யாத்ராவின் கவிதையும் அகநாழிகையின் வியத்தலும்

எதைக் கவிதையாக எழுதலாமென இளைஞர்களைக் கேட்பின் 99 சதவீததினர் சொல்லுவது “காதல்”. கண்ணே மூக்கே மணியே கற்கண்டே என விளித்து ஏக்கத்தைச் சொன்னால் முடிந்தது. ’கைபடாத சி டி’ எனவும்கூட விளித்தொரு பாடல்.

அது பருவம் சார்ந்த உணர்வின் வெளிப்பாடெனினும் அதைவிடுத்து புறவுலகின் சலனங்களைக் கவனிப்பது சிலரே. அதையும் கவிதையாக்கி படைப்பது அதிற் சிலரே. என்றாலும் நானறிந்த வகையில் முத்துவேல், ரெஜொவாசன், முகுந்த் நாகராஜன், யாத்ரா, அகநாழிகை, அனுஜன்யா போன்றோரின் வீச்சும் கவிதையின் ஆழமும் என்னை வசீகரிக்கிறது.

குறிப்பிட்டுச் சொல்ல நிறைய இருப்பினும் யாத்ராவின் சில கவிதைகள் என்னைச் சமயங்களில் செயலற்றவனாக ஆக்கிவிடுகிறது.

தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தவனின் உளச் சிக்கல்கள் விவரிக்க முடியாதவை எனினும் உயிர்களிடதிலன்பும் கருணையும் கொண்ட ஒருவன், தன்னுடைய கடைசி நிமிடங்களில் படும் வேதனையைப் பாருங்கள்.

நான் படித்தவைகளில், சம காலத்திய, மிகச் சிறந்த கவிதையாக இதை நான் கருதுகிறேன். இதை விடவும் சிறந்த கவிதை சமீபத்திலேதும் படித்த ஞாபகமேதுமில்லையெனக்கு.

திருவினை

திருவினையாகாத முயற்சிகளை நொந்து

கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன் கடைசியாக

அதற்கு முன்பாக

மலங்கழித்து விடலாமென கழிவறை போக

பீங்கானில் தேரைகளிருக்க

கழிக்காது திரும்பிவரும் வழியில்

எறும்புகளின் ஊர்வலத்திற்கு இடையூறின்றி

கவனமாக கடந்து வந்தேன் அறைக்குள்

கரிசனங்கள் பிறந்து விடுகிற

கடைசித் தருணங்களின் வினோதத்தில்

புன்சிரித்தேன் என்றுமில்லாமல்

அதிகமாய் வியர்க்க

பொத்தானையழுத்தப் போகையில்

சிறகுகளில் படர்ந்திருக்கும் சிலந்தி வலை

பார்வையில் இடறியது

40000 உயிர்கள் மாண்டுபோன

செய்தி தாங்கிய தினசரி அருகிருந்தது

விசிறயேதேனும் அகப்படுமாவெனத் தேடுகையில்

சாம்பல் கிண்ணத்தில் பிணங்களென்றிருக்கும்

துண்டுக் குவியல்களைக் கண்டு

கடைசி சிகரெட் பிடிக்கும் ஆசையையும்

கைவிட வேண்டியதாயிற்று

சட்டென்ற திரும்புதலில்

கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்

பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை

லேசாய் இதழ்விரிய முகம் மலர

சில கணங்கள் பார்த்து

உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு

காத்திருக்கும் கயிற்றிற்கிரையாகக்

கதவைச் சாற்ற

கதவிடுக்கில் நசுங்கியிரண்டான

பல்லியின் வாயிலிருந்து

தப்பிப் பறந்ததொரு பூச்சி

– யாத்ரா.

நல்ல கவிதை எழுதியவனை நல்ல விதமாக மரியாதை செய்ய இன்னுமொரு நல்ல கவிஞனாலதான் முடியும்.

அகநாழிகை என்றறியப்படும் பொன்.வாசுதேவன் இக்கவிதை குறித்து எழுதிய மதிப்புரை, இக்கவிதையை இன்னும் இன்னும் மேலே உயர்த்துகிறது.

