தனிப்பதிவிட்டும், பின்னூட்டமிட்டும், நேரிலும், மின்னஞ்சலிலும், குறுஞ்செய்தியிலும், கை பேசியில் அழைத்துமென வாழ்த்து மழையில் நனைத்த உள்ளங்களுக்கு நன்றி.
**********************************************************************************
சென்ற பிறந்தநாள்தான் மறக்க முடியாத ஒன்று. மாலை 5.50 மும்பை-கோவை ஏர் டெக்கான் ப்ளைட்டுக்கு டிக்கட் கையில். கஸ்டமர் இடத்திலிருந்து வெளியேறும்போது மனி 5.30. ஏர் போர்ட்டை அடையும்போது மனி 6.15. மீண்டும் அனுஜன்யா வீட்டிற்குசென்று அடுத்த நாள் காலை விமானத்தில் வரலாமா? அல்லது மதியம் 3.45 க்குக் கிளம்பும் ஜெயந்தி ஜனதாவில் வரலாமா? என யோசித்தவாறே தங்கமணியை அழைத்துக் கேட்டால், “ என்ன செய்வீங்களோ தெரியாது காலை 7 மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கணும் பிறந்த நாளும் அதுவுமா வீட்டுல இல்லாம?” ன்னு திட்டுனாங்க.
சரின்னு அக்பர் டிராவல்ஸ்ல இருந்த அழகான பொண்ணைப் பார்த்து பாதி இந்தியிலும் மீதி ஆங்கிலத்திலும் கெஞ்ச 7.45 மணி பெங்களூர் கிங் பிஷரில் இடமிருக்கிறது” என்றார்.
இரண்டு மனி நேரம்தான். அங்கிருந்து ஆம்னி பஸ்ஸில் போய் விடலாமென டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் விமானம் ஒரு மணி நேரம் தாமதமென்றார்கள். 9.00 மணிக்குக் கிளம்பி 11.15க்கு பெங்களூர் வந்து அங்கிருந்து ஆம்னி பஸ் நிறுத்தம் வந்தால் ஒரு பேருந்தும் இல்லை. பின் அரசு பஸ்கள் இருக்குமிடத்திற்கு வந்து பேருந்து ஏறுகையில் மணி 12.00. முதல் குறுஞ்செய்தி பரிசலிடமிருந்து, தொடர்ந்து மற்றவர்களிடமிருந்து. சேலம் வழியாக கோவை வந்து சேரும்போது மணி 9.00 ஆகிவிட்டது. நன்றாக உறங்கி விட்டேன்.
மாலை எழுந்து அனுஜன்யாவிற்கு போன் செய்து வந்து சேர்ந்ததைச் சொல்லலாமென்றால் அவர் போனை எடுக்கவே இல்லை. வீட்டில் அழைத்துச் சொன்னேன். அப்பொழுதுதான் துப்பாக்கிச் சூடு பற்றிய தகவலே தெரியும்.
இரவு 10 மணிக்குத்தான் அனுஜன்யாவிடம் பேச முடிந்தது. நிம்மதி.
**********************************************************************************
இரண்டு நாட்களாக அடைமழையாக இருந்தபோதும் நேற்று என் மனைவியை வெறுப்பேத்துவதற்காக சின்னவளைப் பார்த்து, “ஐஸ் கிரீம் சாப்பிடலாமா?” என்றேன்.
என் மனைவியின் முறைப்பைத் தவிர்த்தவாறே, “ ஆனா எனக்கு அருண் ஐஸ் கிரீம்தான் வேண்டும்” என்றாள்
“ஏன்” என்ற என் கேள்விக்கு, “அந்தக் கம்பெனிதான் ஐஸ் கிரீம் எப்படித் தயார் செய்கிறார்கள் என்பதைப் பார்வையிட எங்களை அழைத்திருக்கிறார்கள். அடுத்த வாரம் போகிறோம்” என்றாள்.
