் தாங்கள் சொல்லவந்ததோ?அல்லது லேஅவுட் டிசைன் செய்தவர் எழுத்துபிழையாக திண்ட்டாட்டம் என்பதைக் கொண்டாட்டம் என எழுதிவிட்டாரோ?

நாவலாசிரியர்கள் பதிபாளர்களைக் கெடுக்கிறார்களா அல்லது பதிப்பாளர்கள் நாவலாசிரியர்களைக் கெடுக்கிறார்களா தெரியவில்லை. இரண்டுமே அபாயம்தான். என்ன தைரியத்தில் இப்படி ஒரு முயற்சி செய்தீர்கள் என்பதை வேறெங்காவது தெரியப்படுத்தினால் நலம்.

உயிர்மை வெளியீடான இந்நாவல் 246 பக்கங்கள் கொண்டது விரயம் ரூ 150

நாவலல்ல திண்டாட்டம்

குண சித்தர்கள் – க சீ சிவக்குமார்.

”கன்னிவாடி” சிறுகதைத் தொகுப்புத்தான் க.சீ.சிவக்குமாரின் எழுத்தில் நான் முதலில் படித்தது. அவரது எழுத்துக்களில் இருக்கும் மெல்லிய நையாண்டியும் அவருக்கென்று கைவரப்பெற்ற விசேச மொழிநடையும் என்னை ஈர்த்தது.

தொடர்ந்து அவரது மற்ற எழுத்துக்களான “என்றும் நன்மைகள்” சிறுகதைத் தொகுப்பும், “ ஆதிமங்கலத்து விசேசங்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பும் வாசித்திருக்கிறேன். ஆ.ம.விசேசங்கள் அவரது ஆகச்சிறந்த படப்பு எனலாம். தன்னை மறந்த சிரிப்புக்கு உத்திரவாதம்.

”குணசித்தர்கள்” குங்குமத்தில் தொடராக வெளிவந்தபோது சில கட்டுரைகளைப் படிக்க வாய்த்தது. மொத்தமாகப் படிக்கையில் வாழ்க்கை மற்றும் உடன் வாழும் மனிதர்கள் குறித்தான கூர்ந்த கவனிப்பும் அக்கறையும் அவர்கள் மீதான மெலிதான சற்று பகடி கொண்ட வருத்தமும் தெரியவருகிறது.

கட்டுரைக்கான தலைப்புகளே வித்தியாசமாக இருக்கின்றன. பிறவிக் கவிராயன், அதிரக சூடாமணி, செல்வக் கடுங்கோ கோழியாதன், தேவேந்திரன் சுர அசுரன், தீவ திலகை, பகலுறங்கும் பெருமான், எரிதழல் வேலவன், பூட்டு ஜான், மன இறுக்கன் என நல்ல நகைச்சுவைக்கு உத்திரவாதமான கட்டுரைகள்.

கிழக்கு வெளியிட்டுள்ள இப்புத்தகம் 216 பக்கங்களைக் கொண்டது ரூ.125 விலை மதிப்புள்ளது.

ஆசிரியரின் வலைத்தளம்

கொற்கை – ஜோ டி குருஸ்


நல்ல இலக்கியப்படைப்பு ஒரு கால கட்டத்தை அல்லது ஒரு சாரரின் வாழ்க்கையைப் படம் பிடித்துப் பிரதிபலிக்க வேண்டும்.

மனல் கடிகை – எம் கோபால கிருஷ்ணன்
கோரை – கண்மணி குனசேகரன்
அளம், கீதாரி – சு தமிழ்ச் செல்வி
சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெள்தமன்
ஏறு வெயில் – பெருமாள் முருகன்
போக்கிடம் – விட்டல்ராவ்
ஆழி சூழ் உலகு – ஜோ டி குருஸ்
ரத்த உறவு – யூமா வாசுகி
ஆகிய நாவல்கள் அவ்வகையே எனினும் ஜோ டி குருஸின் இரண்டாவது நாவலான கொற்கை இப்பட்டியலில் முதலிடத்தில் வைக்கத் தக்கது.

எதைப்பற்றிய நாவல் இது?

”கால காலமா இங்க முத்தெடுத்த கத, பாண்டியபதி கொற்கய ஆண்ட கத, நாங்க இங்க பிழைக்க வந்த கத, பாய்மரக் கப்பலோடுன கத, கப்ப வந்த கத, வெள்ளக்காரம் வந்த கத, போன கத, இன்னும் என்னென்னமோ கதய…” பக் – 1113

1914 ஆம் ஆண்டில் துவங்கும் இந்நாவல் 1100 பக்கங்களைத் தாண்டி 2000ஆவது ஆண்டில் நிறைவடைகிறது தற்காலிகமாக. சொல்லப்பட்டவைகளினூடாக சொல்லப்பட வேண்டியவை ஏராளம் என்பதை நிறுவுகிறது இந்நாவல்.

எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி மேற்செல்கையில் வீசி எறியப்படுபவர்களின் வாழ்க்கை, யானை வந்து மாலை போட்டு அதிர்ஷ்டம் அடித்த வாழ்க்கை. எது எப்படி என்றாலும் தனக்கென ஒரு கொள்கை வைத்து வாழ்பவர்களின் வாழ்க்கை. எந்தத் தொழிலும் நிரந்தரமல்ல என்பதைப் புரிந்து கொள்ள மறுத்தவர்களின் வாழ்க்கை. கிடைத்தைப் பற்றிக் கொண்டு மேலேறியவர்களின் வாழ்க்கை என இது வரையும் சித்திரம் எண்ணற்றது.

இந்த ஒற்றை நாவல் பல நாவல்களாக விரிகிறது. பாண்டியபதியின் வாழ்க்கை, பிலிப் தண்டல் வாழ்க்கை, சன்முகவேலின் வாழ்க்கை, பவுல் தண்டல் வாழ்க்கை, அல்வாரிஸ் வாழ்க்கை, ரிபேராக்கள் வாழ்க்கை, பல்டோனாக்கள் வாழ்க்கை, பர்னாந்துமார்கள் வாழ்க்கை, நாடார்கள் வாழ்க்கை, பரதவர்கள் வாழ்க்கை, கிருத்துவர்கள் வாழ்க்கை என ஒவ்வொன்றும் தன்னளவில் தனித்தனி நாவலாகவே தோன்றுகிறது.

நாவலின் ஊடாக ஒரு நூற்றாண்டுகாலமாக ஏற்பட்ட சமுதாய மாற்றத்தையும், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கால ஓட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் பதிவு செய்திருப்பது நாவலின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. காமராசர் மறைவு, தி மு க ஆட்சி பிடித்தல் சந்திரபாபு திருமண நிகழ்வு என அந்தந்த வருடத்தில் ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாகச் சொல்லி இருப்பது சுவாரசியமாக இருக்கிறது.

காலச்சுவடு பதிப்பக வெளியீடு
விலை : ரூ 800

”நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன்.” ஜோ டி குருஸின் பேட்டி

உங்கள் திசை நோக்கி என வணக்கத்தைச் சொல்கிறேன் தோழர் குருஸ்.