என்னவொரு அருமையான பதிவும், பார்வையும்,ஒரு கவிதைக்குள் எப்பேர்ப்பட்ட வாழ்வனுபவம், விரக்தியும், தனிமையும், தோல்வியும் துரத்திக்கொண்டிருக்கும் ஒருவனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இரக்கப்பூக்கள், அவனது இறுதி மனோநிலையில் துளிர்த்துக் கொண்டிருப்பதை இதைவிட அழகாக யாரும் சொல்லிவிட முடியுமா ? வார்த்தைகளுடன் விளையாடி கவிதை நெய்வது வேறு. வாழ்வனுபவத்தை கவிதையாக்குவது வேறு. எத்துணை கூர்தீட்டிய வார்த்தைகள் வரிகள். ஒவ்வொரு வரியாக ஆழ்ந்துபடித்து, குளத்திறங்கி முழ்கிக்கொண்டிருப்பதைப் போல உணர்கிறேன்.

சிறு உயிர் குறித்தும் கவலை கொள்கின்ற ஒருவனின் வாழ் இறுதிப்பயண முடிவினைக் குறித்தான கவிதையில் எத்தனை உயிர்கடந்து செல்கின்றன. தேரை, சிலந்தி, நாற்பதாயிரம் உயிரிழப்பு, பிணக்குவியல் போன்ற சிகரெட்துண்டுகளின் சாம்பல், அல்பாயுசில் மறைந்த உன்னதக்கவிஞன் ஆத்மாநாமின் முகப்பிரதி, பல்லி, அதன் வாயிலிருந்து தப்பிப்பிழைத்த பூச்சி ,,,,

மனம் நெகிழ்கிறது. கவிஞன் அவன் வாழ்நாளில் கொண்டாடப்படுவதை விட வேறென்ன மகிழ்ச்சி அவனுக்கு கிடைத்து விட முடியும். நானும் கவிஞன்தான் என்றாலும், யாத்ராவின் கவிதைகளை அறியச் செய்ய சிறு கணமேனும் அசைவையேற்படுத்த இயலாதா என்ற ஆதங்கத்தில்தான் இதை பகிர்கிறேன்.

அந்தந்த கணத்தின் வாழ்வை அது சோகமானாலும், சுகமானாலும் அனுபவித்தும், சிலாகித்தும்,வர்ழ்கிற உன்னதன் நீ என்பதை உன்னோடும் முத்துவேலுடனும் கழித்த விடியும் வரை பேசிக்கொண்டிருந்த அந்த இரவில் அறிந்து கொண்டேன். வாசித்து முடித்ததும் போர்வைக்குள் புகுந்து கொள்வது போல ஓரிருண்மை உனது கவிதைகளை வாசித்தபின் ஏற்படுகிறது, நீ மகாமனிதனாய் இருந்திருப்பாய், கடந்த காலத்தில் வாழ்ந்த மிச்சங்களாய் உன்னை துரத்திக் கொண்டிருக்கின்றன கவிதைகள். கவிதையில் தென்படும் தனிமை,விரக்தி, காதல் எல்லாமே அனுபவித்தறிந்தவை என்பதையும் நானறிவேன். மேதமைக்கும் ஆயுளுக்கும் உள்ள அற்ப நூலிழையை உறுதியான கயிறாகச் செய்யத்தான் இந்த வாழ்க்கை.

நெகிழ்வோடும்,நெஞ்சம் நிறைந்த அன்போடும்…

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

இக்கவிதை குறித்து இதைவிடச் சிறப்பாகச் சொல்ல என்னிடத்திலேதுமில்லையெனினும் நான் சொன்னது இதுதான்

பிறரெல்லாம் கவிதை பண்ணிக் கொண்டிருக்கும் காலத்தில், கவிதகளைப் பின்னிக் கொண்டிருக்கிறார் யாத்ரா.

ஈரமான விரலிடுக்குகளில் சிக்கிக் கொண்ட மயிரிழையைப் பிரித்தெடுப்பதுபோல் வாழ்வனுபவங்களிலிருந்து அவ்வப்போது ஒரு பின்னத் துணுக்குகளைக் கவிதையாக்கிக் கொட்டுகிறார்.

எல்லோருக்கும் வாய்க்காதிந்த வரம்.

