ஓடினால்தான் ஆறு. தேங்கினால் குட்டை.

எனது மக்கட் பதர் பதிவில் நர்சிம் இட்டிருந்த பின்னூட்டத்தில் ஜெயிக்க வேண்டுமென்ற வெறி இருக்கும் எவனும் ஜெயித்து விடுவான் என்று எழுதியிருந்தார். அது முற்றிலும் உண்மை. குறைந்த வசதிகளுக்குச் சமரசம் செய்து கொள்ளாமல் அடுத்த இலக்கை நோக்கிச் செல்பவர்களுக்கு வெற்றி அருகில்தான்.

ஓடினால்தானே ஆறு? தேங்கியிருந்தால் வெறும் குட்டை தானே?

நான் அந்தப் பதிவில் சொல்ல வந்தது அவர்களது அறியாமை மற்றும் உடல் வளையாமைதான். எந்த வேலையானாலும் அதில் முன்னேற நிச்சயம் ஒரு வழியிருக்கும். அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அது முன்னேற முயற்சி செய்பவனுக்குத்தான் தென்படும்; மற்றவனுக்கு அது முட்டுச்சந்துதான்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களைப் பின்னிருந்து செலுத்துவது வெற்றி பெற வேண்டுமென்ற வெறி ஒன்றே. இதற்கு பிரபலங்களை எடுத்துக்காட்டாகக் கொள்வதைவிட நம் சக பதிவர் தமிழ் பிரியன் – ஜின்னா அவர்களின் வாழ்க்கையே நல்ல பாடம்.

அவரது பதிவிலிருந்து

1996 ஆவது வருடம் +2 எனப்படும் மேல்நிலைத் தேர்வை எழுதி 70% க்கு கொஞ்சம் குறைவாக மதிப்பெண்களைப் பெற்றிருந்தேன். அதற்கு அடுத்த என்ன படிக்கலாம் என்று தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டு திரிந்து கொண்டிருந்தேன். அப்ப தான் வீட்டில் பெரிசா வெடி குண்டு ஒன்றைப் போட்டார்கள்… படிச்சு கிழிச்சது வரை போதும், அடுத்து படிக்கவெல்லாம் ‘வெள்ளையப்பன்’ இல்லைன்னு…

என்னடா இது ஏதேதோ கனவு கண்டோமே எல்லாமே புட்டுக்கிச்சா என்று கவலையுடம் இருக்க வேண்டி வந்தது. வீட்டையும் குறை சொல்ல முடியாது., அப்ப சூழ்நிலை அப்படி… சகோதரிக்கு அப்போது தான் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தோம். செலவுகள் அதிகமாகி வீட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது.

ஆனாலும் எங்காவது இலவசமாக படிக்க வாய்ப்பு இருக்குமான்னு தெரிந்த இடங்களில் கேட்டுப் பார்த்தோம். ஏதாவது ITI, பாலி டெக்னிக்கிலாவது படிக்க முயற்சி செய்தாலும் எல்லாமே சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்து கொண்டிருந்தது. பாலிடெக்னிக்கில் கூட செமஸ்டர் பீஸ், ஹாஸ்டல் பீஸ், போக்குவரத்து செலவு என்று முழி பிதுங்கி விடும் என்று தெரிந்தது. எனவே படிப்பை துறக்க வேண்டி வந்தது.

அதே போல் தம்பிக்கும் சில காரணங்களால் படிப்பை நிறுத்த வேண்டி வந்தது. (தம்பி, தற்போது 26 வயதில் 10 வது பரீட்சை எழுதுகிறான். பெருமையாக இருக்கிறது). 1996 ஜூலையில் 18 ஆயிரம் முதலீட்டில் எனக்கும், எனது தம்பிக்கும் சேர்த்து ஒரு பெட்டிக் கடை போல் அப்பாவால் வைத்து தரப்பட்டது. படிப்பைத் தொடர இயலாத சோகத்துடன் கடையை நடத்தத் தொடங்கினோம். ஓரளவு வீட்டுச் செலவை தாக்குபிடித்து கடை நடந்தது. இது 1997 ஜூலை வரை தொடர்ந்தது. இதற்குள் படிப்பின் வாசம் முழுவதுமாக நீங்கி இருந்தது.

அப்போது தான் அந்த திருப்புமுனை ஒரு இன்லேண்ட் லெட்டர் வடிவில் வந்தது. அதை எழுதி இருந்தது எங்களுடைய தூரத்து உறவினர் மதிப்பிற்குரிய பீர் முகம்மது அவர்கள். (எனது பாட்டிக்கு மாமா மகன்) தொலைவில் உள்ள ஒரு ஊரில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவரது பள்ளியில் நடக்கும் ஒரு கேம்பஸ் இண்டர்வியூ பற்றி எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில் சுருக்கம் இதுதான்.

