சொர்க்கம் மதுவிலா?

.

எனது முந்தைய சஞ்சய் ஏ சி பதிவின் தொடர்ச்சி இது.

இராமச்சந்திரன் தமிழசிரியர் மட்டுமல்ல. தமிழறிஞர். அவரது பட்டிமன்றப் பேச்சுக்கு பழனியில் ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. என் போன்றோர் தமிழில் வாசிக்கவும், எழுதவும் ஆர்வமூட்டியவர்.

இருந்தும் அவரது இறுதிக்காலம் மெச்சும்படி இல்லை. யாருமற்ற வனாந்திரத்தில் இறந்து கிடந்தார். மூன்று நாட்களுக்கு எந்தத் தகவலுமற்று அலைமோதியதில், மாடு மேய்ப்பர் ஒருவர் கண்டெடுத்தார் அவரது உடலை. நாயும் நரியும் தின்றது போக மீதத்தை பொறுக்கி எடுத்து வந்து எரித்தோம்.

உழைப்பால் உயர்ந்த இரண்டு பெண்கள் . அவர்கள் டிப்ளமொ முடித்ததும் ஒரு பொறியியல் கல்லூரியின் லேபில் வேலைக்கு சேர்கிறார்கள். அங்கிருந்தவாறே பகுதி நேர படிப்பில் B.E. பின்பு M.E முடித்து Phd உம் முடித்து விட்டனர். ஒருவர் அதே கல்லூரியில் விரிவுரையாளர். இன்னொருவர் லண்டன் மாநகரில் உள்ள பொறியியல் கல்லுரியில் விரிவுரையாளர்.

இருவருமின்று செல்வத்தில் கொழித்தாலும் அவர்களது சொந்த ஊரில், வீதியில் நல்ல பெயர் கிடையாது. காரணம் அவர்களல்ல.

அது ஒரு கம்யூட்டர் தயாரித்து விற்கும் நிறுவனம். மும்பை தலைமையிடம். கடந்த காலாண்டு விறபனைச் செயல்பாடுகளையும் அடுத்த காலாண்டு திட்டங்களயும் பற்றி விரிவாகப் பேச ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரண்டு நாட்கள் நடக்கும் அந்நிகழ்வின் முதல் நாள் இரவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் விளைவாக அடுத்த நாள் ஒருவர் அந்நிறுவனத்திலிருந்து எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வெளியேற்றப் படுகிறார். இத்தனைக்கும் நல்ல விறபனையாளர் அவர். முதல் மூன்று இடத்தில் இருப்பவர். ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் அதிக இன்செண்டிவ் வாங்குபவர்.

இதைப் போல இன்னும் என்னற்ற சம்பவங்களைச் சொல்லலாம். உங்களிடமும் அநேகம் இருக்கக்கூடும். எல்லாச் சீரழிவுக்கும் காரணம் மது.

தமிழாசிரியர் எங்களெக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக இருந்தார். அவரது வகுப்புக்களை இழக்க யாரும் தயாராக இருந்ததில்லை. அவரைப் பற்றி ஒரு பதிவே தனியாக எழுதலாம் அந்த அளவுக்கு ஆளுமை உள்ளவர். இறுதியாக அவரை நான் பார்க்க நேர்ந்த காட்சி என் எதிரிக்கும் வேண்டாம்.

பெண்கள் இருவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். மிகுந்த சிரமத்திற்கிடையேதான் டிப்ளொமொ படித்தனர். ஒவ்வொரு முறை செமஸ்டர் கட்டணமும் பரிட்சைக் கட்டணமும் தாமதமாகத்தான் கட்டுவார்கள். இருவரது குடும்பமுமே அவர்கள் அம்மாக்களால்தான் நடத்தப் பட்டு வந்தது.

அவர்கள் தந்தையர் கிடைத்தப் பணத்தில் கிடைத்ததை குடித்து விட்டு கண்ட இடத்தில் விழுந்து கிடப்பார்கள். பலமுறை நானே என் தோள்களில் எடுத்து வந்து குளிப்பாட்டி இருக்கிறேன். இன்னும் ஒரு குடிகாரனின் மகளாகத்தான் பாவிக்கப் படுகின்றனர்.

அந்த விற்பனையாள நண்பர் மிகவும் இனியவர் பழகுவதற்கு. மரியாதையாகப் பேசுபவர். திருமணம் நிச்சயமாகி இருந்தது. ஆனாலும் போதைக்கு அடிமை. முதல் நாள் இரவில் நடந்த காக்டெயிலில் கட்டுப்பாட்டை இழந்து சேர்மனை அவன் இவன் எனப் பேசிவிட்டார். அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட மான இழப்பால் அவர் செல்லுமிடத்தில் எல்லாம் அவருக்கு இரண்டாம் தர மரியாதையே கிட்டியது.

