தமிழய்யாவுக்கு நன்றி


எல்லோருக்கும் நல்ல தமிழய்யா வாய்த்தால் நல்ல தமிழ் படிக்கலாம். மேலும் படிக்க ஆர்வம் வரும். எனக்கு ஒரு நல்ல தமிழைய்யா கிடைத்தார் 9,10 படிக்கும்போது. அவர் வகுப்பு என்றாலே எல்லோரும் ஆர்வமாக இருப்போம். லீவு எடுப்பதென்றால் அவரது வகுப்பு இல்லாத நாளாக இருக்க வேண்டுமே என நினைப்போம்.

புத்தகமேதும் எடுத்து வரமாட்டார். உள்ளே நுழைந்ததும் இன்று என்ன பாடம் என்பதையும் சொல்ல மாட்டார். புத்தகத்தில் உள்ளதுபோல் வரிசைக்கிரமமாக நடத்தவும் மாட்டார். பெரும்பாலும் கதைகள் மூலமே பாடம் நடத்திச் செல்வார்.

ஒரு கணவனும் மனைவியும் துணிக்கடைக்குப் போகிறார்கள். சில சேலைகளைப் பார்த்தும் பிடிக்காமல் ஒரு குறிப்பிட்ட சேலையை எடுத்துக் காட்டச் சொல்கிறார் மனைவி. அதற்குக் கடைக்காரர் , “அது சீமாட்டியும் வாங்க முடியாத சேலை” என்கிறார். காரணம் அதன விலை. கணவன் கையிலிருக்கும் காசுக்கான சேலை வாங்கித்தருகிறார். மனைவிக்குத் திருப்தியில்லை. ஏதேதோ புலம்பியவாறே வருகிறார். இதனால் கணவன் எரிச்சலடைகிறார்.

வீட்டிற்கு வந்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். சாப்பாடு சுவையாக இல்லை. எரிச்சலுடன் “நாயும் தின்னாத சோறு” எனச்சொலியவாறே வெளியேறுகிறான்.

சீமாட்டியும், நாயும் இந்த இரண்டு வார்த்தையிலும் என்னடா புரிந்தது? ” என்பார்.

”அய்யா இரண்டிலும் உம் வருகிறது”

“சரி. என்ன வித்தியாசம்”

”தெரியலை அய்யா”

“ஒண்ணு உயர்வைச் சொல்லுது . மற்றது இழிவைச் சொல்லுது. ஒரே ”உம் ” இரு அர்த்தங்கள் தருகிறதில்லையா? ஒன்று உயர்வு சிறப்பு உம்மை. மற்றது இழிவு சிறப்பு உம்மை”

ஏறக்குறைய முப்பது வருடங்கள் கழித்தும் இன்னும் மறக்கவில்லை.

ராமச்சந்திரன் அய்யா உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.

ஆனால் இப்பொழுது தமிழய்யாக்கள் அதிகம் இல்லை எல்லொரும் தமிழ் ஆசிரியர்கள் அல்லது தமிழ் டீச்சர். அவர்களிடம் பேசினால் தமிழில் பாரதிதாசனுக்குப் பின் புலவர்கள் யாருமில்லை என்பார்கள். அல்லது திரைப்படப் பாடலாசிரியர்கள்தான் கவிஞர்கள்.

உங்களுக்குத் தெரிந்த தமிழாசிரியர் யாருமிருந்தால் அவரிடம் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், அசோகமித்திரன் ஆகியோரின் எழுத்துக்களை விவாதியுங்கள். உண்மை புரியும்.

பார்க்கும் வேலை வேறு வாழும் வாழ்க்கை வேறென்பதாக ஆகிவிட்டது அவர்களுக்கு.

பின் குறிப்பு : எல்லா தமிழாசிரியர்களுமே அப்படியல்ல; ஆனால் பெரும்பான்மையினர்.

Picture courtesy : fotosearch.com

Advertisements

32 comments

 1. பாரதிதாசனுக்குப் பின்னால் கவிஞர்கள் இல்லையென்று தான் சொல்லுவார்கள் என்பது மிக உண்மை அண்ணாச்சி.