.

Advertisements

15 comments

 1. நாம் முன்பே விவாதம் செய்த பொருள் (கவிதை மற்றும் வாசுவின் வியத்தல்) என்பதால், இதை பதிவில் ஏற்றி பலர் காணச் செய்ததற்கு ஒரு நன்றியுடன் ….. (ஒரு சோடா கொடுங்கப்பா) முடித்துக் கொள்கிறேன்.

  அனுஜன்யா

 2. யாத்ரா மிகவும் கவனம் பெற வேண்டிய அன்பர். அவரை மூத்த பதிவர்கள் எல்லோரும் கொண்டாடுவது நண்பனின் திருமண விழாவில் ஆசி பெறும் மணமகனின் மாப்பிள்ளைத்தோழனின் உவகையை எனக்கு தருகிறது. நன்றிகள் வேலன் அண்ணாச்சி, வாசுதேவன் சார், மதிப்புக்குரிய அனுஜன்யா. கூடவே நண்பர்கள் முத்துவேல், மண்குதிரை எல்லாரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.
  பி.கு: நந்தாவின் இடுகைகளை வாசித்திருக்கிறீர்களா?

 3. அண்ணே (அண்ணாச்சி என்றழைக்க மனம் வாய்க்கவில்லை)
  மனம் நெகிழ்கிறது. வேறென்ன சொல்ல. புகழ்ச்சியையோ பாராட்டையோ எந்தப்பிரதிபலனும் எதிர்பார்க்காது எழுதப்பட்ட ஒரு கவிதைப் பிரதி அதன் தகுதி காரணமாக அடையாளம் காணப்பட்டு ஒரு நெகிழ்வு நிலையில் பாராட்டப்பட்டு அதை வேறொருவர் வாசித்தனுபவிப்பது என்ன சொல்வது இதையென்று தெரியவில்லை. தனித்தும், துயரங்களாலும் பின்னப்பட்ட இவ்வாழ்க்கையில், ஒரு தாயின் மணத்தை அனுபவிப்பதாய், குழந்தையின் அண்மையை நுகர்வது போல, காதலியின் அன்பைச்சுவைப்பதாக என சிறுசிறு சந்தோஷங்கள் இன்னமும் வாய்த்துக் கொண்டுதானிருக்கின்றன. எழுத்தின் அடிநாதத்தில் சுழல்வதும் அதேதான். படிப்பனுக்கும் படைப்பவனுக்கும் இடையேயான ஒரு உணர்வு ரீதியான உறவை வெளிப்படுத்தும் உன்னதம் எழுத்தின் வாசிப்பில் மட்டுமே வாய்க்கிறது. யாத்ராவைப் பற்றி மனுஷ்யபுத்திரனிடம் பேசும்போதும் அவரும் இதையே தெரிவித்தார். வாழ்நாளில் படைப்பின் வெற்றிகள் கொண்டாடப்பட வேண்டும். வாழ்த்தவும் ஒரு மனம் வேண்டும்,

  மிக்க நன்றி, எல்லாவற்றிற்கும்.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

 4. பிரமிக்க வைக்கின்றன… கவிதையும், கவிஞரை உயர்த்திப் பாராட்டிய இரு உள்ளங்களும்

 5. படித்து போது உங்களிடம் சொல்லலாம் என நினைத்த கவிதை!!!!

  சிறந்த கவித்துவமான அங்கீகாரம் யாத்ராவுக்கு உங்களிடமிருந்து…..தொடருங்கள்.

 6. ந‌ல்ல‌ க‌விதை மேலும் மிக‌ ந‌ல்ல‌ பகிர்வு. அக‌நாழிகை ந‌ல்ல‌ க‌விதைக‌ளை எழுதுவ‌தோடு ந‌ல்ல‌ க‌விதைக‌ளை அறிமுக‌மும் செய்வார் என்ப‌து புரிகின்ற‌து. ப‌திவிட்ட‌மைக்கு ந‌ன்றி வேல‌ன் அய்யா