ஐஸ் கிரீம் என்றாலே அந்தக் குழந்தைகளுக்கு இனி அருண் ஐஸ் கிரீம்தான் ஞாபகம் வரும். மார்க்கெட்டிங்கில் பலவகை உண்டு என்றாலும் இது புது விதம்.
இது ஒன்றும் பெரிசில்லை மைக்ரோசாப்ட் கடைபிடிக்கும் வழிமுறைதான் என்கிறான் நண்பன். அட ஆமால்ல?
***********************************************************************************
டீலா நோ டீலா பெரிதாகக் கவரவில்லை. ரிஷியின் அலட்டல் எரிச்சலூட்டுகிறது. பங்கேற்பவரின் திறமைக்கு சவால் எதுவும் இல்லை. வெறும் குருட்டதிர்ஷ்டம்தான்.
தியரி ஆப் எலிமினேசனும், பிராபபிலிட்டியும் என பெரிய வார்த்தைகளைப் போட்டு ஜல்லி அடித்தாலும் மூணு சீட்டு விளையாட்டைப் பெரிய அளவில் விளையாடுவதாகத்தான் தோன்றுகிறது. அதைத் தெருவில் வைத்து விளையாடினால் போலீஸ் பிடிக்கிறது. இது அங்கீகரிக்கப் பட்ட சூதாட்டம். போலீஸ் அதிகாரிகளும் விளையாடுவர் ஒரு நாள்.
ஒரு ரவுண்ட் ரம்மி 320 நாக் அவுட் விளையாடலாம். மூளைக்கும் வேளை அதே சமயம் நண்பர்களுடன் ஜாலியாகப்பொழுதும் போகும். அரைமணிக்கொரு தின்பண்டமும் (போண்டா,வடை,பஜ்ஜி) காபியும் கிடைத்தால் ஏறக்குறைய சொர்க்கம்.
**********************************************************************************
பொதுவாக வோடபோனின் விளம்பரங்கள் கவிதை என்றால்; ஒரு செகண்ட் ஒரு பைசாவிற்கான விளம்பரங்கள் ஹக்கூ வகை.
பிரமாதம், சாரி, குட்மார்னிங் மூன்றிலுமே இருவரின் முகபாவங்கள் மற்றும் உடல்மொழி அற்புதம்.
O & M தான் அவர்களுக்கு ஆட் ஏஜென்சி. அதனால்தான் தரமாக இருக்கிறது போலும்.
இதைத்தான் கிராமத்தில் துட்டுக்குத் தக்கன பணியாரம் என்பார்கள்.
ஏர்டெல்லின் ரோமிங்க் விளம்பரம் சற்று கவனமாகப் பார்த்தால்தான் புரியும்.
**********************************************************************************
கரிசல் எழுத்து என்றாலே நம் ஞாபகத்திற்கு வரும் பெயர் கி ரா தான். சில வட்டாரச் சொற்களுக்குத் தனி அழுத்தமும் நளினமும் அவர் எழுத்தில்தான் கிடைக்கப் பெற்றன. ஏப்பை சோப்பை, பொங்கிப் பெறக்கி போன்ற பதங்களைத் தனியாகப் படித்தால் எந்த அர்த்தமும் தெரிவதில்லை. அதே சமயம் அவர் எழுதும் போது புது படிமம் கிடைக்கிறது.
அவர் தொகுத்த கரிசல் கதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன். அனேகம் பேர் கரிசல் இலக்கியம் படைத்துக் கொண்டிருந்தாலும் வெளியே தெரியாமல் இருந்திருக்கிறார்கள். பூமணி, செயப்பிரகாசம், கு.அழகிரி, சோ.தர்மன், தமிழ்ச்செல்வன்(பூ), கோணங்கி, சுயம்புலிங்கம், மேலண்மை, தணுஷ்கோடி போன்றவர்களின் கதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை முறையும் நாகரீகமும் வெளிப்படுகிறது.
அன்னம் வெளியீடான இப்புத்தகம் ரூ 120 க்குக் கிடைக்கிறது.
Picture courtesy : kwernerdesign.com
.