  ஒரு முறை நானும் என் அண்ணணும், தற்போது நாம் தமிழ்புலவர்கள் எழுதிய பாடல்களைப் படிப்பது போல் பிற்காலத்தில் வைரமுத்து எழுதிய சின்ன சின்ன ஆசை பாடலை பாடமாக குழந்தைகள் படித்தாலும் படிப்பார்கள், அப்போதும் அந்தப் பாடலுக்கு விளக்கத்தை ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் நிலை வந்தாலும் வரும் என பேசிக்கொண்டோம். அது தான் நினைவுக்கு வருது.

 2. எங்க தமிழய்யா ராபர்ட் அவர்களின் நினைவுக்கு வருகின்றது.. என்னிடம் இருக்கும் கொஞ்சம் தமிழுக்கு சொந்தக்காரர் அவர் தான்.. 🙂
  எச்சில் மூலமாக முட்டை விட்டுக் கொண்டு இருந்த என்னைப் பார்த்து உமிழ்நீரில் குமிழிகளை பறக்க விடாதே என்று கண்டித்த அந்த கணம் இன்றும் நினைவில் உள்ளது.

 3. இன்றுதான் பள்ளிப் பருவத்து நிகழ்வுகளை நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு வாய்த்த தமிழாசிரியர், அறிவியல் ஆசிரியர் மற்றும் உடல்கல்வி ஆசிரியர்களை மறக்கவே முடியாது. விரைவில் இது பற்றிய பதிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தாங்கள் முந்திக் கொண்டீர்கள். பார்க்கும் வேலை வேறு வாழும் வாழ்க்கை வேறு என்ற வகையில் இன்று பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை. சில ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில்கூட இருக்கிறார்கள்.

 4. என் தமிழாசிரியர் குள்ள சுப்ரமணியத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றி அண்ணாச்சி.

 5. தமிழாசிரியர் இல்லாமல் நானாகவே, மனைவியின் உதவியோடு தமிழ் படித்தேன். உங்கள் போஸ்ட் மெய் சிலிர்க்க வைக்கிறது!

 6. நல்ல பதிவு! மற்ற ஆசிரியர்களைவிட தமிழ் ஆசிரியர்கள் மீது இயல்பாகவே ஒரு பாசம்
  ஏற்படுகிறது! நெற்றி நிறைய விபூதி பட்டை இட்ட கணேசன் அய்யா வையும் , அடிக்கடி
  கம்னாட்டி,கம்னாட்டி என திட்டும் ரங்க சாமி அய்யாவையும் நினைவில் வர வைத்து வி்ட்டீர்கள்!!!

 7. //ஏறக்குறைய முப்பது வருடங்கள் கழித்தும் இன்னும் மறக்கவில்லை.//

  பெரும்பாலும் ஆசிரியர்கள் தம் சொல்லவந்த கருத்துகளினை இது போன்ற உதாரணங்களோடு கூறி சொல்லும் போது எத்தனை காலங்கள் ஆனாலும் மனதில் நிலைத்து நிற்கும் என்பதற்கு உதாரணம்!

 8. //பார்க்கும் வேலை வேறு வாழும் வாழ்க்கை வேறென்பதாக ஆகிவிட்டது அவர்களுக்கு/

  பாடம் தவிர்த்து இன்னும் பல பல விசயங்களை பற்றி விவாதிக்கவும் பேசவும் எப்பொழுதுமே ஆசிரியர்கள் தயாராகவே இருக்கின்றனர்! ஆனால் அதை சரியாக புரிந்து கொள்ளாத நிலையில்தான் இன்னும் மாணவர்கள்!

  ஒரு மாலை பொழுதில் கோவிலில் என் ஆசிரியரோடு பேசிய நாட்களின் நினைவில் 🙂

 9. அண்ணாச்சி, என் தமிழய்யா தமிழம்மாக்களை யெல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க

 10. யாத்ரா கூறியது போல எனக்கும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்..!

 11. அருமை! பிடியுங்க பூங்கொத்தை!!

 12. நினைவுகூறலே உயர்வானதாகவே இருக்கின்றது எப்போதும். அப்போதைக்கு இப்போது எல்லாமே குறைவானதாகவே மதிப்பிடபடுகின்றது. அப்படியானால் அதன் விளைவு!!!

  ——-
  குடந்தை அன்புமணி said…

  விரைவில் இது பற்றிய பதிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தாங்கள் முந்திக் கொண்டீர்கள்.

