வாழும் வரை போராடு


கோமங்கலம் புதூர் கிராமம் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் வழியில் இருக்கிறது. ஓரளவு பெரிய கிராமம். பகல் நேரத்தில் நின்று செல்லும் மப்சல் பேருந்துகள் இரவில் நிறபதில்லை. ஒரு அவசர வேலையாக வெளியூர் சென்று நள்ளிரவில் திரும்பும் நீங்கள் பொள்ளச்சியில் ஏறி கோமங்கலம்புதூரில் இறங்க வேண்டுமென டிக்கட் கேட்கிறீர்கள். நடத்துனர் அதற்கு கோமங்கலம் நிற்காது எனக் கறாராகச் சொல்லி உடுமலை டிக்கட் கொடுத்து உங்களை உடுமலையில் இறக்கி விட்டுச் செல்கிறார்.

இந்தச் சூழ்நிலையில் உங்கள் எதிர் விளைவு என்னவாக இருக்கும்?

இரவு முழுவதும் உடுமலை பேருந்து நிலையத்தில் காத்திருந்து அதிகாலை முதல் பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேருவீர்கள்; மனதிற்குள் அந்த நடத்துனரை திட்டியவாறே. சில நாட்களில் இதை மறந்துவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடுவீர்கள்.

ஆனால் கோமங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராஜு வித்தியாசமானவர். அவருக்கு நேர்ந்த இச்சம்பவத்தை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்து நடத்துனருக்கு அபராதம் விதிக்குமாறு செய்திருக்கிறார்.

இதிலென்ன இருக்கு? அவருக்கு வேறு வேலை இல்லை. எனக்கு எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருக்கு என்கிறீர்களா? நீங்கள் சொல்லுவதும் ஒரு விதத்தில் ஞாயம்தான். அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை.

ஏனெனில் அவர் கோவைச் சிறையில் ஆயுள் கைதி. 6 நாட்கள் பரோல் லீவில் ஊருக்கு போனபோது நேர்ந்ததுதான் இது. பரோல் முடிந்து அவர் மீண்டும் சிறைக்கு வந்ததும் கோவை நுகர்வோர் நீதி மன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உடல் நலக் குறைவு போன்றவற்றைச் சொல்லி 10,000 ரூபாய் இழப்பீடும் கேட்கிறார்.

அந்தக் கடிதத்தையே பிராதாக எடுத்துக் கொண்டு நீதிபதி நடத்துனர் முருகனுக்கு சம்மன் அனுப்புகிறார். முருகன் ஆஜரானதும் நீதிபதி முன்பாக சமரசம் செய்து கொண்டு 10,000 க்குப் பதிலாக 3,000 என பைசல் ஆகிறது.

அபராதத் தொகையை கோவையிலுள்ள உடல் ஊனமுற்றோர் விடுதிக்கு நன்கொடையாக அளித்துவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார் ராஜு.

எத்தனை படிப்பினைகள் இவ்வொரு சம்பவத்தில்.

1. போராடும் குணத்தை எந்தச் சூழலிலும் விடக்கூடாது. ஆயுள் கைதியாக இருந்தாலும்கூட.
2. எந்தச் சூழலிலும் தாழ்வு மனப்பான்மை கூடாது. தானொரு ஆயுள் கைதி என்ற தாழ்வு மனப்பான்மையுடன் அவர் இதை அணுகவில்லை.
3. நீதி எல்லோருக்கும் பொதுவானது. ஆயுள் கைதி கொடுக்கும் பிராதெல்லாம் முக்கியமா என அதை உதாசீனப்படுத்தாமல், வெறும் கடித்ததை வைத்தே வழக்கை நடத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதி.
4. தவறை ஒத்துக் கொள்வது. செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு தன்னைத் திருத்திக் கொண்ட நடத்துனர்.
5. உதவி செய்ய சூழ்நிலை ஒரு தடையல்ல. கிடைத்தவரை லாபம் என எண்ணாமல் பணத்தை நன்கொடையாக அளித்த ராஜு ஒரு பாடம்.

தண்டவாளக் கற்களுக்கிடையே கிளர்ந்தெழுந்த செடி மொட்டு விட்டு மலர்வதைப் போன்ற இவ்வித நிகழ்வுகள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதோடு வாழ்க்கையின் மீதான் நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறதல்லவா?

