அவமானங்களைத் தின்று

உங்களிடம் முப்பதாயிரம் ரூபாய் பணம் இருக்கிறது 500 ரூபாய் நோட்டுக்களாக. வர வேண்டிய பழைய பாக்கி வசூலானது. பணத்தை திருப்பிக் கொடுத்தவரே உங்களை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து, பேருந்தில் ஏற்றி விடுகிறார். இருக்கை தேடும் பதட்டத்தில் அவருக்கு விடை சொல்லக் கூட மறந்து விடுகிறீர்கள். இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்கிறீர்கள். இதற்குள் நகரத்தை விட்டு வெளியே வந்து விடுகிறது பேருந்து. இன்னும் 30 கி மி தூரம் போக வேண்டும். நடத்துனர் பயணச் சீட்டுக்கான கட்டணத்தைக் கேட்டதும் 500 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுக்கிறீர்கள். அவர் உங்களை மேலும் கீழும் பார்த்து விட்டு, நிறுத்தச் சொல்லி இறக்கி விடுகிறார். எப்படி உணர்வீர்கள்?

நெடுந்தூரம் பயணம் செய்து ஒரு நகரத்தை அடைகிறீர்கள். இயற்கை உபாதை கழிக்க இடம் தேடுகிறீர்கள். கட்டணக் கழிப்பிடத்தை அடைந்து 50 ரூ நோட்டை நீட்டுகிறீர்கள். சில்லரை இல்லை எனச் சொல்லி உங்களை மறுதலிக்கிறார். எப்படி உணர்கிறீர்கள்?

உங்கள் காரை பழுது நீக்க விட்டிருக்கும் நாளொன்றில், நடு இரவில் வந்திறங்கிய உறவினரை அழைத்துச் செல்ல ஆட்டோ பேசுகிறீர்கள். ஆட்டோக்காரர் இருக்கையிலிருந்து அசையாமலேயே உங்களை உதாசீனப் படுத்துகிறார். எப்படி உணர்வீர்கள்?

அந்த அரசாங்க உயரதிகாரியை உங்களுக்கு நன்றாகத் தெரியும். நல்ல பழக்கமும்கூட. அந்த அலுவலகத்தில் ஆக வேண்டிய காரியம் ஒன்றை அவரிடம் வேண்டிச் செய்து கொள்கிறீர்கள். அதில் செய்ய வேண்டிய திருத்தம் ஒன்றிற்காக மீண்டும் அதே அலுவலகம் செல்லும்போது அட்டெண்டரால் உதாசீனப் படுத்தப் படுகிறீர்கள்.

உங்கள் முதல் குழந்தையை பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறீர்கள். உலகின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீகர்கள். வெள்ளை நிற தேவதைகள் அந்த ரோஜாக் குவியலை எடுத்து வந்து உங்கள் கையில் கொடுக்கக் காத்திருக்கிறீர்கள். மாறாக, கொண்டு வந்து கொடுப்பவர் எரிச்சல் பட்டவாறே “ம்ம் பார்த்துக்குங்க ” என்கிறார் ஏதோவொரு பண்டமொன்றைப் போல. எப்படி உணர்வீர்கள்?

இதைப் போன்றோ அல்லது இதைவிடக் கூடுதலாகவோ ஒவ்வொரு நாளும் அவமானம் நம்மைப் பிடுங்கித் தின்றவாறே இருக்கிறது. தவிர்க்கவியலா கையாலாகாத்தனத்தின் பிடியிலாட் பட்டிருக்கிறோம்.

இன்னார் இவரென்ற பாகுபாடுகளேதுமற்று, எவர் வாயிலிருந்தும் வெளிப்படும் வார்த்தைகள் அவமானப்படுத்தலைத் தவிர வேறொன்றையும் இலக்காகக் கொள்வதில்லை.

பெற்றோர், உற்றார், உறவினர், கொண்டான், கொடுத்தான், உடன் பிறந்தோர், கட்டியவள், நண்பன், ஆசிரியர், அலுவலக மேலதிகாரி, முதலாளி என யாவருக்கும் இஃதொன்றே பிரதானத் தொழிலோ?

விளக்கணைத்ததும் கவிழும் இருட்டைப் போல அவமானம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. மேற்சட்டையிட்டு ஒட்டிய வயிறு மறைத்தல் போல அவரவரால் இயன்றதைக் கொண்டு மூடி மறைத்து வாழ்தல் இயல்பாகப் போயிற்றிங்கு.

அவமானத்திற்குள்ளாக்குபவனுக்கு உள்ளாக்கிய சந்தோஷம் ஒன்றே கிட்டுகிறது. ஆகிற காரியம் ஆகும்போதுதான் ஆகிறதென்றாலும் அவமானத்திற்குள்ளக்குவதால் அவசரமாக ஆவதில்லை. எனினும் அவமானத்திற்குள்ளானவன் சபை நடுவே ஆடை விலகியவன் போலாகிறான். அதுவல்ல நோக்கமென்றாலும் அஃதொரு ஊக்குவிணையாக அமையலாம் சில பொழுது.

என்றாலும் ஆக்குபவனும், ஆக்கப் படுபவனுக்குமான இடைவெளி இந்தப் புள்ளியிலிருந்து இந்தப் பொழுதிலிருந்தே விரியத் தொடங்கி விடுகிறது. மேலுமது ஒரு பொழுதும் ஒத்திசைவைத் தருவதில்லை. நிர்பந்தத்தின் காரணமாயொரு சமயம் இசைவது போலிருந்தாலும், அது காட்சிப் பிழையேயன்றி வேறில்லை. உள்ளிருக்கும் வன்மம் காத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பிற்காக.

எவ்வாறாயினும், ஒன்றையடைந்ததும் அதன் மீதான ஆசை நீர்க்க, அடுத்ததொன்றிற்கேங்கும் வாழ்க்கை, தடித்துப் போகவைத்திருக்கிறது நமது தோலை.

எதையெதையோ எதெதுவோடோவெல்லாம் கட்டிக் கலந்து தின்று பழகிய நமக்கிப்போது உணவாக ஆகிப் போனது அவமானங்களே; அதையே தின்கிறோமென்ற அவமானமுமற்று.

எனக்கிருக்கும் ஐயமொன்றுதான். வாழ்க்கையென்பதென்ன? நாம் வாழ்ந்து கொண்டிருப்பதா? அல்லது இழந்து கொண்டிருப்பதா?

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s