கதம்பம் – 15/03/10

கதம்பம் என்ற தலைப்பில் நான்தான் முதலில் எழுதிவந்தேன் என நமது மரியாதைக்குரிய மூத்த பதிவர் திரு.லதானந்த் அவர்கள் தனது வலையில் எழுதியிருப்பதாக நண்பர் சுட்டி தந்தார். முதலில் எழுதிய தேதி முதற்கொண்டு ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

இப்படித்தான் நமது சக பதிவர் ஜாக்கி சேகர் முதலில் காக்டெயில் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தார். நான் பின்னூட்டத்தில், “ இதே தலைப்பில் கார்க்கி எழுதிக் கொண்டிருக்கிறார். நீங்கள் வேறு தலைப்பில் எழுதினால் நலம்” என்றேன். அவரும் உடனே நன்றி சொல்லி சேண்ட்விச் என்ற பெயரில் எழுதுகிறார். இதே போல் திரு.லதானந்த் அவர்களும் சுட்டியிருந்தால் உடனே சரி செய்திருக்கலாம்.

அது சரி பெயரில் என்ன இருக்கிறது? உள்ளடக்கம்தானே ராஜா.

அவரது வயது மற்றும் அனுபவம் இரண்டுக்கும் மரியாதை செய்யும் விதமாக இந்தப் பத்தியை இனி வேறு பெயரில் எழுத உத்தேசம். நல்ல பெயரைப் பரிந்துரையுங்களேன்.

இது வரை வந்த பரிந்துரைகள்
வானவில் / கலைடாஸ்கோப் / தோரணம்

************************************************************

இந்தப் பெயர் வைக்கும் விவகாரத்தில் வைரமுத்து கில்லாடி. அவர் எழுதிய இரண்டு நாவல்களில் ஒன்று இதிகாசம் மற்றொன்று காவியம்.

படைப்புகள் காலத்தால் அழியாமல் காவியம் என்றும் இதிகாசம் என்றும் நிலைத்திருக்கையில் அன்னார் தலைப்பு வசீகரம். புத்தகம் தலைப்புக்கு நேர்மை செய்யவில்லை என்பது வேறு விஷயம்.

அவர் நல்ல திரைப்பாடலாசிரியர் என்பது உண்மை. நல்ல நாவலாசிரியரா?

************************************************************

அனல்காற்று – ஜெயமோஹன் எழுதி தமிழினி வெளியிட்ட நாவல்.

பொருந்தாக் காமம் மற்றும் பருவக் காதல் இரண்டிற்கும் இடையில் அல்லாடும் ஒருவனின் கதை.

சீன் பை சீன் ஆக ஒரு திரைக்கதை மாதிரியே எழுதி இருக்கிறார். படித்து முடித்து பின் முன்னுரையைப் படிக்கும்போதுதான் தெரிகிறது பாலு மகேந்திரா கேட்டதற்காக எழுதிய கதையாம் அது. படமாக எடுக்கப்படாமல் நின்று விட்டது.

ஒரே மூச்சில் படிக்க வைத்தது ஜெ மோ வின் எழுத்து. காமத்தையும் காதலையும் அதனதன் இயல்புடன் வெகு நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார். கதாசிரியர் எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காமல் விஷயத்தை அதன் போக்கில் சொல்லி இருப்பது சிறப்பு.

நல்ல நாவல்.

************************************************************

இந்த முறை மண்குதிரையின் கவிதை.

எங்கள் ஊருக்கு கடவுள் வந்திருந்தார்

எதிர் வீட்டு கருப்பசாமி அண்ணன்
தன் குடும்ப அட்டையை
30 ருபாய்க்கு வாடகைக்கு விடுவதை
பார்த்துவிடுகிறார்

எங்கள் வீதியின் முடிவில் இருக்கும்
ஒரு நியாயவிலை அங்காடியில்
தராசு முள் சரிவதை
தன் நுட்பமான பார்வையால்
கண்டுபிடித்து விடுகிறார்

வட்டாச்சியர் அலுவலகம் அமைந்திருக்கிற
நகரின் முக்கியமான சந்திப்பில்
தேநீர் அருந்த நுழையுமவர்
பின்பக்கம் சில ஆயிரம் ரூபாய்க்கு
ஒரு அரசு அதிகாரி தன் கையெழுத்தை
விற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு கோபமடைகிறார்

புகார் கொடுக்க காவல் நிலையத்திற்குச் சென்றபோது
அங்கொரு ஏழைப் பெண்ணின் கற்புக்கு
நெடிய பேரம் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து
அதிர்ச்சியடைகிறார்

நிதானமின்றித் துடிக்கும் தன் மனதை
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
சன்னதி தெருவிலிருக்கும் பெரிய கட்டிடத்திற்கு வருகிறார்
அங்கே எங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வர் காட்சியளித்துக் கொண்டிருப்பதே
அந்த அதிகாரியின் கையெழுத்தை விற்ற காசில்தான்

விரக்தியடைந்து
தேர்ந்த மொழியால் எங்களைச் சபித்தவாறு
விரைந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்
முக்கியமான சாலையைக் கடக்கும் போது
நாங்கள் தேர்ந்தெடுத்த எம் எல் ஏ கட்டிய பாலம் இடிந்து
சிகிச்சை பலனின்றி
எங்கள் அரசு பொது மருத்துவமனையில் மரணமடைகிறார்

ஒரே கவிதையில் இப்படி சமூகச் சீரழிவுகள் அனைத்தையும் சாடமுடியுமா? சாடியிருக்கிறார். நன்றாக இருக்கிறது. உண்மை சுடுகிறது.

************************************************************

சின்னவளின் சைக்கிள் பஞ்சர் ஆகி விட்டதால் அதை ஒட்ட சைக்கிள் கடை தேடினோம். ஒரு கடையைக் கண்டதும் நான் நின்றேன். அவள் இங்கே வேண்டாமென்றாள்.

“ஏண்டா?” என்றதற்கு பெயர்ப்பலகையைச் சுட்டிக் காட்டினாள்.

“இங்கு பஞ்சர் போடப்படும்”

நல்லா இருக்க டியுபைப் பஞ்சர் செய்வார்களோ?

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s