குடிப்பது என்பது ஒரு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக ஆரம்பித்தாலும் முடிவென்னவோ திண்டாட்டமாக ஆகி விடுகிறது; பெரும் பாலோருக்கு. குடிக்கும்போது இருக்கும் மனநிலையைக் காட்டிலும் குடிக்கு முன்னதான மனநிலையும் முக்கியமானது. நான் பெருங்குடிகாரன் என்னால் 6 ரவுண்டு தாங்க முடியும் ஒரு புல் பாட்டில் அடிப்பேன் எனச் சவடால் விடும் ஆசாமிகள்தான் மூன்றாம் ரவுண்டிலோ அல்லது ஒரு குவார்ட்டரிலோ கவிழ்ந்து விடுகிறார்கள்.

குடிப்பதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையும் முக்கியமானது. சிலர் தங்கள் வீராப்பைக் காட்டக் குடித்துவிட்டு மொத்த நிகழ்வையும் துன்பகரமாக ஆக்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் இது வரை குடிக்க ஏதும் கிடைக்காதது போல குடிக்க ஆரம்பித்து எல்லோருக்கும் முன்னாடியே மட்டை ஆகி விடுகிறார்கள்.

குடிப்பது ஒன்றும் பாவமில்லை. ஆனால் நாம் குடிப்பதால் நம்மைச் சார்ந்தவருக்கு நாம் ஏற்படுத்தும் இழப்புகள்தான் முக்கியமானவை. பொருள், நேரம், அவமானம், உடல் நலம் என எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் சொல்வதால் நான் குடிப்பதில்லை என்ற நல்ல பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்;நானும் குடிகாரன். சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறேன். உங்களுக்கும் பயன்படலாம்.

1. குடித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டாம். நீங்கள் வீடு வந்து சேரும் வரை அவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும். உங்களை அனுப்பி வைத்தவர்களுக்கும் அதே அவஸ்தை. தங்கும் இடவசதி இருந்தால்தான் நான் குடிக்கவே ஆரம்பிப்பேன்.

2. குடித்துவிட்டு உங்கள் குழந்தைகளைக் கொஞ்சாதீர்கள். உங்களைப் பற்றிய மதிப்பில் மிகத் தாழ்ந்து விடுவீர்கள். நான் குடிப்பபேன் என என் குடும்பத்திற்குத் தெரிந்தாலும் குடித்த நிலையில் என்னை அவர்கள் ஒரு போதும் பார்த்ததில்லை.

3. நீங்கள் குடிப்பது உங்கள் மனைவிக்குப் பிடிக்கவில்லை எனில் அதைத் தொட்டுக் கூடப் பார்க்காதீர்கள். மணவாழ்க்கைக்கு உலை வைப்பதில் மதுவிற்குத்தான் முதலிடம்.

4. குடித்த பிறகு பெண்களுடன் பேசவோ அல்லது அவர்களைப் பார்க்கவோ வேண்டி இருப்பின், இரண்டில் ஏதாவதொன்றைத் தவிர்த்தல் நல்லது. குடிகார பிம்பம் பெண்கள் மனதில் இருந்து விரைவில் அகலுவதில்லை. நீங்கள் இறந்தாலும்கூட ஒழிந்தான் ஒரு குடிகாரன் என்பதான எண்ணம்தான் அவர்களிடம் இருக்கும்.

5. நிதானமிழக்கிறீர்கள் என்பதை உணர ஆரம்பித்ததும் உங்கள் நண்பரிடம் உண்மையைச் சொல்லி விடுங்கள். அதன் பிறகு அவர் கட்டுப்பாட்டில் நீங்கள் இருத்தல் நலம். இல்லையெனில் அவரவர் வேலையைப் பார்த்துச் சென்று விடுவர். நீங்கள் மப்புத் தெளியும் வரை அங்கேயே இருக்க வேண்டி வரும்.

6. எல்லா சரக்கையும் கலந்து அடிக்காதீர்கள். இருப்பதிலேயே அது மிகவும் ஆபத்தானது. அதன் பிறகு உங்கள் கட்டுப்பாட்டில் ஏதும் நடக்காது.

7. குடிப்பதற்கு மிக அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் மது கலக்கிறதோ அத்தனை வேகத்தில் நீங்கள் நிதானமிழக்கிறீர்கள். என் டிப்ளொமா கிளாஸ் மேட் மைக்கேல் கேவின் அலெக்ஸும் அவனது அப்பாவும் மது அருந்துவதைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் இருவரும் அருந்தியவாறே செஸ் விளையாடியது மட்டுமல்லாமல். ஆட்டம் முடிந்ததும் மைக்கேல் எங்கெல்லாம் தவறு செய்தான் எனபதை ஒவ்வொரு கட்டத்திலும் அவர் காய்களை அடுக்கி விவரித்த விதம் அலாதியானது. இருவரும் ஒரு புல் பாட்டிலில் முக்கால் வாசி காலி செய்திருந்தார்கள்.

நீங்கள் மதுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்களா அல்லது மது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதில்தான் இருக்கிறது உங்கள் வாழ்வும் தாழ்வும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s