  அப்படி அல்ல நீங்களும் இது பற்றி பதிவிடலாம் உங்களளவில் அது வித்தியாசப்படும்.

 13. //அவர்களிடம் பேசினால் தமிழில் பாரதிதாசனுக்குப் பின் புலவர்கள் யாருமில்லை என்பார்கள். அல்லது திரைப்படப் பாடலாசிரியர்கள்தான் கவிஞர்கள்.//

  சினிமாவிற்கு பாட்டெழுதுபவர்கள் மட்டுமே கவிஞர்கள். தமிழுக்கும் தமிழனுக்கும் இது துரதிர்ஷ்டம். அப்துல் ரகுமானின் கவிதைகள் இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?

 14. இப்பெல்லாம் பிசினஸ் ஆகீடுச்சில்ல கொஞ்சம் முன்னபின்னதான் இருக்கும்.

  உங்கள் தமிழய்யாவுக்கு என் வணக்கங்கள்.

 15. வணக்கம் ஐயா…!!

  உள்ளேன் ஐயா…!!!

  அதிகாலை எழுந்தேன் ஐயா…!!!

  பின்னூட்டம் இட்டேன் ஐயா…!!!

  வாழ்த்துக்கள் ஐயா….!!!

  விடை பெறுகிறேன் ஐயா….!!!!!

  நன்றி ஐயா….!!!!

 16. அவரவர் தங்கள் தமிழாசிரியரைப் பற்றி தொடர் பதிவு ஒன்றை ஆரம்பிக்கலாமே…நீங்கள் முதலில் ஆரம்பியுங்களேன்.பல தமிழ் ஆசிரியர்கள் புகழ் பாடப்படலாமே..

 17. நன்றி ஜோசப்.
  நன்றி நியாஸ்
  நன்றி தமிழ்
  நன்றி கார்க்கி
  நன்றி அன்புமணி. நீங்கள் எழுதுங்கள். உங்கள் ஆசிரியர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

  நன்றி சிவா. ஆசிரியர்களைப் பட்டப் பெயர் வைத்து அழைத்தது சிறுவயதில் செய்த தவறு அதை இப்பொழுதும் செய்ய வேண்டுமா?

  நன்றி ரமேஷ் உங்களைப் பற்றிப் பெருமைப் படுகிறேன். ஈகோ பாராது கற்றுக் கொண்டதற்கு எனது பாராட்டுக்கள்.

  நன்றி ஜீவன். உங்கள் ஆசிரியர்களை நினைவுபடுத்துகிறது என்றால் என் நோக்கம் நிறைவேறி விட்டது.

  நன்றி ஆயில்யன். உண்மைதான்.
  நான் சொன்னது இன்றைய தலைமுறை ஆசிரியர்களை. 30-35 வயது தமிழாசிரியர்களிடம் பேசிப்பாருங்கள்.

  நன்றி யாத்ரா. தாய்பால் கொடுத்த தாய்க்கும் தாய்மொழி அறிவுதந்த தமிழய்யாக்களுக்கும் நாமென்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்தானே?

  நன்றி மதன். உங்கள் இந்தநாள் இனியநாள் கவிதை நன்றாக இருக்கிறது.

  நன்றி அருணா.
  நன்றி TVRK சார்.

  நன்றி முத்துராமலிங்கம். எப்படியோ சிரமப்பட்டு ஒரு ஆசிரியர் வேலை வாங்கினால்போதும் வாழ்க்கை முழுவதும் ஓட்டி விடலாம் என்பதுதான் பெரும்பாலோர் எண்ணமாக இருக்கிறது. தங்களை மேலும் மேலும் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

  நன்றி ஜோதி. அப்துல் ரகுமானைத் தெரியுமாவெனக் கேளுங்கள் முதலில்.

  நன்றி சிவா.

  நன்றி மேடி.

  நன்றி TVRK சார். அதை நீங்களே தொடங்கி வைக்கலாமே?

