எனக்குப் பிடித்த கவிதைகள்

அதிகமும் கவிதைகள் எழுதுபவர்களைப் பரிச்சயமற்றிருந்தாலும் நல்ல கவிதைகளைப் படிக்கிற பாக்கியம் வாய்த்திருக்கிறதெனக்கு. நல்ல கவிதைகள் பெரும்பாலும் பிரபலமாகாதவர்களால்தான் எழுதப் படுகிறது, அல்லது அவர்கள் பிரபலமாவதற்கு முன்பாகவே எழுதப்பட்டு விடுகிறது. வண்ணதாசன் போன்ற வெகு சிலரே எக்காலமும் நல்ல கவிதைகளை வாழ்க்கை அனுபவத்திலிருந்தெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கன்மணி குணசேகரனின் கவிதையொன்று எபோதும் என் நினைவில் இருப்பது

இழுத்து மூச்சுக்கட்டி
ஊத வேண்டிய நேரங்களில்
சீவாளியைப் பிரித்துச்
சரி செய்கிறது
வயதான நாயனம்.
இட்டு நிரப்பிச் செல்கிறது
இளந்தவில்.

முதுமையின் அவலத்தை இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாதல்லவா?
இதைபோல வார்த்தைச் சிக்கனத்தில் சொல்ல வந்ததைச் சொல்லும் ரகக் கவிதைகள் குறைவே. அவ்வாறான நான் ரசித்த சில பதிவர்களின் கவிதைகள் இங்கே. இக்கவிதைகளைப் படிக்கும்போதே காட்சிகள் உங்கள் கண்முன் விரியும்.

யாத்ரா என்ற பெயரில் எழுதிவரும் செந்தில் மிக இளைஞர். ஒரு வாழ்நாளுக்கான அனுபவங்களைத் தேக்கி வைத்துத் திரியும் இவரிடமிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன். மிக உயரங்களைத் தொடுவார்.

வீட்டின் தரை கழுவி விடப்படும்போது எழும் நீர்க் கோலத்தை ரசித்துக் கவிதையாக்கியிருக்கும் இவரது கவிதைமனதெனக்குப் பிடித்திருக்கிறது.

தரை

கழுவி விடப்பட்டிருக்கும்
இந்தச் சிமெண்டுத் தரையின் ஈரம்
கொஞ்சம் கொஞ்சமாக
உலர்ந்து கொண்டேயிருக்கிறது காற்றில்
உலர உலர
நீர்ச்சித்திரங்கள்
மாறியபடியிருக்கின்றன
ஈரம் முழுதும் உலர்ந்து இப்பொழுது
காட்சிகள் முடிந்த திரையானது
மனதும் தரையும்
மீண்டும் ஈர
ஸ்பரிசத்திற்க்காய் காத்திருக்கிறோம்
இந்த உலர்ந்த தரையும்
உலர்ந்த நானும்.

முகுந்த் நாகராஜன் (வீனாப்போனவன்), வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நிகழ்வையும் கவிதைக் கண்களால் காண்கிறார். இதையெல்லாம் கவிதையாக்க முடியுமாவென வியக்கும் வண்ணம் படைக்கும் இவரது கவிதைகளை ஒரு மழைநாள் முழுவதும் படித்தது எனக்குப் புது அனுபவம்.

என்னிடம் பெரிதாக

‘வாழ்க்கை எப்படிப் போகிறது’
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம்
சரவணபவனில்
பெரிய தோசை வேண்டும்
என்று அடம் பிடித்து வாங்கி
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றி சொன்னேன்.
‘அப்புறம் பார்க்கலாம்’ என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.

அனுஜன்யா என்ற பெண் பெயரில் எழுதிவரும் மும்பைவாசி ஆண் இவர். பெரும்பாலும், கீற்று, உயிரோசை போன்ற இனையதளங்களில் இவரது கவிதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்படுகிறது. வங்கி ஒன்றின் உயரதிகாரியெனினும் கர்வமேதுமற்றவர்.

நிழலின் நிஜங்கள்

அந்தத் திருமணப் புகைப்படத்தில்
கண்ணை மூடிவிட்டதாகவும்
ஓரந்தள்ளி விடப்பட்டதாகவும்
கொம்பு முளைத்திருப்பது பற்றியும்
சலித்துக் கொண்டனர் நண்பர்கள்
குதிகாலை இன்னும் சற்று
உயர்த்தி இருந்தால்
அவனைவிட உயர்ந்திருப்பேன்
என்று எண்ணியபடி
அவள் கண்களில்
ஈரத்தைத் தேடினேன்

முத்துவேல் (தூறல் கவிதைகள்) எனக்கு இளைய சகோதரன் போல. கல்பாக்கத்தில் வசிக்கும் இவரது வாசிப்பின் வீச்சு என்னைப் பிரமிக்க வைக்கிறது. ஆரம்பகாலக் கவிதைகளைவிட இவரது ச்மீபத்திய கவிதைகளில் இருக்கும் முன்னேற்றம் என்னை மகிழ்விக்கிறது.