 7. அற்புதமான கவிதை. அதற்கே உரிய அங்கீகாரம்

 8. அண்ணாச்சி,

  பிரியத்துக்குரிய யாத்ரா குறித்து நிறையவே பேசியாகிவிட்டது. ஆனால், மரியாதைக்குரிய பொன். வாசுதேவன் குறித்து இன்னமும் பேச வேண்டும். சமீபத்தில் பதிவை ஆரம்பித்துள்ள கவிஞர்களை இவர் வழிநடத்தும் விதமும், ஊக்குவிக்கும் விதமும் அபாரமானது. நேரில் நான் பார்த்த காட்சியே அதற்கு சாட்சி. அதை பின்னூட்டத்தில் எழுதி அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை. இயல்பாக அவர் செய்த காரியம், உண்மையில் எனக்கு பரவசமாக இருந்தது.

  சிறுபத்திரிகை கவிஞர்கள் என்பது போல் பதிவுலக கவிஞர்கள் என்பதாக இப்போது ஒரு செட் உருவாகி வருகிறது. இதற்கு பின்னால் ‘அகநாழிகை’ இருந்தார் – இருக்கிறார் – இருப்பார் என்பது சந்தோஷமான விஷயம்.

  பதிவில் நீங்கள் எழுதியது ஒரு சோறுதான். இன்னமும் பானை சோறு இருக்கிறது.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

 9. ஆமாம்,

  அன்றாட வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் சின்ன சின்ன யதார்த்தங்களைக் கூட கவனியாமல் விட்டு விட்டு முரண்பாடுகளோடேயே வாழப்பழகிய சிறுபிள்ளைத்தனமான நமது வாழ்க்கையை யதார்த்தமாய் புட்டு புட்டு வைத்திருக்கிறார் .

  மேலும் இவ்வாறான நல்ல கவிதைகளை தேர்ந்தெடுத்து பிரசுரியுங்கள்..

 10. யாத்ரா அவர்களின் கவிதையை அவர் தளத்தில் தொடர்ந்து படித்து வருபவன். அவருடையக் கவிதை தனித்துவம் உடையது. இக்கவிதையை அங்கும் படித்து வியந்ததேன். ஒரு நல்லக் கவிதைக்கு
  கிடைத்த பாராட்டு ரொம்ப நல்ல விசயம்.

 11. யாத்ரா கவிதை புரியாத மாதிரி இருக்கு, புரிந்த மாதிரி இருக்கு. இது தான் ஆழம், எனபதோ?

  எனக்கு யார்ட்ஸ்டிக் வில்லியம் வார்ட்ஸ்வர்த்.

  அவரோட சாலிடரி ரீபருக்கு எது இணையாகும்.

  வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

 12. Deepa Says: June 1, 2009 12:00 PM
  பிரமிக்க வைக்கின்றன… கவிதையும், கவிஞரை உயர்த்திப் பாராட்டிய இரு உள்ளங்களும்

  வழிமொழிகிறேன்

 13. அண்ணாச்சி, உங்கள் அனைவரின் அன்பு என்னை திக்கு முக்காட வைக்கிறது, மழை மாதிரி எனக்குள் பெய்து கொண்டிருக்கிறது. இந்த அபரிமிதமான அன்பில் மனம் மௌன வெளியில் வார்த்தைகளற்று உறைந்து போகிறது. அண்ணாச்சி, அகநாழிகை மற்றும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

 14. யாத்ராவின் இந்தக்கவிதையை நானும் உணர்ந்து மகிழ்ந்து பிரமித்திருந்தேன். சக பதிவர்களின் திறன் மெச்சும்ம் இந்தப்போக்கு மிக ஆரோக்கியமானது, மகிழ்வானது, நெகிழ்வானது.

  வடகரை வேலனுக்கும், பொன்.வாசுதேவனுக்கும் நன்றிகள். மேலும் பயணிக்க யாத்ராவிற்கு வாழ்த்துகள்.

 15. எனக்குப்பிறகு ஒரு தனி நபருக்காக தனிப்பதிவு போட்டு நீங்கள் பாராட்டுவது யாத்ராவிற்குதான் என நினைக்கிறேன்.. (உனக்கு எப்படா பதிவு போட்டேன் என்றூ கேட்கிறீர்களா, வயசானாலே இப்படித்தான் எல்லாம் மறந்துபோகும்)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s