தர்ட்டீன்த் ஃப்ரைடே வைரஸ்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அச்சகத்தில் இரவு வேலை இருக்கும், ஞாயிறன்று வெளியாகும் வார இதழ் (tabloid க்கு என்ன தமிழ்?) ஒன்றின் அச்சாகத்திற்காக. நேற்றும்(13-வெள்ளி) இரவில் வேலை நடந்து கொண்டிருந்தது. செட்டிங்க் வைத்துக் கொடுத்து இதேபோல ஒட்டி இறக்குங்கள் எனச் சொல்லிவிட்டு சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்யலாம் என நெட்டைத் திறந்தேன். என்னுடையது வோடாபோன் வழங்கிய சிம் கார்டு பொருத்திய டேட்டா கார்டு.

அடிக்கடி டிஸ்கனக்ட் ஆகிக் கொண்டே இருந்தது என்ன பிரச்சினை எனப் பார்த்தால் டேட்டா கார்டு எண்ணிற்கு இன்கமிங்க் வருவதால்தான் கட்டாகிறது. மொத்தம் 11 மிஸ்டு கால் இருந்தது.

யாரோ தீவிரமாக முயற்சிக்கிறார்கள். என்ன அவசரமோ தெரியவில்லை. எண் தவறு என்பதைத் தெரியப் படுத்தினால் வேறு எண்ணை முயற்சி செய்வார்களே என நினைத்து, என்னுடைய இன்னொரு மொபைலிலிருந்து அந்த எண்ணை அழைத்தேன்.

நான்: ”ஹலோ யாருங்க என் மொபைலுக்கு கால் பண்ணுறது”

குரல் : “ஹலோ நீங்க யாரு” ஒரு பெண் குரல் மிக மெல்லியதாக அடுத்தவருக்குக் கேட்கக்கூடாதென எச்சரிக்கையாக. குரலிலிருந்து போர்வைக்குள்ளிருந்து பேசுவதும் அழுதுகொண்டே பேசுவதும் புலப்பட்டது.

நான் : “நீங்க யாரு? எதுக்கு என்னோட மொபைல்ல கூப்புடுறீங்க?”

குரல் : “நீங்க பாலாவோட பிரண்டா?”

”எனக்கு எந்த பாலாவையும் தெரியாது. நீங்க யாரு?”

“எம்பேரு லதா. நான் ஒரு பிரச்சினையில் இருக்கேன். அந்த எண்ணை என் பிரண்டுதான் கொடுத்தான்”

”அது இண்டர்னெட் பாக்குறதுக்கான எண் அதில நான் யாரையும் அழைத்ததும் இல்லை யாரும் என்னை அழைத்ததும் இல்லை. உனக்கு என்ன பிரச்சினை சொல்லு”

“நான் பாலாவை லவ் பண்ணுறேன்.”

“அதிலென்ன பிரச்சினை? பருவத்துல எல்லோரும் பண்ணுறதுதானே? லவ் பண்ணுற பையன் யோக்கியனா இருந்தாப் போதும்”

”அதாங்க பிரச்சினை. அவன் வேற ஒரு பொண்ணொட சுத்துறான் ”

“அது உன் பிரச்சினை. அதுக்கு எதுக்கு என் மொபைல்ல கூப்பிட்ட?”

”அவன் நம்பர் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு. இது அவன் பிரண்டு நம்பர்னு சொல்லிக் கொடுத்தான். அதான் கூப்பிட்டேன்“

“சரிம்மா இது என்னோட நம்பர். 6 மாசமா நாந்தான் வச்சிருக்கேன். நீ பேசாமத் தூங்கு. காலையில அவனப் போய் நேர்ல பாரு இல்லன்னா அவனே உன்னைக் கூப்பிடுவான்”

“காலையில நான் உயிரோட இருந்தாத்தானே?”

“என்னம்மா சொல்லுறே?”

“ஆமாங்க நான் அவன மலை போல நம்புனேன்.”

“சரி அதுகென்ன இப்போ”

“என்னைக் கைவிட்டுட்டாங்க”

“இங்க பாரு ராத்திரி 1 மணிக்கு நீ லவ் பண்ணி ஏமாந்த கதைய எதுக்குச் சொல்லுறேன்னு புரியலை. அவம் பேரு பாலாங்கிறதத் தவிர எனக்கு ஏதும் விவரமில்லையே நான் என்ன செய்ய முடியும்?”

”அவன் டெம்போ டிரைவரா இருக்காங்க”

“அப்ப நல்லதாப் போச்சு. அவனையே கல்யாணம் பண்ணிக்க. சீக்கிரம் காசு பணம் சேர்த்து ஒரு டெம்போ வாங்கி நாலு எடத்துல ரெகுலர் வாடகை பிடிச்சு ஒழுங்கா குடித்தனம் நடத்துங்க.”

