இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் (????)

.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்குத் தோழர்கள் இருவர்; எம்.பாலசுப்ரமணியனும், சண்முக சுந்தரமும். பெரும்பாலும் மூவரும் ஒருவர் வீட்டில் விளையாடுவதும் படிப்பதுமாகக் கழிந்த பருவம். அப்படி ஒரு முறை இருவரும் என் வீடு வந்திருந்த போது. கிராமத்திலிருந்து வந்திருந்த என் அத்தை (அப்பாவின் அக்கா) கேட்டார், ” நீ என்ன ஜாதிடா?”

பாதிச் சாப்பாடு தட்டில் இருக்க எழுந்து போனவன்தான் சண்முகம். அதன் பின் ஆண்டிறுதி வரை என்னுடன் அவன் பேசவே இல்லை. மேற்படிப்புக்கு அவன் வேறு பள்ளிக்கும் நான் வேறு பள்ளிக்கும் சென்றுவிட்டோம். அவன் என்ன ஜாதி என்பது பற்றிய அக்கறை ஏதுமற்றுத்தான் பழகினோம் என்றாலும் அத்தை விதைத்த அந்த விதை எங்களிடையே ஒரு விரிசலை ஏற்படுத்தி விட்டது.

அதைப்போலத்தான் இப்பொழுதும் வலையில் நடக்கிறது. பொதுவான கருத்துக்களை எழுதியும் பழகியும் வந்த நண்பர்கள் இப்பொழுது கட்சி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். If you are not with me, you are against me. என்ற சித்தாந்தம் இங்கு நன்றாகச் செல்லுபடியாகிறது.

மேலும் பின்னூட்டம் இடும் சிலரும் இதுதான் தக்க வாய்ப்பென்று தங்கள் மன வக்கிரங்களையும் இறக்கி வைக்க இது களம் அமைத்துத் தருகிறதென்ற அடிப்படைப் புரிதல் இரு சாரரிடமும் இல்லை என்பது மிக வருத்தமேற்படுத்துகிறது.

அடிப்படைப் பிரச்சினையை ஒட்டியும் வெட்டியும் பேசுவதை விட்டு,, கிளைவாய்க்கால்களை வெட்டி வெட்டி அவரவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க, ஆறு வற்றிப் போனதுதான் சோகம்.

நான் வீடு வாங்கப் பணம் போதாமல் தவித்த போது கை கொடுத்த பதிவர்களில் ஒருவர் இந்து, ஒருவர் முஸல்மான். கிட்டத்தட்ட 8 மாதங்களாகி விட்டன. இப்பொழுதுதான் ஒருவருக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறேன். இன்னொருவருக்கு இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும். அவர்கள் எதைப் பார்த்து எனக்கு உதவினார்கள்?. இத்தனைக்கும் ஒருவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை அப்பொழுது. இருவருமே நான் கேட்காமல் என் நிலையறிந்து தானாக முன் வந்து என் வங்கிக் கணக்கை வாங்கி பணம் அனுப்பினார்கள்.

நல்ல அறுசுவை விருந்தைப் பரிமாறி நடுவில் மலத்தையும் வைக்கும் உங்கள் நாகரீகம் அருவெறுப்பூட்டுகிறது எனக்கு. சலிப்பும் அயர்ச்சியும் மேலோங்குகிறது.

என்றாலும் உங்களைப் போன்றவர்களை இனங்கண்டு ஒதுங்கிப் போகவும் போலல்லாதவர்களை அறிந்து கொண்டு நட்பு பாராட்டவும் வாய்த்திருக்கிறது. எனக்கது போதும் எப்போதும்.

வாழ்க்கை மிகவும் அழகானது, அதை உணரும்போது. நாமே அதை வலிந்து சிக்கலாக்கிக் கொள்கிறோம்.

டிஸ்கி : இது என் போன்று எந்தக் கட்சியிலும் இல்லாத மிதவாதிகளுக்கு. மதவாதிகளுக்கு இங்கிடமில்லை.

டிஸ்கி 2: நன்றி முரளிக் குமார் பத்மனாபன்.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s