கதம்பம் – 6/01/10

.

அவியல், என்ணங்கள், காக்டெயில், துவையல் போன்ற பெயர்களில் எழுதப் படும் கதம்பத்தின் ஆதார உள்ளடக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து எழுதுகிறார் சங்கர்; கொத்து பரோட்டா என்ற தலைப்பில். ஒரு வாரம் அவரது கொத்து பரோட்டாவைச் சாப்பிடவில்லை எனில் ஏதோ ஒன்றை இழந்தாற்போல் இருக்கிறது. நல்ல சுவை.

********************************************************************

புத்தகச் சந்தை பற்றிய பதிவுகளைப் படிக்க சந்தோஷமாக இருக்கிறது. பதிவர்கள் புத்தகங்களை வாங்குவதும் அது குறித்து பதிவிடுவதும் நல்லது. நானும் சில புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன்.

1. சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன். ( 40+ வயதிலிருப்போருக்குப் பிடிக்கும்)
2. ஆழி சூழ் உலகு – ஜோ டி க்ரூஸ். ( மிகச் சிறந்த ஆக்கம்; மிக இள வயதில் (39). நல்ல தேர்ந்த ஆய்வுக்குப் பின் எழுதிய நாவல்)
3. கடவு – திலீப் குமார் ( குறிப்பாக மூங்கில் குருத்து சிறுகதை. வெகு குறைவாக எழுதும் நல்ல எழுத்தாளர்)
(கடவு, மூங்கில் குறுத்து இரண்டும் வேறு வேறு சிறுகதைத் தொகுதிகள் என அழைத்துச் சொன்ன சிவராமனு(பைத்தியக்காரன்)க்கு நன்றி. மேலும் இரண்டின் பிரதிகள் இப்பொழுது கிடைப்பதில்லை எனவும் சொல்கிறார்)

4. நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பு
5. ஜெயமோஹன் குறுநாவல்கள் தொகுப்பு
6. கோரை – கண்மணி குண சேகரன் ( ஒரு சாதாரண கோரைப் புல் ஒரு மனிதனை வாழ்க்கையின் விளிம்பிற்கே துரத்தித் துரத்தி அடிப்பதை விவரித்திருப்பார்)
7. அளம் – சு.தமிழ்ச்செல்வி (உப்பளத்தையும் அதன் வாழ்க்கைமுறைகளையும் மையமாகக் கொண்ட நாவல்)
8. எனது வீட்டின் வரைபடம் – ஜே பி சாணக்யா. (சிறுகதைகளின் தொகுப்பு)
9. குறுக்குத் துறை ரகசியங்கள் – நெல்லைக் கண்ணன். (நெல்லைத் தமிழில் எள்ளல் கட்டுரைகள்)

********************************************************************

பிரம்மரம் என்ற மோகன்லாலின் திரைப்படத்தைப் பார்க்க வாய்க்கவில்லை நேற்றுவரை. நான் வழக்கமாக சிடி வாங்கும் கடையில் சொல்லி வைத்து ஒரிஜினல் VCD வாங்கிப் பார்த்தேன். என்ன ஒரு நடிப்பு மோகன் லாலிடமிருந்து!

செய்யாத குற்றத்திற்காக சிறைசெல்லும் லால் திரும்ப வந்து வேறு பெயரில் வாழ்கிறார். குடும்பம் குழந்தை என அமைதியானவாழ்க்கை. ஒரு திருமண நிக்ழவொன்றில் சந்திக்கும நபர் அவரது பழைய வாழ்க்கையின் அடையாளங்களைத் தெரிந்தவர். வெளிச்சத்துக்கு வருகிறது. அவரது குழந்தையே அவரைக் கொலைகாரன் என்கிறது. தான் கொலைகாரன் அல்ல என்பதை நிரூபிக்க தன் வகுப்புத் தோழர்களைத் தேடிச் செல்கிறார்.

அவர்களிடம் தன் தரப்பைச் சொல்லி உதவி கேட்கிறார். மறுப்பவரைக் கிட்டத் தட்ட கடத்தி வருகிறார். அவர் குழந்தைக்கு உண்மை தெரிந்ததா? அதன் பின் அவரது வாழ்க்கை செல்லும் திசை என்ன என்பதே மீதக் கதை.

இவ்வளவு அடர்த்தியான ஒரு கதையை எடுத்துக் கொண்டு நேர்த்தியாகப் படைத்திருக்கிறார். பிளஸ்ஸி. இவரது மற்ற படங்களும் நல்ல படங்களே; கருத்த பக்‌ஷிகள், தன்மத்ரா, கல்கத்தா ந்யூஸ்.

நல்ல திரைப்படம் பார்த்த நிறைவு.

********************************************************************

இந்த முறை மதனின் கவிதை ஒன்று

பொய்க்கால் கவிதை

#fullpost{display:inline;}

சற்று வலுவாகத் தட்டினால்
உடைந்துவிடும்படி சொல்லிவிட்ட
ஒரு பொய்யை
ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
இறுதியில் கவிதைக்குள்
இட்டு வைத்தேன்.
பின்னந்தக்
கவிதையை ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
கிடைக்காமல்,
இறுதியில்
நான் பொய்யே சொல்லவில்லையே
என்று கவிதையிடம்
சொல்லிவிட்டேன்.

கவிதையைத் திரும்பத் திரும்பப் படித்தால் வேறு வேறு படிமானங்கள் கிடைக்கின்றன, வீட்டில், அலுவலகத்தில், வெளியிடத்தில் என.

********************************************************************

இந்த வார மொக்கை.

தமிழ் வெளிநாட்டில்தான் வாழ்கிறது – ஆர் எம் வீரப்பன்

அப்புறம் எதுக்கு செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்துறாங்க?

********************************************************************
.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s