“அதுக்குத்தாங்க நான் இருபதாயிரம் கொடுத்தேன்”

“என்னது இருபதாயிரமா?”

“ஆமா. கொஞ்சம் நகையும் கொடுத்திருக்கேன்”

“சுத்தம். வேற என்ன கொடுத்தே?”

“என்னையே கொடுத்திட்டேன். அப்புறம் காசு பணம் என்னங்க பெருசு?”

“கிழிஞ்சுது. என்ன தைரியத்துல இதெல்லாம் செய்யுறீங்கன்னு புரியலை எனக்கு”

“நானும் அவனும் மனசாரக் காதலிச்சோம் சார்.”

“இப்ப என்ன ஆச்சு”

“வேறொருத்தி குறுக்கால வந்திருக்கா”

“அப்புறமென்னா மனசாரக் காதலிச்சேன்னு வசனம் பேசுற?”

“அவன் நல்லவந்தான். அவதான் மோசம். எதைக் காட்டி அவன மயக்குனாள்னு தெரியலை”

“சரி நடந்தது நடந்து போச்சு. பேசாம அவன மறந்துட்டு அப்பா அம்மா சொல்லுற பையனக் கல்யாணம் பண்ணிக்க. இதுக்கு எதுக்கு சாகணும்?”

“அப்பா இல்லை சார். இறந்துட்டாங்க. அம்மாதான் கஷ்டப் பட்டு படிக்க வச்சாங்க. படிப்பு ஏறல. கார்மெண்ட்ஸ்சுக்குப் போயிட்டிருந்தேன். இவந்தான் அங்க லோடு அடிக்க வந்து என்னக் கெடுத்திட்டான்”

“அப்பா இல்ல. அம்மா வளர்த்தாங்கன்னா இன்னும் சூதானமா இருக்க வேண்டாமா. நீயும் சேர்ந்து தப்புப் பண்ணீட்டு அவனக் குத்தம் சொன்னா எப்படி?. அம்மா கால விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டு ஒழுங்கா இருக்கிற வழியப் பாரு”

“இல்ல சார் அவள விடக் கூடாது. அவன் நல்லவன் சார்”

இப்படியே போச்சு பேச்சு. ஒரு கட்டத்தில் ஆயாசமாகவே, “ சரி ஏதும் விபரீதமா முடிவு செய்யாதே. தூங்கி எந்திரிச்சீன்னா உனக்கே ஒரு தெளிவு வரும். ஓடிப் போய் ஆறு மாசம் குடும்பம் நடத்துனவளுக எல்லாம் திரும்ப வந்து வேற கல்யானம் செஞ்சு நல்லா இருக்காளுக. நீ ஏதும் தப்பாப் பண்ணிடாத. இப்பதைக்குத் தூங்கு”

“என்னவோ சார் உங்ககிட்டப் பேசின பின்னாடி கொஞ்சம் ஆறுதலா இருக்கு”

“சரி தூங்கு”

நானே கட் பண்ணினேன் லைனை.

இப்ப நான் என்ன செய்ய?.

அந்த பெண் மீண்டும் அழைப்பாள் எனக் காத்திருப்பதா?

இல்லை போலீசில் சொல்லுவதா?

ஒருவேளை சொன்னபடியே தற்கொலை செய்து கொண்டால், அவள் மொபைலில் என் எண் இருக்குமே அது பிரச்சினை ஆகாதா?

அந்த மொபைல் எண்ணை வைத்து முகவரி கண்டுபிடித்து அவள் அம்மாவிடம் அல்லது அண்ணனிடம்(முரடன் – அவளே சொன்னது) சொல்லவா?

இல்லை ஏதோ ஒரு பெண் போரடிக்குதே (ராத்திரி ஒரு மணிக்கு) என்று எனக்கு பல்பு கொடுக்கிறாளா?

இல்லை அவள் சீரியஸாகத்தான் பேசினாளா?

ஒண்ணுமே புரியலை.

14/11/09 காலை 11 மணிக்கு அந்தப் பெண் திரும்பவும் அழைத்தார்.

“ஏம்மா செத்துப் போயிருவேன்னு சொல்லிக் கலாட்டாப் பண்ணீட்டியே?”

“நான் தனியாச் சாக மாட்டேன் சார். செத்தாலும் அவன் கூடத்தான் சாவேன்”

வெளங்கீரும்.

டிஸ்கி : 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வந்தால் ஏதோ கெட்டது நடக்குமென்பார்கள். அது இதுதானோ?

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s