வி(லை)ளை நிலம்

பக்கத்து நிலமும்
ஒருகாலத்தில் என்னைப்போலவே
வனமாகத்தானிருந்தது.

பொறுப்புள்ள ஒருவனின்
உடைமையானதும்
கொஞ்சநாள் நெல்
விளைவிக்கிறது.

கொஞ்சநாள் நிலக்கடலை
விளைவிக்கிறது.

கொஞ்சநாள் சூரியகாந்திப்பூக்களை
விளைவிக்கிறது.

கொஞ்சநாள்
ஓய்வாக இருக்கிறது.

தண்டவாளம் சுமந்துகிடக்கும்
என்மீது எப்போதும்
மூச்சிரைத்தபடியும்
இளைப்பாறியபடியும்
தடதடத்து ஊர்கின்றன…

விதவிதமாய் ரயில்கள்

கழிவுகளைத் துப்பியபடி…

கவிஞர் நரன் ஓவியம் புகைப்படம் போன்றவற்றிலும் நல்ல தேர்ச்சி உள்ளவர். நிறைய விஷயஞானமுள்ளவர். தமிழில் முதல் நேரடி ஜென் கவிதைகள் எழுதியவர்.

பிரசவ வார்டு

மருத்துவமனை பிரசவ வார்டில்
பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தன எறும்புகள்
ஈனும் வலியில்
“அம்…மா” வென அலறியது
பெண் எறும்பொன்று

அதே வார்டில்
பிள்ளைப் பெற்றிருந்தவளை
பார்க்க வந்திருந்தவர்கள்
எடுத்து வந்திருந்த பாட்டிலில்
ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன
சில எறும்புகள்
பிள்ளைத்தாச்சிக்கென …

தன்னைப் பற்றிய அறிமுகத்தில் ப்ரவீன்(பின்குறிப்புகள் ) இப்படிக் குறிப்பிடுகிறார்.

நான் சாலயோர பூக்களின் மௌனம்….. நான் பயணிகள் இறங்கிவிட்ட இரயில் வண்டி… நான் நதிக்கடியில் ஒரு கூழாங்கல் ! நான் தனிமையிலும் இல்லை… ஆனால் என்னை சுற்றியும் யாருமில்லை. நான் நானாகவே இருக்க முயற்சி செய்து தோற்பதே என் தலையாய பணியாய் இருக்கிறது.

தனிமை

தனிமையில் குடிக்கப்படும் தேநீர்-கள்
எந்த சுவையுமற்று இருக்கின்றன
அது உற்சாகத்தை அளிக்கத் தவறுவதுமட்டுமில்லாமல்
அடித்தொண்டையில் நீடித்திருக்கும்
கசப்பையும் உண்டாக்குகிறது!
தானே சமைத்து
தான் மட்டுமே உண்ணும் உணவுகள்
வாசணையற்று இருக்கின்றன
விரல் இடுக்குகளில்
மீந்திருக்கும் சாம்பார்கூட
ருசியற்று போய்விடுகின்றன!

(இதைக்காட்டிலும்
பல பட்டினிப்பகல்கள்
இன்னும் சந்தோஷமுற்றதாய்
இருந்திருக்கிறது)

திரையரங்கிற்கு
தனியே செல்ல நேர்கையில்
சிரிக்க நேரிடும் நகைச்சுவைக் காட்சிகள்
அதற்குப்பின்
நினைவில் இருப்பதே இல்லை!

இரவு முழுவதும்
ஓடிக்கொண்டே இருந்த தொலக்காட்சியை
நள்ளிரவு எழுந்து அணைத்த பின்பு
ஒரு நிமிடம் தாமதமாகவே
உறங்கச் செல்கிறோம்!

ஒரு நீண்ட பகலில்
தேசிய நெடுஞ்சாலை மத்தியில்
ஒரு கோர விபத்தில்
அகால மரணமடைய நேரிடும் பொழுதின் தனிமை
இது எதைக்காட்டிலும் ஏகாந்தமாய் இருக்கக் கூடும்..!

இவர்களின் பிற கவிதைகளை அவர்களின் தளத்தில் வாசிக்கலாம். உங்கள் நேர்மையான விமர்சனங்கள அவகளின்னும் வளர உதவும். நிறைகளைப் பின்னூட்டத்திலும் குறைகளென நீங்கள் நினைப்பவைகளைத் தனி மடலிலும் தெரியப் படுத்துங்கள்.

.

23 comments

  1. கவிதைத் தொகுப்பு நன்றாக இருக்கிறது அண்ணாச்சி !

  2. ஆட்டையில் கலந்து கொள்ளாதிருப்பது போல தெரிந்தாலும் முகுந்த்நாகராஜன் சத்தமில்லாமல் அசத்துகிற ஒருவர்..

  3. இது உங்களுக்கான சிறப்பு,

    பகிர்வுக்கு நன்றி அண்ணன்.