****************************************************************************************

ramalingam said…

இதில் கைதி வழக்குப் போட்டது மட்டும்தான் பாஸிட்டி
வ். மற்றதெல்லாம் just coincidences. அவற்றில் எந்த வாழ்க்கை
ப் பாடமும் இல்லை. ஊழலும், லஞ்சமும் மலிந்து விட்ட இன்றைய
சூழ்நிலையில் இவை,
எல்லோரும் நல்லவரே என்ற தவறான நம்பிக்கையைக் கொடுத்து விடும். இதை வைத்து முடிவுகட்டி அந்தக் கைதி வெளியே வந்தால் ரொம்ப சிரமப்படுவார்.

**************************************************************************************

அன்பின் ராமலிங்கம்,

பிறர் போலல்லாது உங்களுக்கு மாற்றுப் பார்வை இருக்கிறாதென்பது மகிழ்வாக இருக்கிறது. என்றாலும் உங்கள் கருத்துக்கள் மீதெனக்கு விமர்சனமும் இருக்கக்கூடும் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களென நம்புகிறேன்.

//இதில் கைதி வழக்குப் போட்டது மட்டும்தான் பாஸிட்டிவ். //

நீங்கள் மட்டும்தான் அவரைக் கைதி என்றழைத்திருக்கிறீர்கள். உங்கள் அடிமனதில் அவர் கைதி என்பதாழப் பதிந்திருக்கிறது. ஆனால் நீதிபதி அவ்வாறில்லாமல் நீதியின் பால் நின்றிருக்கிறார். அதி பாஸிட்டிவ் அல்லவா?

//மற்றதெல்லாம் just coincidences. //

இல்லை என்பதுதான் என் தரப்பு. லட்சங்களில் சம்பளம் வாங்கும் பொழுது அளிக்கும் நன்கொடையை விட இதைப் போன்றோர் அளிக்கும் நன்கொடை மதிப்பு மிக்கது.

//அவற்றில் எந்த வாழ்க்கைப் பாடமும் இல்லை. //

உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு இருப்பதாகவும், இருக்கக்கூடுமெனவும் நம்பியதால் எழுதினேன். பின்னூட்டங்களும் அதை உறுதிப் படுத்துகிறது.

//ஊழலும், லஞ்சமும் மலிந்து விட்ட இன்றையசூழ்நிலையில் //

இது ஒரு வித பொது மனோபாவம். என்றாலும் வேறு விதத்தில் வளர்ந்துகொண்டுதானிருக்கிறோம். இப்படி இருக்கே என்று இடிந்து போய் யாரும் அவரவர் வேலைகளைப் பார்ப்பதிலிருந்து ஒதுங்கி விடுவதில்லை. எங்குதான் இல்லை லஞ்சம்? அதைப் புறந்தள்ளி அடுத்து இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். லஞ்சம் லஞ்சம் எனப் புலம்புவதில் அர்த்தமில்லை. சில சமயங்களில் லஞ்சம் கொடுத்துத்தான் காரியம் சாதிக்க வேண்டும் அதனால் 10 பேருக்கு நல்லது நடக்குமென்றால் கொடுக்க வேண்டியதுதானே?

ஆனால் தனி மனிதனாக உங்கள் சுகத்திற்காக லஞ்சம் கொடுக்காமல் இருக்கலாம். அதை விட முக்கியம் லஞ்சம் வாங்காமல் இருப்பது.

//எல்லோரும் நல்லவரே என்ற தவறான நம்பிக்கையைக் கொடுத்து விடும். //

எல்லோரும் நல்லவெரே என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. அவரவர் நிலையில் இருந்து பார்த்தால்தான் அது சரியா தவறா எனத் தெரியும். உங்களுக்குச் சரியெனப் படுவது எல்லோருக்கும் சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

//இதை வைத்து முடிவுகட்டி அந்தக் கைதி வெளியே வந்தால் ரொம்ப சிரமப்படுவார்.//

மீண்டும் கைதி என்கிறீர்கள். அவர் ஏன் சிரமப்படுவார்? ஆயுள் கைதியாக இருப்பதைவிட வேறு என்ன பெரிய சிரமம் வந்துவிடப் போகிறது?அவர் கைதியாக இருக்கும்போதே போராடவும் போராடிக் கிடைத்ததை பிறருக்குக் கொடுத்து மகிழவும் தெரிந்திருக்கிறது.

இதைவிட வாழக்கைக்கான படிப்பினையை வேறு எந்தப் புத்தகமும் கொடுத்துவிட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s