வளைகுடாவில் இருக்கும் தமிழர்களால், தமிழர்களைக் கொண்டு, …………களுக்காக நடத்தப்படும் ஒரு நிறுவனம் +2 வரைப் படித்தவர்களைத் தெரிவு செய்து இலவசமாக ஒரு வருடம் தொழிற்கல்வியை இந்தியாவில் கற்றுக் கொடுத்து, வளைகுடாவில் உள்ள தனது நிறுவனத்தில் வேலையும் தரும். இலவசமாக தொழிற்கல்வி கற்றுத் தந்து, இலவ்சமாக அழைத்துச் செல்வதால் குறைந்த ஊதியத்திற்கு ஏழு ஆண்டுகள் பணி செய்ய வேண்டுமென்பது முக்கிய நிபந்தனை.

இதில் நம்மைக் கவர்ந்தது இலவசக் கல்வி என்பது மட்டுமே. கடிதத்தில் நேர்முகத் தேர்வு நடக்கும் தேதி ஏதும் இல்லை. தொலைபேசவும் வாய்ப்பு இல்லாததால் உடனே கிளம்பி சென்றோம். நாங்கள் சென்ற அன்று தான் நேர்முகத் தேர்வு. சுமார் 25 பேர்களைத் தேர்ந்தெடுக்க 250 மாணவர்கள் இருந்தனர். எப்படியோ தட்டுத் தடுமாறி அதில் தேறினேன். அடுத்த ஒரு வருடம் ஒரு சிறப்பான கல்வி நிலையத்தில் கல்வி மற்றும் செய்முறைப் பயிற்சிகள். அனைத்திலும் முதலாக தேறி சாதனை வேறு..

கடையை தம்பியும், அப்பாவும் பார்த்துக் கொண்டனர். 1998 ஆகஸ்ட்டில் ஓராண்டு கல்வி முடிய செப்டம்பரில் விமானம் ஏறி துபாயில் இறங்கியாகி விட்டது. அப்போது வயது 19 + தான். அடுத்த 5 1/2 ஆண்டுகள் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலை. வேலை செய்த இடத்தில் ஒரு எகிப்து மருத்துவரின் உதவியால் கணிணியும் கற்றுக் கொண்டாகி விட்டது. (எனது மொக்கை பதிவுகளுக்கு கணிணி கற்றுக் கொடுத்தவரை காரணமாக்காதீர்கள்… 😉 )

இதற்குள் ஓட்டு வீடு கான்கிரீட் போட்ட வீடாகி இருந்தது. பின்னர் 4 மாத விடுமுறையில் இந்தியா. மீண்டும் 1 1/2 வருடம் என 7 ஒப்பந்த ஆண்டுகள் முடிந்தது. கான்கிரீட் போட்ட வீடு மாடி வீடானது. அதற்குப் பிறகு வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு வந்து திருமணம். பழைய ஊதியத்தை விட மூன்று மடங்கு ஊதியத்தில் புனித மெக்காவுக்கு அருகிலேயே புதிய வேலை……… வாழ்க்கை தொடர்கின்றது.

எங்கேயோ ஆரம்பித்து எங்கோ முடிந்து விட்டது………… நான் கருதும் திருப்புமுனை அந்த நல்லவரின் இன்லேன்ட் கடிதம்… மேலும் கணிணி கற்றுக் கொண்டது, வேலையில் வைத்திருந்த வெறி,

ஜின்னா தற்பொழுது இன்னொரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான அல்லா அவரை எப்பொழுதும் உடனிருந்து காக்கட்டும்.

என்னுடைய எழுத்துக்களெப்பொழுதும் நம்பிக்கை விதைகளை விதைத்த படியே இருக்க வேண்டுமென்பதில் நான் கவனமாக இருக்கிறேன். சென்ற பதிவுகூட அவர்களைக் குறித்த வருத்தமே தவிர அவநம்பிக்கை இல்லை. இவர்களுக்கு நாமென்ன செய்யப் போகிறோம் என்பதான ஒரு கேள்வியை எழுப்பத்தானே தவிர அவர்களை நிந்திக்க இல்லை.

வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது. அதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்பவன் வெற்றி பெறுகிறான்; வெறுமே புலம்புபவன் வீனாகிறான்.

பார்ட் டைமில் டிப்ளொமா, பி இ மற்றும் எம் ஈ படிப்பவர்களின் அனுபவங்களைத் தொகுத்தாலே போதும் நல்ல சுய முன்னேற்றக் கட்டுரைகள் கிடைக்கும்.

திண்ணியர்கள் எண்ணியாங்கு எய்துவரென்பதுதானே அய்யன் சொன்னது.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s