சீரல்ல அவர்கண் படின்

.

பொதுவெளியில் சாதியின் பயன் உறவுமுறைத் திருமணம் என்பதன் நீட்சியாகத் தொடர்கிறது என்பதைத் தவிர்த்து வேறெதுவும் இல்லாத சூழலில் சாதிய ஆதரவுக்குரல்கள் நசுக்கப்பட வேண்டும்.

இது கோவியாரின் பதிவில் உள்ள வரி. அப்படித்தான் நடக்கிறதா? சாதி முன்னெப்போதையும் விட வீறு கொண்டு இருக்கிறது. தன் மாயக்கரங்களை எங்கெங்கும் நீட்டி பரவுகிறது என்பது என் வாதம். சாதீய ஆதரவுக் குரல்களை எழுப்புவதும் நாம்தானே?

தென் தமிழகத்தின் ஆதிக்கச் சாதியினர், திருமணம் மற்றும் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் போஸ்டர்களிலும் தங்கள் பெயரைச் சாதியுடன் தான் எழுதுகிறார்கள். ஆனால் அவர்களே தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது அதன் உட்பிரிவில் எதைக் கொடுத்தால் மிகப் பிற்படுத்தப்பட்ட் அல்லது சீர் மரபினர் வகையில் ஆதாயங்களைப் பெறமுடியும் எனப் பார்த்துத்தான் சேர்க்கிறார்கள்.

ஒரு முறை திருநெல்வேலியில் விடுதி அறை கிடைக்காமல் திண்டாடினேன். சுரண்டையில் இருக்கும் என் மச்சினனை அழைத்துச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட விடுதிக்குச் சென்று அங்கிருந்து அழைக்கச் சொன்னார். அழைத்தால் அந்த விடுதியில் இருப்பவரிடம் என்ன பேசினாரோ தெரியாது உடனே, “ஏங்க நீங்க அவரோட அத்தான்னு சொல்றதில்லையா? என்னங்க இது”ன்னு சொல்லி உடனே அறை கொடுத்தார். “என்னடே சொன்னே?” என்று கேட்டால், “அது எதுக்கு உமக்கு” என்று மழுப்புகிறான். சாதியின் பெயரால் ஆதிக்கம் அந்த அளவுக்கு. ஆனால் பள்ளிச் சான்றிதழில் ”சீர் மரபினர்”

இன்னும் சிலர் வாழும் இடம் வேறிடமாக இருந்தாலுல் தங்கள் சொந்த ஊரில் சான்றிதழ் வாங்கினால் அதிக பலனிருக்கும் என்பதால் அங்கு சென்று ஆட்களைப் பிடித்து வாங்கி விடுகிறார்கள். சரி அப்படித்தான் மிகவும் சிரமப்பட்டவர்கள், அவர்கள் குழந்தைகள் இந்தப் பயனை அனுபவிக்கட்டும் என்றால் அதுவும் இல்லை; நல்ல வசதியுடன் வாழ்கிறவர்கள்.

இதே போலத்தான் கோவையில் இருக்கும் ஒரு சாதியினர். தங்கள் வீடுகளுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை நுழைய அனுமதிப்பதில்லை. ஆனால் சாதி வழங்கும் அனுகூலங்களை மட்டும் பெறுகிறார்கள்.

ஒரே சாதிக்கு இரண்டு பெயர்கள் ஒன்று உயர்வாகத் தங்களைப் பற்றிப் பெருமை பேச ம்ற்றொன்று அதன் உட்பிரிவு மூலம் பலன்களை அனுபவிக்க என்ற நடைமுறை களைந்தால் நலம்.

இரட்டைக் குவளை முறை இன்னமும் இருக்கிறது. கொங்கு மண்டலத்தில்தான் அது அதிகம். வறியவர்கள் வறியவர்களாகவும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

தறி முதலாளிகளில் சிலர் தன்னிடம் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் படிப்பதை விரும்புவதில்லை. இரண்டு காரணங்கள் – ஒன்று இயல்பாகவே அந்தக் குழந்தைகள் நன்றாகப் படிப்பதும் தன் குழந்தை தேறாதவனாக இருப்பதும் சங்கடத்தில் ஆழ்த்துகிற்து. இரண்டு அந்தக் குழந்தைகள் படித்து வேறு வேலைக்குச் சென்றுவிட்டால் இவர்களுக்கு வேலைக்காரர்கள் கிடைப்பதரிது.

ஒரு கிடாவெட்டில் கூட அனைவரும் சமமாக அமர்ந்து உணவு உண்ணமுடியாது. இவர்களுக்குத் தனிப்பந்திதான். பாலியல் கொடுமைகள் பற்றி இங்கு பொது வெளியில் எழுத முடியாது.

அதே போலத்தான் தலைவர்களைச் சாதிச் சங்கங்கள் கேவலப்படுத்துவதும். சொத்து சுகம் நாடார் / சொந்தந்தனை நாடார் / பொன்னென்றும் நாடார் / பொருள் நாடார் /தான்பிறந்த அன்னையையும் நாடார் /ஆசைதனை நாடார் /நாடொன்றே நாடித் – தன் /நலமொன்றும் நாடாத /நாடாரை நாடென்றார். கண்ணதாசன் இத்தனைமுறை நாடார் என்றதாலோ என்னவோ நாடார் சங்கப் போஸ்டர்களில், காலண்டர்களில் வலம் வருகிறார் பெருந்தலைவர் காமராசர். வ உ சியையும் விடவில்லை இவர்கள். நடிகர் கார்த்திக்கை வைத்துச் செய்த கோமாளித்தனம் இன்னும் பிரபலம்.

அரசியல் கட்சிகள் சாதிவாரியாக வேட்பாளர்களை நிறுத்துவதும் சாதிச்சங்கங்களை ஆதரிப்பதும் வேறென்ன?

உலக மக்களே ஒன்றுபடுங்கள் எனக்கூவும் தோழர்களும் தங்கள் குழந்தைதையைச் சேர்க்கும்போதும் இதே நெறிமுறையைக் கடைபிடிக்கிறார்கள்.

அந்த இந்த இசங்களை, ஈயங்களை, துவாக்களை ஒழிப்பதைவிட்டு முதலில் மாற்றங்களை நம்மிடமிருந்தே நாம் தொடங்கவேண்டும்.

சமீபத்தில் என்னுடைய பிரிண்டிங் மெஷினை விற்கும்போது புரோக்கர் சொன்னது, “சார் 50,000 ரூபாய் குறைச்சுன்னாலும் நம்ம ஆளுகளுக்குக் கொடுங்க சார்”.

அது சரி.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

கலைஞர் உரை:

சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s