சஞ்சய் A C


நம்ம தொழிலதிபர் சஞ்சய் உங்களுக்குத் தெரியும். AC சஞ்சயைத் தெரியுமா? இது அவர் விக்கிற ஏ சி பத்தின பதிவு இல்லை. அவர் Asst. Commisioner of Police ஆ அவதாரம் எடுத்த கதை.

ஞாயிறு இரவு 9.30 மணிக்கு வெளியே நிறுத்தியிருந்த பைக்கை உள்ளே எடுத்து வைக்கலாம் எனப் பார்த்தால், கேட்டுக்கு வெளியே ஒரு மப்பு மன்னாரு மல்லாந்த்திருந்தார். எழுப்பிப் பார்த்தால் ஏகாந்த்ததிலிருந்தார். ஒரு வாளி நிறையத் தண்ணீர் அபிசேகம் செய்ததும் எழுந்தார்.

“ங்ணா தேங்ஸ்ணா”

“சரி போப்பா”

“ங்ணா நீங்க தண்ணி ஊத்தி எழுப்புனதுக்குத் தேங்க்ஸ்ணா. ஆனா அப்ப உங்க காலு என் மேல பட்டுதுங்ணா. நீங்க எப்படிங்ணா என்னை மிதிக்கலாம்?”

என்னடா இது தேர இழுத்துத் தெருவுல விட்டுட்டோம் போல இருக்கேன்னு மலைத்தேன். ”ஏம்ப்பா வீதியில பைக் போற பாதையில் கிடந்தவன எழுப்பி விட்டது தப்பாப் போச்சே. சரி சரி எதா இருந்தாலும் நீ காலையில் நிதானத்தில் இருக்கும்போது பேசிக்கலாம் போ ” என சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தேன்.

மனி 10 இருக்கும் வெளியே யாரோ, “அண்ணா ” எனஅழைத்த சத்தம். கதவைத் திறந்து பார்த்தால் நம்ம மப்பு மன்னார்.

“சொல்லுப்பா”

“ங்ணா நீங்க தண்ணி ஊத்தி எழுப்புனதுக்குத் தேங்க்ஸ்ணா. ஆனா அப்ப உங்க காலு என் மேல பட்டுதுங்ணா. நீங்க எப்படிங்ணா என்னை மிதிக்கலாம்?”

”அட இப்பத்தானே எல்லாம் பேசி முடிச்சோம் போ போ போய்ப் படு காலையில் பேசிக்கலாம்”

“இல்லைங்ணா நீங்க இப்பவே வாங்க பேசலாம்”

கொஞ்சம் கொஞ்சமாக நிதானமிழப்பதும் வார்த்தைகள் ஏறுக்கு மாறாக வருவதுமாக இருந்தது. அவனைச் சமாதானப் படுத்த வந்த ஒருவரையும் வைதான்.

என் மொபைல் போனை எடுத்தேன்.

“சஞ்சய் சாருங்களா?”

“நான் சஞ்சய். ஆனா சாரு இங்க இல்லை சென்னைல இருக்காரு”

“நான் வேலன் பேசுறேன் சார்”

“அட அண்ணாச்சி என்ன ராத்திரிப் பத்து மணிக்கு விளையாடுறீங்க?”

“சார் வீட்டுல இருக்கீங்களா? இந்த நேரத்துல தொந்திரவு பண்ணீட்டேன்”

“என்ன அண்ணாச்சி என்னை வச்சு ஏதும் காமெடியா?”

“இல்ல சார் இங்க ஒருத்தன் தண்ணியப் போட்டுட்டு ரகளை பண்ணுறான். அதான் உங்க கிட்டச் சொல்லலாம்னு”. சஞ்சய்க்கு இப்பத்தான் கதை வசனம் புரிஞ்சுது

”அவங்கிட்டக் கொடுங்க”

“இல்ல சார் அவம் பேசுற நிலையில இல்ல. அவங்க மச்சாங்கிட்டக் கொடுக்கிறேன்”

ஸ்பீக்கர் போனில் போட்டு அவன் மச்சனிடம் கொடுத்தேன். அதன் பிறகு சஞ்சய் ஒரு ருத்ரதாண்டவம் ஆடினார்.

“டேய் யார்ரா அவன் ஃபேமிலி குடியிருக்க இடத்துல ரப்சர் பண்ணுறது? நியூசென்ஸ் கேசுல உள்ள போட்டுருவேன்”

“இல்ல சார்”

“என்ன இல்ல சார் நொள்ள சார் நான் ரவுண்ட்ஸ்லதான் இருக்கேன் அங்க வரவா?”

“சார் வேணாம் சார்”

“வந்தன்னா அவன மட்டும் இல்லை உன்னையும் சேத்து உள்ள வச்சு முட்டியப் பேத்துருவேன். உங்களையெல்லாம் உள்ள ஜட்டியோட தலைகீழத் தொங்க விடணும்டா”

“இல்ல சார் இப்பக் கூட்டிட்டுப் போயிர்ரேன்.”

“ சரி போனை சார்கிட்டக் கொடு”

“சார் சொல்லுங்க சார்”

“பாருங்க ஏதும் பிரச்சினை பண்ணுனான்னாக் கூப்பிடுங்க வடவள்ளி ஸ்டேசன்ல இருந்து தங்க வேலை வரச் சொல்லுறேன்”

“சரிங்க சார். தேவைப்பட்டாக் கூப்பிடுறேன் சார்.”

அதுக்குள்ள மத்தவங்க எல்லாம் சேர்ந்து அவனை ரெண்டு சாத்துச் சாத்திக் கூட்டிச் சென்று விட்டனர்.

இரவெல்லாம் எனக்குத் தூக்கமில்லை. சஞ்சயை சார் போட்டுக் கூப்பிட வச்சிட்டானேன்னுதான்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s