சென்ற வார விகடனைத் தாமதமாகத்தான் படிக்க நேர்ந்தது. அதில் வெளியான அப்துல்லாவின் கவிதை சமீபத்தில் நான் படித்த கவிதைகளுள் மிக முக்கியமானது. வெகு அநாயசமாக மூன்று தலைமுறை வாழக்கையைப் பரண் என்ற உயிரில்லாத பொருளால்(படிமம்) விவரித்துக் காட்டுகிறார். உறவுச்சிக்கல்களும், இருந்தும் இல்லமல் அந்நியப் படுதலும் அழகாக எழுதப் பட்டிருக்கிறது.
நா முத்துக்குமாரின் தூர் கவிதைக்கு நிகரான ஒன்று இது; என்னைப் பொறுத்த வரையில். விகடனில் வாசிக்காத, வாசிக்க விகடன் கிடைத்திராதவர்களுக்காக.
பரண்
அப்பா காலம்வரை
கட்டப்பட்ட அத்தனை வீடுகளிலும்
அறைகள் இருந்தனவோ
இல்லையோ
நிச்சயம் பரண்கள் இருந்தன.
பழையன கழிந்தனவோ
இல்லையோ
கண்டிப்பாய் பரண் ஏறின.
ஒவ்வொரு வருடமும்
போகிக்குப் பரண்கள்
ஒழுங்குபடுத்தப்படும்
என்றேனும் ஒரு நாள்
தேவைப்படும் என்று
பரண் ஏறிய பொருட்கள்
சீனியாரிட்டி அடிப்படையில்
சீகிரமாய் விடை பெறும்.
சம்பளம் சற்று அதிகமான்வுடன்
பூர்வீக வீட்டை இடித்துவிட்டு
மாடர்னாய் அமைந்ததென்
புது வீடு.
எக்ஸ்சேஞ்ச் மேளாவில்
பொருள் மாற்றம் நடப்பதால்
பொருட்களோடு
பரணும் விடை பெற்றது.
”மாத்திரை நேரத்துக்ச சாப்பிடுங்க
உடம்பைக் கவனமா பாத்துக்கிடுங்க”
சொல்லிவிட்டு என் மகன்
வேலைக்காக
விமானம் ஏறியபோது
வீடே பரணாய்
மாறிப் போனது.