  4. நல்ல கவிதைகள் – ஏற்கனவே வாசித்தவை என்றாலும் பகிர்வுக்கு நன்றி. யாத்ரா, முகுந்த் நாகராஜன், அனுஜன்யா, முத்துவேல், நரன் – இவர்களை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதுவரை நரனிடம் மட்டும் தான் அவர் கவிதைகள் பற்றிய என் அபிப்ராயத்தைப் பகிர்ந்து கொண்டதில்லை. மற்றபடி இவர்கள் அனைவரும் நன்றாக எழுதுபவர்கள். ப்ரவீனையும் வாசித்துப் பார்க்கிறேன்.

  5. ////அதே வார்டில்
    பிள்ளைப் பெற்றிருந்தவளை
    பார்க்க வந்திருந்தவர்கள்
    எடுத்து வந்திருந்த பாட்டிலில்
    ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன
    சில எறும்புகள்
    பிள்ளைத்தாச்சிக்கென …///

    அடடா அருமை!!

  6. அனைவருமே நட்சத்திரக் கவிஞர்கள்!

    அறிமுகத்துக்கு நன்றி அண்ணாச்சி!

  7. beauty!!
    உங்களைத் தோடரும் இக்கொஞ்ச நாட்களில்… எனை மிகக் கவர்ந்த பதிவு!!! கவிதைஎன்பதாலேயே!!!
    நரன், பிரவீன் வாசிக்க வேண்டியவர்கள்!! ஏனையோர் என் லிஸ்டில் ஏற்கனவே!!

  8. ////அதே வார்டில்
    பிள்ளைப் பெற்றிருந்தவளை
    பார்க்க வந்திருந்தவர்கள்
    எடுத்து வந்திருந்த பாட்டிலில்
    ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன
    சில எறும்புகள்
    பிள்ளைத்தாச்சிக்கென …///

    Excellent!

  9. நல்ல பகிர்வு. பல்பொருள் அங்காடி போல எல்லாக்
    கவிதையும் ஒரே இடத்தில் கிடைத்துவிட்டது.
    வாழ்த்துக்கள் கவிஞர்களுக்கும் உங்களுக்கும்

  10. கலக்கல் தொகுப்பு அண்ணாச்சி. மிக்க நன்றி!

  11. அட….!! கவிதையா பின்னுறீங்க ….!!! நட்சத்திர நாயகன்….!!!
    ம்ம்ம்…ம்ம்ம்…. ஜமாய்ங்க தலைவரே…..!!!

  12. அண்ணாச்சி, நண்பர்களோடு என் பெயரும் கவிதையும், உங்களின் இந்தக் கவிதைத் தொகுப்பில், மிகவும் மகிழ்ச்சி, தங்களின் அன்புக்கு மிக்க நன்றி.

  13. நன்றி கோவி
    நன்றி தமிழன் கறுப்பி

    நன்றி நந்தா. நரன் வெகு எளிமையானவர். ப்ரவீன் நன்றாக எழுதுகிறார்.

    நன்றி ஜீவன்
    நன்றி வெயிலான்
    நன்றி கார்டின்
    நன்றி சிவா
    நன்றி காமராஜ்
    நன்றி சென்ஷி
    நன்றி மேடி
    நன்றி சுரேஷ்
    நன்றி யாத்ரா.

  14. அதே வார்டில்
    பிள்ளைப் பெற்றிருந்தவளை
    பார்க்க வந்திருந்தவர்கள்
    எடுத்து வந்திருந்த பாட்டிலில்
    ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன
    சில எறும்புகள்
    பிள்ளைத்தாச்சிக்கென …

    அற்புதமான சிந்தனை. எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.

  15. அழகிய கவிதைத் தொகுப்புகள்

  16. அற்புதமான தொகுப்பு
    இவர்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்
    பகிர்வுக்கு நன்றி

  17. அண்ணாச்சி,
    தம்பியோட நன்றிகள் முதலில்.இந்தப் பதிவ நான் இப்பத்தான் பாக்கிறேன். அடுத்ததுக்கூடப் படிச்சுட்டு பின்னூட்டம் போட்டிருந்தேன்.

    பிரவீன் இப்பத்தான் உங்கமூலமா தெரிஞ்சுக்கறேன்.என்னா கவிதை இது அண்ணாச்சி! கலங்கிட்டேன்.அவரை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி அண்ணாச்சி.

    மத்தவங்கள சந்தோசப்படுத்திப் பாக்கிறதுல ஒரு சந்தோசம் இருக்குது அண்ணாச்சி. அது உங்களுக்கு எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கு.

  18. நல்ல கவிஞர்கள் நானும் தொடர்ந்து வாசித்து வருகின்றேன். அறிமுகம் நன்று. சந்தோசமும்.

  19. அறிமுகத்துக்கு நன்றி அண்ணாச்சி!
    அற்புதமான கவிதைகள்.

  20. மிக நல்ல தேர்வுகள். சிலரை இனிதான் தொடரவேண்டும்.

    (எத்தனைப் பேரத்தான் ஃபாலோ பண்ணி படிக்கிறது? அவ்வ்வ்..)

  21. அன்ணாச்சி

    கவிதைத் தொகுப்பு அருமை அருமை

    அனைத்துமே நல்ல கவிதைகள்

    முதுமை தயங்கும் போது இளமை தானாகவே உதவி செய்வது – நல்ல கருத்து .