 18. /// இரா.சிவக்குமரன் said…

  என் தமிழாசிரியர் குள்ள சுப்ரமணியத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றி அண்ணாச்சி.///

  இல்லீங்க அண்ணாச்சி.. அது பட்ட பெயர் இல்லீங்க. அப்போ எங்க பள்ளியில இரண்டு தமிழாசிரியர் சுப்பிரமணியம்-ங்கிற பேர்ல இருந்தாங்க. ஒருத்தர் கொஞ்சம் முசுடு. ஒருத்தர் பசங்களோட செல்லம். எங்களோட செல்லத்த அடையாளம் காட்ட இதைத் தவிர வேற வழியில்லை. அதோட இது செல்ல பேரே தவிர பட்ட பேர் இல்ல. இது வரைக்கும் தொடர்பில இருக்கிற ஒரு ஆசிரியர் அவர். சமீபத்துல நாங்க நடத்துன ஒரு புத்தகம் வழங்குற விழாவுல அவர்தான் முதன்மை விருந்தினர்.அதுல கண்ணாடி போட்டிருக்கார் பாருங்க!

  http://enmaganezhilan.blogspot.com/2009/06/blog-post_23.html

 19. தமிழய்யாக்கள் குறைந்து டமில் டீச்சர்கள் அதிகரித்தது நமது துரதிருஷ்டம்தான் அண்ணாச்சி!

  மிக நல்லதொரு பதிவு…

 20. அற்புதமான இடுகை வேலன். நல்ல நாட்களை நினைவுறுத்தியதற்கு மிக்க நன்றி.பின்னூட்டத்தின் வாயிலாக எனது அருணாச்சலம் அய்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஸ்ரீ….

 21. எனக்கு தமிழ் அமுதை ஊட்டியவர்களில் ஒருவர்
  திரு கோவை இளஞ்சேரனார் – நாகை CSI உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார்.கூகிளில் தேடினால் அவ்வளவாக விபரம் கிடைக்கவில்லை.

 22. ஆமாங்க ஒரு விஷயத்தை கவனிச்சிங்களா தமிழ் அய்யாக்கள் எல்லாம் யதார்த்த வாழ்வில் கோட்டை விடுவதும்,பள்ளி நிர்வாகத்துடன் ஒன்ற முடியாது ரெபலாகவே இருப்பதையும் ,மாணவர்களின் நெஞ்சை தொடுவதும் (முக்கியமா க்ளெவர்) ஏன் தொடர்கதையாக உள்ளது

 23. தற்காலத் தமிழாசிரியர்கள் குறித்த தங்களின் கருத்து நியாயமானது வேலன்.

 24. உண்மை! எனக்கும் ஒரு தமிழய்யா இருந்தார். அவர் ஒரு சிங்கம். பேச்சு ஒரு கர்ஜனைதான். மனதின் ஆழத்தில் பதிந்து போன மனிதர்களில் ஒருவர் அவர்!

 25. வணக்கம் வடகரை வேலன்

  தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும், நானெல்லாம் தங்களின் நட்பு வட்டத்தில் இடம் கிடைக்காதா என்று ஏங்கியது உண்டு

  மிக அருமையான பதிவுகள் தங்களுடையது

  தோழமையுடன்
  ஜீவா

 26. உண்மை உண்மை அண்ணாச்சி – அக்கால தமிழாசிரியர்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார்கள்

  எனக்கு தமிழ் கற்றுத்தந்த தமிழாசிரிய உயர்திரு அலங்காரம் அவர்கள் தமிழ் கற்பிக்கும் விதமே தனிதான். ந.சூ ( நன்னூல் சூத்திரம் ) நடத்தினால் அவ்வளவு ஆர்வமாகக் கற்போம்.

  ம்ம்ம்ம் – இப்பல்லாம் …. எங்கே

  ( பி.கு : எங்க வூட்டம்மா தலைமைத் தமிழாசிரியை அண்ணாச்சி – உங்க தங்க்ஸூம் ஆசிரியைதானே )

 27. ///ஆயில்யன் Says:
  July 3, 2009 4:22 PM

  //ஏறக்குறைய முப்பது வருடங்கள் கழித்தும் இன்னும் மறக்கவில்லை.//

  பெரும்பாலும் ஆசிரியர்கள் தம் சொல்லவந்த கருத்துகளினை இது போன்ற உதாரணங்களோடு கூறி சொல்லும் போது எத்தனை காலங்கள் ஆனாலும் மனதில் நிலைத்து நிற்கும் என்பதற்கு உதாரணம்!///

  அதே அதே

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s